Posted in Articles

திருப்பு முனை

திருப்பு முனை

காட்சி 1

( கிறிஸ்தவப் பாடகர், எழுத்தாளர் ரயன் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறது ஒரு பல்கலைக்கழகம். அதைத் தொடர்ந்த பேட்டி… )

பேட்டியாளர் : வணக்கம் சார்….

ரயன் : வணக்கம்

பேட்டி : கிறிஸ்தவ இலக்கியத்துல நீண்ட காலம் பணியாற்றியிருக்கீங்க. இப்போ உங்க பணிகளை அங்கீகரிக்கும் விதமா டாக்டர் பட்டம் வழங்கியிருக்காங்க. எப்படி ஃபீல் பண்றீங்க ?

ரயன் : எல்லா புகழும் இயேசுவுக்கு மட்டுமே. அன்னை தெரசா சொல்ற மாதிரி, நான் ஒரு பென்சில். என்னைக் கொண்டு வரைபவர் இயேசுவே. நான் வெறும் களிமண், என்னைக் கொண்டு வனைபவர் இயேசுவே.

பேட்டி : ரொம்ப பணிவா பேசறீங்க. உங்க அப்பா ஆலயத்துல அதிக ஆர்வம் காட்டினவரா இருந்தாரு. அது தான் உங்களை கிறிஸ்தவ இலக்கியத்துல ஈடுபட வெச்சுதா ?

ரயன் : இல்லை… இல்ல…

பேட்டி : இல்ல, சின்ன வயசில இருந்தே கிறிஸ்தவப் பாடல்களைப் பாடிட்டே இருந்ததால அந்த ஆர்வம் வந்துச்சா ?

காட்சி 2

( பிளாஷ்பேக் – ரயன் சிறு வயது )

ரயன் : அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்…

அம்மா : என்னடா.. எப்ப பாத்தாலும் சினிமா பாட்டையே பாடிட்டு திரியறே…. நல்ல இயேசப்பா பாட்டைப் பாடுப்பா…

ரயன் : அம்மா… இதெல்லாம் நல்ல பாட்டும்மா…. நல்ல மீனிங்…

அம்மா : கடவுளை விட நல்லது எதுப்பா இருக்கு .. அதைவிட மீனிங்ஃபுல் என்ன இருக்கு…

ரயன் : உங்களுக்கு இசையை ரசிக்க தெரியல போங்க

அம்மா : நல்ல கிறிஸ்டியன் பாட்டு பாடினா மனசுக்குள்ள நாலு வசனம் போகும். நல்ல பாட்டு கேட்கக் கேட்க மனசும் கொஞ்சம் சுத்தமாகும்

ரயன் : பாட்டுல என்னம்மா இருக்கு… அது சும்மா ஒரு ஜாலிக்கு தானே.

அம்மா : என்னப்பா இப்படி சொல்றே.. தாவீது சங்கீதங்கள் பற்றி தெரியுமா உனக்கு ? எல்லாமே பாட்டு தான். அந்தக் காலத்துல பாட்டு தான் ஜெபமாவே இருந்துது. ஒரு தடவை பாடறது, இரண்டு தடவை செபிக்கிறதுக்கு சமம்னு புனித அகஸ்தீனார் சொல்லியிருக்காரு தெரியுமா

ரயன் : உங்க பாட்டை ஆரம்பிச்சுட்டீங்களா…. அப்போ.. நீங்க பாடுங்கம்மா.. நான் எனக்கு புடிச்ச பாட்டை தான் பாடுவேன்.

காட்சி 1 ( தொடர்ச்சி )

பேட்டி : ஓ.. அப்போ சின்ன வயசில ஒரே சினிமா பாட்டு மோகமா இருந்திருக்கீங்க

ரயன் : சினிமா பாட்டு, ஆல்பம் பாட்டு, நாட்டுப்புறப்பாட்டு இப்படி தான் ஆர்வம் இருந்துச்சு. கிறிஸ்டியன் பாட்டு புடிக்காமலேயே இருந்துச்சு.

பேட்டி : ஓ..ஆச்சரியமா இருக்கே..

ரயன் : அப்போ கிறிஸ்டியன் பாட்டுன்னா சர்ச்ல இல்லேன்னா பிரேயர் மீட்டிங்ல மட்டும் பாட வேண்டியதுன்னு முடிவு பண்ணி வெச்சிருந்தேன். அதுல ஒரு எனர்ஜி இல்லை….

