நிகழ்வுகளெல்லாம் இறைவனால் நமக்குத் தரப்படுகின்ற அனுபவப் பாடங்கள். சில அனுபவப் பாடங்கள் நம்மை விரக்தியில் எறியும். சில நம்மை குழப்பத்தில் உருட்டும். சில அனுபவங்கள் நம்மை புரியாமைக்குள் நடத்திச் செல்லும். ஆனால் ஒன்று மட்டும் யதார்த்தம், இறைமகன் இயேசுவின் கரம்பிடித்து நடப்பவர்களுக்கு எந்த ஒரு துயரத்தின் பயணமும், கடைசியில் வெற்றியின் பாடலாய் முடிவடையும். அது இவ்வுலகின் ஆயுளானாலும் சரி, விண்ணுலகின் இறைவனின் அருகாமையானாலும் சரி.
இஸ்ரேலரின் வீடுகளை வாதை அணுகுவதில்லை, இறைமகனின் இரத்தத்தினால் தெளிக்கப்பட்ட கதவுகளுக்குள் கிருமிகளின் காலடி நுழைவதில்லை எனும் நம்பிக்கைகள் பல வேளைகளில் உடைந்து போகின்றன. இறைவனே அதை அனுமதிக்கிறார். அதீத கவனத்தோடு இருந்த போதும் கோவிட் ரகசியமாய் வந்துக் கதவைத் தட்டியது. ஒரு சின்னக் கிருமிக்குப் பயந்து சோதனை செய்யாமலேயே வாரங்கள் கழிந்தன. அச்சம் வந்து தைரியத்தின் அத்தனை சன்னல்களையும் சாத்தியபின், கடைசியில் அந்த நாள் வந்தது. நோயின் தாக்கம் அதிகரிக்க, கோவிட் பாசிடிவ் எனும் முடிவு வர, சி.டி ஸ்கேன் ஏகமாய் மூச்சுத் திணறி கதறியது.
‘உடனடியாக அட்மிட் பண்ணுங்க, கொஞ்சம் கிரிட்டிக்கல்’ என்றார் கல்யாணி மருத்துவமனை டாக்டர்.
ஆமா… 90ம்சதவீதம் நுரையீரல் பாதிப்பில் விழுந்திருக்கிறது. எப்படி இன்னும் உங்களுக்கு மூச்சுப் பிரச்சினை வரவில்லை என்பது தெரியவில்லை. பரவாயில்லை, ரிக்கவர் ஆயிடலாம்ன்னு நினைக்கிறேன். செபியுங்கள், அட்மிட் ஆயிடுங்கள்” உங்களுக்கு வயசு கைகொடுக்கும்ன்னு நினைக்கிறேன் என்றார் அவர். வானவர் கைகொடுத்தால் தான் வாழ்க்கை, வயது கைகொடுக்கப் போவதில்லை எனும் குரல் மனதுக்குள் அப்போதே ஒலித்தது.
“ஓக்கே.. என்பதைத் தவிர எங்களிடம் வேறு பதில் இருக்கவில்லை”. தனிமையாக அந்த மருத்துவ மனைக்குள் நுழைந்த எங்களுக்கு அடுத்தடுத்த அரை மணி நேரத்தில் கிடைத்த அழைப்புகளும், உதவிகளும், செபங்களும், விசாரிப்புகளும் நிலைகுலைய வைத்தன. “நமக்கு யாருமே இல்லேன்னு நினைச்சேன்… எத்தனை பேரு ஹெல்ப்க்கு வராங்க ! எனும் மனைவியின் பொலபொலத்த கண்ணீரின் ஈரத்தில் ஐ.சி.யூவுக்குள் நுழைந்தேன்”.
ஐ.சி,யூ என்பது தன்னம்பிக்கையின் கடைசி வேர்களைக் கூட கழற்றிக் கீழே போடும் இடம். ஒரு அழுக்கடைந்த கந்தையை படுக்கையில் புடட்டிப் போடும் தருணம் அது. உடலானது சுக்கு நூறாக உடைக்கப்பட்ட பயனற்றுக் கிடக்கும் பாண்டத்தைப் போல மாறுவது. “குயவனின் மட்கலம் சுக்குநூறாய் உடைந்து போவதுபோல் இருக்கும்; அடுப்பிலிருந்து நெருப்பு எடுப்பதற்கோ பள்ளத்திலிருந்து நீர் மொள்வதற்கோ உடைந்த துண்டுகளில் எதுவுமே உதவாது.” (ஏசாயா 30:14 ). அங்கே அடைபடுவதும், செங்கடலுக்குள் கால் வைப்பதும் ஒரே விஷயம் தான். நம்பிக்கையும், விசுவாசமும் மட்டுமே கரை சேர்க்கும்.
கூர்மையான ஊசிகளின் தொடர் குத்தல்களும், உடலெங்கும் இணைக்கப்பட்ட செயற்கை வயர்களும், கண்களுக்கு மேலே கண நேரமும் பீப் அடித்துக் கொண்டிருக்கு டிஜிடல் மானிடர்களும் எதுவுமே நமக்குச் சம்பந்தம் இல்லாதவை. பக்கத்து ரூமில் ஒருத்தரு போயிட்டாரு, ஐசியூல நேத்தைக்கு ரெண்டு காலி போன்ற செய்திகள் வராண்டாக்களின் படபடப்பை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருந்தன.
போதாக்குறைக்கு வாழ்க்கையிலேயே மிக எளிதான ஒரு வேலையான ‘மூச்சு விடுதல்’ , மிகப்பெரிய பணியாக மாறிப்போன அவஸ்தையை அங்கே தான் கண்டு கொள்ள முடிந்தது. தரையில் கால் வைத்தாலே அரைமணி நேரம் மூச்சுத் திணறும் அவஸ்தையில் கடவுள் மூச்சை மட்டுமல்ல, நுரையீரலையும் நிலைப்படுத்தினார். நள்ளிரவு தாண்டிய மௌனத்தின் பொழுதுகளில் கருவிகள் இடுகின்ற புரியாத குழப்பச் சத்தங்களையும் இறைவனே ஸ்திரப்படுத்தினார்.
அந்த நேரத்தில் மனதுக்குள் நிழலாடிய, கூடாரமடித்துக் குடியிருந்த ஒரே ஒரு வசனம் “ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார்; நீங்கள் அமைதியாயிருங்கள் ( விடுதலைப்பயணம் 14:14 ) கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் எனும் வசனம்.
சில வசனங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் அதற்குரிய படுக்கையில் கிடக்க வேண்டும். இறைவனின் பேரன்பின் ஆழத்தை அறிந்து கொள்ள வேண்டுமெனில் நமது பலங்களின் மீதான கடைசி கட்ட ஈர நம்பிக்கையையும் கூட இறக்கி வைக்க வேண்டும். இவையெல்லாம் அந்த ஐ.சியூவின் மயான நள்ளிரவுத் தாண்டிய பொழுதுகள் உணர்த்திய கதைகள்.
