Posted in Articles

அடிமைக்கு அன்பு

அடிமைக்கு அன்பு

காட்சி 1

( ஆப்பிரிக்க நாட்டில் ஒரு கிராமம். ஊழியர் பெல்லார்மின் அமர்ந்திருக்கிறார். அவருடன் இன்னொரு நபர் பேசிக்கொண்டிருக்கிறார் )

நபர் 1 : ரொம்ப நாளா உங்க கிட்டே ஒன்ணு கேக்கணும்ன்னு நினைச்சுட்டே இருந்தேன் கேக்கலாமா ?

பெல்லார்மின் : கேளுங்க.. இதில என்ன தயக்கம் ?

ந 1 : இந்தியாவில நல்ல வசதியான வாழ்க்கை வாழ்ந்திட்டிருந்தீங்க ? இப்போ குடும்பத்தோட இந்த ஆப்பிரிக்க கிராமத்துல வந்திருக்கீங்க. இங்கே பிள்ளைங்க படிக்க நல்ல ஸ்கூல் கிடையாது. நல்ல வருமானம் கிடையாது. இருந்தாலும் ஏன் ?

பெல் : ஐயா… நான் இங்கே வந்திருக்கிறது பிள்ளைங்களை படிக்க வெச்சு டாக்டராக்கவோ, இல்லை பெரிய வேலைல சேர்ந்து பணம் சம்பாதிக்கவோ இல்லை. அது உங்களுக்கே தெரியும்…

ந1 : ஐயா… அதெல்லாம் தெரியும். எவ்ளோ நாளா உங்க கூடவே இருக்கேன். நீங்க இயேசுவைப் பற்றி இங்குள்ள மக்களுக்கு சொல்றதுக்காகத் தான் வந்திருக்கீங்க. ஆனா இந்த வாழ்க்கை கஷ்டமா இல்லையா ?

பெல் : இல்லவே இல்லை. எத்தனையோ பேருக்கு கிடைக்காத அழைப்பு எனக்கு கிடைச்சிருக்குன்னு டெய்லி நான் கடவுளுக்கு நன்றி சொல்லிட்டே இருக்கேன்.

ந1 : இருந்தாலும் பிள்ளைகளையாவது இந்தியாவில படிக்க வெச்சிருக்கலாம். அவங்களாவது நல்ல வசதியான ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்.

பெல் : ஐயா.. எல்லாருக்குமே கடவுள் கொடுக்கிறது ஒரே ஒரு வாழ்க்கை தான். அதை அப்படியே கடவுள் கிட்டே குடுக்கிறதில இருக்கிற சந்தோசமே தனி. நான் தான் ரொம்ப லேட்டா, பெரியவன் ஆனப்புறம் என் வாழ்க்கையை கடவுள் கிட்டே குடுத்தேன். என் பிள்ளைகளுக்கு சின்ன வயசிலயே அந்த பாக்கியம் கிடைச்சிருக்கு. இது எவ்ளோ பெரிய சந்தோசமான விஷயம்.

ந 1 : நீங்க சொல்றதும் சரிதான்.. இருந்தாலும் பிள்ளைங்க இந்த உலகத்துல இருக்கிற எந்த ஜாலியான விஷயங்களையும் அனுபவிக்காம இங்கே இருக்காங்களேன்னு கேட்டேன்.

பெல் : ஐயா.. தற்காலிக சுகம், நிரந்தர நரகத்துக்கு தான் கொண்டு போகும். உங்க கிட்டே ஒரே ஒரு பாட்டில் தண்ணி தான் இருக்குன்னு வெச்சுக்கோங்க‌ ! பாலைவனத்துல நாலு நாள் நடக்கணும். வேறு தண்ணியே கிடைக்காது. அந்த ஒரு பாட்டில் தண்ணீரை எவ்ளோ கவனமா பாதுகாப்பீங்க. ஒவ்வொரு சொட்டு செலவழிக்கும்போதும் எவ்வளவோ எச்சரிக்கையா இருப்போம் இல்லையா ?

ந 1 : ஆமாங்கய்யா…

பெல் : உங்க கிட்டே தீப்பெட்டியும் ஒரே ஒரு தீக் குச்சியும் தான் இருக்கு. வேற எங்கயும் தீப்பெட்டி இல்லை. நள்ளிரவுல விளக்கு கொளுத்த வேண்டியிருக்கு. எவ்ளோ கவனமா அதை உரசுவீங்க இல்லையா ?

