உயர் திணையான அஃறிணைகள்
பன்றி
புறக்கணிப்பின்
பின்வாசலாய் இருக்கிறது
என் வாழ்க்கை !
குதித்து வந்து
தோளில் தாவும் நாய்க்குட்டியாகவோ
படுக்கையில்
புரண்டு படுக்கும் பூனைக்குட்டியாகவோ
பொதுவாக
நான் இருப்பதில்லை !
சகதியின் சகவாசமும்
அழுக்கின் அருகாமையும்
என்னை
புனிதத்தின் தேசத்திலிருந்து
புறந்தள்ளியிருக்கிறது.
நான்
அசைபோடாததால்
என்னை
அசைபோடக் கூடாதென
மோசேயின் சட்டம்
முட்டுக்கட்டை இடுகிறது.
என்
இறுதிச் சடங்கில் கூட
தொட்டு விடாத் தீண்டாமையுடன்
சட்டம்
என்னை தூரமாய் வைக்கிறது.
நான்
அருவருப்புகளின் உருவகமாய்
அறியப்படுவதில் வருத்தமுண்டு.
கடவுளின் சொல்லுக்கு
அஞ்சாதவரின்
உணவுப் படையலானது,
பன்றியின் இரத்தப் படையல் போல
வெறுக்கத்தக்கது
என்கிறது விவிலியம்.
உங்கள் முத்துகளை
என் முன்னால் எறிந்தால்
நாங்கள்
அதன் மதிப்பை உணராமல்
மிதித்துப் போடுவோம்
என
இயேசுவே சொல்லிவிட்டார்.
இலேகியோன்
எனும்
பேய்களின் படையையும்
எங்களிடமே அனுப்பி
நாங்கள்
தண்ணீருக்குள் தாவி
தற்கொலை செய்யவும் வைத்தார்.
ஊதாரி மைந்தனின்
இழிநிலையைச் சொல்லவும்
என்
உணவு தானே உவமையானது.
பன்றியைக் கழுவினாலும்
அது
சேற்றில் புரளுமென
சொல்லிச் சொல்லி
யாரும் எங்களைக் கழுவுவதுமில்லை.
நாங்கள்
தோராவின் காலம் முதல்
தூரமாகவே இருக்கிறோம்.
மனிதனின்
உடலுக்குள் செல்வதொன்றும்
மனிதனைத்
தீட்டுப்படுத்தாதென
ஒருமுறை
சற்றே ஆறுதல் தந்தார் இயேசு.
இஸ்லாமியர்களுக்கும்
நான்
இகழப்படும் விலங்கு.
ஆனாலும்
தவிர்க்கமுடியா சூழலில்
என்னைத் தின்பது
பாவமல்ல,
ஏனெனில் கடவுள் இரக்கமுள்ளவர்
என
குரானும் கொஞ்சம் கருணை காட்டியது.
எனினும்
எனக்கு
மகிழ்ச்சி தரும்மனிதர்
சாலமோன் தான்.
அவர் மட்டும் தான்
எனது மூக்கில் ஒரு
வைர மூக்குத்தியை
கற்பனையேனும் செய்து பார்த்தவர்
அவர் சொன்னார்.
மதிகேடான
பெண்ணின் அழகு,
பன்றிக்குப் போட்ட
வைர மூக்குத்தி !
*
சேவியர்