Posted in Articles, Sunday School

SKIT – விற்பனை இலவசம்

விற்பனை இலவசம்

 

காட்சி 1

( ஒரு சேல்ஸ் உமன் – லிசா –  பொம்மை விற்றுக் கொண்டிருக்கிறார் )

சேல்ஸ் : வாங்கம்மா.. வாங்குங்கம்மா… அற்புதமான ஹெட்போன்… லேட்டஸ்ட் டெக்னாலஜி ஹெட்போன்… வேற எங்கயும் கிடைக்காது

( அப்போது ஒரு பெண் வருகிறார் )

பெண் : என்னம்மா வேற எங்கயும் கிடைக்காத ஹெட்போன்…. பீடிகை பலமா இருக்கே… 

சேல்ஸ் : வாங்கம்மா.. உக்காருங்க.. இதாம்மா அந்த ஹெட்போன்… பாருங்க, லேட்டஸ்ட் டெக்னாலஜில பண்ணின ஹெட்போன். பாட்டு போட்டீங்கன்னா, சரவுண்ட் சிஸ்டத்துல கேக்கும்.. ஆனா சரவுண்டிங்ல நடக்கிற எதுவுமே கேக்காது… 

பெண் : ஆமா.. பேசறதெல்லாம் நல்லா பேசுவீங்க… 

சேல்ஸ் : என்னம்மா இப்படி சொல்லிட்டீங்க.. நீங்க என் அம்மா மாதிரி, உங்க கிட்டே நான் பொய் சொல்லுவேனா… 

பெண் : செண்டிமெண்ட் வேறயா… சரி சரி.. குடு… ( வாங்கிப் பார்க்கிறார் ) .. ம்ம்ம்.. எவ்ளோ ஆகுது ?

சேல்ஸ் : ஜஸ்ட் ஃபைவ் கண்ட் ரட் தான் மேடம். 

பெண் : என்னது, ஐநூறு ரூபாயா ?

சேல்ஸ் : என்ன மேடம் ஐநூறான்னு வாயைப் பொளக்கறீங்க, ஒரு போஸ் ஹெட்போன் விலை என்ன ஆகுது தெரியுமா ?

பெண் : அது எவ்ளோ ஆனா எனக்கென்ன ? 

சேல்ஸ் : மேம்.. அது 10 தவுசண்ட் ருபீஸ் ஆகுது. இது ஜஸ்ட் 500 தான். 

பெண் : அதையும் இதையும் கம்பேர் பண்ண முடியுமா ? அதுல ஒரு குவாலிட்டி இருக்கு.

சேல்ஸ் : இப்படி தான் எல்லாரும் ஏமாந்து போயிடறீங்க. அந்த போஸ் கம்பெனிக்கு பார்ட்ஸ் செஞ்சு குடுக்கிறவங்க தான் இந்த ஹெட்போனுக்கும் பார்ட்ஸ் செஞ்சு குடுக்கிறாங்க. அதே குவாலிட்டி இதுலயும் இருக்கும்.

பெண் : நெஜமாவா சொல்றே ?

சேல்ஸ் : அம்மா.. பொய் சொல்லி சம்பாதிச்ச காசு நிலைக்காதும்மா… நான் டெய்லி இங்கே தான் நிப்பேன்.. ஏதாச்சும் பிரச்சினைன்னா என்கிட்டே வாங்க.

பெண் : ம்ம்.. நான் உன்னை இங்கே பாத்ததே இல்லையே…

சேல்ஸ் : இனிமே பாப்பீங்க மேடம்.. ரெண்டு தரட்டுமா ? ஆயிரம் ரூபாய் தான்.

பெண் : வேணாம் வேணாம்.. ஒண்ணு மட்டும் குடு. சரியில்லேன்னா திருப்பி குடுத்துடுவேன். என் சின்னப் பொண்ணுக்கு குவாலிட்டி சரியில்லேனா புடிக்காது. 

சேல்ஸ் : அதெல்லாம் கவலையே படாதீங்க.. உங்க மூத்த பொண்ணு குடுத்ததா நெனைச்சுக்கச் சொல்லுங்க. செமயா இருக்கும்..

பெண் : சரி சரி…. பொருளை எல்லாம் பேசி பேசியே வித்துடுவீங்களே.. சரி இதா.. ஒண்ணு குடு…  ( 500 ரூபாய் கொடுக்கிறார் ) 

காட்சி 2 

( சேல்ஸ். சோர்வாக பார்க்கில் ஒரு இடத்தில் வந்து அமர்கிறார். )

சேல்ஸ் : ஷப்பா…ப்பா…  ஒரு பொருளை விக்கறதுக்குள்ள தாவு தீந்துடுது… எல்லாரும் ரொம்ப உஷாராயிடறாங்க.. ஏமாத்தவே முடியல. ம்ம்ம் இப்படியே போனா நம்ம சேல்ஸ் வேலைக்கே ஆப்பு வெச்சுடுவாங்க போல.

ரெபா : (அருகில் வந்து அமர்கிறார் ) … ஷப்பா.. ரொம்ப சூடு… இந்த வருஷம் சூடு ரொம்ப அதிகம் போல… எப்போ இந்த சூடு தீருமோ !!!

சேல்ஸ் : ( ரெபாவைப் பார்த்து ) சூடெல்லாம் இப்போதைக்கு தீராது. அதுவும் என்னை மாதிரி சேல்ஸ் கேர்ள் எல்லாம் … ஷப்பா.. ரொம்ப கஷ்டம் தான். ஆமா.. நீங்க என்ன பண்றீங்க ?

ரெபா : நானும் சேல்ஸ் கேர்ள் தான்.

சேல்ஸ் : வாவ்.. நீங்களுமா ? நான் ஹெட்போன் சேல்ஸ் பண்றேன்.. டார்கெட் மீட் பண்ணவே முடியல. ஆமா, நீங்க எவ்ளோ விக்கறீங்க சராசரியா ?

ரெபா : ஒரு 500..

சேல்ஸ் : வாவ்.. 500 ஆ.. ஒரு வருஷத்துலயா, அப்போ நீங்க செம கில்லாடி சேல்ஸ் பர்சன் தான்.

ரெபா : ஒரு வருஷத்துக்கு இல்ல.. ஒரு. மாசத்துக்கு.. 

சேல்ஸ்  : என்ன விளையாடறீங்கறா ? மாசத்துல ஐநூறா ? அப்படி என்ன தான் விக்கறீங்க…

ரெபா : நான்.. எட்டர்னல் லைஃப் ஐ … ஐ கொடுத்துட்டு இருக்கேன்.. மக்கள் ஆர்வமா வாங்கறாங்க… அவங்களோட வாழ்க்கைக்கு அது ரொம்ப முக்கியமா இருக்கு.

சேல்ஸ் : எட்டர்னல் லைஃபா.. என்ன கிராரண்டி ?

ரெபா : லைஃப்டைம் கேரண்டி தான்.. அதான் நிலை வாழ்வு…

சேல்ஸ் : லைஃப் டைம் கேரண்டி ல ஒரு புராடக்டா… ஒண்ணு என்ன ரேட் ஆகுது ?

ரெபா : இது ஃபிரீதான்.. இலவசமா குடுக்க வேண்டியது தான். புராடக்ட் செம வேல்யூ உள்ள புராடக்ட். ஆனா நாங்க பிரியா தான் குடுக்கிறோம். அது தான் எங்களோட பாஸ் தந்த கட்டளை.

சேல்ஸ் : குழப்பறீங்க.. உங்க பாஸ் பிரீயா குடுக்க சொன்னாரா ? அவர் கிட்டே நீங்க பேசியிருக்கீங்களா ?

ரெபா : டெய்லி அவர் கிட்டே பேசாம நான் வேலைக்கு கிளம்பறதும் இல்லை, வேலையை முடிச்சப்புறம் அவர் கிட்டே பேசாம நான் பேசாம தூங்கறதும் இல்லை. அவ்வளவு டச் ல இருக்கோம்… இல்லேன்னா இந்த வேலையை பண்ணவே முடியாது.  

சேல்ஸ் : ஓ.. செம.. எங்க பாஸ் கிட்டே எல்லாம் நாங்க பேசவே முடியாது.. என் பாஸோட, பாஸோட , பாஸோட பாஸ் அவரு…. ம்ம்ம்.. நீ பேசறது… ஹையர்  அஃபிஷியலா ?

ரெபா : அவர் தான் எல்லாரையும் விட ஹையர் அஃபிஷியல். அவருக்கு மேல யாருமே இல்லை. அவரோட ஒரே பையன் தான் இங்கே வந்து இந்த சால்வேஷன், எட்டர்னல் லைஃபை குடுத்துட்டு போனது. அதை தான் நாங்க செல் பண்றோம்.

சேல்ஸ் : ம்ம்.. வெரி இண்டரஸ்டிங்…. புராடக்ட் சரியில்லேன்னு எங்கேயாச்சும் திட்டு வாங்கியிருக்கீங்களா

ரெபா : திட்டா ? பலரை கொன்னே போட்டிருக்காங்க. அது புராடக்ட் தப்புங்கறதனால இல்ல, அந்த புராடக்ட்ல யாரும் தப்பு சொல்லவும் முடியாது. ஆனா நாங்க விக்கறது பலருக்கும் புடிக்கிறதில்லை, காரணம் அது பலருக்கும் புரியறதில்லை. யூஸ் பண்ணிட்டிருக்கிற புராடக்டை விட அவங்களுக்கு மனசில்ல, அதான் காரணம். 

சேல்ஸ் : ம்ம்… உங்க கம்பெனி புதிய கம்பெனியா ? புராடக்டை புரமோட் பண்றதுக்காக ஃபிரீயா குடுக்கறீங்களா ?

ரெபா : ஹா..ஹா.. எங்க கம்பெனி தான் ஓல்டஸ்ட் இன் த வேர்ல்ட்… 

சேல்ஸ் : ஓ… வாவ்… எப்படி ? இவ்ளோ வருஷமா எப்படி நடத்தறாங்க ?

ரெபா : எங்களுக்கு ஒரு பவர்புல் மேனுவல் இருக்கு. அதன் படி நாங்க செயல்படுவோம். மேனுவலுக்கு பைபிள் ந்னு பேரு. அந்த மேனுவல் இருந்தா போதும் கம்பெனியை நடத்திட்டே இருக்கலாம். 

சேல்ஸ் : ஓ.. அப்படியா… நான் கேள்விப்பட்டதில்லை. வேற ஏதாச்சும் விக்கறீங்களா ?

