Posted in Christianity, Desopakari

குழந்தைகளும், இறைமாட்சியும் !

குழந்தைகளும், இறைமாட்சியும் !

*

குழந்தைகள் !

இந்த வார்த்தையே நமது மன வெளிகளில் புன்னகை விதைகளைத் தூவும் வல்லமை படைத்தது. எத்தனை பெரிய சோகத்தின் அலைகள் நமது பாலை வெளிகளில் புரண்டு படுத்தாலும், ஒரு சின்னக் குழந்தையின் புன்னகைக் கைக்குட்டை கிடைத்தால் அந்த சோகம் புதையுண்டு போய்விடும். மழலைகளோடு விளையாடுகையில் மலைபோன்ற மன பாரங்கள் கூட பழுத்த இலை போல உதிர்த்து பறந்து மறையும். 

குழந்தைகள் வாழ்வில் இருளான தாழ்வாரங்களை புன்னகைத் தூரிகை கொண்டு வெள்ளையடிக்கப் பிறந்தவர்கள். வாழ்வின் அழுக்கான சுவர்களைத் தங்கள் ஆனந்தக் கிறுக்கல்களால் புதுப்பிப்பவர்கள்.  அவர்கள் விண்ணகத்தின் விழுதுகள், மண்ணகத்தின் விருதுகள். குழந்தைகள் வாழ்வில் இருளான தாழ்வாரங்களை புன்னகைத் தூரிகை கொண்டு வெள்ளையடிக்கப் பிறந்தவர்கள். வாழ்வின் அழுக்கான சுவர்களைத் தங்கள் ஆனந்தக் கிறுக்கல்களால் புதுப்பிப்பவர்கள்.  அவர்கள் விண்ணகத்தின் விழுதுகள், மண்ணகத்தின் விருதுகள். 

குழந்தைகள் உறவுப் பாலங்கள். பல குடும்பங்களிடையே இருக்கின்ற உறவு விரிசல்கள் ‘குழந்தைகளின்’ வருகையோடு விடைபெறுவதை நாம் காண்கிறோம். பகையின் வாள்வீச்சுகளால் பிரிந்து கிடக்கும் உறவின் உதிரத் துளிகள் குழந்தைகளின் வருகையோடு நட்பு பாராட்டுவதையும் புதுப்பிப்பவர்கள காண்கிறோம். உறவின் பிணைப்புகளான , குழந்தைகள் இதயங்களின் இணைப்பான்கள் !  

இப்படிப்பட்ட வாழ்வின் உன்னதமான குழந்தைகள் சமூகத்தின் உன்னதமான நிலையில் இருக்கிறார்களா என்றால் இல்லை என்று துயரத்துடன் முனக வேண்டியிருக்கிறது. சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் உயிரிழக்கும் குழந்தைகள் ஆண்டுக்கு சராசரி  31 இலட்சம். அதாவது வளரும் நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள், பிந்தங்கிய நாடுகள் இவற்றில் வாழும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 45 விழுக்காடு குழந்தைகள் வாழ்வை இழக்கின்றனர் ! இது யூனிசெஃப் பின் அதிகாரபூர்வ புள்ளி விவரம்.  

உலக அளவில் கடந்த பல ஆண்டுகளாக சேர்க்கப்பட்ட புள்ளி விவரங்களைக் கொண்டு ஒரு சராசரியை உருவாக்கினால் நமக்கு அதிச்சியூட்டும் ஒரு தகவல் கிடைக்கிறது. ஒவ்வொரு பத்து வினாடிக்கும் ஒரு குழந்தை எங்கோ ஒரு மூலையில் பசியால் இறந்து கொண்டிருக்கிறது என்பது தான் அது ! 

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள், குழந்தைகள் மீதான கல்வித் தாக்குதல், குழந்தைகள் மீதான சுகாதாரத் தாக்குதல் என அவர்களின் உலகம் போர்க்களத்தில் எரிந்து கொண்டிருப்பதைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். எந்த குழந்தை இறைவனின் வரமாக, பூமியின் புன்னகைக் கரமாக இருக்கிறதோ, அந்த பட்டாம்பூச்சிக் குழந்தைகளின் சிறகுகளைப் பாதுகாக்கும் வலிமை நமது சுயநலச் சமூகத்துக்கு இல்லாமல் போய்விட்டது என்பது தான் துயரம். 

குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டியதும், அவர்களை அடுத்த நிலைக்காகத் தயாராக்க வேண்டியதும் நமது கடமைகளில் ஒன்று என்பதை உணரவேண்டும். நமது குடும்பங்களில், நமது உறவினர்களிடையே, நமது நண்பர்களிடையே, நமது அயலாரிடையே உதவி தேவைப்படும் குழந்தைகளை நெஞ்சோடு அரவணைத்தாலே சமூகப் பரவலாய் அந்த அன்பின் செயல் பற்றிப் படரும். 

குழந்தைகள் !

இயேசு குழந்தைகளை இறைமாட்சியின் அடையாளங்களாகப் பார்த்தார். குழந்தைகளை விண்வாழ்வுக்கான போதனையின் மையமாகப் பார்த்தார். 

  1. குழந்தைகளை ஏற்பது, இறைமாட்சியின் அடையாளம்.

சிறுபிள்ளைகளுள்ஒன்றைஎன்பெயரால்ஏற்றுக்கொள்பவர்எவரும்என்னையேஏற்றுக்கொள்கிறார் ( மார்க் 9 : 37 )

இயேசுவின் இந்தப் போதனையானது முதல் மூன்று நூற்றாண்டுகளில் கிறிஸ்தவர்களிடையே மிகப்பெரிய உந்துதலை உருவாக்கியதாய் வரலாறு சொல்கிறது. ஆதரவற்ற குழந்தைகள், தேவையில் உழலும் குழந்தைகள், புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள் போன்றவர்களை ‘கிறிஸ்துவின் பெயரால் ஏற்றுக் கொள்கிறேன்” என ஏற்றுக் கொண்டு அவர்களை தங்கள் குழந்தைகளைப் போல வளர்க்கும் சூழல் ஆரம்ப கால கிறிஸ்தவர்களிடையே மிக அதிகமாய் இருந்தது. அந்தப் பழக்கம் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் விடைபெற்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இன்றைக்குக் குழந்தைகளைப் பாதுகாப்பதோ, அவர்களுக்கு உதவுவதோ அனாதை இல்லங்களில் பணியாகவோ, தொண்டு நிறுவனங்களின் பணியாகவோ ஒதுக்கப்பட்டு விட்டது. நமது சிந்தனைகளை இறைவனின் போதனையோடு ஒருமுறை ஒப்பிட்டுப் பார்ப்போம். இயேசுவின் பெயரால் சிறு பிள்ளை ஒன்றின் தேவையை முழுமையாய் சந்திக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தால் ஏற்றுக் கொள்வோமா ? அதுவே இயேசுவையும், தந்தையும் ஒரு சேர ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பு என்பதை உணர்வோமா ?

  1. குழந்தையாய் மாறுவது, இறை மாட்சியின் அடையாளம்

நீங்கள்மனந்திரும்பிச்சிறுபிள்ளைகளைப்போல்ஆகாவிட்டால்விண்ணரசில்புகமாட்டீர்கள்எனஉறுதியாகஉங்களுக்குச்சொல்கிறேன் “ ( மத்தேயு 18 : 3 ) என்றார்இயேசு

குழந்தைகளைப் பற்றி அறிய வேண்டுமெனில் குழந்தைகளைப் போல மாறவேண்டும் என்கிறது உளவியல். குழந்தைகளோடு விளையாடும்போது அவர்களோடு தரையில் தவழ்ந்து விளையாடவேண்டும் என்கிறது மருத்துவம். குழந்தைகளோடு பழகும் போது அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம் எனும் சிந்தனையோடு பழக வேண்டும் என்கிறது தத்துவயியல். குழந்தைகளைப் போல மாறினால் மட்டுமே விண்ணகம் என்கிறது ஆன்மிகம். 

