Posted in Articles, Sunday School

SKIT : மனம் திறந்த சாட்சி (பிறவிக் குருடன் பார்வை பெறுதல்)

காட்சி 1

( பிறவிக் குருடர் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் )

குருடர் : ஐயா.. ஏதாச்சும் பிச்சை போடுங்கய்யா.. புண்ணியமா போவும்… என்ன யாரையுமே காணோமே, இன்னிக்கு கோயிலுக்கு மக்கள் வரது கம்மியா இருக்கே… எல்லாருமே திருந்திட்டாங்களா… கடவுளே தேவையில்லாத அளவுக்கு திருந்திட்டாங்களா….

குருடர் : ஐயா… ஐயா.. யாராவது இருக்கீங்களா ?

( அப்போது இருவர் அந்த வழியாக வருகிறார்கள் )

குருடர் : ஐயா… ஐயா…

நபர் 1 : என்னப்பா.. எவ்வளவு காலமா ஒரே இடத்துல உக்காந்து …. பிச்சையெடுத்துட்டு இருப்பே… வேற எங்கயாச்சும் போலாம்ல.. சில்றை அதிகம் கிடைக்கும்ல…

குருடர் : ஐயா… கோயில் முன்னாடி இருந்தா தான் யாராச்சும் ஏதாச்சும் குடுப்பாங்க.. வேற எங்கயாச்சும் போனா இதுவும் கிடைக்காது. இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படக் கூடாது.

நபர் 2 : அதெப்படி சொல்றே ? எங்க இருந்தாலும் மக்கள் காசு தருவாங்க.. இங்கயாச்சும் காணிக்கை போட காசை சேத்து வைப்பாங்க, வேற இடம்ன்னா நிறைய தான் கிடைக்கும்..

குருடர் : அப்படி இல்லைங்கய்யா… இங்க தான் மக்கள் பாவம் செஞ்சுட்டோமேங்கற ஒரு குற்ற உணர்வுல வருவாங்க. அதனாலேயே கொஞ்சம் காசும் தருவாங்க.

நபர் 1 : ஓ.. அப்படி வேற இருக்கா ? பெரிய கில்லாடியா இருக்கியே….

குரு : உண்மை தானேங்கய்யா… கொஞ்சமாச்சும் கடவுள் பயம் இருக்கிறவங்க தானே இங்கே வருவாங்க. கடவுள் கோச்சுக்கக் கூடாதுன்னு நினைச்சாச்சும் ஏதாச்சும் பணம் தருவாங்க.

நபர் 2 : ம்ம்… நீ குருடனா இருந்தாலும் நிறைய விஷயங்களை புரிஞ்சு வெச்சிருக்கே..

குரு : ஐயா.. நான் குருடனா இருக்கிறதனால ஒரு நல்ல விஷயம் இருக்கு. எனக்கு யாரு எப்படி இருப்பாங்கன்னு தெரியாது. கருப்பா சிவப்பா தெரியாது. அப்படின்னா என்னன்னே தெரியாது. வேடிக்கை பாத்து நேரத்தை வீணடிக்கத் தேவையுமில்லை. அது மட்டுமில்லை, கண்ணு தெரியாததனால இந்த தொழுகைக்கூடத்துல பேசற விஷயம் எல்லாம் கேப்பேன். கடவுளைப் பற்றியும், இறைவாக்கினர்கள் பற்றியும் நிறைய தெரிஞ்சுகிட்டேன்.

நபர் 1 : அதெல்லாம் நல்லது தான். ஆனாலும் நீ கண்ணு தெரியாம இருக்கிறதுக்குக் காரணமும் கடவுள் தான் தெரியும்ல

குரு : எப்படி சொல்றீங்க ?

நபர் 1 : நீ செஞ்ச பாவமோ, அல்லது உன் பெற்றோர் செஞ்ச பாவமோ தான் நீ குருடனா பிறக்க காரணம், தெரியும்ல ?