ந 1 : ஆமாங்கய்யா.. அதுக்கும் இதுக்கும் என்னய்யா சம்பந்தம் ?

பெல் : அதே மாதிரி தான் நமக்கும் ஒரே ஒரு வாழ்க்கை. ஒரே ஒரு பாட்டில் தண்ணி மாதிரி எண்ணப்பட்ட நாட்கள். அதை எவ்வளவோ கவனமா செலவிடணும். எவ்வளவோ பயனுள்ள வகையில அதை செலவிடணும். அதுல கொஞ்சம் கூட வேஸ்ட் பண்ணக் கூடாது இல்லையா ? ஒரே ஒரு தீக்குச்சி தான் நம்ம வாழ்க்கைன்னா அதை எவ்வளவு கவனமா உரசணும் இல்லையா ? அப்படித் தான் இதுவும். அந்த வாழ்க்கையை கடவுளுக்காகவே கொடுக்கிறது தான் உண்மையான மகிழ்ச்சி.

( அப்போது ஒரு நபர் ஓடி வருகிறார் )

ந 2 : ஐயா… நம்ம ரிவர் சைட் மார்க்கெட்ல அடிமை ஏலம் நடக்குதுங்கய்யா…

ந 1 : ம்ம்ம்… நம்ம நாடு எப்ப தான் உருப்படுமோ ! இந்த அடிமை ஏலத்தை இன்னும் நிறுத்த முடியல. வாழ்க்கையை

ஓட்டறதுக்கு மனுஷன் என்னவெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கு.

பெல் : இப்படித் தான் பாவத்தைச் செய்திட்டு இருக்கிறவன் பாவத்துக்கு அடிமையா இருக்கிறான்னு இயேசு சொல்லியிருக்காரு.

ந 2 : இருந்தாலும் பாவம்யா.. இன்னிக்கு ஏதோ ஒரு இளம்பெண்ணை ஏலம் போடறாங்க.

பெல் : ஓ.. அப்படியா…. எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு.. சரி… வாங்க அங்கே போலாம்.

காட்சி 2

( ஒரு பெண் மேடையில் நிற்கிறார். தலைகுனிந்து சோகமாக நிற்கிறாள். ஏலம் நடக்கிறது )

ஏலம் நடத்துபவர் : ( சிரித்துக் கொண்டே ) இந்த பெண்.. .. இதுக்கு முன்னாடி பெல்ஷா மாளிகைல அடிமையா இருந்தார். கடின உழைப்பாளி. அங்கிருந்த முதலாளி இப்போ இவளை ஏலத்துல வித்துட்டு வேற ஆட்களை வாங்க போறாரு. அதனால தான் இந்த ஏலம். ஏலத்தை ஆரம்பிக்க போறேன்.

ஏலம் வாங்குபவர் : ஒரு அடிமைப்பெண்ணை வாங்கணும்ன்னு தான் காத்திருந்தேன்…. பெல்ஷா மாளிகைல இருந்த அடிமைன்னா ரொம்ப நல்லது ! , எவ்ளோ பணமானாலும் நான் வாங்கப் போறேன்.

ந4 : எவ்ளோ பணம்ன்னாலுமா ?

வாங்குபவர் : பொதுவா ஒரு பத்தாயிரம் பணத்துக்கு வாங்கிடலாம். கொஞ்சம் அப்டி இப்டி ஆனா கூட பரவாயில்லை. ஏலத்துல எடுத்துர வேண்டியது தான். இது மாதிரி ஸ்பெஷல் ஏலம் எப்பவும் நடக்காது.

( அப்போது பெல்லார்மின் & ந 1 வருகின்றனர் )

பெல் : அந்த ஆளை நான் ஏலத்துல எடுக்க போறேன்.

ந 1 : ( ஆச்சரியத்துடன் ) ஐயா.. நீங்களா ?

பெல் : ஆமா.. கடவுள் அந்த அடிமையை ஏலத்துல எடுக்க மனசுக்குள்ள சொல்றாரு.

ந 1 : சரிங்கய்யா.. ஆனா இருக்கிற பணத்தை ஏலத்துல விட்டீங்கன்னா ?