சிறு பிள்ளைகள் எதற்கும் தந்தையின் அனுமதியை எதிர்பார்க்கும். தன் தேவைகளைத் தந்தையிடம் கேட்கும். தனது விருப்பங்களை அன்னையிடம் முன்வைக்கும். தனக்கு எது தேவையென்றாலும் அதை பெற்றோர் நிறைவேற்ற வேண்டும் என வந்து நிற்கும். தனது இயலாமையை முழுமையாய் ஏற்றுக் கொண்டு தனது பெற்றோரைச் சார்ந்து வாழ்வதே குழந்தைகளின் இயல்பு. 

நாம் நமது சுயத்தைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு, மனம் மாறி குழந்தைகளைப் போல, இறைவனையே சரணடையும் நிலை வேண்டும் என்கிறார் இயேசு. அடித்தாலும் தாயின் முந்தானையைக் கட்டிக் கொண்டே அழும் குழந்தையைப் போல, தண்டித்தாலும் இறைவனின் பாதத்தையே பற்றிக் கொள்ளும் நிலை வேண்டும் என்கிறார்.  குழந்தைகளின் இயல்புகளான கள்ளம் கபடமின்மை, பழி பகை உணர்ச்சியின்மை, கசப்பை மறக்கும் தன்மை என பட்டியலிடும் அனைத்துமே இறை மாட்சியை நாம் வெளிப்படுத்தத் தேவையானவை என்பதைப் புரிய வைக்கிறார்.

  1. நடுநாயகமாய்குழந்தைகள், இறைமாட்சியின்அடையாளம்.

ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி,… இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர் ( மத்தேயு 18 : 1-4 ) என்றார் இயேசு.

விண்ணகத்தில் பெரியவன் யார் எனும் கேள்வி எழுந்தபோது இயேசு சிறுபிள்ளையை அழைத்து அவர்களின் நடுவே நிறுத்துகிறார். குழந்தைகளை பெரியவர்களின் மையமாக்கி புதுமை செய்கிறார் இயேசு.  குழந்தைகள் இறைவனால் தரப்படுபவர்கள், குழந்தைகள் இறைவனால் பாதுகாக்கப்படுபவர்கள், குழந்தைகள் பெற்றோரால் வளர்க்கப்பட வேண்டியவர்கள், அவர்கள் மனுக்குலத்தின் மையம் ! 

குழந்தைகள் வாழ்வின் மையம். அந்த அச்சாணியை நிலைகுலைய வைப்பவர்கள் மீது இயேசுவின் கோபம் எழுகிறது. அத்தகைய இடறல் உண்டாக்குபவர்கள் கழுத்தில் எந்திரக் கல்லோடு கடலுக்குள் மூழ்கடிக்கப்பட வேண்டும் எனும் மிகக் கடுமையான வார்த்தைப் பிரயோகத்தை இயேசு பயன்படுத்துகிறார். சிறுவர்களைப் பாவத்துக்கு அழைத்துச் செல்வது மன்னிக்க முடியாத பாவம் என்பதை இயேசு அழுத்தம் திருத்தமாய்ச் சொல்கிறார்.

நமது வாழ்வின் மையமாக குழந்தைகள் இருப்பது இறைமாட்சியின் அடையாளம். குழந்தையின் இயல்புகளும், குழந்தைகளின் வாழ்வும், குழந்தைகள் மீதான கரிசனையும், குழந்தைகள் மீதான தார்மீகப் பொறுப்பும் நமக்கு இருப்பது அவசியம்.

  1. சிறுவரைப்பெருமையாய்க்கருதுங்கள், அதுஇறைமாட்சியின்அடையாளம்

இச்சிறியோருள்ஒருவரையும்நீங்கள்இழிவாகக்கருதவேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடையவானதூதர்கள்என்விண்ணகத்தந்தையின்திருமுன்எப்பொழுதும்இருக்கின்றார்கள் ( மத்தேயு 18 :10 ) என்கிறார்இயேசு.

சிறுவர்களுக்கான வானதூதர்கள் விண்ணகத்தில் இருக்கிறார்கள் ! அவர்கள் தங்கள் தூபங்களிலிருந்து வேண்டுதல் எனும் புகையை எழுப்புகிறார்கள் ! விவிலியத்துக்கு வெளியே உள்ள பல நூல்கள் வானதூதர்களைப் பற்றி மிக அழகாக வியப்பாகப் பேசுகின்றன. ஏனோக்கின் நூல் எனும் புத்தகம் வானதூதர், இயேசு, இரண்டாம் வருகை, விண்ணகத்தில் நடப்பது என்ன போன்ற பல விஷயங்களை நுணுக்கமாகப் பேசுகிறது. இந்த நூல் புதிய ஏற்பாட்டிலும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது என்பது நாம் அறிந்ததே. 