குரு : அதெப்படி ? நான் பிறவிக் குருடன். அதனால, என் பாவம் இதுக்கு காரணம் கிடையாது. என் பெற்றோர் செஞ்ச பாவம் எப்படி என்னை பாதிக்கும் ?

நபர் 2 : அதெல்லாம் பாதிக்கும். உன்னோட பாவத்தை நாலு சந்ததிக்கு புகுத்துவேன்னு இறைவாக்கு இருக்கு.

குருடன் : இருந்தாலும், பிறவியிலேயே குருடனா பிறக்கிறதுக்கு பாவம் எப்படி காரணமாகும் ?

நபர் 1 : அதெல்லாம் நடக்கும். கருவிலேயே நல்லவனும் கெட்டவனும் உருவாவான். கெட்டவன் வயித்துல இருக்கும்போதே ரொம்ப எட்டி உதைப்பான்னு ஒரு கதை சொல்லுவாங்க.

குருடன் : குருடன் கிட்டயே குருட்டுக் கதை பேசறீங்களே..

நபர் 2 : அட.. உண்மை தான்பா… யாக்கோபு கதை தெரியும்ல,.. அவன் பிறக்கும் போவே அண்ணன் காலை புடிச்சு சண்டை போட்டுட்டே பிறந்தான்.. அதனால, பிறக்கிறதுக்கு முன்னாடியே நல்லவனும் கெட்டவனும் உருவாகலாம்…

குருடன் : என்னவோ சொல்றீங்க… ஏதாச்சும், ஒண்ணோ ரெண்டோ தெனாரியம் போட்டீங்கன்னா, புண்ணியமா போவும். நானும் என் பெற்றோரும் இதுல தான் பொழைக்கணும்.

நபர் 1 : ( காசு போடுகிறார் )… இருக்கிறதை போட்டிருக்கேன்…

குருடர் : நன்றிங்க.. ரொம்ப நன்றி

காட்சி 2

( இயேசு அந்த வழியாக வருகிறார் )

குருடன் : ஐயா.. ஐயா.. ஏதாச்சும் பிச்சை போடுங்கய்யா

நபர் 1 : ரபி..ஒரு கேள்வி

இயேசு : கேளுப்பா… என்ன

நபர் 1 : இதோ ஒரு பிச்சைக்காரர் இருக்காரே.. இவரு பிறவிக் குருடர். அப்படின்னா, இவரு செய்த பாவம் இதுக்கு காரணமா இருக்க வாய்ப்பில்ல. இப்போ என்னோட கேள்வி என்னன்னா, இவரு குருடனா இருக்கிறதுக்குக் காரணம், இவரோட பாவமா இல்லை இவரோட பெற்றோர் செய்த பாவமா ?

இயேசு : அது இவரு செய்த பாவமும் கிடையாது, பெற்றோர் செய்த பாவமும் கிடையாது

நபர் 2 : ஓ.. அப்போ வேற யாரோ செய்த பாவம் இவர் தலையில விழுந்துச்சா… ஐயோ.. பாவம்

இயேசு : அதெல்லாம் இல்லை, இதுக்குக் காரணம் பாவமே இல்ல. கடவுளோட மகிமை இவர் மூலமா வெளிப்படறதுக்காகத் தான் இப்படி நடந்திருக்கு.

நபர் 1 : அப்படின்னா ?

இயேசு : பகலாய் இருக்கும் வரை வேலை செய்யலாம், இருட்டிச்சுன்னா ஒண்ணும் பண்ண முடியாது. நான் இந்த உலகத்துல இருக்கிற வரைக்கும் நான் தான் உலகோட ஒளி.

நபர் 2 : நாங்க என்ன கேட்டோம்.. நீங்க என்ன சொல்றீங்க.. ஒண்ணும் புரியலையே

இயேசு : விரைவில் புரியும், கடவுளோட மகிமை வெளிப்படும்…

நபர் 1 : கடவுளோட மகிமை எப்படி வெளிப்படும்.

