சும்மா ! * காட்சி 1 ( நபர் 1 - சிந்தித்துக் கொண்டிருக்கிறார் ) நபர் 1 : ( மனதில் ) : என்ன இது, லைஃபே சுவாரஸ்யம் இல்லாம போவுதே… யாராச்சும் ரெண்டு பேரை வம்புக்கு இழுத்து விட்டு வேடிக்கை பாத்தா நல்லா இருக்கும்… யாரு அகப்படுவாங்க ? ( அப்போது அந்த பக்கமாக ஒருவர் வருகிறார், வட இந்தியர் ) நபர் 1 : தம்பி….… எப்டி இருக்கே ? ( தமிழ் கலந்த இந்தியில் ) நபர் 2 : நிங்கள் தமிழ்லே பேசினா போதும்.. எனக்கு வெளங்குது.. நபர் 1 : வெளங்கிடும்.. நபர் 2 : என்ன சொல்லுது ? நபர் 1 : ஒண்ணும் இல்ல… என்ன இந்த பக்கம் ? கடைக்கு போகலையா ? நபர் 2 : நம்மள் என்ன வட்டிக் கடையா வெச்சிருக்கான், வெறும் பொட்டிக் கடை தானே வெச்சிருக்கான்… நபர் 1 : என்னப்பா… தமிழ்ல கவிதையே சொல்றே… நபர் 2 : தமிழ்லே கவிதை சொல்ல நான் பாதிரியாரா ? நபர் 1 : தம்பி அது பாதிரியார் இல்லப்பா.. பாரதியார்..நீ சும்மா மதக்கலவரத்தை உண்டு பண்ணாதே.. ஆமா.. உன் பானி பூரி கடை எப்படி போவுது ? நபர் 2 : சாயங்காலம் கடை திறக்குது, மிட் நைட்லே மூடி வெக்குது.. நபர் 1 : ம்ம்ம்… எங்கே கடை வெச்சிருக்கே ? நபர் 2 : ஏரிக் கரையிலே வைக்குது… நபர் 1 : ஏன், பானி தீந்து போனா.. ஏரில இருந்து எடுக்கவா ? பேசாம நம்ம மயிலு சூப்பர் மார்க்கெட் பக்கம் வைக்க வேண்டியது தானே ? நபர் 2 : அங்கே என்ன ஸ்பெஷலு ? நபர் 1 : யப்பா.. அங்கே கூட்டம் நிறைய வருது.. சே.. நான் ஏன் உன்னை மாதிரி பேசறேன்.. அங்கே கூட்டம் நிறைய வரும்பா… அங்கே வை… சட்டுபுட்டுன்னு எல்லாத்தையும் வித்துடலாம். நபர் 2 : அது அவங்களுக்கு டிஸ்டர்பன்ஸு ஆவதா ? நபர் 1 : ரோடு எல்லாருக்கும் பொது… கடைக்கு முன்னாடி கார் நிறுத்தக் கூடாதுன்னு ஒரு தடவை டி நகர்ல ஒரு கடைகாரரு சண்டை போட்டாரு.. கோர்ட் என்ன சொல்லிச்சு… ரோட்ல யாரு வேணும்ன்னாலும் வண்டி நிப்பாட்டலாம்.. தடுக்க கடைக்காரருக்கு உரிமை இல்லேன்னு.. நீ போய் பக்கத்துல கடையை போடுப்பா நபர் : ஓ.. நிஜமா சொல்லுது ? நபர் 1 : ஆமாப்பா.. உன் கிட்டே பொய் சொல்லி நான் என்ன அவார்டா வாங்க போறேன். நபர் 2 : சரி.. சரி.. அப்போ நாளை நான் அங்கே கடை போடுது.. ஏரிக்கரையிலே சேல்ஸ் ஆக மாட்டேங்குது நபர் 1 : சூப்பர்பா…. ஆல் த பெஸ்ட் காட்சி 2 நபர் 1 : ஹா.. ஹா.. இவன் அங்கே போய் கடை போடட்டும்.. அந்த மயிலு என்ன ஆட்டம் போடப் போறான்னு நினைச்சா செமயா இருக்கு.. ( அப்போது அந்தப் பக்கம் மயிலு வருகிறார் ) நபர் 1 ( மனதில் ) அட.. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வருது நபர் 1 : எம்மா… மயிலு… கடைக்கு போகலையா ? நபர் 3 : போகணுங்கா… கொஞ்சம் வேலை இருந்துச்சு.. அதான் எலக்டிர்க்கல்ஸ் வரைக்கும் போனேன்… நபர் 1 : எலக்ரிக்கல்ஸா ? நபர் 3 : ஆமா… ஒரு லைட் வாங்கணும்… கேட்டா அநியாய விலை சொல்றான்.. அதான்.. வேற கடைக்கு போயிட்டிருக்கேன்… நபர் 1 : ஐயோ.. நானே சொல்ல நினைச்சேன்.. இந்த நார்த் பசங்களோட தொல்லை தாங்க முடியல. இங்கே வந்து நம்ம வேலையையும் புடுங்கறாங்க, நம்ம பணத்தையும் புடுங்கறாங்க நபர் 3 : ஆமாக்கா.. எல்லாமே நார்த் பசங்க தான் நபர் 1 : நம்ம எதிர்காலம் எப்படி இருக்குமோ தெரியல. நம்ம பிள்ளைங்க எல்லாம் வளர்ந்து பெரிய ஆளா மாறும்போ அவங்களுக்கு வேலை இருக்குமான்னே தெரியல. நபர் 3 : ஆமாக்கா… ஹோட்டல், கடை, ஆபீஸ் எல்லா இடத்துலயும் நார்த் பசங்க தான்.. நபர் 1 : ஆமாப்பா.. கொஞ்சம் உஷாரா இருக்கணும்… சைக்கிள் கேப் கிடைச்சா இவங்க எல்லாம் டிராக்டர் ஓட்டுவாங்க… நபர் 3 : ஆமா ஆமா.. இவங்களுக்கெல்லாம் சான்ஸே குடுக்கக் கூடாது. சரிக்கா.. நான் கிளம்பறேன்… ( அவர் போகிறார் ) நபர் 1 : ( மனதில் ) ஹா..ஹா… பாப்போம்… இங்கேயும் கொஞ்சம் கொளுத்திப் போட்டாச்சு.. அவன் போய் கடை போடுவான்… என்ன நடக்குது பாப்போம். காட்சி 3 ( மாலை நேரம் .. மயிலு & பானி பூரி கடை ) நபர்3 : ஏய்… என்னப்பா.. இங்கே வந்து கடை போட்டிருக்கே ? நபர் 2 : இங்கேன்னா ? ரோட் சைட்ல தானே போட்டிருக்கேன் நபர் 3 : என் கடைக்கு பக்கத்துல போட்டிருக்கே ? நபர் 2 : கடைக்கு பக்கத்துல தானே ? கடைக்கு உள்ளே போடலையே… நபர் 3 : என்ன நக்கல ? இங்கே எல்லாம் கடை போட கூடாது.. உங்களுக்கெல்லாம் இடம் குடுத்தா எல்லாத்தையும் அள்ளிட்டு போயிடுவீங்க ? நபர் 2 : அள்ளிகிட்டு போவோமா ? நம்மள் நியாயமா தான் கடை போடுது… நபர் 3 : நரிக்கு எளக்கம் குடுத்தா கெடைக்கு ரெண்டு ஆடு பிடிக்குமாம்… நபர் 2 : நரி பற்றி தெரியாது.. பூரி தான் தெரியும்… நான்.. பானிபூரீ.. பானிபூரி தான் விக்குது நபர் 3 : ஓவரா பேசாம கடையை எடுத்துட்டு எங்கேயாச்சும் போயிடு நபர் 2 : என்ன இது உங்க சொத்தா ? ரோட்டு மேலே யாரு வேணுமானாலும் கடை போடலாம்.. யாரும் தடுக்க முடியாது. நபர் 3 : தடுக்க முடியாதா ? ஒழுங்கா கடையை எடுத்துட்டு போகலேன்னா… அடிச்சு உடைச்சு போட்டுடுவேன்.. நபர் 2 : நான் எங்கேயும் போகல.. உங்களால முடிஞ்சதை பாருங்க.. காட்சி 4 ( நபர் 3 & நபர் 1 ) நபர் 3 : அக்கா.. நீங்க சொன்ன மாதிரி அந்த நார்த் இந்தியன் இங்க வந்து கடையை போட்டான்… ஏதோ பிளான் பண்றான்… நபர் 1 : ஓ… உன் கடைக்கு பக்கத்துலயா ? நபர் 3 : ஆமா… என்ன கொழுப்பு நபர் 1 : ஆமாமா…. மயிலே மயிலேன்னா இறகு போடாது மயிலு.. நீ பாத்துக்கோ… நபர் 3 : ஆமா.. நான் சில பிளான் வெச்சிருக்கேன். ரெண்டு நாள் போகட்டும் நபர் 1 : ம்ம்.. சரி சரி.. பாத்துக்கோ… காட்சி 5 ( சில நாட்களுக்குப் பின் பானிபூர சைக்கிள் கடை உடைந்து கிடக்கிறது ) நபர் 2 : என்னம்மா.. என் கடையை அடிச்சு நாசம் பண்ணி வெச்சிருக்கீங்க ? நபர் 3 : பின்னே.. நீ என் கடையோட கண்ணாடியை அடிச்சு உடைச்சிருக்கே.. நான் பாத்துட்டு சும்மா இருக்கணுமா ? நபர் 2 : நானா.. நான் உங்க கடையை தொடவே இல்லை. நபர் 3 : முன்பக்கம் கண்ணாடியை வந்து பாரு.. நீ கடை போட்டிருந்த இடம் தான்.. நபர் 2 : நான் ஒண்ணும் பண்ணல.. என் வண்டியை சரி பண்ண காசு குடுங்க.. இல்லேன்னா போலீசுக்கு போவேன். நபர் 3 : நீ போலீசுக்கோ, ஆர்மிக்கோ போ.. எனக்கு கவலை இல்ல.. இப்போ இங்கேயிருந்து போ.. எனக்கு நிறைய வேலை இருக்கு காட்சி 6 ( காவல் நிலையம் ) நபர் 2 : சார்.. ஒரு கம்ப்ளெயிண்ட் தருது சார்… காவல் : ம்ம்ம் என்ன கம்ப்ளெயிண்ட் ? நபர் 2 : என் கடையை ஒருத்தர் உடைச்சு போட்டுது காவல் : என்னப்பா.. நீ பீகாரி தானே நபர் 2 : ஆமா சார் காவல் : பின்னே ஏன் சேட்டு மாதிரி பேசறே ? நபர் 2 : கொஞ்ச காலம் சேட்டு கடையிலே வேலை பாத்துது சார்.. காவல் : ஓ.. சேட்டு கடையிலேருந்து முன்னேறி ரோட்டு கடைக்கு வந்திருக்கே… ம்ம்ம் விஷயத்தை சொல்லு ( அவன் சொல்கிறான் ) காவல் : சரி.. கம்ப்ளெயிண்ட் எழுது குடு பாக்கறேன் காட்சி 7 ( போலீஸ் காரருடன் போனில் ) நபர் 3 : இல்லே சார்… அவன் என்னோட கண்ணாடியை உடைச்சுட்டு போயிட்டான்.. நான் அவன் வண்டியை தொடவே இல்லை. ( பேசுகிறார்கள் ) காட்சி 7 ஆ ( போலீஸ் காரர் விசாரணை ) காட்சி 8 ( காவல் நிலையம் சில நாட்களுக்கு பின் ) போலீஸ் : இதோ பாருங்கம்மா.. பாவம் அந்த மனுஷனோட கடையை போட்டு அடிச்சு உடைச்சிருக்கே… நபர் 3 : சார்.. என்ன சொல்றீங்க ? போலீஸ் : உங்க கடைக்கு எதிரே இருக்கிற மசூதில சிசிடிவி கேமரா இருந்துது.. அதுல பாத்தேன்.. மிட் நைட்ல வந்து அவனோட கடையை நீங்களும் ரெண்டு பேருமா அடிச்சு உடைச்சிருக்கீங்க.. நபர் 3 : அ.. அது வந்து… என் கடையோட கண்ணாடியை அவன் உடைச்சதால… போலீஸ் : போதும் போதும்.. அதே சி.சி.டி.வி கேமரால தெரிஞ்சுது யாரு கண்ணாடியை உடைச்சதுன்னு… நபர் 3 : சார்… போலீஸ் : நீங்களே உடைச்சுட்டு நீங்களே நாடகமாடறீங்க..இதுக்கு பின்னடி யாரெல்லாம் இருக்காங்க ? நபர் 3 : சார்.. நான் சொன்னாலும் கேக்காம என் கடைக்கு முன்னாடி.. போலீஸ் : சீ.. நீங்க பண்ணினது இல்லீகல்.. அவன் பாவம் பொழைப்புக்காக ஊர் விட்டு ஊர் வந்து கஷ்டப்படறான்.. அவனை போய் தொந்தரவு பண்றீங்க நபர் 3 : அது.. வந்து சார்… போலீஸ் : நான் கேஸ் ஏதும் போடல… அவனுக்கு கடையை செட்பண்ணி குடுங்க.. உங்க கடைக்கு பக்கத்துல அவன் கடை இருக்கிறதனால அவன் பொழைப்பான்னா பொழச்சுட்டு போகட்டுமே.. உங்களுக்கு நஷ்டம் ஏதும் இல்லையே.. நபர் 3 : சரி.. சார். போலீஸ் : ஏழைங்களை நாம கஷ்டப்படுத்தக் கூடாது. உலகில வெறுப்பு வளரக் கூடாது. அன்பு தான் வளரணும். அடுத்தவங்களுக்கு உதவி செய்றது தான் ரொம்ப தேவை.. நபர் 3 : சரி சார்.. நான் பண்ணினது தப்பு தான் போலீஸ் : வெரி குட்… இருட்டை இருட்டு விரட்ட முடியாது, நெருப்பை நெருப்பு அணைக்காது.. அதை மாதிரி வெறுப்பை வெறுப்பு அழிக்காது. ஊர் முழுக்க வெறுப்பு இருக்கேன்னு கவலைப்படக் கூடாது. நாம அன்பை விதைக்கிறோமாங்கறது தான் முக்கியம் சரியா நபர் 3 : சரி சார். கண்டிப்பா.. போலீஸ் : தேங்க்யூ.. போயிட்டு வாங்க… சக்ஸஸ் ங்கறது நாம சம்பாதிக்கிற பணம் இல்ல, சம்பாதிக்கிற மனிதர்கள் தான் ! நபர் 3 : புரிஞ்சுகிட்டேன் சார்.. காட்சி 9 ( நபர் 1 & நபர் 3 ) நபர் 3 : அந்த பானிபூசி மனுஷன் கடையை உடைச்சுட்டேன்.. அவன் போலீஸ் வரை போயிட்டான்.. போலீஸ் கூப்பிட்டு டோஸ் விட்டாங்க… ஒருவேளை உங்களையும் விசாரிப்பாங்க… நபர் 1 : எ..என்னையா ? ஆமா.. ஏன் அவனோட கடையை எல்லாம் உடைச்சீங்க… அவங்க பாவம்.. நார்த்ல இருந்து சவுத்துக்கு சாப்பாட்டுக்காக தானே வராங்க.. நபர் 3 : அக்கா…. நபர் 1 : நாம பாகுபாடு எல்லாம் காட்டக் கூடாது.. சண்டை போடக் கூடாது… பாரு எவ்ளோ பெரிய பிரச்சினை வருது.. அவன் பாட்டுக்கு அவன் கடையை போட்டுட்டு போயிருப்பான்ல நபர் 3 : அக்கா நீங்க தானே சொன்னீங்க.. சைக்கிள் கேப்ல.. நபர் 1 : என்ன சைக்கிள் கேப்ல… எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. ஏன், என் பக்கத்து வீட்ல தான் அவன் இருக்கான்.. நான் ஏதாச்சும் சண்டை போட்டேனா என்ன ? நபர் 3 : ம்ம்.. இதை நீங்க அப்பவே சொல்லியிருக்கலாம்.. நபர் 1 : எப்போ ? போதும் போதும்.. இனிமே எதுவும் சொல்ல வேண்டாம்..எல்லார் கூடயும் சந்தோசமா அமைதியா இருங்க போதும். நபர் 3 : ம்ம்… சும்மா இருந்தவங்களை சொறிஞ்சு விடவேண்டியது.. ( முணு முணுக்கிறார் ) நபர் 1 : என்ன முணுமுணுக்கறே ? எனக்கு வேலை இருக்கு .. கிளம்பறேன் ( பிரிகிறார்கள் ) * நபர் 1 : ம்ம்ம்…. அவங்களுக்குள்ள ஒரு சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பாக்கலாம்ன்னா அது நமக்கே வருது.. சே.. கெட்டதுக்கே காலம் இல்லாம போயிடுச்சு.. *
Month: May 2022
SKIT : ஹேக்கர்
ஹேக்கிங் காட்சி 1 ( பழைய புத்தகக் கடை ) ( ஒரு பையன் புத்தகங்களை அடுக்கி வைத்து, படித்துக் கொண்டிருக்கிறான், அப்போது ஆபீஸில் பணிபுரியும் ஒரு அதிகாரி வருகிறார் ) பையன் : வாங்க சார்.. எப்படி இருக்கீங்க அதிகாரி : நல்லா இருக்கேன்பா.. நான் கேட்ட புக்ஸ் கிடைச்சுதா ? பையன் : சார், நீங்க கேட்ட ரெண்டு புக்குமே ரொம்ப ரேர் புக்ஸ் சார் அதிகாரி : அது தெரியுமே.. எந்தக் கடையிலயும் இல்ல, ஆன்லைன்லயும் இல்லை. அதனால தானே உன் கிட்டே வந்தேன். பையன் : ம்ம்.. தெரியும் சார்.. நானும் மூர் மார்கெட் புல்லா சுத்தி எல்லா பழைய புக் கடைகள்லயும் பாத்துட்டேன் கிடைக்கல. ஆனா மத்த இடங்கள்ள இருக்கிற பழைய புக் கடைகள்ளயும் சொல்லியிருக்கேன்... அதிகாரி : கிடைக்க சான்ஸ் இருக்கா.. பையன் : எஸ்.. நெமிலிச்சேரில ஒரு கடையில இருக்கிறதா கேள்விப்பட்டேன் ... செக் பண்ணிட்டு... நான் வர வெச்சுடறேன் சார்.. கால் பண்றேன் உங்களுக்கு. அதிகாரி : விசிட்டிங் கார்ட் குடுக்கிறார்... இதான் என் ஆபீஸ் அட்ரஸ்.. கிடைச்சா இங்கே கொண்டு வந்து குடுக்கிறியா ?p பையன் : ( கார்டை வாங்கிப் பாக்கறான் ) சார்... இது அந்த டி நகர் ஆந்திரா மெஸ் எதிரே இருக்கிற பில்டிங் தானே.. தெரியும் சார்.. கிடைச்சா கொண்டு வந்து தரேன் ( அப்போது அதிகாரிக்கு போன் வருகிறது. அதிகாரி : சார்.... சொல்லுங்க சார். மேலதிகாரி : எங்கே இருக்கீங்க.. இம்மீடியட்டா ஆபீஸ் வாங்க அதிகாரி : ஆன் த வே சார்.. எனி பிராப்ளம் > மேலதிகாரி : எமர்ஜன்சி வாட்சப் குரூப் பாக்கலையா ? சிஸ்டம் டவுன்.. சம் சீரியஸ் ஹேக்கிங்...