Posted in EASTER 2022

உயிர்ப்பின் முதல் காட்சி

இயேசு
உயிர்த்து விட்டார் !

இரவின் போர்வைக்குள்
வெளிச்சம்
கண்மூடிக் கிடந்த பொழுதில்
இயேசு
கண்விழித்து நடந்தார்.

வாளோடு இருந்த காவலர்களுக்குத்
தெரிந்திருக்காது !
இயேசு
வாழ்வோடு திரும்பிச் சென்ற
செய்தி !  

தூதர்கள் வந்து
அடைத்த கதவை
உடைத்த போது தான்
உதயம் நடந்திருப்பதை
இதயங்கள் புரிந்து கொண்டன !

கடவுள் வெளியேற
கதவுகள் தேவையில்லை,
மனிதன்
கண்டுணரவே
கல்லும் புரட்டப்பட்டது !

விடியலுக்கு முன்பே
துயரத்தின் தூங்காக் கண்களோடு
கல்லறை நோக்கி
விரைந்தோடினாள் 
மகதலா மரியா.

அடைபட்ட ஆதவன்
வெளியேறிய செய்தியை
அவள்
அறிந்திருக்கவில்லை !

காலியாய்க் கிடந்த கல்லறை
அவளை
கலங்கடித்தது !
கண்களில்
கண்ணீர் சுழன்றடித்தது !

இயேசு
உடலாய்க் கிடப்பார் என்றே
அவள் கருதினாள்,
தடயம் இல்லாமல்
கடத்திச் சென்றார்களோ
என தடுமாறினாள் !

இயேசு
மரியாளின் 
வாழ்வின் மையமாய் இருந்தார்
மரித்த பின்பும் !

தொடக்கம் முதல்
அடக்கம் வரை
கூடவே இருந்த மரியா ,
உயிர்த்த இயேசுவை
மரணத்தின் வீதிகளில் தேடினாள்.  

திடீரென ஒரு குரல்
திரும்ப வைத்தது !
ஏனம்மா அழுகிறாய் ?
காதுகளில் வார்த்தைகள்
வந்து விழுந்தாலும்
மரியாவின் விழிகள்
இயேசுவைத் தேடியே அலைந்தன !

யாரைத் தேடுகிறாய் ?
இயேசுவின் 
அடுத்த கேள்வி 
மரியாவை திருப்பியது.

தோட்டத்தில்
நின்றிருந்த மரியாவுக்கு
இயேசு
தோட்டக்காரராய் தெரிந்தார். 

ஐயா
இயேசுவின் உடலை
நீர் எடுத்தீரா ? மரியா கேட்டாள்.

இயேசுவோ
உடலை உடுத்துக் கொண்டு
வந்திருந்தார் !

எங்கே வைத்தீர்
என சொல்லும்,
எடுத்து வரும் வேலை கூட
உமக்கு வேண்டாம்
நானே எடுத்துச் செல்வேன் என்றாள் !

இயேசு
மரியாவின் அன்பினால்
மீண்டும் ஒருமுறை
உயிர்த்தெழுந்தார் !

இயேசு
மரியா - என அழைத்தார் !

அதுவரை
தோட்டக்காரராய் தெரிந்தவர்
சட்டென
அவளுக்கு இயேசுவாய் மாறினார். 

இப்போது
மரியா 
கவலைகளை உதறி உயிர்த்தெழுந்தார் !

இயேசு
பெயர் சொல்லி அழைக்கும் போது
இருள் விலகுகிறது
பார்வை தெளிவடைகிறது !
மரியா
பரவசத்தின் மலைகளில்
சட்டென தாவினாள்,
ரபூனி எனக் கூவினாள்.

என்னைப் 
பற்றிக் கொள்ளாதே
ஆனால்
என்னைப் பற்றிச் சொல்
என்றார் இயேசு !

உயிர்த்த இயேசுவின்
முதல் காட்சி
வியப்பின்  வெளிகளில்
அதிசய ஆடுகளாய் மேய்ந்து திரிகின்றன.

சாத்தானின்
தலையை நசுக்கி 
வெற்றி வீரனாய் வரும் இயேசு,
முன்பு
சாத்தனை விரட்டியிருந்த
மரியாவை சந்திக்கிறார் ! 

தேடுங்கள் கண்டடைவீர்கள்
என்ற இயேசு
தன்னைத் தேடியவரைச்
சந்திக்கிறார் !