பெல் : உங்களுக்கு தெரியாதது இல்லை. என்கிட்டே மொத்த சேமிப்பா ஒரு ஐம்பதாயிரம் பணம் இருக்கு. அதுல கொஞ்சத்தை பயன்படுத்தி வாங்கிடலாம். மத்ததையெல்லாம் கடவுள் பாத்துப்பாரு.

ந1 : சரிங்கய்யா.. உங்க விருப்பம்.

( ஏலம் தொடங்குகிறது )

ஏலம் நடத்துபவர் : ஏலம் ஆரம்பிக்க போறேன். ஆரம்ப விலை ஆயிரம் பணம் !

ஏலம் வாங்குபவர் : இரண்டாயிரம் பணம்

பெல் : மூவாயிரம்

ஏ. வா : ஐயாயிரம்

பெல் : ஆறாயிரம்

ஏ. வா : ஏழாயிரம்

பெல் : எட்டாயிரம்

ஏ. வா : பத்தாயிரம்

ந 1 ( பெல்லார்மினிடம் ) : ஐயா.. வேண்டாம்.. இதுக்கு மேல செலவு செய்ய வேண்டாம்.

பெல் : பதினையாயிரம்

ஏ. வா : இருபதாயிரம்

பெல் : முப்பதாயிரம்

ஏ. வா : ( கொஞ்சம் யோசிக்கிறார். தலையைச் சொறிகிறார் பின் கேட்கிறார் ) நாற்பத்து ஐயாயிரம்.

ஏ.வா வின் நண்பர்.. ந 4 : ஐயா.. என்ன உங்களுக்கு புத்தி கித்தி கெட்டு போச்சா.. இந்த பணத்துக்கு இதே மாதிரி பத்து ஆட்களை வாங்கலாம். இப்போ அவரு பேசாம போனா நமக்கு பெரிய நஷ்டம்.. தப்பு பண்ணிட்டீங்களே. என்ன ஆளு நீங்க… ?

( பெல் ஏலம் கேட்க போகும் போது நண்பர் தடுக்கிறார் )

ந1 : ஐயா வேணாம். உங்க வாழ்நாள் சொத்தே ஐம்பதாயிரம் பணம் தான். உங்களுக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. மனைவி இருக்காங்க. ஏதாச்சும் மருத்துவ தேவை வந்தா கூட கைல காசு இருக்காது. இந்த அடிமை நமக்கு எவ்வளவு தான் சம்பாதிச்சு தர முடியும் ? வேணாம்யா விட்டுடுங்க.

பெல் : ஐம்பதாயிரம் !

( ஏலம் கேட்ட மற்ற நபரும், நண்பர்களும்.. “அப்பாடா தப்பிச்சோம்” என போய் விடுகின்றனர். )

ஏலம் இடுபவர் : ஐம்பதாயிரம் பணம் ஒரு தரம். வேற யாராவது ஏலம் கேட்கிறீங்களா ?

( மக்கள் ஒவ்வொருவராகப் போகின்றனர் )

ஏலம் இடுபவர் : ஐம்பதாயிரம் பணம் இரண்டு தரம் …. ஐம்பதாயிரம் பணம் மூணு தரம்.

( பெல்லார்மின் ஒரு செக் எழுதி அவரிடம் கொடுக்கிறார். அந்தப் அடிமை குனிந்த தலையுடன் அவரது அருகே வந்து நிற்கிறார் )

காட்சி 3

பெல் நண்பரிடம் : வாங்க போலாம்

( பெண் பின்னாடியே வருகிறார் )

பெல் : தம்பி .. நீங்க போலாம். என் கூட வரவேண்டிய அவசியம் இல்லை. இப்போ நீங்க அடிமையில்லை உங்களுக்கான விலையைக் கொடுத்து உங்களை விடுதலையாக்கியாச்சு.

( ந 1 புரியாமல் பார்க்கிறார் )

அடிமை : ஐயா.. என்ன சொல்றீங்க ? புரியல.

பெல்லார்மின்: தம்பி.. உங்களை அடிமைத்தனத்தில இருந்து மீட்கத் தான் நான் ஏலம் எடுத்தேன். உங்களுக்கு விடுதலை வாங்கி தர. உங்களை மீண்டும் அடிமையா மாத்துறதுக்கு இல்லை.

அடிமை : ( அழுகைக் குரலில் ) ஐயா.. ஏன் ? இவ்ளோ பணம் குடுத்து என்னை ஏலத்துல எடுத்து சும்மா விடுறீங்களா ? நம்பவே முடியலையே..என்னை உங்களுக்கு தெரியுமா ?

