உண்மை வழி நடப்போம்

*
உண்மையா ?
அதுஎன்ன ?
இது பிலாத்து இயேசுவை நோக்கி நீட்டிய கேள்வி. ஆனால் ஒருவேளை பிலாத்துவின் கேள்வி,
உண்மையா ?
அதுயார் ?
என்றிருந்திருந்தால் உண்மை வடிவான இயேசுவை அவன் அறிந்திருப்பான். நானே வழியும், சத்தியமும், ஜீவனும் என்ற இயேசுவை அகக் கண்ணால் கண்டிருப்பான். உண்மை என்பது ஒரு செய்தியாக இருக்கும்போது அது சிதிலமடைகிறது, அது உருமாற்றம் அடைகிறது, அது பல முகம் காட்டுகிறது.
ஆனால் உண்மை என்பது ஒரு மனிதராக இருக்கும் போது அந்த வாழ்க்கை நமக்கு வழிகாட்டுகிறது. அந்த உண்மையின் வாழ்க்கை நம்மை உண்மையின் பாதையில் நடக்க வைத்து இறுதியில் உண்மையிடம் நம்மைச் சேர்க்கிறது.
குழந்தைகள் உண்மையின் வழியில் நடப்பவர்கள். அவர்களிடம் கள்ளம் இல்லை, அவர்களிடம் பொய் இல்லை. கள்ளமும், பொய்யும் சமூகத்தினால் குழந்தைகள் மீது திணிக்கப்படுகின்றன. ‘வீட்ல இல்லேன்னு பொய் சொல்லு’, ‘உடம்பு சரியில்லேன்னு சொல்லு’ என்றெல்லாம் குழந்தைகளுக்கு நாம் தான் பொய்யை அறிமுகம் செய்து வைக்கிறோம்.
உண்மையின் வழி நடக்க விரும்புபவர்கள் குழந்தைகளிடமிருந்து பாடம் கற்க வேண்டும். குழந்தைகளுக்கு நாம் அறிவைக் கொடுக்க வேண்டும், குழந்தைகளிடமிருந்து உண்மையை கற்றுக் கொள்ள வேண்டும். எனவே தான் இயேசு, இறையரசு இத்தகையோருக்குரியதே என்றார் ! குழந்தையைப் போல மாறாவிடில் இறையரசில் நுழைய முடியாது என்றார்.
சத்தியம் வார்த்தையல்ல,
வார்த்தையானவர் !
இறைவார்த்தைகளிலிருந்தல்ல நமக்கான மதிப்பீடுகள்,
இறை வாழ்க்கையிலிருந்து பெற வேண்டும் வாழ்வுக்கான வழிகாட்டுதல்கள்.
- உறுதியானமனநிலை !
சத்தியத்தின் வழியில் நடப்போருக்கு ஒரே கேள்விக்கு இரண்டு விடைகள் இருப்பதில்லை. அவர்கள் உண்மை, பொய் எனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்வதில்லை. அவர்களுடைய பேச்சு ஆம் என்றால் ஆம் என்றும், இல்லை என்றால் இல்லை என்றும் உறுதியாக இருக்கிறது
குழந்தைகள் உண்மை பேசுகின்றன. அவர்களிடம் பொய் சொல்லச் சொன்னால் தடுமாறி விடுகின்றன. நாம் அவர்களுக்கு பொய்யை அறிமுகம் செய்து வைக்கிறோம். காலப் போக்கில் பொய் அவர்களுக்குப் பழகி விடுகிறது. பொய் அவர்களின் இயல்பாகி விடுகிறது. அதன்பின் அவர்களிடம், ‘ஏண்டா பொய் சொன்னே ?’ என நாம் கோபித்துக் கொள்கிறோம். நாம் பழக்கி விட்ட வழியில் அவர்கள் நம்மையே எதிர் கொள்ளும்போது எரிச்சலடைகிறோம்.
உண்மையின் வழியில் நடக்கும் உறுதியான மனம், நம்மை இறைவனிடம் சேர்க்கும்.
- உண்மையின்மனநிலை !
கிறிஸ்தவர்கள் என்பவர்கள் கிறிஸ்துவின் வழி நடப்பவர்கள். ஆனால் நாம் அதை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறோமோ எனும் அச்சம் அடிக்கடி எழுகிறது. ஆன்மிகம் சார்ந்த விவாதங்களில் இன்று பெரும்பாலும் தனி நபர் தாக்குதல்களே எழுகின்றன. கிறிஸ்துவை மையமாகக் கொண்ட சித்தாந்தங்களை விட அடையாளங்களை மையப்படுத்தும் சித்தாந்தங்களே அதிகம் இருக்கின்றன.
உண்மையின் மனநிலை என்பது இயேசுவின் மனநிலை. இயேசு ஒவ்வொரு விஷயத்தையும் எப்படிச் செய்வார் என்பதை அறிந்து செயல்படும் மனநிலை. உதாரணமாக ‘எப்படி துதிக்க வேண்டும், எப்படி ஆட வேண்டும், எப்படி உடுக்க வேண்டும்’ என்றெல்லாம் இயேசுவிடம் கேட்டால் என்ன பதில் சொல்வார் ? என நமக்குள் கேள்வி எழுப்ப வேண்டும்.
