Posted in Desopakari

அன்றையமிஷனரிகளும்

இன்றைய தேவையும் 

உலகெங்கும் சென்று எல்லா இனத்தாருக்கும் நற்செய்தியை அறிவியுங்கள். எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள். 

என இறைமகன் இயேசு சீடர்களுக்கு இட்ட கட்டளையே  கிறிஸ்தவ மறை பரப்புப் பணியாளர்கள் உலகெங்கும் பயணித்து இறைமகன் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க மூல காரணம். ஒருவேளை இயேசு அந்த ஒரு கட்டளையை மட்டும் கொடுக்காமல் இருந்திருந்தால் கிறிஸ்தவம் எருசலேம் எல்லைகளுக்குள் அடங்கிப் போயிருக்க வாய்ப்பு உண்டு.

இயேசுவின் கட்டளையை ஏற்று மறை பரப்பு செய்ய வந்தவர்களின் பட்டியலில்,  இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த இயேசுவின் நேரடிச் சீடரான தோமா முதல், சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட ஸ்டெயின்ஸ் குடும்பம் வரை நூற்றுக்கணக்கில் உண்டு. 

கத்தோலிக்கம், இயேசு சபை, புராட்டஸ்டண்ட் என எல்லா பிரிவினரும் நற்செய்தியைச் சுமந்து வந்திருக்கிறார்கள். இதில் ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் குழுவைச் சார்ந்தவர்களை மட்டுமே தூக்கிப் பிடித்து விளம்பரம் செய்துகொண்டிருக்கும் துரதிர்ஷ்டமும் நமக்கு நேர்ந்திருக்கிறது. சீகன் பால்கைப் பேசுபவர்கள் பிரான்சிஸ் சேவியரையும், ராபர்ட் நொபிலியையும் பேசுவதில்லை என்பது தானே கள நிலவரம் !.   

இயேசுவின் போதனையின் மையம் மனித நேயமே ! இறைமகன் இயேசுவின் வாழ்க்கையும், போதனைகளும் எல்லா இடங்களிலும் அதைத் தான் வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றன. இயேசுவின் சீடர்கள் என்பதைக் கனிகளால் காட்ட வேண்டும் என்பதே இறைமகன் இயேசுவின் விருப்பம். அதனால் தான் ஆதிகால கிறிஸ்தவர்கள் மறைபரப்புப் பணிக்காகச் செல்லும்போது தங்களையே முழுமையாய் அர்ப்பணித்தார்கள். மக்களின் வாழ்க்கையோடு தங்களை இணைத்துக் கொண்டார்கள். 

வெறும் வாய் செய்திகளோடோ, துண்டுப் பிரசுரங்களோடோ இறைமகன் இயேசுவை அறிவிப்பது அறிவீனம் என்பதைப் புரிந்தவர்கள் மக்களின் தேவைகளைச் சந்தித்தார்கள். யார் அயலான் கதையில் வரும் சமாரியனாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.  

அவர்கள் பல்வேறு நிலங்களில் நடப்பட்டார்கள், நிலத்தின் உரத்துக்கேற்ப வளர்ந்தார்கள். நிலம் நிராகரித்தபோது மகிழ்ச்சியுடன் வீழ்ந்தார்கள். ஒருவருடைய வாழ்க்கையின் தூய்மை பலரை மனம் திரும்ப வைத்தது. 

அதே போல சமூக வெளிகளில் அடக்குமுறைகளைச் சந்தித்தவர்களும், புறக்கணிப்பின் இருளில் இருந்தவர்களும் அன்பையும் அரவணைப்பையும் கண்டபோது நிமிர்ந்தார்கள். வாழ்வில் தங்களுக்கும் வெளிச்சம் கிடைக்கும் என்பது அவர்களுக்கு மிகப்பெரிய ஆனந்தமாய் இருந்தது. மிஷனரிகள் சமூக அவலங்களைத் துடைத்தெறிய முழு மனதுடன் செயல்பட்டார்கள். அதுவே அவர்களின் உயிருக்கு மாபெரும் அச்சுறுத்தல் என்பதை அறிந்தும் அவர்கள் பின்வாங்கவில்லை. 
 
நாம் அடிக்கடி மிஷனரிகளின் கதைகளைப் படிப்பதும், அவர்களுடைய வாழ்க்கையைச் சிலாகிப்பதுமாய் நமது பயணத்தைத் தொடர்கிறோம். ஆனால் அவர்கள் அன்று இட்ட விதை இன்று கனிகொடுக்கிறதா என்பதைக் கவனிக்கிறோமா ? அவர்களுடைய நிலத்தை நாம் பராமரிக்கிறோமா ? அவர்கள் கட்டிய அஸ்திவாரத்தில் நாம் மதிப்பீட்டு மாளிகைகளைக் கட்டுகிறோமா ?

