Posted in Articles, Bible Animals, Bible Poems

உயர்திணையான அஃறிணைகள் 3 – சிங்கம் !

உயர்திணையான அஃறிணைகள்
3

சிங்கம் !

கானகத்து
ராஜா என ஊர் அழைக்கும்.
கம்பீரம் என்
காலடியில்
கவிழ்ந்து படுத்திருக்கும்.

பிரபஞ்சத்தின்
கர்வக் காற்றலையில்
என்
பிடரி மயிர்கள்
ஆழிப் பேரலையாய்
சீற்றத்தை ஒளிபரப்பும்.

என் கர்ஜனைகளின்
எல்லைகளில்
காற்று கூட
துயில் தொலைத்து
விழித்திருக்கும்.

எனினும்,

நான்
குழப்பத்தில் விழுவது
விவிலியத்தில்
நுழைகையில் தான்.

அலகை,
சிங்கம் போல்
தேடித் திரிகிறதென
என்னை ஒரு பக்கம்
சாத்தானாக்குகிறது.

நான்
சங்கடத்தில் விழுகிறேன்.

பின்
யூத ராஜ சிங்கம்
என
என்னைக் கடவுளோடு
காட்சிப்படுத்துகிறது.

நான்
சந்தோசத்தில் நிமிர்கிறேன்.

கானகமே
நடு நடுங்க கர்ஜிக்கும்,
எதிரிகளை
கூர் நகங்களால் பீறும்
என்றெல்லாம்
என் வலிமையைப் பேசிவிட்டு,

தானியேலின் முன்னால்
வாய்பொத்தி
கைகட்டி
புரண்டு படுக்கச் சொல்கிறார்
கடவுள்,
நான் பணிவு காட்டுகிறேன்.

உலகமே
என் வீரத்தின் முன்
விழுந்து கிடக்கையில்
ஒருவன்
கையினால் என்னை
அடித்தே கொல்கிறான்.

ஒருவன்
என் வாயிலிருந்து
ஆட்டுக் குட்டியைப்
போரிட்டுப்
பறிக்கிறான் !

விவிலியம்
என்னைப் பந்தாடுகிறது !

சிங்கம் என்பதே
அசிங்கமாகி விடுகிறது !

எனக்குப்
பெயரிட்ட ஆதாமின்
சந்ததி
பயத்தில் விழுந்தாலும்,

என்னைப் படைத்த
பரமன் முன்
நான் என்
சுண்டு விரலையும்
உயர்த்துவதில்லை !

கொழுத்த இரைகளின்
மாமிசத்தில்
உடல் வளர்க்கும் என்னை
உலுக்கிப் போடும்
ஒரு வசனம் உண்டு !

அது
இது தான்

சிங்கம் மாட்டைப் போல
வைக்கோல் தின்னும் !

*

சேவியர்

Posted in Articles, Beyond Bible

இவர்கள் என்ன ஆனார்கள் – 9 அரிமத்தியா யோசேப்பு

இவர்கள் என்ன ஆனார்கள்
அரிமத்தியா யோசேப்பு

அன்னாவும் கயபாவும் கோபத்தில் கொந்தளித்தனர். அவர்களுடைய கண்கள் சிவந்து அனலடித்தன. அவர்களுக்கு முன்னால் யூத மதத்தலைவர்கள் சிலர் நின்றிருந்தனர்.

“என்ன திமிர்… என்ன திமிர்….. யோசேப்பு செய்ததை எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்தி விட முடியாது “ கயபா கொதித்தார்.

“ஆமாம்… தலைமைச்சங்க, செனதரீம் , உறுப்பினராக இருந்து கொண்டே அவரும் நிக்கோதேமுவும் செய்த காரியம், நம்ம குழுவுக்கே அவமானம். நமது குழுவின் மீது இருக்கின்ற மரியாதை பொதுமக்களிடம் குறைய இது ஒன்றே போதும்” அன்னா கொந்தளித்தார்.

“இதற்கு ஏதேனும் செய்தே ஆகவேண்டும். இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொல்லவே நாம் படாத பாடு பட்டோம். மக்களுடைய மாபெரும் வெறுப்பைச் சம்பாதிக்க இருந்தோம். எப்படியோ வெற்றிகரமாக அவனை ஒழித்தாயிற்று. அப்படியே விட்டிருக்க வேண்டும். யோசேப்பு செய்த காரியம் மன்னிக்க முடியாதது. திரியில் எண்ணை ஊற்றி தூண்டி விடும் விஷயம் “ ஒரு மத குரு வெறுப்பை உமிழ்ந்தார்.

“எனக்கு புரியல.. என்ன நடந்தது ?” வயதான ஒருவர் குழப்பமாய்க் கேட்டார்.

“இது கூட தெரியாமல் இருக்கிறீரே… சிலுவையில் இறந்து தொங்கிக் கொண்டிருந்த இயேசுவை அடக்கம் செய்ய அனுமதி கேட்டிருக்கிறான் யோசேப்பு.. அதுவும் பிலாத்துவிடம். நமது சங்கத்தில் வந்து கேட்டால் அனுமதி கொடுக்க மாட்டோம் என அவனுக்குத் தெரியும். அதனால் தான் நம்மிடம் வராமல் நேராக பிலாத்துவிடம் போய் அனுமதி வாங்கியிருக்கிறான் “

“அது மட்டுமல்ல, அவனுக்காக வைத்திருந்த கல்லறையிலேயே அடக்கம் செய்திருக்கிறான் “

“எல்லாமே பக்காவாக திட்டம் போட்டு காய் நகர்த்தியிருக்கிறான். ஆறுமணிக்கு மேல் ஓய்வு நாள் ஆரம்பமாகிறது. இயேசு இறந்தது மூன்று மணிக்கு. வெறும் மூன்று மணி நேரம் தான் இருந்தது. அதனால் நேரடியாக பிலாத்துவிடமே போய் அனுமதி வாங்கியிருக்கிறான் “

“மூன்று மணி நேரத்தில் எப்படி சாத்தியப்படுத்தினான் “

“உடலை கீழே இறக்கி, புதிய துணிகளால் சுற்றிக் கட்டி அருகில் இருந்த அவனது கல்லறையிலேயே வைத்து விட்டார்கள். தூரமான இடத்துக்குக் கொண்டு போனால் நேரமாகிவிடும், ஓய்வு நாள் ஆரம்பமாகிவிடும் என அவனுக்குத் தெரியும். ஓய்வு நாளுக்கு முன் எல்லாவற்றையும் பக்காவாகச் செய்து விட்டு நம்முடைய ஓய்வைக் கெடுக்கிறான்”

“ஆமா, அவன் இறந்த உடலைத் தொட்டால் தீட்டாகிவிடுவானே… அவனால் திருவிழாவைக் கொண்டாட முடியாதே… “

“அதெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல. அவனுக்கும் இப்போது நமது சட்டங்கள் வழக்கங்கள் எல்லாவற்றையும் விட இயேசு தான் முக்கியமாய் படுகிறார்”

“நான் முன்னமே சொல்லியிருக்கிறேன். யோசேப்பும் நிக்கோதேமுவும் நடந்து கொள்ளும் விதம் சரியில்லை என்று. நிக்கோதேமு தனியாக இயேசுவைப் போய் சந்தித்த விஷயத்தையும் நான் சொல்லியிருக்கிறேன். முன்னரே நாம் உஷாராகியிருக்க வேண்டும். “

“இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. அவனை இழுத்து வந்து நமது சட்டத்தின் படி அவனைச் சிறையில் அடைக்க வேண்டும்”

அந்த அவை யோசேப்பு மீதான வெறுப்பினால் கனன்று கொண்டிருந்தது. யோசேப்பு செல்வந்தர். செனதரீம் குழுவில் செல்வாக்கு மிக்கவர். பிலாத்துவிடமும் அவனுக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. காரணம் யோசேப்பு ஒரு வியாபாரியாகவும் இருந்தார். அதனால் அரண்மனையோடான தொடர்பு அவனுக்கு அழுத்தமாக இருந்தது.

செல்வாக்கு இல்லாத செல்லாக்காசாக இருந்திருந்தால் ஒரு மூட்டைப்பூச்சியை நசுக்குவது போல நசுக்கியிருப்பார்கள். ஆனால் இப்போது நிலமை கை மீறிப் போய்விட்டது. யூத நிர்வாகக் குழுவே இரண்டாகப் பிளந்தது என ஊரார் நினைக்கத் தொடங்கி விட்டார்கள். எனவே யோசேப்புவைச் சிறையில் அடைத்தே ஆகவேண்டும் எனும் முடிவு அங்கே எடுக்கப்பட்டது.

யோசேப்பு அழைத்து வரப்பட்டார். சபையின் முன்னால் நிறுத்தப்பட்டார். அவருக்குத் தெரியும், இங்கே இருக்கும் யாருமே தனக்காகப் பேசப் போவதில்லை. எனவே அவர் எதற்காகவும் பதட்டப்படவில்லை.

“நீ செய்த காரியத்தால் எங்களுக்கெல்லாம் தலை குனிவு” கயபா தான் கர்ஜித்தான்.

“வாழ்வு தர வந்தவருக்கு, கல்லறை கொடுத்தேன். அந்தரத்தில் தொங்கியவரை இறக்கி இறுதிச் சடங்கு செய்தேன். இதில் என்ன தவறு ? அது மட்டுமல்ல, அவர் மீதான உங்களுடைய குற்றச் சாட்டுகள் நேர்மையானவை அல்ல என்பது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும் “ யோசேப்பு சொன்னார்.

“எங்கள் தீர்ப்பின் மீதே கேள்வி கேட்க உனக்குத் துணிச்சல் வந்தது ஆச்சரியம் தான். உன்னை சிறையில் அடைப்பதைத் தவிர வேறு வழியில்லை. என்ன சொல்கிறீர்கள் ? இவனை சிறையில் அடைக்க யாரெல்லாம் ஒத்துக் கொள்கிறீர்கள்”

எல்லா கரங்களும் உயர்ந்தன. யோசேப்பு சிரித்தார். “தீர்ப்பினை எழுதிவிட்டு விசாரணை செய்கிறீர்கள். நான் நம்பும் இயேசு என்னை விடுவிப்பார். உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்”

“ஹா..ஹா.. அப்படியா.. பார்ப்போம்… உன்னோட இயேசுவை வெச்ச கல்லறைக்கே சீல் வெச்சாச்சு.. உன்னையும் சிறையில போட்டு, சிறைக்கு சீலும் வைக்கப் போறோம். என்ன நடக்குதுன்னு பாப்போம். இன்னிக்கு ஓய்வு நாள். ஓய்வு நாள் முழுசும் பட்டினியா அந்த இருட்டு அறையிலே கிட, நாளைக்கு பேசுவோம்”

யோசேப்பு இழுத்துச் செல்லப்பட்டார். இருட்டு அறை ஒன்றில் அடைக்கப்பட்டார். அந்த அறை இருட்டின் கரங்களில் இருந்தது. யோசேப்பு பயப்படவில்லை. அந்த அறையில் அடைக்கப்பட்டிருந்தபோது இறைவனை நோக்கி மன்றாடினார்.

நேரம் போய்க்கொண்டே இருந்தது. சிறையில் யோசேப்பு செபித்துக் கொண்டிருந்தார். ஓய்வு நாள் முடியப்போகிறது. நள்ளிரவு நேரம் திடீரென ஒரு ஒளி அந்த அறையை நிரப்பியது. யாரோ அவரைத் தூக்கி நிறுத்தினார்கள். தலையில் தண்ணீர் கொட்டப்பட்டது. யோசேப்பு திடுக்கிட்டார். என்ன நடக்கிறது என குழம்பி நிமிர்ந்தவருடைய நாசியில் எண்ணையின் வாசம் வீசியது.

“யோசேப்பு பயப்படாதே..” என ஒரு குரல் கேட்டது. யாரோ அவருடைய கன்னத்தில் முத்தமிட்டார்கள். யோசேப்பு கண்களைத் திறந்து பார்த்தார். அங்கே இயேசு நின்றிருந்தார். வெலவெலத்துப் போன யோசேப்பு, நீங்கள் இறைவாக்கினர் எலியாவா ? என கேட்டார்.

“இல்லை, நீ சிலுவையிலிருந்து இறக்கி, துணியைச் சுற்றி, உனக்கான கல்லறையில் அடக்கம் செய்த இயேசு நான் தான்” என்றார் அவர். “அ..அப்படியானால் நான் உங்களை எங்கே அடக்கம் செய்தேன்” என்பதைக் காட்டுங்கள் என்றார் யோசேப்பு.

