Posted in Christianity, Desopakari

பேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்

பேரிடர் காலங்களில், பேரன்பு பகிர்தல்

நற்செய்தி அறிவித்தல் எப்போதுமே ஒரே மாதிரி இருந்ததில்லை. காலத்துக்குத் தக்கபடி அது தன்னை மாற்றியமைத்துக் கொண்டே இருக்கிறது.  ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான நற்செய்தி அறிவித்தல் நடந்ததை வரலாறு நமக்குச் சொல்லித் தருகிறது. படுகொலை செய்யப்படுவோம் என தங்கள் உயிருக்குப் பயந்து அறைகளில் அடைபட்டு ஆரம்ப காலங்களில் மக்கள் நற்செய்தியை அறிவித்தார்கள், வழிபாடுகளை நடத்தினார்கள். குகைகள், மலைப்பிரதேசங்கள் போன்ற இடங்களிலும் ஒளிந்து ஒளிந்து நற்செய்தியை அறிவித்தார்கள்.

பல குறியீடுகளை ஆதிகாலக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தினார்கள். குறிப்பாக மீன் குறியீடு அந்தக் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குறியீடாய் இருந்தது. மீன் அடையாளம் வரையப்பட்ட இடங்களை ஆராதனை இடங்களாக ரகசியக் கிறிஸ்தவர்கள் புரிந்து கொண்டார்கள். அத்தகைய இடங்களில் அவர்கள் மறைந்திருந்து நற்செய்தியை அறிவித்தார்கள். 

பைபிள் இல்லாத, எதுவும் எழுத்து வடிவம் பெறாத அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலும் செவி வழிச் செய்திகளே நற்செய்திகளாய் மக்களுக்குப் பகிரப்பட்டு வந்தன. பவுலின் காலத்தில் நற்செய்தி அறிவித்தல் பரவலான வீச்சை அடைந்தது. எல்லா இடங்களுக்கும் சென்று போதிக்க முடியாத அந்தக் காலகட்டத்தில் பவுல் கடிதங்களை எழுதி பல இடங்களுக்கும் அனுப்பினார். அதுவே நற்செய்தியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக அமைந்தது. பைபிளில் இடம்பெற்று இன்று வரை நம்மை வழிநடத்தியபடியும் இருக்கிறது.

கடவுள் நம்மை ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்ப பயன்படுத்துகிறார். பேசுவதற்கான சூழலில் பேச அழைக்கிறார், எழுதுவதற்கான சூழலில் எழுத அழைக்கிறார், செயல்களுக்கான சூழலில் செயல்பட அழைக்கிறார். அவரது அழைப்பு எப்படி இருக்கிறதோ அதற்குத் தக்கபடி நாம் நம்மை ஒப்புக்கொடுப்பது ஒன்றே நற்செய்தி அறிவித்தலுக்கான அடிப்படையாய் அமைகிறது.

பேரிடர் காலங்கள் எப்போதுமே ஆன்மீகச் செழுமையை அதிகரித்திருக்கின்றன. எகிப்தில் நானூறு ஆண்டுகள் சுகமான இறைச்சியும் அப்பமும் சாப்பிட்டு வாழ்ந்து வந்த எபிரேயர்களுக்கு விடுதலை தேவைப்படவில்லை. எப்போது நுகத்தடி கடினமானதோ அப்போது தான் பக்தி அதிகரித்தது. அப்போது தான் செபம் அதிகரித்தது. அப்போது தான் கடவுளின் வல்லமை செயல்பட்டது. விடுதலை கிடைத்தது. நசுக்க நசுக்க அதிகரிக்கும் மூட்டைப் பூச்சி போல அழிவின் விளிம்பில் தான் ஆன்மீகம் விஸ்வரூபம் எடுக்கிறது. 

ஒன்றை மட்டும் நாம் மனதில் எழுதவேண்டும். சர்வதேச அழிவைக் கொண்டு வரும் கோவிட் அல்ல கொள்ளை நோய் ! பாவமே அதை விடப் பெரிய கொள்ளை நோய். நம்மை முழுமையாய் அழிக்கும் வல்லமை பாவத்துக்கே உண்டு. ஆனால், ஒரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் அதற்கு தடுப்பூசி நமக்கு உண்டு. இறைமகன் இயேசுவின் இரத்தமே அது. 

