காட்சி 1
( ரயன் சோகமாக இருக்கிறான்.. பந்தை தட்டிக் கொண்டே )
ரெய்னா : என்ன தம்பி, ரொம்ப சோகமா இருக்கே.. பொதுவா இப்படி இருக்க மாட்டியே…
ரயன் : ஒண்ணும் இல்ல.. விடு.
ரெய்னா : கப்பல் கவுந்த மாதிரி இருந்துட்டு.. ஒண்ணுமே இல்லேன்னு சொல்றே…
ரயன் : ஆமா.. கப்பல் கவுந்தா மட்டும் தான் சோகமா இருக்கணுமா என்ன ?
ரெய்னா : சரி, அப்போ என்ன விஷயம்ன்னு சொல்லு…
ரயன் : இல்ல.. ஸ்கூல்ல என்னை புட்பால் மேட்ச்ல சேத்துக்கல.. அதான் கடுப்பாயிட்டேன்.
ரெய்னா : ஓ… அப்போ சரிதான்.. புட் பால் தான் உனக்கு உயிராச்சே.. அதுல இடமில்லேன்னா கடுப்பில்லாம எப்படி இருப்பே.. சரி, சரி.. எனக்கு படிக்க நிறைய இருக்கு, கதை பேசிட்டிருக்கேன்னு திட்டு விழும் நான் போறேன்.
காட்சி 2
( அம்மா வருகிறார் )
அம்மா : அக்கா இப்போ தான் சொன்னா… புட் பால் டீம்ல உனக்கு இடம் கிடைக்கலையா ?
ரயன் : ம்ம்… ஆமாம்மா…. கிடைக்கல…
அம்மா : ஏன் என்னாச்சு ?
ரயன் : நான் ஷார்ட்டா இருக்கேன்னு சொல்லிட்டாரு மாஸ்டர்.
அம்மா : ஸ்கூல்ல எல்லா வருஷமும் நீ விளையாடிட்டு தானே இருக்கே… இப்போ என்னாச்சு ? அப்படி ரூல் எதுவும் கிடையாதே…
ரயன் : காம்பெட்டிஷனுக்கு போணும்ன்னா ஹைட் இவ்ளோ இருக்கணும்ன்னு ஸ்கூல்ல ஒரு புது ரூல் போட்டிருக்காங்க.. அதான் என்னால ஜாயின் பண்ண முடியல.
அம்மா : சரி விடுடா… அதுக்கு போயி வருத்தப்பட்டுட்டு..
ரயன் : என்னை விட சொத்தையா விளையாடறவங்க எல்லாம் டீம்ல இருக்காங்க, என்ன குள்ளப் பயன்னு கிண்டல் வேற பண்றாங்கம்மா…
அம்மா : சொல்றவங்க சொல்லிட்டு தாண்டா இருப்பாங்க.. நீ கவலைப்படாதே. கடவுள் ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு விதமா படைச்சிருக்காரு.. ஏன்னா ஒவ்வொருத்தரும் கடவுளோட திட்டத்தில ஒவ்வொரு வேலை செய்றாங்க.. அதான்.
ரயன் : பட்.. புட்பால் தான் என்னோட டிரீம்… ஹைட்டுக்கு நான் என்ன பண்ணணும்…
அம்மா : டேய்.. ஹைட்டும், வெயிட்டும், கலரும் எல்லாம் கடவுள் தரது. அதைப்பற்றி நாம கவலைப்படவே கூடாது. உனக்குன்னு கடவுள் ஏதோ ஒண்ணை ஸ்பெஷலா வெச்சிருக்காருன்னு அர்த்தம்
ரயன் : அப்படியெல்லாம் இல்லம்மா… ஐ ஆம் எ லூசர்…
அம்மா : அட… கடவுளோட படைப்புல எல்லாத்துக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல். உதாரணமா ஒரு மியூசிக் குரூப் இருக்குன்னா, கீபோர்ட், கிட்டார், வயலின், ஃபுலூட் இப்படி எல்லாமே இருக்கும். ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு இசை…. ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல். எல்லாமே கீபோர்டாகவோ, கிட்டாராவோ இருந்தா நல்லா இருக்காதுல்ல… அதான். உலகம் முழுக்க ஒரே மாதிரி பூ இருந்தா நல்லா இருக்குமா ? உடல் முழுசும் கண் மட்டுமே இருந்தா நல்லா இருக்குமா…
ரயன் : அதெல்லாம் சரிம்மா.. ஆனாலும்… இது ஒரு குறை தானே.
