விரியன் பாம்புக் குட்டிகளே, தீயோர்களாகிய நீங்கள் எவ்வாறு நல்லவை பேச முடியும்?
( மத்தேயு 12 : 34 )

*
வெற்றிமணியின் வாசகர்கள் அனைவருக்கும் வெற்றி மைந்தன் இறைமகன் இயேசுவின் பிறப்பு நாள் நல்வாழ்த்துகள். இயேசுவின் வருகை மனுக்குலத்தின் மீது ஒரு மனிதன் கொள்ள வேண்டிய அன்பை எடுத்துக் காட்டுகிறது. சாதாரண, எளிய குடும்பத்தில் பிறந்த இயேசு சமூக அவலங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும், போலித்தனங்களையும், மதச் சடங்குகளையும் கடுமையாய் எதிர்த்தவர். அதற்காகவே படுகொலை செய்யப்பட்டவர். அவரை நம்புவோர் மீட்படைவார்கள் என்பது கிறிஸ்தவப் பாடம். அவரைப் பின்பற்றுவோர் மனிதநேயத்தை கொண்டிருக்கவேண்டும் என்பது வாழ்வியல் பாடம். இந்த கிறிஸ்மஸ் நாளில் எப்போதும் பிறரோடு அன்பும் நல்லுறவும் கொண்ட வாழ்க்கை வாழ முடிவெடுப்போம். பாலனாம் இயேசுவின் அன்பும், அருளும் உங்கள் இல்லங்களில் நிரம்பி வழியட்டும்.
இயேசுவின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி.
பரிசேயர்கள் வழக்கம் போல இயேசுவை நம்பாமல் அவரது செயல்களை விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். பேய்பிடித்திருந்த நபரிடமிருந்து இயேசு பேயை ஓட்டியபோது ‘பேய்களின் தலைவனைக் கொண்டு பேயோட்டுகிறான்’ என்றனர். இயேசு அவர்களுடைய சிந்தனைகளை ஊடுவிப் பார்க்கிறார். அவர்களுடைய சிந்தனை நம்பிக்கையின்மையில் நிலைத்திருந்தது, அவர்களுடைய இதயம் வெறுப்பினால் நிரம்பியிருந்தது, அவர்களுடைய உள்ளம் கர்வத்தினால் களவாடப்பட்டிருந்தது. அவர் அவர்களைப் பார்த்துச் சொன்னார்,
“விரியன் பாம்புக் குட்டிகளே, தீயோர்களாகிய நீங்கள் எவ்வாறு நல்லவை பேச முடியும்? உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்”
விரியன் பாம்புக் குட்டிகள் எப்போதுமே விரியன் பாம்புக் குட்டிகளாகத் தான் இருக்கும். அவை மண்புழுக்களாய் மாறி மண்ணுக்கு வளம் சேர்ப்பதில்லை. மாறாக விஷப் பற்களோடு அலைந்து மனிதரைக் காயப்படுத்தும், கொன்றுவிடும்.
இயேசு பாம்பை உதாரணமாய் எடுக்கிறார. பாம்பு, ஏதேனின் தோட்டத்தில் ஏவாளை வசீகர வார்த்தைகளால் ஏமாற்றியது. அதன் உள்ளத்து இயல்பு அது. விஷ வார்த்தைகளை அது அமிர்தமாய்த் தூவி ஏவாளை ஏமாற்றி இறைவனோடான புனித உறவை உடைத்தது ! வார்த்தைகள் கவனமாய் பயன்படுத்தப்பட வேண்டியவை.
ஒருவன் தீயவனாக இருந்தால் அவனிடமிருந்து நல்ல வார்த்தைகள் வருவதில்லை. இதயம் முழுவதும் குப்பையைச் சேகரித்து விட்டு, வாயில் நறுமணம் கமழவேண்டுமென நினைத்தால் முடியாது. அப்படியே செயற்கைத் தனமாய் வாசனை பூசிக் கொண்டாலும் அது சற்று நேரத்தில் பல்லிளித்துவிடும். நறுமணம் வேண்டுமெனில் நாம் செய்ய வேண்டியது வாசனையைப் பூசிக் கொள்வதல்ல, குப்பையை அகற்றி விடுவது.
மாமரம் எப்போதுமே மாங்கனியைத் தான் கொடுக்கும். அதில் என்றைக்குமே பலாப் பழத்தை நாம் பறிக்க முடியாது. அப்படியே பலாப்பழத்தை மாமரத்தில் ஒட்டி வைத்தாலும் அது நிலைக்காது. சிறிது நாட்களிலேயே காய்ந்து போய் அதன் உண்மைத் தன்மை வெளியே தெரியும். மரம் தனது இயல்பை வளப்படுத்திக் கொண்டால் மட்டுமே, கனிகள் சிறப்பாக இருக்க முடியும்.