ஒன் அவரா டவுன் ல இருக்கு... அதிகாரி : ஓ.. மை காட்.. இதோ உடனே வரேன் சார் மேலதிகாரி : கால் த சப்போர்ட் குரூப்.. வி நீட் டு பிக்ஸ் இட் இம்மீடியட்லி... அதிகாரி : கண்டிப்பா சார்... கண்டிப்பா ( போனை வைக்கிறார் ) **** பையன் : என்ன ஆச்சு சார்.. ? அதி : உனக்கு புரியாது தம்பி... பையன் : கோச்சுக்கலேன்னா சுருக்கமா சொல்லுங்க சார்.. அதி : எங்க கம்பெனி பெரிய ஃபைனான்ஸ் என்டிட்டி.. டெய்லி கோடிக்கணக்கான டிரான்சாக்ஷன்ஸ் வர இடம். எங்க மெயின் சர்வரை யாரோ ஹேக் பண்ணிட்டாங்க.. ஹெவி லாஸ்.. அன்ட்.. சிஸ்டம் டவுன்... ஐ திங்க் த கிளவுட் சிஸ்டம் ஈஸ் காம்ப்ரமைஸ்ட்... சே.. உன் கிட்டே இதெல்லாம் பேசிட்டிருக்கேன்... உனக்கெங்கே தெரியப் போவுது... பையன் : சார்.. புரியுது சார்.. பிரைவெட் கிளவுடா, பப்ளிக் கிளவுடா ?ன் அதி : என்னப்பா கிளவுட் பற்றியெல்லாம் பேசறே ? பையன் : சார், நான் சும்மா இருக்கும்போ எல்லாம் படிப்பேன் சார்.. கிளவுட், ஃபயர் வால் எல்லாம் தெரியும் சார்... அதி : ம்ம்.. இன்டரஸ்டிங்.. சரி.. நான் கிளம்பறேன்... இட்ஸ் எ பர்னிங் இஷ்யூ பையன் : ஓக்கே சார் காட்சி 2 ( அலுவலகம் ) மேலதிகாரி : என்னப்பா பண்ணிட்டிருக்கீங்க.. நேஷனல் கிரிட்டிக்கல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நம்மளோடது.. எத்தனை கோடி டிரான்ஷாக்ஷன்ஸ்... எப்படி இது நடந்துது அதி : தெரியலை சார்... வி ஆர் அனலைசிங் மேல : அனலைஸ் பண்ணி என்னத்த கிழிக்க போறீங்க.. நாலு மணி நேரமாச்சு.. இன்னும் ஒண்ணும் நடக்கல. யாரெல்லாம் வர்க் பண்றாங்க ? அதி: சார்.. நம்ம ஆர்கிடெக்ட், கீ டெவலப்பர்ஸ், அனலிஸ்ட் எல்லாருமே ஆன்ல இருக்காங்க... பட் குட் நாட் நேரோ டவுன் த ப்ராப்ளம் மேல : இதை சொல்ல வெக்கமா இல்ல ? கால் த வென்டர்ஸ்....அவங்களையும் இன்வால்வ் பண்ணுங்க. அதி : கண்டிப்பா சார்.. மேல : அப்டேட் மி இன் எவ்ரி டென் மினிட்ஸ்.. அதி : கண்டிப்பா சார் * ****** மதியம் மேல : (போன் ) ஏன்.. என்னாச்சு.. ஸ்டில் நாட் ஃபவுண்ட் த இஸ்யூ ? *** மாலை மேல : ( கோபமாக ) ... என்ன தான் பண்றீங்க... 8 மணி நேரமா சிஸ்டம் டவுன்... இன்னுமா ஃபிக்ஸ் பண்ணல அதி : அது சம் டைனமிக் சேஞ்சிங் ஏ ஐ அல்காரிதம் .. மேல : சும்மா டெக்னிகல் டேம்ஸ் போட்டு விளையாடாதீங்க... பிக்ஸ் ஆச்சா இல்லையா ? அதி : இல்ல சார்.. வி ஆர் டிரையிங் மேல : அப்போ பேசாம டி ஆர் சைட்டுக்கு போக வேண்டியது தானே.. பேக்கப் அதி : அதுவும் இன்னும் சிங்க் ல இல்ல சார்.. அதான் உடனே அந்த சிஸ்டத்துக்கு மூவ் பண்ண முடியல. மேல : வாட் ???? டி ஆர் சிஸ்டம் ஈஸ் நாட் சிங்கா ? இன்னும் ஆக்டிவ் ஆக்டிவ் பண்ணலையா ? எல்லாரையும் ஃபயர் பண்ண போறேன்.. என்ன தான் ...ப்.. பண்ணிட்டு இருக்கீங்க ? அதி : வில் ஃபிக்ஸ் இட் சார்... மேல : வி மஸ்ட்... ஒண்ணு பண்ணுங்க.. இந்த பிராப்ளத்தை பிக்ஸ் பண்றவனை செக்யூரிடி டிப்பார்ட்மென்ட் ஹெட் ஆ போடறேன்னு சொல்லுங்க. லெட்ஸ் மோட்டிவேட் பீப்பிள்.. யாரா இருந்தாலும் சரி.. ஹி வில் கெட் இட். அதி : சார்... அது மேல : ஜஸ்ட் டு இட்... பல கோடி நஷ்டம் ஆல்ரெடி வந்தாச்சு... நம்ம ஷேர் பிரஸ் எல்லாம் உடையப் போவுது.. கம்பெனிக்கு இன்டர்நேஷனல் லெவல்ல கெட்ட பேர் வர போவுது... சோ.. ஜஸ்ட் டு வாட் ஐ சே அதி : சரி சார் காட்சி 3 அதி ( போன் ) : யா..யா... அதை ஒரு ஆபீஸ் ஆர்டராவே போடுங்க.. சென்ட் டு எவ்ரி ஒன் இன் த கம்பெனி.. இன்க்ளூடிங் வென்டர்... ( சில மணி நேரங்களுக்குப் பின் ) காட்சி 4 ( பையன் & அதி ) அதி : ( போன் ) அப்படியா .. வரச்சொல்லு பையன் : சார்.. நீங்க கேட்ட புக் சார். அதி : எவ்ளோப்பா ? பையன் : நானூறு ரூபா சார்.. அதி : ( போன் வருகிறது .. எடுத்து பேசுகிறார் ) பிக்ஸ் ஆகலேன்னு சொல்ல இனிமே போன் பண்ணாதே.. பிரச்சினை முடிஞ்சா போன் பண்ணு.. வை அதி : ஆ.. தம்பி எவ்ளோ சொன்னே.. ஆங்.. ஃபோர் ஹன்ட்ரட் பையன் : சார்.. இன்னும் பிராப்ளம் சரி ஆகலையா ? அதி : இல்லப்பா.. அதை ஏன் கேக்கறே.. சாவடிக்கிறாங்க... இந்த ஹேக்கர்ஸ் ஆர் டூ பிக்... என்ன பண்றதுன்னே தெரியல பையன் : ஹேக்கர் பெரியவன்னா, அதை பிக்ஸ் பண்றவன் அதை விட பெரியவன் சார்... எல்லா வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு.. பேசிக் நியூட்டன்ஸ் லா அதி : லா எல்லாம் நல்லா தான் இருக்கு.. நேரம் தான் சரியில்லை... ஃபிக்ஸ் பண்றவனுக்கு ஹெட் போஸ்ட் குடுக்கலாம்ன்னும் சொல்லியாச்சு .. பட் பையன் : ஹெட் போஸ்டா ? வாவ்... இருந்தாலும் யாரும் சரி பண்ணலையா சார். அதி : இது ஈஸி இல்லப்பா... ரொம்ப கஷ்டம்... பையன் : யாரு பண்ணினாலும் ஹெட் போஸ்டா சார் அதி : யெஸ்..யெஸ்.. பட்.. யாரு பண்ணுவாங்க ? பையன் : நான் பண்ணவா சார் ? அதி : ஹா..ஹா... காமெடி பண்ணாதேப்பா.. உனக்கு இதுல ஆனா ஆவன்னா தெரியாது... பையன் : அப்படி இல்ல சார்.. நான் சும்மா இருக்கிற நேரம் நிறைய படிப்பேன்.. என் வீட்ல ஒரு லேப்டாப் வாங்கி வெச்சிருக்கேன். அதுல எல்லாம் டிரை பண்ணி பாப்பேன் அதி : படிக்கிற மாதிரி இல்லப்பா இது.. லைவ் சிஸ்டம்.... கரஸ்பான்டன்ஸ் கோர்ஸ்ல நீச்சல் படிக்க முடியாது... பையன் : வெறும் தியரி இல்ல மேம்… எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு அப்பார்ட்மெண்ட் இருக்கு. அங்கே உள்ள செக்யூரிடி கேமரா சிஸ்டத்தை ஹேக் பண்ணி ரகசியமா கண்காணிச்சிட்டு இருந்தாங்க. நான் தான் அதை சரிபண்ணினேன்… மோடம் வழியா ஹேக் பண்ணியிருந்தாங்க.. அதி : ஓ… அப்படியா ? பையன் : அதேமாதிரி, ஒருதடவை ஒரு பேங்க் வெப்சைட்ல செக்யூரிட்டி வீக்கா இருக்கிறதை ஐடண்டிஃபை பண்ணி இன்ஃபாம் பண்ணினேன்.. அப்புறம் அவங்க அதை மோத்தமா மாத்தினாங்க. அதி : ஓரமா புக் வித்திட்டு இவ்ளோ வேலை பண்றியா நீ.. பையன் : சார், ஆடு மேச்ச ஒருவன் நாடு மேய்த்த கதை தெரியாதா ? அதி : யூ மீன்… தாவீது ? பையன் : எஸ் ...