அதிகாலையில் என்னைத் 
தேடுங்கள் என்றவர்
அதிகாலையில்
அற்புத தரிசனம் கொடுக்கிறார். 

இது தற்காலிக 
சந்திப்பல்ல,
காலங்களுக்கு முன்பே
கடவுள் குறித்து வைத்த சந்திப்பு.

தனது காட்சியை
இயேசு
ரோம அரசின் தலைமைக்கு
நிகழ்த்தியிருந்தால்
சட்டென
சாம்ராஜ்யம் முழுதும்
உயிர்ப்பின் செய்தி பறந்திருக்கும் !
யூதத் தலைவர்களுக்கு
இயேசு
காட்சி கொடுத்திருந்தால்
இஸ்ரேல் முழுதும்
இயேசு புகழ் பரவியிருக்கும் !

இயேசுவோ
சாதாரண மனிதருக்குக்
காட்சியளிக்கிறார்

வாழ்ந்த போது
புறக்கணிக்கப்பட்ட மக்களோடு
பயணித்தவர்,
முதல் காட்சியையும்
புறக்கணிக்கப்படும் பெண்ணினத்துக்கே
தருகிறார் !
இயேசு
பல நூறு பேருக்குக் காட்சியளித்தார்,

விவிலியம்
பதிவு செய்யாத பல்லாயிரம் பேர்
அந்தப் பட்டியலில் இருக்கலாம்.

எல்லாருக்கும் மேலாக
இங்கே
மகதலா மரியா 
முதல் வரிசையில் நிற்கிறார்.  

உயிர்த்த இறைவனை
முதலில் பார்க்கும்
பாக்கியம் பெற்றதும் இவரே தான் 

உயிர்த்த இயேசு
முதலில் பெயர் சொல்லி 
அழைத்ததும் இவரைத் தான் !
Posted in Articles

எம்மாவு : வரலாற்றுப் பயணம் !

எம்மாவு !
விவிலியத்தில் ஒரே ஒரு முறை
உச்சரிக்கப்படும் ஊர் !
வரலாற்றில்
ஒருவராலும் மறக்க முடியாததாய் 
நிலைத்து விட்டது !

இணைத் திருமறை நூலான
மக்கபேயர்
எம்மாவுவைப் பற்றிய 
அதிக தகவல்களைத் தருகிறது,

மக்கபேயர் காலத்தில்
அது
அரண் சூழ் நகரங்களில் ஒன்று !
அந்த நகரைக் கட்டியவர்
பாக்கீது ! என்றெல்லாம் அது பேசுகிறது !

இப்போதோ
எம்மாவு
பழைய பெருமைகளைக்
பரணில் போட்டுவிட்ட ஒரு சிறிய ஊர் !

எருசலேமுக்கும்
எம்மாவுக்கும் இடையே
11 கிலோ மீட்டர் தூரம் !
கிட்டத்தட்ட
நான்கு மணி நேர நடை பயண தூரம் !

இரண்டு சீடர்கள்
எருசலேமை விட்டு
எம்மாவு நோக்கி
கலங்கிய விழிகளோடும்
குழம்பிய இதயத்தோடும்
நடந்து செல்கின்றனர் !

அவர்கள்
அப்போஸ்தலர்கள் அல்ல !
இயேசுவின்
தோழர்களாய் நடந்த
சீடர்கள் அல்ல !

அதுவரை அறியப்படாத 
சீடர்கள் அவர்கள். 

‘நானே வழி’ என்றவர்
அவர்களோடு
வழியில் இணைகிறார் !

சீடர்களோ
எருசலேமில் நிகழ்ந்த
புதிருக்கான விடையை
எம்மாவு எல்லைகளில்
கண்டுபிடிக்க முயன்று 
கொண்டிருந்தனர்.

இஸ்ரேலை
மீட்பார் என நினைத்திருந்தவர்
மாண்டாரே என
புலம்பிக் கொண்டிருந்தனர்.

இறைவாக்கினராய் இருந்தவர்
இறந்து விட்டாரே
என
தவித்துக் கொண்டிருந்தனர்.

“உண்மை”
கூடவே நடந்து கொண்டிருக்க
சீடர்கள்
உண்மையைத் தங்களுக்குள்
தேடிக் கொண்டிருந்தனர்.  

என்ன பேசுகிறீர்கள் ?
தானாக வந்து
பயணத்தில் இணைந்தவர்,
தாமாகவே பேசுகிறார் !