ரெபா :  எஸ் எஸ்… எட்டர்னல் லைஃபுக்கு சப் புராடக்ட்ஸ் இருக்கு, ஃபர்கிவ்னெஸ், லவ், கேர் இப்படி.. 

சேல்ஸ் : ஓ..இப்போ புரியுது. இதையெல்லாம் காசு குடுத்து வாங்கினா, எட்டர்னல் லைஃப் பிரீ அப்படி தானே ? நல்ல டெக்னிக்.

ரெபா : நோ..நோ.. இதுவும் பிரீதான்.. எல்லாமே பிரீ தான்..

சேல்ஸ் : தலையை சுத்துது ! இது ஏழைகளுக்கு உதவி செய்ற நிறுவனமா ? ரிச் பீப்பிள் காசு குடுத்து வாங்குவாங்க, அதை வெச்சு நீங்க ஏழைகளுக்கு ஃபிரீயா குடுப்பீங்க அப்படியா ?

ரெபா : ரிச்.. பூவர்.. டார்க்.. பிரைட்… சாதி.. இனம்.. மொழி.. எந்த பாகுபாடுமே கிடையாது. எல்லாருக்குமே பிரீ தான். 

சேல்ஸ் : அதை வாங்கினா என்ன கிடைக்கும் ?

ரெபா : மன நிம்மதி. நிலை வாழ்வு. இயேசுவோடு வாழ்கிற வாழ்வு. அவர் தான் நமக்காக இரத்தம் சிந்தி நம்ம பாவங்களை மன்னிச்சவர். அவரோட கால காலமா வாழற வாழ்வு. இந்த உலகத்துல சந்தோசம், அடுத்த உலகத்துல மகிழ்ச்சி. எல்லாம் கிடைக்கும்.

சேல்ஸ் : வாங்கறவனுக்கு இதெல்லாம் கிடைக்கும்.. சரி… ஆனா, விக்கற உனக்கு என்ன கிடைக்கும்.

ரெபா : ஒவ்வொருத்தரோட மகிழ்ச்சியிலயும் எனக்கு மகிழ்ச்சி. டெய்லி நான் சந்திக்கிற மக்கள் பற்றி என்னோட பாஸ் கிட்டே பேசுவேன். அதுல எனக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி. அவரு என்னை ஆசீர்வதிப்பாரு. ஏன்னா, நான் யாரை போய் பாக்கப் போறேனோ அவங்களை எல்லாம் அவரு ஏற்கனவே தயார் செஞ்சு வெச்சிருப்பாரு.

சேல்ஸ் : வாட் டு யூ மீன்

ரெபா : அது ஹோலி ஸ்பிரிட் ஏரியா .. அவரு போய் எல்லாரையும் ரெடி பண்ணி வைப்பாரு, சோ.. என்னோட சேல்ஸ் ஈசி… அப்புறம் எங்க கூட எப்பவுமே ஏஞ்சல்ஸ் வரதனால பாதுகாப்பும் உண்டு

சேல்ஸ் : ஏஞ்சல்ஸ்.. ஹூ ஈஸ் தேட்… எங்கே..

ரெபா : ஏஞ்சல்ஸைப் பாக்க முடியாது.. அவங்க என் கூட இருக்காங்க.. தே ஆர் வித் மி.. ஆல்வேஸ்.. 

சேல்ஸ் : ஓ..வாவ்.. என்ன அட்டகாசமான நியூஸ்..  நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே…

ரெபா : கேளுங்க பிளீஸ்.. நீங்க.. என்னோட அக்கா மாதிரி.. தைரியமா கேளுங்க.

சேல்ஸ் : எனக்கும் அந்த எட்டர்னல் லைஃபை தரீங்களா ?

ரெபா : கண்டிப்பா..… உங்களையும் எங்க பாஸ்.. அதான் காட் த ஃபாதர் ரெடி பண்ணிட்டாரு.. 

சேல்ஸ் : நான் என்ன பண்ணணும் ?

ரெபா : முதல்ல பர்கிவ்னஸ் வாங்கணும், அப்புறம் ஜீசஸை ஏத்துக்கணும். “இயேசுவே என்னோட பாவங்களையெல்லாம் மன்னிச்சுடுங்க, நீங்க எனக்காக இரத்தம் சிந்தி மரிச்சீங்கங்கறதை நான் நம்பறேன். உங்களை என்னோட சொந்த இரட்சகரா ஏத்துக்கறேன்”. ந்னு சொல்லுங்க அவ்ளோ தான். 

சேல்ஸ் : யா… நான் நிறைய தப்பு பண்ணியிருக்கேன். பொய் சொல்லி பொய் சொல்லி தான் பொருளையே விக்கறேன். எனக்கு மன்னிப்பு வேணும். “ செபிக்கிறார் )

சேல்ஸ் : வாவ்.. இப்போ எனக்கு ரொம்ப ரிலாக்ஸா இருக்கு.. என்னாச்சுன்னே தெரியல, மனசு ரொம்ப சந்தோசமா ஃபீல் பண்றேன். 

ரெபா : ஆமா, அது தான் இந்த புராடக்டை வாங்கினதும் மனசுல ஏற்படற முதல் மாற்றம். யூ ஆர் சேவ்ட். 

சேல்ஸ் : ரொம்ப நன்றி… ரொம்ப நன்றி… இன்னொரு ஆளுக்கு கூட இந்த புராடக்ட் வேணும். அவரையும் நான் உங்க கிட்டே கூட்டிட்டு வரவா ?

ரெபா : தேவையே இல்லை, நீங்களே குடுக்கலாம். நீங்க எப்படி செபிச்சீங்களோ, அப்படி அந்த நபர் மனசார செபிச்சா போதும். அவருக்கும் கிடைக்கும். ஒரு நிமிஷம்.. இதா இதை வெச்சுக்கோங்க ( பைபிளை கொடுக்கிறார் ).. இதான் மேனுவல். இதை படிங்க…. உங்களுக்கு என்ன சந்தேகம், சோர்வு வந்தாலும் இதை படிச்சா போதும் .. தெளிவு கிடைக்கும். 

சேல்ஸ் : வாவ்.. தட்ஸ் ரியலி வண்டர்புள் …. அப்போ நான் .. நான் நிறைய பேருக்கு இதை குடுக்கலாமா ? ஐ ஏம் எக்ஸைட்டட். 

ரெபா : ஆமா. அதுக்கு முன்னாடி டெய்லி பிரே பண்ணுங்க. அது தான் பாஸ் கூட பேசறது. அவர் கூட பேசப் பேச அவரு உங்களை நல்லா கைட் பண்ணுவாரு. 

சேல்ஸ் : தேங்க்யூ.. தேங்க்யூ.. அப்போ இனிமே நான் இந்த ஹெட்போன் சேல்ஸ் வேலையை நிப்பாட்டிடப் போறேன். இனிமே நீங்க சொன்ன எட்டர்னல் லைஃபை பற்றி தெரிஞ்சுக்கப் போறேன். அதையே எல்லாருக்கும் கொடுக்கப் போறேன். 

ரெபா : ரொம்ப சந்தோசம், சரியான விஷயத்தை நீங்க சூஸ் பண்ணியிருக்கீங்க. இயேசு உங்களை வழி நடத்துவாரு. 

சேல்ஸ் : ரொம்ப சந்தோசம்…  என்ன சொல்றதுன்னே தெரியல, ரொம்ப சந்தோசமா இருக்கேன். 

**********

( அப்போது போன் வருகிறது ) 

********

சேல்ஸ் : சொல்லுங்க மேடம்… 

போன் குரல் : நான் ஹோலி ஃபேமிலி ஸ்கூல் பிரின்சிபல் பேசறேன். போனவாரம் வந்து எனக்கு ஒரு ஹெட்போன் குடுத்தேல்லம்மா…

சேல்ஸ் : ஆமா மேடம்.. ஏதாச்சும் கம்ப்ளெயிண்டா மேடம்

போன் : நோ..நோ.. இப்போ நாங்க டிஜிடல் கிளாஸ் தான் நடத்தறோம்.  வீட்ல இருந்தே பிள்ளைங்க படிக்கிறாங்க… அவங்க கிட்டே நல்ல ஹெட்போன் இல்லை.. அதனால ஸ்கூல்ல உள்ள எல்லா டீச்சர்ஸ்க்கும், ஸ்டூடண்ட்ஸ்க்கும் ஒவ்வொரு ஹெட்போன் ஃபிரீயா வாங்கி குடுக்க ஸ்கூல் டிசைட் பண்ணியிருக்கு. அதான் உங்களுக்கு கால் பண்ணினேன்.

சேல்ஸ் ( சந்தோசமாக ) : வாவ்.. என்ன சொல்றீங்க மேம்.. வெரி நைஸ்.. வெரி நைஸ்… 

போன் : ஆமா ஒரு 3000 ஹெட்போன் வேணும், நீ ஸ்கூல்ல டெலிவரி பண்ணிட்டா போதும்.  ரேட்டை மட்டும் கொஞ்சம் கம்மி பண்ணி குடு.

சேல்ஸ் : 3000 ஆ மேடம்.. சூப்பர்… கண்டிப்பா பண்றேன் மேம.. நல்லா ரேட் பாத்து தரேன். 

( போனை வைத்து விட்டு சந்தோசமாய் வந்து ரெபா வின் அருகில் வந்தமர்கிறார் ..பிறகு ஏதோ யோசிக்கிறார்.. தலையை வேண்டாம் என்பது போல ஆட்டுகிறார்..  )

சேல்ஸ் : (ரெபாவிடம் ) எனக்கு ஒரு பெரிய ஆர்டர் வந்திருக்கு… இதுவரை இவ்ளோ பெரிய ஆர்டர் வந்ததேயில்லை. மாசம் நாப்பது..ஐம்பது… விக்கவே படாத பாடு படுவேன்.. இப்போ 3000 ஆர்டர் வந்திருக்கு…. கண்டிப்பா நல்ல கமிஷனும் கிடைக்கும்…. கம்பெனிலயும்  செம பேரு கிடைக்கும்… ஆனா… இப்போ அந்த ஆர்டர் பின்னாடி போறதா, இயேசு பின்னாடி போறதான்னு ஒரு சஞ்சலம் வருது. 

