Posted in Articles, Desopakari

மருத்துவமும், கிறிஸ்தவமும்

*

கிறிஸ்தவர்கள் மருத்துவமனை பக்கமே செல்லக் கூடாது ! அது பாவம் ! என்ன நோயாய் இருந்தாலும் ஆண்டவரே சரி பண்ணுவார் ! என்று ஆணித்தரமாய் நம்பக்கூடிய ஒரு கூட்டத்தினர் கிறிஸ்தவத்தில் உண்டு. அவர்களின் பேச்சை நம்பி அவசர அவசரமாய் ஆயுளை முடித்துக் கொண்டவர்களும் ஏராளம் உண்டு. 

கிறிஸ்தவர்கள் மருத்துவம் பாக்கக் கூடாது என்று சொல்பவர்கள் இரண்டு பேரை அவமானப்படுத்துகிறார்கள். 

ஒன்று, உலகெங்கும் சென்று மருத்துவப் பணி செய்து, நற்செய்தியை அறிவித்த ஆயிரக்கணக்கான இறை ஊழியர்கள். இவர்கள் காடுகள், மலைகள் என சுற்றித் திரிந்து, கொள்ளை நோய்களை நீக்கவும், தொழுநோயாளிகளை பராமரிக்கவும், அடிப்படை சுகாதார வசதிகளை உருவாக்கவும் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் அர்ப்பணித்தவர்கள். அதற்காகவே தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தவர்கள்.

இரண்டாவது, இறைமகன் இயேசு. அவர் தான், ‘மருத்துவர் நோயுற்றவருக்குத் தேவை’ என வெளிப்படையாய் அறிவித்தவர். கிறிஸ்துவைப் பின்பற்றும் மக்கள் கிறிஸ்துவின் போதனைகளையும் பின்பற்ற வேண்டும் என்பது அடிப்படை சித்தாந்தம். மருத்துவத்தை விலக்குபவர்கள் கிறிஸ்துவை விலக்கிய மறையைப் பின்பற்றுபவர்கள். 

மருத்துவத் துறையில் இருப்பவர்கள் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். ஆனால் கிறிஸ்தவர்கள் மருத்துவத் துறையில் இருக்கும் போது கிறிஸ்துவின் மதிப்பீடுகளைத் தூக்கிச் சுமப்பவர்களாக இருக்க வேண்டும். எந்தப் பணி செய்தாலும் அதை இறை பணியாகவே செய்ய வேண்டும் என அறைகூவல் விடுத்த பவுலின் வார்த்தைகளை மனதில் கொள்ள வேண்டும்.

மருத்துவம் இன்றைக்கு வியாபாரமாகிவிட்டது. சவப்பெட்டி செய்பவர் எப்போது பிணம் விழும் என பார்த்துக் கொண்டிருப்பது போல பல மருத்துவர்கள் எப்போது ஒரு நோயாளி வருவார், அவரை அச்சுறுத்தியே லாபம் சம்பாதிக்கலாம் என நினைப்பது உண்டு. ‘எவ்ளோ செலவு செஞ்சு இந்த இடத்துக்கு வந்திருக்கேன், கடனை அடைக்க வேண்டாமா ? நான் சம்பாதிக்க வேண்டாமா ?’ என்றெல்லாம் வெளிப்படையாகவே பேசுகின்ற மருத்துவர்களையும் நாம் தவறாமல் சந்திக்கிறோம். 

உலகம் எப்படிச் சென்றாலும் சரி, மருத்துவம் என்பது குருத்துவம் போல மிக முக்கியமான பணி என்பதை நாம் மனதில் நிறுத்த வேண்டும். 

ஒன்று ஒருவரை நிலைவாழ்வுக்குள் அழைத்துச் செல்கிறது என்றால், இன்னொன்று ஒருவரை சுக வாழ்வுக்குள் அழைத்து வருகிறது. இரண்டுமே மரணக் கட்டுகளிலிருந்து நம்மை விடுவிக்கும் பணிகளே. இரண்டையும் புனிதமாய் நினைத்துச் செய்ய வேண்டும். 

