இவர்கள் என்ன ஆனார்கள் ?
சக்கேயு
சக்கேயுவின் கதை பைபிளிலுள்ள நிகழ்வுகளில் மிகவும் சுவாரஸ்யமானது. ஆன்மிக செழுமை வாய்ந்தது. லூக்கா நற்செய்தியாளர் மட்டுமே சக்கேயுவின் செய்தியைப் பதிவு செய்கிறார்.
எரிகோ வழியாக இயேசு போய்க்கொண்டிருக்கிறார். அங்கே இருக்கிறார் சக்கேயு. சக்கேயு என்பதற்கு கறைபடியாதவர், சுத்தமானவர் என்பது பொருள். ஆனால், அவர் அப்படிப்பட்டவராக வாழ்ந்தாரா என்பது தெரியவில்லை. அவர் வரி தண்டுவோருக்குத் தலைவராக இருந்தார் என்கிறது பைபிள். வரி வசூலிப்பவர்களையே வெறுக்கின்ற சமூகம் அது. அவர்களுக்குத் தலைவராக இருப்பவரைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
காரணம் மக்களை ஏமாற்றி அதிக வரி வசூலிப்பதை இவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். நியாயமற்ற வரியை வசூலிப்பதால் மக்களை கஷ்டத்துக்குள்ளாக்கிக் கொண்டிருந்தார்கள்.
இயேசு அந்த ஊருக்கு வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டதும், சக்கேயுவுக்கு அவரைக் காண வேண்டும் எனும் ஆர்வம் வந்தது. ஆனால் அவரது உயரம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. எனவே அருகில் இருந்த ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொள்கிறார். உயரத்திலிருந்து இயேசுவின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
இயேசு வந்தார். அந்த மரத்தின் அருகே வந்ததும் நின்றார். சக்கேயுவே கீழே இறங்கி வா என்று அழைத்தார். அவர் இறைமகன். இறைவன் நம் எல்லோருடைய பெயரையும் அறிந்து வைத்திருக்கிறார். இயேசு சக்கேயுவைப் பெயர் சொல்லி அழைத்து, தான் ஒரு இறைமகன் என்பதை வெளிப்படுத்துகிறார்.
சக்கேயு கீழே இறங்கினான்.
“இன்று நான் உன் வீட்டில் தங்க வேண்டும்” என்றார் இயேசு. “நான் கண்டிப்பாக உன் வீட்டில் தங்க வேண்டும்” என “கண்டிப்பாக” என்பதை அழுத்தமாய் சொல்கிறது மூலப் பதிவுகள். இது கடவுளின் திட்டம். சக்கேயுவுக்கு ஒன்றும் புரியவில்லை. வெறுக்கப்படும் மனிதர்களின் தலைவன் நான். இயேசுவோ, அதே மனிதர்களால் விரும்பப்படுபவர். இரு முரண்கள் எப்படி ஒன்று சேர முடியும் ?
சக்கேயு மரத்திலிருந்து மட்டும் இறங்கவில்லை. மனத்திலும் இறங்கினான். மனம் இரங்கினான்., ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்றார்.
இயேசு மகிழ்ந்தார். இந்த வீட்டிற்கு இன்று மீட்பு வந்தது என்றார். இயேசு ஒரு புதிய போதனையை அங்கே கற்றுத் தந்தார். சக்கேயு, “ஆண்டவரே நான் பாவி என்னை மன்னியும்” என கேட்கவில்லை. மாறாக, நேரடியாகச் செயலில் இறங்குகிறார். அது அவரது மனமாற்றத்தின் கனியாக இருக்கிறது. வார்த்தைகளால் நான் தோரணம் கட்ட விரும்பவில்லை, வாழ்க்கையால் நான் காரணம் காட்ட விரும்புகிறேன் என புரிய வைத்தார்.
மீட்பு பெற வேண்டுமெனில் பாவங்களை அறிக்கையிடுவது மட்டுமல்ல, மனம் திரும்பியதைச் செயல்களில் காட்டவேண்டும் எனும் பாடம் நமக்குக் கிடைக்கிறது.
அதன்பின் இயேசுவின் வாழ்க்கை நகர்கிறது. அவரது சிலுவை மரணமும் நிகழ்கிறது. சக்கேயு என்ன ஆனார் என்பதைப் பற்றிய குறிப்புகள் விவிலியத்தில் இல்லை. ஆனால் பைபிளுக்கு வெளியே இரண்டு விதமான செய்திகள் சக்கேயுவைப் பற்றிக் காணக் கிடைக்கின்றன.