சும்மா இருந்து செயிப்பது என்பது என்ன என்பதை அந்த காலம் புரிய வைத்தது. சும்மா இருப்பது என்பது விசுவாசத்தை அதிகரித்துக் கொள்வது. இறைவன் நிச்சயம் நமக்காய் போரிடுவார் எனும் நம்பிக்கையை ஆழப்படுத்துவது. நமது இதயத்தின் இயங்கு தசைகளெங்கும் இறைமகன் இயேசுவோடு உரையாடல் நடத்துவது. “நீ உன் விசுவாசத்தை ஆழப்படுத்து, நான் உன் பாதைகளை வலுப்படுத்துகிறேன்” என்றார் இறைவன். ஆழப்படுத்த முயன்றேன்.
இயேசு எனும் கொடியில் கிளையாக இருக்கும்போது எவ்வளவு மிகப்பெரிய செப உதவி கிடைக்கிறது ! எவ்வளவு பெரிய தேவ மனிதர்கள் தங்களுடைய முழு நேர ஊழியப் பணியைக் கூட ஒதுக்கி வைத்து விட்டு செபத்திலும், டாக்டர்களிடம் உரையாடுவதிலும் தங்களுடைய பொன்னான நேரத்தைத் தந்தார்கள் என்பதெல்லாம் கண்ணீரால் எழுதி முடிக்க முடியாத இன்னொரு கதை. மதங்களைக் கடந்த மனிதநேசத்தின் உச்சத்தை இத்தகைய தருணங்கள் சொல்லித் தருவதும் இறைவனின் பேரன்பின் பாடமே.
கடவுள் கரம்பிடித்து நடத்தினார். ஒரு வாரத்துக்குப் பிறகு ஐசியூ வின் கதவுகள் திறந்து கொண்டன. தனி வார்டுக்கு இடம் பெயர்ந்தேன். அசௌகரியங்கள் குறைந்திருந்தன, இறைவனின் மீதான அன்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கணத்தில் பேராபத்தின் பெருநதியிலிருந்து இறைவன் என்னை வெளியே கொண்டுவந்திருக்கிறார். மரண இருளின் பள்ளத்தாக்கில் அவரது வெளிச்சத்தின் பாதைகளில் தொடர்ந்து என்னை நடத்திக் கொண்டிருக்கிறார். இன்னும் ஒரு சில தினங்களில் வீடுவந்து சேரும் சூழலை இறைவன் உருவாக்கியிருக்கிறார்.
ஐ.சி.யூவுக்குள் நிராயுதபாணியாய் நுழைந்தபோது மனதுக்குள் எழுந்த ஒரு மிகப்பெரிய கேள்வி, “இன்று இரவே உன் வாழ்க்கை முடிந்து போனால் நீ வீணாய் செலவழித்த காலங்களுக்கு என்ன பதில் சொல்வாய் ?” எனும் கேள்வி. அந்த கேள்வி என்னைத் தூங்கவிடவில்லை.
கோவிட்டின் காலம் முடியும். செங்கடலைக் கடக்கும் காலம் நிகழும். எனில் இந்த பயண காலம் வெறும் வேடிக்கையின் காலமாய் தொடரக் கூடாது எனும் சிந்தனை மனதில் எழுகிறது. போராட்டம் என்பது நமது வலுவினால் நடப்பதல்ல, வலுவின்மையால் நடப்பது எனும் புரிதல் தெளிவாகிறது.
நமது வாழ்வின் அர்த்தமானது பிறருக்காக வாழ்வதில், பிறருடைய தேவைகளுக்காக வாழ்வதில், பிறருக்கு மீட்பின் நற்செய்தியை அறிவிப்பதற்காக வாழ்வதில், தன்னைப் புறந்தள்ளி இறைவனை அரவணைக்கும் வாழ்க்கை வாழ்வதில் அர்த்தப்படுகிறது. இந்த அன்பின் புரிதல் கோவிட் தாண்டிய வீதிகளில் நடத்த வேண்டும் எனும் ஆழமான ஆவல் மனதுக்குள் அசைபோட்டுக் கிடக்கிறது. அதற்காய் கோவிட் தந்திருக்கும் வசனம்,
ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார்; நீங்கள் அமைதியாயிருங்கள்
இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா?
யோவான் 14 :9
இந்தக் கேள்வி புதுசா நாம கேள்விப்படுகிற கேள்வி அல்ல. அடிக்கடி நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற கேள்வி.“இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா?” ந்னு தூய தமிழ்ல கேள்விப்பட்டிருக்க மாட்டோம், ஆனா நம்முடைய உரையாடல்களில் எப்போதேனும் நிச்சயம் இந்தக் கேள்வி வந்திருக்கும்.
“இன்னுமாடா என்னை நீ புரிஞ்சுக்கல”
நம்மோடு இருந்த நண்பர்கள் நம்மைப் புரிந்து கொள்ளாமல் இருக்கும்போதோ, நம் கூட வாழ்கின்ற உறவினர்கள் நம்மை புரிந்து கொள்ளாமல் இருக்கும்போதோ, நம் குடும்பத்தினரே நம்மை புரிந்து கொள்ளாமல் பேசும்போதோ இந்த வாக்கியம் நம்மிடமிருந்து புறப்படும். இது பதிலை எதிர்பார்க்கும் கேள்வியல்ல, வலியை வெளிப்படுத்தும் கேள்வி.
இயேசு சீடர்களிடம், “என்னை அறிந்திருந்தால் தந்தையையும் அறிந்திருக்கிறீர்கள், அவரைக் கண்டும் இருக்கிறீர்கள்” என்கிறார். அப்போது பிலிப்பு இயேசுவிடம், ‘தந்தையை எங்களுக்குக் காட்டும்’ என்கிறார். அதற்குப் பதிலாக இயேசு சொல்வது தான் இந்த வாக்கியம்.
இயேசுவின் செயல்கள் தந்தையின் செயல்கள். இயேசுவின் போதனைகள் தந்தையின் போதனைகள். இயேசுவின் வாழ்க்கை தந்தை வரைந்து கொடுத்த வரைபடத்தில் கன கட்சிதமாகப் பொருந்திப் போகும் வாழ்க்கை. சொல்லப் போனால், செயல்களைப் பொறுத்தவரை தந்தையின் பிம்பமாய் தான் இயேசு இருக்கிறார். அதையே இயேசு விளக்குகிறார். ஆனால் அது சீடர்களுக்குப் புரியவில்லை.
நாம சில வேளைகளில் சொல்வதுண்டு. “அந்த பையனைப் பாத்தியா, அப்படியே அப்பனைப் போல. பேச்சும் நடையும், முகமும் எல்லாமே அப்பனை மாதிரி” ந்னு. ஒருவகையில் இந்த சூழ்நிலையைக் கூட அப்படி புரிந்து கொள்ளலாம்.
