Posted in Articles

ஆசிரியர் தின வாழ்த்துகள்

ஆசிரியர் தின வாழ்த்துகள்
+

இந்த
ஆசிரியர்கள் மட்டும்
இல்லையென்றால்,
அறிவின் ஒரு பாகம்
அறியப்படாமலேயே போயிருக்கும்.

ஆசிரியர்கள் மட்டும்
இல்லையென்றால்,
அகரத்தின் முதற்புள்ளி
அறிவிக்கப்படாமலேயே போயிருக்கும்.

ஆசிரியர்கள் மட்டும்
இல்லையென்றால்
இதயத்தின் ஒரு பாதி
இருட்டாகவே இருந்திருக்கும்.

இவர்கள்,
நம்
குணங்களின் ஓரங்களையும்
கூர்தீட்டியவர்கள்.
நம்
மனங்களின் மையங்களில்
மைதீட்டியவர்கள்.

நாம்
வரம்போடு நடக்க‌
கையில்
பிரம்போடு நடந்தவர்கள்

நாம்
வழியோடு நடக்க‌
வலியோடு தொடர்ந்தவர்கள்.

அன்னையின் அரவணைப்பும்
தந்தையின் கண்டிப்பும்
ஆசானின் அறிவுரையும்
அறிஞனின் அறவுரையும்
இரண்டறக் கலந்த‌
இனியவரல்லவா ஆசிரியர்கள்.

இவர்கள் விதைத்த‌
கல்விப் பருக்கைகள் தானே
நமக்கு
உயரிய இருக்கைகளை
உரியதாக்கி இருக்கிறது.

இவர்கள் தொடுத்த‌
அறிவின் மலர்கள் தானே
நமக்கு
வெற்றியின் மாலைகளை
பெற்றுத் தந்திருக்கிறது.

வறுமையின்
வாய்க்கால்களில் நடந்தாலும்
தலைமுறையின்
கனவுகளோடு
தொடர்பவர்களல்லவா ஆசிரியர்கள்.

நமது வெற்றியை
தனது
வெற்றியாய்க் கொண்டாடும்
அற்புதங்களல்லவா ஆசிரியர்கள்.

கிளைகள்
பூக்கள் விடுக்கையில்
வேர்களுக்கும் விழா நடக்குமென‌
இவர்களைக் கண்டு தானே
விளங்கிக் கொண்டோம்.

மாணவர்கள்
ஆசிரியர்களைக்
கொண்டாடுகையில்
சமூகம் வளர்கிறது.

மாணவர்கள்
ஆசிரியர்களைக்
கொன்றாடுகையில்
தேசமே சாய்கிறது.

ஆசிரியர்களை
வானம் போன்றவர்கள் !

வானத்தை எப்போதும்
உயரத்தில் வைப்போம்
நேசத்தை எந்நாளும்
இதயத்தில் தைப்போம்.

அனைத்து ஆசிரியர்களுக்கும்
இனிய‌
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

+
சேவியர்

One thought on “ஆசிரியர் தின வாழ்த்துகள்

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s