அவரு ஆடு மேய்ச்சிட்டிருந்தப்போ ஆடுகளை இரண்டு தடவை கொடிய மிருகங்கள் கிட்ட இருந்து காப்பாத்தியிருக்காரு… அந்த எக்ஸ்பீரியன்ஸ் அவருக்கு கோலியாத்தை வீழ்த்த ஒரு சான்ஸ் வாங்கி குடுத்துச்சு.. அதே மாதிரி.. அதி : ம்.. நீ சொல்ல வரது புரியுது.. பட்… பையன் : தயங்காதீங்க… கடவுள் கூட இருந்தா மலையும் கடுகு தான்... கடவுள் இல்லேன்னா கடுகும் மலை தான்... நான் கடவுளை நம்பறேன்… நல்லவங்க பக்கம் கடவுள் எப்பவும் இருப்பாரு… அதி : இல்ல இந்த என்விரான்மெண்ட்ல ஒருத்தரை அலோ பண்றது நாட் ஈசி.. அதான் யோசிக்கிறேன்… பையன் : திங்க் பண்ணாதீங்க... ஒரு வாய்ப்பு குடுங்க.. உங்களுக்கு ஏதும் நஷ்டம் இல்லை.. சரியாச்சுன்னா உங்களுக்கும் நல்ல பேரு கிடைக்கும். கடவுள் விரும்பினா இது நடக்கும். அதி : (யோசிக்கிறார் .. ) ம்ம்ம்.. ஓக்கே... வில் அரேஞ்ச் *** ( ஒருவர் வருகிறார் ) அதி : ஹாய் உடனே ஒரு சிஸ்டம் அரேஞ்ச் பண்ணுங்க... நம்ம சிஸ்டம் அக்சஸோட... இவரு ...டிரை பண்ணுவாரு. நபர் : சிஸ்டம் அரேஞ்ச் பண்ணலாம் சார்.. பட்... இவன்... ஐ மீன்.. இவரு.. அதி : தெரிஞ்ச பையன் தான்... நபர்: இவருக்கு நம்ம சிஸ்டம் எப்படி தெரியும்... எந்த கம்பெனில வர்க் பண்றாரு ? அதி : எங்கயும் வர்க் பண்ணினதில்லை.. பட்... ஹி ஈஸ் சேயிங் ஹி கேன் டிரை நபர் : என்ன .. காமெடி பண்றீங்களா ? பழம் தின்னு கொட்டை போட்டவங்களே வியர்த்து விறு விறுத்து தண்ணி குடிக்கிறாங்க.. நீங்க வேற அதி : எனிவே.. நத்திங் ஈஸ் கோயிங் டு லூஸ்... நபர் : ஓகே சார்.. பட்.. ஐ திங் வி ஆர் வேஸ்டிங் டைம் காட்சி 5 ( பையன் வேலை பார்க்கிறான் ) தீவிரமாக.. ( கடைசியில் பிரச்சினையை சரி செய்கிறான் ) காட்சி 6 பையன் : சார்.. பிராப்ளம் ஐடன்டிஃபைட் அன்ட் ஃபிக்ஸ் ஈஸ் ரெடி... உங்க டீம் வெரிஃபை பண்ணி அதை புரடக்ஷன்ல போடலாம் அதி : வாட்... வாட் டு யூ மீன் பையன் : சார். மூணு வல்னரபிள் பாயின்ட்ஸ் இருந்துச்சு.. அது டைனமிக்கா மாறிட்டே இருந்துச்சு.. நான் புக்ஸ் நிறைய படிக்கிறதனால பொதுவான வல்னரபிள் பாயின்ட்ஸ் எல்லாம் எனக்கு தெரியும்.... அதே மாதிரி எப்படியெல்லாம் அட்டாக் பண்ணுவாங்கன்னும் தெரிஞ்சு வெச்சிருக்கேன்.. சோ கண்டுபிடிக்க முடிஞ்சுது. அது : மை காட்... அமேசிங்.. உடனே நான் டீம் கிட்டே சொல்லி வெரிஃபை பண்ண சொல்றேன். பையன் : தேங்யூ சார்... நான் கிளம்பறேன்... அதி : வெயிட் பண்ணுப்பா.... மேபி வி நீட் ஹெல்ப் .. புரடக்ஷன் போற வரைக்கும் வெயிட் பண்ணு. காட்சி 7 மேலதிகாரி : வெரிகுட்... ஒருவழியா பிரச்சினையை முடிச்சிட்டீங்க.. பன்னிரண்டு மணி நேரமாயிடுச்சு.. இட்ஸ் எ பிக் இம்பாக்ட்... ஆர்சிஏ ரெடி பண்ணுங்க. அதி : எஸ் சார்... தட்ஸ் இன் ப்ரோகிரஸ் மேலதிகாரி : யாரு சரி பண்ணினாங்க ? ராஜனா, சந்தோஷா, அருளா, பாலாவா ? அதி : சார்.. நம்ம கம்பெனி மக்கள் யாராலயும் அதை சரி பண்ண முடியல.. தட் வாஸ் எ பிக் இஸ்யூ மேல : ஓ.. அப்போ வெண்டர் சைடா ? அதி : இல்லை சார்... ஆக்சுவலி.. ஒரு சின்ன பையன்.. நம்ம கம்பெனியும் இல்லை, வென்டாரும் இல்லை.. மேல : தென் ? அதி : பழைய புக் கடை வெச்சிருக்கிற பையன்... மேல : வாட்.. புக் கடை வெச்சிருக்கிற பையன் சால்வ் பண்ணினானா ? அதி : எஸ் சார்... இதை சால்வ் பண்ணினா ஹெட் பொசிசன் கிடைக்கும்ன்னு சொன்னேன்.. அவன் ரிக்வஸ்ட் பண்ணினான்.. நாம கன்ட்ரோல்ட் அக்ஸஸ் குடுத்தோம்.. வித் இன் ஏன் ஹவர் அவன் கிரேக் பண்ணிட்டான். மேல : ஓ..மை காட்.. ஐ கான்ட் பிலீவ். அதி : ஆமா சார்... அடக்க முடியாத பெரிய கோலியாத்த சின்ன ஆடு மேய்க்கிற பையன் அடக்கின மாதிரி... மேல : ஹவ் டிட் ஹி டூ ? அதி : ஹேக்கருக்கே இவ்ளோ திறமை இருந்தா, நேர்மையா வேலை பாக்கிறவங்களுக்கு கடவுள் அறிவு தர மாட்டாரான்னு அவன் கேட்டான். தட் வாஸ் எ வேலிட் கொஸ்டின்... மேல : யா.. ஐம் இம்ப்ரஸ்ஸ்ட்.... அதி : பட்.. சார் நாம அவனுக்கு ? மேல : வௌய் நாட் ? அவனுக்கு கண்டிப்பா வேலை குடுக்கிறோம்.. லெட் ஹிம் பி த பார்ட் ஆஃப் த சிஸ்டம் அதி : கண்டிப்பா சார்.. காட்சி 8 ( பழைய புத்தகக் கடை ) அதிகாரி : எப்படிப்பா இருக்கே ? பையன் : நல்லா இருக்கேன் சார்.. என்ன புக் வேணும் சார் ? அதி : ( ஒரு லெட்டர் குடுக்கிறார் ) பையன் : என்ன சார்.. அதி : நீ தான் இனிமே எங்க கம்பெனி செக்யூரிடி டிபார்ட்மென்ட் ஹெட்.. பையன் : ஆச்சரியமாக.. வாவ்.. சார், பிரைஸ் த லார்ட்.. என்னால நம்பவே முடியல... தேங்யூ வெரி மச் *
இறைவனே என் காதல்
இறைவனே என் காதல் * வரம் கொடுத்து கரம் பிடித்து வழித்துணையாய் வழிநடத்தும் பரம்பொருளே முதல்காதலே தாழ்வணக்கம் ! உலகெங்கும் செழிப்புற்று கவிதைதனில் களிப்புற்று, இன்னமுதை இன்முகமாய் இன்னமும் வழங்கிக் கொண்டிருக்கும் தாய்மொழியே, தனி வணக்கம் ! சர்வதேசக் கவியரங்கினை சர்வ நேசக் கவியரங்காய் இந்தப் டிஜிடல் புவியரங்கில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் உலகத் தமிழ் முஸ்லிம் மீடியாவே, பேரன்பின் நல் வணக்கம் !. உலகெங்கும் பறந்தாலும் தமிழென்னும் சிறகோடு உறவாடித் திரியும் அன்புத் தமிழ் நெஞ்சங்களே, என் உயிர் சகோதரர் புகாரி அவர்களே அனைவருக்கும் அன்பின் வணக்கம் ! * இறைவனே என் காதல் ! என கவிபாடவா என் கவியோடு வா என இறைவனிடம் கேட்டேன் ! தோன்றியதைப் பாடு என்றார் நான் தோன்றுவதற்கே காரணமானவன் ! சந்தேகமேயில்லை ! இறைவனே என் காதல் ! பிரபஞ்ச துவக்கத்துக்கு முன்பே துவங்கியவன் என் முடிவுக்குப் பின்னும் முடியாதவன். இறைவனே என் காதல் ! * என் சமரசமற்ற சண்டைகளில் சமாதானமாய் சிரித்துக் கொண்டிருக்க அவனால் மட்டுமே முடியும். காத்திருந்துக் காத்திருந்து கால்வலிக்கிறதென, கத்திக் கூச்சலிடாமல் கருணையுடன் பார்த்திருக்க அவனால் மட்டுமே முடியும். வெறுப்பின் வார்த்தைகளை அம்பெனவே எய்தாலும், எரிக்கும் வார்த்தைகளை தீயெனவே பெய்தாலும் அன்பின் குளிரைப பகிர அவனால் மட்டுமே முடியும். விரக்தியின் வீதியில் நிராகரித்து நகர்ந்தாலும் அரவணைப்பின் பேரன்பைப் பொழிய அவனால் மட்டுமே