அம்மா : நான் ஒரு இண்டரஸ்டிங் விஷயம் சொல்றேன்… உனக்கு ரொம்ப புடிச்ச பவுல் பத்தி தெரியுமா உனக்கு ? கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளா நாம அவரோட எழுத்துகளை தான் வாசிச்சு வாசிச்சு கடவுளோட அன்பை ருசிச்சிட்டிருக்கோம். ஆனா அவரு ரொம்ப குள்ளம் தெரியுமா ?
ரயன் : என்னம்மா சொல்றீங்க ? பவுல் குள்ளமா ? அவரு குதிரைல ஏறி பயங்கர வில்லத்தனம் பண்ணினவராச்சே.
அம்மா : எஸ்.. அவரு ரொம்ப குள்ளமானவர்ன்னு ஒரு பழைய கால சுருளேடு சொல்லுது. சொல்லப்போனா, அவரு உன்னை விட ரொம்பக் குள்ளமா இருந்திருப்பாருன்னு நினைக்கிறேன்.
ரயன் : நிஜமாவா சொல்றீங்க ?
அம்மா : ஆமாடா.. அவருக்கு ‘ஷார்ட் மேன்ஸ் காம்ப்ளெக்ஸ்’ இருந்துச்சு, அதனால தான் கிறிஸ்தவர்களை எல்லாம் வேட்டையாடி தன்னோட குறையை மறச்சிட்டு இருந்தாருன்னு விவிலிய அறிஞர்கள் சொல்றாங்க.
ரயன் : ஓ.. ஆச்சரியமா இருக்கே..
அம்மா : இயேசுவால் அழைக்கப்பட்ட பிறகு அவர்க்கு தன்னோட உடம்புல எந்த குறையும் தெரியல. தான் ஸ்பெஷல்ன்னு மட்டும் அவருக்கு தெரிஞ்சுது. அவரை கடவுள் எப்படி பயன்படுத்த நினைச்சாரோ, அதுக்கு ஒப்புக்கொடுத்தாரு. அதனால தான் இன்னிக்கு இவ்ளோ பெரிய அப்போஸ்தலரா இருக்காரு.
ரயன் : நம்பவே முடியலம்மா… ரொம்ப அருமையா இருக்கு.. உற்சாகமாவும் இருக்கு…
அம்மா : இன்னொரு விஷயமும் சொல்றேன்.. எல்லாருமே பவுல் மாதிரி பாப்புலராகணும்ன்னும் இல்லை. கடவுள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பணிக்காக ஸ்பெஷலா சூஸ் பண்ணி வைப்பாரு.. அதுல நாம சிறப்பா பணி செஞ்சா போதும். சில டைம்ல நாம அழகா வெளியே தெரிவோம் முகம் மாதிரி… சில டைம்ல வெளியே தெரியவே மாட்டோம்… ஹார்ட் மாதிரி… அதுக்காக முகம் தான் பெருசு, ஹார்ட் தேவையில்லைன்னு சொல்ல முடியுமா ?
ரயன் : அதெப்படி சொல்ல முடியும்.. ஹார்ட் இல்லேன்னா, லைஃபே இல்லையே…
அம்மா : கரெக்ட்.. அப்படி தான்.. பவுல் கூட நிறைய பேரு பின்னணியில நின்னு ஹெல்ப் பண்ணினாங்க. உதாரணமா ஆக்ஸ் 27 வாசிச்சேன்னா நிறைய இடத்துல நாங்கள்.. நாங்கள்..நாங்கள்ன்னு வரும். ஆனா அந்த நாங்கள் யாருன்னே வெளியே தெரியாது.. ஆனா அவங்களையும் கடவுள் மிக முக்கியமான விஷயத்துக்குப் பயன்படுத்தியிருக்காரு. அதனால நீ எதுக்கும் கவலைப்படாதே.. சரியா…
ரயன் : உண்மை தான்ம்மா… நீங்க சொல்றது எனக்கு சந்தோசமா இருக்கு..