பெல் : நீ யாருன்னு எனக்கு தெரியாது . ஆனா இயேசு யாருன்னு எனக்கு தெரியும். நாம பாவ அடிமைத்தனத்துல இருந்தப்போ அவரோட உயிரையே கொடுத்து நம்மையெல்லாம் மீட்டவர். நாம சுதந்திர வாழ்க்கை வாழணும்ன்னு மண்ணுக்கு மனுஷனா வந்தவர். வந்து சிலுவையில அறையப்பட்டு உயிர்விட்டு நமக்காக இறந்தவர்.

அடிமை : ஐயா என்ன சொல்றீங்க ? அப்படி ஒரு நபரைப் பற்றி எனக்கு தெரியாதே.

பெல் : உண்மைதாம்பா.. அவரைப் பற்றி சொல்ல தான் நான் இந்த நாட்டுக்கே வந்தேன். உன்னை மீட்க நான் இழந்தது என் சொத்து மட்டும் தான். அவரோ தன்னோட சொந்த ஜீவனையே இழந்தார்.

அடிமை : ஏன் ஐயா அவர் அப்படி இறக்கணும் ?

பெல் : அது தான் நாம கடவுளுடைய மீட்பில் இணைய ஒரே வழி. அது தான் நாம சொர்க்கம் செல்ல ஒரே வழி. அது தான் நம்முடைய பாவங்களைக் கழுவ ஒரே வழி. அவருக்கு ஒரே ஒரு மனித வாழ்க்கை தான் தரப்பட்டது, அதை பிறருக்காக கொடுத்தார். அதே மாதிரி எனக்கு ஒரே வாழ்க்கை தான் தரப்பட்டிருக்கு. இந்த ஒரே ஒரு வாழ்க்கையை நான் அவருக்காக கொடுக்கிறேன்.

அடிமை : ஐயா.. ( கண்ணீருடன் ) நான் மறுபடியும் அடிமையாவே போயிடறேன்.

பெல் : ( அதிர்ச்சியுடன் ) என்னம்மா சொல்றே..

அடிமை : ஆமாங்கய்யா.. .இந்த தடவை நான் இயேசுவுக்கு அடிமையா போக போறேன். எனக்கு இந்த விடுதலை வாழ்க்கை உங்களால கிடைச்சுது. இயேசு உங்க மூலமா அதை எனக்கு தந்திருக்காரு. இந்த சுதந்திர வாழ்க்கையை அவருக்கு அடிமையா வாழ்றதுல செலவிட போறேன். எனக்கு கிடைச்சிருக்கிற இந்த ஒரே ஒரு வாழ்க்கையை இனிமே நான் அவருக்காகவே கொடுக்க போறேன்.

பெல் : ரொம்ப மகிழ்ச்சிப்பா.. ஒரு நபரை மீட்பதை விட பெரிய சொத்து எதுவுமே இல்லை. எனக்கு இப்போ ரொம்ப மன நிறைவா இருக்கு.

அடிமை : ஐயா.. எனக்கு என் எஜமானர் இயேசுவைப் பற்றி இன்னும் நிறைய சொல்லுங்க. என் வாழ்க்கைல நான் அவருக்காக வாழணும். நீங்க எனக்கு சொல்லப்போற உண்மையை எல்லாம் நாம் எங்க ஊர் மக்களுக்குச் சொல்லணும்.

பெல் : ரொம்ப மகிழ்ச்சி தம்பி.. வாங்க.. நாம அப்படி ஓரமா அமர்ந்து பேசுவோம். அவரைப் பற்றி பேசறதை விட பெரிய மகிழ்ச்சி ஏதும் இல்லை.

பின் குரல்

இது மிஷனரி ஒருவருடைய வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வின் சிந்தனையை எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்டது. நமது வாழ்க்கையை இறைவன் தனது ஒரே மகனின், ஒரே மனித பிறவியின், ஒரே ஜீவனைக் கொண்டு மீட்டார். நமக்குத் தரப்பட்டிருப்பது ஒரே ஒரு வாழ்க்கை. ஒரே ஒரு பிறவி. நாம் அதை முழுமையாய் இறைவனுக்காய் அற்பணித்திருக்கிறோமா ? இல்லையேல் இதோ இந்த கணமே.. அதைச் செய்வோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

( நன்றி )

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s