இயேசுவின் கேள்வி இன்றைக்கு நம்மை நோக்கி நீட்டப்படுகிறது. “இன்னும் நீ என்னை அறிந்து கொள்ளவில்லையா ?” என்கிறார் இயேசு. இயேசுவை அறிந்து கொள்ள எத்தனை காலம் அவரோடு இருந்தோம் என்பது முக்கியமல்ல, எவ்வளவு ஆழம் அவரோடு இருந்தோம் என்பது தான் முக்கியம்.
யூதாஸ் இஸ்காரியோத்து இயேசுவோடு மூன்று ஆண்டுகளுக்கு மேல் இருந்தவன். கணக்கு வழக்குகளைக் கூட கவனித்தவன். மிக முக்கியமான நபர். ஆனால் அவர் இயேசுவை அறிந்து கொள்ளவில்லை. ஒரு புரட்சியாளராய் அவர் இல்லையே என பின்வாங்கினான். 30 வெள்ளிக்காசை விட விலைமதிப்பு அவருக்கு இல்லை என நினைத்துக் கொண்டான். முத்தத்தில் காட்டிக் கொடுத்தால் அவர் அறிய மாட்டார் என நினைத்தான். மனதில் நினைப்பதை மறைத்து விடலாம் என முடிவு கட்டினான்.
ஆனால், அந்த சிலுவைக் கள்ளன் இயேசுவோடு சில நிமிடங்களே தொங்கினான். உயிர் பிரியும் வலியில் ஒரு சில வார்த்தைகளைப் பேச மட்டுமே அவனுக்கு வலு இருந்தது. அந்த சில நிமிடங்களில் இயேசுவை அவன் அறிந்து கொண்டான். தேவையான நல்ல பங்கைத் தெரிந்து கொண்டான்.
மரியாள் எப்படி நல்ல பங்கைத் தேர்ந்து கொண்டாள் ? இயேசுவை அறிந்து கொண்டாள். இயேசுவை அறிந்து கொண்டதால் தான் உலக உணவை விட, இயேசுவே உணவு எனும் உண்மையை உணர்ந்து கொண்டாள். இயேசுவை அறிந்து கொண்டதன் வெளிப்பாடாய் தான் அவள் பாத்திரங்களை உருட்டாமல், இயேசுவின் பாதத்தில் அமர்ந்தாள்.
சக்கேயு எப்படி நல்ல முடிவை எடுத்தார் ? அவர் இயேசுவை அறிந்து கொண்டார். இயேசுவை அறிந்து கொள்வதன் வெளிப்பாடாய் அவன் பாவத்தைக் கழுவவும், மனிதத்தைத் தழுவவும் முடிவெடுத்தார்.
இயேசுவை அறிந்து கொண்ட கனானேயப் பெண் தன்னை நாய்க்குட்டியாய் மாற்றிக் கொள்ளவும் தயங்கவில்லை. இயேசுவை அறிந்து கொண்ட நூற்றுவர் தலைவன், தான் தூய்மையற்றவன் என்பதை உணர்ந்தார். தனது இல்லத்தில் இயேசுவை அழைக்கவும் அவர் துணியவில்லை.
நாம் உண்மையிலேயே இயேசுவை அறிந்து கொண்டோமா ? நீண்டகாலம் ஒருவரோடு பழகும்போது அந்த அதீத பரிச்சயமே பல வேளைகளில் புரிந்து கொள்தலுக்குத் தடையாய் மாறிவிடுகிறது. அதனால் தான் காலம் காலமாக கிறிஸ்தவர்களாய் இருப்பவர்களை விட, புதிதாய் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்பவர்கள் அவரை எளிதில் புரிந்து கொள்கிறார்கள்.
இயேசுவைப் புரிந்து கொண்டவர்கள் எல்லோரும் இயேசுவின் வழியில் நடப்பதும் இல்லை. விவிலியத்தின் பல நிகழ்வுகள் வழியாக நாம் அதை அறிந்து கொள்ளலாம். குறிப்பாக இயேசு பேய்களை விரட்டுகின்ற நிகழ்வுகளில் பேய்கள் ‘நீர் கடவுளின் மகன்’ என அறிக்கையிடுவதைக் காணலாம். பேய்கள் மனிதர்களை விடத் தெளிவாக இயேசுவை அறிந்திருக்கின்றன, ஆனால் அதனால் அவை அழிவிலிருந்து மீட்கப்படவில்லை. எனவே தான், அறிவதும் தொடர்வதும் முக்கியமாகிறது.
நான் இயேசுவை அறிந்து கொண்டிருக்கிறேனா ? இயேசுவைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேனா ?
அவரை மீட்பராக, வழிகாட்டியாக, மனிதநேயத்தைக் கட்டியெழுப்ப வந்த மனுமகனாக, ஏழைகளின் மீதான சுரண்டலுக்கு எதிராய் குரல்கொடுக்கும் ஒரு புரட்சியாளராக… அவரை முழுமையாய் அறிந்து கொண்டிருக்கிறேனா ?
இந்த கேள்வியை நாம் நமக்குள் கேட்போம். கேள்விகளின் தூண்டில்கல், பதில்களின் மீன்களை நமக்கு பிடித்துத் தரட்டும்
ஊழியர் : நான் சிறையிலிருக்கிற மக்கள் கூட பேசி அவங்களுக்கு ஆறுதல் சொல்ற ஒரு பணியைச் செய்றவன்
கைதி : இப்படியெல்லாம் ஒரு வேலையா.. ம்ம்ம்.. இது எந்த கம்பெனி ? எவ்ளோ ரூபா சம்பளம் ?
ஊழியர் : இதுக்கு சம்பளம் ஏதும் இல்லை, இது கடவுளோட பணி. அவரோட விருப்பம் இது.
கைதி : சம்பளம் இல்லையா ? அப்புறம் எதுக்கு இப்படி அலையறீங்க ? ஆதாயம் இல்லாம எவனாவது ஆத்தோட போவானா ?
ஊழியர் : ஆதாயம்ங்கறது நான் உங்களுக்கு தரப் போறது தான்.
கைதி : வாவ்.. எனக்கு ஏதோ தரப்போறீங்களா ? அதை மொதல்லயே சொல்ல வேண்டியது தானே.. குடுங்க குடுங்க.
ஊழியர் : அது கண்ணுக்குத் தெரியறது இல்லை, அதுக்கு பேரு கடவுளோட அன்பு.
கைதி : உங்க பேச்சே சரியில்லை, உங்களுக்கு என்ன தான் வேணும் ? நானே என்னோட வருமானம் எல்லாத்தையும் இழந்து ஜெயில்ல கஷ்டப்படறேன். நீங்க வந்து டிஸ்டர்ப் பண்ணாதீங்க.
