துருப்பிடிக்காத
நெருப்பு எழுத்துகள்
ஆசிரியர் : பேராயர் ஜோசப் மோகன் குமார்

கவிஞரின் கவிதைத் தலைப்பு ஒன்றையே என் விமர்சனத்தின் தலைப்பாக வைக்கிறேன். இல்லை இல்லை, இது விமர்சனம் அல்ல பரவசத்தின் பதிவு. ஒரு கவிதை ஆழியில் மூழ்கி, கவிதைக் கலங்கரையால் கரையேறிய அனுபவத்தின் குறிப்பு.
பேராயர் சிலுவைச் சித்தர் கவிஞர் ஜோசப் மோகன் குமார் அவர்களின் ‘தச்சனின் கதை’ என்னை செதுக்கியது. அவரது படைப்புகளில் மிக உயர்ந்த இடத்தில் இது வந்து அமர்கிறது.
கவிஞரின் தச்சனின் கதை மின் நூலாக வந்த போது படிக்க முடியவில்லை. எனவே அச்சுப் பதிப்பாக வந்ததும் அவசர அவசரமாய் வாங்கிப் படிக்கத் தொடங்கினேன். வியப்பின் எல்லைக்கே என்னை எறிந்தன கவிதைகள். பொதுவாக எந்த கவிதைப் புத்தகமானாலும் ஒரு சில நாட்களில் படித்து முடித்து விடுவேன். ஆனால் தச்சனின் கதையை அப்படிக் கடக்க முடியவில்லை.
ஒரு தச்சன் எப்படி ஒரு பொருளை இழைத்து இழைத்து கொஞ்சம் கூட துருக்கள் இல்லாமல், குறை இல்லாமல் செதுக்குவானோ அந்த அளவுக்கு மிக மிக அற்புதமாக நூலைத் தமிழால் செதுக்கியிருக்கிறார் கவிஞர். இந்த நூலிலுள்ள கவிதைகளின் தலைப்புகளை மட்டும் எடுத்தாலே ஒரு மிகப்பெரிய கவிதைப் புதையலாய் அது அமைந்துவிடும்.
விமர்சனம் எழுதும் போது குறிப்பிடவேண்டுமென காகிதத்துக்கே வலிக்காத வகையில் மென் பென்சிலால் கோடிட்டுக் கொண்டே வந்தேன். கடைசியில் பார்த்தால், கோடிடாத வரிகளைக் கண்டுபிடிப்பதே அபூர்வமாகிப் போயிற்று அப்படி ஒவ்வொரு கவிதையும் என்னைப் புரட்டிப் போட்டன.
வானத்தைக் கிழித்த வக்கிர வல்லூறுகள், தைலம் பூசிய தாமரை மலர், வானத்திலிருந்து விழுது விட்ட வசனங்கள், வெளிநடப்பு செய்யும் வியாதிகள், வானக் கஜானாவின் வற்றாத பொக்கிஷம், மண்ணுக்குள் புதைக்கப்பட்ட மழைவானம் என இவர் தேர்ந்தெடுத்திருக்கின்ற தலைப்புகளே தலைவன் புகழை உரக்கச் சொல்கின்றன.
நிர்மலா சுரேஷின் தைலச் சிமிழும் தச்சன் மகனும், தந்தை வின்செண்ட் சின்னதுரை அவர்களின் படைப்பு, கவியரசரின் இயேசு காவியம், இயேசு மாகாவியம், என எனக்குத் தெரிந்து தமிழில் வெளியான அத்தனை ‘இயேசுவின் வாழ்க்கை’ கவிதை நூல்களையும் படித்திருக்கிறேன். நானும் இயேசுவின் கதை : ஒரு புதுக்கவிதைக் காவியம் என்றொரு நூலையும் எழுதியிருக்கிறேன். எல்லா நூல்களையும் விட மேலானதாக நான் ‘தச்சனின் கதை’ எனும் நூலை தைரியமாகச் சொல்லுவேன்.
முதலாவதாக, படைப்பாளியே பேராயராகவும் இருப்பதால் அவருடைய வரிகள் ஒவ்வொன்றிலும் ஆன்மிக அழுத்தம் இருக்கிறது. படைப்பாளியே சிவப்புச் சித்தாந்த வாதியாய் இருப்பதால் இயேசுவின் வாழ்க்கையிலுள்ள மனிதநேயக் கூறுகளை கவனமாய்ப் பதிவு செய்ய முடிகிறது. படைப்பாளி சிறந்த கவிஞனாய் இருப்பதால் தனது இலக்கியச் செழுமையை இறக்கி வைக்க முடிந்திருக்கிறது.