பேட்டி : .. அப்போ பாட்டு எழுதறதுல மட்டும் ஆர்வம் காட்டினீங்களா ? ஐ மீன் நிறைய கிறிஸ்டியன் சாங்ஸ் எழுதியிருக்கீங்க

காட்சி 3

( ரயன் இள வயது )

போன் : தம்பி நான் தான் சர்ச் விபிஎஸ் கோ ஆர்டினேட்டர் பேசறேன்பா… உங்க தெம்மாங்குப் பாட்டு கேட்டேன்பா… ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

ரயன் : நன்றி சார்.

போன் : குறிப்பா நீங்க நல்லா எதுகை மோனையோட எழுதறீங்க

ரயன் : நன்றி சார்.

போன் : ஒரு ஹெல்ப் வேணும் தம்பி.

ரயன் : சொல்லுங்க சார்

போன் : நம்ம விபிஎஸ் க்கு கொஞ்சம் பாட்டு எழுதணும். பழைய பாட்டுகள் நிறைய இருக்கு. ஆனாலும் நீங்க எழுதற ஸ்டைல் நல்ல கேச்சியா இருக்கு… பண்ணி தரீங்களா ?

ரயன் : ஐயா… அதெல்லாம் எனக்கு தெரியாது. அதெல்லாம் .. பாஸ்டர்ஸோ, இல்லே ஆன்மிகவாதிகளோ தான் எழுதணும்.. நமக்கு அதெல்லாம் தெரியாது.

போன் : நீங்க கிறிஸ்டியன் தானே தம்பி.. உங்களுக்கு தெரியாதா.. சின்ன பிள்ளைங்களுக்கு அழகா பெப்பியா எழுதி குடுங்க

ரயன் : ஐயா… நான் அப்படியெல்லாம் எழுதினதில்லை. குள்ள சக்கேயு, கள்ள சக்கேயு… ந்னு எழுதியெல்லாம் பழக்கமில்லை… சாரி..

போன் : ( சோகமாக ) சரி தம்பி .. அப்போ நான் வேற யார் கிட்டேயாச்சும் கேக்கறேன்.

காட்சி 1 ( தொடர்ச்சி )

பேட்டி : நம்பவே முடியல. வி.பி.எஸ் பாட்டுக்கு நோ சொன்ன நீங்களா இன்னிக்கு குழந்தைகளுக்காக நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியிருக்கீங்க…

ரயன் : எல்லாம் கடவுள் திட்டம்.. வேறென்ன சொல்ல

பேட்டி : அப்போ நீங்க இவ்ளோ புக் எழுதியிருக்கீங்க. இப்போ கேட்டா மறுபடியும் ஒரு பிளாஷ்பேக் போயி கிறிஸ்தவ புக் எதையும் எழுதலேன்னு சொல்லுவீங்க போல

ரயன் : உண்மை தான்.. ஹா..ஹா.. நான் எழுதினது எல்லாமே கவிதை, சிறுகதை, காதல், நட்பு, குடும்பம், வரலாறு இப்படி தான். அப்புறம் டெக்னாலஜி, தன்னம்பிக்கை அப்படி இப்படி நிறைய எழுதியிருக்கேன்.

பேட்டி : அப்படிப்பட்ட நீங்க தான் இன்னிக்கு கிறிஸ்தவ இலக்கியத்துக்கான டாக்டர் பட்டம் வாங்கியிருக்கீங்க.

ரயன் : ஆமா.. ( புன்னகை )

பேட்டி : எவ்ளோ புக் எழுதியிருக்கீங்க.. ஐ மீன்.. கிறிஸ்டியன் புக்ஸ்…

ரயன் : நாப்பது புக்ஸ் எழுதியிருக்கேன்.. பை த கிரேஸ் ஆஃப் காட்.

பேட்டி : வொண்டர்புல்.. சரி.. ஒண்ணு மட்டும் சொல்லுங்க.. எப்படி ? எப்படி இந்த சடர்ன் சேஞ்ச் ? உலகம், சினிமா, நாடகம், அப்படி இப்படி இருந்த உங்களை எது கிறிஸ்தவ படைப்பாளியா மாத்திச்சு ?

ரயன் : ஒரு பிளேஷ் பேக் போலாமா

பேட்டி : எஸ் எஸ்..