ஊழியர் : இயேசு உங்களை நேசிக்கிறார். அந்த உண்மையைச் சொல்லத் தான் நான் வந்தேன்.
கைதி : இயேசுவா ?
ஊழியர் : ஆமா, நமக்காக உயிரை விட்ட கடவுள். அவரைப் பற்றி பேசிட்டு, இந்த பைபிளை உங்களுக்குத் தந்துட்டுப் போலாம்ன்னு வந்தேன். நீங்க ஃபிரீயா இருக்கும்போ படிக்கலாம்.
கைதி : ஓ.. வெறும் பேச்சும், பைபிளுமா…. எனக்கு அதுக்கெல்லாம் டைம் இல்லை.
ஊழியர் : நானே உங்களுக்கு கொஞ்சம் வாசித்துக் காட்டலாமா ? இயேசு உங்களை எவ்ளோ நேசிக்கிறாருன்னு உங்களுக்குப் புரியும்.
கைதி : ஹா..ஹா… அன்பா ? நான் ஜெயில்ல வந்து பல மாசம் ஆச்சு. யாரும் வந்து பாக்கல. என் அம்மா கூட என்னை இப்போ நேசிக்க மாட்டாங்க. இதுல போய் நேசிக்கிறேன், வாசிக்கிறேன்ன்னு….
ஊழியர் : தாய் மறந்தாலும் மறவாத தெய்வம் தான் இயேசு. ஆமா, உங்க அம்மா எங்க இருக்காங்க. எப்படி இருக்காங்க, நான் போய் அவங்க கிட்டே பேசவா ?
கைதி : வேண்டாம். நான் அவங்களுக்குப் பண்ணின கொடுமை அவ்ளோ பெருசு.
ஊழியர் : உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா நீங்க அதைச் சொல்றீங்களா ?
கைதி : சொல்லி என்னத்த ஆவப் போவுது…. ம்ம்ம்…
காட்சி 2
( அம்மாவும், பையனும் )
அம்மா : ஏன்பா இப்படிப் பேசறே.. உனக்கு இங்கே என்ன குறை. உன்னை என்னோட உயிரா பாத்துக்கறேன்ல, இப்போ என்ன அவசரம்.
பையன் : அம்மா… எதுக்கு இந்த தேவையில்லாத பேச்செல்லாம். உங்களுக்கும் வயசாகுது.. எனக்கும் வயசாகுது. நான் என்னோட வேலையைப் பாக்கணும். அதுக்கு நிறைய பணம் தேவைப்படுது.
அம்மா : எவ்ளோ வேணும் சொல்லு, தரேன்.
பையன் : அம்மா.. எல்லாத்துக்கும் உங்க கிட்டே வந்து நிக்க முடியாது. நீங்க ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பீங்க. எதுக்கு அதெல்லாம். பத்திரம் போட்டுக் கொண்டு வந்திருக்கேன். எல்லாத்துலயும் சைன் பண்ணி குடுத்தீங்கன்னா போதும்.
அம்மா : எல்லாத்தையும் உனக்கு குடுத்துட்டு நான் என்ன பண்ண டா ?
பையன் : உங்களுக்கு மறைமலை நகர் பக்கத்துல ஒரு எல்டர்ஸ் ஹவுஸ் பாத்திருக்கேன். மாசம் 15 ஆயிரம் வாடகை, அதை நான் குடுத்திடுவேன். உங்களுக்கு எல்லா வசதியும் அங்க கிடைக்கும்.
அம்மா : வயசான காலத்துல உன் கூட இருக்காம எனக்கு என்னடா வாழ்க்கை ? பிள்ளைங்க கூட இருக்கிறது தானே பெற்றோருக்கு சந்தோசம்.
பையன் : அம்மா.. எனக்கு என்னோட பிசினஸ், என்னோட வாழ்க்கை, என்னோட வளர்ச்சி எல்லாம் தான் முக்கியம். அதுக்கு நீங்க ஹெல்ப் பண்ணலேன்னா அப்புறம் எனக்கு உங்களால என்ன யூஸ் ?
அம்மா : என்னடா இப்படியெல்லாம் பேசறே ? சரி, எல்லாம் உன் பேருக்கு தந்துடறேன். நான் இங்கே இருக்கேன். நாம வழக்கம் போல சேர்ந்தே இருக்கலாம்.
பையன் :என்னம்மா சும்மா தொண தொணண்ணு…. அதெல்லாம் தேவையில்லை. எனக்கு நிறைய பிஸினஸ் ஐடியாஸ் இருக்கு. நீங்க இங்கே இருந்தா அதெல்லாம் சரியா வராது. அதனால, நீங்ககிளம்பறது தான் சரி.
அம்மா : என்னப்பா … உன்னை அப்படியா வளத்தேன். உன்னை பொத்திப் பொத்தி வளத்தேன்… நீ பெரிய ஆளாகணும்ன்னு தானே நினைச்சேன்.
பையன் : எஸ்… அதனால தான் நான் பெரிய ஆளாக நினைக்கிறேன். இப்போ சைன் பண்றீங்களா ? இல்லையா ? சைன் பண்ணலேன்னா, இன்னில இருந்து நான் உங்க பையன் இல்லை. அதை மட்டும் தெரிஞ்சு கோங்க.
அம்மா : சரிடா.. நீ என்ன சொல்றியோ அப்படி பண்றேன். நீ நல்லா இருக்கணும். அதான் எனக்கு முக்கியம்.
பையன் : சரி, ஓவர் செண்டிமெண்ட் வேண்டாம். சைன் பண்ணுங்க, நான் உங்களை அந்த இல்லத்துக்கு கொண்டு விடறேன்.
( போலீஸ் : அம்மா.. டைம் ஆச்சு.. நீங்க கிளம்பலாம்…இதுக்கு மேல இங்க இருக்க முடியாது )
ஊழியர் : சரி சார். ( கைதியிடம் ) ஐயா.. நீங்க இந்த பைபிளை படிங்க. உங்களுக்காக செபிக்கிறேன். அடுத்த தடவை வரும்போ பேசறேன்.
( பைபிளைக் கொடுக்கிறார் )
( கைதி பைபிளை வாங்கி ஓரமாய் வைக்கிறார் )
( இரவில் அதை படிக்கிறார் )
காட்சி 4
( ஜெயில் . ஊழியர் மீண்டும் வருகிறார் )
ஊழியர் : ஐயா எப்படி இருக்கீங்க ? நல்லா இருக்கீங்களா ? பாக்க கொஞ்சம் டல்லா தெரியறீங்க
கைதி : நல்லா இருக்கேன்.. வாங்க…
ஊழியர் : பைபிளை படிச்சீங்களா ஐயா ? டைம் கிடைச்சுதா ? நான் உங்களுக்காக டெய்லி பிரேயர் பண்ணிட்டே இருக்கேன்.