ரெபா : இது சாத்தான் கொண்டு வர சோதனை தான். கடவுளோட பணி செய்ய யாரு நினைச்சாலும் அவங்களை தடுப்பான். உலக ஆசைகளையும், செல்வங்களையும் காட்டி விண்ணக செல்வத்தைத் தடுக்கப் பார்ப்பான். ஏன், இயேசுவையே உலக செல்வத்தையெல்லாம் காட்டி ஏமாத்த பாத்தவன் அவன்.

சேல்ஸ் : எஸ்.. எஸ்.. இந்த ஆர்டர், அடுத்த 

ஆர்டர், அதுக்கான டெலிவரி, சர்வீஸ் கால், டார்கெட்… .. இப்படியே டைம் போயிடும். வேண்டாம். நான் இயேசுவை பின்பற்ற சொன்னது சொன்னதாவே இருக்கட்டும். 

ரெபா : வெரி குட். நீங்க உறுதியா இருக்கிறது எனக்கு சந்தோசமா இருக்கு. உங்க மேனேஜருக்கு போன்பண்ணி விஷயத்தை சொல்லிடுங்க. அவங்க டீல் பண்ணிக்கட்டும். உங்களை நம்பி கால் பண்ணின மேடத்துக்கும் அந்த விஷயத்தை கன்வே பண்ணிடுங்க. 

சேல்ஸ் : சூப்பர்.. ஒவ்வொரு சின்ன விஷயத்துலயும் கவனமாவும் நேர்மையாவும் இருக்கணும்ன்னு சொல்றீங்க. ரொம்ப சந்தோசம். சரி..சரி.. நான் கிளம்பறேன்.. முதல்ல இந்த எட்டர்னல் லைஃபை ஒருத்தருக்கு குடுக்கணும்.. கிளம்பறேன்.. பை பை ( அவசரமாய் போகிறார் ) 

காட்சி 3 

( சேல்ஸ் & அப்பா )

சேல்ஸ் : அப்பா.. அப்பா… 

அப்பா : என்னம்மா.. இப்படி ஓடி வரே.. ஒரே சந்தோசமா இருக்கே, இன்னிக்கு நிறைய வித்துட்டியா ?

சேல்ஸ் : இல்லப்பா.. வாங்கிட்டேன். 

அப்பா : வாங்கிட்டியா ? என்ன வாங்கிட்டே… 

சேல்ஸ் : எட்டர்னல் லைஃப் ! உங்களுக்கும் தரதுக்கு தான் நான் ஓடி வந்தேன். உங்களுக்கு மட்டுமில்ல, நான் சந்திக்கிற எல்லாருக்கும் தரப் போறேன். நாம எங்கே இருந்தாலும் அதை குடுக்கலமாம்… செம இல்ல..

அப்பா : என்ன சொல்றே.. எட்டர்னல் லைஃபா… ? எங்கே எனக்குக் குடு பாக்கறேன்.

சேல்ஸ் : பாக்கறதில்லப்பா இது.. இது பார்க்காமலேயே அனுபவிக்கிறது. வாங்க பக்கத்துல.. நான் சொல்றதெல்லாம் சொல்லுங்க… சரியா… 

( அமைதியான இசை …. சேல்ஸ் வழிகளை சொல்கிறாள்… கைகளைப் பிடித்தபடி செபிக்கிறார்கள்…  )

அப்பா : அட… ஆமா, சொல்ல முடியாத ஒரு நிம்மதி வந்தது போல இருக்கு. நிஜமாவே சூப்பர் தான். 

சேல்ஸ் : ஆமாப்பா.. இனிமே தான் தேவையில்லாத இந்த ஹெட்போனை எல்லாம் விக்கறதை நிப்பாட்டிட்டு எட்டர்னல் லைஃபை விக்கப் போறேன். 

அப்பா : நானும் இனிமே ஆபீஸ்ல, பிரண்ட்ஸ் கிட்டே எல்லாம் இதை கொடுக்க போறேன். 

சேல்ஸ் : சூப்பர்பா.. எனக்கு இதை குடுத்த அந்த சின்னப் பொண்ணு நல்லா இருக்கணும். 

அப்பா :  கண்டிப்பா.. அவளும் அவ குடும்பமும் சந்தோசமா இருக்கட்டும். அவங்களுக்காகவும் நாம பிரே பண்ணுவோம்.

சேல்ஸ் : கண்டிப்பா..பா

*

நன்றி

Posted in Articles, Bible Animals

உயர்திணையான அஃறிணைகள் – நாய்

உயர்திணையான அஃறிணைகள்

நாய்

*

என்னை
நன்கறிவீர்கள் !

காலுரசியும்
உங்கள் மேல் வாலுரசியும்
எங்கள்
அன்பின் புனிதத்தைப்
பறைசாற்றியதுண்டு.

மிரட்டும் கும்மிருட்டின்
ஆழத்தில்,
வாயிலோரம்
காவலிருக்கும் நிலை
எங்களில் சிலருக்கு.

குளிர்சாதன மென் அறைகளில்,
சுவர்க்கத்தின்
மினியேச்சர் மெத்தைகளில்
புரண்டு களிக்கும் புண்ணியம்
எங்களில் சிலருக்கு.

விளிம்பு நழுவி விழுந்ததாய்
தெருவின்
அதிகார அச்சுறுத்தல்களிலும்,
பட்டினியின் நகக் கீறல்களிலும்
நத்தையாய் நகர்த்தும் வாழ்க்கை
எங்களில் சிலருக்கு !

இவையெல்லாம்
நன்கறிவீர்கள் !

ஆனால்
பைபிள் எங்களை
செல்லப் பிராணிகளென
கொஞ்சிக் கொள்ளவில்லை!
நன்றியின் அடையாளமென
அரவணைத்துச் செல்லவில்லை.

நீ
கோலுடன் வர
நானென்ன நாயா ?
என கோலியாத் கொக்கரித்தான் !
நாயென
சொன்னதால் தான் அழிந்தான்
என
பொய்யாய்ச் சொல்லிக் கொண்டேன் !

நானென்ன
யூதாவுக்கு வாலாட்டும் நாயா
என
என் வஞ்சகமற்ற வாலாட்டுதலைப்
பழித்ததால் தான்
அப்னேர் கொல்லப்பட்டான்
என
மாயையாய் நினைத்துக் கொண்டேன் !

எனினும்
உண்மை என்னை
உறங்கவிடவில்லை !

வயல்வெளியில் கிடக்கும்
தூய்மையற்ற இறைச்சியை
நாய்க்குப் போடுங்கள்
என்றார் மோசே !

நகரில் மடியும்
எரோபாம் மக்களை
நாய்கள் தின்னும்
என்றார் அகியா !

நகரில் மடியும்
பாசாவின் மக்களை
நாய்கள் தின்னும்
என்றார் ஏகூ !

நகரினில் மடியும்
ஆகாபைச் சேர்ந்தவர்களை
நாய்கள் தின்னும்
என்றார் எலியா !

என்
உணவின் உன்னதத்தைப்
பிணத்தின்
பந்தியில் வைத்ததில்
வருத்தம் உண்டு எனக்கு !

அந்த
வருத்தத் தீயில்
எண்ணை வார்த்துப் போனார்
சாலமோன் !
தான் கக்கியதை தானே தின்ன வரும்
நாய் என்று நகைத்தார்.

எதிரிகளின்
வெறிகொண்ட வேட்கைக்கும்,
அர்த்தமற்ற சத்தத்துக்கும்,
என்னை
உதாரணமாக்கி
பெயர் வாங்கிக் கொண்டார் தாவீது !

அன்பின் சிகரமாய்
இயேசு கூட
பிள்ளைகளின் உணவை எடுத்து
நாய்க்குப் போடுதல்
முறையல்ல என்றார் !

நிராகரிப்பின் நிலத்திலும்
நம்பிக்கையின்
முளைகளைப் பிறப்பிப்பதில்
பரவசமுண்டு எனக்கு !

ஒரு விசுவாசப் பெண்ணை
வரலாற்றில் வரைந்து வைக்க
நாய் தான்
உதவியது என உளம் மகிந்தேன்.

நான் ஒரு
செத்த நாய் போன்றவன்
என,
மெபிபோசேத்து பணிவைக் காட்டி
பிரமிக்க வைத்ததில்
பெருமிதம் கொள்கிறேன் !

எனினும்
என்னைத் தலைநிமிரச் செய்யும்
பெரும் நிகழ்வு ஒன்றுண்டு !

மனிதனின் மகத்துவத்தைக் காண
நாயின் இயல்பை
நாடிய விநோதம் அது !

கிதியோனிடம்
கடவுள் சொன்னார்,

நாய்போல நீரை
நாவால் நக்கிக் குடிப்போரை
போருக்குத் தயாராக்கு,
மற்றோரை
ஊருக்கு திருப்பியனுப்பு !

*

சேவியர்

 

Posted in Articles, Desopakari

புதிய விடியலுக்கான தேடல்

புதிய விடியலுக்கான தேடல்

தேடல்களே வாழ்க்கையைக் கட்டமைக்கின்றன. நாம் எதை நோக்கி ஓடுகிறோம், எதைத் தேடுகிறோம் என்பது நமது எதிர்காலத்தைக் நிர்ணயிக்கிறது. சரியான இலட்சியங்களை உடையவர்கள் சரியான தேடல்களைக் கொண்டிருக்கிறார்கள்.  

தேடல் இல்லாத வாழ்க்கை இல்லை. என் வாழ்க்கையில் எதையுமே நான் தேடவில்லை என யாரும் சொல்ல முடியாது. குறைந்த பட்சம் ஒரு நிம்மதியான வாழ்வுக்கான தேடலாவது நமக்குள் உறைந்து கிடக்கிறது என்பது தான் நிஜம்.  

இருளின் பள்ளத்தாக்குகளில் கருப்பு விரல்கள் நெரிக்கும் கும்மிருட்டில் உழலும் மக்களுக்கு, எங்கேனும் தெரியும் ஒரு சின்ன வெளிச்ச விரலே தேடலாய் இருக்கிறது. அவர்களுடைய  தேடல் இருக்கைகளல்ல, பருக்கைகள். வறுமையின் வயிறுகளில் விழுகின்ற சில சோற்றுப் பருக்கைகளே அவர்களுடைய தேடல்கள். அந்த மின்மினி வெளிச்சத்தின் மெல்லிய பாதைக்காக அவர்கள் நாளெல்லாம் அந்த இருட்டுப் பள்ளங்களில் இலக்கில்லா யுத்தம் செய்கின்றனர்.