இயேசு : ( குருடனிடம் ) யப்பா… நல்லா இருக்கியா ?

குருடன் : நல்லா இருக்கேங்கய்யா.. நீங்க யாரு.. காசு தருவீங்களா ?

இயேசு : ( துப்புகிறார் ) தூ…

குருடன் : ஐயா.. என்னய்யா.. துப்பற மாதிரி சத்தம் கேட்டுச்சு…

இயேசு ( மண்ணில் துப்பி சேறு உண்டாக்கி அவனது கண்ணில் பூசுகிறார் )

குருடன் : என்ன..என்னது.. ஈரமா இருக்கு..

இயேசு : நீ போய்.. சீலோவாம் குளத்துல கழுவு..

குருடன் : சீலோவாம் குளமா.. அது எங்கே இருக்கு.. எந்தப் பக்கம் இருக்கு… நான் எப்படி போவேன்.. அங்கே என்ன கிடைக்கும் ?

இயேசு : நீ.. போ.. போய் கழுவு.

குருடன் : ( தடுமாறி எழுகிறான் )

நபர் 1 : கவலைப்படாதே.. நான் உன்னை கூட்டிட்டு போறேன். இயேசு ஏன் அப்படி பண்ணினாரு ? கண்ணைக் கழுவினா என்ன நடக்குதுன்னு பாக்கணுமே… ஆர்வமா இருக்கு

குருடன் : ஐயா…இன்னிக்கு … ஓய்வு நாளாச்சே.. பரவாயில்லையா

இயேசு : ஓய்வு நாள் இருக்கிறது மனுஷனுக்குத் தான்.. மனுஷன் ஓய்வு நாளுக்கு இல்லை… நீ போ..

குரு : சரிங்க …

காட்சி 3

( குளத்தில் கழுவியபின் அவருக்குப் பார்வை வருகிறது )

குருடன் : வாவ்.. இதென்ன, இவ்ளோ அழகாக இருக்கு..ஓ இது தான் மரமா.. அதுல அழகழகா இருக்கே.. ஓ.. அது தான் பூவா… இந்த மலையும் எவ்ளோ சூப்பரா இருக்கு… வாவ்… எல்லாம் சூப்பர்

குருடன் : ஓ.. இது தான் கோயிலா.. தூணெல்லாம் எவ்ளோ அழகா இருக்கு..

குருடன் : வாவ்… உலகத்துல எல்லாமே சூப்பரா இருக்கே.. எனக்கு நம்பவே முடியல, நான் பாக்கறேன்னு.. யாரோ ஒரு புண்ணீயவான் .. எனக்கு பார்வை குடுத்துட்டாரே.. சூப்பர்.. பணம் கேட்டேன்.. குணம் குடுத்துட்டாரு… பர்சை திறப்பாருன்னு பாத்தா, பார்வையைத் திறந்துட்டாரு.

நபர் 1 : ஹேய்… அதோ பாரு.. அந்த மனுஷனை.. எங்கயோ பாத்தா மாதிரி இருக்குல்ல…

நபர் 2 : அட.. ஆமா. ஹேய்… இவன் அந்தப் பக்கம் பிச்சை எடுத்துட்டிருந்தவன் போலயே இருக்கான்.

நபர் 1 : ஓ..ஆமா.. பாக்க அப்படி தான் இருக்கு.. எதுக்கும் கேட்டு பாப்போமா ?
ஒருவேளை…அவனோட தம்பி அண்ணன் யாராவதா இருக்கும்..

நபர் 2 : அவனுக்கு அண்ணன் தம்பி யாரும் இல்லை. அம்மா அப்பா தான் உண்டு.. எனக்கு நல்லா தெரியும்.

