அதிசயக் குழந்தை
*

பிள்ளைத்தோப்பு !
இராஜாக்கமங்கலம் அருகே உள்ள ஒரு சிறு கிராமம். அங்குள்ள சூசையப்பர் ஆலயத்தில் உபதேசியராக இருந்த அந்தோணி நள்ளிரவில் திடுக்கிட்டு விழித்தார். முகமெங்கும் திட்டுத் திட்டாய் வியர்வை.
இயேசுவின் தந்தை யோசேப்புவைக் கனவில் கண்ட பதட்டமும், பரவசமும், பயமும் அவரது முகத்தில் அப்பியிருந்தது. மீண்டும் ஒரு முறை யோசேப்பு கனவில் சொன்னதை மனதில் ஓட்டினார்.
‘நீ இராமன் புதூர் போ, அங்குள்ள பெண்ணிடம் உனக்கு ஒரு குழந்தைச் செல்வம் கிடைக்கும் எனச் சொல்’ ! இது தான் செய்தி !
இராமன் புதூர் எங்கே இருக்கு ? எந்தப் பெண்ணிடம் போய் சொல்ல வேண்டும் ? குழந்தைச் செல்வத்திற்காக அவள் ஏங்கிக் கொண்டிருக்கிறாளா ? அவருக்கு ஏகப்பட்ட குழப்பம். உண்மையிலேயே கனவா ? இல்லை வெறும் நினைப்பா ? கடவுளே பேசுகிறாரா ? இல்லை என் ஆழ்மன வெளிப்பாடா ?
அருகில் ஆழ்ந்த உறக்கத்தில் நிம்மதியாய்க் கிடந்த மனைவியை உலுக்கினார் அந்தோணி
‘என்னங்க என்னாச்சு ?” அவர் பதட்டத்துடன் எழுந்தார்.
‘ஒரு கனவு கண்டேன். அதுல சூசையப்பர் வந்து இராமன் புதூர்ல ஒரு பெண் கிட்டே போய் ஒரு செய்தி சொல்லச் சொன்னாரு’
‘ஓ… கடவுளே ! என்ன ஆச்சரியம்… அப்போ கண்டிப்பா போய் சொல்லுங்க’
‘ஆனா யார்கிட்டே… ? எப்படி ? எனக்கு இடம் கூட தெரியாதே ?’
‘செய்தி சொன்னவர் வழிகாட்டுவாரு.. இப்போ தூங்குங்க’ என்றபடி மனைவி மீண்டும் தூக்கத்துக்குத் தாவினார். மனைவியின் பேச்சு அவருக்கு ஆறுதலாய் இருந்தது. வேலை தந்தவர் வழியும் காட்டுவார். ஆனால் உண்மையிலேயே கடவுள் தான் பேசியதா ? இல்லை ஏதாச்சும் பிரமையா ? மறுபடியும் கடவுள் பேசுவாரா ? எனும் சிந்தனைகளோடு மீண்டும் தூங்கினார் அந்தோணி.
அதிகாலை ஐந்து மணி.
‘அந்தோணி.. அந்தோணி.. எழும்பு… இன்னிக்கு சண்டே… கோயிலுக்கு போய் மணி அடிச்சுட்டு… சீக்கிரம் போய் விஷயத்தைச் சொல்லு. “ மீண்டும் கனவு அவருக்குள் எழும்ப சட்டென விழித்தார் அவர். இப்போது அவருக்கு நம்பிக்கை வந்து விட்டது. பேசியது கடவுள் தான். ஏதோ ஒரு பெண்ணுக்கு இந்த செய்தி மிக முக்கியமாய் இருக்கிறது என்பது அவருக்குப் புரிந்தது.
உடனடியாக எழுந்து, குளித்து ஆலயத்தில் மணி அடித்து விட்டு செபித்தார். அங்கிருந்து ரோட்டுக்கு வரவும் சொல்லி வைத்தாற்போல ஒரு பேருந்து வந்து நிற்கிறது.
நாகர்கோவில் – நெற்றிப் பொட்டில் மங்கிய வெளிச்சத்தில் பெயர்ப்பலகை.
‘கண்டக்டரே இந்த பஸ்ஸு.. இராமன் புதூர் போவுமா ?’