சீடர்களோ
அவரை
வேற்றுக்கிரக வாசிபோல
பார்த்தார்கள் !

எருசலேம் முழுதும்
எரிந்து கொண்டிருக்கும் விஷயம் 
உமக்கு. மட்டும்
தெரியாதோ !
என்றனர்.

நிகழும் முன்பே
எல்லாம் அறிந்தவர்,
நிகழ்ந்த பின்னும்
அறியாதவர் போல் கேட்டார்

என்ன நிகழ்ந்தது ?

அவர்கள்
இயேசுவைப் பற்றி
இயேசுவுக்கே
பாடம் எடுத்தார்கள் !

இயேசுவைக் கொன்று
மூன்றாவது நாள் இன்று
மக்களோ
வியப்புச் செய்திகளை விளம்புகிறார்கள்.

இயேசுவின் கல்லறை
காலியாய் இருக்கிறதாம்,
வானதூதர் வந்து
காட்சி கொடுத்தாராம் !
இயேசு உயிர்த்ததாய் 
உறுதியாய்ச் சொன்னார்களாம் !

சீடர்கள்
புதிரெனும் புதைகுழியில் விழுந்து
நீச்சலடித்தார்கள்.

இயேசுவோ
மந்த புத்தியுள்ளவர்களே
என நொந்து சொன்னார்,
அறிவிலிகளாய் இருக்கிறீர்களே
என
முடிவிலி சொன்னார் !

பழைய ஏற்பாட்டில்
புதைந்து கிடந்த
வார்த்தைகளின் விளக்கத்தை
வார்த்தையானவரே
விளக்கினார் !

அங்கே ஒரு
நடமாடும் பைபிள் கல்வி
வகுப்பு நடந்தது. 

எம்மாவு நெருங்கியது,
பொழுது விலகியது !
சீடர்கள்
‘எங்களோடு தங்கும்’
என
இயேசுவைக் கட்டாயப்படுத்தினார்கள்.

தங்கும் என
சொல்லாமல் இருந்திருந்தால்
அசரடிக்கும் அந்த
அனுபவத்தை அவர்கள்
பெறாமலேயே போயிருப்பார்கள்.

இயேசுவும்
விடைபெற்று விலகியிருப்பார். 

தானாக 
நடந்து வந்தவர்
நாமாக அழைக்க வேண்டுமென
ஆசிக்கிறார்.
அவர் கதவைத் தட்டுகிறவர்
கதவை உடைக்கிறவரல்ல !

அழைப்பை ஏற்று
அவர்களோடு தங்குகிறார் !
இயேசு !
அப்பத்தை எடுத்து
கடவுளைப் போற்றி
பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார் !

சட்டென
பரவசத்தின் பார்வை
திறந்து கொள்ள
வியப்பின் வானத்தில்
அவர்கள் புரண்டார்கள் !

அது
இயேசு என்பது
உறைத்த கணத்தில்  
இயேசு மறைந்தார் !

ஒருவேளை
ஐந்து அப்பங்களை இயேசு
பிட்ட நிகழ்வில்
இவர்கள்
கிட்ட இருந்திருக்கலாம். 

அல்லது
நாலாயிரம் பேருக்கு
பகிர்ந்தளித்த பொழுதில்
பார்த்திருந்திருக்கலாம் !

இங்கே
அப்பம் பிட்கையில்
கண்கள் திறக்கின்றன !

கூட நடந்த போது
அறியவில்லை,
விளக்கம் அளித்த போது
அறியவில்லை,
அருகில் அமர்ந்த போது
அறியவில்லை !
உணவைப் பகிர்கையில் தெரிகிறார்.

உணவைப் பிறரோடு
பகிர்ந்து அளிக்கும்
பொழுதுகளில்
இறைவன் தெரிகிறார் !

அவர்
மறை நூலை விளக்குகையில்
நம் உள்ளம்
பற்றி எரியவில்லையா ?
என சீடர்கள்
பிரமிப்போடு பேசிக்கொண்டார்கள் !
மகதலா மரியா
இயேசுவை 
தோட்டக்காரராய் நினைத்தார்
சீடர்கள்
இயேசுவை வழிப்போக்கராய் நினைத்தார்கள் !
சாட்டையால் அடிபட்டு
ஆணியால் அறையப்பட்டு
கிழிந்து தொங்கிய
இயேசுவைச் சந்தித்தவர்கள்,
உயிர்ப்பின்
புதிய உடலோடு அவரை 
அடையாளம் காண தடுமாறுகிறார்கள் !