நபர் 2 : ஒருவேளை பொய் சொல்லி பணம் கேட்டுட்டு இருந்தானோ தெரியல, அப்படின்னா கையும் களவுமா மாட்டிகிட்டான்…

( அவர்கள் அருகில் செல்கின்றனர் )

நபர் 1 .. ஹேய்.. நீ.. நீ அந்தப் பக்கம் பிச்சை எடுத்துட்டிருந்தவர் தானே..

குருடன் : ஆமா.. அது நான் தான்.. என்னைப் பாத்திருக்கீங்களா ?

நபர் 1 : பாத்ததெல்லாம் இருக்கட்டும்.. முதல்ல எப்படி உனக்கு கண்ணு தெரியுதுன்னு சொல்லு. பொய் சொல்லி எங்களையெல்லாம் ஏமாத்திட்டிருந்தியா ?

குருடன் : ஐயோ அது பெரிய கதைங்கய்யா… நான் குருடனா தான் இருந்தேன்.. இப்போ பார்வை கிடைச்சிருக்கு.

நபர் 2 : ஹலோ.. காமெடி பண்றியா ? நீ பிறவிக் குருடன்.. இடையில பார்வை போனவன் கிடையாது. உனக்கு எப்படி பார்வை கிடைச்சுது.. பிறவிக் குருடர்களுக்கு பார்வை கிடைச்சதா சரித்திரமே இல்லையே.

குரு : ஐயா சரித்திரத்தைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது.. ஆனா, நான் குருடனா இருந்தேன், இப்போ பாக்கறேன்.. அது மட்டும் தான் எனக்குத் தெரியும்.

நபர் 1 : ம்ம்.. உனக்கு எப்படி பார்வை கிடைச்சுது ? எந்த டாக்டர் டிரீட்மெண்ட் பண்ணினாரு ? எவ்ளோ நாள் டிரீட்மெண்ட் நடந்துது ? எவ்ளோ செலவாச்சு ? எல்லா விஷயமும் சொல்லு. இது பயங்கர அதிசயமா இருக்கு.

குரு : ஐயா.. நான் எந்த டிரீட்மெண்டும் பண்ணல. எந்த பணமும் செலவு பண்ணல. ஒருத்தர் வந்தாரு, மண்ணுல துப்பி சகதி உண்டாக்கினாரு. அதை என் கண்ணில பூசினாரு. சீலோவாம் குளத்துல கழுவச் சொன்னாரு. கழுவினேன், சரியாச்சு. சட்டுன்னு சுகமாச்சு.

நபர் 2 : ( நக்கலாய் ) என்ன விளையாடறியா ? சகதியாம், கழுவினானாம், சரியாச்சாம்…. யாரு உனக்கு இப்படி பண்ணினதுன்னு சொல்லு.

குரு : ஐயா… அவரோட பேரு இயேசு ந்னு பேசிகிட்டாங்க. வேற ஏதும் எனக்குத் தெரியாது. ஆனா, நான் சொல்றதெல்லாம் உண்மை.

நபர் 2 : சரி சரி.., உன் கதையையெல்லாம் கேக்க எங்களுக்கு டைம் இல்ல. அவரு எங்க இருப்பாருன்னு சொல்லு. அவர் கிட்டயே பேசிக்கறேன்.

குரு : ஐயா.. அது எனக்கு எப்படி தெரியும். அவரை நான் பாத்ததே இல்லையே. குருடனா இருந்தப்போ பேசினேன், பார்வை கிடைச்சப்புறம் அவரு எங்கேன்னே எனக்கு தெரியாது. அவரைப் பாத்தா கூட எனக்கு அடையாளம் தெரியாது.

நபர் 1 : உன் கூட பேசறதே வேஸ்ட்… நீ முதல்ல இங்க வா… உன்னை நம்ம பரிசேயர் கூட்டத்து கிட்ட கூட்டிகிட்டு போய் விசாரிக்கணும்.

