இதோ
அடுத்தவரின் கல்லறையில்
அடக்கமாகிறார்
அண்டங்களைப் படைத்த
ஆண்டவர்.
ஒரு யோசேப்பு
அடைக்கலத் தந்தையானார்
ஒரு யோசேப்பு
அடக்கத்தைத் தந்தவரானார் !
ஒரு யோசேப்பு
கருவறையில் இயேசுவுக்குக்
ஆதரவானார்,
ஒரு யோசேப்பு
கல்லறையில் இயேசுவுக்கு
ஆதரவானார்.
இதோ,
கல்லறைக்குள் துயில்கிறது
காலங்களின் கதிரவன்.
ஆழியை
சிப்பிக்குள் அடக்கி வைப்பதாய்,
சூரியனை
குடுவைக்குள்
ஒளித்து வைப்பதாய்,
பூமியை
பனித்துளிக்குள்
புதைத்து வைப்பதாய்
காற்றுக்குக் கடிவாளமிட்டு
கட்டி வைப்பதாய்.
முடிவற்ற இறைவனை
மூடி வைக்கிறது கல்லறை !
மறுநாள்
பரிசேயரும், தலைமைக்குருக்களும்
பதட்டத்தின் சுவடுகளோடு
பிலாத்துவின் பாசறைக்குள்
தடதடத்து வந்தார்கள் !
பிலாத்து
நெற்றி சுருக்கினான் !
ஐயா
தன்னை சுத்தனென்று
சொல்லிக் கொண்ட
அந்த எத்தன்,
மூன்று நாளுக்குப் பின்
எழுப்பப்படுவேன் என சொன்னான் !
பிலாத்து பார்த்தான்,
எழும்பி வந்தால் மறுபடியும்
சிலுவையில் அறைய வேண்டும்
என்பார்களோ என
சந்தேகத்துடன் சிந்தித்திருப்பான்.
வந்தவர்கள் சொன்னார்கள்,
கல்லறைக்குக்
காவல் இடவேண்டும் !
மூன்று நாட்கள்
முழுதாக அதைக் காக்க வேண்டும் !
இல்லையேல்,
சீடர்கள் ஜாமத்தில் வந்து
உடலைக் களவாடி விட்டு
உயிர்த்து நடமாடுவதாய்
நாடகமாடி விடுவார்கள் !
கல்லறைக்குக் காவல்
வேண்டும்,
இந்த பிரச்சினை இத்தோடு
சமாதியாக வேண்டும் !
பிலாத்துவின் சிந்தனை சிரித்தது.
கல்லறைக்குக் காவலா ?
வெறும்
உடல் கிடக்கும் அறைக்கு
வாள் பிடித்த வீரர்களா ?
சிலுவை மீது
வாக்கியத்தை மாற்றச் சொன்னபோது
ஏற்காமல் எகிறியவன்,
கல்லறைக்குக் காவல் என்றபோது
மறுக்காமல் கையசைத்தான்.
காவல் வீரர்கள்
உங்களிடம் உண்டு !
முத்திரையிட்டுக் காவலிருங்கள்
மூன்று நாட்களுக்குப் பின்
முடிவெடுங்கள்
என அனுப்பி வைத்தான் !
இயேசுவையே
நம்பாதவர்கள்
இயேசுவின் உயிர்ப்பை நம்புகிற
விந்தை
அங்கே நிகழ்ந்தேறியது !
மீனுக்குள் மறைந்திருந்த
யோனாவின் உடல் போல
மூன்று நாள்
மண்ணுக்குள் மறைந்திருப்பேன்
என்றாரே ! அது அவர்களை
அசைத்ததா ?
ஆலயத்தை இடியுங்கள்
மூன்று நாளில்
எழுப்புவேன் என்றாரே !
அது அவர்களுக்கு
உறைத்ததா ?
தெரியவில்லை.
வைத்த கண் வாங்காமல்
கல்லறையைக் காக்க
கங்கணம் கட்டியது
கூட்டம் !