கைதி : ( அமைதியாக இருக்கிறார் …)
ஊழியர் : நீங்க ஜெயிலுக்கு வந்த கதையைச் சொல்றேன்னு சொன்னீங்க..
கைதி : ( அமைதியாக இருக்கிறார் )
ஊழியர் : ஏதோ மன வருத்தத்துல இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.. நான் ஒரு ப்ரே பண்ணிக்கலாமா
கைதி : ம்ம்ம் ( தலையை ஆட்டுகிறார் )
ஊழியர் : அன்பின் விண்ணக தந்தையே.. இந்த நேரத்துக்காக நன்றி. இந்த சகோதரனை நீர் அன்பு செய்வதற்காக நன்றி. அவரை நீர் விரைவிலேயே உமது மகனாக மாற்றி உலகில் நடமாட விடப் போவதற்காக நன்றி…. ( அமைதியான இசை… )
ஊழியர் : நான் கிளம்பட்டுமாய்யா… நீங்க முடிஞ்சா அந்த பைபிளை மட்டும் மறக்காம படிங்க.
கைதி : கொஞ்சம் இருங்க… நான்.. ஜெயிலுக்கு வந்த கதையைச் சொல்றேன்.
ஊழியர் : கண்டிப்பாய்யா.. சொல்லுங்க.
கைதி ( சொல்கிறார் )
காட்சி 5
( இரவு நேரம். ஆள்நடமாட்டம் இல்லாத சாலையில் ஒருவர் பெரிய பையுடன் நடக்கிறார் , அப்போதுகைதி வருகிறார் )
நபர் : ( ஓடப் பார்க்கிறார் . கைதி தாக்குகிறார். கத்தியால் குத்திவிட்டு பணத்தை எடுத்துக் கொண்டு ஓடுகிறார் )
காட்சி 6
( ஜெயில் )
கைதி : அந்த கத்திக் குத்துல தான் நான் மாட்டிகிட்டேன். அங்க நடந்ததையெல்லாம் எவனோ ஒருத்தன் செல்போன்ல வீடியோ எடுத்து சோசியல் மீடியால போட்டுட்டான்… போலீஸ் பாத்துட்டாங்க..வந்து என் சொத்தையெல்லாம் சீஸ் பண்ணி, என்னை ஜெயில்ல போட்டாங்க.
ஊழியர் : ம்ம்ம்.. குத்துப் பட்டவரு என்ன ஆனாரு ?
கைதி : தெரியல, அவரு இறந்துட்டா எனக்கு தண்டனை கடுமையா இருக்கும்ன்னு தெரியும். முதல் முதலா அடுத்தவன் நல்லா இருக்கணும்ன்னு நினைக்கிறேன். அது கூட நான் தப்பணுங்கற சுயநலம் தான்.
ஊழியர் : ம்ம்… மனுஷனோட இயல்பே சுயநலம் தான். அதை மாற்றி பிறருக்காக வாழ கத்துக்கணும். அதுக்கு தான் இயேசு நமக்கு இருக்காரு. பிறருக்காக தன்னோட உயிரையே குடுத்தவரு.
கைதி : ம்ம்ம்… ஆனாலும்…. நான் சுயநலமா இருக்கிறது காரணம் நான் மட்டும் இல்லை.. இந்த சொசையிட்டி தான்.
ஊழியர் : ஏன் அப்படி சொல்றீங்க ?
கைதி : சின்ன வயசுல, இரண்டு துண்டு கேக் இருந்தா அதுல பெருசை எடுப்பேன். யாரும் தப்புன்னு சொல்லல.இரண்டு பொம்மை இருந்தா அதுல நல்லதை நான் எடுப்பேன், அடுத்தவங்களை நினைச்சதில்லை. அதை யாரும் தப்புன்னு சொல்லல.
கைதி : ஸ்கூல்ல போகும்போ அடுத்தவனை விட நல்ல துணி எனக்கு இருக்கணும்ன்னு நினைப்பேன். அடுத்தவனை விட எல்லாத்துலயும் நான் மட்டும் ஸ்பெஷலா இருக்கணும்ன்னு நினைப்பேன். எனக்கு நல்ல கார் இருக்கணும்ன்னு நினைப்பேன். எனக்கு நல்ல வேலை இருக்கணும்ன்னு நினைப்பேன். எப்பவுமே “நான், நான் நான்” இப்படி தான் நினைப்பேன். அதை யாருமே தப்புன்னு சொல்லல. அவனை விட மார்க்கு, அவனை விட பிரைஸ் எல்லாம் வேணும்ன்னு சொல்லுவாங்க… எனக்கு எனக்கு எனக்கு .. அப்படி தான் சொல்லி தந்தாங்க…
கைதி : அப்படி தான் சுயநலம் எனக்குள்ள வேரோடிப் போச்சு, அப்புறம் அதை மாத்த முடியல.
ஊழியர் : உண்மை தான். மனுஷனோட இயல்பு சுயநலம் தான்… அப்படிப்பட்ட மனசை மாற்றணும்ன்னா இயேசுவால தான் முடியும். அவரோட வாழ்க்கையை பாத்தோம்ன்னா அவரு வாழ்க்கை முழுசும் பிறருக்காக தான் வாழ்ந்தாரு. கடவுளோட மகனா இருந்தவரு, தச்சனோட மகனா பூமியில பிறந்தாரு..
கைதி : நான்.. பைபிளை படிச்சேம்மா.. முதல்ல படிக்காம இருந்தேன். அப்புறம்.. கொஞ்சம் கொஞ்சமா படிக்க ஆரம்பிச்சேன். முழுசா படிச்சுட்டேன். நான் பண்ணினது எல்லாமே தப்புன்னு எனக்குத் தெரியுது.
ஊழியர் : பிரைஸ் த லார்ட்.
கைதி : என் பாவத்துக்காக நான் கடவுள் கிட்டே மன்னிப்பும் கேட்டுட்டேன்.
ஊழியர் : கவலைப்படாதீங்க… நீங்க குத்தின ஆளு எப்படி இருக்காருன்னு நான் போய் விசாரிச்சு வந்து சொல்றேன். கண்டிப்பா அவரு நல்லா தான் இருப்பாரு, கவலைப்படாதீங்க.
கைதி : ரொம்ப நன்றி. நான் ஒருவேளை வெளியே வந்தேன்னா, ரெண்டு விஷயங்களை நான் உடனே பண்ணணும். அதுக்காகவாச்சும் நான் வெளியே வரணும்.
ஊழியர் : அதென்ன ரெண்டுவிஷயம் ?
கைதி : முதல்ல அம்மா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு அவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு வரணும். ரெண்டாவது அந்த குத்துபட்ட மனுஷன் கிட்டே போய் மன்னிப்பு கேட்டு அவருக்கு என்ன உதவி வேணுமோ செய்யணும்.