காட்சி 4

( அப்பா & ரயன் )

( அப்பாவும் ரயனும் நடந்து கொண்டே இருக்கிறார்கள் )

( பேசிக்கொண்டே நடக்கிறார்கள் )

ரயன் : அப்பா, பசிக்குது ஏதாச்சும் வாங்கி சாப்பிடுவோம்

அப்பா : இந்தாப்பா 100 ரூபா நீ ஏதாச்சும் வாங்கிக்கோ

ரயன் : நான் நூடுல்ஸ் வாங்கறேன்.. உங்களுக்கு என்ன வேணும்பா

அப்பா : எனக்கு ஒண்ணும் வேண்டாம்.. நீ வாங்கிக்கோ

ரயன் : அப்பா.. சொல்லுங்க.. உங்களுக்கும் பசிக்கும்ல…

அப்பா : வேணாம்.. உன் விருப்பத்துக்கு ஏதாச்சும் வாங்கு..

ரயன் : அப்பா.. உங்க காசை குடுத்திருக்கீங்க. அதுல உங்களுக்கு எதுவும் வாங்கலேன்னா நல்லா இருக்காது.

அப்பா : என்ன சொன்னே..

ரயன் : நீங்க குடுத்த பணம், உங்களுக்கு பயன்படாம போகக் கூடாதுல்ல.

அப்பா : நான் குடுத்த பணம் எனக்காகவும் பயன்படுத்தணும்ன்னு நினைக்கிறே. அதே போல கடவுள் குடுத்த திறமையை கடவுளுக்காகப் பயன்படுத்தணும்ன்னு அவரு நினைக்க மாட்டாராப்பா ?

ரயன் : அப்பா.. என்ன சொல்றீங்க

அப்பா : பாடறது, எழுதறது, பேசறது, வரையறதுன்னு எவ்வளவோ திறமை குடுத்திருக்காரு உனக்கு. அதை நீ அவருக்காக பயன்படுத்தணும்ன்னு அவரு நினைப்பாருல்ல.

ரயன் : அப்பா.. பசிக்கிற நேரத்துல பட்டிமன்றம் வேண்டாம்.. என்ன வேணும் சொல்லுங்க.. நான் வாங்கிட்டு வரேன்.

அப்பா : எனக்கு என்ன புடிக்கும்ன்னு உனக்கே தெரியும். நீ போய் வாங்கிட்டு வா…

ரயன் : அதானே.. உங்களுக்கு பிரட் ஆம்லெட் வாங்கிட்டு வரேன்.

காட்சி 5

( ரயன் வீட்டில் அமர்ந்திருக்கிறான்.. எதையோ எழுத அமர்கிறான் )

குரல் : நான் குடுத்த பணம் எனக்காகவும் பயன்படுத்தணும்ன்னு நினைக்கிறே. அதே போல கடவுள் குடுத்த திறமையை கடவுளுக்காகப் பயன்படுத்தணும்ன்னு அவரு நினைக்க மாட்டாராப்பா ?

ரயன் சிந்திக்கிறான்

காட்சி 6

( ரயன் பாட்டு பாடிக்கொண்டிருக்கிறான் )

குரல் : கடவுள் குடுத்த திறமையை கடவுளுக்காகப் பயன்படுத்தணும்ன்னு அவரு நினைக்க மாட்டாராப்பா ?

( ரயன் செபிக்கிறான் )

குரல் : கடவுளுக்காகப் பயன்படுத்தணும்ன்னு அவரு நினைக்க மாட்டாராப்பா ?

காட்சி 6

( அம்மா & ரயன் )

அம்மா : என்னப்பா ? கப்பல் கவுந்தது மாதிரி சோகமா நிக்கறே ?

ரயன் : இல்லம்மா… ஜஸ்ட் திங்கிங்

அம்மா : என்ன திங்கிங் ? அடுத்த புக்கா ? இல்ல எங்கேயாச்சும் பேச போறியா

ரயன் : அம்மா, கடவுள் குடுத்த திறமையை கடவுளுக்காகப் பயன்படுத்தணும்ன்னு அவரு நினைப்பாரா ?

அம்மா : என்னப்பா இப்படி ஒரு கேள்வி கேக்கறே.. உன் கிட்டே எத்தனையோ தடவை சொல்லியிருக்கேன். கடவுளுக்காக எதையாச்சும் பண்ணணும்னு.. நீ தான் கேக்கறதே இல்லை.

ரயன் : அம்மா… ஐம் நாட் டூயிங் எனிதிங் ராங்

அம்மா : சரியானதை செய்யாம இருக்கிறதும் தப்பு தான்பா. நல்லது செய்ய தெரிந்திருந்தும் செய்யலேன்னாலும் அது பாவம் தான்.

ரயன் : அப்படின்னா ?