அம்மா : கடவுள் நமக்காக ஒரு திட்டம் வெச்சிருக்காருன்னு நம்பினா எல்லாமே சந்தோசம் தான். லாசரை இயேசு உயிர்த்தெழ வெச்சாருன்னு தெரியும். ஆனா லாசர் உடம்பு சரியில்லாம கிடக்கிறதை இயேசுகிட்டே ஒருத்தர் போய் சொன்னாருல்லயா ? அவருக்கான பணி அது ! யோசேப்பு எகிப்தோட ஆளுநர் ஆனாரு, ஆனா அவரை குழியில இருந்து விலைக்கு வாங்கி எகிப்து வரைக்கும் கொண்டு போனவங்க யாரு ? தெரியாது. ஆனா கடவுளோட திட்டத்துல அவங்களுக்கும் பங்கிருக்கு.
ரயன் : சூப்பர்ம்மா…. இனிமே எனக்கு தாழ்வு மனப்பான்மையே வராது.. குள்ளமா இருந்தா என்ன, உயரமா இருந்தா என்ன கடவுள் எனக்கு என்ன வெச்சிருக்காரோ, அதை தான் நான் செய்வேன்.
அம்மா : அதுக்காக குள்ளமா இருக்கிறவங்க சாதிக்க மாட்டாங்கன்னு இல்ல… உலக உதாரணம் கூட நிறைய உண்டு, வின்ஸ்டன் சர்ச்சில் குள்ளமான ஆளு, சார்லி சாப்ளின் குள்ளமான ஆளு, உலகப் புகழ் பெற்ற ஓவியர் பிக்காசோ குள்ளமான ஆளு, நம்ம மகாத்மா காந்தி கூட குள்ளமான ஆளு தான் உயரத்துல பெருமைப்படவும் ஒண்ணுமில்ல, குள்ளமா இருந்தா கவலைப்படவும் ஒண்ணுமில்லை, எல்லாமே கடவுளோட படைப்பு தான்.
ரயன் : இப்போ ஹேப்பியா இருக்கும்மா.. நான் கூட சண்டேஸ் கிளாஸ்ல ஏமி கார் மைக்கேல் பற்றி படிச்சிருக்கேன். அவங்க கண்ணு பிரவுணா இருக்குன்னு கவலைப்பட்டிருக்காங்க. ஆனா பிற்காலத்துல அவங்க இந்தியா வந்தப்போ அது தான் அவங்களை காப்பாத்தியிருக்கு, நல்லா பணி செய்யவும் வெச்சிருக்கு.
அம்மா : எஸ்.. கரெக்டா சொன்னே.. நாம இப்படி இருக்கிறது கடவுளோட திட்டம். அதனால எப்படி இருக்கிறோமோ அதுல ரொம்ப சந்தோசமா இருக்கணும். ஏன்னா, அப்போ தான் கடவுள் நமக்கு வெச்சிருக்கிற திட்டத்தை நாம நிறைவேற்ற முடியும்.
ரயன் : சரிம்மா…
( பாடல் )
கடவுள் பாரபட்சம் பார்க்காதவர். அவர் நம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாகப் படைத்திருக்கிறார். நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணியைத் தந்திருக்கிறார். நாம் நம்மைக் குறித்தோ, நமது தோற்றத்தைக் குறித்தோ, நமது பணியைக் குறித்தோ தாழ்வு மனப்பான்மை கொள்ளவே கூடாது. அது படைத்த ஆண்டவரின் அன்பை அவமானப் படுத்துவதாகும். நமக்கு இறைவன் என்ன பணியை வைத்திருக்கிறாரோ, அந்தப் பணியை நாம் முழு மனதுடனும், மகிழ்வுடனும் செய்யப் பழக வேண்டும். பிறரைப் போல ஆவதல்ல, இயேசுவைப் போல ஆவதே நமது இலட்சியமாக இருக்க வேண்டும். நன்றி.