இயேசு
சிலுவையின் உச்சியில்
தொங்குகிறார் !
இயேசு தூக்கி வந்த சிலுவை
இப்போது
இயேசுவைத் தூக்குகிறது !
ஆணிகள் துளைத்த
ஆண்டவர் உடல்
துயரத்தின் பாடலாய்
உயரத்தில் ஆடுகிறது !
தலைமகனின்
தலைக்கு மேல்
பெயர்ப் பலகை ஒன்றும்
பொறிக்கப்பட்டது !
நசரேயனாகிய இயேசு, யூதர்களின் அரசன் !
குற்றத்துக்கான
காரணத்தை பெயர்பலகைகள்
சுமப்பது வழக்கம் !
இங்கே
குற்றவாளியின் பெயரே
குற்றத்தின் காரணமாய் தொங்குகிறது !
மூவொரு இறைவனின்
தலைக்கு மேல்
மூன்று மொழிகளில் பெயர்ப்பலகை !
அறையப்பட்ட இறைவாக்காய்
இயேசுவோடு
இருபுறமும் இரு கள்வர் !
அவர்கள்
இயேசுவின் தலைக்கு மேல்
இருந்த
வார்த்தைகளை வாசித்தார்கள் !
அதில்
குற்றம் ஏதும் எழுதப்படவில்லையே
என
அவர்கள் குழம்பியிருக்கலாம்.
ஒருவன் சொன்னான்,
நீர் மெசியா தானே !
மீட்பது தானே உம் தொழில்
முதலில் உன்னைக் காப்பாற்று
பிறகு
எங்களைக் காப்பாற்று !
அவன்
சாவின் தூண்டிலில்
துடிப்பதை விட,
விடுதலையாகி கீழே
விழுந்து விடமாட்டோமா
என எண்ணினான்.
இயேசுவின்
ஆற்றலின் மீதான
ஒரு
வெற்று மனிதரின் சவாலாக
அது ஒலித்தது !
ஆனால்
மற்றவன் நல்ல கள்ளன் !
தான் கள்வன் எனும்
உண்மை உணர்ந்தவன்,
சிலுவைக்குத்
தகுதியானவன் எனும்
யதார்த்தம் அறிந்தவன்.
அன்றைய சூழலில்
கள்வராய் மாறும் அடிமைகளுக்கும்,
அரசுக்கு எதிராய்
வெகுண்டெழும் போராளிகளுக்கும்,
சிலுவைச் சாவு
சன்மானமாய்க் கிடைப்பதுண்டு.
இவர்களும்
அடிமை நிலையிலிருந்த
திருடர்களாய் இருக்கலாம்,
தங்கள்
தலைவரிடமே திருடி
அகப்பட்டவர்களாய் இருக்கலாம்.
அல்லது
ரோம அரசு எமக்கு ரோமம் போல
என
புரட்சிக் கனல் வீசி
பிடிக்கப் பட்டவர்களாய் இருக்கலாம்.
எது எப்படியெனினும்
சாவு என்பது
அவர்களுக்கு
நடைமுறை நியாயம் !
வரலாற்று வரைமுறை !
நல்ல கள்ளன்
இப்போது
நல்ல ஆயனின் பக்கமாய் நின்று வாதிட்டான்.
சக கள்வனைக்
கடிந்து கொண்டான்.
நீ
கடவுளுக்கே அஞ்சமாட்டாயா ?
கள்ளன்
ஞானத்தின் ஆரம்பத்தை
சிலுவையில் போதிக்கிறான்.
நீயும்
அதே தீர்ப்பில் தானே
தொங்கிக் கிடக்கிறாய் ?
கள்ளன்
சமத்துவத்தின் சிந்தனையை
சிலுவையில் சிதறுகிறான்.
நாம்,
தண்டிக்கப்படுவது முறையே !
கள்ளன்
பிழையுணர்தலின் நிகழ்வை
பதறாமல் பறைசாற்றுகிறான்.
நம்
தீச் செயல்களுக்காய் நாம்
தீர்ப்பிடப்படுகிறோம் !
கள்ளன்
பாவத்தின் சம்பளத்தைப்
புரிந்து கொண்டு பேசுகிறான்
இவர்
குற்றமொன்றும் செய்யவில்லையே !
கள்ளன்
இயேசுவின் தெய்வீகத்தை
அழுகையோடே அறிவிக்கிறான்
கடைசியில்
இயேசுவே,
நீர் ஆட்சியுரிமையுடன் வரும்போது
“என்னை” நினைவில் கொள்ளும் !
கள்ளன்
மீட்பின் வழி இயேசுவே எனும்
நற்செய்தியை அறிவிக்கிறான் !