முடியும் இறைவனே என் காதல் ! * என் காதல் கடிதங்களின் எழுத்துப் பிழைகளை உதறிவிட்டு அன்பின் இழைகளை வாசிக்கிறான். என் பரிசுப் பொருட்களின் தரத்தைச் சோதிக்காமல் இதயம் சோதித்து இன்புற்றிருக்கிறான். என் பாடல் மொழிகளில் ராகம் தேடாமல் நேசம் தேடி களித்திருக்கிறான். என் பிழைகளின் கூட்டுத்தொகையை பிரியமாய் நேசித்து பிரியாமலே இருக்கிறான் இறைவனே என் காதல். * அவன் எனக்குக் கற்றுத் தருகிறான். அன்பின்றி அமையாது உலகு. அன்பினை நாளெல்லாம் பழகு என கற்றுத் தருகிறான். ஈகையின் தோகையில் பயணியுங்கள், இரக்கத்தின் இருக்கையில் அமருங்கள் என போதிக்கிறான். மனிதத்தின் மகரந்தச் சேர்க்கை மானுடமெங்கும் நிகழட்டும் என அறிவுரை சொல்கிறான். தாழ்மையின் தாழ்வாரங்களில் மட்டுமே நாளெல்லாம் நடக்கச் சொல்லி பாடம் எடுக்கிறான். பரிவின் இருப்பிடமே பரிசுத்த வசிப்பிடம் என புதுமை சொல்கிறான். துறவுகளின் விருப்பத்தை விட உறவுகளின் நெருக்கமே அழகின் உச்சம் என வியக்க வைக்கிறான். இறைவனே என் காதல் ! * அவன் எளிமையின் காதலன். அவனுக்கு வன்முறை வெறியாட்டம் பிடிக்குமென்றும், அடையாளங்களில் ஆனந்தம் அதிகமென்றும் அயலானைத் துன்புறுத்தி அகமகிழ்வானென்றும் பிரிவினையின் முகவரியில் சிரிக்கிறானென்றும் உலகம் அறியாமையின் திரியில் அவனையும் சேர்த்தே எரிக்கிறது ! இறைவனே என் காதல். * அவன் இயல்புகளைச் சொன்னால் நீங்களும் இருக்கும் காதலை உதறிவிட்டு இறையின் காதலில் இணையத் துடிப்பீர்கள். அவன் சுயநலச் சகதியில் மூழ்கிக் குளிப்பதில்லை பொதுநல நதியில் நீந்திக் களிக்கிறான். அவன் அழுக்கின் அறைகளில் அடைபட்டுக் கிடப்பதில்லை தூய்மையின் நிறைவினில் சிறகடித்துப் பறக்கிறான். அவன் தூணிலும் துரும்பிலும் இருப்பதை விரும்பாமல் இதயத்தின் மையத்தில் இளைப்பாற விரும்புகிறான். அவன் ஞாலத்தின் ஞானத்தை விழிகளில் நிறைத்தவன் மடமையின் உடமையை மொத்தமாய் மறுத்தவன். அவன் குறைகளைக் கண்டு இகழ்பவன் அல்ல நிறைவினை நோக்கி அழைப்பவன் எனவே, இறைவனே என் காதல் ! * பிடிக்கவில்லை என்று விலகிச் சென்றால் ஆசிட் வீசி அழகு சிதைப்பதுமில்லை. மன்னிப்பு கேட்டு திரும்பி வந்தால் முகத்தைத் திருப்பி முரண்டு பிடிப்பதுமில்லை .. இறைவனே என் காதல் ! * இறைவனைக் காதலியுங்கள் ! மதத்தின் மதில் சுவர்களுக்குள் அடைபடாமல் ஆகாய விரிவில் அகன்று பரவும் ஆன்மீக இறைவனைக் காதலியுங்கள் வெறுப்பின் விரல்களுக்குள் வன்மம் வளர்க்காமல், மனிதத்தின் கரங்களுக்குள் மென்மை விளைவிக்கும் மாபெரும் இறைவனைக் காதலியுங்கள். அரசியல் கட்டமைக்கும் அதிகார ஆன்மீகத்தின் போலித் துகள்களுக்கும் புதைந்து விடாமல் உண்மை இறைவனைக் காதலியுங்கள். * இறைவனைக் காதலிக்கிறேன் என்று சொல்லி கலப்படங்களின் நிழற்படமான கள்ளக் காதலரோடு கலந்து விடாதீர்கள். கள்ளக் காதலையும் உள்ளக் காதலையும் கண்டறிவது எளிது ! எங்கே பிறரைக் காயப்படுத்தும் போதனை முள்காடாய் முளைத்து வருகிறதோ அது கள்ளக் காதலின் குரல். எங்கே சுதந்திரத்தை நறுக்கும் சர்வாதிகார வாள்கள் சாணம் பிடிக்கிறதோ அது கள்ளக் காதலின் தளம் ! எங்கே புன்னகையின் முடிவில் விஷத்துளி வந்து ஒளிந்திருக்கிறதோ அது கள்ளக் காதலின் இதழ். எங்கே நானெனும் கர்வம் அழியா ஆலமரமாய் அசைகிறதோ அது கள்ளக் காதலின் இடம். எங்கே தன்னைப் போல் அடுத்தவனை நேசிக்காத மனம் இருக்கிறதோ அது கள்ளக் காதலின் களம். இறைவனைக் காதலிப்பதாய் எண்ணிக்கொண்டு கள்ளக் காதலோடு உள்ளம் இணையாதீர்கள். கள்ளக் காதலை முளையிலே கிள்ளாதீர்கள் அதை விதையிலேயே உடைத்து எறியுங்கள். * இறைவனே என் காதல் ! காரணம் நான் காதலிக்கும் முன் என்னைக் காதலித்ததும், நான் காதலிக்காத போதும் என்னைக் காதலிப்பதும் அவனொருவனே ! அவன் இறைவனே ! இறைவனே என் காதல் ! * சேவியர்
இயேசு கேட்ட கேள்விகள்
“யாரைத் தேடுகிறீர்கள்?” யோவான் 18 :4

கெத்சமெனே, அந்த அதிகாலை வேளையில் கனத்த மௌனத்துடன், ஒரு கயவனுக்காய்க் காத்திருந்தது. தனது மரண வேளை நெருங்கிவிட்டது என இயேசு அறிந்திருந்தார். தந்தையிடம் நீண்ட நெடிய செபத்தை முடித்து விட்டு, மரணத்தின் பாதையில் நடக்கப் போகும் கணத்தை இயேசு எதிர்பார்த்திருந்தார். அப்போது யூதாஸ் மாபெரும் படையோடு அங்கே வந்தான். முந்நூறு முதல் அறுநூறு பேர் வரை இருந்திருப்பார்கள் என்கின்றனர் விவிலிய வரலாற்று ஆய்வாளர்கள். அவர்களுடைய கைகளில் பற்றி எரியும் தீப்பந்தமும், மெல்லிய வெளிச்சம் வீசும் விளக்குகளும், வாள்களும், ஈட்டிகளும் எல்லாம் இருந்தன. அவர்கள் இயேசுவை விட்டு விடவே கூடாதென முடிவெடுத்து வந்திருந்தார்கள். கெத்சமெனே மலைப்பிரதேசம். அங்கே அடர்ந்த மரங்களிடையே ஒளிந்து கொள்ளலாம். பாறைகளிடையே பதுங்கிக் கொள்ளலாம், குகைகளில் மறைந்து கொள்ளலாம். எங்கே இருட்டோடு இருட்டாகப் பதுங்கினாலும் இந்த முறை இயேசுவை விடவே கூடாது என்பது தான் வந்தவர்களின் திட்டம். சீடர்கள் ஆயுதங்களோடு தாக்கினாலும் அவர்களை அடியோடு அடக்க வேண்டும் என்பது தான் அவர்களுடைய தீர்மானம். அதனால் தான் இத்தனை முன்னேற்பாடு. ஆனால் அவர்களுக்குத் தெரியவில்லை, இயேசு ஒளிந்து கொள்பவரல்ல. துணிந்து நிற்பவர். அவரது வேளை வராத போது யாரும் அவரை நெருங்க முடியாது. அவரது வேளை வந்துவிட்டால் அவரே நெருங்கி வருவார். ! . இயேசு கேட்கிறார் “யாரைத் தேடுகிறீர்கள் ? “ அவர்கள் “இயேசுவை” என்கிறார்கள். “நான் தான்” என்கிறார் இயேசு. இந்தப் பதிலை எதிர்பார்க்காதவர்கள் திகைத்துப் போய் பின் வாங்குகிறார்கள். இத்தனை படைகளுக்கு முன், இத்தனை ஆயுதங்களுக்கு முன், சற்றும் அச்சமில்லாமல் நான் தான் என்கிறாரே இயேசு ! என்பது தான் வந்தவர்களின் எண்ணமாய் இருந்திருக்கும். இயேசு மீண்டும் அவர்களிடம் “யாரைத் தேடுகிறீர்கள் ?” என்று கேட்டார். அவர்கள் இயேசுவை என்றார்கள். நான் தான் என மீண்டும் சொன்னார் இயேசு ! இன்று இயேசு நம்மிடம் கேட்கிறார், “யாரைத் தேடுகிறீர்கள் ?” இயேசுவைக் கண்டுபிடிப்பது சிரமம் என பிடிக்க