இப்போதைய பேரிடர் காலமும் நமக்கு அதைத் தான் கற்றுத் தருகிறது. சமூக இடைவெளி போல, பாவத்தை விட்டு விலகியிருப்பதை அது நமக்குக் கற்றுத் தருகிறது. சுத்தமான செயல்களைச் செய்ய வேண்டும், தப்பித் தவறி கூட பாவம் நம் மீது படிந்து விடக்கூடாது என்பதில் சானிடைசர் பயன்படுத்தும் அக்கறை தேவைப்படுகிறது. தவறானவற்றைப் பேசாமல் இருக்கும் முகக் கவசம் தேவைப்படுகிறது. வருமுன் காக்கும் கபசுரக் குடிநீர் போலவோ, மாத்திரைகள் போலவோ நமக்கு இறைவார்த்தைகள் தேவைப்படுகின்றன. 

இன்றைய கோவிட் காலம் நமது நற்செய்தி அறிவித்தலை முடக்கியிருப்பதாக பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் உலகெங்கும் நற்செய்தி பரவுதலுக்கான ஒரு புதிய விதையை இந்த காலம் நமக்கு வழங்கியிருக்கிறது. இந்தக் கால கட்டத்தில் புதுமையான பல வகைகளில் நற்செய்தி அறிவித்தல் நடைபெறுகிறது. 

  1. ஆன்லைன் ஆராதனைகள். 

‘திருச்சபை’ என்பது இறைமக்களின் கூட்டம், அது ஒரு கட்டிடம் அல்ல எனும் உண்மை இந்த காலகட்டத்தில் மீண்டும் ஒரு முறை அழுத்தமாய் எழுதப்படுகிறது. ரெண்டு கோடி ரூபாய் செலவாக்கிக் கட்டுகின்ற மணிக்கூண்டு அல்ல, விசாலமாய்க் கட்டுகின்ற ஆலயம் அல்ல. இறைமக்கள் இறைவனைத் தேடி வருகின்ற கூடுகை தான் திருச்சபை. அதை இன்றைய டிஜிடல் உலகம் யதார்த்தமாக்கிக் காட்டியிருக்கிறது. ஆராதனைகள் ஆன்லைன் வசதிகளில் வரும்போது பல மக்கள், பல முறை பார்க்கவும் முடிகிறது. தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு நேரத்தைத் தவற விட்டவர்கள் இன்னொரு நாள் அதைப் பாக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது

யூடியூப், ஃபேஸ்புக், சமூக வலைத்தளங்கள் போன்றவையெல்லாம் ஆன்மிக வளர்ச்சிக்குப் பயன்படும் எனும் புரிதல் இன்றைக்கு திருச்சபைக்கு வந்திருக்கிறது. சாதி இன பேதங்களற்ற வீதியில் ஆராதனைகள் நடக்கின்றன. ஆலயங்களுக்குள் நிலவி வந்த சாதீய குழுக்களெல்லாம் டிஜிடல் வெளியில் காணாமல் போய்விட்டன. ஒரு சமத்துவ நற்செய்தி பரிமாறப்படுகிறது.

  1. டிஜிடல் கற்றல் 

ஆலய குழுக்கள், பைபிள் ஸ்டடி போன்ற செயல்களெல்லாம் ஆன்லைன் வீடியோக்கள் மூலம் நடப்பதால் எல்லோருமே பங்குபெற முடிகிறது. ஊர்ல இல்ல, வெளியூர்ல இருக்கேன் எனும் சாக்குப் போக்குகள் இன்றி ஸூம் கால்களோ, கூகிள் டியோவோ, டீம்ஸோ எல்லாரையும் வீடியோ கால் மூலமாக இணைக்கிறது. பல நாடுகளில் இருப்பவர்கள் கூட சொந்த ஊரிலுள்ள ஒரு குழுவோடு இணைகின்ற ஒரு சூழலையும் இது உருவாக்கித் தருகிறது. 

நல்ல செய்தி வழங்கும் நபர்களை ஒரு செய்திக்காக அணுகுவது எளிதாக இருக்கிறது. அதிக செலவில்லாமல், பயணத்தின் அலைச்சல் ஏதும் இல்லாமல் அவர்களும் இந்தப் பணியைச் செய்ய வாய்ப்புக் கிடைக்கிறது. நற்செய்தி அறிவித்தலும், நற்செய்தியை அறிந்து கொள்தலும் ஒருவகையில் எளிதாகியிருக்கிறது என்றே சொல்லலாம்.