உயிர்த்தவரைக் கண்ட
சீடர்கள்
ஆனந்த அருவியில் விழுந்து
பரவச படிக்கட்டில்
கரையேறினார்கள்.

அப்பமும் கையுமாய்
அப்போதே அவர்கள்
எருசலேமுக்கு ஓடினார்கள். 

இரவைப் பற்றிக்
கவலைப்படவில்லை
சோர்வைப் பற்றி
சிந்திக்கவில்லை
நற்செய்தியை அறிவிக்க
வந்த வழியே திரும்பி ஒடினார்கள்.

துர்ச்செய்தியால்
துரத்தப்பட்டவர்கள்
நற்செய்தியால்
திரும்பி வருகிறார்கள். 

துயரத்தின்
ஒற்றையடிப் பாதையாய் இருந்த
எம்மாவு வழிப்பாதை,
மகிழ்வின் நெடுஞ்சாலையாய்
மாறியது !
Posted in EASTER 2022

கரி நெருப்பும், கர்த்தரும் 

திபேரியக் கடற்கரை
மீண்டும் ஒரு
அற்புத நிகழ்வுக்காய்
அமைதியாய்க் காத்திருந்தது !

மனிதர்களைப்
பிடிப்போராக்குவேன் என்று
அழைத்துச் சென்ற
இயேசு
மரணத்தின் வாசலுக்குள் நுழைந்து விட்டார்.

மீன்களையாவது
பிடிப்போம் என
சீமோன் பேதுரு படகேறினார் !

உயிர்த்த இயேசுவின்
அனுபவமும்
சீடர்களை
வலுவடையச் செய்யவில்லை. 

அத்தனை
பாதைகளும் களவாடப் பட்டதாய்
அவர்கள் அதிர்ந்தனர் !

அவருடன் சேர்ந்து
ஏழுபேர்
அந்த அச்சமூட்டும் இரவில்
கடலில் மீன்பிடிக்க
முயன்று முயன்று 
தோற்றுக் கொண்டிருந்தனர்.

வலைகள்
மீன்களை வடிகட்டி
காற்றை
கரையிழுத்துக் கொண்டிருந்தன.

பகலின் வலைகளில்
இரவு
இழுபட்டுக் கொண்டிருந்த
அதிகாலை !

மீன்கள் வலையை மறுதலித்ததால்
தோல்வியின் தூண்டிலில்
துவண்டிருந்தார்
சீமோன் !

இருளும் வெளிச்சமும்
மல்யுத்தம் செய்து கொண்டிருந்த
அந்தக்
கடற்கரையில்
நின்றிருந்தார் உயிர்த்த இயேசு !

பிள்ளைகளே
மீன் ஒன்றும் படவில்லையா ?

இயேசுவின் கேள்வி
சீடர்களை
குழம்பியது !
தங்களை பிள்ளைகளே என
அழைப்பது யார் ?

குழப்பத்தின்
வினாக்களில் சிக்கியிருந்தவர்கள்
இல்லை என
பதில் சொன்னார்கள்.

வலப்பக்கம்
வலையை வீசுங்கள்
மீன்கள் கிடைக்கும் 
என்றார் இயேசு !

கடல் எங்களுக்கு
இரண்டாம் நிலம்,
நிலம்
எங்களுக்கு
இரண்டாம் கடல் !

மீன்பிடிப்பதற்கு
எங்கே வலை வீசவேண்டுமென
கரையில் நிற்பவர்
கணிக்க முடியுமா ?

அத்தனை பக்கங்களிலும்
வலைகள் வீசியாயிற்று !
மீன்களெல்லாம்
விடுமுறைக்குச் சென்றது போல்
கடலுக்குள் வெற்றிடம் !

வலைகள்
வெறும் அலைகளையே
அள்ளி வருகின்றன !

இதில் மறுபடியும் ஒரு முறை
வலப்பக்கமாய் வீசவா ?

அத்தனை கேள்விகள் 
தொண்டைக்குழியில் தொங்கினாலும்
கடைசியாய் ஒருமுறை
வீசினார்கள் வலையை !

வலை வீசுவதற்காய்
காத்திருந்தது போல
மீன்களெல்லாம் ஓடிவந்து
வலைக்குள்
அமர்ந்து கொண்டன !

