
ஒளியாய் இரு, ஒளியாதிரு
*
இயேசுவின் போதனைகள் பெரும்பாலும் சாதாரண மக்கள் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எளிமையாக இருக்கும். ஒரு முறை அவர் சொன்னார்,
நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். யாரும் விளக்கைக் கொளுத்தி மரக்காலின் கீழ் ஒளித்து வைக்க மாட்டார்கள். மாறாக வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரவேண்டுமென அதை விளக்குத் தண்டின் மீது தான் வைப்பார்கள். இவ்வாறு, உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிரட்டும். அப்போது உங்கள் நற்செயல்களைக் கண்டு மக்கள் உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். என்றார்.
ஒரு பையன் நல்லவனாக இருந்தால், நல்ல செயல்களைச் செய்தால், ‘இவனை நல்லா வளத்திருக்காங்க. வளத்தவங்களைப் பாராட்டணும். ‘ என்பார்கள். ஒரு பையனுடைய செயல் தான் அவனுடைய பெற்றோருக்கு புகழைக் கொண்டு வருகிறது. அவன் தறுதலையாக வளர்ந்தால், ‘பெத்து வளத்திருக்காங்க பாரு..’ என நேரடி சாபத்தை பெற்றோரை நோக்கித் தான் வீசுவார்கள்.
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் என்கிறது திருக்குறள். ஒரு மகனை ஈன்ற பொழுது அன்னை சொல்லொண்ணா மகிழ்வை அடைகிறாள். அது தான் அவள் அன்னையான கணம். அது தான் அவள் ஒரு உயிரை உலகிற்கு அளிக்கின்ற கணம். அந்த மகிழ்வை விட அவள் அதிகம் ஆனந்தம் அடைவது அந்த மகன் சான்றோன் என மக்கள் கூறும் போது தான் என்கிறது அந்தக் குறள்.
அப்படித் தான் கடவுளும். அவர எப்போது மகிழ்கிறார் என்றால், நமது நல்ல செயல்களைப் பார்த்து மக்கள் ,’அட.. இவன் கும்பிடற தெய்வம் சூப்பர்பா… ‘ என கடவுளைப் புகழும் போது தான். சும்மா வாயால், ‘கடவுளே உம்மைப் புகழ்கிறேன், கடவுளே உம்மைப் புகழ்கிறேன்’ என சொல்லிக் கொண்டிருப்பதால் உண்மையில் கடவுள் மகிழ்ச்சி அடைவதே இல்லை. நமது செயல்களைப் பார்த்து வியக்கும் பிற மக்கள், அதற்காக கடவுளைப் புகழும் போது தான் அவர் உண்மையான மகிழ்ச்சியை அடைகிறார்.
நாம் விளக்காக இருக்க வேண்டும். விளக்கின் பணி இருளை அகற்றுவது தான். இருள் என்பது மனிதர்களைச் சூழ்ந்திருக்கும் கவலைகள் எனலாம். அந்த கவலை இருளை, இயலாமையின் இருளை, தேவையின் இருளை நமது வெளிச்சம் துடைத்தெறிய வேண்டும்.
என்னிடம் இருக்கின்ற பணமோ, கலையோ, நேரமோ ஏதோ ஒன்று வெளிச்சமாய் இருக்கிறது. அதை நான் ஒளித்து வைக்கும் போது பயனற்றவனாய்ப் போகிறேன். பிறர் முன்னால் ஒளிரும் போது தான் பயன் கொடுக்கிறேன்.
ஒளியாய் இருப்போம், ஒளியாதிருப்போம். மனிதத்தால் இறைவனை மகிமைப்படுத்துவோம்
*
ஒளியாய் இரு ஒளியாதிரு சூப்பர்
LikeLike