ஒரு நிமிடம் நிதானித்து, நமது மிஷனரிகள் நமது நிலத்தில் விட்டுச் சென்ற சுவடுகள் என்ன, அடையாளங்கள் என்ன ? அதை நாம் இன்று வளர்த்தெடுக்கிறோமா இல்லை பறிகொடுக்கிறோமா என்பதைச் சிந்திப்பது பயனளிக்கும்.

1. கல்விப்பணி !

இந்தியாவில் படிக்கின்ற பள்ளி மாணவர்களில் 15 விழுக்காடு பேர் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் தான் படிக்கிறார்கள். கல்லூரிகளை எடுத்துக் கொண்டால் 10 விழுக்காடு மாணவர்கள் கிறிஸ்தவக் கல்லூரிகளில் தான் படிக்கிறார்கள். இந்தியாவின் தலை சிறந்த கல்வி நிலையங்களின் பட்டியலை எடுத்தால் கிறிஸ்தவ நிறுவனங்கள் டாப் 10 பட்டியலில் பல  இடங்களைத் தவறாமல் பிடிக்கும் !

ஒரு காலத்தில் கல்வி என்பதே இல்லாத பிரதேசங்களில் கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் தான் கல்வியை அறிமுகம் செய்தன. கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு கிறிஸ்தவ மிஷனரிகள் தான் அறிவொளியைச் சுமந்து சென்றன. அதன் பயன் தான் இந்தியாவில் இன்று ஏற்பட்டிருக்கின்ற சமூக மாற்றம். !

இன்றைக்கு கிறிஸ்தவ கல்வி நிலையங்களில் நிலை என்ன ? புதிதாக கல்வி நிலையங்கள் எழுகின்றனவா ? அவை மிஷனரி மனப்பான்மையோடு நிமிர்கின்றனவா ? அங்கே கிறிஸ்தவ மதிப்பீடுகள் போதிக்கப்படுகின்றனவா ? மிகப்பெரிய கேள்விக்குறி அல்லவா ?

2. சாதீய பாகுபாடுகள் !

கிறிஸ்தவம் நுழைந்து வந்த இன்னொரு முக்கியமான அம்சம் சமத்துவம். குறிப்பாக சாதீய அடிப்படையில் பிரிந்து கிடக்கும் மக்களிடையே பணியாற்றியது கிறிஸ்தவம். யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை, இறைவனால் படைக்கப்பட்ட அனைவருமே சமமானவர்கள். என்பதே அந்த சமத்துவப் பணியின் சாராம்சம். 

சாதீயத்தினால் வெகு ஆழமாகப் பாதிக்கப்பட்டிருந்த, உரிமை மறுக்கப்பட்டிருந்த மக்களை கிறிஸ்தவம் அரவணைத்தது. சக மனிதன் மீதான தீண்டாமை கோலோச்சிய காலகட்டத்தில் சமாரியனை அரவணைத்த இயேசுவின் அன்பும், யூதரென்றும் கிரேக்கரென்றும் இல்லை என்ற போதனையும் சமூக மாற்றத்துக்கு வித்திட்டன. 

இன்றைய திருச்சபைகளின் நிலை என்ன ? ஒவ்வொரு தேர்தலுக்கும் சாதீய அடிப்படையிலான கமிட்டிகள் ! ஒவ்வொரு திருச்சபையிலும் சாதீய அடிப்படையிலான பாஸ்டர்கள். சில இடங்களில் தனித்தனி ஆராதனை, தனித்தனி கல்லறை ! என்ன நடக்கிறது கிறிஸ்தவத்தில் ? இத்தகைய பாகுபாடுகளைச் சுமந்து திரிகின்ற கிறிஸ்தவம் தான் இயேசு போதித்ததா ? 