யோவான்
உற்சாகத்தில் கூவினார்..
அது
இயேசுவே தான் !

அவர்கள்
நடந்து கொண்டிருக்கும் நிகழ்வை
முடிந்து போன
பழைய நிகழ்வோடு 
முடிச்சிட்டுப் பார்த்தார்கள் !

நிழல் பூசிய நிஜமாக
அங்கே மங்கலாய்த் தெரிபவர்
தங்கள்
ஆண்டவர் என்று
அவர்கள் அறிந்து கொண்டனர் !

சீமோன்
ஆடையைக் கட்டிக் கொண்டு
நீருக்குள் தாவினார் !

விரைவாய் ஓடி
இயேசுவை நெருங்குகையில்
பேதுருவின் கண்களைக்
கலங்கடித்தது
கரையில் எரிந்து கொண்டிருந்த
கரி நெருப்பு !

கரி நெருப்பின் மீது
புதுமையின் பிரதிநிதியாய்
மீன் ஒன்று
வெந்து கொண்டிருந்தது !

அந்த
கரிநெருப்பு
பேதுருவின் மனதுக்குள்
மறுதலிப்பின்  ஞாபகத்தை
தூக்கி வந்து நிறுத்தியது!

அன்று
கரி நெருப்பின் முன்னால்
குளிர் விரட்டிக் கொண்டிருந்த
நடுக்கத்தின் கணத்தில் தான்
மறுதலிப்பின்
வார்த்தைகள் எழுந்தன !

இதோ
இங்கும் கரி நெருப்பு !

அங்கே
குற்றவாளியாய் நின்றிருந்தார்
இயேசு,
இங்கே
விடுதலை வீரராய் நிற்கிறார் !

உணவருந்த வாருங்கள்
என்கிறார் இயேசு !
அவர்களோ
நாவின் அடிவாரத்தில்
நங்கூரம் விழுந்ததாய் மௌனித்திருந்தனர்

விலகிச் சென்ற சீடர்களுக்கு
இயேசுவே 
நெருங்கி வந்து
உணவளித்தார் !

களைத்து வந்த மக்களுக்காய்
கரையிலேயே
பசியாற்றும் பந்தி வைத்த
இயேசு
சீமோனிடம் கேட்டார் !

இவர்களை விடவோ, இவற்றை விடவோ
உனக்கு என்னிடம்
அன்பு உண்டா ?

ஆம் ஆண்டவரே
உம் மீதான என் அன்பு
நீர் அறியாததா ?

அப்படியெனில்,
என்
ஆடுகளை பேணி வளர் !
என்றார் இயேசு !

மூன்று முறை
இயேசு அதே கேள்வியைக் கேட்க,
பேதுரு அதே பதிலைச் சொல்ல
அந்த கரி நெருப்பு
அனைத்தையும்
கவனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தது !

மூன்று முறை
மறுதலிப்பைப் பார்த்து
கலங்கியிருந்த கருநெருப்பு,
இப்போது
நேசத்தில் நெருங்குவதைப் பார்த்து
ஆறுதல் அடைகிறது !

எதிரிகள் மூட்டிய
கரிநெருப்பின் முன்னால்
நிலை தடுமாறிய பேதுரு
இயேசு மூட்டிய
கரி நெருப்பின் முன்னால்
தெளிவடைகிறார். 

எதிரிகள் மூட்டிய
கரி நெருப்பு,
வெறுப்பின் வெப்பத்தை வீசியது.
இயேசு மூட்டிய
கரி நெருப்பு
சீடர்களின் பசியைப் போக்கியது !

இயேசுவின் மீதான
அன்பு என்பது,
அவரது ஆடுகளைப் பேணுவதில் மட்டுமே
என்பதை
மூன்று முறை இயேசு
உறுதியாய்ச் சொல்லி முடித்தார்.

மறுதலித்த பேதுரு
குற்ற உணர்வில் தலைகவிழ்ந்திருந்தார்.
இயேசுவோ
அவரை அழைத்து
திருச்சபைக்குத் தலையாக்குகிறார் !

தோற்கும் மனிதர்களை
விலக்கி வைப்பதல்ல,
துலக்கி வைப்பதே
இயேசுவின் மனம் !

அச்சத்திலும்
கூச்சத்திலும் ஒதுங்கிக் கிடந்த
சீமோனை,
மன்னிப்பின் அரவணைப்பில்
இயேசு
தேடி வந்து தேற்றுகிறார் !
பாறையாய் மாற்றுகிறார் !