‘அவரு கிறிஸ்டியன் டாக்டர், நியாயமா இருப்பாரு’ என்று சொல்வதே இறைவனை மகிமைப்படுத்தும் நற்செய்திப் பணியாகும். இதைத் தான் இயேசு, ‘உங்கள் செயல்களின் மூலமாக பிதா மகிமைப்படவேண்டும் ‘ என்றார். கிறிஸ்தவப் பெயர்களிலோ, கிறிஸ்தவ அடையாள அட்டையிலோ, கிறிஸ்தவப் படங்களை தாங்குவதிலோ அல்ல இயேசு மகிமைப்படுவது ! இயேசுவை வெளிப்படுத்தும் செயல்களில் தான் இயேசு மகிமைப்படுகிறார். 

மருத்துவப் பணி இன்றைக்கு தன் மகத்துவம் இழந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் நாம் என்ன செய்யவேண்டும் ? எதை நினைவில் கொள்ள வேண்டும்.

  1. போதனைகளின் பாதையில் பயணித்தல்

மருத்துவர்களுக்கு எதிராக நிற்கக் கூடிய மிகப்பெரிய சவால், இறைவனின் போதனைகளா ? இல்லை நோயாளிகளின் விருப்பமா எனும் கேள்வி தான். உதாரணமாக உயிர்கள் இறைவனிடமிருந்து வருகின்றன என்பது நமது கிறிஸ்தவப் போதனை. உயிர்களைக் கொல்வது பாவம் என்பது நமது நம்பிக்கை.  ஆனாலும் உலகமெங்கும் கருக்கலைப்புகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அவற்றைச் செய்யும் கிறிஸ்தவ மருத்துவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள் ! கடவுளின் கட்டளையா ? மனிதனின் விருப்பமா ? எது நம் தேர்வு ?

ஒருவர் முழுக்க முழுக்க படுக்கையில் கிடக்கிறார். வலியோடு இருக்கிறார். அவருக்கு ஒரு நிம்மதியான மரணம் மட்டுமே தேவையாய் இருக்கிறது ! ஒரு கருணைக் கொலையே அவருக்குத் தேவையாகிறது. அவரைச் சார்ந்தவர்களும் அவருக்கு ஒரு நிம்மதியான மரணம் வேண்டுமென நினைக்கிறார்கள். எனில் எது நியாயம் ? கடவுளின் கட்டளையா ? மனிதனின் விருப்பமா ?

  1. மூடநம்பிக்கைகளை புறந்தள்ளுதல்

மருத்துவம் தேவையில்லை என்பவர்கள் இறைவனைப் பற்றிய அறிவும், விவிலியத்தைப் பற்றிய அறிவும் இல்லாதவர்கள். மோசே கொடுத்த கட்டளைகளில் எத்தனை கட்டளைகள் மருத்துவம் சார்ந்து இருக்கின்றன என்பதைப் பற்றி ஒரு நூலே எழுதலாம். உண்ணக்கூடாது என கடவுளால் விலக்கப்பட்ட விலங்குகள், மருத்துவ ரீதியாக உடலுக்கு ஆபத்தானவை என்பதை சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு தான் மருத்துவமே புரிந்து கொண்டது. 

மருந்து எடுத்துக் கொள்வது மூடத்தனமல்ல, மருத்து எடுத்துக் கொள்ளாமல் இருப்பதே மூடத்தனம். எந்த மருந்தை நாம் எடுத்துக் கொண்டாலும், சுகமளிப்பவர் இயேசுவே என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் நாம் எடுக்கின்ற மருந்துகளின் வழியாகவே நமக்கு நலமளிக்கிறார். மண்ணையே மருந்தாய்ப் பயன்படுத்தியவர் இயேசு. மருத்துவர் லூக்காவைக் கொண்டு நற்செய்தியையும், வரலாற்றையும் எழுத வைத்தவர் இறைவன். எனவே ஆன்மிகத்தில் மூடநம்பிக்கைகளைப் புறந்தள்ளுவோம்.

  1. புதிய மருத்துவக் கட்டமைப்புகள் உருவாக்குதல்.