அம்மா : நான் வாங்கித் தந்த போனை வெச்சுட்டு… என் பக்கத்துல வந்திருந்து நீ எப்பவுமே வேற யார் கூடயோ சேட் பண்ணிட்டே இருந்தா எனக்கு புடிக்காதுல்ல.

ரயன் : அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்மா

அம்மா : அதே போல தான், கடவுள் கிட்டே வாங்கின திறமையை வெச்சுட்டு வேற யாருக்கோ நீ எதையோ பண்ணிட்டே இருந்தா கடவுளுக்குப் புடிக்குமா ? அதான்.. நீ உன்னோட திறமையை எல்லாம் கடவுளுக்காக செலவழிக்கணும்பா

ரயன் : அதுல என்னம்மா சுவாரஸ்யம் இருக்கு ?

அம்மா : எதுவுமே ஆத்மார்த்தமா செய்யும்போ தான்பா அதோட அழகு புரியும். நீச்சல் கத்துக்கற வரை அதோட சுவாரஸ்யம் புரியாது. கத்துகிட்டா அதை விட்டு வெளியே வரவே தோணாது. சைக்கிள் ஓட்ட கத்துக்கற வரை அது நமக்கு வராதுன்னு நினைப்போம், வந்துச்சுன்னா அதை விடவே மாட்டோம். அப்படி தான் இதுவும். கடவுள் பணியில இறங்கற வரை தான் அது போரா தெரியும், இறங்கிட்டா மத்த எல்லாமே போரா தெரியும்.

ரயன் : பட்.. எனக்கு அதுல திறமையும் இல்லம்மா….

அம்மா : சீ.. உனக்கு எல்லா திறமையும் கடவுள் தந்திருக்காரு. இதுவரை நீ நெட் ல பேட்டிங் பிராக்டீஸ் பண்ணிட்டிருந்தேன்னு நினைச்சுக்கோ. இனிமே கிரவுண்ட்ல போய் விளையாடு. இதுவரை உலக விஷயத்துல நீ கத்துகிட்டதை எல்லாம் கடவுளுக்காக பயன்படுத்து.

ரயன் : ம்ம்.. அது நல்லா தான்மா இருக்கு.. பட்…

அம்மா : ரொம்ப குழம்பாதே. நீ போய் பிரேயர் பண்ணு. காட் வில் லீட் யூ.

காட்சி 7

( ரயன் பிரேயர் )

ரயன் : கடவுளே… நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணுங்க. நான் உங்க மிஷனரி படைப்பாளியா மாறணும்ன்னா அதுக்கான வழியை நீங்க எனக்கு காட்டுங்க. ஒருவேளை நாளைக்கே யாராவது கூப்பிட்டு கிறிஸ்தவ வேலை ஒண்ணை குடுத்தாங்கன்னா அதை உங்க அழைப்பா ஏத்துக்கறேன்… பிளீஸ்.. எனக்கு ஒண்ணும் தெரியாது.. வழிகாட்டுங்க. ஆமென்.

காட்சி 8

( காலையில் போன் அடிக்கிறது, எழும்புகிறான் )

பாஸ்டர் : தம்பி தான் தான் சர்ச் பாஸ்டர் பேசறேன்.

ரயன் : சொல்லுங்கய்யா…

பாஸ்டர் : தம்பி நாம சர்ச் ஆண்டுவிழா வருதில்லியா ?

ரயன் : ஆமா பாஸ்டர். நன்கொடையா ?

பாஸ்டர் : இல்லை தம்பி… அதுக்காக ஒரு பாட்டு பண்ணணும் தம்பி. இயேசுவை நம்ம நண்பரா வெச்சு ஒரு பாட்டு எழுதணும். நம்ம பாடகர் குழு பாடுவாங்க. நீங்க…… ரொம்ப ஆர்வம் காட்ட மாட்டீங்கன்னு கமிட்டி மெம்பர்ஸ் சொன்னாங்க, அதான் நானே நேரிட்டு சொல்றேன் தம்பி.

ரயன் : அ..அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல பாஸ்டர்

பாஸ்டர்; இயேசுவை நாம கடவுளா, மனுஷனா, தந்தையா, அண்ணனா பாப்போம் இல்லையா. இந்த தடவை அவரை ஒரு பிரண்டா பாக்கணும். என் பிரண்டைப் போல யாரு, இயேசுவோட பழகிப் பாரு.. இந்த மாதிரி ஒரு யூத்ஃ புல்லா… எழுதுங்க தம்பி.