முள்ளை முள்ளால்
எடுப்பது போல

ஒரு 
கரி நெருப்பு எழுதிய
துயரத்தின் ஓவியத்தை,
இன்னோர்
கரி நெருப்பு
மகிழ்வின் கவிதையாய் 
மாற்றி வரைகிறது.

பேதுரு
மகிழ்வுடன் நிமிர்ந்தார்.
இரவு கழுவப்பட்டிருந்தது
பகல் பயணத்தைத் தொடங்கியிருந்தது, 

அந்தக் காலை வேளையில்
எந்தச் சேவலும்
கூவவில்லை !

*

சேவியர். 
Posted in EASTER 2022

விண்ணேற்பு

விண்ணேற்பு !

இயேசுவின்
மண்ணக வாழ்க்கையின்
அதிகார பூர்வ
முடிவு தினம் !

மங்கையின் வழியாய்
மண் வந்த இறைவன்
மேகத்தின் வழியாய்
விண் செல்கிறார்.

உயிர்த்த
நாற்பது நாட்களுக்குப் பின்
இயேசு
விடைபெற்று
வீடு திரும்புகிறார் !

நாற்பது என்பது
தயாரிப்பின் காலம் !

இயேசு
சாத்தானின் 
சோதனைக் களத்தில் 
நாற்பது நாட்கள் நோன்பிருந்தார் !
பணிவாழ்வின் தயாரிப்பு
அங்கே நிறைவுற்றது !

முகில் ஆடை உடுத்திய மலையின் மேல் 
மோசே
நாற்பது நாட்கள் காத்திருந்தார்,
கட்டளைகளின் தயாரிப்பு
அங்கே நிறைவுற்றது !

பாலை நிலத்தில் இஸ்ரேல் மக்கள்
நாற்பது ஆண்டுகள்
பயணித்தனர்,
புது நிலம் நுழைவதற்கான
தயாரிப்பு அங்கே நிறைவுற்றது !

நோவாவின் காலத்தில
நாற்பது நாட்கள் தண்ணீரில்
மூழ்கியது,
புதிய தொடக்கத்துக்கான
தயாரிப்பு அங்கே நிறைவுற்றது !

இங்கே இயேசு
உயிர்த்தபின் நாற்பது நாட்கள்
உறவாடினார்
உரையாடினார்
சீடர்களுக்கான
தயாரிப்பு நிறைவுற்றது !

இப்போது
விண்ணகத்தின் இருக்கை
விண்ணவரை
அழைக்கிறது !

மனிதனாய் வந்தவர்
உடலை உதறிவிட்டு
ஆவியாய் 
ஆகாயம் செல்லவில்லை !

மனுக்குலத்தின்
அடையாளம் சுமந்து
மனிதனாகவே 
மேலே சென்றார் !

மனிதனை மறப்பதில்லை
என்பதன் குறியீடா
அல்லது
மனிதனின் சோதனைகளை
அறிவேன் எனும்
ஆறுதலில் தடயமா ?

உடலை
ஆலயம் என்றார் இயேசு
இங்கே
ஆண்டவரே
ஆலயத்தைச் சுமந்து செல்லும்
அதிசயம் நடக்கிறது !

முதலில்
விண்ணைச் சுமந்து
மண்ணில் வந்தவர்,
இப்போது
மண்ணைச் சுமந்து
விண்ணில் செல்கிறார் !

கிறிஸ்தவத்தின் மையம்
சிலுவையா ? உயிர்ப்பா ?
இரண்டுமே இல்லை !
அது 
விண்ணேற்பில் தான் அடங்கியிருக்கிறது !

விண்ணேற்பு தான்
இயேசு
நமக்கான இடத்தை
ஆயத்தம் செய்கிறார் என்பதன்
அத்தாட்சி !

விண்ணேற்பு தான்
தூய ஆவியானவர்
நமக்காய்
இதயம் இறங்குகிறார் 
என்பதன் அத்தாட்சி ! 

விண்ணேற்பு தான்
அதிகாரம் மொத்தமும்
இயேசுவிடம் என்பதன் 
அத்தாட்சி

விண்ணேற்பு தான்
தலைமகன்
தலைமைக் குருவாய் இருக்கிறார்
என்பதன் அத்தாட்சி

விண்ணேற்பு தான்
நமக்காய்
பிதாவிடம்
பரிந்து பேசுகிறார் என்பதன்
அத்தாட்சி !