சிறுவரை இழிவாகக் கருதுவது என்பது இயேசுவையே இழிவாகக் கருதுவதைப் போல. சிறுவர்களை மரியாதையுடன் அழைக்க வேண்டுமா, மரியாதையுடன் நடத்த வேண்டுமா, வார்த்தைகளின் கனிவுடன் பேச வேண்டுமா, அவர்களை நம்மை விட குறைந்தவர்களாகப் பார்க்க வேண்டுமா, குழந்தைத் தொழிலார்களாய் நடத்த முடியுமா ? , அவர்கள் கருத்துகளை மதிக்க வேண்டுமா ? எனும் அத்தனை கேள்விகளுக்குமான விடையாக இந்த வசனம் அமைகிறது. 

சிறுவரை பெருமைக்குரியவராகக் கருதுங்கள், காரணம் அவர்களே விண்ணகம் நுழைவது எப்படி என்பதைத் தங்கள் வாழ்வின் மூலம் நமக்கு விளக்கிச் சொல்கின்றனர். 

  1. சிறுபிள்ளைபோல்ஏற்பது, இறைமாட்சியின்அடையாளம்

இறையாட்சியைச்சிறுபிள்ளையைப்போல்ஏற்றுக்கொள்ளாதோர்அதற்குஉட்படமாட்டார்எனநான்உறுதியாகஉங்களுக்குச்சொல்கிறேன் ( லூக்கா 18 : 17 ) என்றார்இயேசு.

இயேசுவின் வாழ்க்கையில் சிறுவர்களை நலமாக்கி, சிறுவர்களின் பேய் விரட்டி, சிறுவர்களை ஆசீர்வதித்து, உயிர்ப்பித்து, போதித்து இரண்டறக் கலந்து வாழ்ந்ததை நாம் பார்க்கலாம். ஒருவகையில் இயேசுவே ஒரு குழந்தையாய்த் தான் இந்த பூமியில் வாழ்ந்தார். அதனால் தான், ‘நமக்கு ஒரு பாலகன் பிறந்தான்’ என விவிலியம் இயேசுவை ஒரு பாலகனாக நமக்கு அறிமுகம் செய்கிறது. 

சிறுவர்களின் வாயால் ஓசானா என புகழப்படுவதை இறைமகன் இயேசுவின் எருசலேம் பயணம் நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது. 

சிறுவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் பொருட்களை உலக அளவீடுகளின் படி அளவிட்டு ஏற்பதில்லை, முழுமையாய் ஏற்றுக் கொள்கிறார்கள். இறையாட்சி என்பது கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டு விடைபெறும் விஷயமல்ல, அப்படியே ஏற்றுக் கொண்டு செயல்படும் விசுவாசம் என்பதையே இயேசு நமக்குப் புரிய வைக்கிறார். 

சிறுவர்களுக்கு மறைக் கல்வியை சிறுவயதிலிருந்தே போதிக்க வேண்டும் எனும் கருத்தை நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித ஜெரோம் அழுத்தமாகவே பதிவு செய்திருந்தார். இன்றைக்கு நமது திருச்சபைகள் சிறுவர்களை முக்கியத்துவப்படுத்துகின்றன. சிறுவர் ஞாயிறுபள்ளிகள், மறைக்கல்விகள் போன்றவை அவர்களை களப்பணியாற்றவும் கற்றுக் கொடுக்கின்றன. சிறுவர்களின் பயணமும், பங்களிப்பும் இறைவனுக்கு மாட்சியை அளித்துக் கொண்டே இருக்கின்றன. 

சிறுவர்களை ஏற்றுக் கொள்வோம், அதன் மூலம் இறைமகன் விரும்பிய மாட்சியை அவருக்கு அளிப்போம்

*

சேவியர்