3. ஆண் பெண் சமநிலை கிறிஸ்தவம் நமது. மண்ணில் ஆற்றிய மிகப்பெரிய பணிகளில் ஒன்று ஒடுக்கப்பட்டும், அடுப்படியிலேயே முடக்கப்பட்டும் கிடந்த பெண்களை சமூக வீதியில் கொண்டு வந்தது தான். பெண்களுக்கான கல்வி, பெண்களுக்கான சமூக மரியாதை, பெண்களுக்கான அங்கீகாரம் போன்றவற்றை கொண்டு வந்ததில் கிறிஸ்தவ மிஷனரிகளின் பணிகள் அளவிட முடியாதது. நமது ஊரிலேயே தோள்சீலை போராட்டம் ஆதிக்க மனநிலைக்கு எதிரான மாபெரும் போராட்டம். நமக்கு அடுத்திருக்கும் கேரளாவில் இருந்த சங்கர ஸ்மிருதி போன்ற சட்டங்கள் புலையர், நாயர் போன்ற இனப் பெண்களின் மீது திணிக்கப்பட்ட வன்முறைகள். அவற்றுக்கு எதிரான சமரசமற்ற போரில் கிறிஸ்தவத்தின் பங்கு  கணிசமானது. பெரும்பாலும் பணியாற்ற வருகின்ற மறை பணியாளரின் மனைவியே பெண்களுக்கான வழிகாட்டியாய் இருப்பார்.  இன்றைய திருச்சபைகளின் நிலை என்ன ?  பெண்கள் தங்களுக்கான இருப்பை திருச்சபை அளவில் உறுதி செய்து விட்டார்களா ? இயேசு பெண்களை நேசித்தார், அவர்களை பாகுபாடின்றி முதன்மைப் படுத்தினார். ஆனால் நமது திருச்சபைகளிலும், குடும்பங்களிலும் பெண்களின் மரியாதை எப்படி இருக்கிறது. அன்றைய மிஷனரிகள் நட்டுச் சென்ற நல்ல விதைகள் இன்றைய திருச்சபைக் களத்தில் விளைகிறதா ? சமூகத்தில் பெண்குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் திருச்சபை வீரமாய் போரிடுகிறதா ?
4.  மருத்துவப் பணிஅன்றைய மிஷனரிகளின் மிகப்பெரிய பங்களிப்பும், மிகப்பெரிய சவாலும் மருத்துவப் பணியாகவே இருந்தது. அந்தக் காலகட்டத்தில் சரியான மருத்துவக் கட்டமைப்பு இல்லாத நமது நாட்டில் கொள்ளை நோய்கள் வந்தால் மக்கள் கொத்துக் கொத்தாய் செத்துப் போவது வாடிக்கை. தெய்வ குற்றம் என்றோ இயற்கையின் குற்றம் என்றோ பெயரிட்டு அழைத்து வந்தார்கள்.. அதிலும் மலைவாழ்ப் பகுதிகளில் சாதாரண நோய் வந்தாலே உயிர் பிழைக்க முடியாது எனும் சூழலில், கொடிய நோய்கள் வந்தால் என்ன செய்ய முடியும். காலரா போன்ற நோய்கள் அந்த கால கட்டத்தில் வாரிச் சுருட்டிக் கொண்டு போன உயிர்களின் கணக்கு எக்கச்சக்கம். அத்தகைய சூழலில் பணியாற்ற வந்த மிஷனரிகள் தங்களுடைய வாழ்க்கைத் துணையை, குழந்தைகளை, உடன் பணியாளரை தியாகம் செய்தார்கள். பல நேரங்களில் அவர்களும் பலியானார்கள். ஒதுங்கியிருந்து பேசிக்கொண்டிருக்கவில்லை. அன்னை தெரசாவின் பணியைப் போல பணி செய்த ஆயிரக்கணக்கான மிஷனரிகள் வரலாற்றில் உண்டு. இன்று மருத்துவத் தேவைகள் எப்படி சந்திக்கப்படுகின்றன. கிறிஸ்தவ மருத்துவ நிறுவனங்கள் எப்படிப் பணியாற்றுகின்றன. கிறிஸ்துவை வெளிப்படுத்தும் நிறுவனங்களாக இருக்கின்றனவா ? ஐடா ஸ்கட்டரின் மனதுருக்கம் மருத்துவத் துறையில் இருக்கிறதா ? இல்லை இதுக்கு மத்தவங்க ஹாஸ்பிடலே பெட்டர் என்று சொல்லும் நிலையில் இருக்கின்றனவா ? மறுஆய்வு அவசியமல்லவா ?5 இலக்கியப் பணிகிறிஸ்தவம் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய பணிகளைப் பற்றி நாம் நன்கறிவோம். தமிழின் பெருமையை உலகறியச் செய்ததில் கிறிஸ்தவ மிஷனரிகளின் பங்கு அளப்பரியது. தமிழுக்கான ஒப்பிலக்கணத்தை உருவாக்கியதானாலும் சரி, அச்சுக் கூடம் உருவாக்கியதானாலும் சரி, இலக்கியத்தை பல இடங்களுக்குக் கொண்டு சென்றதானாலும் சரி கிறிஸ்தவ மிஷனரிகள் ஆற்றிய பணி வரலாற்றிலிருந்து அழிந்து விடாது !அன்றைய மக்கள் அறியாத மொழியைக் கற்றுக் கொண்டு அதில் வல்லமை பெற்று இலக்கியப் பணி செய்தார்கள்.இன்றைக்கு நம்முடைய இலக்கியப் பங்களீப்பு எப்படி இருக்கிறது. இயேசுவை எத்தகைய இலக்கியப் படைப்புகள் மூலம் சுமந்து செல்கிறோம் நமது மிஷனரிகள் வரலாற்றில் மட்டும் இடம்பெறாமல் வாழ்விலும் இடம் பெற வேண்டும் அவர்கள் விட்டுச் சென்ற பணியானது, அவர்கள் இட்டுச் சென்ற அடித்தளத்தின் மேல் கட்டியெழுப்பப்பட வேண்டும். அத்தகைய உறுதியை மனதில் எடுப்போம், அன்றைய மிஷனரிகளின் நீட்சியாய் நாம் நிலைப்போம்.*சேவியர்