வரலாறுகளைப் புரட்டிப் புரட்டியே நிறைவடையும் மனநிலை நமக்கு உண்டு. அதனால் தான் மெடிக்கல் மிஷனரிகளின் வரலாறுகளைப் பேசிப் பேசி நாம் புளகாங்கிதம் அடைந்து விடுகிறோம். அந்த ஹாஸ்பிடலோட வரலாறு தெரியுமா ? இந்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கியது யார் தெரியுமா ? இந்தியால எத்தனை கிறிஸ்தவ மிஷனரி ஹாஸ்பிடல்ஸ் இருக்கிறது தெரியுமா ? என்றெல்லாம் பட்டியலிட்டு நாம் ஆனந்தமடைகிறோம். 

இரண்டு கேள்விகளை நாம் நமக்குள் எழுப்ப வேண்டும். ஒன்று, கிறிஸ்தவ மருத்துவமனைகள், நிறுவனங்கள் கிறிஸ்துவைப் பிரதிபலிக்கிறதா ? அல்லது உலக மருத்துவமனைகளைப் போல இயங்குகின்றதா ?

இரண்டு, கடந்த பத்து ஆண்டுகளில் நாம் உருவாக்கிய மருத்துவக் கட்டமைப்புகள் எத்தனை. ஒன்றுமில்லாத காலத்தில் தன் சொத்துகளை விற்று மருத்துவமனைகளை உருவாக்கினார்கள் மிஷனரிகள். இன்று எல்லாம் பெற்ற நாம் உருவாக்கியது என்ன ?

4 நமது செயல்களை சரிபார்த்தல்.

மருத்துவர்கள் அன்பு நிறைந்தவர்களுக்காகவும், சமாதானமும் பொறுமையும் நிறைந்தவர்களாகவும், கனிவு உடையவர்களாகவும், உண்மையுள்ளவர்களாகவும், ஒழுக்கம் உடையவர்களாகவும் ஒவ்வொரு மனிதரிலும் இறைவனைக் காண்பவராகவும் இருக்க வேண்டும். நோயாளிகள் நலமடைய மருந்தைப் போலவே அவர்களுடைய தன்னம்பிக்கையும், பாசிடிவ் சிந்தனையும் முக்கியம் என்கிறது உளவியல். அப்படிப்பட்ட மனநிலையை உருவாக்க மருத்துவர்கள் பரிவு உடையவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.

இயேசு தான் சந்தித்த நோயாளிகளிடம் முதலில் வெளிப்படுத்தியது கனிவைத் தான். மனதுருக்கம் இல்லாமல் எந்த புதுமையையும் இயேசு செய்யவில்லை. மருத்துவர்கள் தங்களுடைய அத்தனை முதன்மைகளையும் விட, நோயாளிகளின் நலனை முன்னிறுத்தி செயலாற்ற வேண்டும். இயேசு பிறருக்காக வாழ்ந்தது போல, மருத்துவப் பணியாளர்களும் அப்படியே செய்ய வேண்டியது அவசியம். 

  1. சரியான வழிகாட்டுதல்.

மருத்துவர்கள் சமூகத்திற்கு ஏராளம் பணியாற்ற முடியும். குறிப்பாக குழப்பத்தில் தவிக்கும் மக்களுக்கு சிறப்பான வழிகாட்டுதல் நல்க முடியும். யார் சொல்றது உண்மை என்பதே தெரியாமல் குழம்புகின்ற சூழலே இன்றைக்கு எல்லா இடங்களிலும் இருக்கிறது. சுயநலமா பேசறாங்களா ? உண்மையான அக்கறையோட பேசறாங்களா என்பதே தெரியாததால் தான் செகண்ட் ஒப்பீனியன், தேர்ட் ஒப்பீனியன் என உலகம் ஓடிக் கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு இணைய உலகம் மக்களை குழப்போ குழப்பென குழப்பிக் கொண்டிருக்கிறது.

நல்ல மருத்துவ வழிகாட்டல், நல்ல மருத்துவ ஆலோசனைகள், குறைந்த செலவிலான மருத்துவம் போன்றவற்றின் மூலமாக உண்மையிலேயே மிகப்பெரிய இறைப் பணியை கிறிஸ்தவ மருத்துவர்கள் ஆற்ற முடியும். மருத்துவம் என்பது ஒரு மகத்தான பணி, அதை நற்செய்திப் பணியாய் மாற்றுவதும் – வாய்ப்பை நழுவ விடுவதும் நம்கையில் தான் இருக்கிறது

*

சேவியர்

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s