Posted in Articles, Christianity, WhatsApp

சீர்திருத்தச் சிலைகள்

சீர்திருத்தச் சிலைகள்

சிலரைப் பார்த்திருக்கிறேன். தினமும் சாராயம் குடித்துக் குடித்து அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டவர்கள். திடீரென ஒரு நாள் ஞானோதயம் வந்து குடிப்பழக்கத்தை நிறுத்தி விடுவார்கள். உடனே அதைச் சமன் செய்வதற்காக புகையிலைப் பழக்கத்தையோ, பான்பராக் போன்ற ஏதோ ஒரு பழக்கத்தையோ அவர்கள் கையிலெடுப்பார்கள். ‘அதான் குடியை விட்டாச்சுல்ல’ என்பார்கள். அதைவிடப் பெரிய போதையின் பாதையில் நுழைந்து அழிவார்கள்.

சிலைகளை விட்டு ஒட்டு மொத்தமாக விலகவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு தனியே இறைவனை வழிபடும் பலரும், அதற்கு மாறாக வேறு சில சிலைகளைத் துடைத்துச் சுத்தமாக்கி தங்களுடைய இதயத்தின் அலமாரியில் அடுக்கி வைக்கின்றனர். கடவுள் உருவமற்றவர் என்பது போல இவர்களுடைய சிலைகளும் உருவமற்றதாக இருப்பது வசதியாகி விடுகிறது இவர்களுக்கு.

சமீபத்தில் ஒரு சபைக்கு ஒரு பாஸ்டர் புதிதாக வந்தார். ‘பிள்ளைகளுடைய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடவேண்டாம்’ என்றவர் இயேசு. வந்த பாஸ்டரோ பிள்ளைகளை விட அதிகமாய் நேசிக்கும் சில நாய்களோடு வந்தார். வெளிநாட்டு நாய் வகை எனும் கர்வத்தையும் கழுத்தில் மாட்டியிருந்தார். அந்த நாய்களுக்கு ஏசியும், வசதியான காம்பவுண்ட் சுவரும் வேண்டுமென அடம்பிடித்தார். அத்துடன் விடவில்லை, தனக்கும், தனது பிள்ளைகளுக்கும், அவர்களுடைய நண்பர்களுக்கும் பணக்காரக் கார்களை நிறுத்துவதற்காக ஆலய மதில் சுவரை இடித்து பார்க்கிங் இடங்கள் செய்து தரவேண்டும் என்றார்.

‘சொகுசு வாழ்க்கை’ எனும் சிலை ஒன்றை அவர் தனது கக்கத்தில் சொருகி வைத்திருந்தார். தனக்கு வசதியான வாழ்க்கை வேண்டும், திருச்சபையின் ஆன்மீக வளர்ச்சி எக்கேடுகெட்டுப் போனால் எனக்கென்ன எனும் சிந்தனை அவரது கனிகளில் வெளிப்பட்டது. சரி, ஆயர் இப்படியிருக்கிறாரே, இலட்சக்கணக்கில செலவு செய்கிறாரே மேலிடத்துக்குப் போவோம் என மக்கள் தீர்மானித்தபோது ஒருவர் சலித்துக் கொண்டே, “அட நீ..வேற. மேலிடம் ஒரு கோடி ரூபாய்க்கு தன்னோட வீட்டை பட்டி டிங்கரிங் பாத்திருக்கு… நீ போவியா அங்கிட்டு’ ! என்றார். சொகுசு வாழ்க்கையின் சிலைகளின் அருங்காட்சியகமே அவரிடம் இருக்கிறது போல.

இன்னொரு நிகழ்வில் திருச்சபைப் போதகர் ஒருவர் தன்னுடைய வீட்டில் வைத்து தான் காணிக்கைப் பணத்தை எண்ணுவேன். தன்னுடைய செலவுகளெல்லாம் காணிக்கைப் பணத்தில் தான் நடக்க வேண்டும். நான் நினைக்கும் செலவுகள் செய்யப்பட வேண்டும் என கட்டளை கொடுத்தாராம். பண ஆசை எனும் சிலை ஒன்று அவரது பாக்கெட்டுக்குள் பத்திரமாய் இருக்கிறது. மேலிடத்துக்குப் போகவேண்டும் எனும் ஆசையையே திருச்சபையினர் பரணில் போட்டு பூட்டி விட்டார்களாம்.