  1. அன்பின் செயல்கள்

பேரிடர் காலங்கள் அன்பின் செயல்களை அதிகப்படுத்துவதற்கான காலங்கள். மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து மிகக் கடுமையான சூழலில் வாழ்கின்றனர். முன்பெப்போதும் இல்லாத அளவுக்கு அன்பின் செயல்களைச் செய்ய நமக்கு இன்றைக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும். செயல்களால் அறிவிக்கும் நற்செய்தியே மிக முக்கியமானது என்பதை இயேசு பல முறை குறிப்பிடுகிறார். செயல்களற்ற விசுவாசம் செல்லரித்துப் போகும், செயலுடன் கூடிய விசுவாசமே விண்ணகத்தில் செல்வமாய் மாறும். இந்த உண்மையைப் புரிந்து கொள்ள இந்த பேரிடர் காலம் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

நற்செய்தி அறிவித்தலை கரம் கூப்பும் நிலையிலிருந்து, கரம் நீட்டும் நிலைக்கு பேரிடர் காலம் கொண்டு வந்திருக்கிறது. நம்மைச் சுற்றியிருக்கும் மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அவர்களுக்கு உதவும் மனநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

  1. வீடியோ பதிவுகள் 

டிஜிடல் நற்செய்தி அறிவித்தலிலுள்ள ஒரு மிகப்பெரிய குறைபாடு என்னவெனில் நேருக்கு நேர் நாம் பேசும்போது கிடைக்கின்ற அன்னியோன்யமும், உடல் மொழிப் பரிமாற்றமும் கிடைக்காது என்பது தான். நேரடியான செய்தி நீண்ட நேரம் இருந்தால் கூட ரசிக்கும்படியாய் இருப்பதற்குக் காரணம் அந்த நேரடி அனுபவம் தான். டிஜிடல் வெளியில் வீடியோக்கள் மிகச் சுருக்கமாக, நேரடியாக ஒரு விஷயத்தை ஒரு நிகழ்வின் மூலமாகவோ, ஒரு கதையின் மூலமாகவோ சொல்வதாக இருப்பது சிறப்பானது. இன்றைக்கு நீண்டநேரம் வீடுகளிலேயே அடைபடும் சூழல் நிலவுகிறது. அப்போது நற்செய்தியை இத்தகைய சிறு வீடியோக்கள், சிறு குறுச் செய்திகள் போன்றவை சுமந்து செல்லும். 

எவ்வளவு புதுமையாக அந்தச் செய்தியைச் சொல்ல முடியும் என்பதைப் பொறுத்து அந்த செய்தி பலரை சென்றடையும் என்பதில் சந்தேகமில்லை. இறைவனின் அருளை நாடினால் அவர் இதில் மிகத் தெளிவான வழியைக் காட்டுவார் என்பதில் சந்தேகமில்லை. 

  1. தனித்திருக்கிறோம், தனியாக அல்ல !

நாம் வீடுகளில் தனித்திருக்கிறோம். தனியாக அல்ல, நம்முடன் இறைவன் இருக்கிறார்.  இறைவன் எங்கே இருக்கிறார் ? இறைவன் என்ன செய்து கொண்டிருக்கிறார் ? எனும் கேள்விகள் தேவையற்றவை. மீனுக்குள் மூழ்கிக் கிடந்த போது யோனா, கடவுளைப் புகழ்ந்தார். நமது அறைகள் அதை விட வசதியானவை. நற்செய்தி அறிவித்தலுக்காகவும், மக்களுக்காகவும், உலகிற்காகவும் செபிக்க நமக்கு மாபெரும் வாய்ப்பைத் தருகிறது. 

நாம் விலகியிருக்கிறோம், உலகின் நெருக்கத்திலிருந்து, ஆனால் கடவுளின் அன்பிலிருந்து அல்ல. நாம் அடைபட்டுக் கிடக்கிறோம், ஆனால் இறைவனில் சுதந்தரமாய் இருக்கிறோம். இந்த உணர்வு ஒன்றே போதும் நம்மை எந்த சூழ்நிலையும் நற்செய்தி அறிவித்தலுக்குத் தயாராக்கும். இயேசு வாழ்நாளில் பயணித்த தூரம் சுமார் 200 மைல்கள் என்கிறது வரலாற்றுக் கணக்கு, இன்றைய டிஜிடல் வசதிகளோ கண நேரத்தில் நம்மை பல்லாயிரம் மைல்கள் பயணிக்க வைக்கிறது. இந்த சூழ்நிலையை இறைவனின் அருளுடன் பயன்படுத்துவோம். 

பேரிடர் காலம் அச்சத்தின் காலமல்ல, இறைவனின் பேரன்பைப் பறைசாற்றும் காலம்.

*

சேவியர்

Desopakari Oct 2020

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s