இந்த நூலின் எந்த ஒரு பக்கத்தைப் புரட்டினாலும் அதில் குறைந்த பட்சம் ஐந்து அற்புத வரிகளைக் காண முடியும் என்பது இந்த நூலில் மட்டுமே காணக் கிடைக்கும் வியப்பு. இந்த நூலிலுள்ள கவிதைகளிலிருந்து ஹைக்கூக்களை தனியே பிரித்தெடுத்தால் ஒரு தனி நூலே போடலாம். நூல் முழுக்க கவிஞர் உவமைகளை கையாண்டிருக்கும் விதம் சிலிர்ப்பூட்டுகிறது.
வைரமுத்து தனது படைப்பில் ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் இடையே ஒரு வியப்பை ஒளித்து வைப்பார், அல்லது எதிர்பாரா முரணை முடிந்து வைப்பார், அல்லது சிந்திக்காத ஒரு தளத்திலிருந்து ஒரு உவமையை எடுத்து வைப்பார். பேராயரின் கவிதைகளும் அப்படியே பயணிக்கின்றன, கூடவே அவர் எடுத்து வைப்பவை எல்லாம் ஆன்மிகத்தோடு தொடர்புடையவையாய் இருக்கின்றன என்பது கூடுதல் அழகு.
செங்கோலை லத்தியாக்கிய ஏரோது – என யாரால் சிந்திக்க முடியும் ? தாசிகளின் கரங்களில் தாயக்கட்டையான ஏரோது – என ஒருவனுடைய அத்தனை குணாதிசயங்களையும் எப்படி ஒற்றை வரிக்குள் அடக்க முடியும் ? கவிஞரின் கவிதை வரிகள் ஆழியை எடுத்து சிப்பிக்குள் சிறைவைக்கின்றன. புயலைப் பிடித்து வரப்புக்குள் இறுக்கி வைக்கின்றன.
தாசியின் தைல அபிஷேகம் என்னை நீண்ட நேரம் மீள் வாசிப்புக்கு உட்படுத்திய கவிதைகளில் ஒன்று. பிறர் பசிக்கு பிய்க்கப்படும் ரொட்டித் துண்டு – என அவளை கவிஞர் காட்சிப்படுத்துகிறார். இளமையை விற்ற இருட்டு மின்மினி என அவளது இயலாமையைப் பதிவு செய்கிறார். அவளது கண்ணீர் நதியின் கால்களை நனைத்தது என தொடர்கிறார். கடைசியில் கசங்கிய காகிதமாய் விழுந்து வெள்ளை மல்லிகையாய் எழுந்தாள் என முடிக்கிறார்.
முத்தின் முதுகில் நத்தை என்று சிலுவை சுமக்கும் இயேசுவையும், இரவில் பாடம் பயின்று பகலை அடக்கம் செய்ய வந்தவர் என நிக்கோதேமுவையும் என ஒவ்வொருவரையும் அவரவர் இயல்புகளோடு மிக மிக உன்னதமான வார்த்தைகளால் சரளமாக அலங்கரிக்கிறார் கவிஞர். உண்மையிலேயே எனக்குப் பிடித்த வரிகள் என எழுத ஆரம்பித்தால் ஒரு தனி நூலே போடவேண்டியிருக்கும்.
எனது பட்டியலில், இயேசுவின் வாழ்க்கை வரலாறு நூல்களில் இன்றும் நம்பர் 1 இடத்தில் வைக்கும் நூல் ‘புட்லர் ஆஸ்லான் எழுதிய த கிரேட்டஸ்ட் ஸ்டோரி எவர் டோல்ட்’ நூல் தான். தமிழ்க் கவிதைகளில் இனிமேல் எனது பட்டியலில் நம்பர் 1 தச்சன் மகன் தான்.
எழுந்து நின்று கை தட்டுவதை விட ஒரு ரசிகனாக இந்த நூலுக்கு நான் மரியாதை செய்து விட முடியாது. அற்புத படைப்புக்காய் தலை வணங்குகிறேன். கிறிஸ்தவ இலக்கிய உலகில் எல்லோரும் படித்திருக்க வேண்டிய எல்லோருடைய வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு நூலாக நான் இதைக் கருதுகிறேன்.
வாசியுங்கள்
நேசியுங்கள்
அன்புடன்
சேவியர்