மன்னிப்பு
காட்சி 1
( அதிகாரி & மேனேஜர் )
அதி : எல்லாம் ரெடி தானே ?
மே : ரெடி ஆயிட்டிருக்கு மேம்.
அதி : இது ரொம்ப. முக்கியமான புரபோசல். நம்ம கம்பெனியோட ரெவன்யூவை நல்லா பூஸ்ட் பண்ணும். சோ கவனமா பண்ணுங்க
மே : எல்லாம் பண்ணிட்டிருக்கேன் மேம். கவலையே படாதீங்க
அதி : எல்லா டிப்பார்ட்மெண்டோட சைன் ஆஃப் வாங்கிடுங்க… இதுல காம்பெட்டிடரை விட நாம பெட்டரா பண்ணியே ஆகணும்
மே : கண்டிப்பா மேம்.. எல்லாருக்கும் டீட்டெயில்ஸ் குடுத்தாச்சு, ரிவ்யூ மீட்டிங்க்ஸ் வெச்சாச்சு… ஐ வில் டேக் கேர்
அதி : வெரி குட்.. ஃப்ரைடே ஈவ்னிங் 5 பி.எம் தான் கட் ஆஃப், நீங்க பிரைடே மதியமே அனுப்பிடுங்க.. எதுக்கு லாஸ்ட் மினிட் ஹரிபரி…
மே : கண்டிப்பா மேம்.
காட்சி 2
( மேனேஜர் போனில் )
மே : ஹலோ… மார்க்… அந்த finance நம்பர்ஸ் நீங்க இன்னும் கன்ஃபர்ம் பண்ணலையே….. யா..யா… அந்த புரபோசல் தான்… இன்னும் ரெண்டு நாள்ல சப்மிட் பண்ணணும்.. இன்னிக்கே குளோஸ் பண்ணிடுங்க
( அடுத்த போன் )
மே : ஹலோ முத்து… அந்த சொலூஷன் பாத்துட்டீங்கல்ல… பெஸ்டா இருக்கணும்…. நாம ரிஜக்ட் ஆயிட கூடாது.. மெயினா performance, ஸ்கேலபிலிடி எல்லாம் பாத்துக்கோங்க.
( அடுத்த போன் )
மே : ஹலோ… தேங்க்யூ.. நீங்க ரிஸ்க் அப்ரூவல் குடுத்துட்டீங்க…. பட்.. வாண்டட் டு செக்.. எல்லாம் சரி தானே…. Proposal is good to go in risk perspective right ?
( போனில் பலருடன் பேசுகிறார் )
காட்சி 3
( மேனேஜர் & ஒரு பணியாளர் )
பணி : சொல்லுங்க சார்..
மே : எல்லாம் எப்படி போயிட்டிருக்கு ?
பணி : ஃபெஸ்டிவல் சீசன் வருது.. எல்லாருமே ஷாப்பிங் ஷாப்பிங்ன்னு பிஸியாயிட்டாங்க.. நம்ம ஆப் ல சில பிரச்சினைகள் வந்திட்டிருக்கு.. கால் வர வர எல்லாத்தையும் பிக்ஸ் பண்றோம்
மே : வெரி குட்.. ரொம்ப கேர்புல்லா இருங்க.. ஒரு சர்வீஸ் ரிவ்கஸ்ட் கூட பாக்கி இருக்கக் கூடாது.. டக் டக் ந்னு முடிச்சு குடுக்கணும்.
பணி : டீம் வர்க் பண்ணிட்டே இருக்காங்க சார்.. என்னென்ன புரடக்ஷன் டிஃபெக்ட் இருக்கோ உடனுக்குடன் பிக்ஸ் பண்றோம்.
மே : பிக்ஸ் பண்றது மட்டுமல்ல, எவ்ளோ குவிக்கா பண்றீங்ங்கறதும் முக்கியம். சிவியாரிடி 1 & 2 டிஃபெக்ட்னா மேக்சிமம் 2 ஹவர்ஸ் தான். அதுக்குள்ள ஃபிக்ஸ் போயாவணும்..