கதவுகள் அடைபட்டிருக்க, சீல் உயிர்ப்புடன் இருக்க யோசேப்பு சிறையை விட்டு வெளியே வந்தார். இயேசு அவரை கல்லறை அருகே அழைத்துச் சென்றார். யோசேப்பு என்ன நடக்கிறது என்பதைப் புரியாமல் இருந்தார். தோற்ற மயக்கமாய் இருக்குமோ என அவருக்குத்தோன்றியது. அடுத்து அவர் தனது சொந்த வீட்டுக்குக் கூட்டிச் செல்லப்பட்டார். கதவுகள் அடைக்கப்பட்டிருக்க அவர்கள் உள்ளே சென்றார்கள்.

அவரை படுக்கையில் கிடத்திய இயேசு, “நாற்பது நாட்கள் நீங்கள் இங்கே தங்கியிருங்கள்” அதன் பின் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்குச் சொல்லப்படும் என சொல்லி விட்டு மறைந்தார். கனவா நிஜமா என குழம்பிய நிலையிலிருந்த யோசேப்பு இப்போது இயேசுவின் தீவிர சீடனாக மாறியிருந்தார்.

இப்படி ஒரு சுவாரஸ்யமான கதை “நிக்கோதேமு திருமுகம்” எனும் நூலில் எழுதப்பட்டிக்கிறது. இது ஆதிகால நூல். இதை பிலாத்துவின் நடபடிகள் என்றும் அழைக்கின்றனர். இதை எழுதியவர் நிக்கோதேமு அல்ல. பல எழுத்துகளின் தொகுப்பாக இந்த நூல் அமைந்திருக்கிறது. இவை நிஜமும் புனைவும் கலந்த எழுத்துகளாகவே காட்சியளிக்கின்றன.

கிமு நான்காம் நூற்றாண்டுகளில் இது இறுதி வடிவம் பெற்றது. பழைய கால நூல்களில் அதிகம் அறியப்பட்ட நூல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது.

இயேசுவின் இறப்பு உயிர்ப்புக்குப் பின் அரிமத்தியா யோசேப்பு என்ன ஆனார் என்பதைக் குறித்து ஏகப்பட்ட தகவல்கள் பைபிளுக்கு வெளியே நமக்குக் கிடைக்கின்றன. தகவல்களுக்கிடையே ஏகப்பட்ட முரண்கள் உண்டு, ஆனால் எல்லா தகவல்களுமே ஒரே மாதிரி சொல்கின்ற விஷயம், “யோசேப்பு இயேசுவை ஏற்றுக் கொண்டார், நற்செய்தி அறிவித்தலில் ஈடுபட்டார்” என்பது தான்.

இயேசுவால் விடுவிக்கப்பட்ட யோசேப்பு மீண்டும் தலைமைச் சங்கத்தின் முன்னால் சென்று தைரியமாக இயேசுவின் உயிர்ப்பையும், அவரது மகிமையையும் உரக்கப் பறை சாற்றினார். ஏற்கனவே எரிச்சலில் இருந்த தலைமைச் சங்கம் இவரையும், இவரோடு இயேசுவின் சீடர்கள் சிலரையும் சேர்ந்த்து ஒரு கப்பலில் அடைத்து இலக்கில்லாமல் கடலில் பயணிக்க விட்டார்கள். மாலுமியற்ற கப்பல் கடலில் அலைந்து திரிந்து இங்கிலாந்துக் கடற்கரையோரம் சென்று சேர்ந்தது.

இங்கிலாந்தில் சென்று சேர்ந்த அரிமத்தியா யோசேப்பு அங்கு நற்செய்தி அறிவித்தலில் ஈடுபட்டார். இங்கிலாந்து நாட்டில் முதன் முதலாக நற்செய்தியை அறிவித்தவர் இவர். இவர் கிளாஸ்டன்பெரியில் திருச்சபையைக் கட்டியெழுப்பி அதன் ஆயராக இருந்துப் பணியாற்றினார் என்கின்றன பல குறிப்புகள். யோசேப்பு தன்னுடன் பதினோரு பேரைச் சேர்த்துக் கொண்டு ஒரு குழுவாகப் பணியாற்றினார் எனவும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.

தெர்த்தூலியன், ஜெசூபியஸ் உட்பட பலரும் கிபி 150 களுக்கு முன்பே இங்கிலாந்தில் கிறிஸ்தவம் கால் பதித்ததை உறுதிப்படுத்துகின்றனர். ஆதிகாலத் திருச்சபை வரலாற்றின் தலைசிறந்த ஆய்வாளர்களான ஐரேனியுஸ், தெர்த்தூலியன், ஹிப்போலெடஸ் உட்பட பலரும் யோசேப்பு குறித்த தகவல்களை எழுதி வைத்துள்ளனர்.

மரிய மதலேனாவின் வாழ்க்கை வரலாற்றை ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதிய, திருச்சபைத் தலைவரான ரபானஸ் மாரஸ் அரிமத்தியா யோசேப்பு இங்கிலாந்து வந்து நற்செய்தி அறிவித்தார் என்றும், அவருடன் லாசர், மார்த்தா, மரியா, புனித சலோமி, புனித எத்ரோபியஸ், புனித மாரிதல், புனித திரோபிமஸ் ஆகியோரும் இணைந்திருந்தனர் என்றும் குறிப்பிடுகிறார். யோசேப்பு பல புதுமைகளை நிகழ்த்தினார் என்றும் பழங்காலக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆதிகாலக் கதையான ‘ஹோலி கிரில்’, இயேசுவின் குருதியை ஏந்திய பாத்திரம், இவரிடம் தான் முதலில் இருந்தது என்கின்றன கதைகள். பல்வேறு புனை கதைகளுக்கு எண்ணை ஊற்றிய இந்த சிந்தனை நூற்றாண்டுகள் தாண்டியும் இன்னும் உயிர்ப்புடன் இருப்பது குறிப்பிடத் தக்கது.

சுவாரஸ்யமான இன்னொரு குறிப்பு அரிமத்தியா யோசேப்பு, இயேசுவின் நெருங்கிய உறவினர் என்கிறது. மரியாவின் தந்தையான யோவாக்கிமின் இளைய சகோதரர் தான் இந்த யோசேப்பு என்றும், இயேசுவின் தந்தையான யோசேப்பு இறந்த பின் இயேசுவைப் பராமரித்தது இந்த யோசேப்பு தான் என்றும், இயேசுவின் பால்ய வயதிலேயே இவர்கள் இருவரும் இங்கிலாந்திற்கு வந்ததுண்டு என்றும் தெரிவிக்கிறது.

அரிமத்தியா யோசேப்பு இங்கிலாந்திலேயே நற்செய்தி அறிவித்து அங்கேயே கிளாஸ்டன்பரியில் அடக்கம் செய்யப்பட்டார். அவரது கல்லறை “இயேசுவை அடக்கம் செய்தபின் நான் இங்கிலாந்து வந்தேன், கற்பித்தேன், இப்போது ஓய்வெடுக்கிறேன்” என்கிறது.

பாரம்பரியக் கிறிஸ்தவ அமைப்புகளில் யோசேப்பு புனிதராகப் போற்றப்படுகிறார். கர்த்தருக்குக் கல்லறை கொடுத்தவரை வரலாறு கல்வெட்டில் பொறித்து வைத்திருக்கிறது !

அரிமத்தியா யோசேப்பின் கதை நிஜமும், புனைவும் கலந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவர் இயேசுவின் சீடராக மாறி பணியாற்றினார் என்பதிலும் சந்தேகமில்லை.

*

சேவியர்

Posted in Articles, Sunday School

கிறிஸ்தவ நாடகம் : அந்த ஆணி

முழுவதும் கொடுப்போம் இறைவனிடம்

காட்சி 1

( அம்மாவும், பையனும், மகளும். மகனும் மகளும் மொபைலில் ஏதோ நோண்டிக் கொண்டிருக்கும் போது அம்மா வருகிறார் )

( மகனும் மகளும் மொபைல் நோண்டிக்கொண்டிருக்கும் போது அம்மா வருகிறார் . மகள் புத்தகத்துக்குள் போனை வைத்து மறைத்து விளையாடுகிறாள் )

அம்மா : என்னப்பா… படிக்கச் சொன்னா, மொபைலை நோண்டிட்டிருக்கே

பையன் : கொஞ்ச நேரம்… கேம் விளையாடிட்டிருந்தேன்… அதுக்கு போய் திட்டறீங்க

அம்மா : மொபைல்ல ஏன் கேம் விளையாடறே.. குடு பாக்கறேன்.. என்ன விளையாடறேன்னு. வர வர உங்க போக்கே சரியில்லை…

( அப்போது மகள், தன்னிடமிருந்த போனை நைசாக ஒளித்து வைக்கிறாள் )
O
அம்மா போனை வாங்கி பார்க்கிறார்.

அம்மா : இதென்னடா கேம்… ஒரே வயலன்சும்…. காஸ்டியூமும்.. எல்லாம் நல்லாவே இல்ல…. இதையா விளையாடறே ?

பையன் : கேம் தாம்மா.. சும்மா…

அம்மா : இதெல்லாம் வேண்டாம்… இதெல்லாம் கடவுளோட பிள்ளைகள் விளையாடக் கூடாது. இதெல்லாம் தானே உன் மனசுல இருக்கும்.

பையன் : அம்மா, கடவுளுக்கும் இதுக்கும் என்னம்மா சம்பந்தம். நான் பைபிள் வாசிக்கிறேன், சர்ச் போறேன், ப்ரேயர் பண்றேன்.. இப்போ பிளே டைம்.. விளையாடறேன்…

அம்மா : கொஞ்ச நேரம் கடவுளுக்கு, கொஞ்ச நேரம் சாத்தானுக்குன்னு குடுக்கக் கூடாது தம்பி. நீ விளையாடலாம் தப்பில்ல, ஆனா இந்த மாதிரி தப்பான விளையாட்டெல்லாம் விளையாடக் கூடாது. இப்பல்லாம் நீ டிஜிடல் ல ஸ்பெண்ட் பண்ற நேரம் அதிகமாயிடுச்சு.

பையன் : ஆமா, என்னை மட்டும் திட்டுங்க. அக்காவும் புக்குக்கு இடையில மொபைலை வெச்சு தான் நோண்டிட்டு இருப்பா.. அவளை மட்டும் ஒண்ணும் சொல்லாதீங்க.

மகள் : தேவையில்லாம இப்போ ஏன் என்னை இழுக்கறே… நான் .. நான் பிரண்ட்ஸ் வாட்சப்ல பாடம் போட்டோ எடுத்து அனுப்பறேன்னு சொன்னாங்க, அதான் வெச்சிருந்தேன்.

அம்மா : நான் ரெண்டு பேருக்கும் சேத்து தான் சொல்றேன். மொதல்ல பொய் சொல்றீங்க அது பாவம். கீழ்ப்படியாம இருக்கீங்க அது இன்னொரு பாவம். கடமையை செய்யாம இருக்கீங்க அது இன்னொரு பாவம். தப்பான விளையாட்டை விளையாடறீங்க அது இன்னொரு பாவம்.

பையன் : என்னம்மா, ஒரு கேம் விளையாடினதுக்கு இவ்ளோ பாவத்தை அடுக்கறீங்க.

அம்மா : பாவம் அப்படித் தான் தம்பி, ஒண்ணுக்கு பின்னாடி ஒண்ணா முளைச்சுட்டே இருக்கும். கவனமா இருக்கணும். ஒரு சின்ன பாவத்தைக் கூட அனுமதிக்கக் கூடாது. அது அப்படியே வளர்ந்துட்டே இருக்கும்.

பையன் : சரி..சரி ( எரிச்சலாக ) எப்பவும் அட்வைஸ் தானா… கடுப்பா இருக்கு…

அம்மா : சரி, கடுப்பாகாதே… நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் விளையாடுங்க, மொபைல் வேண்டாம் வேற ஏதாச்சும் விளையாடுங்க. நாம நாளைக்கு ஒரு புது வீடு பாக்க போறோம்…

அம்மா : வாவ்.. ஜாலி… போலாம்.

காட்சி 2

( அம்மா, மகன், மகள் , பாட்டி )

வீட்டு ஓனர் : வாங்க வாங்க…. எங்கே சார் வரலையா ?

அம்மா : இல்லை, அவரு வெளிநாட்ல இருக்காரு, நான் வீடியோ கால்ல வீட்டை காமிச்சுக்கறேன். நோ பிராப்ளம்…

வீ.ஓ : சூப்பர்… சூப்பர்… இப்போ டெக்னாலஜி ரொம்ப வளர்ந்துடுச்சு… தூரமா இருக்கிறெல்லாம் பக்கத்துல வந்துச்சு, பக்கத்துல இருக்கிறதெல்லாம் தூரமா போயிடுச்சு.

