புதுப்பிக்கும் தூய ஆவியானவர்

புதுப்பிக்கும் தூய ஆவியானவர் * கிறிஸ்தவத்தில் அதிகம் முரண்பட்ட சிந்தனைகளில் ஒன்று தூய ஆவியானவரைக் குறித்தது . ஏராளமான சித்தாந்தங்களும், இறையியல் கோட்பாடுகளும், வாழ்வியல் பாடங்களும் இதன் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. தூய ஆவியானவர் ஒரு ஆள் அல்ல என்பதில் தொடங்கி, அவருக்கும் மனசாட்சிக்கும் இடையேயான தொடர்பு வரை ஏராளமான இறையியல் சிந்தனைகள் தோன்றியிருக்கின்றன. கிறிஸ்தவம் இன்று வெகுஜன மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்பது போன்ற ஒரு தோற்றம் உண்டு. அதற்கு ஒருவகையில் தூய ஆவியானவர் குறித்த சிந்தனைகளும், புரிதல்களும், வெளிப்பாடுகளும் காரணம் எனலாம். இயேசு சாதாரண மக்களோடு பின்னிப் பிணைந்து வாழ்ந்தவர். எப்போதும் மக்களை விட்டு அன்னியப்பட்டு நிற்க வேண்டும் எனும் சிந்தனையை இயேசு முன்னெடுத்ததில்லை. அதனால் தான் துறவறங்களை மேற்கொள்வதை விட, வாழ்வியல் அறங்களை கைக்கொள்வதையே இயேசு ஊக்கப்படுத்தினார். மலைகளின் தலைகளில் கூடாரமடித்து வாழ்வதை இயேசு ஊக்குவிக்கவில்லை. ஆடையற்ற ஏழை ஒருவருக்கு ஆடை வழங்குவதையே ஊக்கப்படுத்தினார். அவருடைய போதனைகள் உலக துன்பங்களிலிருந்து தப்பித்தல் என்பதை நோக்கியல்ல, உலக துன்பங்களில் தெய்வீக அன்பை வெளிப்படுத்துதல் என்பதாகவே அமைந்தது. இயேசுவின் போதனைகளிலும், உவமைகளிலும் நாம் சகட்டு மேனிக்கு சந்திப்பது இந்த அன்பின் இழையைத் தான். அன்பின் இழையையும், கரிசனையின் நெகிழ்வையும் களைந்து விட்டு இயேசுவின் பணிகளை நாம் எப்போதுமே சிந்திக்கவும் முடியாது, சந்திக்கவும் முடியாது. உலகத்தின் பாவங்களுக்கான பலியாக தன்னையே கையளித்த இயேசு, அதன்பின் நமக்கு அளித்தவர் தான் தூய ஆவியானவர் என்பது விவிலியம் சொல்லும் செய்தி. பழைய ஏற்பாட்டில் வல்லமையோடு இறங்கி வந்து செயல்களை ஆற்றிய தூய ஆவியானவர், புதிய ஏற்பாட்டில் நமக்குள் இறங்கி நம்மை வல்லமைப்படுத்தி செயல்களை ஆற்ற வைக்கிறார். அதனால் தான் அவர் செயலாற்றும் ஆவியானவர் மட்டுமல்லாமல், செயலாற்ற வைக்கின்ற ஆவியாகவும் இருக்கிறார். இன்றைய சமூகத்தை விட்டு விட்டு, அல்லது அரசியல் பார்வைகளை விட்டு விட்டு தனியே ஒரு கூடு கட்டி கிறிஸ்தவ சமூகம் வாழவேண்டும் எனும் சித்தாந்தங்களோடு எனக்கு உடன்பாடில்லை. சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்படுத்தும் அடையாளங்களின் மீதும் எனக்கு உடன்பாடில்லை. தூய ஆவியானவரின் இருப்பு, நமது செயல்களில் வெளிப்பட வேண்டும். அந்த செயல்கள் நாம் வாழ்கின்ற சமூகத்தின் மறுமலர்ச்சிக்காகவும், புத்தெழுச்சிக்காகவும் பயன்பட வேண்டும் என்பதே எனது பார்வை. தூய ஆவியானவரை நாம் இன்று பெரும்பாலும் ஒரு அடையாளத்துக்குள் அர்த்தப்படுத்துகிறோமே தவிர, வாழ்வின் அர்த்தங்களுக்குக் காரணமானவராக அவரை அடையாளப்படுத்துவதில்லை. வாழவேண்டிய வழிகளை நமக்குக் காட்டுபவராக தூய ஆவியானவர் இருக்கவேண்டுமே தவிர, அடையாளங்களை நமக்கு அணிவிப்பவராக தூய ஆவியானவர் இருப்பது பயனளிப்பதில்லை. பசியாய் இருக்கும் ஒருவருக்குத் தேவை உணவாய் இருக்கிறது. நோயுற்று