( சிந்தனை : ஒருவேளை நாளைக்கே யாராவது கூப்பிட்டு கிறிஸ்தவ வேலை ஒண்ணை குடுத்தாங்கன்னா அதை உங்க அழைப்பா ஏத்துக்கறேன் .. குரல் )

பாஸ்டர் : என்ன தம்பி யோசிக்கிறீங்க.. பண்ண முடியாதா ?

ரயன் : நோ.. நோ.. கண்டிப்பா பண்றேன் பாஸ்டர்.. இதோ காலையிலயே உக்காந்து எழுதி தந்துடறேன். வேற ஏதாச்சும் எழுதணும்ன்னா கூட சொல்லுங்க பாஸ்டர். பாட்டு, கட்டுரை, மேகசீன்ல ஆர்ட்டிகிள், விபிஎஸ், சண்டே ஸ்கூல்.. எனி திங் ஃபார் த லார்ட்.

பாஸ்டர் : பிரைஸ் த லார்ட் தம்பி. ஐம் வெரி ஹேப்பி.

காட்சி 9

( ரயன் )

ரயன் : இயேசுவே.. நீங்க எனக்கு தெளிவான ஒரு வழியைக் காட்டிட்டீங்க. இனிமே என் ரூட்டு உம்ம பாதையில தான்.

காட்சி 1 ( தொடர்ச்சி )

ரயன் : இப்படி தான் என்னோட லைஃப் ஒரு யூ டர்ன் அடிச்சு இயேசுவோட பாதையில வந்துச்சு.

பேட்டி : வெரி இன்ஸ்பைரிங் ஸ்டோரி.. பட்.. ஏன் ஒன்லி கிறிஸ்டியன் ?? கிறிஸ்டியன் லிட்டரேச்சர், வேல்ர்ட் லிட்டரேச்சர்.. ரெண்டுமே பண்ணலாமே..

ரயன் :இல்லீங்க… ஒரு மாட்டு வண்டில ரெண்டு காளை இருக்கலாம். பட் ரெண்டும் ரெண்டு ரூட்ல ஓடக் கூடாது. அது இலக்கை அடையாது. உலகத்தோட ரூட்டும், கடவுளோட ரூட்டும் தண்டவாளம் மாதிரி சேர்ந்தே இருக்காது.

பேட்டி : வெரி நைஸ்… மனசுக்கு கஷ்டமா இல்லையா ?

ரயன் : கஷ்டமா தான் இருக்குது. இவ்ளோ லேட்டா கடவுளை அறிஞ்சுகிட்டேனேன்னு கஷ்டமா இருக்கு. ரொம்ப வருஷம் வேஸ்ட் பண்ணிட்டேனேன்னு கஷ்டமா இருக்கு. இன்னும் நிறைய பண்ணியிருக்கலாமேன்னு கஷ்டமா இருக்கு.

பேட்டி : வாவ்…. வெரி நைஸ். ஒரு கடைசிக் கேள்வி. உங்க ஆன்லைன் சேனல் ’சிம்சோன் மினிஸ்றீஸ்” ந்னு பேரு வெச்சிருக்கீங்க. ஆனா பொதுவா சிம்சோன் பேர்ல யாரும் மினிஸ்ட்டிரி ஆரம்பிக்கிறதில்லையே… ஏன் நீங்க மட்டும் ?

ரயன் : என் வாழ்க்கை ஒரு வகையில சிம்சோன் வாழ்க்கை மாதிரி. கடவுள் கிட்டே வா வா ந்னு அம்மா அப்பா சொன்னப்போ கேக்கல. கீழ்ப்படியல. எனக்கு புடிச்ச வாழ்க்கை வாழ்ந்தேன். எனக்கு எது சரியோ அதை செய்தேன். சிம்சோன் அப்படித் தான் இருந்தாரு. ஆனா அவரையும் கடவுள் தன்னோட திட்டத்துக்கு பயன்படுத்திட்டாருல்லயா, அதே மாதிரி என்னையும் அவரு பயன்படுத்தினாரு. அதனால தான் இந்த பெயர். இதை பாக்கும்போ எல்லாம் எனக்கு என்னோட அழைப்பும், என்னோட கடந்த கால வாழ்க்கையும் ஞாபகத்துக்கு வரும்.

பேட்டி : வாவ்.. வெரி இம்ரசிவ்… சிம்சோன் உடைக்கிறாரு, நீங்க படைக்கிறீங்க ! வெரி நைஸ். ஆல் த பெஸ்ட்.. உங்களுடைய இந்த பணி இன்னும் தொடரட்டும்.

ரயன் : தேங்க்யூ வெரி மச்

*

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s