அம்மா : உண்மை தான்… வெளிநாட்ல இருக்கிறவங்க கூட பேசறோம், ஆனா பக்கத்து வீட்டுக்காரங்க கூட பேசறதில்லை.

பாட்டி : வீடு ரொம்ப நல்லா இருக்கு…. எவ்ளோ ஏரியா ?

வீ : இது மொத்தம் 1900 ஸ்கொயர் ஃபீட் இருக்கு… வீடு கட்டி ஒரு பத்து வருசம் தான் ஆச்சு…
W
பாட்டி : எவ்ளோ கேக்கறீங்க ? நாங்க எந்த புரோக்கரையும் பாக்கல நேரா உங்களைத் தேடித் தான் வந்தோம்.

வீ : ஆமா… நானும் புரோக்கர் ஏதும் வெச்சுக்கறதில்லை.

பாட்டி : உத்தேசமா எவ்ளோக்கு தருவீங்கன்னு சொன்னா… பாக்க வசதியா இருக்கும்.

வீ : ரெண்டு ந்னா முடிக்கலாம்.

பாட்டி : ரெண்டு கோடியா… அது கொஞ்சம் அதிகமா இருக்கு….

வீ : ஹா..ஹா. கோடி யாரு கேட்டது.. லட்சம்.. ரெண்டு லட்சம் தான்.

பாட்டி : விளையாடாதீங்க… ரெண்டு இலட்சத்துக்கு ஒரு வீட்டுக்கு மதில் கூட கட்ட முடியாது.

வீ : இல்ல, நான் சீரியசா தான் சொல்றேன்.. வீடு ரெண்டு இலட்சம் தான்.

பாட்டி : வீடு ஏதாவது கேஸ்ல இருக்கா ? பிரச்சினைல இருக்கா ? பட்டா இருக்கா ?

வீ : பாத்தீங்களா.. வீடு சீப் ரேட் டுன்னு சொன்னதும் எல்லா சந்தேகமும் வருது… இதே ரெண்டு கோடின்னா சந்தேகமே வந்திருக்காது.

பாட்டி : இல்ல, ரெண்டு இலட்சத்துக்கு வீடே கிடைக்காது. வாடகைக்கு அட்வான்சே ரெண்டு கேக்கறாங்க.

வீ : ஆ… அதுக்கு ஒரு காரணம் உண்டு. இந்த வீடு மொத்தமா உங்களுக்கு தான். ரெண்டு இலட்சம் குடுங்க. ஆனா, வீட்ல பெட் ரூம்ல ஒரு ஆணி மட்டும் இருக்கும். அது மட்டும் என்னுது. அதை நீங்க யூஸ் பண்ணக் கூடாது. டிஸ்டர்ப் பண்ணக் கூடாது. நான் அப்பப்போ வந்து பாப்பேன், அலோ பண்ணணும்… அவ்ளோ தான்.

பையன் : நீங்க உண்மையிலேயே சொல்றீங்களா ? இல்லை கிண்டல் பண்றீங்களா ?

வீ. ஆ : தம்பி உண்மையைத் தாம்பா சொல்றேன்… வாங்க வீட்டைக் காட்டறேன்….

( வீட்டைக் காட்டுகிறார் )

வீ.ஆ : இதான்பா அந்த ஆணி .. இதை மட்டும் நீங்க டிஸ்டர்ப் பண்ணக் கூடாது, சரியா ?

பையன் : சரி சார்.. கண்டிப்பா..

வீ. ஆ : அப்போ, உடனே நாம வீட்டு டாக்குமெண்ட் எல்லாம் ரெஜிஸ்டர் பண்ணி வீட்டை உங்க பேருக்கு மாத்திடலாம்.

அம்மா : சரி சார்.. நன்றி…

காட்சி 3

( பையனும், அம்மாவும், அக்காவும், பாட்டியும் பேசுகிறார்கள் )

பையன் : என்னம்மா யோசிக்கிறீங்க..

அம்மா : இல்ல அந்த வீட்டு விஷயத்துல … ஏதோ ஒரு உள்குத்து இருக்கோன்னு எனக்கு ஒரு டவுட். ரெண்டு இலட்ச ரூபாய்க்கு வருதே…

பையன் : ஒருவேளை அந்த ஆணில… ஏதாச்சும் மந்திரம் செஞ்சு வெச்சிருப்பாரோ ?

மகள் : அப்படியெல்லாம் இருக்காது.. அந்த ஆணியை அவங்க பரம்பரையில யாராச்சும் அங்கே அடிச்சிருப்பாங்க, அதை பிடுங்க மாட்டேன்னு அவரு வாக்கு குடுத்திருப்பாரு.

பையன் : நீ சினிமா கதை மாதிரி பேசறே.. ஆமா. பெரிய பரம்பரை ஆணி..

பாட்டி : அப்படியும் இருக்கலாம். ராசியான ஆணி… செண்டிமெண்ட் ஆணி.. இப்படி ஏதோ ஒரு ஆணி.

பையன் : ஆமா. ஆணியே புடுங்க வேண்டாம்ன்னு சொல்றது இது தானா ?

மகள் : எப்படியோ சீப்போ சீப்பா ஒரு வீடு கிடைக்குது. அப்பாக்கு வீடியோ அனுப்பினேன், செம சூப்பர் ந்னு சொன்னாரு. எனக்காக வெயிட் பண்ண வேண்டாம் வாங்கிடுங்கன்னு சொன்னாரு. வாங்கிடுவோம்.

காட்சி 4

( வீட்டு ஓனர், இந்த குடும்பம் )

வீ.ஓ : எப்படியோ வீட்டு ரெஜிஸ்ட் ரேஷன் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. இனி இந்த வீடு உங்களுது. நல்லா என் ஜாய் பண்ணுங்க. ஆனா அந்த ஆணி மட்டும் என்னுது ஞாபகம் வெச்சுக்கோங்க.

பையன் : ஓக்கே… ஓக்கே

வீ.ஓ : சரி, நான் ஒரு தடவை அதைப் போய் பாத்துட்டு வந்துடறேன்.

பையன் : வாங்க, போய் பாக்கலாம்.

( அவர் போய் பார்க்கிறார் .. கிளம்புகிறார் )

வீ. : சரிப்பா.. நான் கிளம்பறேன்.

பையன் : சரி சார்.

காட்சி 5

(வீ.ஓ வருகிறார் )

பையன் : வாங்க, வாங்க… என்ன இந்தப் பக்கம்.

வீ : இல்ல, அந்த ஆணியைப் பாக்கலாம்ன்னு வந்தேன்.

பையன் : ஆணி அங்கே தான் சார் இருக்கும்.. நம்புங்க.

வீ : ஹா..ஹா.. எதுக்கும் ஒரு தடவை பாத்துட்டு போயிடறேன்.

பையன் : சரி வாங்க.

( அவர் பார்த்து விட்டுக் கிளம்புகிறார் )

மகள் : இவரு என்ன மெண்டலா ? ஆணியை பாக்க வந்துட்டே இருக்காரு…

பையன் : சரி.. வந்தாரு பாத்தாரு போயிட்டாருல்ல, யாருக்கும் தொந்தரவு இல்லையே.. விட்டுடு.

காட்சி 6

(வீ. ஓ வருகிறார் )

பையன் : என்ன சார்… என்ன விசேஷம்

வீ : இல்ல, அந்த ஆணில என்னோட போட்டோ ஒண்ணு மாட்டணும்.

பையன் : என்ன சார் சொல்றீங்க.. அது எங்க பெட் ரூம்ல இருக்கு.. அதுல போய் உங்க போட்டோவை மாட்டணும்ன்னு சொல்றீங்க.

வீ : இத பாருங்க… வீட்டை விக்கும்போ தெளிவா சொல்லியிருக்கேன். அந்த ஆணி என்னுதுன்னு. ஒரு போட்டோ மாட்டிட்டு போயிட போறேன்.. அவ்ளோ தானே.

பையன் : சரி.. வாங்க… ( கடுப்பாக )

( போட்டோவை மாட்டி விட்டுக் கிளம்பி விடுகிறார் )

அம்மா : என்னடா. இந்தாளு நிஜமாவே லூசா ? இல்ல நம்மளை லூசுன்னு நினைக்கிறாரா ?

பையன் : சரி.. விடும்மா.. வந்தாரு போயிட்டாரு.. ஒரு போட்டோ தானே.. இருந்துட்டு போகட்டும்.

காட்சி 7

( வீ.ஓ வருகிறார் .. நள்ளிரவு…)

பையன் : சார்.. என்னசார் இது.. மிட் நைட் சார்.. ஏன் இப்போ வந்தீங்க

வீ. ஓ : பாத்தீங்களா.. அதுக்குள்ளே டென் சன் ஆயிட்டீங்க.. நாம ஏற்கனவே அக்ரீமெண்ட் போட்டது தானே. எனக்கு.. என்னோட… ஆணில ஒரு வேலை இருக்கு அதான் வந்தேன்.

பையன் : ஆணில தான் போட்டோ இருக்கே…

வீ. ஓ : அதை எடுத்துட்டு இந்த பையை மாட்டிட்டு கிளம்பிடறேன்… ஓக்கே வா ?

பையன் : அது காலைல வந்திருக்கலாம்ல..

வீ. ஓ : இத பாருங்க, மறுபடியும் மறுபடியும் பேச்சு மாறாதீங்க. ஆணியை பாக்க வரும்போ நீங்க என்னை அலோ பண்ணணும்.

பையன் : அப்பப்போ தான் வருவேன்னு சொன்னீங்க.. இப்போ டெய்லி வரீங்க

வீ.ஓ : தம்பி.. ஒரு நாளைக்கு 1440 நிமிஷம் இருக்கு, அதுல அஞ்சே அஞ்சு நிமிஷம் தான் நான் எடுக்கறேன். அது .05 % கூட இல்லை, அதுக்கு போயி டென் சன் ஆகறீங்க !

பையன் : சரி.. சரி.. வந்துட்டு போங்க.. சீக்கிரம்

வீ.ஓ : பொறுங்க தம்பி….

( அவர் போய், போட்டோவை எடுத்து விட்டு ஒரு பையை மாட்டி விடுகிறார். கிளம்பி விடுகிறார் )

காட்சி 8

( அதிகாலை நேரம்.. வீடு முழுதும் நாற்றம் )

அம்மா : என்னடா.. ஒரே வாடையா இருக்கு.. கெட்ட வாடை.

அக்கா : ஆமா.. எங்கேயிருந்து வருதோ தெரியலையே…

பையன் : ஆமா… என்ன இது வீடு புல்லா நாறுது.

அக்கா : பெட் ரூம்ல இருந்து தான் வருதுன்னு நினைக்கிறேன்

பையன் : அந்த ஆளு வேறு ஒரு பையை கொண்டு மாட்டிட்டு போனாரு, அதுல ஏதாச்சும் வெச்சிருக்காரோ தெரியலையே.

அம்மா : போய் பாருடா…

( பையன் போய் பார்க்கிறான்.. அதில் கருவாடு இருக்கிறது )

பையன் : அம்மா. இதுல கருவாடு இருக்கும்மா..

அம்மா : கருவாடா.. அய்யோ கடவுளே.. அவன் என்ன மெண்டலா.. கருவாடை கொண்டு வந்து வெச்சிருக்கான்.

அக்கா : அதை தூக்கி வீசுடா..

பையன் : அது முடியாதுக்கா.. அவருக்கு நாம வாக்கு குடுத்திருக்கோம்.

அம்மா : இப்போ என்ன பண்ண.. அவருக்கு போன் பண்ணி பேசு டா

( பையன் போன் பண்ணுகிறான் )
போனில் : தம்பி.. என்ன ரொம்ப சவுண்ட் வுடறீங்க. அது என்னோட ஆணி… அது என்னோட பை.. அதெல்லாம் எடுக்க முடியாது. நான் நினைக்கும்போ வந்து எடுத்துக்கறேன்.. போனை வைங்க.

பையன் : சார்..சார்….ச்ச்சே.. அவரு டார்ச்சர் பண்றாரும்மா…

காட்சி 9

( வெளியே நின்று பேசுகிறார்கள் )

அக்கா : டேய்.. இனிமே முடியாதுடா.. ரொம்ப கொடுமையா இருக்கு.. வீட்டுக்குள்ள நுழையவே முடியல. அவரு நம்மை டார்ச்சர் பண்றாரு.

அம்மா : ஆமாடா… அவரு திட்டம் போட்டு நம்மை கவுத்துட்டாரு.. இந்த வீட்ல நாம இருக்கவே முடியாது. நாளைக்கு கருவாட்டுக்கு பதிலா வேணும்ன்னா செத்த எலியை கொண்டு வைப்பாரு.. நாம கேக்க முடியாது.