காட்சி 4

( நபர் 3 & நபர் 4 – பரிசேயர்கள் … நபர் 1 & 2 பார்த்துக் கொண்டிருக்கின்றனர். )

நபர் 3 : என்னப்பா.. உன்னைப் பற்றி என்னென்னவோ பேசிக்கிறாங்க.. என்ன விஷயம் ?

குருடர் : ஐயா.. இயேசு என் கண்ணுல சேறு பூசினாரு, கழுவச் சொன்னாரு, கழுவினேன், பார்வை கிடைச்சுது.

நபர் 3 : ஹா..ஹா… கேக்க நல்லா இருக்கு… ஆனா கதை பேச டைம் இல்ல… இப்போ உண்மையைச் சொல்லு.. என்ன நடந்துது

நபர் 4 : என்ன திரும்ப திரும்ப அதையே கேக்கறே… அதான் அவரு சொல்றாருல்ல.. ஒருவேளை உண்மையா இருக்கலாம்ல. நாமானுக்கு எப்படி சுகம் கிடைச்சுது ? தண்ணில முங்கினதால தானே.. ஒருவேளை இதுவும் உண்மையா இருக்கலாம்.

நபர் 3 : என்னப்பா உனக்கு புத்தி கித்தி கெட்டுப் போச்சா.. இன்னிக்கு என்ன நாள் தெரியுமா ? ஓய்வு நாள். ஓய்வு நாள்ல ஒருத்தன் வந்து ஏதோ வித்தை காட்டிட்டு போயிருக்கான் அவனைப் போய் நாமானை சுகமாக்கின எலியா கூட ஒப்பிட்டு பேசறே..

நபர் 4 : என்ன தான் இருந்தாலும் ஒரு அதிசயம் செய்திருக்காருல்ல.

நபர் 3 : கடுப்பேத்தாதே… ஓய்வு நாள் சட்டத்தையே கடைபிடிக்காதவன் கடவுளிடமிருந்து வந்திருக்க வாய்ப்பே இல்லை. ஓய்வு நாள் சட்டத்தை மீறினவன் செத்துப் போன கதை தெரியும்ல, மோசே காலத்துல. இவன் பாவி.. சட்டத்தையே கடைபிடிக்காதவன்.

நபர் 4 : சட்டத்தை கடைபிடிக்கல ஒத்துக்கறேன்.. ஆனா, ஒரு பாவியால எப்படி இப்படிப்பட்ட செயலை செய்ய முடியும் ? இவன் பாவியா இருக்க வாய்ப்பே இல்லைன்னு தான் எனக்கு தோணுது.

நபர் 1 : ஆமா.. எனக்கும் அப்படித் தான் தோணுது.

நபர் 3 : நீ நம்ம கூட்டத்துல இருந்துட்டே திருச்சட்டத்துக்கு எதிரா இருக்கிற மனுஷனை ஆதரிச்சு பேசறீங்க.. இது ரொம்ப மோசம். இது தேவ தூஷணம் தெரியும்ல.

நபர் 4 : ஒருவேளை அவர் கடவுள் கிட்டே இருந்து வந்தவர்ன்னா, நீ பண்றது தான் தேவ தூஷணம் அது உனக்குத் தெரியுமா ? பேச வந்துட்டான்.

நபர் 2 : ஆமா… ஆமா.. நீ சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்கு.

நபர் 3 : (கோபமாக ) யப்பா.. உனக்கு குணம் குடுத்தாருன்னு சொன்னியே.. ஒருத்தன்.. இயேசு.. அவரு யாருன்னு உனக்குத் தெரியுமா ?

குருடன் : ஐயா. அவரு.. ஒரு இறைவாக்கினர்

நபர் 3 : இறைவாக்கினரா.. முதல்ல இயேசுங்கற ஒரு மனிதர்ன்னு சொன்னே, இப்போ இறைவாக்கினர் ந்னு சொல்றே.. நிஜமாவே நீ மெண்டலாயிட்டே… உன்கிட்டே பேசி பிரயோசனம் இல்லை. உன் அப்பா அம்மாவை கூட்டிட்டு வா.. அவங்க கிட்டேயே பேசிக்கறேன்.