சிலுவை
இயேசுவின் 
கீழ்ப்படிதலின் அடையாளம்

உயிர்ப்பு
தந்தையின்
பேரன்பின் அடையாளம்

விண்ணேற்பு
இயேசுவின்
அதிகாரத்தின் அடையாளம் !



நாற்பது நாட்கள்
இயேசு
இறையாட்சியைப் பற்றி
சீடர்களுக்குப் போதித்தார் !

மரணிக்கும் முன்
மனிதனாய்ப் போதித்தவர்
உயிர்த்த பின்
இறைவனாய்ப் போதிக்கிறார் !

முன்பு
இருவர் இருவராய்
சீடர்களை அனுப்பியவர்
இப்போது
இரண்டாம் நபராய்
தூய ஆவியானவரை அனுப்புகிறார்.


பெத்தானியாவில்
சீடர்களுக்கு
ஆசி வழங்கிவிட்டு
முகிலில் ஏறி மறைந்தார்
விந்தை மகன் !

சீடர்கள்
இயேசுவைக் கடவுளாய்
காணத் தொடங்கினார்கள்
தாமதிக்காமல் 
வணங்கினார்கள் !

அவர்களின்
இருண்ட வாழ்வுக்குள்
பெருமகிழ்வின்
பிரவாகம் நிரம்பி வழிந்தது.

வியப்பின் வானத்தை
வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தவர்களை
வானக மனிதர்
இருவர் 
நிகழ்வின் நிலத்துக்கு இழுத்து வந்தனர்

விண்ணேற்பைக்
கண்டீர்கள் அல்லவா,
அவ்வாறே
அவர் மீண்டும் வருவார் !

அவர்கள் சொல்லச் சொல்ல, 
சீடர்கள்
சிலிர்த்தனர் !


விண்ணேற்பு
மகிமையின் அடையாளம் மட்டுமல்ல
இரண்டாம்
வருகையின் அடையாளமும் கூட
என
இதயத்தில் எழுதிக் கொண்டனர்

இயேசு
விண்ணேற்றம் அடைந்து
தந்தையின் வலப்பக்கம்
வந்தமர்ந்தார் !

அதை
ஸ்தேவானின்
மரண வாக்குமூலம்
அகிலமெங்கும் அறிவித்தது  !

*
Posted in EASTER 2022

சந்தேகமும், சந்தோசமும்

பகையின் 
குகைக்குள் இருந்த இயேசு
ஒளியின் 
திசைக்கு வந்து விட்டார் !

சீடர்களோ
இன்னும்
அடைக்கப்பட்ட கதவுகளுக்குள்
இருளில்
அடைபட்டுக் கிடந்தார்கள்.

அச்சம் அவர்களை
ஆட்டிப் படைத்தது !
தூதர்களைக் 
கண்ட பின்னும் 
யூதர்களுக்குப் பயந்திருந்தார்கள் !
 
இயேசு
அடைபட்ட அறைக்குள்
சட்டென தோன்றினார்.

அவர்களின் அமைதி
சட்டென கலைந்து போக,
உங்களுக்கு அமைதி உரித்தாகுக
என்றார் இயேசு !

குழப்பத்தின்
கலக்கத்தில் கிடந்தவர்கள்
மகிழ்வின்
மயக்கத்துக்குள் தாவினார்கள்.

மறைந்து போனவரை
மீண்டும் கண்டதால்
உறைந்து போனார்கள் !

உங்களுக்கு
சமாதானம் !

இயேசு மீண்டும்
சமாதானத்தின் செய்தியை
சஞ்சலத்தில் செவிகளில் ஊற்றினார்.

சீடர்கள்
பரவசத்தின் பக்கங்களில்
பரபரப்பானார்கள்.

தந்தை
என்னை அனுப்பினார்
நான்
உங்களை அனுப்புகிறேன் !

எவருடைய
பாவங்களை மன்னிப்பீர்களோ
அவை மன்னிக்கப்படும்,
எவற்றை
மன்னிக்காது விடுவீர்களோ
அவை மன்னிக்கப்படாது !
என்றார் !
முன்பு அனுப்புகையில்
ஆற்றலைக் கொடுத்து அனுப்பியவர்
இப்போதோ
பாவ மன்னிப்பின்
அதிகாரத்தையே அளிக்கிறார் !

