
ஏசா : நான் தான் ஏசா… என் தம்பி யாக்கோபு எனக்கு எதிரா பல விஷயங்கள் செஞ்சான். ஆனாலும் அவன் திரும்பி வந்தப்போ நான் அவனை மன்னிச்சு ஏத்துகிட்டேன். மன்னிப்பு ரொம்ப நல்லதுல்லயா ?
தந்தை : நான் தான் கெட்ட குமாரனோட அப்பா. என் இளைய பையன் சொத்தெல்லாம் வித்து கஷ்டப்பட்டான். அப்புறம் மனம் திரும்பி வந்தப்போ நான் அவனை அப்படியே ஏத்துகிட்டேன். மன்னிக்கிறவன் தான் மனுஷன் இல்லையா ?
யோசேப்பு : நான் தான் யோசேப்பு. என்னோட சகோதரர்கள் என்னை கொல்ல பாத்தாங்க, குழியில போட்டாங்க, அடிமையா வித்தாங்க. ஆனாலும் நான் அவங்களை மன்னிச்சேன். பெரிய ஆளானப்புறம் அவங்களுக்கே ஹெல்ப் பண்ணினேன். மன்னிக்கிறது தெய்வ சுபாவம் இல்லையா ?
தாவீது : நான் தான் தாவீது. ஒரு பெரிய பாவம் செஞ்சுட்டேன். அது தெரிஞ்சப்புறம் நான் கடவுள் கிட்டே மன்னிப்பு கேட்டேன். கடவுள் அதை மன்னிச்சாரு. தீர்க்கதரிசி நாத்தான் அதை என் கிட்டே சொன்னாரு. கடவுள் கருணை கொண்டு மன்னிக்கிறவர் இல்லையா ?
நினிவே : நான் நினிவே நகரத்துல வாழ்ந்தவன். எங்களை அழிக்கக் கடவுள் திட்டம் போட்டிருந்தாரு. அதை யோனா வந்து சொன்னப்போ நாங்க எல்லாம் அழுது, சாம்பல்ல உக்காந்து, கோணி உடுத்தி செபம் செஞ்சோம். கடவுள் எங்களை. மன்னிச்சாரு. கடவுள் அன்பானவர் இல்லையா ?
திமிர்வாதக்காரன் : நான் ஒரு திமிர்வாதக் காரனா இருந்தேன். நாலுபேரு என்னை கட்டிலோட தூக்கி இயேசு முன்னால இறக்கினாங்க. இயேசு என்னை சுகமாக்கினாரு. அது மட்டுமல்ல, அதை விட பெரிய ஆசீர்வாதமா என் பாவத்தையெல்லாம் மன்னிச்சாரு. கடவுள் வல்லமையுடையவர் இல்லையா ?
கடன்காரன் : நான் தான் கடன் பட்ட ஊழியன். தலைவர் என்னை ஜெயில்ல தள்ள இருந்தாரு. நான் அவருகிட்ட மன்றாடினேன். அவரும் மனம் இரங்கி என்னை. மன்னிச்சாரு. கடவுள் மன்னிப்பை போதிக்கிறாரு இல்லையா ?
பேதுரு : நான் தான் பேதுரு. இயேசுவையே தெரியாதுன்னு மூணு தடவை மறுதலிச்சேன். ஆனாலும் இயேசு என்னை மன்னிச்சு எனக்கு திருச்சபையை கட்டி எழுப்பும் பணியை கொடுத்தாரு. இயேசு மன்னிப்பின் மறு உருவம் இல்லையா ?
பவுல் : நான் தான் பவுல். கிறிஸ்தவர்களை கொல்றது தான் வேலையா இருந்தேன். தமஸ்கு போற வழியில, கடவுள் என்னை ஒளியில சந்திச்சாரு, என் பாவத்தை எல்லாம் நீக்கி என்னை ஒரு அப்போஸ்தலனா மாத்தினாரு. மன்னிப்பு ஒருவனை மனுஷனாக்கும் இல்லையா ?
ஒனேசிமுஸ் : நான் தான் ஒனேசிமுஸ், பிலமோன் என்பவர் கிட்டே அடிமையா இருந்தேன். அங்கிருந்து எஸ்கேப் ஆகி ஓடினேன். பவுல் கிட்டே சேர்ந்தேன். பவுல் என்னை மன்னிச்சாரு. என் தலைவரும் என்னை மன்னிக்கச் சொல்லி லெட்டர் போட்டாரு. மன்னிப்பு தான் விடுதலை தரும் இல்லையா ?
ஸ்தேவான் : நான் தான் ஸ்தேவான்.. என்னை எல்லாருமா சேர்ந்து கல்லெறிஞ்சே கொன்னாங்க. ஆனா நான் இயேசுவை கண்டேன். என்னை வெறுத்த எல்லோரையும் நான் மன்னிச்சேன். இயேசுவைப் போல மாற மன்னிக்கணும் இல்லையா ?
இயேசு : நான் தான் இயேசு. என்னிடத்தில் வருபவர்களை நான் புறம்பே தள்ளி விட மாட்டேன். கடைசி நிமிடத்தில் கேட்ட கள்ளனைக் கூட மன்னித்தேன். என்னிடம் மன்னிப்பு கேட்கும் எல்லோரையும் மன்னிப்பேன். நீயும் உன் பாவத்துக்காக மனம் வருந்தி என்னிடம் மன்னிப்பு கேள். உனக்கும் மீட்பைத் தருவேன்.