ஊழியர் : பிரைஸ் த லார்ட். உண்மையான மனமாற்றம் இது தான். கடவுள் கிட்டேயும், பாதிக்கப்பட்டவங்க கிட்டேயும் மன்னிப்பு கேக்கறது தான் சரியான வழி.
கைதி : பிளீஸ் ப்ரே பார் மி… நான் சுயநல வழியை விட்டு புதிய மனுஷனா வாழ விரும்பறேன்.
ஊழியர் : கண்டிப்பா, லெட்ஸ் ப்ரே… நான் போயிட்டு வரேன்.
ஊழியர் : நல்லா போச்சுப்பா.. நான் ஒரு கைதியைப் பற்றி சொல்லியிருக்கேன்ல, அவங்க அம்மாவைக் கூட முதியோர் இல்லத்தில விட்டிருக்காருன்னு. அவரு யாரையோ குத்தியிருக்காராம், அதுக்காகத் தான் ஜெயில்ல இருக்காரு போல. அவரு யாருன்னு தெரிஞ்சுக்கணும்.
அப்பா : அதுக்கு எந்த ஏரியான்னு தெரிஞ்சா, அந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷன்ல போய் விசாரிச்சு தெரிஞ்சுக்கலாம்.
ஊழியர் : அது போன மார்ச் 15ம் தேதி நடந்திருக்கு.. சாயங்காலம் டைம்.. பிரைம் ஸ்கொயர் பக்கத்துல இருக்கிற ஃபஸ்ட் மெயின் ரோட்.
அப்பா : என்னம்மா சொல்றே.. அன்னிக்கு தான் என்னை ஒருத்தன் குத்தினான் ( சொல்லி விட்டு சட்டென கையைக் கடிக்கிறார் )
ஊழியர் : உங்களை குத்தினாங்களா ? நீங்க ஏதோ ஆக்சிடண்ட் அதான் போலீஸ் கேஸ் ந்னு தானே சொன்னீங்க ?!
அப்பா : சாரிம்மா.. நீங்க பயப்படக் கூடாதுன்னு தான் நான் அப்படி சொன்னேன். ஆக்சுவலி அது ஒரு கொலை முயற்சி மாதிரி. கடவுள் கிருபையினால எனக்கு பெரிசா ஏதும் ஆகாம தப்பிச்சுட்டேன்.
ஊழியர் : அப்படின்னா… என் படிப்புக்கு நீங்க வெச்சிருந்த பணத்தை தான் அவரு திருடிட்டு போனாரா ?
அப்பா : நோ..பிராப்ளம்… என் பொண்ணோட படிப்புக்கு பணம் புரட்ட கடவுள் உதவி செஞ்சாரு. நான் உங்க கேஸை எப்படி சீக்கிரம் முடிக்க முடியும்ன்னு பாத்து உங்களை வெளியே கொண்டு வரேன்.
ஊழியர் : தன்னைக் கொல்லப் போறவங்களையும், கொன்னவங்களையும் இயேசு மன்னிச்சாரு. அவருடைய பார்வை எல்லாமே பிறருடைய தேவை, மீட்பு இப்படி தான் இருந்துச்சு. அவரை பின்பற்றற நாம கூட சுயநலம் இல்லாம, பிறர் நலம் மட்டும் தான் பாக்கணும்.
கைதி : என்ன சொல்றதுன்னு தெரியலேம்மா… ஒரு இயேசு உங்க உள்ளத்துல இப்படி ஒரு மாற்றத்தை தந்திருக்காருன்னா, இனிமே எனக்கு அவர் மட்டும் போதும்மா.. நானும் ஒரு நல்ல வாழ்க்கை வாழப் போறேன். சுயநலத்தை விட்டுட்டு, பிறருக்கு நல்லது செய்து வாழப் போறேன்.
*
காட்சி 9
( சிறை வாசலில் கைதி, ஊழியர் அவரது அப்பா )
கைதி : ரொம்ப நன்றி சார். என்னை இவ்ளோ சீக்கிரம் வெளியே கொண்டு வந்துட்டீங்க.
கைதி : நீங்க பண்றதெல்லாம் பாக்கும்போ, “எதிரியை நேசி” ந்னு இயேசு சொன்னது தான் ஞாபகம் வருது. வெளியே இருந்தப்போ சுயநலம்ங்கற கூட்டுக்குள்ள அடிமையா இருந்தேன். ! உள்ளே வந்தப்புறம் தான் பாவத்தோட கூட்டில இருந்து சுதந்திரம் கிடைச்சது,
ஊ.அப்பா :சிரித்தபடி… நீங்களே இனி நற்செய்தி அறிவிக்கலாம். அவ்ளோ நல்லா பேசறீங்க.
அப்பா : உங்களோட கேஸ் முடிஞ்சப்புறம் தான் வீடடை எல்லாம் ரிலீஸ் பண்ணுவாங்க. அதுவரைக்கும் எங்க வீட்லயே தங்கியிருங்க. சீக்கிரம் கேசை முடிக்க நான் டிரை பண்றேன்.
கைதி : ரொம்ப நன்றிங்கய்யா….
அப்பா : நன்றியை இயேசுவுக்கு சொல்லுங்க.
கைதி : கண்டிப்பா… சுயநலம் எவ்வளவு தப்புன்னு, அது எவ்ளோ பெரிய மன அழுத்தம் தர விஷயம்ன்னும் புரிய வைச்சது அவரு தான்.
அம்மா : வீடு.. ரொம்ப அழகா இருக்கு…
ஊழியர் : ஏன் வெளியே நின்னே பேசிட்டிருக்கோம்.. வாங்க உள்ளே போவோம்.
பின்குரல் :
சுயநலம் என்பது கிறிஸ்தவப் போதனைகளுக்கு எதிரானது. தனக்கு தனக்கு என சேமிக்கும் மனநிலையும், தன்னை மையப்படுத்தும் சிந்தனையும் கடவுளுக்கு எதிரானது. கடவுளையும், அயலானையும் நேசிக்கும் வாழ்க்கையையே இறைவன் விரும்புகிறார். மனித நேயமே இயேசுவின் போதனைகளின் அடிப்படையாகவும் அமைந்திருக்கிறது. சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுக்கு பிறர்நலம் பேணும் சிந்தனைகளையும், தன்னலமற்ற சிந்தனைகளையும் ஊட்டி வளர்க்க வேண்டும். அதற்கு இயேசுவின் வாழ்க்கையும் போதனைகளும் நமக்கு உறுதுணையாய் இருக்கும். சுயநலமற்ற சமூகத்தைக் கட்டியெழுப்புவோம், இறையரசை மண்ணிலே நிலைநாட்டுவோம். நன்றி.