அக்கா : ஒண்ணு அதை அrங்கேயிருந்து வெளியே எறியணும்… இல்லேன்னா நாம இங்கேயிருந்து வெளியே போணும்.. வேற வழியில்லை.

பையன் : ஆமாம்மா… சின்ன ஒரு ஆணி தானேன்னு அலோ பண்ணினது இன்னிக்கு எவ்ளோ பெரிய சிக்கலா மாறிடுச்சு… நம்பவே முடியல

அம்மா : ஆமா.. நம்ம வாழ்க்கையில பாவத்துக்கு ஒரு சின்ன இடம் குடுத்தா கூட கடைசில பாவம் எல்லா இடத்துலயும் நிறைஞ்சு நம்மை கடவுளை விட்டு வெளியே தள்ளிடும்டா…

பையன் : உண்மை தாம்மா.. நீங்க படிச்சு படிச்சு சொன்னீங்க அப்போ புரியல… இப்போ தான் புரியுது.. வாங்கினா முழுசா வாங்கணும்.

அம்மா : கடவுளை ஏத்துக்கும்போ முழுசா நம்ம இதய வீட்டை புல்லா அவருக்கே குடுக்கணும். ஒரு ரூமை மட்டும் பூட்டி வெப்பேன், கொஞ்சம் பாவம் மட்டும் வெச்சுப்பேன்னு சொன்னா அது கடைசில நம்ம மீட்பையே கேள்விக்குள்ளாக்கிடும்.

பையன் : உண்மை தாம்மா.. தப்பு பண்ணிட்டோம்… நாம வேணும்ன்னா இந்த வீட்டை மறுபடியும் அவருக்கே குடுத்துடலாம்மா…

அக்கா : ஆமாம்மா.. இது வேண்டாம்.. நாம வாடகை வீட்ல இருந்தப்பவே சந்தோசமா, நிம்மதியா இருந்தோம். வேற எங்கயாவது போயிடலாம். முழுசா நமக்கே சொந்தமான வீட்ல.

அம்மா : ஆமாப்பா. அதனால தான் நான் உங்க கிட்டே அடிக்கடி சொல்லுவேன். நம்ம வாழ்க்கைல கடவுள் மட்டுமே முழுசா இருக்கணும். சாத்தானுக்கு கொஞ்சம் இடம் கொடுத்தா அவ்வளவு தான். மொபைல்ல கொஞ்ச நேரம் பாவமான காரியம் பண்ண தொடங்கினா, அதுவே நம்ம வாழ்க்கையை முழுசா காலி பண்ணிடும்.

பையன் : ஆமாம்மா.. புரிஞ்சுகிட்டேன்…. சாத்தான் உண்மையிலேயே ஒரு தந்திர சாலி தான். ஒரு சிலந்தி வலை மாதிரி பின்னி, நம்மை அதுல சிக்க வைப்பான்.

அம்மா : கரெக்டா சொன்னே.. முதல்ல உன் பிரண்டை புடிப்பான்.. அவன் மூலமா உனக்கு கொஞ்சம் கெட்ட பழக்கத்தை சொல்லித் தருவான். அப்புறம் உன் மூலமா இன்னொருத்தருக்கு சொல்லித் தருவான்.. இப்படியே பாவத்துல மூழ்கடிச்சுடுவான்.

அக்கா : ஆமாம்மா.. நானும் புரிஞ்சுகிட்டேன்… சின்ன ஒரு தப்பு தானேன்னு நான் ஆரம்பிக்கிற ஒரு விஷயம்.. நாளுக்கு நாள் வளந்துட்டே போவுது. அப்புறம் கடவுளுக்கான நேரம் குறைஞ்சு சாத்தானுக்கான நேரம் அதிகமாவுது. இனிமே நானும் அந்த பழக்கத்துல இருந்து வெளியே வர போறேன்.

அம்மா : ரொம்ப சந்தோசம்பா… இது தான் எனக்கு வேணும். அணையில ஒரு சின்ன விரிசல் விழுந்தா கூட உடனே சரி செய்யணும். இல்லேன்னா அந்த விரிசல் பெருசாகி அணையையே உடைச்சுடும். அப்புறம் அது ஊரையே அழிச்சுடும். பாவமும் அப்படித் தான். பாவத்தைக் கண்டா விலகிப் போ ன்னுபைபிள் சொல்லல, விலகி ஓடுன்னு சொல்லுது.. அவ்ளோ டேஞ்சர் அது. புலியைக் கண்டா பாய்ஞ்சு நாம ஓடற மாதிரி ஓடணும்.

அக்கா : சரிம்மா….

பையன் : கண்டிப்பாம்மா….

அம்மா : சரிப்பா. தம்பி.. நீ அவருக்கு போன் பண்ணி, கருவாடை மட்டுமல்ல, வீட்டையும் எடுத்துக்கச் சொல்லு.. நமக்கு இந்த வீடே வேண்டாம். நாம இன்னிக்கே கிளம்பலாம்….

பையன் : சரிம்மா…

காட்சி 10

( அம்மா, போனில் பேசுகிறார் )

அம்மா : என்னங்க.. நம்ம பிளான் வர்க் அவுட் ஆச்சு… நம்ம பாஸ்கர் வீட்ல தங்கற மாதிரி செட் பண்ணி… நாம நினைச்சபடியே எல்லாம் நடந்துச்சு. பசங்க திருந்திட்டாங்க. தப்பு பண்ணிட்டிருந்தோம்ன்னு அவங்க ரியலைஸ் பண்ணிட்டாங்க.

அம்மா : ஆமா.. பாஸ்கர் தான் பாவம். ஒரு வாரம் வீட்டை விட்டு வெளியே தங்கியிருந்தாரு.. நமக்காக.. நம்ம பிள்ளைங்களை சரி பண்ணணும்ன்னு… கருவாட்டுக் பை யை எல்லாம் தூக்கிட்டு அலைஞ்சாரு… எஸ்..எஸ்…. நான் போண் பண்ணி தேங்க்ஸ் சொல்லிட்டேன்.

அம்மா : சரி..நீங்க வரும்போ…புது பிள்ளைங்களைப் பாப்பீங்க.. வைக்கிறேன்.

——

கற்றுக் கொள்ளும் பாடம்

*
பார்த்தீர்களா… ஒரு ஆணி தானே இருந்து விட்டுப் போகட்டும் என நினைத்தது கடைசியில் அந்த குடும்பத்தை வீட்டை விட்டே வெளியேற வைத்தது. அப்படித் தான் பாவமும், சின்ன பாவம் தானே என நம் வாழ்க்கையில் அதற்கு இடம் கொடுத்தால் அது காட்டுத் தீயாய் பரவி நம்மை அழித்துவிடும்.

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது நம்மை முழுமையாக இயேசுவிடம் ஒப்படைப்பதாகும். 99 சதவீதம் கிறிஸ்தவனாக இருந்தாலும் ஒருவன் பரலோகம் போக முடியாது, 100 சதவீதம் இயேசுவிடம் தன்னை ஒப்படைத்தால் மட்டுமே இரட்சிப்பு உண்டு.

அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல் இருப்பவர்களைக் குறித்து இயேசு திருவெளிப்பாடு நூலில் என்ன சொல்றாரு தெரியுமா ? “நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.” என்று. எனவே அப்படிப்பட்ட ஒரு அரைவேக்காட்டுக் கிறிஸ்தவர்களாக நாம் இருக்கவே கூடாது.

பவுலின் போதனைகளைக் கேட்டு அதன் பால் ஈர்க்கப்பட்டாலும் அகிரிப்பா ராஜா கிறிஸ்தவ வாழ்க்கை வாழவில்லை, பாவ வாழ்க்கைக்குள் சென்றே அவனது நாட்கள் முடிகின்றன. இயேசுவின் போதனைகளைக் கேட்பதால் மட்டும் நாம் முழுமையான கிறிஸ்தவனாக மாற முடியாது. நமக்குள் இருக்கின்ற கிறிஸ்துவுக்குப் பிடிக்காத விஷயங்கள் முழுவதையும் நீக்கி விட வேண்டும்.

இதயத்தின் ஒரு ஓரத்தில் பாவத்துக்கு இருக்கை போட்டுக் கொடுத்துக் கொண்டு, மற்ற இடங்களிலெல்லாம் இயேசுவை அமர வைக்க முடியாது. பாவம் வாசலில் படுத்திருக்கும், அலகை கர்ஜிக்கும் சிங்கம் போல நம்மைத் தாக்க தருணம் பார்த்துக் கொண்டிருக்கும். நாம முழுமையாக இறைவனிடம் இருந்தால் மட்டுமே அவற்றை மேற்கொள்ள முடியும்.

நமது இறைவன் நம் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார், நம்மை முழுமையாய்க் கொடுத்தால் மட்டுமே அவர் ஏற்றுக் கொள்கிறார். பவுல் தனது வாழ்க்கையை முழுமையாக இயேசுவிடம் ஒப்படைத்தார். அதனால் தான், “நான் கிறிஸ்துவைப்போல் நடப்பதுபோன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள்” என அவரால் சொல்ல முடிந்தது. நீங்கள் என்னைப் போல் ஆகுங்கள் என்கிறார் அவர். அப்படித் துணிச்சலாய் சொல்லக் கூடிய கிறிஸ்தவ வாழ்க்கையை நாமும் வாழ்வோம். அதற்காய் நம்மை முழுவதுமாக இறைவனிடம் ஒப்படைப்போம்.

நன்றி

Posted in Articles, Sunday School

நாடகம் : பிற இனத்தாரின் கடவுள்

பிற இனத்தாரின் கடவுள்

காட்சி 1

( அர்பெல்லாவும், அவளது அம்மாவும் , பாட்டியும் மீட்பின் படகில் போகிறார்கள் )

பாடல் ….

அர்பெல்லா : அம்மா … இப்படி ஒரு மீட்பின் படகில ஏறி பரலோகம் போவோம்ன்னு நான் கனவுல கூட நினைச்சதேயில்லை. எவ்ளோ அற்புதமா இருக்கு.

அம்மா : ஆமா அர்பெல்லா… இப்படி ஒரு மீட்பின் படகு இருக்கு, இதன் மூலமா தான் மரண ஆற்றைக் கடக்கணும்ன்னு நமக்குத் தெரிஞ்சிருக்கவே தெரிஞ்சிருக்காது.

அர் : ஆமாம்மா.. மீனுக்கு உள்ளே இருந்து வந்த அந்த மனுஷரு மட்டும் இல்லேன்னா, உண்மை தெய்வத்தைப் பற்றி நாம அறிஞ்சிருக்கவும் மாட்டோம், மரண ஆற்றைக் கடந்திருக்கவும் மாட்டோம்.

அம்மா : உண்மை தான்.. பாகாலுக்கு பலியிடுறதும், அஸ்ரோத் கம்பங்களை வழிபடுறதும் தானே உண்மையான வழின்னு நினைச்சிட்டிருந்தோம். உண்மையிலேயே யோனா தீர்க்கத்தரிசிக்கு நாம நன்றி சொல்லணும்.

அர் : சொர்க்கத்துக்கு போனதும் அதை செய்வோம்மா….

அர் : அம்மா.. அம்மா.. அதோ பாருங்க.. தூரத்துல நெருப்பு பற்றி எரியுது… என்னம்மா அது ? இந்த மரண ஆறைக் கடக்கிற மாதிரி அதையும் கடக்கணுமா..

அம்மா : இல்லை…இல்லை, அது நரகம்.. அந்தப் பக்கம் நாம போக தேவையே இல்லை. நாம சொர்க்கத்துக்குப் பக்கம் போணும்.. சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் இடையே பெரிய பள்ளம் உண்டு, அதை யாரும் கடக்க முடியாது.

அர் : ஓ.. அப்போ ஒரு தடவை நரகத்துக்கு போயிட்டா அவ்ளோ தானா.. அவங்க இங்கே வரவே முடியாதா ?

அம்மா : இல்லை… அவ்ளோ தான். நாம வாழும்போ கடவுளை நம்பி, அவருக்குப் பிரியமா வாழணும். இல்லேன்னா நரகம் தான் முடிவு. செத்தப்புறம் நம்மளோட பாவத்துக்கு மன்னிப்பு கிடையாது.

குரல் : ஐயோ.. மன்னியுங்கள் கடவுளே.. உம்ம வார்த்தையைத் தானே பேசினேன்.. இஸ்ரவேலரை சபிக்காதீங்கன்னு சொன்னீங்க, அதுக்கு கீழ்ப்படிஞ்சு அவர்களை நான் சபிக்கவே இல்லை. பண ஆசை மட்டும் தானே இருந்துச்சு.. எல்லா மனுஷரைப் போல நானும் நாலு காசு சம்பாதிக்கணும்ல கடவுளே… அதுக்கு தானே வழி பார்த்தேன்…. மத்தபடி நான் உங்க கூட தானே ஐக்கியமா இருந்தேன்… ஐயோ… தினமும் என் கூட பேசுவீங்களே… இப்போ பேச மாட்டேங்கறீங்களே….