பாவங்களை மன்னிக்க
இயேசு யார் ?
என கூட்டம் ஒரு முறை
முணு முணுத்தது !
இப்போது சீடர்களுக்கே அந்த வல்லமை !

தனது
வல்லமையின் பகிர்தலை
இயேசு
திருத்தூதர்களுக்கும் தருகிறார்.

தோன்றிய இயேசு
மறைந்த பின் 
தாமதமாய் வந்தார் தோமா !

சீடர்கள்
சிலிர்ப்பை 
நாவினில் பூசி
பரமனைச் சந்தித்ததை
படபடப்பாய்ச் சொல்லி முடித்தனர். 

தோமா 
சீடர்களின் மொழிகளை 
நம்பவில்லை !

ஆணித் தழும்புகளைப்
பார்த்தீர்களா ?
ஆணிகள் நுழைந்த துளைகளில்
விரல்கள் நுழையும் 
சோதித்தீர்களா ?

விலாவின் காயம் பார்த்தீர்களா ?
காயத்தில் கைகளை
இட்டீர்களா ?

வந்தவர்
இயேசுதான் என்பதற்கு
சாட்சி வேண்டுமே ?
வெறும் காட்சி போதாதே !

காயங்களை
தொட்டாலொழிய நம்பமாட்டேன்
என முரண்டு பிடித்தார்.  

எட்டு நாட்களுக்குப் பின்
மீண்டும் வந்தார்
இயேசு !

தோமா
திகைத்தபடி நின்றிருந்தார்
பூட்டப்பட்டிருந்த
கதவுகள்
திகிலூட்டிக் கொண்டிருந்தன. 

தோமா,

இதோ 
ஆணிக்காயங்கள்
உன் விரல்களை இடு,

ஈட்டி பாய்ந்த விலா
நீட்டி உன் கையை இடு !

ஐயம் தவிர்
நம்பிக்கை கொள் !
என்றார் !

தோமாவோ
அடுத்த நொடியே
என் ஆண்டவரே, என் தேவனே
என அலறினார்.

கைகளின் காயத்தில்
விரல்களையும் இடவில்லை
விலாவின் காயத்தில்
கைகளையும் இடவில்லை !

தொட்டால் தான்
விசுவசிப்பேன் என்றவர்
தொடாமலேயே
விசுவசித்தார் !

இயேசுவோ
என்னைக் கண்டதால் நம்பினாய்
என்னைக்
காணாமலே நம்புபவன்  
பேறுபெற்றவன். 

ஐயம் தவிர்
ஐயனை நம்பு ! என்றார். 

விசுவாசத்தின்
விளிம்புகளில் நடந்து
அவிசுவாசத்தின்
ஆழத்தில்
வழுக்கி விழுந்துவிடாதிருக்க
இயேசு விடுத்த எச்சரிக்கை !

தோமா
சந்தேகத்தின் குற்றவாளியல்ல
நிரூபிக்க விரும்பிய
நிரபராதி !

அவர்
கேட்டிராவிட்டால்
தோமாவுக்குக் 
காட்சி கிடைத்திருக்குமா ?
இரண்டாம் காட்சி
சீடர்களுக்குக் கிடைத்திருக்குமா ?

அவர் கேட்டிராவிட்டால்
காணாமலேயே விசுவசித்தலின்
பேரழகை
திருச்சபை அறிந்திருக்குமா ?

இயேசு
தோமாவின் சந்தேகத்தால்
கோபமடையவில்லை,
காட்சி கொடுத்து
தெளிவாக்குகிறார். 

நாமும் போவோம்
அவரோடு இறப்போம்
என
இறப்பையே மிரட்டியவர்
தோமா.

நீர்
போகுமிடமே தெரியாது !
வழி எப்படி தெரியும் என
வெளிப்படையாய் வினவியவர்.

ஒரு முறை
சந்தேகிக்கிறார் !
எனவே சந்தேக தோமா என
சரித்திரத்தால்
அடிக்கோடிடப் படுகிறார். 

தோமா,
சந்தேகத்தின் தளத்திலிருந்து
சந்தோஷத்தின்
தளத்துக்குத் தாவினார் !

உயிர்த்த இயேசுவைச்
சந்தித்த
தனி அனுபவம் 
அவரை
இந்தியா வரை இழுத்து வந்தது !

நாம்
இயேசுவை காணாமலேயே
விசுவசிப்போம் !

ஏழையர் வடிவில்
அவரைக் காண்போம் .!