இருக்கும் ஒருவருடைய தேவை நலம் பெறுதலாய் இருக்கிறது. சமூகத்தில் ஒடுக்கப்பட்டவருடைய தேவை விடுதலையாய் இருக்கிறது. இத்தகைய தளங்களில் நாம் தூய ஆவியானவரின் துணைகொண்டு என்ன செய்கிறோம் என்பதில் தான் தூய ஆவியானவரின் செயல் அளவிடப்படுகிறது. இன்றைய சமூகத் தளத்தில் இத்தகைய தூய ஆவியின் துணையோடு துணிவாக கருத்துப் பரிமாற்றங்களையோ, செயல்களையோ, போராட்டங்களையோ,நற்செயல்களையோ மக்களோடு இணைந்து செய்கின்ற கிறிஸ்தவத் தலைவர்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். நற்செய்தி அறிவித்தலுக்காக இத்தகைய மனிதநேயப் பணிகளைச் செய்யாமல், இத்தகைய மனித நேயப் பணிகளைச் செய்வதன் மூலம் நற்செய்தியை உணரவைப்பதே சமூகத்தின் இன்றைய தேவையாகும். உண்மையை வெளிப்படுத்தும் ஆவியானவர் தூய ஆவியானவரின் இயல்புகளில் மிக முக்கியமான ஒன்றாக விவிலியம் இதைச் சொல்கிறது. சமூகத்தின் முரணான சித்தாந்தங்களிடையே எதை எடுக்க வேண்டும், எதை விடுக்க வேண்டும் என்பதை நமக்கு ஆவியானவர் வெளிப்படுத்துகிறார். நமக்குள் அவர் இருக்கும்போது நமது செயல்கள் உண்மை எனும் இயேசுவின் சிந்தனையை ஒத்தே இருக்கும். அந்த உண்மையானது நம்மை பாவத்தின் வழியை நமக்கு அடையாளம் காட்டும். சமூகத்தின் பரிதாபத்தை நமக்கு புரியவைக்கும். நமக்கு அவர் உணர்த்துகிற உண்மையை எப்படி நாம் சமூகத்தின் முன்னேற்றததுக்காக செயல்படுத்தப் போகிறோம் ? உண்மையை தூய ஆவியானவர் நமக்கு விளக்குவது நமது அறிவு வளர்ச்சிக்கானதல்ல, சமூகத்தின் வளர்ச்சிக்கானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஞானத்தைத் தரும் ஆவியானவர் விவிலியம் ஞானத்தைத தொடர்ந்து பேசுகிறது. கடவுளின் மீதான அச்சத்திலிருந்து தொடங்குகிறது ஞானம். அத்தகைய உயரிய ஞானத்தை ஆவியானவர் நமக்குத் தருகிறார். ஞானம் எதை நோக்கி நம்மை நடத்த வேண்டும் என்பதில் தான் கனிகள் வெளிப்படுகின்றன. நமது ஞானம் நமது செயல்களில் வெளிப்பட வேண்டும். சட்டங்களைச் சார்ந்த வாழ்க்கையா, மனிதம் சார்ந்த செயல்களா எனும் கேள்வி எழுகையில் இயேசுவின் ஞானம் மனிதத்தின் பக்கமாய் சாய்ந்தது. அது தான் பாவிகளை அரவணைக்கவும், சட்டங்களுக்கு எதிரான கேள்வி எழுப்பவும் அவரைத் தூண்டியது. நாமும் இன்றைக்கு அதே ஒரு சூழலில் தான் வாழ்கிறோம். கிறிஸ்தவம் போதிக்கின்ற சட்டங்கள் மனிதத்துக்கு எதிரானதாக இருந்தால் நாம் எங்கே சாய வேண்டும் ?. நமது விழாக்கள் மத நல்லிணத்துக்கு இடையூறாய் இருந்தால் எதை எடுக்க வேண்டும் ? இத்தகைய குழப்பத்தின் சூழலில் நமக்கு ஞானத்தை ஆவியானவர் தருகிறார். நமது செயல்களின் முடிவில் மனிதம் மலர்ந்தால் அங்கே ஆவியானவரின் ஞானம் வெளிப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். கிறிஸ்தவம் வெல்லும்போதெல்லாம் கிறிஸ்து ஜெயிப்பதில்லை. மனிதம் வெல்லும்போதெல்லாம் அவர் ஜெயிக்கிறார். வல்லமையைத் தரும் ஆவியானவர் திமோத்தேயு ஆவியின் வல்லமையைப் பற்றிப் பேசும்போது அன்பையும் இணைத்தே பேசுகிறது. ஆவியின் வல்லமை என்பது அன்பின் செயல்களில் வெளிப்பட வேண்டும் என்பதே அதன் அர்த்தம். வல்லமை என்பது நமது