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், ‘சட்டியில இருக்கிறது தான் அகப்பைல வரும்’ ! ஒரு மனிதன் தனது உள்ளத்தில் இருப்பதைத் தான் பேச முடியும். சமூகத்தில் நிலவுகின்ற கொடுமைக்கு எதிராகப் பேசுகிறவன் உண்மையிலேயே சமூக அக்கறை உடையவனாக இருப்பான். மத உணர்வுகளைத் தூண்டும்படி பேசிக்கொண்டே இருப்பவனின் உள்ளம் சுயநலத்தினால் நிரம்பியிருக்கும். சாதீய வன்மத்தினால் பேசுபவனின் இதயம் வெறுப்பினால் கறைபடிந்துக் கிடக்கும். ஒருவனுடைய பேச்சு அவனுடைய அடையாள அட்டை. தண்ணி அடித்து விட்டுப் பேசுபவனைக் கவனித்தால் அவன் தனது உள்ளத்தில் இருப்பதை கொஞ்சமும் தயக்கமில்லாமல் கொட்டுவதைக் காணலாம்.
இன்றைக்கு வாட்சப் குழுக்களில் நிலவுகின்ற உரையாடல்கள் பலருடைய உள்ளத்தை டிஜிடல் திரையில் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. உள்ளம் அமைதியாய், அன்பாய் இருந்தால் வார்த்தைகளும் அன்பாய், அழகாய் இருக்கும். அதற்கு நாம் செய்ய வேண்டியது அழகிய வார்த்தைகளைத் தேடுவதல்ல, அழகிய இதயத்தை நாடுவது.
ஏமிகார்மைக்கேல் ஒரு முறை சொன்னார், ‘நமது இதயம் இனிப்பான பானம் நிறைந்த பாத்திரமாய் இருந்தால், அதிலிருந்து சிந்துபவை எல்லாமே இனிப்பானவையாய் தான் இருக்கும்’ என்று.
நல்ல ஊற்றிலிருந்து உப்புத் தண்ணீர் சுரக்காது, நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்காது, நல்ல இதயம் தவறான வார்த்தைகளை வீசாது. வார்த்தைகள் வாளைப் போல, வீசிவிட்டால் காயம் தரும். அதன் பின் எத்தனை மன்னிப்பைக் கேட்டாலும் வடுக்கள் மறைவதே இல்லை ! எனவே கவனம் தேவை.
இயேசு, நமது இதயங்களை சரிசெய்யச் சொல்கிறார். அதில் கர்வம் இருக்க வேண்டாம், அதில் அகந்தை இருக்க வேண்டாம், அதில் வன்மம் இருக்க வேண்டாம் என்கிறார். ‘பேசத் தானே செஞ்சான், அடிக்கவா செஞ்சான்’ என சிறு பிள்ளைகளிடம் பெற்றோர் சொல்வதுண்டு ! இனிமேல், வார்த்தைகளையும் கவனிக்கச் சொல்லுங்கள். பிள்ளைகளின் வார்த்தைகள் செயல்களைப் போலவே முக்கியமானவை.
இயேசு சொல்கிறார், நமது வார்த்தைகள் நம்மைத் தீர்ப்பிடும். தீர்ப்பு நாளில் நாம் குற்றவாளிகளா, இல்லையா என்பதை நாம் பேசிய வார்த்தைகளே முடிவு செய்யும். காரணம், நமது இதயம் அன்பில்லாமல் இருந்தால் வாய் அன்பற்ற வார்த்தைகளையே பேசும். அன்பற்ற மனிதர்கள் அன்பான செயல்களைச் செய்ய முடியாது. வார்த்தைகள் நமது செயல்களின் பிரதிநிதிகள்.
நாம் எதை உண்கிறோம் என்பது பிரச்சினையில்லை, ஆனால் உள்ளிருந்து வருகின்ற வார்த்தைகளைக் கவனிக்க வேண்டும். உடலை வலுவாக்க உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதைப் போல, வார்த்தைகளையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இதயம் முழுவதும் நல்லவை நிரம்பியிருந்தால் அதிலிருந்து எதை எடுத்தாலும் நல்லதாகவே இருக்கும். எனவே இதயத்தை ஒரு சாக்லேட் பாக்ஸ் போல வைத்திருக்க வேண்டும் !
இயேசுவின் இந்தக் கேள்வி நம்மை உலுக்குகிறது. நமது வார்த்தைகள் எந்த அளவுக்கு வலுவானவை என்பதை நமக்கு உணர்த்துகிறது.
நமது வார்த்தைகள் நாம் யார் என்பதை அடையாளப்படுத்துகின்றன.
நமது வார்த்தைகள் நமது இதயத்தின் நிலமையை வெளிப்படுத்துகின்றன.
நமது வார்த்தைகள் நியாயத் தீர்ப்பு நாளில் நம்மைத் தீர்ப்பிடுகின்றன.
வார்த்தைகளை அன்பில் வார்த்தெடுப்போம், பிறருக்கு ஆதரவாய், ஆறுதலால், உற்சாகமாய், நற்செய்தியாய் நமது வார்த்தைகளைப் பயன்படுத்துவோம். இதயத்தில் இறைவனை இருத்தி, கறை பட்ட இதயத்தைத் தூய்மையாய் மாற்றுவோம்.
*
சேவியர்
குருத்தோலை மாத இதழ் – செப்டம்பர்