அர் : அம்மா.. அங்கேயிருந்து ஒரு குரல் கேக்குதே… யாரும்மா.. அவரு.. ரொம்ப பாவமா இருக்கு….

அம்மா : அவரு தான் பிலேயாம்ன்னு ஒரு தீர்க்கத் தரிசி.

அர் : என்னம்மா சொல்றீங்க.. ? தீர்க்கத் தரிசி எப்படிம்மா அங்கே இருப்பாரு.. இறைவனோட வார்த்தைகளைப் பேசறவங்க எப்படி நெருப்பில.. என்னால நம்ப முடியல.

அம்மா : கடவுள் நீதி தவறாதவர்ம்மா.. அவரு பாரபட்சம் காட்ட மாட்டாரு. அன்பு காட்டறதுலயும் அவருக்கு பாரபட்சம் இல்லை, நீதி செய்றதுலயும் பாரபட்சம் இல்லை. கடவுளோட தீர்க்கத்தரிசியா இருந்தாலும் சரி, பாமரனா இருந்தாலும் சரி அவரோட நீதி தவறாது.

அர் : இருந்தாலும் என்னால நம்ப முடியலைம்மா… அவரு இஸ்ரேலர் தானே.. ? கடவுளோட மக்களினம் தானே ? அப்புறம் ஏன் இப்படி…

பாட்டி : இல்லம்மா.. அவரு இஸ்ரேலர் கிடையாது… அவரு புற ஜாதி மனுஷன்.

அர் : என்ன பாட்டிம்மா சொல்றீங்க ? புற ஜாதியா.. அங்கே இருந்து கூட கடவுளோட தீர்க்கத் தரிசியா ஆக முடியுமா ? ?

பாட்டி : ஆமாம்மா.. அதுவும் சாதாரண தீர்க்கத் தரிசி இல்லை, மோசே மாதிரி பெரிய தீர்க்கத் தரிசி. கடவுளே டெய்லி வந்து பேசற அளவுக்கு பெரிய தீர்க்கத் தரிசி அவரு.நல்லா குறி சொல்வாரு, யஹோவாவை தன்னோட கடவுளா ஏத்துகிட்டு வாழ்ந்தாரு.

அர் : அப்புறம் எப்படிம்மா அவரு இங்கே…

அம்மா : அவரோட பண ஆசை தாம்ம்மா காரணம். பணத்துக்காக எல்லாத்தையும் பண்ணலாம்ன்னு நினைச்சாரு. இஸ்ரேலர்களுக்கு எதிரியான மோவாப் மன்னன் பாராக் – கோட டீல் வெச்சு கிட்டாரு. அவனோட தந்திர சூழ்ச்சிக்கு இணங்கி நடந்தாரு. கடவுள் போகாதேன்னு சொன்னப்புறம் கூட கேக்காம தன்னோட ஆசையை சாதிச்சுட்டாரு… கடைசில அவர் மேலயே சாபம் வந்துச்சு..வாளால வெட்டப்பட்டு செத்துப் போனாரு.

அர் : ம்ம்.. அவரு தானே ஒரு கழுதைல போனதும், கழுதை பேசினதும்.

அம்மா : ஆமா.. அர்பெல்லா.. கரெக்டா தெரிஞ்சு வெச்சிருக்கே… ஆனா இவரைப் பற்றி நாம படிக்கிறதெல்லாம் இவர் பண ஆசையினால தீவினை செய்யத் துணிந்தவர் ந்னு தான் ம. வெறும் செல்வத்துக்காக, விண்ணக செல்வத்தையே விட்டுட்டாரு.

அர் : ஆமா நானும் கேள்விப்பட்டிருக்கேன், பிலயாம் கீழ்த்தரமான ஆலோசனை கொடுத்தாரு. அதை மோசே “பிலேயாம் கொடுத்த ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினார்கள் அதனால் அவர்கள் மேல் வாதை வந்தது” ந்னு கூட சொல்லியிருக்காரு.

பாட்டி : ஆமா, இன்னும் நிறைய இடங்கள்ல அவரைப் பற்றி சொல்லியிருக்கு…

அர் : ஆனாலும், கடவுள் பழைய ஏற்பாட்டு காலத்துல கூடவா புற ஜாதியாரை நேசிச்சாரு.. பிலயாம் மேல அவ்ளோ அன்பு வெச்சிருந்தாரே… என்னால நம்பவே முடியலை… நான் என்னவோ கடவுள் இஸ்ரேல் மக்களை. மட்டும் தான் நேசிச்சதா நினைச்சேன்.

அம்மா : கடவுள் பிற இன மக்களையும் இஸ்ரேல் மக்களைப் போலவே நேசிச்சாரு. இல்லேன்னா நாம நினிவேல பாவத்தின் உச்சத்துல இருந்தப்போ நம்மளை அழிச்சிருப்பாருல்ல. நேசிச்சதால தான் நமக்கு மீட்பைத் தந்திருக்காரு.

அர் : ஆமாம்மா.. பாவம் பிலேயாம். அவரும் நம்மள மாதிரி கடவுள் கிட்டே மன்னிப்பு கேட்டிருந்தா, மன்னிச்சிருப்பாருல்ல…

பாட்டி: ஆமா.. கண்டிப்பா… மன்னிப்பு கேக்கறவங்களை அவரு எப்பவுமே மன்னிக்காம இருந்ததில்லை.

அர் : வாவ்.. அம்மா.. அங்கே பாருங்க… நாம பரலோகத்துக்கு வந்துட்டோம்ன்னு நினைக்கிறேன்..

காட்சி 2

( பரலோகக் கரையில் இருவரும் இறங்குகிறார்கள். அங்கே ஒரு இடத்தில் யோனா அமர்ந்திருக்கிறார் )

யோனா : ( சோகமாக அமர்ந்திருக்கும் போது இவர்கள் அருகே வருகிறர்கள் )

அர் : அம்மா..அம்மா. அதோ பாருங்க.. அங்கே உக்காந்திருக்கிறது அவர் தானா ?

அம்மா : ஹே.. ஆமா..ஆமா.. நம்ம…. தீர்க்கத்தரிசி யோனா தான்… வா ..வா போய் பேசுவோம்

அர் :.. யோனா அங்கிள்… யோனா அங்கிள்.. எப்படி இருக்கீங்க ? சொர்க்கத்துல வந்து சோகமா இருக்கீங்க ? ஆச்சரியமா இருக்கே.. உங்களை இங்கே சந்திச்சதுல ரொம்ப ரொம்ப சந்தோசம்.

யோனா : வாங்க, வாங்க.. நீங்க யாரு.. உங்களைப் பாத்ததே இல்லையே…
அம்மா : என்ன இப்படி சொல்றீங்க.. நீங்க எங்களைப் பாத்திருக்கீங்க.. மறந்திருப்பீங்க.

யோனா : நீங்க எங்கேயிருந்து வரீங்க ?

பாட்டி : நாங்க .. நினிவேல இருந்து வரோம்… நான் அங்குள்ள அரண்மனைல வேலை பாத்திட்டிருந்தேன்.

யோனா : ஓ.. நினிவேயா…. அது ஒரு அற்புதமான வரலாறு….

( பிளாஷ் பேக் காட்சி : காட்சி 3 – நினிவே )

யோனா : இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்

யோனா : இன்னும் நாற்பதுநாள் உண்டு; அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம்

யோனா : இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்

யோனா : இன்னும் நாற்பதுநாள் உண்டு; அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம்

( சொல்லிக்கொண்டே போகிறார். )

( மக்கள் எல்லாரும் அங்கும் இங்கும் ஓடுகிறார்கள் )

பாட்டி : நினிவே இன்னும் நாற்பது நாள்ல அழிக்கப்படுமாம். நான் அரண்மனையில வேலை பாக்கிறேன் இல்லையா ? மன்னனே அரண்மனையை விட்டு கீழே இறங்கி, சாக்கு உடுத்தி, சாம்பல்ல உட்கார்ந்துட்டான்.

அம்மா : ஓ… அரசனே அப்படின்னா, மக்கள் எல்லாருமே அப்படித் தான் பண்ணுவாங்க.

பாட்டி : ஆமா, அரசன் ஏதோ ஒரு அறிவிப்பு குடுக்கப் போறாரு… சீக்கிரம் நமக்குத் தெரிஞ்சுடும்.

அர்பெல்லா : அப்போ, நாமளும் அப்படி இருக்கணுமாம்மா ? சாக்கு உடுத்தி ? நோன்பு இருக்கணுமா ?

அம்மா : நாற்பது நாள்ல நினிவே அழிக்கப்படும்ன்னா, நம்மளை கடவுள் தானே காப்பாத்தணும்… நாம கண்டிப்பா கடவுளை நோக்கி கதறி மன்றாட வேண்டியது தான்.

அர் : அம்மா.. ஏதோ ஒரு அறிவிப்பு சத்தம் கேக்குது.. முரசறிவிப்பு போல

குரல் : எல்லோரும் சாக்கு உடை உடுத்திக் கொள்ள வேண்டும், ஏன் விலங்குகளுக்குக் கூட சாக்கு உடுத்த வேண்டும். எல்லோரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும். தீய பழக்கங்களை உடனே விட்டு விலக வேண்டும். யாருமே உணவைச் சுவைத்துப் பார்க்கவே கூடாது. தண்ணீர் கூட குடிக்கக் கூடாது. விலங்குகள் கூட நோன்பு இருக்கணும்.இப்படிச் செய்தால் ஒருவேளை கடவுள் மனமிரங்கி நம்மைக் காப்பார். இல்லையேல் அழிவு நிச்சயம். இது அரசரும், அரசவையினரும் கொடுக்கின்ற அறிவிப்பாகும்… டும் டும் டும்

அர் : அம்மா.. பாட்டி சொன்னது மாதிரி தான் நடக்குது.. நாம சீக்கிரம் போய் சாக்கு உடுத்தி, சாம்பல்ல உக்காந்து நோன்பு அனுசரிப்போம்.

( அப்போது யோனா அந்த வழியாக சொல்லிக் கொண்டு போகிறார் )

யோனா : இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்

யோனா : இன்னும் நாற்பதுநாள் உண்டு; அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம்

பாட்டி : இனிமே வெயிட் பண்ணவே கூடாது… சீக்கிரம் போய் நோன்பு இருப்போம்… எப்படியாவது கடவுள் மனமிரங்கணும், நாம கொஞ்ச நஞ்ச பாவமா செஞ்சோம்… வாங்க.. சீக்கிரம்

அம்மா : ஆமா.. கடவுள் தான் நம்மளைக் காப்பாத்தணும்.

( நாற்பது நாட்களுக்குப் பின் … கடவுள் நகரை அழிக்கவில்லை .. யோனா புலம்புகிறார் )

யோனா : இதான்.. இதுக்காகத் தான் நான் நினிவே வராம தர்சீஷ்க்கு ஓடிப் போனேன்.. உட்டீங்களா ? இல்ல, ஒரு மீன் மூலமா எனக்கு தூண்டில் போட்டீங்க. மீனுக்குள்ளே என்னை உக்கார வெச்சீங்க. சரி போகட்டும், மன்னிப்பும் கேட்டேன். நினிவே வந்தேன். கீழ்ப்படிஞ்சு இங்கே நினிவேக்கு வந்தேன். நினிவே அழியும்ன்னு .. நினிவே அழியும்ன்னு நான் ஒரு பைத்தியக்காரன் போல அவங்க மேல உள்ள கோபத்துல கத்தி கிட்டே போனேன். …. நீங்க சொன்னதை செஞ்சீங்களா ? அழிக்கலையே !

யோனா : இப்போ என்னாச்சு… நான் சொன்னது தப்புன்னு ஆச்சு. அசீரியர்கள் நமக்கு எதிரிகள், அவர்கள் அழியணும்ன்னு நினைச்சது நிறைவேறாம போச்சு. நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடியசாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும் உள்ளவர்ன்னு தெரியும். இப்படித் தான் பண்ணுவீங்கன்னு தெரியும்.

யோனா : அவங்களை அழிக்கலல்ல…. அதுக்கு பதிலா, நீங்க என்னை காலி பண்ணிடுங்க ! நான் ஏன் உயிரோட இருக்கணும் ?

கடவுள் : என்ன யோனா, நீ… இப்படி கோபமா எரிச்சலோட இருப்பது உனக்கு…. நல்லதா ?