குரல்கள் எழுப்பும் உச்சஸ்தாயியில் நிர்ணயிக்கப்படுகிறதா, அல்லது சத்தமே இல்லாமல் செயல்படும் அன்பின் செயல்களால் நிர்ணயிக்கப்படுகிறதா ? தீய ஆவி பிடித்தவன் சத்தமிட்டு அலறிப் புரள்வதைப் பதிவு செய்கின்ற விவிலியம், தூய ஆவி பிடித்தவர்கள் அன்பினாலும், சமாதானத்தினாலும் நிரப்பப்படுவதைப் பேசுகிறது. தீய ஆவி நம்மைப் பிடிக்கிறது, தூய ஆவி நம்மை நிரப்புகிறது. தீய ஆவி வல்லமையாய் நிலைகுலைய வைக்கிறது, தூய ஆவி வல்லமைக்குள் நம்மை நிலைக்க வைக்கிறது. இந்த வல்லமை நமது சுயநலத்தின் மதில்களை உயரமாக்குவதற்கானதல்ல, மனிதத்தின் கரங்களை வலிமையாக்குவதற்கானதே. பாவத்தை உணர்த்தும் ஆவியானவர் நமது உடல் ஆவியானவர் தங்கும் ஆலயம். வீடு தூய்மையாய் இருக்க வேண்டும் என்பது நமது அடிப்படை விருப்பம். பெரிதோ, சிறிதோ அழகாய் நேர்த்தியாய் இருக்கும் வீடுகளையே நாம் விரும்புவோம். அதே போல தான் ஆவியானவரும் நமக்குள் உறைகையில் நமது உடலெனும் ஆலயம் தூய்மையாய் இருக்க வேண்டுமென ஆசிக்கிறார். அதனால் தான் பாவத்தின் வழிகளை நமக்குச் சுட்டிக்காட்டி, நேர்மையின் வழியில் நடக்க நம்மை ஊக்கப்படுத்துகிறார். அழுக்கடைந்த உடல் ஆவியானவருக்கு பிரச்சினை இல்லை, அழுக்கடைந்த இதயமே பிரச்சினை. அழுக்கடைந்த கரங்கள் அவருக்குப் பிரியமானவையே, அழுக்கடைந்த சிந்தனைகள் தான் பிரியமற்றவை. நமது வாழ்விலிருந்து அகற்றப்பட வேண்டிய பாவங்களின் பட்டியல் மிகவும் பெரிது. நமது ஒவ்வொரு செயல்களிலும் நமக்கு சரியான வழியைக் காட்டுபவராக ஆவியானவர் இருக்கிறார். வழி தவறிச் சென்றால் கூட மீண்டும் நம்மை சரியான பாதைக்கு கொண்டு சேர்க்கும் ஜி.பி.எஸ் கருவியைப் போல நமது சிந்தனைகளை அவர் வழிநடத்துகிறார். நாம் பாவத்திலிருந்து விடுதலை பெறுவது விண்ணகம் செல்வதற்காய் மட்டுமல்ல, விண்ணகத்தை மண்ணகத்தில் கட்டி எழுப்பவும் எனும் உண்மையை உணர வேண்டும். கனி கொடுக்க வைக்கும் ஆவியானவர் கனிகொடுக்காத மரங்கள் நெருப்புக்கு பலியாகும். ஆவியின் கனி எவை என்று கேட்டால் சட்டென ஒன்பதையும் சொல்பவர்கள் நம்மில் ஏராளம் உண்டு. அந்த கனிகள் நமது வாழ்க்கையில் வெளிப்படுகிறதா என்றால் மிகப்பெரிய கேள்விக்குறியே. நமக்குள் ஆவியானவர் நிலைத்திருந்தால் ஆவியின் கனிகள் வெளிப்படும். ஆலம் விதையில் அரளிப் பூ பூக்காது, ஆவியானவரின் செயல்களில் அநியாயம் முளைக்காது. எனது வார்த்தைகளின் கனிவு வெளிப்படுகையில் ஆவியானவரின் கனி அங்கே வெளிப்படுகிறது. எனது செயல்களின் அடிப்படையாய் அன்பு இருக்கும் போது ஆவியானவர் செயலாற்றுகிறார். எனது பதில்களில் அமைதி அமர்ந்திருக்கும் போது ஆவியானவர் பணியாற்றுகிறார். எனக்குள் சக மனித பரிவு முளைவிடும்போது ஆவியானவர் புன்னகைக்கிறார். என ஆவியானவரின் கனி ஒவ்வொன்றும் நம்மை சமூகத்தின் அன்புறவுக்காய் அழைக்கிறது. இறுதியாக, தூய ஆவி என்பது நம்மை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்கானதல்ல. நமது செயல்களின் மூலமாக இயேசுவை வெளிப்படுத்திக் காட்டுவதற்கானது என்பதைப் புரிந்து கொள்வோம். ஆவியை அடையாளங்களால் வெளிப்படுத்துவதை விட, அர்த்தங்களால் மகிமைப்படுத்துவோம். * சேவியர்