சக்கேயு இயேசுவின் சீடராக மாறினார். இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். இயேசு தனது கடைசி காலத்தில் எருசலேம் சென்ற போது அவருடன் சக்கேயுவும் சென்றார். அவரை சிலுவையில் அறைவதற்காய் இழுத்துச் சென்ற காட்சியைக் கண்டு கலங்கினார். இயேசுவின் மரணத்துக்குப் பின்னும் அவர் இயேசுவின் சீடர்களோடு இருந்தார்.
பெந்தேகோஸ்தே நாளில் 120 பேர் மீது தூய ஆவியானவர் இறங்கிய போது, அவர்களில் ஒருவராக சக்கேயுவும் இருந்தார். ஸ்தேவானுடைய படுகொலைக்குப் பின் எரிகோவிலிருந்து இடம் பெயர்ந்தார். அன்றைய இஸ்ரேல் நாட்டிலுள்ள கேசாரியா எனும் பகுதிக்கு வந்தார். அங்கே இயேசுவின் நற்செய்தியை அறிவித்த அவர், அங்குள்ள திருச்சபையின் முதல் ஆயராக மாறினார். என்கிறது ஒரு கதை.
இன்னொரு கதையை புனித கிளமெண்ட் எழுதுகிறார். அவரது பார்வையில், சக்கேயு தான் இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவராக பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியாஸ். கடற்கரையோரமாய் இருந்த சக்கேயு, இயேசுவின் திருமுழுக்கைக் கண்டிருக்கிறார். பின்னர் இயேசுவால் மீட்கப்பட்டு அவரோடு இணைந்திருக்கிறார். இயேசுவின் சிலுவை மரணத்தையும் கண்டிருக்கிறார். அப்படிப்பட்ட தகுதிகளுடன், திருத்தூதர் தேர்வில் இணைந்து மத்தியாசாக யூதாசுக்கு பதில் திருத்தூதர் ஆகிறார் என்கிறது அந்தக் கதை.
எது எப்படியோ, செயல்களின் மூலம் விசுவாசத்தைக் காட்டிய சக்கேயு ஒரு வியப்பின் மனிதராக இருக்கிறார். இயேசுவால் மீட்படைந்த அவர் மீண்டும் பாவ வாழ்வுக்குள் சென்றிருக்க வாய்ப்பு இல்லை. எனவே இந்தக் கதைகளில் ஏதோ ஒன்றில் உண்மையின் வாசம் ஒளிந்திருக்கக் கூடும்.
*
சேவியர்
தங்களது பதிவுகள் அனைத்தும் ஆர்வத்தை தூண்டுபவையாக அமைந்துள்ளது
LikeLike
பாராட்டுக்கள் வாழ்த்துகள் கவிஞரே !உங்களது ஆராய்ச்சி அணுகுமுறையை
இன்று தான் காண முடிந்தது .
அசந்து போனேன் .வியக்கிறேன் .உங்களுடைய நுணுக்கமான அணுகுமுறையை மிகவும் ரசிக்கிறேன் .
அனேக புதுப்புது கருத்துக்களை அள்ளிக் கொடுக்கிறீர்கள்.
வாரி வழங்குகிறீர்கள் .உங்கள் மூலம் இறைவன் புகழ் பெறுகிறார் .உங்களை இறைவன் தகுந்த கருவியாக எடுத்து பயன்படுத்துகிறார். தொடர்ந்து இறைவன் உங்களை வழிநடத்த ஜெபித்து வாழ்த்துகிறேன் நன்றி தங்கள் பகிர்வுக்கு .தொடரட்டும் உங்கள் பணி.
மதுரையிலிருந்து தனம் செபாஸ்டின்
LikeLiked by 1 person
மிக்க நன்றி சகோதரரே.. உங்கள் உற்சாகமூட்டும் வார்த்தைகள் மிகப்பெரிய பலம் !
LikeLiked by 1 person
என்ன? சகேயு தான் மத்தியாஸ் என்ற பெயர்கொண்ட இயேசுவின் சீடரானா? இதை எங்கேயுமே கேள்வி பட்டது இல்லை. இதற்கான அத்தாட்சிகள் அல்ல வரலாற்று குறிப்புகள் எங்கேயாவது கிடைக்குமா? அறிய ஆவலுடன்.–
LikeLiked by 1 person
புனித கிளமெண்ட் – அவர்களுடைய எழுத்துகளில் அப்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
LikeLiked by 1 person