யோனா : நான் ஊருக்கு வெளியே பந்தல் போட்டு உக்காந்திருப்பேன்.. நினிவே அழியணும்.. அதை நான் பாக்கணும்…

யோனா : அட.. இதென்ன ஒரு ஆமணக்கு செடி, சட்டுன்னு முளைச்சு சடசடன்னு வளருது.. நல்ல நிழலும் தருது…

யோனா : அட.. ஒரு நாள்லயே அது அழிஞ்சும் போச்சே…. இந்த வெயில்ல நான் காயறதுக்கு பதிலா… நான் சாகறதே நல்லது.

கடவுள் : நீ உழைக்காத , நீ வளர்க்காத ஒரு ஆமணக்குச் செடிக்காக இப்படி பரிதபிக்கிறாயே… வலக்கை எது, இடக் கை எதுன்னு தெரியாத இந்த நாட்டிலுள்ள இலட்சத்து இருபதாயிரம் மக்களுக்காக நான் இரக்கப்பட மாட்டேனா ?

( பிளாஷ் பேக் முடிகிறது )

 யோனா : ம்ம்ம்.. நினிவே கதையை நினைச்சா சோகம் தான்….

அம்மா : பழைய கதையை நினைச்சு என்ன சோகம்… உண்மையிலே… நீங்க ரொம்ப சந்தோசப்படணும்.. நினிவேங்கற ஒரு மாபெரும் பட்டணத்தையே மீட்டுட்டீங்களே.. நாங்க எல்லாம் தீயில கருகாம காப்பாத்திட்டீங்களே.

யோனா : இல்லை, அந்த பெருமை ஏதும் எனக்கில்லை. நான் நீங்க எல்லாம் மீட்கப்படணும்ன்னு நினைக்கவேயில்லை. அசீரியர்கள் அழியணும்ன்னு தான் நினைச்சேன். உங்க மேல உண்மையான அன்பு எனக்கு இருக்கல…

அர் : ஆனா கடவுள் உங்க மூலமா மிகப்பெரிய வேலையை செய்தாருல்லயா அங்கிள்.. நீங்களும் மன்னிப்பு கேட்டுட்டீங்க அப்போவே…. அவரு உடனே மன்னிப்பும் கொடுத்துட்டாரு.. மறந்தே போயிட்டாரு…. நீங்க பரலோகத்துக்கும் வந்துட்டீங்க… இனிமே ஏன் சோகம், சந்தோசமா இருங்க.

யோனா : இருந்தாலும் அவரு பிற இன மக்கள் மேல இவ்ளோ அன்பு வெச்சிருந்தாரே.. நான் அப்படி வைக்காம இருந்தேனே.. ஒரு பெரிய தீர்க்கத்தரிசின்னு பெயரு வாங்கிட்டு, பிற இன மக்கள் அழியணும்ன்னு நினைச்சேனே ந்னு நினைச்சா வருத்தமா இருக்கு.

அர் : அங்கிள் பழைய கதைகளை நினைச்சு சொர்க்கத்தோட இனிமையை ஏன் இழக்கறீங்க ? யஹோவா… உங்களை இங்கே கொண்டு வந்திருக்காருன்னா அவரு உங்க மேல எவ்ளோ அன்பு வெச்சிருக்காருன்னு அர்த்தம்.

யோனா : ம்ம்.. அது உண்மை pதான்… இருந்தாலும் நினிவே வர சொன்னா தர்ஷீஸ் ஓடினேன். கடலுக்கு மேலே பயணம் பண்ண வேண்டியவனை மீனுக்கு உள்ளே டிராவல் பண்ண வெச்சாரு கடவுள்.

அர் : ஆமா அங்கிள்… உலகத்துலயே முதல் நீர்மூழ்கிக் கப்பல் நீங்க போனது தான். மீனுக்குள்ளே புகழ் பாட்டு பாடினதும் நீங்க தான். செம. எல்லாம் நல்லதுக்கு தான் முடிஞ்சிருக்கு.

யோனா : ஆனாலும், தன்னோட மிஷனரி பணி சக்சஸ் ஆனதுக்காக வருத்தப்பட்ட ஒரே ஆள் நான் தானே… நினிவே முழுசும் மனம் மாறிச்சு, என் மனம் மாறவே இல்லை. நான் அசீரியர்கள் அழியணும்ன்னே நினைச்சிட்டிருந்தேன். மக்கள் மனம் மாறினதுக்காக நான் சந்தோசப்படவே இல்லை.

அம் : அதுக்கு காரணம் இருக்குல்ல, நாங்க கொஞ்ச நஞ்ச கொடுமையா இஸ்ரேல் மக்களுக்குச் செய்தோம். இருந்தும் எங்களை இவ்ளோ அன்பு செய்து கடவுள் ஏத்துகிட்டாருன்னு நினைச்சா ரொம்ப சந்தோசமா இருக்கு.

யோனா : எல்லாம் சரி தான்.. ஆனாலும், கடவுள் கிட்டயே சண்டை போட்டேன். உம்மைப் பத்தி எனக்குத் தெரியும், இப்படியெல்லாம் பண்ணுவீங்கன்னு அதனால தான் இந்தப் பக்கமே வரலேன்னு சண்டை போட்டேன். அவரு ஒரு ஆமணக்குச் செடியை முளைக்க வைத்து, அதை புழுக்களால அழிக்க வைத்து ஒரு பாடம் சொல்லித் தந்தாரு.. ஊஹூம்.. நான் கேக்கவே இல்லையே…

அம் : அந்த கதையெல்லாம் எங்களுக்கு தெரியும். என்ன தான் இருந்தாலும் இவ்ளோ அன்பா கடவுள் இங்கே வெச்சிருக்காரே.. சந்தோசப்படுங்க.

காட்சி 4

( அங்கே பவுல் வருகிறார் .. இந்த காட்சியின் இடையிடையே பவுலின் பணிகள் / அனுபவங்கள் பின்னணியில்… )

பவுல் : ஹலோ…. யோனா அங்கிள் .. எவ்ளோ பெரிய தீர்க்கத் தரிசி.. சின்ன வயசில இருந்தே உங்களை பிரமிப்பா பாத்திருக்கேன். என்ன இங்கே உக்காந்திருக்கீங்க.. யாருக்காச்சும் வெயிட் பண்றீங்களா ?

அர் : இல்ல பவுல் அங்கிள்.. இவரு சோகமா இருக்காரு..

பவுல் : சோகமாவா.. சேன்சே இல்லையே… சொர்க்கத்துல சோகம் ங்கற வார்த்தைக்கே இடமில்லையே.

அர் : அப்படியில்ல அங்கிள். இவரு பிற இன மக்களுக்கு எதிரா இருந்ததை நினைச்சு வருத்தப்படறாரு.

பவுல் : அட… அதுக்காக கவலைப்படலாமா. நான் ஒரு காலத்துல கிறிஸ்தவர்களைத் தேடித் தேடி கொன்னிட்டிருந்தேன். யூதர்களைத் தவிர வேற யாருக்குமே மீட்பு இல்லைன்னு நினைச்சிட்டிருந்தேன். கமாலியேல் கிட்டே யூதர்களுடைய நியாயப்பிரமாணத்தை கரைச்சு குடிச்சதை நினைச்சு பெருமையா இருந்தேன். ஆனா கடவுள் என்னை எப்படி ஆக்கினாரு பாத்தீங்கல்ல.

யோனா : ஆமா.. பிற இன மக்களோட மீட்புக்கு நீங்க தான் மிகப்பெரிய காரணம். கடவுள் உங்களை அங்கே தானே அனுப்பினார். அற்புதமா பணி செய்தீங்க…

பவுல் : ஆமா.. தமஸ்கு போற வழியில எனக்கு இயேசு காட்சி கொடுத்தாரு… பார்வையும் போச்சு, அப்புறம் பார்வையை குடுத்தாரு.. பிற இன மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கச் சொன்னாரு… எனக்கு புரியல, குழப்பமா இருந்துச்சு. அதனால நான் என்ன பண்ணினேன் தெரியுமா ?

அர் : தெரியாது அங்கிள் சொல்லுங்க

பவுல் : நான் நேரா அரேபிய பாலை வனத்துக்கு போனேன். மூணு வருஷம் அங்கே இருந்து பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணங்கள் என்ன சொல்லுது, மேசியா யாரு ? இயேசு தான் மேசியாவா ? அப்படியெல்லாம் ஆராய்ந்து பாத்துட்டு இருந்தேன். கடவுளே எனக்கு வந்து எல்லாத்தையும் கற்றுத் தந்தாரு. இயேசு தான் மேசியான்னும் புரிஞ்சுது, பழைய ஏற்பாடு சொல்றதெல்லாம் இயேசுவைத் தான்னும் புரிஞ்சுது. கடவுள் இஸ்ரேல் மக்களை மட்டும் தான் நேசிக்கிறார்ன்னு நான் கமாலியேல்ட்ட முந்தி படிச்சதெல்லாம் தப்புன்னு புரிஞ்சுட்டேன். புற ஜாதியாரையும் அவரு ஒரே மாதிரி நேசிக்கிறதனால, அவர்களுக்கும் நற்செய்தி அறிவிக்கணும்ன்னு எனக்குப் புரிஞ்சுடுச்சு.

அர் : அப்புறம் தான் பிரீச் பண்ண போனீங்களா ?

பவுல் : ஆமா… அப்போ தான் கமாலியேல் கற்றுத் தந்த நியாயப்பிரமாணத்துக்கும், கடவுளோட அன்புக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிஞ்சு கிட்டேன். அப்புறம் தான் புற ஜாதியினருக்கு நற்செய்தி அறிவிக்க போனேன். அதுக்கு அப்புறம் பின் வாங்கவே இல்லை.

அர் : அப்படியா பவுல் அங்கிள்.. நாங்களும் பிற இன மக்களா இருந்து யஹோவாவுக்குள்ள வந்தவங்க தான். ஆமா பழைய ஏற்பாட்டுக் காலத்துல ராகாப்பு… ரூத் கதையெல்லாம் அப்படித் தானே…

பவுல் : இயேசு ஒரு கானானேயப் பெண், ரோம நூற்றுவர் தலைவன் ரெண்டு பேரும் இஸ்ரேலரை விட பெரிய விசுவாசம் உடைவர்கள்ன்னு பாராட்டினாரு. ஒதுக்கப்பட்டவர்களோடு தான் வாழ்ந்தாரு. சமாரியப் பெண்ணைத் தேடிப் போய் மீட்டாரு.

அர் : ரொம்ப ஆச்சரியமா இருக்கு… தேடிப் போய் மீட்கிற ஒரு கடவுளைப் பற்றி தெரிஞ்சுக்கறதும், அவரைப் பின்பற்றி வாழறதும் எவ்வளவு பெரிய பாக்கியம் இல்லையா ?

பவுல் : கண்டிப்பா… கிறிஸ்துன்னா கிறிஸ்தவர்களுக்கு மட்டும்ன்னு ஒரு தப்பான எண்ணம் மக்களுக்கு உண்டு. அதனால பிற இன மக்களை வெறுக்கிற நிலமைக்கு நாம போறதும் உண்டு. அதெல்லாம் தப்பு. கடவுள் எல்லாருக்குமே கடவுள் தான். ஆதி முதல் அவர் அப்படித் தான்.

யோனா : ஆமா. கரெக்டா சொன்னீங்க பவுல். உங்களுக்கு நல்ல தெளிவு இருக்கு. நான் அப்போ கடவுளோட மனசை புரிஞ்சுக்காம இருந்துட்டேன். இல்லேன்னா இப்போ ரொம்ப சந்தோசமா இருந்திருப்பேன்.

பவுல் : ஹலோ. மிஸ்டர் யோனா… உங்களை மாதிரி பெரிய இறைவாக்கினரே இல்லை தெரியுமா ? இயேசு என்ன சொன்னாரு தெரியுமா ? “யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்” ந்னு ஒரு தடவை சொன்னாரு. அப்படின்னா என்ன அர்த்தம், யோனா மிகப்பெரிய தீர்க்கத் தரிசி, அவரை விடப் பெரியவர்ன்னா இயேசு தான்.

யோனா : ( சிரித்தபடி ) ஓ..வாவ்.. இயேசுவுக்கும் என் மேல எவ்ளோ அன்பு. என்னை எவ்ளோ உயர்வா பேசியிருக்காரு.

பவுல் : அது மட்டுமா.. யோனா மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷ குமாரனும் மண்ணில் மூன்று நாள் இருக்கணும்ன்னு உங்க பயணத்தையும் சொல்லியிருக்காரு இயேசு.

யோனா : வாவ்.. இப்போ எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. என்னோட பாவத்தையெல்லாம் அவரு கணக்கில வைக்கல.