நீள்கடலின் யாத்திரையில் திசை தொலைந்த பாய்மரக் கப்பலுக்கு, எங்கேனும் தெரிகின்ற ஒரு சின்ன கலங்கரை விளக்கொளியே தேடலாய் இருக்கிறது. அச்சமூட்டும் ஆழியின் அசைவுகளும், பதட்டத்தில் படபடக்கும் பாய்மரத் பாய்களும், சுழன்றடிக்கும் காற்றின் பயமூட்டும் பெருமூச்சும் அவர்களை அலைக்கழிக்கின்றன. அவர்களுடைய தேடல் சுழன்றடிக்கும் கலங்கரையின் சிறு பார்வை மட்டுமே.

நோய்களின் குரூரத் தாக்குதலில் நிலைகுலைந்து கிடக்கும் மனுக்குலத்துக்கு தேடல் என்பது அந்த நோயின் வலையிலிருந்து வெளிவருகின்ற தருணமே. கண்ணுக்குத் தெரியாத கிருமி ஒன்று இன்று கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டுகிறது. நல்லரசு வல்லரசு என்றெல்லாம் மார்தட்டியவர்கள் வீதிகளில் நின்று வானம் பார்த்து வாய் திறக்கிறார்கள். சாதி மத இன பேதங்களையெல்லாம் தூக்கி வீசிவிட்டு சமத்துவமாய் எல்லோரையும் சாய்க்கிறது கிருமி. இன்றைய மனுக்குலத்தின் தேடல் நோய்க்கான நிவாரணி !

கல்வாரிப் பயணத்தில் இயேசு சிலுவை சுமந்து சென்றார். இன்று மனுக்குலமே ஒன்றிணைந்து ஒரு கல்வாரிப் பயணத்தை மேற்கொள்கிறது. ஒரு துயரத்தின் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. மருத்துவத்தின் ஜாம்பவான்கள் என மார்தட்டியவர்கள் கையேந்துகிறார்கள். சர்வாதிகாரத்தின் சக்கரவர்த்தியாய் குரூரம் காட்டியவர்கள் காற்று புகா அறைகளுக்குள் பதுங்கிக் கிடக்கின்றனர். தேடல், விடியலை நோக்கி விழித்துக் கிடக்கிறது.

அதிகாலையிலேயே எழுந்து இயேசுவின் கல்லறை நோக்கி ஓடியவர்கள் வெளிச்சத்தின் தரிசனத்தைப் பெற்றார்கள். இருளின் கதவுகள், வெளிச்சத்தின் சாவிகளால் திறக்கப்பட்டன. தேடல் அவர்களின் வாழ்க்கையில் உயிர்ப்பின் பிரவாகத்தை ஊற்றி நிரப்பியது.

நள்ளிரவில் எழுந்து இயேசுவைத் தேடிச் சென்ற நிக்கோதேமு, மீண்டும் பிறப்பதை அறிந்து கொண்டார். பாவத்தில் புதைபடுவதல்ல, புனிதத்தில் முளைத்தெழுவதே முக்கியம் என்பதை அறிந்து கொண்டார். இரவுக்குள் விழித்திருந்த வெளிச்சமாம் இயேசு அவருக்கு வாழ்வின் வாசலைக் காட்டினார்.

சக்கேயுவின் தேடல் இயேசுவைப் பார்ப்பதாய் இருந்தது. இயேசுவைப் பார்த்த அவரை, இயேசு பார்த்தார். வேடிக்கை பார்க்க நினைத்தவர் சுயத்தைப் பார்த்தார். மரத்தின் மேலிருந்து பார்க்க நினைத்தவர், மனத்தின் உள்ளே சென்று பார்த்தார். பின் அவரது தேடல் இயேசுவைப் பார்ப்பதாக அல்ல, இயேசுவோடு வாழ்வதாக மாறியது. இலைவாழ்வை விட்டு விட்டு நிலை வாழ்வை நோக்கிப் போவதாக இருந்தது.

இயேசு வாழ்ந்த காலத்தில் பலர் இயேசுவைத் தேடிச் சென்றார்கள். இயேசுவின் தொடுதல் அவர்களது தேவையாய் இருந்தது. இயேசுவின் பார்வை அவர்களின் தேவையாய் இருந்தது. இயேசுவின் ஒற்றைச் சொல் அவர்களின் தேவையாய் இருந்தது. இயேசுவின் வார்த்தைகள் அவர்களது தேவையாய் இருந்தது. தேடலில் இயேசுவைச் சந்தித்தவர்கள் புதிய விடியலுக்கான வாசலுக்குள் நுழைந்தார்கள். 

அவர்களே ஆதிகாலத் திருச்சபையின் தூண்கள். இயேசுவால் பார்வை பெற்றவர்கள் இயேசுவைப் பற்றிய வெளிச்சக் கதைகளை ஊரெங்கும் பரப்பினார்கள். இயேசுவால் ஊனம் நீங்கியவர்கள் இயேவின் வல்லமையை தெருக்களெங்கும் விவரித்து நடந்தார்கள். இயேசுவால் அங்கீகாரம் பெற்றவர்கள் இயேசுவின் மகிமையை பறைசாற்றி நடந்தார்கள். இவர்கள் இயேசுவைத் தேடியவர்கள் மட்டுமல்ல. இயேசுவை பிறர் தேட வைத்தவர்களும் கூட ! இவர்களின் தேடலின் விடை, பலருடைய தேடலின் துவக்கமாய் மாறியது.

நமது தேடல் எங்கே இருக்கிறது ? நமது இலட்சியங்கள் எங்கே இருக்கின்றன ? நமது கனவுகள் எந்த இடத்தில் காத்திருக்கின்றன. 

கொஞ்சம் ஆழமாகத் தேடிப் பார்த்தால், நமது தேடல் எல்லாமே நமது சுயநலத்தின் பக்கங்களில் தான் உலவிக் கொண்டிருக்கின்றன. நமது வேலைகளின் அடுத்தடுத்த நிலைகளை நோக்கிய தேடல்கள் ஒரு பக்கம், நமது குழந்தைகளின் எதிர்கால வளமையை நோக்கிய தேடல் ஒரு பக்கம், நமது தனி மனித வாழ்வில் அடைகின்ற பெயர் புகழ் போன்றவற்றை நோக்கிய தேடல் ஒரு புறம் என தேடல்களின் முடிவு சுயநல லாபங்களாகவே இருக்கின்றன.

இயேசுவோ நமது தேடல்கள் நீதிக்கான பசி தாகமாகவும், ஏழைமீது கொள்ளும் கரிசனையாகவும், இரக்கம் செய்ய வேண்டுமெனும் தாகமாகவும், அமைதியை ஏற்படுத்தும் ஆவலாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறார். அத்தகைய தேடல்களே நம்மை ஆன்மிகத் தளத்துக்குள் அழைத்துச் செல்கின்றன. புதிய விடியல் என்பது அடையாளம் அல்ல, அடைக்கலம். 

புதிய விடியலுக்கான தேடல் என்பது, நாம் தேடுவது மட்டுமல்ல, பிறருடைய தேடலில் நாம் அகப்படுவது ! ஒரு ஏழைத் தோழனின் தேவைக்கான தேடலில் நாம் சந்திக்கப்பட்டு அவரது தேடலை நிறைவேற்றினால் அங்கே புதிய விடியல் உருவாகிறது. நியாயம் மறுக்கப்பட்ட ஒரு இயலாமையின் தேடலில் நாம் அகப்பட்டு அவர்களுக்கு நியாயத்தை வழங்க முடிந்தால், அங்கே புதிய விடியல் உருவாகிறது. 

ஏழை லாசர் வாசலருகே விழுந்து கிடந்தான். ஆனால் பணக்காரனின் தேடலோ சுகபோக வாழ்க்கையாக இருந்தது. இலாசரின் தேவையின் தேடல்களில் பணக்காரன் அகப்படவேயில்லை. ஏழையின் தேடல்கள் விடையற்ற கேள்விகளோடே முடிந்து போனது. நிலைவாழ்வின் அவனுக்கு இருக்கை கிடைத்தது. ஏழையின் தேடலில் அகப்படாத பணக்காரனோ நெருப்பின் கரங்களுக்குள் நெறிக்கப்பட்டான்.

குற்றுயிராய் அடிபட்டுக் கிடந்தவனுடைய தேடலில் லேவியோ, குருவோ அகப்படவில்லை. அவர்கள் தங்களுடைய மதப் பணிகளின் மீது மிதமிஞ்சிய பற்று வைத்திருந்தார்கள். மனிதப் பணிகளின் மீது இரக்கமற்றவர்களாக இறந்து கிடந்தார்கள். அந்த இயலாமையின் தேடலில் பிற இனத்தவர் அகப்படுகிறார். யார் அயலான் எனும் கேள்விக்கு யுகங்கள் கடந்தும் அடையாளமாய் இருக்கிறார். 

புதிய விடியலுக்கான தேடல் நமது தேடல்கள் மட்டுமல்ல, பிறருடைய தேடல்களில் நாம் சந்திக்கப்படுவதுமே என்பதை இறைமகன் மீண்டும் மீண்டும் தனது போதனைகளில் தெளிவாக்குகிறார். 

தேடல்களே நமது வாழ்க்கையைக் கட்டமைக்கின்றன.

பிறரின் தேடல்களில் அகப்படுவதே வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகின்றன.

நமது தேடல்கள் இறைவன் விரும்பிய வகையில் இருக்கிறதா என்பதைப் பரிசீலனை செய்வோம், 

பிறருடைய தேடல்களை நிறைவேற்ற நாம் உடனிருப்போம்.

*

சேவியர்

Posted in Animals Birds, Articles, Bible Animals

உயர்திணையான அஃறிணைகள் – கழுகு

உயர்திணையான அஃறிணைகள்

+

கழுகு !

+

எங்கள்
பெயரைச் சொல்லும்போதே
உங்களுக்குள் ஒரு
வீரத்தின் அலகு
விழித்துக் கொள்கிறதா ?

இருளையும் அறுத்தெறியும்
ஒரு
கூர்மையான பார்வை
குதித்தெழுகிறதா ?

அது தான் எங்கள்
அடையாளம் !
மேகத்தைப் போல
மென்மையாய் மிதக்கவும்,
மின்னலைப் போல
சீறிப் பாயவும் பழகியிருக்கிறோம்.

இயற்கை என்னை
அண்ணாந்து பார்க்கும் போது
விவிலியம்
மட்டும் விலக்கியே வைக்குமா
என்ன ?

உயர்ந்த இடத்தில்
உறைவிடம் கொள்வது
கடவுளும்
நானும் தானே !