பணி : ஓக்கே சார்
மே : நைட் .. டே.. ஃபெஸ்டிவெல் அது இதுன்னு எத்த சாக்குபோக்கும் ஐ டோண்ட் வாண்ட் டு ஹியர்
பணி : ஓக்கே சார்…
காட்சி 4
( மேனேஜர் & போன் )
மே : ஹாய்.. சொல்லுப்பா…
போன் : டேய்.. இன்னிகு ஃப்ரைடே !! ஈவ்னிங் நமக்கு கெட் டுகதர் & மூவி பிளான் இருக்கு சொதப்பிடாதே..
மே : இல்லடா.. நான் ஒரு 5 மணிக்கெல்லாம் வந்துடுவேன்
போன் : என்னடா 5 மணி, ஒரு மூணு மணிக்கு வா… கரெக்டா இருக்கும்.
மே : இல்லடா..ஒரு புரபோசல் இருக்கு.. எழவு.. அத வேற ரிவ்யூ பண்ணி சப்மிட் பண்ணணும்.
போன் : மெயில்ல போட்டு ஒரு தட்டு தட்டினா போயிட போவுது.. இதுல என்னடா… லேட்
மே : ஆமா, சொல்றது ஈசி.. செஞ்சு பாரு அப்போ தெரியும் கஷ்டம்.
போன் : சரி..சரி… லெக்சர் அடிக்காதே.. சீக்கிரம் வந்து சேரு
மே : ஷுவர் டா
காட்சி 5
( மேனேஜர் போனில் எதையோ நோண்டுகிறார், லேப்டாப்பில் டைப் அடிக்கிறார் )
மே : (மனதுக்குள் ) எல்லாரும் எல்லாம் குடுத்துட்டாங்கன்னு நினைக்கிறேன்….
(கொட்டாவி விடுகிறார், வீடியோ பார்க்கிறார் )
( போன் அடிக்கிறது )
போன் : டேய் மணி அஞ்சாவ போவுது இன்னும் கிளம்பலையா ?
மே : ஓ.. கிளம்பறேன்டா.. அந்த புரபோசல் மெயில் மட்டும் சப்மிட் பண்ணிட்டு கிளம்பறேன்.
போன் : டேய்.. நொண்டி சாக்கு சொல்லாம வா..
மே : இதோ வந்துட்டேண்டா…
( மெயிலை அனுப்புகிறார், செண்ட்ட்…. ம்ம்ம்.. கிளம்புவோம்….லேப்டாப்பை மூடி வைக்கிறார் )
காட்சி 6
மறுநாள்
( மேனேஜர் & அதிகாரி )
மே : மேம்.. அவசரமா வர சொன்னீங்க
அ : வாட் த ஹெல் ஹேப்பண்ட்.. ஏன் புரபோசல் போகல நேத்திக்கு,
மே : மேம்.. நா.. நான் அனுப்பிட்டேனே
அ : என்ன அனுப்பினீங்க ? எனக்கும் காப்பி வரல.. என்னை மட்டும் மிஸ் பண்ணியிருப்பீங்கன்னு நினைச்சேன்.
மே : மேம்.. லெட் மி செக்….
அ : ஒரு மெயில் அனுப்பினா போச்சா, டெலிவரி கன்ஃபர்மேஷன் வந்துச்சா பாக்க மாட்டீங்களா ? எவ்ளோ பெரிய வேலை இது
மே : மேம்.. லெட் மி செக் இன் போன்..
அ : என்ன செக் பண்ண போறீங்க.. நம்ம புரபோசல் போகல வி ஆர் அவுட் ந்னு மெயிலே வந்தாச்சு எனக்கு
மே : மே..மேம் ( அதிர்ச்சியாய் ) நோ.. நா.. நான் அஞ்சு மணிக்கு அனுப்பிட்டு தான் பிரண்ட்ஸை பாக்க போனேன்.
அ : ஆமா. உங்களுக்கு பிரண்ட்ஸ் தான் முக்கியம். மதியமே அனுப்ப சொன்னேனே… வொய் லேட் ? எதுக்கு லாஸ்ட் மினிட் வரைக்கும் வெயிட் பண்ணினீங்க.
மே : மே..மேம்…
டெலிவரி ஃபெயிலியர் வந்திருக்கு.. ஐ.. ஐ திங்க் த அட்டாச்மெண்ட் சைஸ் ஈஸ் பிக்.
