விதைப்பவன்,
விதைக்கப்பட்டான் !
*
விதைப்பவன்
விதைக்கச் சென்றான்
விவசாயிகளை !
சில விவசாயிகள்
வழியோரம் விழுந்தனர் !
அவர்கள்
போராட்டத்தின்
பதாகை தூக்குகையிலேயே
ஆணவப் பறவைகளால்
அகற்றப்பட்டனர்.
சில விவசாயிகள்
பாறை நிலத்தில் விழுந்தனர்.
அவர்கள்
பொராட்டத்தின்
நீரோட்டத்தில்
பொங்கி எழுந்தனர்.
பின்னர்
கரையில் ஒதுங்கி காணாமல் போயினர்.
சில விவசாயிகள்
முட்களிடையே விழுந்தனர்.
அவர்கள்
அதிகார நெருக்குதலில்
அசுரத்தனத்தில் நெரிபட்டனர்
பலன் கொடுக்க முடியாமல்
தலை கவிழ்ந்தனர்.
சில விவசாயிகள்
நல்ல நிலத்தில் விழுந்தனர்.
அவர்கள்
தங்களை அழித்துக் கொண்டு
விளைச்சலைக் கொடுத்தனர்.
கொழுகொம்பில்லாத
பொட்டல் காட்டிலும்
அவர்கள்
முப்பது மடங்கு விளைவித்தனர்.
காங்கிரீட் தடுப்புகள்
காலுடைத்த தருணங்களிலும்
அவர்கள்
அறுபது மடங்கு விளைவித்தனர்.
நூற்றுக்கணக்கான
விதைகளைப் பலிகொடுத்து
அவர்கள்
நூறு மடங்கு விளைவித்தனர்.
விதைப்பவன்
விதைக்கப்பட்டான் !
இரக்கமற்றோரின்
இருக்கைகளில்
பருக்கைகள் பரிமாறப்பட்டன.
கண்ணீரைத் துடைத்துக்
கொண்டு
அடுத்த விவசாயத் தலைமுறை,
விதைக்கக் கிளம்பியது.
தங்களை !
*
சேவியர்
“எல்லாம் நிறைவேறிற்று” யோவான் 9:30.
இதோ
மனுமகன்
விடைபெறும் கடைசிக் கணம் !
கல்வாரியின்
கனத்த காற்றுகளின்
காதில், இயேசு
கூறினார்
எல்லாம் நிறைவேறிற்று
இது
விடிந்ததன் அடையாளம்,
பலி
முடிந்ததன் அடையாளம்.
தந்தையே
இதோ,
என் வருகையின் நோக்கம்
நிறைவேறிற்று !
சதிகாரச் சாத்தானின்
தலை மிதிக்கும்
இந்த
தலைமகனின் கடமை
நிறைவேறிற்று !
அவனது
கர்வத்தின் அதிகாரத்தை
என்
தாழ்மையின் தாள்களால்
முடித்து விட்டேன்.
பாலை நிலச்
சோதனையிலும் விழவில்லை
பாறை நிலச்
சோதனையிலும் விழவில்லை
எல்லாம் நிறைவேறியது !
வழியிலே
இறந்துவிடக் கூடாதென
விழுகையிலெல்லாம்
வேண்டினேன்,
இதோ
சிலுவையில் நிரம்பினேன்
எல்லாம் நிறைவேறியது.
சட்டத்தின்
சர்வாதிகார அழுத்தங்களை
கிருபையின்
மெல்லிய தீண்டலால்
முடித்து விட்டேன்,
எல்லாம் நிறைவேறிற்று.
உலகின் பாவத்தை
உடலில் சுமந்து
உயிரையேஉதறிவிட்டேன்,
எல்லாம் நிறைவேறிற்று.
இறைவாக்கினர்களின்
மறை வாக்குகளையெல்லாம்
வழியிலே
வலுவிழக்க விடவில்லை
எல்லாம் நிறைவேறிற்று.
இயேசு
சிலுவையில் முடிந்தார்
என
ஆளும் வர்க்கம்
ஆரவாரம் செய்தது.
இயேசு
சிலுவையில் முடித்தார்
என்பதை
உரைத்த வார்த்தை
ஊர்ஜிதப்படுத்தியது.
டிடிலெஸ்தாய்
எனும்
எபிரேய மூல வார்த்தை
முழுக் கடனையும்
கட்டி முடித்துவிட்டேன், என்கிறது.
இயேசு
பாவத்துக்கான
முழு விலையாய்த்
தன்னை
அளித்து விட்டதன்
அடையாளம் இது.
அதிகபட்ச அன்பு
எப்படிப்பட்டது என்பதை
உரக்கச் சொல்ல
இயேசு
சிலுவையைத் தழுவினார்.
பழைய ஏற்பாடு
பாவத்தின் சம்பளத்தை
விலங்குகளின் மேல் சுமத்தி
பலியாக்கியது.
பாவங்களின்
அளவுக்கேற்ப
பலிகளும் வேறுபட்டன !
அவையெல்லாம்
பாவ விடுதலைக்கான
சலுகைச் சாரல்கள்,
இயேசுவே
பிரபஞ்சத்தைக் கழுவிய
புனிதத்தின் பெருமழை.
அவரே,
இருளின் சர்வாதிகாரத்தை
விழுங்கிய
விண்ணின் பேரொளி.
ஒட்டு மொத்த
உலகின் பாவமும்
கழுவப்பட வேண்டுமெனில்
இறைவன்
இறக்க வேண்டும்.
ஆனால், இறைவன் இறப்பற்றவர்.
அதனால் தான்
இறப்பற்ற இறைவன்
மறைகின்ற மனிதனாய்
மலர வேண்டியிருந்தது.