எனது இறக்கையில்
இஸ்ரயேலர் பயணித்ததாய்
கடவுள்
உவமை சொன்னபோது
உவப்படைந்து சிலிர்த்தேன்.

நான்
குஞ்சுகளின் மேல்
படர்ந்து அணைப்பதை
இறைவனின் அரவணைப்புடன்
ஒப்பீடு செய்தபோது
பரவசத்தில் படபடத்தேன்

ஆண்டவர் மீது
நம்பிக்கை வைப்பவருக்கே
ஆற்றல் ஊற்றெடுக்கும் !
அவர்கள்
கழுகென வானில் உயர்வர் , என
கனப்படுத்துகையில் கரைந்தேன்.

பைபிள் என்னை
பலத்தின் பதக்கமாய்ப்
பதுக்கிப் பாதுகாக்கிறது !

சூறாவளித் தேர்களில்
பூட்டப்பட்ட
அதிசயக் குதிரைகள் மட்டுமே
என்னை விட
வேகமாய்ப் பறப்பதாய் அது
வியப்பினை வரைகிறது.

நான்
வேட்டையில் வித்தகன் !
உங்கள்
வயிறுகளுக்கான விருந்தல்ல !
அந்த வகையில்
விலக்கப்பட்டதால் மகிழ்கிறேன்.

பிணம் எங்கேயோ
அங்கே
கழுகுகள் கூடும் என்றார் இயேசு !
கவலைப்படவில்லை
பாவத்தைப் பிரித்தெறியும்
பணியாய் எடுத்துக் கொள்கிறேன்.

காரணம்
பழுதைப் பிய்த்தெறிவதிலும்
புதுப்பித்தலிலும்
நான் புகழ் பெற்றவன்.

முளைப்பதற்காகவே
மொட்டையடித்துக் கொள்பவன்.
அதனால் தான்
என் இளமையைத்
தாவீதும் இசைக்கிறார்.

ஒரு சிறகிலிருந்து
ஓர் இறகு உதிர்ந்தால்,
மறு சிறகிலிருந்து
ஓர் இறகை நான் பிடுங்கி எறிவேன்,
சமநிலை மீது
அதீத கவனம் எனக்குண்டு !

அதனால் தான்
பாவம் செய்யும் உறுப்பை
துண்டித்துப் போடச் சொன்ன
இயேசுவின் போதனை
பிரியம் எனக்கு !

இலக்கின் மீது கவனம் வைத்து
கூர்நகங்களால்
பற்றிக் கொண்டால்
இரையை
எளிதில் விட்டு விடுவதில்லை !
இறையை விட்டு விடா உங்கள்
விசுவாசம் போல !

வலிகளில்லாமல்
மீட்பு இல்லை என்பதை
எங்கள்
குஞ்சுகளுக்குக் கூட்டிலேயே
கற்றுக் கொடுக்கிறோம் !

இறைவனின் படைப்பின்
அழகு
கழுகு தானே !

விவிலியத்தின்
புரியாத காட்சிகளிலும்
நானே
புனையப்பட்டிருக்கிறேன் !

எசேக்கியேலின்
கழுகு முக உயிரினம்,
பல வண்ண இறக்கை,
மிகுந்த இறகுள்ள இறக்கை,
எனும் காட்சிகள்
என்னையே கலங்கடிக்கின்றன.

விரட்டப்பட்ட
நெபுகத்நேசரின் தலைமயிர்
கழுகின் இறகுபோல மாறியதாய்
தானியேல் சொன்னார்.

அவர் சொன்ன
கழுகின் சிறகுடைய சிங்கம்
என்
கனவிலும் நுழைந்து வந்து
நிலைகுலைய வைக்கும்.

விவிலியம் என்னை
புதிர் விளையாட்டின்
புள்ளிகளோடு
புரண்டு விளையாட விடுகிறது.

மனிதர்கள்
என்னைப் பேசினாலும்
நான்
மிகவும் மகிழ்ந்த கணம்
மனிதர்கள் போல நான் பேசியதே !

அதுவும்
மனித இதயங்களைக்
கிழித்தெறியும் வார்த்தை அலகுகளோடு
நான் சொன்னேன் !

“ஐயகோ !!
உலகில் வாழ்வோருக்குக்
கேடு வரும் !”

*

சேவியர்

 

Posted in Articles, Sunday School

Kids SKIT – இயேசுவைப் போல செயல்படு

*

காட்சி 1 

( ரயன் ஆன்லைன் வகுப்பில் பாடம் படித்துக் கொண்டிருக்கிறான் )

ரயன் : ( புத்தகத்தில் குறிப்பை எடுத்தபடி படித்துக் கொண்டிருக்கிறான் )

அம்மாவின் குரல் : ரயன்.. கிளாஸ் ஸ்டார்ட் ஆயிடுச்சா ?

ரயன் : ஆமாம்மா… 

அம்மாவின் குரல் : சரி சரி.. வீடியோவை ஆஃப் பண்ணாம கவனமா படி சரியா..

ரயன் : ஓக்கேம்மா… டிஸ்டர்ப் பண்ணாதீங்க… 

( கொஞ்ச நேரம் கழிகிறது )

ரயன் : ம்ம்ம்.. ரொம்ப போர் அடிக்குது.. இந்த கொரானா வந்தாலும் வந்துது… டிஜிடல் கிளாஸ் ரொம்ப போர் அடிக்குது.

( அப்போது ஒரு கரிய உருவம் அருகே வந்து நிற்கிறது )

கரிய உருவம் : ரயன்… அந்த வீடியோவை ஆஃப் பண்ணு…. அப்போ நீ என்ன பண்றேன்னு யாருக்கும் தெரியாது. 

ரயன் : சே..சே.. அப்படி பண்ண கூடாது. அது எகைன்ஸ்ட் த ரூல்.. டீச்சர் சொல்லியிருக்காங்க.

க உ : ஷப்பா.. உன் தொந்தரவு தாங்க முடியல… நீ கிளாஸ்ல இருக்கும்போ பக்கத்துல இருக்கிறவன் கிட்டே பேசறதில்லையா.. அது மாதிரி தான்.. இதுக்கு போய் ரொம்ப பிகு பண்ணிக்கிறே… ம்ம்ம்… 

ரயன் : ம்ம்ம் அதுவும் நல்ல பாயிண்ட் தான்…

க.உ : எஸ்.. ஜாலியா இரு… டீச்சரால அடிக்கவும் முடியாது…. திட்டினா நீ மியூட் பண்ணிக்கலாம்… எவ்ளோ வசதி… 

ரயன் : ம்ம்… பாயிண்ட் நோட் பண்ணிகிட்டேன். வீடியோவை ஆஃப் பண்றேன்

( மனசாட்சி : ஆனா.. மம்மி வீடியோவை ஆஃப் பண்ணக் கூடாதுன்னு சொன்னாங்களே )

க.உ : ஹா..ஹா.. மம்மிக்கு தெரியவா போவுது… கிளாஸ்ல பண்றதெல்லாம் மம்மிட்ட கேட்டுட்டா பண்றே… ஜஸ்ட் இக்னோர் மேன்…. 

ரயன் : ஆமா.. அதுவும் சரி தான். 

( ரயன் வீடியோவை ஆஃப் பண்ணுகிறான். புக்கை ஓரமாய் வைக்கிறான். ரிலாக்சாக இருக்கிறான்.  பக்கத்திலிருக்கும் கதை புத்தகங்களைப் புரட்டுகிறான்… )

( கிளாஸ் முடிகிறது ) 

ரயன் : தேங்க்யூ மேம்… ….( மெதுவாக ) ஷப்பா.. ஒருவழியா.. முடிஞ்சுது… 

காட்சி 2 

( ரயன் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறான் ) 

அம்மா : என்ன ரயன் .. கிளாஸ் முடிஞ்சுச்சா…

ரயன் : எஸ்…மா.. எல்லாம் முடிஞ்சுச்சு…

அம்மா : சரி, ஹோம் வர்க் எல்லாம் பண்ணு… எல்லாம் முடிச்சப்புறம் விளையாடினா போதும்…. 

ரயன் : இப்போ தாம்ம்மா கிளாஸ் முடிஞ்சுது.. கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க விடுங்க.. எப்பவும் படி படின்னா என்னம்மா நியாயம்…. 

அம்மா : சரி..சரி.. கொஞ்ச நேரம் விளையாடு. பட்.. நான் வேண்டாம்ன்னு சொன்ன அந்த கேம்ஸ் எல்லாம் விளையாடாதே சரியா.. அதுல ஒரே வலயன்ஸ்.. அதெல்லாம் ஏசப்பாக்கு புடிக்காத விஷயம்.. சரியா… 

ரயன் : ஆமா.. இயேசப்பா வீடியோ கேம். விளையாடினாரா என்ன …

அம்மா : அவரு விளையாடியிருந்தா இந்த விளையாட்டை விளையாடியிருக்க மாட்டாருடா…. அன்பைப் போதிக்கிற இயேசு வெட்டு, குத்து, துப்பாக்கி சூடு எல்லாமா பண்ணுவாரு. நல்ல அறிவுக்கு தீனி போடற கேம்ஸ் இருந்தா விளையாடு. 

ரயன் : ம்ம்ம்.. சரி…சரி… விளையாடற நேரத்துலயும் அட்வைஸ் மூட்டையை அவுத்து உடாதீங்க.

அம்மா : நல்லது சொன்னா உனக்குப் புடிக்காதே… ம்ம்… கொஞ்ச நேரம் விளையாடிட்டு சாப்பிட வா… டைம் ஆகுது.

கருத்த உருவம் : டோண்ட் வரி ரயன்…. அம்மாக்கள்ன்னா இப்படி பேசிட்டே தான் இருப்பாங்க. நம்ம யூத் பசங்க பத்தி அந்த ஓல்ட் மக்களுக்கு புரியாது. நீ தூள் கிளப்பு…. கேம்ன்னா கன் இருக்கத் தான் செய்யும், பின்னே கைத்தடியா இருக்கும்… நீ என்ஞாய்..

( ரயன் புன்னகைக்கிறான் ) 

காட்சி 3 

(ரயன் ஐபேடில் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கிறான் )

அம்மா : தம்பி.. என்ன ஹோம் வர்க் எல்லாம் முடிச்சுட்டியா ? என்ன பாக்கறே

ரயன் : ஒரு வீடியோ பாக்கறேம்மா… நத்திங்… 

அம்மா : என்ன வீடியோன்னு தான் கேட்டேன்.