‘வாரும்…வாரும்..போவும்…’
உள்ளே ஏறிய அந்தோணி மீண்டும் கண்டக்டரிடம் சொன்னார். ‘இராமன் புதூர் வந்ததும் கொஞ்சம் சொல்லுங்க. எனக்கு இடம் தெரியாது.. இதான் முதல் தடவை’
சரி சொல்றேன்…
அந்தோணி சன்னலோரமாகச் சாய்ந்து தனது கனவை நினைத்துக் கொண்டிருந்தார்.
*
அதே நேரத்தில் இராமன் புதூரில் அந்தக் குடும்பம் துயரத்தின் கரையில் ஒதுங்கிக் கிடந்தது. அந்த வீட்டின் முன்னால் இருந்த திண்ணையில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தார் அந்தப் பெண்
மரியேந்திரம்.
மரியேந்திரத்தின் கணவர் குருசு மிக்கேல் இராயப்பன்.
இராயப்பனின் வாழ்க்கை சூறாவளியில் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடந்தது. அவருக்கு முதலில் ஒரு திருமணமாகி ஆனந்தமான வாழ்க்கையைத் தொடங்கினார்.
ஒரு குழந்தை பிறந்தது. அவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அதை கொஞ்சோ கொஞ்சென கொஞ்சி மகிழ்ந்தார்கள்.
விதி விளையாடியது. பால்ய வயதாக இருக்கும்போதே அந்தக் குழந்தை இறந்து போனது. அவர்கள் அதிர்ச்சியின் உச்சியில் எறியப்பட்டார்கள். இதுவே துயரத்தின் உச்சம் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அதுவே துயரத்தின் துவக்கப் புள்ளி என்பதை அவர்கள் அறியவில்லை.
அதன் பின் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் ஒவ்வொன்றாய் இறக்கத் தொடங்கின.
இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு. ஏழு, எட்டு , ஒன்பது !!!!
ஒன்பது குழந்தைகளும் பிறந்து சில நாட்களிலோ, சில மாதங்களிலோ இறந்து விட, அதிர்ச்சியைத் தாங்க முடியாத மனைவியும் இறந்து போனார்.
வாழ்க்கையில் கஷ்டம் வரலாம், ஆனால் கஷ்டமே வாழ்க்கையாய் வரக்கூடாது என்பார்கள் இல்லையா ? அது இராயப்பனுக்குத் தான் பொருந்தும். அவர் பித்துப் பிடித்தவர் போல் ஆனார். சித்தம் கலங்கியவர் குடிப் பழக்கத்திலும் விழுந்தார்.
நாகர்கோவில் பகுதியில் அவருக்கு நிறைய சொத்துகள் இருந்தன, ஒவ்வொன்றாய் விற்றுக் குடித்தார்.
உறவினர்கள் அவரை நல்வழிப்படுத்த இரண்டாவதாய் ஒரு பெண்ணை மணம் முடித்து வைத்தார்கள். அவர் தான் மரியேந்திரம்.
‘அவனுக்க குடும்பத்துலயா ? அங்கே வாரிசு நிலைக்காதுலே’ என பலரும் தடுத்தார்கள். ஆனால் மரியேந்திரத்தின் ஏழ்மை நிலை அவரைத் திருமணத்தில் இணைய வைத்தது.
இனிமேலாவது இனிய வாழ்க்கை தொடங்குமா எனும் எதிர்பார்ப்போடு வாழ்க்கையை ஆரம்பித்தவர்களுக்கு சோதனைகளின் இடி தொடர்ந்து விழுந்தது.
முதலில் பிறந்த குழந்தை இறந்தே பிறந்தது. மரியேந்திரம் அதிர்ந்தார். ஆனாலும் மனசைத் தேற்றிக் கொண்டு இறைவனின் பாதத்தில் அழுது புலம்பினார். கடவுள் பக்தி அதிகம் இருந்த அவருக்கு, சின்ன வயதிலேயே சூசையப்பர் மேல் அன்பு அதிகமாகவே இருந்தது.
இரண்டாவது குழந்தை பிறந்தது. இறந்தது !!
மூன்றாவது குழந்தை பிறந்தது !!! குப்புறப் படுத்தது
தவழ்ந்தது
நடந்தது !