பவுல் : ஹா..ஹா.. என்ன யோனா, அப்படிப் பாத்தா பாவிகளிலே பிரதான பாவி நான். அதை பைபிள்ல கூட எழுதி வெச்சிருக்கேன். என்னையே மன்னிச்சு இங்கே கொண்டு வந்திருக்காருல்ல. அவரு ஆள் பார்த்து செயல்படுபவர் அல்ல.

யோனா : இப்போ தான் ரொம்ப சந்தோசமா இருக்கு. ஆனா, நீங்க நற்செய்தி அறிவிக்க ஆரம்பிச்சப்புறம் தான் கடவுள் பிற இனத்தாரை அன்பு செய்றவருன்னு உலகிற்கு ரொம்ப தெளிவா தெரிஞ்சிருக்கு.

பவுல் : உண்மை தான், ஆனா கடவுள் தொடக்கத்துல இருந்தே எல்லாரையும் தான் நேசிக்கிறார். எல்லாருமே ஆதாமின் வழி மரபு தானே. ஏனோக், நோவா இப்படி ஆபிரகாம் வரைக்கும் வாழ்ந்தவங்க யாரும் ஆபிரகாம் சந்தயினர் இல்லையே. தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனமே ஆபிரகாமுக்கு அப்புறம் தானே ஆரம்பமாகுது. அவங்களையும் கடவுள் எவ்ளோ நேசிச்சாருன்னு நமக்குத் தெரியும்ல.

அம்மா : ஆமா… ஆதாம் ஏவாள் பாவம் செய்தப்பவோ கடவுள் மீட்பின் திட்டத்தையும் சொன்னாரு. பெண்ணின் வித்து சர்ப்பத்தில் தலையை நசுக்கும்ன்னு. நோவாவின் காலத்துல பாவம் நிறைஞ்சப்போ கடவுள் உலகத்தையே அழிச்சாரு. ஆனா நோவா குடும்பத்தை மீட்பின் பேழையில வெச்சு காப்பாற்றினாரு. பாபேல் கோபுரம் கட்டி மக்கள் கர்வமா இருந்தப்போ மக்களோட மொழியை பிரிச்சு சிதறடிச்சாரு. ஆனாலும், சிதறடிக்கப்பட்டவர்களை மீட்கணும்ன்னு நற்செய்தி அறிவித்தலை நமக்குத் தந்தாரு.

பவுல் : அழகா சொன்னீங்க நற்செய்தியை. ஒரு அசீரியப் பெண்ணா இருந்து இவ்ளோ விஷயம் கத்துகிட்டிருக்கீங்களே ரொம்ப மகிழ்ச்சி.

அம்மா : எல்லாத்துக்கும் காரணம் யஹோவாவும், அவரைக் காட்டித் தந்த இந்த யோனா ஐயாவும் தான்.

அர் : ம்ம்ம்.. நீங்க பேசறதெல்லாம் கேட்டிட்டு இருக்கும்போ எனக்கு ஒரு விஷயம் மட்டும் நல்லா தெரியுது. கடவுள் பிற இன மக்களை அன்பு செய்றது ஒண்ணும் புதுசுல்ல. கடவுள் அன்பானவர். அன்பின் நிறைவு அவர் தான். அந்த அன்பில பாகுபாடு இருக்குன்னு நினைக்கிறது நம்மோட இருதயக் குறைபாடு தானே தவிர இறைவனோட குறைபாடு இல்லை.

யோனா : கரெக்ட்.. இப்போ எனக்கும் சந்தோசமா இருக்கு. சரி, வாங்க புகழ் பாக்கள் பாட நேரமாச்சு.

*

Posted in Articles, Beyond Bible

இவர்கள் என்ன ஆனார்கள் – சிரேனே ஊரானாகிய சீமோன்

இவர்கள் என்ன ஆனார்கள்

சிரேனே ஊரானாகிய சீமோன்

“ஏய்… நீ.. நீதான் “

என்னை நோக்கி ஒரு படைவீரன் கூப்பிட்டபோது அதிர்ந்து போனேன். அப்போது தான் வயல்வெளியிலிருந்து வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தேன். நாளை ஓய்வு நாள், வேலை பார்க்க முடியாது. இருக்கும் ஒரு சில வேலைகளையும் இன்றே முடித்துவிட வேண்டும் எனும் சிந்தனை மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

வரும் வழியில் தான் அவரைப் பார்த்தேன். சிலுவையை சுமந்து கொண்டு தள்ளாடியபடி வந்து கொண்டிருந்தார். சிலுவை சுமந்த மனிதர்களைப் பார்ப்பதொன்றும் எனக்குப் புதிதல்ல. இதற்கு முன்பும் பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு நான் பார்த்த காட்சி மிகவும் வித்தியாசமானது. அதிச்சியளிப்பதாக இருந்தது.

சிலுவை சுமந்து வந்தவருக்கு ஒரு முப்பது வயதிருக்கலாம். ஆனால் அவர் உடல் முழுவதும் சாட்டையோ, முள்ளோ, இரும்பு ஆயுதங்களோ தங்கள் மூர்க்கத்தனத்தைக் காட்டியதன் அடையாளம் இடைவெளியின்றி நிரம்பியிருந்தது. சிவப்புச் சாயத்தில் மூழ்கி எழுந்தவர் போல் இருந்தார். தூரத்தில் வேறு இருவர் சிலுவைகளோடு நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் வழக்கமான குற்றவாளிகளைப் போல தெரிந்தனர். அவர்களை யாரும் கண்டுகொள்ளவும் இல்லை.

ஆனால் இந்த மனிதரைச் சுற்றி மட்டும் பெண்கள் ஒப்பாரி வைப்பதும், மக்கள் கூட்டம் நெருங்கியடிப்பதுமாய் இருந்தது. இவர் யாராய் இருப்பார் ? என நினைத்துக் கொண்டே அவரைப் பார்த்தேன். அவரது தலையில் ஒரு முள்முடி வழக்கத்துக்கு மாறாக ஆச்சரியமூட்டியது. அதிலிருந்த முட்கள் அவரது தலையை துளைத்து நுழைந்திருக்க வேண்டும். முகம் முழுவதும் இரத்தம் இன்னும் வழிந்து கொண்டிருந்தது.

அவரைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே அவர் நெருங்கி வந்தார். எனக்கு அருகே வந்தபோது தடுமாறி விழுந்தார். நான் பதறிப் போய் இரண்டடி பின்வாங்கினேன். அப்போது தான் அந்தக் குரல் கேட்டது.

“ஏய்… நீ.. நீதான் “

நானா.. நான் அதிர்ந்தேன். நான் எதுவும் பண்ணவில்லை… இப்போ தான் வயலிலிருந்து வந்து கொண்டிருக்கிறேன். பதட்டத்தில் நான் சொன்னேன். அவர் விழுவதற்கு நான் தான் காரணம் என நினைத்து விட்டார்களோ ? அமைதியாய்ப் போய்க்கொண்டிருக்கும் என் வாழ்க்கையில் சிக்கல் வந்து விட்டதோ ?

‘அவனோட சிலுவையைத் தூக்கிட்டு அவனுக்குப் பின்னாடி வா’

என்னது ? சிலுவையைத் தூக்கிட்டு பின்னாடி வரதா ? நானா ? குற்றவாளி தான் சிலுவையைச் செய்து அதைத் தூக்கிக் கொண்டும் வரவேண்டும் எனும் முறை இருக்கிறதே. நான் தூக்குவதா, நான் தூக்கினால் நான் குற்றவாளி என்றல்லவா கூட்டம் நினைக்கும் ? அல்லது நான் இந்த மனிதருடைய கூட்டாளி என்றல்லவா கூட்டம் நினைக்கும் ? சிலுவையைச் சுமந்து கொண்டு போன பின்பு என்னை ஒருவேளை இதில் வைத்து அறைந்தால் என்ன செய்வது ? கண நேரத்தில் எனது மனதில் ஆயிரம் கேள்விகள் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகளாய் வந்து தைத்தன.

இல்லை.. இல்லை.. நானில்லை.. வேறு யாரையாவது பார்த்துக் கொள்ளுங்கள்.

ஏய்…நீ தான் தூக்கணும்.. தூக்கு.. தூக்கு.. கல்வாரி மலை வரைக்கும் தான். சிலுவையைக் கொண்டு போட்டுட்டு நீ போயிட்டே இருக்கலாம்…. என்ன பாக்கறே தூக்கு, தூக்கு.

படைவீரர்களின் குரலில் அனுமதியோ, விண்ணப்பமோ இருக்கவில்லை. ஒரு கட்டாயத்தின் தொனி தான் இருந்தது. அவர்களிடம் இப்போது முரண்டு பிடிக்க முடியாது. முடியாது என்று சொல்ல முடியாது. இயேசுவைச் சுற்றி வருபவர்களில் என்னைப் போல திடகாத்திரமான ஆண்களும் இல்லை. நான் உள்ளூர்க் காரனும் அல்ல. வேறு வழியில்லை. என்ன செய்ய ? அதட்டலுக்குப் பணிந்து தான் ஆக வேண்டும்.

எனக்கு சொந்த ஊர் கூட எருசலேம் அல்ல. நான் சிரேன் ஊரைச் சேர்ந்தவன். எருசலேமுக்கு மேற்கே சுமார் 1260 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது எனது ஊர். வட ஆப்பிர்க்காப் பகுதி. லிபியாவுக்குக் கிழக்குப் பகுதியில் இருக்கிறது. அங்கே சுமார் ஒரு இலட்சம் யூத குடும்பங்கள் உண்டு. யூதர்கள் அங்கே குடியேறியதே ஒரு பெரிய கதை. அதற்கு கிமு 323 ம்மும் 285க்கும் இடைப்பட்ட காலங்களில் ஆட்சியமைத்த மன்னன் தாலமி காலத்துக்குப் போக வேண்டும். அவன் தான் கட்டாயமாக யூதேயாவிலுள்ள யூதக் கூட்டத்தை அங்கே விரட்டியவன்.

அங்கிருந்து ஆண்டு தோறும் திருவிழாவுக்காக இங்கே வருவது வழக்கம். இதோ பாஸ்கா வருகிறது, அதற்கான வருகை தான் இது. அங்கிருந்து இங்கே வந்து சேர்வதற்கே வாரக்கணக்காகி விடும்.

நான் குனிந்தேன். வேறு வழியில்லை. படைவீர்கள் என்னைத் தாக்கிவிடுவார்களோ எனும் பயமும் உண்டு. குனிந்த போது தான் கீழே விழுந்து கிடந்த அந்த நபரை நான் அருகில் பார்த்தேன். அதிர்ந்து போனேன்.

அவரது குருதியில் குளித்த உடலைக் கண்டதால் அல்ல, அவரது தீர்க்கமான கண்களைக் கண்டதால். பொதுவாக குற்றவாளிகளின் கண்கள் குரூரத்தில் நிரம்பியிருக்கும், அல்லது. குற்ற உணர்வில் நிறைந்திருக்கும், அல்லது பயத்தில் பதறியிருக்கும், அல்லது சோகத்தில் நிறைந்திருக்கும். ஆனால், அவருடைய கண்களோ எதுவுமே இல்லாமல் சாந்தமாய் இருந்தன. ஏதோ ஒரு இலட்சியத்தின் எல்லையை எட்டிப் பிடிக்கப் போகும் தீர்க்கத்தில் தீட்டப்பட்டிருந்தன.

படைவீரர் இருவர் சிலுவையைத் தூக்கி என் தோளில் போட்டார்கள். கைகளால் அதைப் பிடித்தேன். அது ஒரு மரக்கட்டை தான். கைகளை அறைகின்ற அந்த குறுக்குச் சட்டம். அதைத் தான் கைதிகள் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும். பொதுவாக அதில் குற்றவாளிகளின் பெயரும், அவர்களுடைய குற்றங்களும் எழுதப்பட்டிருக்கும். ஆனால் இதில் எதுவும் எழுதப்படவில்லை.

நான் எழுந்தேன். என் கைகளெங்கும் பிசுபிசுப்பாய் இரத்தம். அந்த இரத்தம் என் தோளிலும் என் ஆடையிலும், தலையிலும் படிந்தது. என் கைகள் இரத்தத்தால் வழுக்கின. மனதுக்குள் அவமானம் நிரம்பியது. என் மகன் அலெக்சாண்டரும், ரூபுவும் இப்போது என்னைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள் ? என் மனைவிக்கு விஷயம் போனால் எப்படி எடுத்துக் கொள்வார். நான் ஒரு குற்றவாளியைப் போல குறுகினேன்.