வந்தவர்கள் நினைத்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததை விட மிக எளிதாக அணுகக் கூடியவராக இயேசு இருந்தார். நாமும் இயேசுவைக் கண்டுபிடிப்பதோ, நெருங்குவதோ கடினம் என நினைக்கிறோம். ஆனால் அவர் நாம் நினைப்பதை விட அருகே, நாம் தேடும்போது நம்மை எதிர்கொள்பவராக இருக்கிறார். இயேசுவை நெருங்க வேண்டுமெனில் நமது அறிவெனும் ஆயுதங்களோ, பந்தமெனும் சான்றிதழ்களோ தேவையென நினைக்கிறோம். ஆனால் அன்பொன்றே போதும் என இயேசு சொல்கிறார். என்னைத் தேடுகிறவர் கண்டடைவார் எனும் இயேசுவின் வார்த்தை மாறப் போவதில்லை. நானே ஒளி என்றவரைப் பிடிக்க நாம் ஒளி கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை. அவரது ஒளியைப் பெற்றுக் கொள்ளும் விளக்குடன் செல்வதே தேவையானது. கூட்டம் போட்டு, ஆயுதங்களோடு அலைவது தேவையற்றது, தனியே சொல்வதே தகுதியானது. இயேசு, “யாரைத் தேடுகிறீர்கள் ?” என்று கேட்கிறார். நாம் யாரைத் தேடுகிறோம் ?, எதற்காகத் தேடுகிறோம் ? இயேசுவை அன்று தேடியவர்கள் அவரைக் கொலை செய்யும் நோக்குடன் தேடினார்கள். நாம் இயேசுவின் கொள்கைகளை, அவரது போதனைகளைக் கொலை செய்யும் நோக்குடன் அவரைத் தேடுகிறோமா ? இல்லை அவரது வழியில் நடப்பதற்காக அவரைத் தேடுகிறோமா ? இயேசுவின் மனித நேயக் கோட்பாடுகளைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு திருச்சபைச் சட்ட திட்டங்களுக்குள் புதைத்து கிடக்கும் போது, இயேசு அருகில் இருந்தும் அறியாதவர்களாய் இருக்கிறோம். இயேசுவின் அன்பின் செயல்களை அகற்றி வைத்து விட்டு ஆசீர்வாதப் போதனைகளை அரவணைத்துக் கிடக்கும் போது நாம் இயேசுவை வெளியே நிற்க வைக்கிறோம். அவர் கண் முன் நின்றும், நாம் குருடர்களாய் இருக்கிறோம். தேடுங்கள், கண்டடைவீர்கள் என்றார் இயேசு. ஆனால் அவரைத் தேட வேண்டிய இடத்தில் தேடவேண்டும். அப்போது தான் கண்டடைய முடியும். சாதிப் பெருமைகளை மாலையாய் சுற்றிக் கொண்டு கூத்தாடும் கூட்டத்தில் இருந்து கொண்டு இயேசுவைக் கண்டு பிடிக்க முடியாது ! கர்வத்தின் மேடைகளில் தலைக்கனத்தின் ராட்டினத்தில் சுழன்று கொண்டே தேடினால் இயேசுவைக் கண்டு பிடிக்க முடியாது ! மனிதத்தை. மறுதலித்து, சட்டங்களை இறுகப் பற்றிக் கொண்டு கிடக்கும் கூட்டத்தில் புதைந்து கொண்டு இயேசுவைக் கண்டுபிடிக்க முடியாது. அப்படி அறிவீனமாய் நாம் அலையும் போது, இயேசு நம் முன்னால் நின்று கேட்கிறார். “யாரைத் தேடுகிறீர்கள் ?” என்னைத் தேடவேண்டுமெனில் தேவையில் உழலும் எளியவன் வாழ்வில் தேடுங்கள். என்னைத் தேடவேண்டுமெனில் புறக்கணிப்பின் பள்ளத்தாக்கில் கிடக்கும் பாமரனிடம் தேடுங்கள். என்னைத் தேடவேண்டுமெனில் தூய்மையின் சாலைகளில் திரியும் எளிய மனிதர்களிடம் தேடுங்கள். குறைந்தபட்சம், என்னை விவிலிய பக்கங்களிலாவது தேடுங்கள் ! இவையெல்லாம் விட்டு விட்டு நீங்கள் தேடித் திரிகிறீர்களெனில், நீங்கள் வேறு “யாரையோ தேடுகிறீர்கள்” என்னை அல்ல ! வேறு யாரையோ கண்டடைவீர்கள் என்னையல்ல ! என்கிறார் இயேசு ! நாம் யாரைத் தேடுகிறோம் ? எங்கே தேடுகிறோம் ? எதற்காகத் தேடுகிறோம் ? சிந்திப்போம் இயேசுவின் கேள்வி நம்மை பதில்களை நோக்கி நகர்த்தட்டும் *
கிறிஸ்தவ நாடகம் : வெற்றி
https://youtu.be/ctmlTqHpQMI காட்சி 1 ( இரவு நேரம், ) பையன் செபிக்கிறார் பிறகு படிக்கிறான் அம்மா : தம்பி டைம் ஆகுதுப்பா… படுத்து தூங்கு.. பையன் : இன்னும் கொஞ்சம் நேரம்மா.. வரேன்… அம்மா : காலைல கனகு வீட்டுக்கு போணும்ல… சீக்கிரம் தூங்கினா தான் நல்லா இருக்கும்.. பையன் : ஒரு ஃபைவ் மினிட்ஸ்மா வரேன்.. நாளைக்கு ஒரு டெஸ்ட் இருக்கு.. அம்மா : ஓக்கேப்பா… காட்சி 2 ( மறு நாள், கனகு வீடு ) பையன் கார் கிளீன் பண்ணிக் கொண்டிருக்கிறான். கனகு : என்னப்பா…. இன்னிக்கு இவ்ளோ லேட்டாயிடுச்சு… 30 மினிட்ஸ் லேட்… எனக்கு ஆபீஸ் போகணும்ல்ல. இனிமே காலைல ஆறுமணிக்கெல்லாம் வந்துடு.. இல்லேன்னா வரவேண்டாம். பையன் : சாரி சார்.. நைட் படிச்சிட்டிருந்தேன்… அதான் தூங்க லேட்டாயிடுச்சு.. கனகு : படிச்சிட்டிருந்தியா ? என்ன படிச்சிட்டிருந்தே… கத புக்கா ? பையன் : இல்ல சார், நான் ஸ்கூல்ல படிக்கிறேன்… கனகு : ஸ்கூலுக்கு போறியா ? நீயெல்லாம் படிச்சு என்னத்த சாதிக்கப் போறே.. பேசாம வேலைக்கு போனா நாலு காசு சம்பாதிக்கலாம். பையன் : படிக்காம வேலைக்கு போனா நாலு காசு, படிச்சு வேலைக்கு போனா நிறைய காசு சம்பாதிக்கலாம் சார் கனகு : பேச்சுலயே தெரியுது படிக்கிற திமிரு… ஒவ்வொருத்தனும் எங்க இருக்கணுமோ அங்க இருக்கணும்… பையன் : ( அமைதி ) கனகு : எவன் எவன் படிக்கணும், எவன் எவன் வேலை பாக்கணுங்கற வெவஸ்தையே இல்லாம போச்சு… இந்த படிப்பு கிடிப்புன்னு சொல்லிட்டு லேட்டா வரதா இருந்தா இனிமே வரவேண்டாம்… சரியா பையன் : நான்… சீக்கிரமாவே வந்துடறேன் சார். காட்சி 3 ( பையன் & நண்பன் ) நண்பன் : என்னடா எப்ப பாத்தாலும் விழுந்து விழுந்து படிச்சிட்டிருக்கே.. அப்படி படிச்சு உனக்கென்ன நோபல் பரிசா தரப் போறாங்க ? பையன் : நல்லா படிச்சா தாண்டா நல்ல மார்க் வாங்க முடியும்… நண்பன் : நல்ல மார்க் வாங்கறதுக்கு படிக்கணும்ன்னு எவன் சொன்னான்.. பையன் : பின்னே ? நண்பன் : ஊர்ல எல்லாரும் படிச்சா மார்க் வாங்கறாங்க… அதுக்கு நிறைய வழி இருக்கு மேன்.. பையன் : என்ன வழி ? நண்பன் : பிட்டடிக்கலாம்.. பக்கத்துல இருக்கிறவனை உஷார் பண்ணி அவன் பேப்பரை வாங்கி எழுதலாம்… வாத்தியாரை புடிச்சா பேப்பரையே மாத்தலாம் பையன் : ஓ.. குறுக்கு வழியில போய் முறுக்கு திங்க பாக்கறே.. எனக்கு நேர் வழி போதும். நண்பன் : நேர்வழின்னா விழுந்து விழுந்து படிக்கணும், குறுக்கு வழின்னா ஜஸ்ட் லைக் தேட் ஜெயிச்சு போயிட்டே இருக்கலாம். பையன் : அது தப்பு… கடவுளுக்குப் புடிக்காத விஷயம். நேர்மை தான் நிலைக்கும். படிப்பு வெறும் மார்க்குக்கு மட்டுமில்லை, அறிவுக்கும் சேத்து தான்.. சோ, நான் படிச்சு மார்க் வாங்கிக்கறேன்… நண்பன் : ஸீ… நான் மாலுக்கு போறேன்.. படம் பாக்க