ரயன் : யூடியூப் காமெடி வீடியோஸ்மா… ஏன் எல்லா டீட்டெயிலையும் கேட்டுட்டே இருக்கீங்க

அம்மா : நம்ம டைமை எல்லாம் இப்படி வேஸ்ட் பண்ணக் கூடாதுப்பா.. அதனால சொன்னேன். கொரோனா வந்து வீட்டுக்குள்ள ஒதுங்கினாலும் ஒதுங்கினீங்க எப்பவுமே… டிஜிடல் டிஜிடல் டிஜிடல்… 

ரயன் : மம்மி.. உங்களுக்கு என்ன தான் வேணும்.. கொஞ்சம் நிம்மதியா இருக்கவே விட மாட்டீங்களா… 

அம்மா : தம்பி.. ஒழுங்கா நல்ல யூஸ்புல் ஆன வீடியோஸ் பாக்கறதா இருந்தா கொஞ்ச நேரம் பாரு. இல்லேன்னா, உனக்கு இதெல்லாம் தரமாட்டேன். 

ரயன் : சரி..சரி… நான் நல்லது மட்டும் தான் பாப்பேன்… 

அம்மா : எத்தனையோ பைபிள் மூவீஸ் இருக்கு, பைபிள் ஸ்டோரீஸ் இருக்கு, நல்ல தீம் உள்ள வீடியோஸ் இருக்கு.. அதெல்லாம் குடுத்தேன்ல, அதையெல்லாம் விட்டுட்டு யூடியூப்ல தேவையில்லாத வீடியோ பாத்து டைம் வேஸ்ட் பண்ணாதே சரியா…

ரயன் : அம்மா… எப்பவுமே கடவுளை நினைச்சுட்டே இருக்கணும்னு சொல்லாதீங்க, அப்புறம் கடவுளும் போரடிச்சுடும், கடவுளுக்கும் போரடிச்சுடும்.

அம்மா : உலகத்துலயே போரடிக்காத விஷயம் கடவுளை நினைக்கிறது தான்பா.. நீ என்ன வீடியோ பாத்தாலும் , “இப்போ இந்த tab கடவுள் கிட்டே இருந்தா இதைப் பாப்பாரா ?” ந்னு ஒரு கேள்வி கேட்டுட்டு பாரு.. சரியா… 

ரயன் : ஆரம்பிச்சுட்டீங்களா…  எனக்கெல்லாம் தெரியும் நான் பாத்துக்கறேன்.

( அம்மா போகிறார் )

 ( கருப்பு உருவம் வருகிறது )

க.உ : உட்டா உங்க அம்மா வீட்டை சர்ச் ஆக்கிடுவாங்க போல, ஒரே பிரசங்கமா இருக்கு. நல்ல வேளை நீ அவங்க பேச்சைக் கேக்காம என் பேச்சைக் கேக்கறே..

காட்சி 4 

( மாலை நேரம் ) 

அம்மா :  ( அன்புடன் அருகில் அமர்ந்து ) பிரேயர் டைமாச்சு… மொபைலை எல்லாம் ஓரமா போட்டுட்டு.. பைபிள் வாசி. எவ்ளோ அதிகாரம் இன்னிக்கு வாசிச்சே… எப்பவும் இப்படி மொபைலும் கையுமா இருக்கிறது கடவுளுக்குப் புடிக்குமா என்ன ? இதெல்லாம் விட்டுட்டு நல்ல பிள்ளையா இருப்பா… 

ரயன். :மம்மி.. நான் இப்போ என்ன கெட்ட பையனாயிட்டேன்… யாரையாச்சும் அடிச்சேனா, திருடினேனா, பேர் வேர்ட்ஸ் பேசினேனா… இல்லையே.. ஜஸ்ட் டைம் பாஸுக்கு டிஜிடல் யூஸ் பண்றேன் அவ்ளோ தானே.

அம்மா : டைமை வேஸ்டா பாஸ் பண்ண வேண்டாம் தம்பி. கடவுள் நமக்கு தந்திருக்கிற ஒவ்வொரு நிமிசமும் ரொம்ப மதிப்புள்ளது. இயேசு தன்னோட நேரத்தை எப்படி செலவிட்டாரு தெரியும்ல. ஒரு நிமிசம் கூட அவரு வேஸ்ட் பண்ணல. அதிகாலைல செபிச்சாரு, நடு ராத்திரியில தண்ணில நடந்து போனாரு, மூணு நாளு சாப்பாடே இல்லாம போதிச்சாரு இப்படி அவரு டைமை வேஸ்ட் பண்ணவே இல்லை. அப்படி தான் இருக்கணும் தம்பி.

ரயன் : ம்ம்ம்.. பைபிளெல்லாம் நாளைக்கு படிக்கிறேன்ம்மா.. இன்னிக்கு தூக்கம் வருது.

அம்மா : பிரேயர் பண்ணிட்டு தூங்கு… 

ரயன் : பிரேயர் நாளைக்கு சேத்து பண்ணிக்கறேன்…. 

அம்மா : நாம இயேசுவுக்கு பிரியமான வாழ்க்கை வாழ்ந்தா தான்பா.. இயேசுவுக்கு சந்தோசம். நாம வாழறது இந்த உலகத்துல உள்ள சின்னச் சின்ன சந்தோசத்துக்காக இல்லை, கடவுளோடு வாழப் போகிற பெரிய பெரிய சந்தோசத்துக்காக…

ரயன் : அம்மா.. மார்னிங் டூ நைட் இதே தானாம்ம்மா.. எவ்ளோ நாள் தான் இப்படி சொல்லுவீங்க

அம்மா : ( சிரித்தபடி ) நீ கேட்டு அதன்படி நடக்கிற வரைக்கும் சொல்வேன்பா…

ரயன் : ஆள விடுங்க.. தூங்க போறேன்

காட்சி 5 

( ரயன் விளையாடிக்கொண்டிருந்த போது ரெய்னா வருகிறாள் )

ரெய்னா : டேய்.. ரயன்.. கேள்விப்பட்டியா ? 

ரயன்  : ( விளையாடியபடியே ) என்ன கேள்விப்பட்டியா  ? கோயில்பட்டியா ந்னு ? விஷயத்தைச் சொல்லு.

ரெய்னா : அருண் உன்னோட பிரண்ட் தானே..

ரயன் : ( விளையாடிக்கொண்டே ) ஆமா.. என் பிரண்ட் தான்.. என் குளோஸ் பிரண்ட்…  

ரெய்னா :  உனக்கு விஷயம் தெரியாதா 

ரயன் : ஹேய்.. ஓவர் பில்டப் குடுக்காம விஷயத்தை சொல்லு… விளையாட்ல முக்கியமான ஸ்டேஜ்ல இருக்கேன்.

ரெய்னா : டேய்.. அவனுக்கு கொரோனாவாம்…. 

ரயன் ( அதிர்ச்சியாகி ) : என்ன சொல்றே… 

ரெய்னா : ஆமா.. ரெபா தான் சொன்னா… கொஞ்சம் சீரியசாயிருக்குன்னு சொன்னா..

ரயன் : ( போனை கீழே வைத்து விட்டு எழும்புகிறான் ) என்ன சொல்றே.. கொரோனாவா.. அவனுக்கா

ரெய்னா : ஆமாடா… ஐசியூ ல வெச்சிருக்காங்களாம்…

( ரயன் பதட்டத்தில் அங்குமிங்கும் நடக்கிறான் .. தனது இன்னொரு நண்பனுக்கு போன் பண்ணி விஷயத்தைக் கேட்கிறான். அவனும் அது உண்மை என சொல்கிறான் )

ரயன் : இப்போ என்ன பண்றது ? இப்போ போகவும் முடியாதே…. அம்மா.. அம்மா…

( அம்மா வருகிறார் )

அம்மா : என்னடா கத்தறே… வேலை செய்திட்டிருக்கேன்ல.

ரயன் : அம்மா… அருணுக்கு கொரோனாவாம்… ஐசியூல இருக்கானாம்.

அம்மா : ஐயையோ.. நல்ல பையனாச்சே… எப்படி ? வெளியே எங்கேயும் சுத்திட்டிருந்தானோ ? 

ரயன் : அம்மா.. அவனை போய் பாக்கலாமா ?

அம்மா : நோ..நோ.. நாம வெளியே போக முடியாது. அதுவும் இல்லாம ஹாஸ்பிடல்ஸ் க்கு இப்போ போகவே முடியாது. 

ரயன் :  அம்மா.. அவனை பாக்கணுமே.. என்னோட பெஸ்ட் பிரண்ட்.. அவனுக்கு ஒண்ணும் ஆயிட கூடாதுன்னு பயமா இருக்கு.

அம்மா : அவனுக்கு இயேசுவைப் பத்தி சொல்லியிருக்கியா ? அவனுக்கு ஒருவேளை ஏதாச்சும் ஆயிடுச்சுன்னா என்ன ஆவான் ? எங்கே போவான்  ஏதாச்சும் தெரியுமா டா ?

ரயன் : அம்மா .. நாங்க அதைப்பத்தியெல்லாம் பேசினதில்லை. இப்படியெல்லாம் ஆகும்ன்னு தெரியுமா ? ஜாலியா தான் இருப்போம். 

அம்மா : பாரு.. இப்போ அவனை நீ போய் பாக்க கூட முடியாத நிலமைல இருக்கே. எப்போ யாருக்கு என்ன நடக்கும்ன்னு தெரியாதுப்பா.. அதனால தான் நாம ஒவ்வொரு நிமிசமும் கவனமா வாழணும்.

ரயன் : ( கவலையுடன் ) இப்போ நான் என்னம்மா பண்ண 

அம்மா : கவலைப்படாதேப்பா.. நீ போய் பிரேயர் பண்ணு. உன் பிரண்ட் சீக்கிரமே குணமாகி வரணும்ன்னு கடவுள் கிட்டே கேளு. 

ரயன் : சரிம்மா

கருப்பு உருவம் : ரயன்.. டோண்ட் வரி… அவனுக்கு ஒண்ணும் ஆவாது. அவனுக்கு கொரோனா வந்தது அவனோட தப்பு. அதுக்காக எல்லாம் நீ பிரேயர் பண்ணி உன்னோட டைமை வேஸ்ட் பண்ணாதே… தேவையே இல்லை… லெட்ஸ் ப்ளே

ரயன் : நோ..நோ.. ஹி ஈஸ் மை பெஸ்ட் பிரண்ட். ஒரு பிரண்டுக்காக பிரேயர் பண்ணாத இன்னொரு பிரண்ட் இருக்கிறதே வேஸ்ட். 