அப்பாடா.. இனிமேல் பிரச்சினை இல்லை என நினைத்துக் கொண்டிருந்தவர் வாழ்க்கையில் இரண்டாவது வயதில் குழந்தைக்கு நோய் வந்தது. என்ன நோய் என்றே மருத்துவர்களால் கண்டு பிடிக்க முடியாத நோய்.
இராஜாக்கமங்கலத்தில் மருந்து வாங்கி, அருகிலேயே இருந்த அந்தோணியார் கோயிலில் இரவும் பகலும் குழந்தையைக் கிடத்தி பிரார்த்தித்துக் கொண்டிருந்தார் மரியேந்திரம்.
எல்லா பிரார்த்தனைகளும் ஆமென் என முடியும், ஆனால் ஆம் என முடிவதில்லை. அந்தக் குழந்தையும் இறந்து போனது.
மரியேந்திரம் அதிர்ச்சியின் உச்சியிலும், துயரத்தின் உச்சியிலும் விழுந்தார். இராயப்பனின் நிலமை இன்னும் மோசம். தொடர்ந்து பன்னிரண்டு குழந்தைகளைப் பறிகொடுத்த மாபெரும் துயரத்தில் அவர் துடியாய்த் துடித்தார். அவருக்கு வயது அறுபது ஆயிருந்தது.
இனிமேல் ஆலயத்துக்குப் போவதில்லை என முடிவெடுத்து, தூணில் சாய்ந்தபடி அழுது கொண்டிருந்தார் மரியேந்திரம்
*
இராமன் புதூர் வந்துச்சு இறங்கு.. மனசுக்குள் ஒரு குரல் ஒலிக்க, திரும்பி கண்டெக்டரைப் பார்த்த அந்தோணி கேட்டார்.
‘கண்டக்டரே ஊரு நெருங்கிடுச்சா’
‘அட.. ஆமாங்க.. மறந்துட்டேன்.. அடுத்த ஸ்டாப்பு தான் நீங்க இறங்கணும்’ கண்டக்டர் சொல்ல அந்தோணி புன்னகைத்தார்.
கீழே இறங்கிய அந்தோணிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அருகில் இருந்த டீக்கடையில் ஒரு டீ வாங்கினார். டீயைக் குடித்துக் கொண்டே கடைக்காரரைப் பார்த்தார். என்ன கேட்பது எப்படிக் கேட்பதென தெரியவில்லை.
‘என்ன ஓய்.. ஏதோ கேக்க நினைக்கிறீரு.. என்ன விஷயம் ?’ கடைக்காரரே கேட்டார்.
“இல்ல.. நான் இராஜாக்கமங்கலத்துல இருந்து வரேன்.. இங்கே குழந்தையில்லாத ஒரு பெண்ணை பாக்கணும் ?”
குழந்தை இல்லாம ஒரு பொண்ணா இருப்பாங்க ஊர்ல, எத்தனையோ பேர் இருப்பாங்க. நீங்க யாரை தேடறீங்க ? அப்படி ஒரு பதிலைத்தான் அந்தோணி எதிர்பார்த்தார். ஆனால் கடைக்காரரோ
‘அதோ தெரியுதுல்ல.. அந்த வீடு தான். அங்கே ஒரு பொண்ணு அழுதிட்டிருப்பா.. போய் பாருங்க’ என்றபடி அடுத்தவர்களுக்கு டீ போட ஆரம்பித்தார். அந்தோணியின் வியப்பு அதிகரித்தது.
அந்த வீட்டை நோக்கி நடந்தார்.. வீட்டை நெருங்கினார்.
திண்ணையிலிருந்த தூணில் சாய்ந்தபடி இருந்தார் மரியேந்திரம். கண்கள் கலங்கியிருந்தன.
‘அம்மா…. அம்மா’
‘சொல்லுங்க…. நீங்க’ மரியேந்திரம் திரும்பினார்.
‘உங்களுக்கு ஒரு குழந்தை கிடைக்கும்மா… ‘
“ம்ம்.. குழந்தையா ? எனக்கு ஆறுதல் சொல்றீங்களா ? துக்கம் விசாரிக்கிறீங்களா ?”