போறேன்.. மைண்ட் ரிலாக்ஸா இருக்கணும். கழுதை மாதிரி பேப்பரை தின்னுட்டே இருக்காம, நீயும் குதிரை மாதிரி கிளம்பி வா… பையன் : நீயும் உன் படமும்.. எனக்கு அதுக்கெல்லாம் டைம் இல்லை… குதிரைன்னு சொன்னப்போ தான் ஞாபகம் வருது, குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாக்கப்படும், ஜெயமோ கர்த்தரால் வரும் ந்னு ஒரு வசனம் உண்டு. நண்பன் : பாட புக்ல இருக்கிறதையே நான் படிக்கல, வேத புக்கில இருக்கிறது எப்படிடா படிப்பேன்… பையன் : கடவுள் வெற்றி தருவாரு.. நீ படி நண்பன் : கடவுள் வெற்றி தருவாருன்னா, எதுக்கு நீ படிக்கிறே…. பையன் : நான் குதிரையை ஆயத்தமாக்கறேன்.. ஆயத்தமாக்கற வேலை என்னுது தானே… நண்பன் : நீ நல்லா ஆயத்தமாக்கு.. எனக்கு படம் ஆரம்பமாகப் போவுது.. சீ யூ லேட்டர்… காட்சி 4 ( பையன் & கனகு ) கனகு : என்னப்பா.. தோட்டத்துல தண்ணி ஊத்தியிருக்கே நாலஞ்சு செடி சாஞ்சிருக்கு.. பையன் : சார்.. நான் மெதுவா தான் சார் ஊத்தினேன்.. ஒருவேளை பூனை ஏதாச்சும் கனகு : ஆமா, பூனை போய் பூ பறிக்குது.. எல்லாம் படிக்கிற திமிரு…. பையன் : சாரி சார்.. நான் கவனமா ஊத்தறேன் சார்.. கனகு : சரி..சரி.. போ… ஏதோ கடமைக்கு இங்கே வந்திட்டிருக்காதே… நாளைக்கு படிட்டு கலெக்டர் ஆக போற நினைப்புல திரியாதே… பையன் : ( அமைதியாய். நிற்கிறான் ) காட்சி 5 (அம்மா & பையன் ) பையன் : அம்மா… நாம படிக்கிறது தப்பாம்மா ? அம்மா : படிக்காம இருக்கிறது தான்பா தப்பு.. ஏன் கேக்கறே ? பையன் : இல்ல.. ஓனர் சார் எப்பவுமே என்னை திட்டிட்டே இருக்காரு.. ஏன் படிக்கிறே.. படிச்சு என்ன கிழிக்க போறே… கலெக்டர் ஆவ போறியன்னு திட்டிட்டே இருக்காரு அம்மா : எல்லாம் நாம முன்னேறிடக் கூடாதுங்கற கெட்ட எண்ணம்பா.. நாம அதையெல்லாம் கண்டுக்கக் கூடாது. பையன் : நாமளும் நல்லா படிச்சு சம்பாதிச்சா என்ன தப்பும்மா.. அம்மா : நாம எல்லாம் ஏழையா இருந்தா தான் அவங்களுக்கு அடிமையா இருப்போம். எதுத்து கேள்வி கேக்க மாட்டோம். எப்பவுமே அவங்களை சார்ந்து இருப்போம்.. அதான்.. பையன் : நம்ம நிலமைல அவங்க இருந்தா அவங்களுக்கு படிக்க தோணாதா ? அம்மா : கண்டிப்பா தோணும்.. ஆனா அப்படியெல்லா யோசிக்க மாட்டாங்க… நம்மளை அவமானப்படுத்தி இலட்சியத்தை விட்டு விலக வைக்க நிறைய பேரு டிரை பண்ணுவாங்க.. அதையெல்லாம் காதுல வாங்கிக்கக் கூடாது. பையன் : சரிம்மா… அம்மா : கவனமா இருக்கணும்… நமக்கு அட்வைஸ் பண்ற மாதிரி பண்ணுவாங்க, அப்புறம் தப்பான வழியில கூட்டிட்டு போக பாப்பாங்க, தப்பா குற்றம் சாட்டுவாங்க, அவமானப் படுத்த பாப்பாங்க, மிரட்ட பாப்பாங்க… எதையுமே கண்டுக்கக் கூடாது.. கடவுள் நமக்கு வெற்றி தருவாருன்னு உறுதியா இருக்கணும். பையன் : கண்டிப்பாம்மா.. நான் அமைதியா தான்மா இருப்பேன். பட் அப்பப்போ மனசுக்கு கஷ்டமா இருக்கும் அதான்.. அம்மா : அவமானங்களை தாங்கி அமைதியாவும், நேர்மையாவும் இருந்தவங்க தான்பா வரலாற்றில பெரிய ஆட்களா மாறியிருக்காங்க. நீ நல்லா பிரேயர் பண்ணு. நேர்வழியில நட.. அது போதும். மத்ததெல்லாம் கடவுள் பாத்துப்பாரு. பையன் : சரிம்மா காட்சி 6 ( பையன் & நண்பன் ) பையன் : என்ன ஸ்டீபன்… நல்லா படிச்சியா ? ஸ்டீபன் : படிப்பா.. டோண்ட் இன்சல்ட் மி… நான் இன்ஸ்டாகிராம்ல படிச்சு, ஃபேஸ்புக்ல பொழைச்சு, வாட்சப்ல வாழ்றவன்… எக்ஸாம் எல்லாம் எனக்கு காப்பி அடிக்கிற களம் தான். பையன் : டேய்… ஒழுங்கா படிக்கலாம்ல… டைமை வேஸ்ட் பண்ற நேரத்துக்கு ஸ்டீபன் : ஹே..ஹே.. யாரு டைமை வேஸ்ட் பண்றது ? நீ தான் வேலை பாக்கறே , படிக்கறே, சர்ச்சு அது இதுன்னு சுத்தறே.. டைமை வேஸ்ட் பண்றே… என்னை பாரு… ஜாலியோ ஜிம்கானா… பையன் : ம்ம்.. நாளைக்கு பப்ளிக் எக்ஸாம்.. பப்ளிக் எக்சாமாச்சும் ஒழுங்கா படி.. ஐ வில் ப்ரே பார் யூ ஸ்டீபன் : காப்பி அடிக்கும்போ மாட்டக் கூடாதுன்னு ப்ரேயர் பண்ணு.. அது போதும் பையன் : டேய்.. கடவுள் பாகம் பிரிக்கிறதுக்கோ, உனக்கு காப்பி அடிக்கிறதுக்கோ கூட நிக்கிறவரில்ல… நேர்மையின் பக்கம் நிக்கிறவங்களுக்கு வலிமை குடுக்கிறவரு.. ஸ்டீபன் : ஸ்டாப் பிரீச்சிங்.. ஐம் கோயிங்… காட்சி 7 ( கனகு போனில் ) கனகு : சொன்னதெல்லாம் கவனமா கேட்டியா இல்லையா ? போன் : கேட்டேன் சார்… உங்க வீட்ல வேலை பாக்கிற அந்த பையன் தானே ? கனகு : எஸ்… மைல்டா ஆக்சிடண்ட் பண்ணிடு.. கை உடையணும்.. ரெண்டு வாரமாச்சும் அவன் ஆஸ்பிடல்ல கிடக்கணும்… இந்த பப்ளிக் எக்ஸாம் அட்டண்ட் பண்ணலேன்னா.. ஹி வில் பி அவுட்… ஒழுங்கா பொத்திகிட்டு வேலைக்கு வருவான். போன் : சரிங்கய்யா.. இவங்க ஆட்டத்தை வளர விடக் கூடாது. கனகு : எஸ்… எஸ்… யாரு பேரும் வெளியே வராம பாத்துக்கோ… போன் : அதெல்லாம் வராது சார்… கனகு : ஹா..ஹா. நீ அவனை ஹாஸ்பிடலுக்கு அனுப்பு.. நான் ஹாஸ்பிடல்ல போய் ஒரு கிலோ ஆப்பிள் குடுத்து நலம் விசாரிச்சுட்டு வரேன்… படிக்கிறாங்களாம் படிப்பு… இதுல கிறிஸ்டியன் வேற.. சே…. போன் : நீங்க நிம்மதியா தூங்குங்க, அவனை நான் தட்டி தூக்கறேன். காட்சி 8 ( ஸ்கூலில் ) பையன் இடது கையில் கட்டுடனும், தலையில் கட்டுடனும் வருகிறான் ஸ்டீபன் : என்னாச்சுடா.. பையன் : ஒரு டெம்போ வந்து தட்டிட்டு போச்சுடா… நான் தெறிச்சு போய் ஒரு குழியில விழுந்துட்டேன்… ஸ்டீபன் : ஐயையோ… எந்த டெம்போ பையன் : அதெல்லாம் தெரியல.. நான் விழுந்த இடத்துல ரெண்டு பேரு உக்காந்திருந்தாங்க.. அவங்க தான் ஓடி வந்து என்னை தூக்கிட்டு போய் ஃபஸ்ட் எய்ட் குடுத்தாங்க.. ஸ்டீபன் : நல்ல அடியா பையன் : யா.. லெஃப்ட் ஹேண்ட் கை எலும்பு உடைஞ்சிருக்கு.. தலையிலயும் அடி… பட்… காட் ஈஸ் கிரேட்… ஸ்டீபன் : டெம்போ அடிச்சதுக்கு கடவுளுக்கு பாராட்டாடா ? பையன் : டேய்.. வலது கை எவ்ளோ நீட்டா இருக்கு.. ஐ கேன் ரைட் எக்ஸாம்டா… என்ன கொஞ்சம் வலி இருக்கு லெஃப்ட் சைட்.. பட் ஓக்கே.. ஸ்டீபன் : டேய்… உன்னை நினைச்சா எனக்கு கில்ட்டியா இருக்குடா பையன் : ஏண்டா ? ஸ்டீபன் : இவ்ளோ கஷ்டத்துலயும் நீ எக்ஸாமை சீரியஸா எடுத்து எழுத