இன்னொரு போதகரோ பெண்களோடு அந்தாக்‌ஷரி நடத்தி சினிமாப் பாடல்களின் கூடாரமாக கிறிஸ்தவ சந்திப்புகளை மாற்றியிருக்கிறார். அத்தகைய போதகர்களின் வாழ்க்கையில் சிற்றின்பச் சிலைகள் வந்து கூடாரமடித்துக் குடியிருக்கின்றன. என்ன செய்வதென தெரியாமல் மக்கள் தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர்.

மற்றொரு போதகர் இருக்கிறார். என்ன சொன்னாலும், “நான் ஒரு ஸ்காலராக்கும்…”, “நான் ஒரு சேர்மேனாக்கும்…” என சகட்டு மேனிக்கு கர்வத்தின் விசிட்டிங் கார்ட்களை விசிறிக் கொண்டிருக்கிறார். பவுல் சொன்னார், நான் இயேசுவைப் பின்பற்றுவது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள் என்று. ஆனால் இன்றைய போதகர்களோ ‘நீ என்னைப் பின்பற்று, நாம் இருக்கலாம் இன்புற்று’ என்கின்றனர்.

இன்னும் சில சபைகளில் சாதி எனும் சிலைகள் குழு குழுவாக தலையைப் பிரித்து விட்டு ஆட்டம் போடுகின்றன. நானே வாழ்வின் வாசல் என்றார் இயேசு. ‘அதெல்லாம் இருக்கட்டும், அடுத்த சாதி காரன் வந்தா வாசலைச் சாத்தி தான் வைப்போம்’ என்கிறார்கள் பக்தர்கள். சாதிக்கென சபைகள், சாதிக்கென தனித்தனியே ஆராதனைகள். இதைக் கண்டிக்க வேண்டிய போதகர்களோ காணிக்கைக் கணக்கு குறைந்து விடக்கூடாதெனும் கவலையில் கப் சிப் என இருக்கின்றனர்.

சிலைகள் ! எங்கும் எதிலும் சிலைகள் ! இதில் நாங்கள் சிலைகளை ஒழித்துவிட்டோம் என கர்வம் வேறு. கர்வத்தோடு முன்னிறுத்தும் எந்த விஷயமுமே சிலையாகிப் போகிறது.

சிலைகளைப் பற்றிய நமது அடிப்படைப் புரிதலே தவறு. எது நம்மை கடவுளிடமிருந்து பிரிக்குமோ அதுவே சிலை. பழைய ஏற்பாட்டில் “தன்னை விட்டு விட்டு வேறு தெய்வங்களை” நினைவூட்டிய அத்தனை அடையாளங்களையும் கடவுள் வெறுத்தார், அருவருத்தார் என்பதை தெளிவாகப் பார்க்கிறோம். கடவுளைத் தவிர எதன்மீது நமது பார்வையை, நம்பிக்கையை, பாதுகாப்பை, ஆசையை வைக்கிறோமோ அதுவெல்லாம் சிலை. எது கடவுள் மீதான நமது பார்வையைத் திசை திருப்ப வைக்குமோ அதுவெல்லாம் சிலை.

எது நமக்கு கடவுளை நினைவூட்டுமோ, கடவுளோடான அன்னியோன்யத்தை அதிகப்படுத்துமோ, கடவுளிடம் செபிக்கத் தூண்டுமோ அது சிலையல்ல. உதாரணமாக, சிலுவை நமக்கு இயேசுவை ஞாபகப்படுத்தினால், இயேசுவிடம் நெருங்க உதவினால் அது சிலையல்ல. பணம் நமக்கு சுக போகத்தை நினைவூட்டி இயேசுவை ஓரங்கட்டினால் அது சிலை. அவ்வளவே. வீட்டில் தொங்கும் ஒரு படம் இயேசுவை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தால் அது சிலையல்ல, “வாவ் வாட் எ பெயிண்டிங்’ என பெயிண்டரை நினைவுபடுத்தினால் அது சிலை.

சிலைகள் தானாக முளைத்து வளர்வதில்லை, நாம் தான் வளக்கிறோம்.
அதே போல, ஒழிக்க வேண்டிய சீர்திருத்த சிலைகள் என்னவென்பதையும் நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

*
சேவியர்

3 thoughts on “சீர்திருத்தச் சிலைகள்

 1. Nice presentation, we are the people who are the victims of such unholy leadership supported by unholy congregation and unholy Top brass of our Diocese.
  Franklyn Stanley
  Founder
  Creative Endeavors
  (Content Writer & authoring a book)

  Like

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s