காட்சி 5

( குருடனின் பெற்றோர் வந்திருக்கின்றனர் )

நபர் 3 : நீங்க தான் இவனோட பெற்றோரா ?

அம்மா : ஆமாங்கய்யா… இவன் எங்க பையன் தான்.

நபர் 3 : இவன் ஏதேதோ கதை பேசிட்டே திரியறான் தெரியுமா ? இயேசு இவனுக்கு பார்வை குடுத்தாராம் ! பேசினாராம், பூசினாராம், தண்ணில கழுவினானாம், அப்படியே கண்ணு திறந்துடுச்சாம்… இப்படில்லாம் உளறிட்டு திரியறான். இவன் உண்மையிலேயே குருடனா தான் இருந்தானா ? இல்ல இதெல்லாம் ஒரு செட்டப்பா ?

அப்பா : ஐயா.. இவன் எங்க பையன் தான்.. பிறவியிலேயே குருடன் தான்.

நபர் 3 : பிறவியிலேயே குருடன்னா எப்படிய்யா பார்வை தெரியுது ? நீங்களும் உளறாதீங்க

அப்பா : ஐயா அதெல்லாம் எங்களுக்குத் தெரியாதுங்க… ஆனா, இவன் எங்க பையன் தான். குருடனா இருந்தவன் தான்.

நபர் 3 : பொய் சொன்னா உங்களை தொழுகைக் கூடத்துல இருந்து விலக்கி வைப்போம் தெரியும்ல. அத்த இயேசு ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சினை பண்ணிட்டு திரியறான். அவனை மெசியா கிசியா ந்னு ஒரு கூட்டம் வேற தூக்கி கொண்டாடுது. அவனை யாரு ஃபாலோ பண்ணினாலும் அவங்களுக்கு ஆபத்து தான்.

அப்பா : நீங்க என்ன சொல்ல வரீங்க…

நபர் 3 : நான் நினைச்சா ஒரு வாரமோ, ஒரு மாசமோ இல்ல, காலம் பூராவோ உங்களை விலக்கி வைக்க முடியும். உண்மையை சொல்லுங்க.

அம்மா : ஐயா.. நீங்க ஏன் எங்களை மிரட்டறீங்க. அவன் வயசுக்கு வந்த பையன் தானே. அவன் கிட்டேயே கேளுங்க. எங்களை விட்டுடுங்க.

நபர் 4 : யப்பா.. நீ இங்கே வா… “கடவுள் முன்னிலைல உண்மையைத் தான் பேசுவேன்” ந்னு முதல்ல சத்தியம் பண்ணு.

குருடன் : கடவுள் முன்னால, உண்மையை. மட்டும் தான் பேசுவேன்.

நபர் 3 : இப்போ சொல்லு. அவரு ஒரு பாவின்னு எங்களுக்குத் தெரியும். என்ன நடந்துது ? பாவிக்கு சப்போர்ட் பண்ணி நீயும் பாவின்னு காட்டிக்காதே. ஏன்னா குருடனா பிறக்கிறதே பாவத்தோட அறிகுறின்னு எங்களுக்குத் தெரியும்.

குருடன் : ஐயா.. அவரு பாவியா இல்லையான்னு கண்டுபிடிக்க எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிஞ்சதை மட்டும் நான் சொல்றேன். “ நான் பார்வையில்லாம இருந்தேன், இப்போ பாக்கறேன். அவ்ளோ தான்”

நபர் 4 : அவன் என்ன செய்தான் சொல்லு.