காட்சி 6 

( ரயன் கவலையாய் இருக்கிறான்.. ரெய்னா வருகிறாள் )

ரெய்னா : என்னாச்சுடா ரொம்ப சோகமா இருக்கே..

ரயன் : இல்ல.. அருணை நினைச்சேன்.. 

ரெய்னா : ம்ம்.. நாம பிரேயர் பண்ணுவோம்.. கடவுள் பாத்துப்பாரு. 

ரயன் : எல்லாம் ஸ்மூத்தா போகும்போ நான் கடவுளைப் பற்றி நினைச்சுப் பாக்கவே இல்லை. இப்போ என்னடான்னா, கடவுளைத் தவிர வேற எதையும் நினைச்சுப் பாக்கவே முடியல.

ரெய்னா : அதான் ரியாலிட்டி. நாம தேவைக்கு கடவுளைத் தேடறோம். கடவுள் நம்மை தேடும்போ நாம டிஜிடல் விளையாட்டிலயோ, வீடியோலயோ, செல்பிலயோ மூழ்கிப் போயிடறோம்.

ரயன் : ம்ம்ம்… நீ சொல்றது சரி தான்.

ரெய்னா : நாம வாழ்க்கைல wwjd ந்னு மட்டும் ஒரு கேள்வியை கேட்டு எல்லாமே செஞ்சா இப்படி நாம எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.

ரயன் : wwjd யா ? அப்படின்னா ?

ரெய்னா : what would Jesus do ந்னு அர்த்தம். என்ன ஒரு செயலைச் செய்தாலும் அப்படி ஒரு கேள்வி கேட்டுட்டு அதன்படி செய்யணும். அப்போ நம்ம வாழ்க்கை கடவுளுக்குப் பிரியமானதா இருக்கும். நமக்கு என்ன நடந்தாலும் கடவுள் நம்மைப் பாத்துப்பாரு. நமக்கு அவரோட நிலைவாழ்வில நிச்சயம் இடமும் கிடைக்கும்.

ரயன் : நேற்றைக்கு நைட் பிரேயர் பண்ணும்பவே நான் முடிவு பண்ணிட்டேன். இனிமே தேவையில்லாம டைம் ஸ்பெண்ட் பண்ணாம கடவுளுக்காகவே வாழணும்ன்னும், அவருக்குப் புடிச்ச மாதிரியே வாழணும்ன்னும் முடிவு பண்ணிட்டேன்.

ரெய்னா : சூப்பர் ரயன். தாவீதை கடவுள் ‘என் இருதயத்துக்கு ஏற்றவன்’ ந்னு சொன்னாரு. அப்படி நம்மையும் அவரு சொல்லணும். அது தான் நம்ம இலட்சியமா இருக்கணும். 

ரயன் : சரிக்கா… இனிமே கண்டிப்பா WWJD ந்னு கேட்டு தான் வாழப் போறேன்.

ரெய்னா : எனக்கு ரொம்ப சந்தோசம் தம்பி. நீயும் கடவுளுக்குள்ள வரணும்ன்னு நான் டெய்லி ப்ரே பண்ணுவேன். நாம ரெண்டு பேருமே கடவுளோட சேர்ந்து நடக்கிறது தான் கடவுளுக்கும், எனக்கும், மம்மிக்கும் எல்லாருக்குமே சந்தோசமான விஷயம்.

ரயன் : சரிக்கா…  நான் அருணுக்காக தொடர்ந்து பிரே பண்ண போறேன் …

கருப்பு உருவம் : ஓ.. வெரி பேட்..வெரி பேட்… இந்த பையன் போற போக்கைப் பாத்தா நம்மளை கைகழுவி விட்டுடுவான் போலயே.. ஏதாச்சும் பண்ணணுமே…. ம்ம்ம்ம்

காட்சி 7 

( ரயன் பாட்டி வீட்டுக்கு போகிறான். கையில் காய்கறி கூடை. )

பாட்டி : என்னப்பா.. இந்த கொரோனா டைம்ல இங்க வந்திருக்கே…

ரயன் : இல்ல பாட்டி.. நீங்க தனியா இருக்கீங்க. என்ன தான் போன்ல பேசிக்கிட்டாலும், உங்களை நேர்ல பாத்து எப்படி இருக்கீங்கன்னு கேட்டுட்டு போலாம்ன்னு தான் வந்தேன். கொஞ்சம் பழம் காய்கறி எல்லாம் கொண்டு வந்திருக்கேன். 

பாட்டி : ரொம்ப சந்தோசம்பா.. 

ரயன் : பாட்டி.. நீங்க தள்ளியே நில்லுங்க பாட்டி. சோசியல் டிஸ்டன்சிங் வேணும்ல.. ( சிரிக்கிறான் ) 

பாட்டி : ம்ம்.. அதுவும் சரிதான்.. சரி, டீவி பாக்கறியா ? டீ போட்டு தரவா ?

ரயன் : டீவி எல்லாம் வேண்டாம் பாட்டி.. டீயும் வேண்டாம். 

பாட்டி : என்னாச்சு உனக்கு … பொதுவா டிவி, மொபைல் ந்னு அலைவே.. இப்போ அமைதியாயிட்டே..

ரயன் : ஒண்ணுமில்லை பாட்டி… தேவையில்லாம டைமை வேஸ்ட் பண்ண வேண்டாம்ன்னு தோணிச்சுது அதான். 

பாட்டி : வெரிகுட் டா பையா… கடவுள் நமக்கு காலத்தை எண்ணிக் குடுத்திருக்காரு, அதனால அதை எண்ணி எண்ணி தான் செலவு பண்ணணும்.

ரயன் : சரி பாட்டி.. உங்களுக்கு மெடிசின்ஸ் எல்லாம் இருக்கா ? வேற ஏதாச்சும் வாங்கிட்டு வரணுமா ?

பாட்டி : வேண்டாம்பா… எல்லாமே இருக்கு… உன்னை பாத்ததே ரொம்ப சந்தோசம். அக்கா எப்படி இருக்கா ?

ரயன் : எல்லாரும் நல்லா இருக்காங்க பாட்டி.

பாட்டி : சரிப்பா.. நீ கிளம்பு.. பத்திரமா போய்ட்டு வா…வீட்ல போனதும் போன் பண்ணு சரியா ?

ரயன் : சரி பாட்டி… 

காட்சி 8 

( ரயன் வீட்டில் அமர்ந்திருக்கிறான்.. நண்பர்கள் போன் பண்ணுகின்றனர்… )

போன் : டேய் ரயன்.. என்னடா ஆளையே காணோம்

ரயன் : இங்கே தாண்டா இருக்கேன்.. வேற எங்க போக முடியும்

போன் : இல்ல.. நீ ரோபிளாக்ஸ் விளையாடவும் வரலை, ஃபோர்ட்நைட் விளையாடவும் வரல.. ஏன் என்னாச்சு உடம்பு சரியில்லையா ?

ரயன் : சே..சே.. நத்திங்

போன் : அப்போ மனசு சரியில்லையா ?

ரயன் : இப்போ தான் மனசு சரியா இருக்கு.

போன் : அப்போ பதினோரு மணிக்கு வா.. வழக்கம் போல ஒரு நாலு மணி நேரம் பட்டையை கிளப்பலாம்

ரயன் : இல்லடா.. நான் இனிமே விளையாட வரல.. தேவையில்லாத விளையாட்டை விளையாடி டைம் வேஸ்ட் பண்ண விரும்பல.

போன் : நீ.. ஒரு வேஸ்ட் ஆயிட்டேடா.. இனிமே பேசாதே.. போனை வை.

( ரயன் போனை வைக்கிறான் ) 

இன்னொரு நண்பன் போன் பண்ணுகிறான்

போன் 2 : ரயன்… ஆல் ஈஸ் வெல் ?

ரயன் : எஸ்.. எஸ்… வெரி வெல். ஏன் கேக்கறே

போன் 2 : இல்ல ஆன்லைன்ல ஆளையே காணோம் அதான்..

ரயன் : ஹா..ஹா.. அதிகமா வாட்சப் வரதில்லை… டிக்டாக் எல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டேன்

போன் 2 : ஏண்டா.. ஏதாச்சும் எக்ஸாம் பிரிபேர் பண்றியா ? நீட்… மாதிரி… 

ரயன் : ஆமா… ஒரு பிராக்டிகல் எக்ஸாம்..கடவுளோட நடப்பது எப்படின்னு…

போன் 2 : கடவுளோட நடக்கவா ? உன் போக்கே சரியில்லையே…

ரயன் : சரியில்லாம இருந்ததை சரி பண்ணிட்டிருக்கேன்.. 

போன் 2 : அடப்பாவி.. நீயாடா இப்படி… பாரு.. என்ன பண்றேன்னு.. குரூப்ல போட்டு உன்னை கலாய்ச்சு கிழிக்கல என் பேரை மாத்திக்கறேன்.

ரயன் : ஏய்..ஏய்… சும்மா விளையாடாதே… லீவ் இட்.

( போனை வைக்கிறான் )

( அந்த நண்பன் வாட்சப் குரூப்பில் இவனைப் பற்றி கிண்டலான செய்திகளைப் போடுகிறான் ) 

( ரயன் அப்செட் ஆகிறான் ) 

கருப்பு உருவம் : பாரு…பாரு.. ஒரு நாள் கடவுளோட நடக்கணும்னு நினைச்சதுக்கே பிரண்ட்ஸ் கிண்டல் பண்றாங்க.. இதெல்லாம் தேவையில்லாத விஷயம். எவ்ளோ ஜாலியா இருந்தே.. இதெல்லாம் தேவையா ?

மனசாட்சி : ம்ம்ம்.. ஏன் இப்படி பண்றாங்க.. நான் நல்லா தானே இருக்கேன்.

க.உ : நீ நல்லா இருக்கியா ? அடப்பாவி நீ நார்மலாவே இல்லை. நீ ஒரு காமெடி பீஸ் ஆயிட்டே எல்லாருக்கும். உன்னை எல்லாரும் வெச்சு செய்றாங்க…

மனசாட்சி : அவங்களுக்கு வேற வேலை இல்லை

க.உ : உனக்கு தான் வேற வேலை இல்லை.. தேவையில்லாம உன் பேரையும், சந்தோசத்தையும் கெடுத்துக்கறே.. நல்லவனா இருந்து என்னத்த சாதிக்கக் போறே… 

மனசாட்சி : இல்ல.. நான் இயேசுவைப் போல வாழ்வேன்.. wwjd தான் என் கொள்கை.