இனி பாவத்துக்காய்
பலிகளைத் தேடி
அலைய வேண்டியதில்லை,
பலியானவரை
நெருங்கினாலே போதும்
அவரது
முடிவுரைச் சீட்டு தான்
நமக்கான
அனுமதிச் சீட்டு
மனிதனுக்கும்
இறைவனுக்கும் இடையேயான
மதில் சுவரை,
உடைத்துத் தள்ளியது
இயேசுவின் மரணம்.
தடைச்சீலையாய்
இருந்த
திரைச்சீலையை
கிழித்துத் தள்ளியது
இயேசுவின் மரணம்.
ஆதியில் எழுதப்பட்ட
புனிதக் கதையின்
மையப்புள்ளி இங்கே
மையம் கொண்டிருக்கிறது.
இயேசுவின்
சிலுவை வாக்கியம்
நமது
வாழ்க்கையின் பக்கங்களில்
கேள்விக் குறிகளை
நட்டு வைக்கிறது.
இந்த நொடி
நம் வாழ்க்கையின்
திரை மூடப்பட்டால்,
"எல்லாம் நிறைவேறியது"
என சொல்வோமா ?
இல்லை
பாக்கி வைத்த பாவங்களோடு
திகைத்து நிற்போமா ?
பதட்டப்படாத
மரணமே
பரிசுத்த வாழ்வின்
அடையாளம்
*
தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை ( லூக்கா 23 : 34 )
*
நம்மை நோக்கி
ஒரு
ஏளனச் சொல்லை
எறிந்தவனையே
மரணம் வரை மன்னிக்க
நமக்கு
தருணம் வருவதில்லை !
இயேசு
விதி விலக்காய் வந்த
விடி விளக்கு.
நைந்து போன
துணியைப் போல
பிய்ந்து போன
உடலுடன்
சிலுவையின் உச்சியில்
தொங்குகிறார் இயேசு !
மரணத்தின் தருவிலும்
மானுடத்தின் மீதான
அன்பு
துளியளவும் குறையவில்லை.
தொண்டைக்குழியில்
வார்த்தைகள்
தற்கொலை செய்யும்
அவஸ்தையிலும்
மன்னிப்பின் வார்த்தைகளை
இயேசு உரைக்கிறார்.
தனக்காக
வேண்டுதல் செய்யவே
பிரியமற்ற மக்கள் மத்தியில்
பிறருக்காக
வேண்டுதல் செய்கிறார்
பரமன்.
நண்பர்களுக்காய்
விண்ணப்பம் வைக்கவே
விரும்பாத உலகில்
எதிரிகளுக்காகப்
பரிந்து பேசுகிறார்
பரமன்.
தெரியாமல்
செய்கிறார்கள்
என
வக்காலத்து வாங்குகிறார்.
யாருக்குத் தான் தெரியவில்லை ?
சாட்டையால் இயேசுவை
வேட்டையாடிவனுக்கு
இது
அநீதியின் அடிகள் என
தெரியாதா ?
அவமானத்தால் அவரை
அடித்து வீழ்த்தியவனுக்கு
அது
குற்றமற்றவரின் மீதான
கொடூரம் என்பது தெரியாதா
சிலுவையைத் தூக்கி
தோளில் போட்டவனுக்கு
இவர்
வெறுப்புக்குப் பலியான
வெண்மனிதர்
என்பது தெரியாதா ?
கூர் ஆணிகளால்
மெல்லினத்தை அறைந்தவனுக்கு
இது
வன்மத்தின் சம்மட்டி அடி
என்பது தெரியாதா ?
எல்லோருக்கும் தெரியும்.
அவர்களுக்குத் தெரியாதது
ஒன்றே ஒன்று தான்.
தான் அறைவது
உலக மீட்பரை எனும்
உண்மை !
தாம் கொல்வது
விண்ணக வழியனுப்பி வைத்த
தந்தையின் மைந்தனை
எனும் நிஜம் !.
இயேசு
அவர்களின் அறியாமையை
மன்னிக்கிறார்.
தனக்கு
ஆதரவாய் நிற்காதவர்களையும்
தனக்கு
எதிராய் நின்று
வெற்றி கண்டவர்களையும்
இயேசு மன்னித்தார்.
தன்
போதனைகளைப் புறந்தள்ளி
வேதனைகளை
அணிவித்த அனைவரையும்
இயேசு மன்னித்தார்.
இரத்தப்பழி எங்கள் மேல்
விழட்டும் என
இறுமாப்பு பேசியவர்களையும்
தன்
இரத்தம் சிந்தி மன்னித்தார்.
அந்தப் பட்டியலில்
இதோ
என் பெயரும் உன் பெயரும்
வருகிறது
காலங்கள் கடந்த
இறைவன்
அன்று சுமந்தது
இன்றைய
நம் பாவங்களையும் தான்.
பழியைப் பழியால்
அழிக்க முடியாது,
வெறுப்பை வெறுப்பு
எரித்து முடிக்காது
அன்பு எனும்
ஒற்றைச் சாவி மட்டுமே
திறக்காத பூட்டுகளை
திறக்கும்.
முடிவிலியின்
மூன்று மணிநேரம்,
முடிவிலியாய்
நீண்டு
காலங்களை அடக்குகிறது.
கேட்காமலேயே
மன்னித்த
இயேசுவிடம்,
மன்னிப்பைக் கேட்போமா ?
நம்
பாவங்களுக்காய் பரமனின்
பாதம் நெருங்குகையில்
இயேசு சொல்கிறார்.
"தெரியாமல் செய்துவிட்டான்
மன்னியுங்கள் தந்தையே" !
*
சேவியர்