‘சிலுவையையும் சுமந்து கொண்டு போனான்னா இயேசு மலையில போய்ச் சேர்ரதுக்கு முன்னாடி செத்துட்டாலும் செத்துடுவாரு.. அவரு சிலுவையில தொங்கி தான் சாகணும். அதனால தான் இவன் தோள்ல சிலுவையை தூக்கி வெச்சேன்’ என என்னைக் கைகாட்டி ஒருவன் எனக்கு அருகில் பேசிக்கொண்டே வந்தான். அப்போது தான் அவருடைய பெயர் இயேசு என்று தெரிந்தது.

நான் அவரைப் பார்த்தேன். அவரது உடலிலிருந்த இரத்ததில் பெரும்பான்மையும் ஏற்கனவே வெளியேறியிருக்க வேண்டும். அவரது நடை பின்னியது. பாதைகளெங்கும் இரத்தத் துளிகள் விழுந்து கொண்டே இருந்தன. உண்மை தான். இந்த பளுவையும் சுமந்தால் ஒருவேளை அவரது உயிர் விரைவிலேயே விடைபெறக் கூடும் என நான் நினைத்துக் கொண்டேன்.

‘இயேசுவே… இயேசுவே.. உமக்கா இந்த நிலை’ என பெண்களின் கூட்டம் ஒப்பாரி வைத்துக் கொண்டே வந்து கொண்டிருந்தது. நான் ஆச்சரியப்பட்டேன். ஒரு குற்றவாளிக்கு இத்தனை ரசிகர்களா ? இயேசு நடந்து கொண்டே சொன்னார். ‘எனக்காக அழாதீர்கள், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்’ ! எனக்கு வியப்பாக இருந்தது. இந்த நிலையில் எப்படி ஒரு மனிதரால் இவ்வளவு தீர்க்கமாக, இவ்வளவு தெளிவாக ஒரு அறிவுரையைக் கொடுக்க முடியும் ?

சற்று தூரம் சென்றதும் ஒரு குரல் கேட்டது. ‘என்னுடைய கண்ணுக்குப் பார்வை தந்தது நீங்க தானே இயேசுவே… உங்களுக்கா இந்த நிலமை’ ! என் வியப்பு அதிகரித்தது. ஒருவருக்குப் பார்வை கொடுக்குமளவுக்கு இவருக்கு சக்தி இருக்கிறதா ? இவர் மந்திரவாதியா ? சித்து வேலை தெரிந்தவரா ?

‘என்னோட பேய்களை ஓட்டினீரே இயேசுவே… உம்மை இப்படிச் செய்து விட்டார்களே…’ அடுத்த குரல் என்னைப் புரட்டிப் போட்டது. பேய்களையும் ஓட்டியிருக்கிறாரா ? அப்படியானால் இவர் நிச்சயம் பெரிய மனிதராய் தான் இருப்பார் போல…

என்னுடைய சிந்தனையை தடுத்தது அடுத்த குரல், “எங்களுடைய தொழுநோயைக் குணப்படுத்தினீரே”. இப்போது என்னால் அதிர்ச்சியையும் வியப்பையும் கட்டுப்படுத்த முடியவில்லை. என்ன நடக்கிறது ? யார் இவர் ? அவ்வளவு பெரிய நபருக்கு ஏன் இந்த நிலை ? எலிசா இறைவாக்கினர் தொழுநோய் குணப்படுத்தியதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த மனிதருமா ? அதெப்படி சாத்தியம் ? அப்படியானால் இவர் இறைவாக்கினரா ?

‘செத்தவங்களுக்கும் உயிர் குடுத்தீரே இயேசுவே, உங்களைச் சாகடிக்க கொண்டு போறாங்களே’ ! கடைசியாய்க் கேட்ட குரல் என்னை நிலைகுலைய வைத்தது. என்னது !!, இறந்தவரை உயிர்த்தெழச் செய்திருக்கிறாரா ? உண்மையாகவா ? அப்படியானால் இவர் கடவுளின் அருள் பெற்றவராய்த் தான் இருக்க வேண்டும். இப்போது எனது தோளில் இருந்த சிலுவை எனக்கு பாரமாய்த் தோன்றவில்லை. ஆனால் மனதுக்குள் நான்கைந்து சிலுவைகளை புரட்டி வைத்த பாரம் உருவானது.

சட்டென எனது நடை தளர்ந்தது.

‘ஏய்… பாத்து நட.. இன்னும் கொஞ்ச தூரம் தான்…. ‘ படைவீரனின் குரல் என் காதுகளைத் தீண்டியது. எனக்கு இப்போது அவமானமாய் இல்லை. சிலுவையைச் சுமந்து கொண்டு போகிறேனே, என்னை மக்கள் எப்படிப் பார்ப்பார்கள் எனும் கவலை இல்லை. பெருமையாய் இருந்தது. ஏதோ ஒரு பெரிய மனிதரின் சிலுவையைச் சுமக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது என நினைத்துக் கொண்டேன்.

படைவீரர்களின் அதட்டலையும் மீறி வழி நெடுகிலும் இயேசுவின் வல்லமை பற்றியும், அன்பைப் பற்றியும் மக்கள் ஒப்பாரியுடன் சத்தமிட்டுக் கொண்டே வந்தார்கள். இவரை இந்த கோலத்திலா சந்திக்க வேண்டும். இதற்கு முன் ஒரு முறையாவது சந்தித்திருக்கலாமே என என் மனம் அடித்துக் கொண்டது. என்ன செய்ய ? இப்போது பேசி பயனில்லை.

இவரைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். இவர் யாராக இருப்பார் ? எங்கிருந்து வந்திருப்பார் ? கேள்விகளினால் என் மனம் நிரம்பியபோது கல்வாரி மலை நெருங்கியிருந்தது. சிலுவையை என் தோளிலிருந்து கீழே போட்டேன். வீரர்கள் அதைத் தூக்கிக் கொண்டு சென்று அதில் இயேசுவைத் தூக்கிப் போட்டார்கள்.

அவரை அந்த கோலத்தில் பார்க்க முடியவில்லை. இப்போதும் மறுப்பு இல்லை, கதறல் இல்லை, வலியில் வெடிக்கும் வசை மொழிகள் இல்லை. அமைதியாக இருந்தார். வலியின் கோரம் அவரது முகத்தில் தெரிந்தது, ஆனாலும் அவர் அதை ஏற்றுக் கொண்ட விதத்தை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவரை சிலுவையில் அறைந்தார்கள். சிலுவையின் உச்சியில் அவரை ஏறிட்டுப் பார்த்தேன். ஏதோ பேசுவதாய் தோன்றியது. கவனித்தேன்..

“தந்தையே.. இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை” அவரது குரல் என்னை அதிர்ச்சியின் உச்சியில் எறிந்தது. இப்படியும் ஒரு மனிதர் இருப்பாரா ? உண்மையிலேயே இவர் இறைவாக்கினர் தான். என நான் நினைத்துத் திரும்பிய போது, அதே வார்த்தையை ஒரு படைவீரரும் தன்னோடு இருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்டேன்.

இதுதான் அன்றைக்கு நடந்தது. அதன் பின்னர் இயேசுவைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவருடைய சீடர்களைச் சென்று சந்தித்தேன். மூன்றாம் நாளில் இயேசு உயிர்த்து விட்டார். இப்போது எங்களுடைய விசுவாசம் ஆழப்பட்டது. நானும் என் மனைவியும், இரண்டு பிள்ளைகளும் நற்செய்தி அறிவித்தலுக்காக எங்களை முழுமையாகக் கையளித்தோம்.

சிலுவை சுமக்க எனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு. இயேசுவுக்குக் கடைசியா உதவி செய்யக் கிடைத்த அற்புத வாய்ப்பு. சிலுவையைச் சுமந்து கொண்டு அவருக்குப் பின்னால் செல்ல வேண்டியது எனக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பு.

சிரேனே ஊரானாகிய சீமோன் குறித்த தகவல்கள் பைபிளுக்கு வெளியே ஆதிகால எழுத்துகளிலும், செவி வழிக் கதைகளிலும், பாரம்பரிய செய்திகளிலும் பரவலாய்க் காணப்படுகின்றன. சீமோன் இயேசுவின் சிலுவையைச் சுமந்தபின், அவரது குருதியின் பிசுபிசுப்பைக் கைகளில் ஏந்தியபின் முழுமையாக அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் மனிதராய் மாறினார் என்கின்றன அந்தக் கதைகள்.

அவரும் அவருடைய பிள்ளைகள் அலெக்சாண்டர் மற்றும் ரூபு இருவருமே தந்தையின் வழியில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார்கள். அவருடைய மனைவியும் கிறிஸ்தவ நெறியை ஏற்றுக் கொண்டு நற்செய்தி அறிவித்தலில் ஈடுபட்டார்.

தூய ஆவியானவர் நெருப்பு நாக்கு போல இறங்கிய நூற்று இருபது மனிதர்களில் இவர்களும் அடக்கம் என்கின்றன மரபு வழிக் கதைகள்.

இவர்களில் ரூபுவும், அவரது அன்னையும் உரோமை நகருக்குச் சென்று அங்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தனர். திருத்தூதர் பவுலுடன் நெருங்கிய அன்பும் நட்பும் கொண்டிருந்தனர். உரோமைக்கு பவுல் செல்லும் முன் இவர்கள் உரோமை நகரில் இயேசுவைப் பற்றி அறிவித்தனர். “ஆண்டவர் பணிக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரூபுக்கும் அவர் அன்னைக்கும் வாழ்த்துக் கூறுங்கள். அவருடைய அன்னை எனக்கும் அன்னை போன்றவர் “ என பவுல் உரோமையருக்கான தனது கடிதத்தில் குறிப்பிடும் ரூபு, சிரேனே ஊரானாகிய சீமோனின் மகன் என்பது திருச்சபையின் நம்பிக்கை.

அவரது இன்னொரு மகன் அலெக்சாண்டர் எருசலேமிலேயே தங்கியிருந்தார். 1941ம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட ஒரு கல்லறையில், “ சிரேனே ஊரானாகிய சீமோனின் மகன் அலெச்காண்டர்” என எழுதப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. இது அந்த சீமோனின் மகன் தான் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். எனில் அலெக்சாண்டர் எருசலேம் பகுதிகளிலேயே தங்கி நற்செய்தி அறிவித்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

சீமோன், ஒரு யூதர் என பெரும்பான்மையானவர்கள் நம்புகின்றனர். ஆனால் இவர் கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்றும், பிற இனத்து மனிதர் என்றும் இவரைப் பற்றிய நம்பிக்கைகள் பலவாறு பேசுகின்றன. அதனால் தான் கூட்டத்தில் தனியே தெரிந்த அவரை படைவீரர்கள் அழைத்து சிலுவை சுமக்கச் செய்தனர் எனும் கருத்தும் பரவலாக உண்டு. புனித ஆனி கேத்தரின் எமரிக் எழுதும் போது, “சீமோன் ஒரு பிற இன மனிதர்” என குறிப்பிடுகிறார். இந்தப் புனிதர் காட்சிகளைக் காண்பதில் இறை வரம் பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

ஸ்தேவானின் மரணத்திற்குப் பின்பு சீரேன் ஊரானாகிய சீமோன், அந்தியோக்கியாவுக்குச் சென்று அங்கே நற்செய்தி அறிவித்தலில் ஈடுபட்டார் என மரபு வழிக் கதைகள் மூலம் தெரிய வருகிறது. திருத்தூதர் பணிகள் நூலிலும் இதைப்பற்றி மறைமுகக் குறிப்புகள் காணப்படுகின்றன. ஒரு நபருடைய குடும்பத்தின் மூலமாக மூன்று வெவ்வேறு இடங்களில் நற்செய்தி அறிவிக்கப்பட்டது என்பது வியப்பான விஷயம்.

“என் பெயரில் ஒரு குவளை குளிர்ந்த நீர் கொடுப்பவனும் அதற்குரிய கைமாறு பெறாமல் போகான்” என்றார் இயேசு. இங்கே சீமோன் செய்த சிறு உதவி அவரை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்தும், கோடிக்கணக்கான மக்களின் மனதில் அவரைப் பற்றி சிந்திக்கவும், மரியாதை செலுத்தவும் வைக்கிறது. அவர் வெறும் வழிப்போக்கர் அல்ல, அவர் இறைவனின் வழியில் போகிறவர், அவரை மறந்து விடக் கூடாது என்பதற்காகவே அனைத்து நற்செய்திகளும், சிரேனே ஊரானாகிய சீமோன் என அவரது பெயரை ஊருடன் சேர்த்து தெளிவாக எழுதி வைத்திருக்கின்றன.

பாரம்பரியத் திருச்சபைகள் சிலவற்றில் இவர் புனிதராகக் கொண்டாடப்படுகிறார்.

*

சேவியர்