அ : யூ ஆர் ஃபயர்ட் … இனிமே உங்களுக்கு இங்கே வேலையில்லை.. யூ மே கோ..
மே : மேம்..மே..மேம்.. ஐம் எக்ஸ்றீம்லி சாரி.. ஐ நோ இட்ஸ் மை ஃபால்ட்
அ : டூ லேட்..டூ லேட்… ஐ காண்ட் ஹெல்ப் இட். நான் என் மேனேஜ்மெண்டுக்கு பதில் சொல்லணும்
மே : மேம்.. இந்த வேலை இல்லேன்னா குடும்பமே பட்டினி ஆயிடும் மேம்.. பிளீஸ் மேம்
அ : அதெல்லாம் வேலை செய்யும்போ யோசிக்கணும்.. பொறுப்பை வாங்கறது பெரிசுல்ல, முடிக்கிறது தான் பெருசு .. யூ ஆர் அவுட்… தட்ஸ் மை மிட்டிகேஷன் பிளான் டு லீடர்ஷிப் டீம்
மே : மேம்.. மேம்.. பிளீஸ்.. ஹெல்ப் பண்ணுங்க மேம்.. என் அம்மா.. அம்மா படுத்த படுக்கையா கிடக்கறவங்க.. அவங்களை நான் தான் பாத்துக்கறேன். இந்த வேலை இல்லேன்னா மெடிசின் வாங்க கூட முடியாது.. அம்மாவை காப்பாத்த கூட முடியாது
அ : சே.. ஓவரா செண்டிமெண்ட் போடறே…. சரி சரி போ.. ஐ வில் செண்ட் யூ எ மெமோ…ஐ டோண்ட நோ… ஹௌ டு கன்வின்ஸ் த மேனேஜ்மெண்ட்…
மே : ஐம் எக்ஸ்றீம்லி சாரி மேம்.. இனிமே இப்படி நடக்காம பாத்துக்கறேன் மேம்.
அ :சரி..சரி.. யூ மே கோ… திங்க் வாட் கேன் பி டன்.
காட்சி 7
( மேனேஜர் கடுப்பாக உட்கார்ந்திருக்கிறார் )
மே : சே.. நம்ம மானம் மரியாதை எல்லாம் போச்சு… பிச்சை எடுக்கிற மாதிரி பேச வேண்டியதா போச்சு.
( போன் வருகிறது )
( கோபமாக போனில் கவனிக்கிறார் )
( போன் பண்ணுகிறார் )
போன் : ஹலோ… என்ன நம்ம ஆப்ல பேமெண்ட் கேட்வே டவுனாமே
பணி : ஆமா சார்… சம் பிராப்ளம் வித் த தர்ட் பார்ட்டி.. பாத்திட்டிருக்கேன்.
போன் : என்ன பாத்திட்டிருக்கீங்க… டூ அவர்ஸா டவுன் டைமா…
பணி : எஸ் சார். பட் கஸ்டமர் கேன் யூஸ் அதர் ஆப்ஷன்.. ஒன்லி த யூபிஐ…..
போன் : எந்த சால்ஜாப்பும் வேண்டாம். மூட்டையை கட்டிட்டு கிளம்புங்க. நாளைல இருந்து வேலைக்கே வரவேண்டாம்.
பணி : சார்..சார்..
போன் : நீ காண்றாக்ட் எம்ப்ளாயி தானே..பொறுப்பில்ல, 2 ஹவர்ஸ் ல பிக்ஸ் பண்ணணுமா இல்லையா… நீ போ.. நான் வேற ஆள வெச்சு பாத்துக்கறேன்.
பணி : சார்.. சார்.. நாங்க ரொம்ப ஏழைங்க சார்.. இந்த வேலை இல்லேன்னா.. எங்களால ஒண்ணுமே பண்ண முடியாது சார்.
