Posted in Articles, Lent days

தவக்காலம் – கேள்விகளின் காலம்

தவக்காலம்
கேள்விகளின் காலம்


தவக்காலம்
கேள்விகளின் காலம்.

கேள்விகளின் உள்ளே
வாழ்வின்
பதில்கள்
ஒளிந்திருக்கின்றன‌

பதில்களின் உள்ளே
வாழ்வின்
கேள்விகள்
மறைந்திருக்கின்றன.

சிலர்
பதிலை வைத்துக் கொண்டு
கேள்விகளை
எறிகிறார்கள்,
சிலர்
பதிலை புறக்கணித்துக் கொண்டு
கேள்விகளை எய்கிறார்கள்.

நாம்
வீசுகின்ற கேள்விகளின்
கூர்மையல்ல,
எதிர்பார்க்கும் பதிலுக்கான‌
நேர்மையே
நம் வாழ்க்கையைக் கட்டமைக்கிறது.

தவக்காலம்
கேள்விகளின் காலம்.

இயேசு
பதில்களின் பகிர்தலை
விட‌
கேள்விகளை அதிகமாய்க்
கேட்டுப் போனவர்.

அவரது
கேள்விகளுக்கான
பதில்கள்
நம்மைப் பாவ வாழ்வின்
மதில்களைத்
தாண்ட வைக்கும்

நீ என்னை
நேசிக்கின்றாயா ?
கேள்வியின் முடிவில்
கலங்கினார் பேதுரு.

என்னைத்
தொட்டது யார் ?
வினாவின் முடிவில்
விழுந்தாள் நோய்நீங்கிய பெண்.

திருச்சட்ட நூல்
சொல்வது என்ன ?
பதில் பொதிந்த கேள்வியில்
ஸ்தம்பித்தார் சட்ட வல்லுநர்.

நீங்களும் போய்விட‌
நினைக்கிறீர்களா ?
துயரம் நிறைந்த கேள்வியில்
துணையாய் நின்றனர் சீடர்கள்

ஏன்
ஐயம் கொண்டாய் !
பரமனின் கேள்வியில்
நீரில் நிமிர்ந்தார் பேதுரு.

ஏன்
அஞ்சுகிறீர்கள் ?
புயல் சுழன்ற கேள்விக்கு
பயந்து நடுங்கினர் சீடர்கள்.

நான் யாரென‌
மக்கள் சொல்கிறார்கள் ?
ஒளியின் கேள்விக்கு
பிதாவின் பதிலைச்
சொன்னார் பேதுரு.

இயேசுவின் வாழ்க்கை
நூற்றுக்கணக்கான‌
கேள்விகளால்
கூர்தீட்டப்பட்டது !

தவக்காலம்
கேள்விகளின் காலம்.

இயேசு
ஏன் மௌனமாய் இருந்தார்
என‌
பிலாத்துவுக்குப் புரியவில்லை.

இயேசு
ஏன் மன்னிப்பை அளித்தார்
என‌
கயவர்களுக்குப் புரியவில்லை.

இயேசு
ஏன் சிலுவையிலிருந்து
இறங்கி வரவில்லை
என‌
கூட்டத்துக்குப் புரியவில்லை

இயேசுவின்
கதறலின் பொருளென்ன‌
என‌
படித்தோருக்கும் புரியவில்லை.

அவர்களுடைய‌
கேள்விகளுக்குள்ளேயே
அவர்கள் புதைக்கப்பட்டனர்.

தவக்காலம்
கேள்விகளின் காலம்.

நமது கேள்விகள்
நம்மை
வழிநடத்துகின்றன.

நிலைவாழ்வு பெற‌
என்ன செய்ய வேண்டும் ?

என்
அயலான் யார் ?

மறுபடியும் பிறப்பது
என்றால் என்ன ?

நல்ல கேள்விகள்
நல்ல வாழ்வை நோக்கி
நம்மை
நகர்த்துகின்றன.

ஏன்
கைகழுவவில்லை ?

என்ன‌
அடையாளம் காட்டுவாய் ?

யார்
இந்த அதிகாரத்தைக் கொடுத்தது ?

தவறான கேள்விகள்
நம்மை
அழிவின் ஆழத்தில்
அமிழ்த்துகின்றன‌

தவக்காலம்
கேள்விகளின் காலம்.

அத்தனை கேள்விகளுக்கும்
பதிலாய் வாழ்ந்த‌
இயேசுவை நோக்கி,
மீட்புக்கான கேள்விகளைக்
கேட்கும் காலம்.

*

சேவியர்

One thought on “தவக்காலம் – கேள்விகளின் காலம்

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s