வந்திருக்கே.. பட்.. நான் எப்படி இருக்கேன்… பையன் : கடவுளை நம்பியிருந்தா.. நடக்கிறதெல்லாம் நல்லதுக்கா தான் முடியும்டா… ஸ்டீபன் : பட்.. எனக்கு ஒரு ஐடியாடா.. பையன் : சொல்லுடா ஸ்டீபன் : உன்னோட கைல இருக்கிற கட்டுக்கு இடையில கொஞ்சம் பிட்டு ஒளிச்சு வைக்கட்டுமா.. நீ அப்புறம் எனக்கு எடுத்து குடு.. பையன் : உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுடா… காட்சி 9 ( ஸ்டீபன் காப்பி அடிக்கும்போது பிடிபடுகிறான் ) ஆசிரியர் : திஸ் ஈஸ் யுவர் லாஸ்ட் வார்ணிங்.. ஏற்கனவே உன்கிட்டே இருந்த பிட்டை எல்லாம் எடுத்தாச்சு… அப்பவே உனக்கு வார்ணிங் குடுத்தேன்.. இனிமே ஏதாச்சும் பண்றதை பாத்தா.. இந்த வருஷம் எந்த எக்ஸாமும் எழுத விடமாட்டேன்.. ஸ்டீபன் : சாரி சார்.. நான்.. இனிமே காப்பி அடிக்க மாட்டேன் சார் ஆசிரியர் : படிச்சதை எழுதறது தான் எக்ஸாம். நல்ல குணாதிசயங்களை கத்துக்கறது தான் கல்வி. ரெண்டுமே இல்லேன்னா எப்படி ? பிகேவ் யுவர் செல்ஃப்.. படிச்ச படிப்புக்கு ஒரு அர்த்தம் வேண்டாமா ? ஸ்டீபன் : சாரி சார்… காட்சி 10 ( ஸ்டீபன் & பையன் ) ஸ்டீபன் : டேய்.. ஐ ஃபீல் அஷேம்ட்… தப்பு பண்ணிட்டே இருக்கும்போ ஒரு கெத்து மாதிரி இருந்துச்சு.. பட்.. இன்னொருத்தர் கிட்டே பிடிபட்டு திட்டு வாங்கும்போ .. அவமானமா இருக்கு பையன் : பாவம் எப்பவும் அப்படித் தாண்டா… சுகமா தெரியும், ஆனா அது நம்மளை அழிச்சுடும்.. ஸ்டீபன் : ஐ.. ஐ ஃபீல் வெரி கில்ட்டி… பையன் : நீ பண்றது தப்புன்னு உணர்ந்து கடவுள் கிட்டே மன்னிப்பு கேளு. அந்த தப்பை மறுபடியும் பண்ணாதே. ஒரு எக்ஸாம் போனா இன்னொரு எக்ஸாம் வரும். ஆனா, பாவம் செஞ்சு சொர்க்கத்தை இழந்தா… ஸ்டீபன் : தேங்க்ஸ்டா.. பிரே பார் மி.. இனிமே நான் என்ன தெரியுமோ அதை மட்டும் தான் எழுத போறேன்.. பையன் : டோண்ட் வரி.. நமக்கு நிறைய டைம் இருக்கு.. ஸ்டடி ஹாலிடேஸ்ல, ஐ கேன் ஹெல்ப் யூ… ஸ்டீபன் : தேங்க்ஸ்டா.. காட்சி 10 ( தேர்வில் பையன் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுகிறான் ) ( ஸ்டீபனும் வெற்றி பெறுகிறான் ) காட்சி 11 ( பள்ளி விழாவிற்கு கனகு விற்கு அழைப்பு வருகிறது ) போன் : சார், எங்க ஸ்கூல் பங்ஷன் ஒன்னு நடத்தப் போறோம் சார். ஊர்ல பெரிய மனுஷன் நீங்க, நீங்க வந்து மாணவர்களை ஊக்கமூட்டற மாதிரி நாலு வார்த்தை பேசினீங்கன்னா எங்களுக்குப் பெருமையா இருக்கும். கனகு : கண்டிப்பா வரேன்… காட்சி 12 ( ஸ்கூல் விழா ) கனகு : மாணவர்கள் முன்னால் நிற்பதற்கு எனக்கு எப்போதுமே மிகவும் மகிழ்ச்சி உண்டு. மாணவர்கள் தான் எதிர்கால தலைவர்கள். கல்வி தான் நம்மை உயர்த்தும். எத்தனை சவால்கள் வந்தாலும் கல்வி கற்க வேண்டும். இப்படி ஒரு ஸ்கூல்ல படிச்சதால தான் நான் இன்னிக்கு இப்படிப்பட்ட ஸ்கூல்ல பேச வந்திருக்கேன். இதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. எதை விட்டாலும் அன்பை விடக் கூடாது, எதை விட்டாலும் மனித நேயத்தை விடக் கூடாது, அதே போல எதை விட்டாலும் கல்வியை விடவே கூடாது ! கல்வியைத் தடுப்பவன் ஒரு எதிர்காலத்தையே தடுக்கிறான். ஒரு எதிர்காலத்தை அழிக்க நினைப்பவன் கல்வியை அழிக்கிறான்.. சோ, எல்லாரும் நல்லா படிங்க.. நன்றி அறிவிப்பாளர் : இப்போது பள்ளியின் சிறப்பு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விழாத் தலைவர் பரிசு வழங்குவார். அறிவிப்பாளர் : பள்ளி முதல் மாணவன், விக்டர். ( பையன் வருகிறான்.. தலைவர் அதிர்ச்சியடைகிறார் ) ( பையனுக்கு கேடயம் கொடுக்கிறார், பையன் நன்றி சொல்கிறான் ) பையன் : எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனுக்கும், என் பெற்றோருக்கும், என் மேல் அதிக பாசம் கொண்ட அனைத்து ஆசிரியர்களுக்கும், என் அன்பு நண்பர்களுக்கும நன்றி. தலைவர் கையால் விருது வாங்குவதில் எனக்கு இரட்டை மகிழ்ச்சி. அவர் தான் எங்களுக்குத் தேவையான பல உதவிகளைச் செய்பவர். நான் அடிபட்டு கிடந்தபோது கூட அவர் தான் உதவியும் கொடுத்து, ஊக்கமும் கொடுத்தார்…. அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ( கனகு அதிர்ச்சியாய் நிற்கிறார் ) காட்சி 13 ( கனகு பையன் வீட்டுக்கு வருகிறார் ) பையன் : சார்.. என்ன சார், இந்த பக்கம் வாங்க சார்.. வாங்க சார்… கனகு : தம்பி..க்ரேட் பா… இன்னும் நீ நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும்பா… பையன் : எல்லாம் உங்க ஆசீர்வாதம் சார் கனகு : இல்ல தம்பி, . நீ படிக்கிறதையே விரும்பாம என்னென்னவோ சொல்லிட்டேன் செஞ்சுட்டேன்…என்னை மன்னிச்சிடு பையன் : என்ன சார், பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க கனகு : இல்லப்பா… பெரிய பெரிய கதவை சின்ன சாவி திறக்கிற மாதிரி, பெரிய பெரிய முரட்டுத்தனங்களை ஒரு சின்ன அன்பின் செயல் உடைச்சிடும்பா…. பையன் : என்ன சார் சொல்றீங்க கனகு : நீ எதையுமே மனசுல வெக்காம மேடையிலயே என்னை பாராட்டிப் பேசினது, ரொம்ப டச்சிங்கா இருந்துச்சு… இனிமே உன் படிப்பு செலவு என்னுதுப்பா.. பையன் : சார்.. ரொம்ப நன்றி சார்…. கனகு : ஒரே ஒரு ஹெல்ப் பண்ணுப்பா… பையன் : சொல்லுங்க சார்… கனகு : என் பையனுக்கு படிப்பே ஏற மாட்டேங்குதுப்பா.. எப்பவும் மொபைல்.. லேப்டாட்.. மியூசிக்குன்னு கெடக்கான்.. அவனுக்கு டியூஷன் டீச்சரா இருந்து டெய்லி கொஞ்சம் பாடம் சொல்லி குடுப்பா.. இனிமே, நீயுன் என் பையன் மாதிரி தான்… பையன் : சார்…. கண்டிப்பா சார்…. ரொம்ப சந்தோசம் சார்…. காட்சி 11 பையன் & ஸ்டீபன் : ( சர்ச் ) இயேசுவே, எப்பவுமே வெற்றியைத் தருவது நீங்க தான். எப்பவுமே, எந்த செயலிலயுமே உம்மை மட்டும் நம்பி வாழ எங்களுக்கு உறுதி தாருங்க… நேர்மையான வழியில, உறுதியா நடக்க உதவி செய்யுங்க. ஆமென். * மறைக்கப்பட்ட தானியேனில் வரலாறு கற்றுத் தரும் பாடங்கள் வலிமையானவை. தானியேலுக்கு இறைவன் வழங்கிய ஞானத்தை சில கதைகள் பிரமிப்புடன் பதிவு செய்கின்றன பாருங்கள், பகிருங்கள், பயனடையுங்கள். clickscandy@gamail.com - [ ]