கல்லறைக்குக்
காவல் மட்டுமல்ல
சீலும் வைக்கப்பட்டது !
உடல் உள்ளே இருப்பதை
ஊர்ஜிதப்படுத்திய பின்பே
சீல் வைப்பது
ரோமர்களின் வழக்கம் !
குறைந்த பட்சம்
ஐம்பது பேர்
ஈட்டியோடும் வாளோடும்
சலனமற்ற குகைக்கு
சலிக்காமல் காவல் இருந்தனர்.
சிலுவை அடியில்
‘இவர் உண்மையிலேயே இறைமகன்’
என
இயற்கையின் நடுக்கத்தில்
அறிக்கையிட்டாரே ஒருவர்
அவர் பெயர்
பெட்றோனியஸ் என்றும்
அவரே
குகைக் காவலுக்கு பொறுப்பாளி
என்றும்,
பேதுருவின் நற்செய்தி எனும்
விலக்கி வைத்த வரலாற்று நூல்
வியக்க வைக்கிறது.
அவர்கள் சென்று
குகையை ஆராய்ந்து
குகைக்கு
ஏழு மெழுகு சீல்களை வைத்தார்கள்
என்கிறது அந்த நூல் !
ஏழு சீல்களை
திருவெளிபாட்டில் உடைப்பதற்கு முன்,
கல்லறையில்
உடைக்கிறார் இயேசு
வெளிப்படுத்தின விசேஷத்துக்கு
முன்
வெளிப்படும் விசேஷத்தில்
முத்திரைகள்
உடைந்து தெறிக்கின்றன.
அங்கே
உடைந்த சீல்
வார்த்தைகளைத் தந்தது,
இங்கே
வார்த்தையானவரைத் தந்தது.
செல்வம்
நிறைந்து கிடக்கும்
கல்லறைகளுக்குக்
காவல் வைப்பது தான் உலக வழக்கம்.,
இங்கே
பொக்கிஷமே புதைந்து கிடப்பதால்
வீரர்கள் காவல் இருந்தார்கள் !
படைகளின் ஆண்டவருக்கு
படை வீரர்கள்
காவல் இருக்கிறர்கள்.
பார்த்தவர்கள்
நகைத்திருக்கக் கூடும் !
அல்லது
திகைத்திருக்க வேண்டும் !
வாழ்ந்த போது
அவமானப்படுத்தப்பட்ட இயேசு
மரித்தபின்
அச்சத்தை விதைக்கிறாரே
என வியந்திருக்க வேண்டும்.
கோயிலைக் காக்கும்
வீரர்கள்
இப்போது
ஆண்டவனைக் காக்கிறார்கள்.
தானியேல் காலத்தில்
முத்திரையிட்ட குகைக்குள்
உயிரோடு அடைக்கப்பட்டவர்
உயிரோடு திரும்பி வந்தார்,
இங்கே
முத்திரைக் குகைக்குள்
அசைவின்றிக் கிடைப்பவர்
அதிசயமாய் வரப் போகிறார் !
ரோம முத்திரை
அதிகாரத்தின் அடையாளம் !
அதை
யாரேனும் உடைத்தால் அது
மன்னிக்க முடியா அரச குற்றம் !
சிலுவைச் சாவு
அவர்களுக்கான தண்டனையாகும் !
வெறும் உடலுக்காய்
தன் உயிரைக் கொடுக்க
யார் தான் முன் வருவார் ?
அதுவும்
பிடரியில் சுவடு பதிய
பறந்து மறைந்த சீடர்களா
இறந்து உறைந்த
இயேசுவுக்காய் துணிந்து வருவார்கள் ?
மூலைக்கல்லை
மூடிய கல்
முத்திரைக் கல்லாய்
நித்திரையில் இருக்கிறது !
சீடர்கள் அல்ல
கல்லை
தூதர்கள் புரட்டப் போகிறார்கள்
எனும்
உண்மை தெரியாத வீரர்கள்
வெறுமனே விழித்திருந்தார்கள் !
*