போன் : அதெல்லாம் உன் வீடு.. உன் பாடு.. நீ முதல்ல கிளம்பு
பணி : சார்.. என் அம்மா வேற உடம்பு சரியில்லாம படுத்த படுக்கையா…
போன் : படுத்த படுக்கையா இருந்தா தூக்கி வெளியே போடு.. எனக்கு கம்பெனி தான் முக்கியம்.. யூ கேன் கோ…
பணி : சார்.. சார்
போன் : யூ ஷுட் பி அவுட் இன் டென் மினிட்ஸ்.. நான் பாத்துக்கறேன்
காட்சி 8
( அதிகாரி & பணி – போனில் )
அதி : ஹலோ.. என்னம்மா.. எங்கே இருக்கே
போ : வீட்ல இருக்கேன் மேம்
அதி : வீட்லயா… புரடக்ஷன் இஸ்யூ ஓடிட்டிருக்கு.. யூ ஆர் சப்போஸ்ட் டு பிக்ஸ் இட்
போ : பிக்ஸ் குடுக்க லேட் ஆச்சு மேம்.. ஐ எக்ப்ளைண்ட் டு மேனேஜர்… பட் அவரு கேக்கற நிலமைல இல்ல.. என்ன வேலையை விட்டு தூக்கிட்டார்
அதி : வாட்.. வேலையை விட்டு தூக்கிட்டாரா ?
போ : ஆமா மேம்.. இந்த இஷ்யூல நமக்கு ரெவன்யூ லாஸ் இல்ல மேம்.. வி ஹேவ் ஆல்டர்நேட் பேமெண்ட் மெதேட்..
அதி : அதெல்லாம் சொல்ல வேண்டியது தானே
போ : சொன்னேன் மேம்… மெயில் கூட போட்டேன்… அவரு எதையும் கேக்கற நிலமைல இல்ல மேம்.. கோபமா இருந்தாரு.
அதி : ம்ம்.. சரி, நீ உடனே ஆபீஸ் வா.. நான் பாத்துக்கறேன்
காட்சி 9
( அதி & மே )
அதி : என்னப்பா.. மல்லிகாவை வேலைக்கு வரவேணாம்னு சொன்னீங்களா ?
மே : யா மேம்… ஷி வாஸ் நாட் டூயிங் ஹர் ஜாப்
அதி : இந்த பிரச்சினையால என்ன ரெவன்யூ லாஸ் ?
மே : அது.. அது பெருசா ஒண்ணும் இல்ல மேம்.. நீட் டு அஸெஸ்
அதி : நீங்க மல்டி மில்லியன் புரபோசலை சொதப்பி கம்பெனியோட கனவையே உடைச்சிட்டீங்க. உங்களையே நான் மன்னிச்சு விட்டேன்.. ஆஃப்றால் ஒரு சின்ன மிஸ்டேக் அதுக்கே அவங்களை வேலையை விட்டு தூக்கியிருக்கீங்க
மே : அ..அது வந்து மேம்..
அதி : ஐ நெவர் தாட் யூ ஆர் சோ டூத்லெஸ்… இப்போ சொல்றேன்.. யூ ஆர் அவுட். அது மட்டும் இல்லை, இந்த லாஸுக்கு, ஐ ஆம் கோயிங் டு கிவ் எ கம்ப்ளெயிண்ட். கூடவே ஹைச்.ஆர் ரிக்கார்ட்ல உன்னை பிளாக்லிஸ்ட் பண்றேன்.. இனிமே நீ எங்கயுமே வேலை பாக்க முடியாது…
மே : மே..மேம்.. பிளீஸ்..பிளீஸ்
அதி : யூ கேன் கோ.. உன்னோட போஸ்டுக்கு நான் மல்லிகாவையே போடப் போறேன். மன்னிக்கக் கத்துக்காதவன் வாழ்க்கைல எதையுமே கத்துக்க முடியாது.
மே : மேம்.. பிளீஸ்.
அதி : வாய்ப்பு தொடர்ந்து வந்துட்டே இருக்காது சார்.. நீங்க குடுத்த வாய்ப்பை வீணடிச்சிட்டீங்க… கிளம்புங்க காத்து வரட்டும்.
மே : மேம்.. ஒரே ஒரு லாஸ்ட் சான்ஸ்
அதி : அடுத்தவங்க மேல கரிசனை இல்லாதவங்க மேல கம்பெனியும் கரிசனை காட்டாது. நீங்க போலாம்… எனக்கு வேலை இருக்கு.
*