க.உ : அப்படின்னா நீ இப்படியே இருக்க வேண்டியது தான். எவனும் உன் கூட பேசக் கூட மாட்டான். நீ சன்னியாசி மாதிரி திரி…. நீ போரான பார்ட்டி ஆயிட்டே.. வாழ்க்கையை அனுபவிக்க தெரியாதவங்க தான் இப்படியெல்லாம் பேசிட்டு இருப்பாங்க… நீ கன்ஃப்யூசனை விட்டுட்டு கலக்கு… 

( ரயன் யோசிக்கிறான் )  

காட்சி 9 

( ரெய்னா ரயன் )

ரெய்னா : ம்ம்.. என்னாச்சு.. ஏதோ டீப் திங்கிங்… 

ரயன் : இல்ல… இயேசுவைப் போல வாழறது யாருக்குமே புடிக்கல. உலகத்துல வாழும்போ உலகத்துல இருக்கிற மக்களுக்கே புடிக்காதபடி 

வாழ்றது கஷ்டமா இருக்கு. பி அ ரோமன் வென் யூ ஆர் இன் ரோம்.. தான் கரெக்ட்ன்னு தோணுது…

ரெய்னா : உலக பழமொழி எல்லாமே கிழ மொழிதான்.? எப்பவுமே கடவுளோட பிள்ளையா மாறினா நமக்கு கிண்டல் கேலி கிடைக்கிறத் சர்வ சாதாரணம். அதுக்கெல்லாம் பயந்து பின் வாங்கக் கூடாது. பி அ கிறிஸ்டியன் வெயர் எவர் யூ ஆர்.. இதான் புது மொழி. 

ரயன் : இல்ல.. என் குளோஸ் பிரண் ட்ஸே என்னை கிண்டல் பண்றாங்க.. அவங்களே என்னைப் புரிஞ்சுக்கலேன்னா எப்படி ?

ரெய்னா : அதையெல்லாம் கண்டுக்காதே.. கடவுள் உன்னோட இருப்பாரு…

ரயன் : ம்ம்… என் பிரண்ட்ஸ் எல்லாம்.. இப்படி பண்ணுவாங்கன்னு நினைக்கல.. பிரண்ட்ஸ் இல்லேன்னா என்ன பண்ண முடியும் ? 

ரெய்னா : தம்பி…. சிலுவையை சுமந்து கொண்டு என்னைப் பின்பற்றி வா..ந்னு இயேசு சொன்னது இதைத் தான். இயேசுவை பின்பற்ற முடிவெடுத்தா இப்படி நிறைய சிலுவைகள் உனக்கு வரும். அதையெல்லாம் தாண்டணும்

ரயன் : தாண்ட முடியலையே…

ரெய்னா : பிரேயர் பண்ணு.. கண்டிப்பா தாண்டலாம்.

ரயன் : ம்ம்.. எனக்கென்னவோ.. இப்படி வாழ்றது சரியா வரும்ன்னு தோணல.. நான்… இனிமே.. சாதாரணமா இருக்கப் போறேன்.. வித்தியாசமா இருந்து விலக்கப்படறதுக்கு பதிலா, சாதாரணமா இருந்து சந்தோசமா வாழப் போறேன்.

ரெய்னா : நோ..நோ..அப்படின்னா நீ கடவுளை கழற்றி விட்டுட்டு…  சாத்தானுக்கு சம்மதம் குடுக்கிற மாதிரி. வேண்டாம்.

ரயன் : லீவ் மீ.. அலோன்.. நான் வெளியே எங்கேயாச்சும் போயிட்டு வரேன்.

கருப்பு. உருவம் : இப்போ தான் நீ சரியான முடிவு எடுத்திருக்கே. எல்லா சந்தோசத்தையும் விட்டுட்டு சும்மா தேவையில்லாம WWJD … WWE ந்னு புலம்பிட்டு திரிஞ்சே.. கம் பேக்… வெல்டன் மை பாய்… 

காட்சி 10

(  ரயன் சாலையோரம் இருக்கிறான் )

ரயன் : இனிமே சாதாரணமா வாழணும்.. தேவையில்லாம எல்லாருக்கும் ஹெல்ப் பண்றேன்.. ஜீசஸ் மாதிரி இருக்கேன்னு சொன்னதெல்லாம் போதும். பேசாம போய் மறுபடியும் கேம்ஸ், வீடியோஸ்ன்னு வாழ்க்கைய ஓட்ட வேண்டியது தான்.

( அப்போது ஒரு கண் காணாதவர், ஒரு பையைத் தூக்கியபடி வருகிறார் )

க.கா : ஐயா.. யாராச்சும் ஹெல்ப் பண்ணுங்க.. என்னை கொஞ்சம் ரோட் கிராஸ் பண்ணி விடுங்க… பிளீஸ்…

ரயன் : ( நோ..நோ..இனிமே நான் நார்மலா இருக்கப் போறேன்.. நோ ஹெல்ப் ) 

க. கா : ஐயா.. பிளீஸ் ஹெல்ப்..

ரயன் : ( நோ.. நோ.. நோ செண்டிமெண்ட்ஸ் )  

க. கா : ஐயா.. யாராச்சும் இருக்கீங்களா 

ரயன் : சே. மனசு கேக்கலை… ( போய் பையைத் தூக்குகிறான் )

ரயன் : வாங்கய்யா.. நான் ஹெல்ப் பண்றேன்.. மெதுவா வாங்க.. 

க.கா : ரொம்ப நன்றி தம்பி.. எனக்கு ஹெல்ப் பண்றதுக்கு ரொம்ப நன்றி.

ரயன் : பாத்து வாங்கய்யா…

க. கா : இருளில இருக்கிற மக்களுக்கு வெளிச்சத்தைக் காட்ட.. நீங்க ஹெல்ப் பண்றீங்க தம்பி… நீங்க பண்றது ரொம்ப நல்ல ஹெல்ப்.  அதாவது குருடனா இருக்கிற என்னை கைபிடிச்சு நடக்கிற வெளிச்சம் நீங்க…. 

ரயன் : இதென்னய்யா.. பெரிய வார்த்தையெல்லாம் பேசிகிட்டு… இது ஒரு சின்ன ஒரு ஹெல்ப் அவ்ளோ தான்… 

க. கா : இயேசு இருந்திருந்தா இப்படித் தான் பண்ணியிருப்பாரு… ஒரு மனிதனோட கஷ்டத்தையும் பாத்துட்டு அவரு அலட்சியமா போனதா வரலாறே இல்லை.

ரயன் : நீங்க கிறிஸ்டியனா ?

க.கா : இயேசுவோட அன்பைத் தெரிஞ்சுக்க கிறிஸ்டியனா தான் இருக்கணும்ன்னு இல்லை, கிறிஸ்துவைத் தெரிஞ்சிருந்தா போதும்.

ரயன் : என்ன சொல்றீங்க .. புரியலையே.

க.கா : தம்பி…  உலகம் ஆயிரம் கிண்டல் பண்ணினாலும் ஆண்டவருக்காக வாழறது தான் நல்ல வாழ்க்கை. கிண்டலுக்குப் பயந்து நாம பின்வாங்கக் கூடாது. இயேசு சிலுவையைப் பாத்து பயந்தாரா ? இல்லை அவமானத்தைப் பாத்து ஒளிஞ்சாரா ? இல்லையே 

ரயன் : ஏன் அப்படி சொல்றீங்க… 

க. கா : நீயும் அவமானம், கிண்டல் பாத்து பின்வாங்கிப் போயிடாதே. கலப்பைல கை வெச்சுட்டே, இனி நல்லா உழு. விளைச்சல் நிச்சயம். நல்ல பையனா இருக்கணும்ன்னு முடிவெடுத்தே.. அதன்படியே தொடர்ந்து நட.

ரயன் : ( ஆச்சரியமாக ) என்னை கேலி பண்றாங்க, கிண்டல் பண்றாங்கன்னு எப்படி உங்களுக்குத் தெரியும் ? 

க.கா : நீ இப்போ வெளிச்சத்துல இருக்கிற. ஆன்மிக வெளிச்சம். மறுபடியும் இருட்டுல போக நினைக்காதே. அதுக்கு பதிலா, இருட்டுல இருக்கிற உன்னோட நண்பர்களையும் நீ வெளிச்சத்துக்கு கொண்டு வா…

ரயன் : ஐயா.. நீங்க சொல்றதெல்லாம் ரொம்ப உற்சாகமா இருக்கு.. நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணல, நீங்க தான் எனக்கு ஹெல்ப் பண்றீங்க… 

க.கா : தம்பி ரோடை கிராஸ் பண்ணிட்டோம்… நீயும் சோதனைகளை கிராஸ் பண்ணு.. அதுக்கு தான் இருக்கு கிராஸ்… த கிராஸ் !  . அந்த பையைக் குடுத்துடு தம்பி நான் கிளம்பறேன். 

( ரயன் பையைக் கொடுக்கிறான்… அப்போது அது சிலுவையாய் தோன்றுகிறது.. அதிர்ச்சியடைகிறான். அப்போது அந்த நபரைப் பார்க்கிறான்.. அவர் இயேசுவைப் போல தெரிகிறார் ) நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்.. எனும் குரல் கேட்கிறது. அந்த நபர் காணாமல் போய்விடுகிறார். 

( ரயன் புன்னகைக்கிறான். மகிழ்ச்சியும் நிம்மதியும் அவன் முகத்தில் தெரிகிறது ) 

ரயன் : இயேசுவே நீரே நேரடியாக வந்து எனக்கு எல்லாவற்றையும் விளக்கினீர்.. ரொம்ப சந்தோசம்.. இனிமே நான் பின் வாங்கவே மாட்டேன். 

( போன் அடிக்கிறது ) 

போன் : டேய்.. நான் தாண்டா அருண் பேசறேன்… சரியாயிடுச்சுடா.. நீ எனக்காக பிரேயர் பண்ணினேன்னு கேள்விப்பட்டேன்.. ரொம்ப தேங்க்ஸ் டா… 

ரயன் : வாவ்.. உனக்கு சுகமானது எனக்கு ரொம்ப சந்தோசம்டா.. நாம நிறைய பேசணும்.. நான் வீட்டுக்கு வந்து கால் பண்றேன்.

போன் : ஓக்கே டா.. 

*