இயேசு எப்படி இருப்பார் என்பதை அறிய குழந்தைகளைப் பாருங்கள். அவர்கள் தேவையற்ற விவாதங்களில் ஈடுபட்டு மண்டையைக் குழப்பிக் கொள்வதில்லை.
- செயலாற்றும்மனநிலை
குழந்தைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்கின்ற ஒரு விஷயம், செயல் பட்டுக் கொண்டே இருப்பது. ‘எப்ப பாரு ஓடிட்டே… ஒரு இடத்துல இருக்கானா பாரு’ என நம்மை சலிப்படையச் செய்யும் அளவுக்கு பிள்ளைகள் ஓடிக் கொண்டே இருப்பார்கள். அத்தகைய சுறுசுறுப்பும், செயலாற்றுதலும் நம்மிடம் இருக்க வேண்டும். அத்தகைய செயல்பாடுகள் இயேசு எனும் உண்மையை மையப்படுத்தியதாகவோ, முன்னிறுத்தியதாகவோ இருக்க வேண்டும்.
சத்தியத்தின் வழி நடப்போர் சலிப்படைக் கூடாது. பணி செய்ய தயங்கக் கூடாது. எப்படியெல்லாம் பணி செய்ய வேண்டும் என்பதை இயேசுவின் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். தயங்காமல் பயணிக்கும் ஆற்றலை பவுலின் வாழ்க்கையிலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளிடமிருந்து அந்த உற்சாகத்தின் மனநிலையை அறிந்து கொள்வோம்.
- கரம்கொடுக்கும்மனநிலை
உண்மையின் வழியில் நடப்போர் பிறருக்கு கை கொடுக்கும் வாழ்க்கை வாழவேண்டும். குழந்தைகள் விளையாடும் போது கவனித்திருப்பீர்கள், அவர்களுக்கு வைரக் கல்லை விட மர பொம்மை தான் பிரியமாய் இருக்கும். அவர்கள் தங்களிடம் இருப்பதை பிறரோடு பகிர்ந்து விளையாட தயங்க மாட்டார்கள். ‘இது உன்னுது, இதை யாருக்கும் குடுக்காதே’ என நாம் அவர்களுடைய மனதைக் கெடுக்காதவரை அவர்கள் மனம் கறையற்றதாகவே இருக்கும்.
பெரியவர்களின் மனநிலை அப்படி அல்ல ! ஓய்வு நாளே பெரியது, சூம்பிப் போனவன் நலமடைவதை விட !!! என்பதே அவர்களின் பார்வை. குழியில் விழும் ஆடு கூட அவர்களின் பார்வையில் ஊனமுற்றவரை விட மேலானதே. உண்மையாம் இயேசுவின் வழியில் நடப்பவர்கள் பிறருக்காய் எப்போதும் கரம் நீட்டுபவர்களாய் இருக்க வேண்டும். ஒரே ஒரு கரம் இருந்தால் கூட அதை நீட்டுபவர்களாய் நாம் இருக்க வேண்டும்.
குழந்தைகளிடமிருந்து அந்த அன்பின் செயலைக் கற்றுக் கொள்வோம்.
- பேதமற்றமனநிலை
நீ என்ன சாதி ? என இதுவரை இந்தப் பிரபஞ்சத்தில் எந்தக் குழந்தையும் வினா எழுப்பியதில்லை. நீ எந்த சாமியை கும்பிடறே ? என்பதை பெற்றோர் கற்றுக் கொடுக்கும் வரை கண்டு கொள்வதில்லை மழலை. நீ ஏன் கருப்பா இருக்கே, நீ ஏன் சிவப்பா இருக்கே, உனக்கு ஏன் கால் இல்லை, உனக்கு ஏன் தலைமுடி இல்லை என்றெல்லாம் குழந்தைகள் யோசிப்பதே இல்லை. உருவம், அடையாளம் போன்றவையெல்லாம் குழந்தைகளின் தேசத்தில் இல்லை !
பேதங்கள் பார்த்து மனிதரோடு பழகுபவன் நிச்சயம் இறையரசுக்கு உரியவன் அல்லன் ! நல்ல சமாரியன் சொல்லித் தருவது அதைத் தான். நாம் அயலானாய் இருக்க வேண்டும், தேவையில் இருக்கும் மக்களுக்கு ஆறுதல் தரும் அயலானாய் இருக்க வேண்டும். குழந்தைகள், அழுகின்ற குழந்தையோடு சேர்ந்து அழும். சிரிக்கின்ற குழந்தையோடு சேர்ந்து சிரிக்கும். குழந்தைகளின் பேதமற்ற மனம் நம்மை பரமனிடம் சேர்க்கும்.
சத்தியத்தில் நடக்கும் போது நாம்
இறையரசுக்கு உரியவர்களாவோம்.
சத்தியத்தில் நடப்பது எப்படியென்பதை
மழலையிடமிருந்து கற்றுக் கொள்வோம்
*
சேவியர்
நன்றி : தேசோபகாரி