இறைவனின் உயிர்மூச்சான மனிதன், இறைவனின் இயல்பான அன்பினால் கட்டியெழுப்பப்பட வேண்டும். அந்த அடித்தளம் இல்லையேல் மற்ற அனைத்து விஷயங்களும் தனது அர்த்தத்தை இழந்து விடும்.
நீதி, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம் என நாம் பேசுகின்ற, அல்லது அறைகூவல் விடுக்கின்ற அத்தனை விஷயங்களும் அன்பு எனும் இழையினால் கட்டப்படவில்லையேல் வெறும் சட்டத்தின் சடங்காக மாறிப் போய்விடும்.அன்பே உண்மையான சமத்துவத்தைக் கட்டியெழுப்ப முடியும். அன்பின்றி கட்டியெழுப்பப்படும் சமத்துவம் எப்போதுமே வலிமையானதாய் விளங்க முடியாது.
அன்பும், அதன் விளைவான மனித நேயமும் மரணித்துப் போவதால் தான் உலகம் அதிர்ச்சிகரமான ஏற்றத்தாழ்வுகளுடன் பயணித்துக் கொண்டிருக்கிறது. இயற்கையை ஆள மனிதனைப் படைத்தார் கடவுள், மனிதனோ மனிதனை ஆள்வதையே முதல் பணியாகக் கொள்கிறான். சக மனிதனின் வீழ்ச்சியோ, அழிவோ சலனப்படுத்தாத சமூகத்தை அலகையின் பணித்தளம் என சத்தமாய்ச் சொல்லலாம்.
உலகின் மாபெரும் பணக்காரர்களான 1% மக்களிடம் இருக்கும் தொகை 690 கோடி பேரிடம் இருக்கும் மொத்த செல்வத்தை விட இரண்டு மடங்கு அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம்.உலக மக்கள் தொகையே 765 கோடி தான் என்பதை நினைவில் கொள்க. இதில் 73 கோடி பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே தங்கள் வாழ்க்கையை புதைத்துக் கொண்டு வதைபடுபவர்கள் தான். செல்வர்களைத் தாலாட்டும் உலக அரசு, அவர்களுக்கான வரிகளில் நிறைய சலுகைகளைச் செய்வதாகவும் ஒரு அறிக்கை சொல்கிறது.
உலகிலுள்ள மக்களில் 50 சதவீதம் மக்களுடைய ஒரு நாள் சராசரி வருமானம் 350 ரூபாய்கள் என்கிறது ஆய்வு ஒன்று. இது வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், பிந்தங்கிய நாடுகள் என ஒட்டுமொத்த மக்களின் மீதான புள்ளி விவரம்.
உலக அளவில் ஐந்து சிறுவர்களில் ஒருவருக்கு கல்வி மறுக்கப்படுகிறது. அவர்களுடைய எதிர்காலக் கனவானது பொருளாதாரத்தின் கோரப்பற்களில் அரைபட்டு சிதைந்து விடுகிறது. இதில் மாணவிகளின் எண்ணிக்கை, மாணவர்களின் எண்ணிக்கையை விட 21 விழுக்காடு அதிகம் என்பது கவனிக்கத் தக்கது.
செல்வந்தர்களின் ஏகபோக சொகுகு வாழ்க்கைக்கு கோடிகள் கொட்டப்படும் ஒவ்வொரு நாளிலும், அடிப்படை மருத்துவ வசதிக்குக் காசில்லாமல் சுமார் 10000 பேர் இறக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய துயரம் ! ஒவ்வொரு ஆண்டும் மருத்துவச் செலவுகளினால் சுமார் 10 கோடி பேர் வறுமைக்குள் விழுகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய கொடுமை !
வறுமைக்கும், வளமைக்கும் இடையேயான பள்ளத்தாக்கு மிகவும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சுவர்க்கத்தில் இருந்த ஏழை இலாசருக்கும் நரகத்தில் இருந்த செல்வந்தருக்கும் இடையே இருந்த நிரப்ப முடியாத மாபெரும் பள்ளம் போல தான் இன்றைய உலகிலும் இருக்கிறது. இங்கே ஏழைகள் நரகத்திலும், செல்வர்கள் சொர்க்கத்திலும் இருக்கிறார்கள் என்பது தான் வித்தியாசம்.
சமூக ஏற்றத்தாழ்வு என்பது அழிக்க முடியாத கோடு அல்ல, ஒரு ஒரு அரசியல் தேர்வு ! சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய வேண்டியதே அரசியல் தலைவர்களின் கடமை, ஆனால் அதை தொடர்ந்து நழுவ விடும்போது தெரிந்தோ தெரியாமலோ சமூக ஏற்றத்தாழ்வுக்கு அவர்கள் துணை சென்று கொண்டே இருக்கிறார்கள்.
இப்படி பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒரு புறம் மக்களை நசுக்க, பாலியல் வேறுபாடுகளும், இன வேறுபாடுகளும், நிற வேறுபாடுகளும், சாதீய வேறுபாடுகளும் மக்களை இன்னொரு புறமிருந்து நசுக்கித் தள்ளுகிறது. முடவனின் கால்களில் கட்டப்படும் சங்கிலிகளைப் போல இவை ஏழைகளை வாழுமிடத்திலேயே கல்லறை கட்டிக்கொள்ள நெட்டித் தள்ளுகின்றன.
சமத்துவம் என்றும், மனிதநேயம் என்றும் குரல்கொடுப்பவர்கள் இன்றைக்கு அரிதாகிவிட்டார்கள். சமநிலையற்ற வாழ்க்கையே இயல்பான ஒன்று என ஏற்கப் பழகிவிட்டார்கள். அதனால் தான் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான குரல் இன்று ஒலிப்பதில்லை. அப்படி ஒலிக்கின்ற குரல்வளைகளும் பூட்ஸ் கால்களால் நசுக்கப்பட்டு அங்கொன்றும் இங்குமாக புதைபட்டுப் போகின்றன.
இந்த சூழலில் விவிலியம் நமக்கு என்ன கற்றுத் தருகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. கிறிஸ்தவத்தின் பார்வையில் சமத்துவம் என்றால் என்ன எனும் தெளிவையும் பெற்றுக் கொள்தல் தேவையாகிறது.
வேறுபாடு அற்றவர்கள்
“இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்” என்கிறது பைபிள்.
கிறிஸ்தவர்கள் எனும் வட்டத்துக்குள், பாகுபாடு என்பது இல்லை. கிறிஸ்துவுக்குள் இருக்கின்ற அனைவருமே ஒன்றாய் இருக்கிறார்கள் என்பதே இதன் பொருள். கிறிஸ்தவம் சொல்லும் சமத்துவத்துக்கும் உலகம் கற்பிக்கும் சமத்துவத்துக்கும் வேறுபாடு உண்டு. இறைவனின் படைப்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் படைக்கப்பட்டுள்ளனர். அவற்றில் வேறுபாடுகள் உண்டு. ஆனால் இயேசு எனும் தலைமையின் கீழ் அனைவரும் சமம்.