குருடன் : ஐயா.. நான் ஏற்கனவே ரெண்டு தடவை சொன்னேன். நீங்க ஏன் மறுபடியும் மறுபடியும் என்கிட்டே கேக்கறீங்க. நீங்களும் அவருக்கு சீடராகணும்ன்னு ஆசைப்படறீங்களா ?

நபர் 3 : சீடனாவா.. நாங்க என்ன உன்னை மாதிரி முட்டாள்களா திருச்சட்ட நூலை நீ பாத்திருக்கியா ? அதுல ஒரு எழுத்தை வாசிக்க தெரியுமா உனக்கு. நீ தான் குருடனா இருந்தவனாச்சே.. போ… போ.. நீ அவன் சீடனா இரு.

குருடன் : அப்போ.. நீங்க யாரோட சீடர்கள்ங்கய்யா ?

நபர் 3 : நாங்க மோசேயோட சீடர்கள். மோசே கூட கடவுள் பேசினாருன்னு எங்களுக்குத் தெரியும். ஆனா, இவன் யாரு ? வெட்டிப் பய… இவன்… எங்கேருந்து வந்திருக்கான்னே எங்களுக்குத் தெரியாது…

குருடன் : இது தான் ரொம்ப ஆச்சரியமா இருக்கு… எனக்கு பார்வை குடுத்திருக்காரு, இருந்தாலும் அவர் எங்கேயிருந்து வந்திருக்காருன்னு தெரியாதுன்னு சொல்றீங்க. அவர் கடவுள் கிட்டேயிருந்து வந்தவர் தான்.

நபர் 3 : ( நக்கலாக ) இவன்.. கடவுள் கிட்டேயிருந்து … இவன் பாவி.. கண்டிப்பா அடிச்சு சொல்லுவேன்.. இவன் பாவி.

குருடன் : இவரு பாவியா இருந்தா, பாவியோட வேண்டுதலுக்கு கடவுள் செவி சாய்க்கிறாருன்னு நீங்க சொல்ற மாதிரி ஆயிடுமே. ஆனா கடவுள் அவரோட வழியில நடப்பவர்களோட விண்ணப்பத்துக்குத் தானே பதில் கொடுப்பார், அது உங்களுக்குத் தெரிஞ்சது தானே..

நபர் 3 : ஓ.. இப்போ நீ எங்களுக்கு பாடம் சொல்லி தரியா. அந்த அளவுக்கு வளந்துட்டியா ?

குருடன் : பிறவிக் குருடன் பார்வை பெற்ற வரலாறு இல்லை. இவர் கடவுள் கிட்டேயிருந்து வரலேன்னா எனக்கு இவர் பார்வை தந்திருக்கவே முடியாதுன்னு சொல்றேன்.

நபர் 3 : ஏய்.. என்ன வாய் ரொம்ப நீளுது. பிறவியிலேயே பாவத்துல மூழ்கிக் கிடக்கிற ஒரு குருட்டுப் பய, திருச்சட்டத்தின் படி வாழற எங்களுக்கே கத்துத் தரியா.. ஓடுடா… ஓடு.. ( கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார்கள் )

காட்சி 6

( இயேசு குருடரைச் சந்திக்கிறார் )

குருடர் : ( ஏதோ யோசனையில் அங்கும் இங்கும் நடக்கிறார் )

இயேசு : ஐயா.. வணக்கம்.. நல்லா இருக்கீங்களா ?

குருடர் : ரொம்ப சந்தோசமா இருக்கேங்கய்யா..

இயேசு : உங்களைப் புடிச்சு வெளியே தள்ளிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன்.

குருடர் : ஆமாங்கய்யா.. குருடனா இருந்தப்போ ஏத்துக்கிட்டவங்க, பார்வை கிடைச்சப்புறம் துரத்தறாங்க. ஆச்சரியமா தான் இருக்கு

இயேசு : மனுஷ குமாரனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா ?

குருடர் : ஐயா.. அவரு யாருன்னு காட்டுங்க, கண்டிப்பா நான் அவரை விசுவாசிப்பேன்.