“இல்லை எனக்கு நீங்க யாருன்னே தெரியாது. இராஜாக்கமங்கலத்துல இருந்து வரேன். சூசையப்பர் உங்க கிட்டே சொல்ல சொன்னாரு”
சூசையப்பர் எனும் பெயரைக் கேட்டதும் நிமிர்ந்தார் மரியேந்திரம். கண்ணில் இருந்த கலக்கம் தீரவில்லை ஆனாலும் ஒரு நம்பிக்கை ஒளி
‘எ..என்ன சொன்னாரு’
‘உங்களுக்கு ஒரு குழந்தை கிடைக்கும்ன்னு சொல்ல சொன்னாரு’
மரியேந்திரம் கண்ணீர் விட்டார். தனது கதையை அழுதபடி சொல்லி முடித்தார்.
‘அழாதீங்கம்மா.. கடவுள் ஒரு குழந்தையை தருவேன்னு சொன்னா, தீர்க்க ஆயுசோட தான் தருவாரு.. கவலைப்படாதீங்க. இப்போ நீங்க சர்ச்சுக்கு போங்க, இன்னிக்கு சண்டே’
‘ம்ம்.. நான் இனிமே என் குழந்தையோட தான் சர்ச்சுக்கு போவேன். அப்படி தான் கடவுள் கிட்டே சொல்லியிருக்கேன். வலியும், இயலாமையும், எதிர்பார்ப்பும் எல்லாம் சுழன்றடிக்க மரியேந்திரம் சொன்னார்”
‘சரிம்மா.. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். கண்டிப்பா நீங்க மகிழ்ச்சியா இருப்பீங்க’ என வாழ்த்தியபடி அந்தோணி கிளம்பினார்.
*
நாட்கள் நகர்ந்தன. மரியேந்திரம் மீண்டும் தாய்மை நிலையில் வந்தார். இந்த முறை அவருக்கு அதிக நம்பிக்கை இருந்தது. இது கடவுளின் பிள்ளை எனும் விசுவாசம் கருவுடன் சேர்ந்து வளர்ந்தது.
குழந்தை பிறந்தது, பெண் குழந்தை !
ஆனால் குழந்தை அழவும் இல்லை, நகரவும் இல்லை. உயிர் மட்டும் இருந்தது.
கடவுள் தந்ததும் கடந்து போகுமோ என எல்லோரும் திகைத்தார்கள். இது கண்டிப்பா பொழைக்காது என்றார்கள் ஊரார். இந்த குடும்பத்துல வாரிசு தங்காது, சர்ப்ப தோஷம் உண்டு என்றார்கள் வேடிக்கை பார்த்தவர்கள்.
அப்போது அங்கே வந்தார் ஒரு வைத்தியர். இந்த குழந்தைக்கு நான் மருந்து தருகிறேன் என்றார். வெள்ளை குஞ்ஞுமுத்தை அரைத்து சாறாக்கி, அதை வடிகட்டி குழந்தைக்குக் கொடுத்தார்.
உண்மையில் அது விஷம் ! அதுவே மருந்து என அந்த வைத்தியர் நம்பினார். மூன்று நாட்கள் தொடர்ந்து அந்த மருந்தைக் கொடுத்தபின் அந்தக் குழந்தை அழுதது !
தாயும் தந்தையும் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.
யோசேப்பு சொல்லியனுப்பி, அந்தோணி வந்து தகவல் சொன்ன, அந்தக் குழந்தைக்கு மேரி புஷ்பம் என பெயரிட்டனர். குழந்தை பிறந்தபோது இராயப்பன் அறுபது வயதைக் கடந்திருந்தார். எனவே எல்லோரும் அந்தக் குழந்தையை ‘கிழவனுக்கு மவ’ என்று அழைக்கத் தொடங்கினார்கள். அவருக்கு அவள் பதின்மூன்றாவது குழந்தை. மரியேந்திரத்திற்கு நான்காவது குழந்தை.
நல்ல ஆயுளுடனும், இறை பக்தியுடனும் வாழும் அந்தக் குழந்தைக்கு இன்று வயது எண்பத்து ஒன்று !
அவர் தான் எங்கள் அம்மா !
*
சேவியர்.