இயேசு எனும் செடியில் இணைந்த கிளைகளாய் அனைவரும் சமம். யாரும் யாருக்கும் உயர்ந்தவர்கள் இல்லை, யாரும் யாரை விடவும் தாழ்ந்தவர்களும் இல்லை. எந்த பெரிய கிளையாய் இருந்தாலும், வெட்டப்பட்டால் விறகு தான். எந்த ஒரு கிளையும் இன்னொரு கிளையைத் தாழ்வாக நினைக்கக் கூடாது. காரணம் செடியானது தாவரத்தின் அத்தனை கிளைகளுக்குமாய் தன் வேர்கள் உறிஞ்சும் நீரைப் பகிர்ந்தளிக்கிறது.
இணைந்து வாழ படைக்கப்பட்டவர்கள்.
கடவுளுடைய படைப்பில் ஒவ்வொருவரும், பிறருக்காகப் படைக்கப்பட்டவர்கள். எதுவுமே தனித்தனியே இயங்குவதற்கானதல்ல. ஆதாம் பெயரிட்ட விலங்குகள் முதல், உலகின் கடைசி மனிதன் வரை இயற்கையோடும், பிறரோடும் இணைந்து வாழவேண்டும் என்பதற்காகவே படைக்கப்பட்டவர்கள். இணைந்து வாழ்பவர்களே விண்ணகம் செல்கிறார்கள் என்பதையே இயேசு மறைமுகமாய் இறுதித் தீர்வை நிகழ்வின் மூலமாகச் சொல்கிறார்.
“ஆண்டவரோடு இணைக்கப்பட்ட நிலையில் ஆணின்றிப் பெண்ணில்லை; பெண்ணின்றி ஆணில்லை” என்கிறது விவிலியம். அயலாய் உவமையில் பிறருக்காய் வாழ்வதன் தேவையை விளக்குகிறது விவிலியம். மொத்தத்தின் விவிலியமானது தனித்து வாழும் செல்வந்தர்களை நிராகரித்து விட்டு, இணைந்து வாழும் ஏழைகளுக்காகவே பேசுகிறது.
சமமாய் பார்க்கப்படுபவர்கள்
கடவுள் அவர் ஓர வஞ்சனை செய்வதில்லை என்கிறது இணைச்சட்டம். ஒருவரை வாழவைத்து இன்னொருவரை வீழ வைக்கும் செயலை கடவுள் செய்வதில்லை. அதை மனிதனே தேர்ந்தெடுக்கிறான். களஞ்சியங்களின் அளவைப் பெரிதாக்குவது மனிதனின் செயல். இதயத்தின் அளவைப் பெரிதாக்கச் சொல்வதே இறைவனின் இயல்பு. இந்தக் குறுகியப் புவி வாழ்க்கையில் மனிதன் பிறருக்காய் வாழ்வதில் தான் விண்ணுல வாழ்வுக்கான நுழைவே நிர்ணயிக்கப்படுகிறது.
தன்னைப் போல அயலானை நேசி எனும் இயேசுவின் வார்த்தையானது மனித நேயத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் ஒற்றை போதனை. அதில் தான் ஒட்டு மொத்த இயேசுவின் வாழ்க்கையும் அடங்கியிருக்கிறது. இயேசுவின் வாழ்க்கை அன்பும் சமத்துவமும் கலந்த கூட்டுறவாய் இருப்பதை ஒவ்வொரு நிகழ்விலும் நாம் காணலாம். தன்னைப் போல அயலானை நேசிப்பது என்பது தனது நிலைக்கு ஏழைகளையும், நிராகரிக்கப்பட்டவர்களையும் தூக்கிக் கொண்டு வருவது தான்.
அமைதியாய் வாழவேண்டியவர்கள்
“அனைவருடனும் அமைதியாய் இருக்க முயலுங்கள்; தூய்மையை நாடுங்கள். தூய்மையின்றி எவரும் ஆண்டவரைக் காணமாட்டார்” என்கிறது பைபிள். அமைதியாய் வாழ்வது என்பது அன்பைப் பகிர்வதே. பசியாய் இருக்கும் ஒருவரிடம், நலமே சென்று வா என்பதல்ல, அவன் நலமாய் வாழ என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதே தேவை என்கிறது பைபிள். அனைவருடனும் அமைதியாய் வாழ்வது என்பது பிறருடைய வாழ்க்கையில் அடிக்கின்ற புயல்களை அடக்க உதவுவது தான்.
தூய்மையை நாடுபவர்கள் பிறர் நலம் பேண வேண்டும். தன்னலம் துறந்தவர்களாக இருக்க வேண்டும். ஏழை இலாசர்களைக் கவனிக்காத செல்வந்தர்களும், வறியவர்களைப் புறக்கணிக்கும் வலியவர்களும் நிச்சயமாய் இறைவனின் ஆட்சியில் பங்கு கொள்வதில்லை. அன்பும் சமத்துவமும் நிறைந்த ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப தன்னால் முடிந்த அளவு பங்களிப்பு செய்ய வேண்டியது சமூக அழைப்பல்ல, ஆன்மீக அழைப்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
எல்லோரும் எல்லாம் செய்வதல்ல சமத்துவம்.
“பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல; தூது அனுப்பப்பட்டவரும் அவரை அனுப்பியவரை விடப் பெரியவர் அல்ல” என்கிறார் இயேசு. சமத்துவம் என்பது ஒரே பணியைச் செய்வதல்ல. சமத்துவம் என்பது அன்பின் அடிப்படையில் அனைவரும் சமம் என நடத்துவதே. அதனால் தன் பணி என்று வரும்போது ,”அப்பாலே போ சாத்தானே’ என்று கடிந்து கொண்ட இயேசு, அன்பு எனும் அடிப்படையில் சீடர்களின் கால்களைக் கூட கழுவுகிறார்.
சமத்துவம் என்பது எல்லோரையும் முக்கியமானவர்களாக நினைப்பது. எல்லோரும் இறைவனின் சாயல் என நினைப்பது. எல்லோரும் நம்மைப் போன்ற மனிதர்கள் என நினைப்பது. எல்லோருமே இயேசு எனும் உடலின் உறுப்புகள் என உணர்வது. எப்போது நாம் இயேசுவோடு இணைந்து வாழவில்லையோ அப்போது சமத்துவம் நம்மிடமிருந்து விடைபெறுகிறது என்பது தான் யதார்த்தம்.
சமத்துவமும், அன்பும் கலந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப, நாம் முதலில் செய்ய வேண்டியது இறைமகன் இயேசுவோடு முழுமையாக இணைந்து வாழ்வதே