இயேசு : நீங்க அவரைப் பாத்திருக்கிறீங்க

குருடர் : இல்லைங்கய்யா.. அவரு எனக்கு சுகம் தந்தப்போ.. நான் குருடனா இருந்தேன். இப்போ அவரைக் காணோம்.

இயேசு : உன் கூட பேசிக்கிட்டிருக்கிறது அவர் தான்.

குருடர் : ஆண்டவரே.. உம்மை விசுவசிக்கிறேன் ( பணிகிறான் ) குரல் கொஞ்சம் கேட்டது மாதிரி இருக்கேன்னு யோசிச்சேன்.. ஆனா சட்டுன்னு கண்டுபுடிக்கல.. இயேசுவே..

( அப்போது சிலர் அங்கே வருகின்றனர் )

நபர் 3 : ஓ… இங்கேயும் வந்தாச்சா… என்ன இது ஆலயமா, பாவிகளின் கூடாரமா ? (மற்றவர்களைப் பார்த்து ) என்னப்பா.. நீங்க எதுவும் கேக்க மாட்டீங்களா ?

குருடர் : இயேசுவே… நீங்க கடவுளிடமிருந்து தான் வந்திருக்கீங்க. ஆனா ஏன் வந்திருக்கீங்கன்னு தான் தெரியல.

இயேசு : தீர்ப்பு அளிக்க தான் நான் இங்கே வந்தேன். பார்வை இல்லாதவங்களுக்கு பார்வை கிடைக்கும், பார்வை இருக்கிறவங்க குருடர்கள் ஆவாங்க. அதுக்காகத் தான் நான் வந்தேன்

நபர் 3 : (பரபரப்பாய்… ) பாத்தீங்களா.. பாத்தீங்களா.. நம்மளைத் தான் சொல்றாரு.. நாம பார்வையற்றவர்களாம். என்ன.. குழப்பம் உண்டாக்க பாக்கிறியா ?

இயேசு : நீங்க குருடர்களா இருந்திருந்தா.. உங்க கிட்டே பாவம் இருந்திருக்காது…

நபர் 3 : மறுபடியும்….பாத்தீங்களா…. அந்த குருடன் பாவம் இல்லாதவன்னு நாசூக்கா சொல்றாரு…

இயேசு : நீங்க உங்களுக்கு பார்வை இருக்குன்னு சொல்றீங்க, அதனால நீங்க பாவிகளாவே இருக்கீங்க.

நபர் 3 : உனக்கு என்ன திமிரு இருந்தா எங்க முன்னாடி வெச்சே, எங்களை பாவிகள்ன்னு சொல்லுவே.. உன்னை என்ன பண்றதுன்னு எங்களுக்குத் தெரியும். சீக்கிரமாவே உன் கொட்டத்தை அடக்கறோம்.

இயேசு : எல்லோரும் மீட்படைய வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால், மீட்படைய மாட்டேன் என பிடிவாதம் பிடிப்பது உங்கள் உரிமை.

(இயேசு போகிறார் )

குருடர் : இயேசுவே.. நானும் வரேன் ( பின்னாடியே போகிறார் )

பின் குரல் :

பிறவிக் குருடர் ஒருவர் படிப்படியாக இயேசுவின் சீடராகிறார். திருச்சட்டத்திலேயே மூழ்கிக் கிடப்பவர்கள் படிப்படியாக பாவ நிலைக்குள் மூழ்கி விடுகிறார்கள். நாம் எங்கே இருக்கிறோம் என்பதல்ல, யாருடன் இருக்கிறோம் என்பது முக்கியம். நாம் எதைக் கற்றுக் கொண்டோம் என்பதல்ல, இறைவனின் அன்பைக் கற்றுக் கொண்டாமா என்பதே முக்கியம். இயேசுவின் மீதான விசுவாசத்தை ஆழப்படுத்துவோம்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s