நல்ல கள்ளன்
என்னை நினைவில் கொள்ளும்
என்றே சொன்னான்,
எங்களை நினைவில் கொள்ளும்
என சொல்லவில்லை !
எங்களை விடுவியும்
என
கெட்ட கள்ளன் அழிவின் பாதைக்கு
ஆள் சேர்த்தான்.
என்னை நினைவில் கொள்ளும்
என
நல்ல கள்ளன்
மீட்பின் பாதையில்
தனியே நடக்கிறான் !
அழிவின் பாதை அகலமானது
அடுத்தவர் கரம்பிடித்துச் செல்லலாம்
மீட்பின் பாதை குறுகலானது
இயேசுவின்
தடம் பார்த்தே நடக்க வேண்டும் !
சிலுவையில் இருவர் அறையப்படுவர் !
ஒருவர் எடுத்துக் கொள்ளப் படுவார்,
ஒருவர் விடப்படுவார் !
இயேசுவின்
போதனை
சிலுவை மொழியில் புது வடிவம் பெறுகிறது !
நீர்
என்னோடு பேரின்ப வீட்டில்
இருப்பீர் !இயேசு பேரன்பைப் பொழிந்தார்.
ஒரு கள்ளன்
பேரின்ப வீட்டில் நுழைகிறான்,
ஒரு கள்ளன்
சிற்றின்பம் கேட்டு அழிகிறான் !
ஒரு கள்ளனுக்கு
சிலுவையிலிருந்து
இறங்கிச் செல்வது தேவையாய் இருந்தது,
இன்னொருவனுக்கு
சிலுவையிலிருந்து
ஏறிச் செல்வது ஏக்கமாய் இருந்தது !
ஒருவன் பாவத்தின்
சம்பளத்தை வாங்கி வீழ்ந்தான்,
ஒருவன்
மீட்பின் அன்பளிப்பை வாங்கி
மகிழ்ந்தான் !
‘பிதாவே மன்னியும்’
எனும் இயேசுவின் முதல் குரல் அவனை
உடைத்திருக்கலாம் !
அல்லது
வரும் வழியில்
கதறியழுத மக்கள்
சிதறிய கதைகள்
அவனது
செவிகளை அசைத்திருக்கலாம்.
அதில்,
நோய் நீங்கிய நிமிடங்களும்
பேய் ஓடிய தருணங்களும்
உயிர் மீண்ட புதுமைகளும்
பரிமாறப் பட்டிருக்கலாம்.
இயேசுவோடு
சிலுவை சுமந்து நடந்தவர்களில்
இவன் மட்டும்
இயேசுவையும் சுமந்து
நடந்திருக்கலாம் !
அறையப்பட்ட போது
இயேசு
கதறாமல் இருந்ததைக்
கவனித்திருக்கலாம்
அவமானத்தின் வெயிலிலும்
அவர்
அமைதியாய் இருந்ததால்
வியந்திருக்கலாம்.
எனவே தான்
இயேசுவே என நேசத்தோடு
அழைக்கிறான்.
“நினைவில் கொள்ளும்” என
குறைந்த பட்ச விண்ணப்பம் வைக்கிறான்.
பாவத்தை மன்னியும் என
கேட்கவில்லை,
சொர்க்கத்தில் சேரும் என
சொல்லவில்லை,
நினைவில் கொள்ளும் என
தாழ்மையாய் யாசித்தான் !
மற்ற கள்ளனோ
உள்ளுக்குள் சிரித்திருக்கலாம்.
தான்
நிரபராதி என்பதையே
நிரூபிக்கத் தெரியாதவர்,
எப்படி பிறரைக் காப்பாற்றுவார் !
இன்னும்
சில மணித் துளிகளில்
மரணத்தோடு மண்டியிடப் போகிறவர்
எப்படி
அரசுரிமையோடு மீண்டும் வர முடியும் ?
விறகிடம் சென்று
சிறகினைக் கேட்பது
அறிவீனம் என அவன் ஒதுங்கியிருக்கலாம்.
மரணம் என்பது
முற்றுப் புள்ளி என்பது
அவனது எண்ணம்.
உண்மையில் மரணம் ஒரு
வெற்றுப் புள்ளி !
விண்ணகக் கதவைத் திறந்தால் அது
வெற்றிப் புள்ளி.
பிழையுணராக் கள்ளன்
கைக்கெட்டுத் தூரத்தில்
வாழ்வு இருந்தும்
சாவுக்குள் சறுக்கினான்.
நல்ல கள்ளன்
சிறுத்தையின் பற்களிலிருந்து
பிடுங்கப்பட்ட ஆட்டைப் போல
சாவின் கொடுக்கிலிருந்து
வாழ்வின் மிடுக்குக்கு திரும்பினான்.
*
சேவியர்