
ஆணாதிக்கம்
*
காட்சி 1
( கணவன் & மனைவி )
கணவன் : ( பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார் ) எம்மா.. காப்பி குடுக்கச் சொல்லி பத்து நிமிசம் ஆச்சு, என்ன பண்றியோ தெரியல
மனைவி : இதோ கொண்டு வரேங்க
கணவன் : ஆமா, எழும்பினதும் காபி குடுக்கணும்ன்னு தெரியாதா உனக்கு ? பேப்பர் படிச்சே முடிக்கப் போறேன்.
மனைவி : சரி சரி.. கத்தாதீங்க, கொண்டு வரேன்.
( காபி கொண்டு வருகிறார் )
கணவன் : ஆமா.. இப்ப எல்லாரும் எதுத்துப் பேச கத்துகிட்டாங்க. அதெல்லாம் நம்ம வீட்ல நடக்காது. அந்தந்த நேரத்துல அந்தத்த விஷயம் நடக்கணும்.
மனைவி : சரிங்க.
கணவன் : வெளியே போணும் என்னோட துணியை அயர்ன் பண்ணி வை.
மனைவி : வெச்சிடறேன்…
கணவன் : அதுக்கு முன்னாடி கொஞ்சம் சுடு தண்ணி வை.. குளிக்கணும்..
மனைவி : சரி எல்லாம் பண்ணலாம். நீங்க முதல்ல காபி குடிங்க.
காட்சி 2
( மகள் & அப்பா )
மகள் : அப்பா… எனக்கு பிளஸ் டூல, கட் ஆஃப் 197 இருக்கு
அப்பா : நீ சமத்துப்பா.. என் பொண்ணாச்சே.. அடுத்து என்ன படிக்க போறே
மகள் : நல்லா என்சினியரிங் காலேஜ்ல சேர்ந்து படிக்கணும்பா….
அப்பா : எஞ்சினியரிங் காலேஜா ? அது இங்க இல்லையே
மகள் : சிட்டில போய் கம்ப்யூட்டர் சயின்ஸ்ல ஏ.ஐ.எம்.எல் ந்னு ஒரு கோர்ஸ் இருக்குப்பா.. அதை படிக்கலாம்ன்னு இருக்கேன்.
அப்பா : சிட்டிக்கா.. அதெல்லாம் வேண்டாம்.. நம்ம மார்த்தாண்டம் காலேஜ்ல என்ன இருக்கோ அதை படி
மகள் : அப்பா அது ஆர்ட்ஸ் காலேஜ்… நான் சொல்றது எஞ்சினியரிங் காலேஜ்
அப்பா : அதெல்லாம் எனக்கு தெரியாது. பொம்பள பிள்ளைங்க வெளியே எல்லாம் போய் படிக்கக் கூடாது
மகள் : அப்பா நாலு வருஷம் படிச்ச, கண்டிப்பா கேம்பஸ் பிளேஸ்மெண்ட்ல வேலை வாங்கிடுவேன்பா
அப்பா : உன் சம்பாத்யத்துல வாழ்ற அளவுக்கு நாங்க ஒண்ணும் கெட்டுப் போயிடல. நீ பக்கத்து காலேஜ்ல ஏதாச்சும் படி.. அப்புறம் உனக்கு ஒரு கல்யாணமும் பண்ணி வெச்சா, என் கடமை முடிஞ்சுது
மகள் : என்னப்பா இப்பவே இதெல்லாம் பேசறீங்க. அப்போ நான் இவ்ளோ மார்க் எடுத்து என்ன பயன் ?
அப்பா : என் பொண்ணு இவ்ளோ மார்க் எடுத்தான்னு எனக்கு பெருமையா இருக்குல்ல.. அதான் முக்கியம் ! அது போதும்.
மகள் : உங்க பெருமைக்கா, என் வாழ்க்கைக்கா ? எதுக்குப்பா நான் படிச்சே ?
அப்பா : போதும்.. போதும்.. பொம்பள புள்ளைங்க ஓவரா பேசக் கூடாது. நான் என்ன சொல்றேனோ அதை கேட்டு நடந்தா போதும்.
மகள் : அப்பா…
அப்பா : போதும்… இந்த வீட்ல நான் சொல்றதை கேட்டா போதும். உனக்கு படிக்கணும்ன்னா நான் சொல்ற இடத்துல படி. இல்லேன்னா வீட்லயே இரு. அவ்ளோ தான்.
காட்சி 3
( அம்மா & அப்பா )
அம்மா : என்னங்க, அவ ஆசைப்படறால்ல. படிக்கட்டுமே. நாலு காசு சம்பாதிச்சா அவ வாழ்க்கை நல்லா இருக்கும்.
அப்பா : என்ன பிள்ளையை வெளியூர் அனுப்பி கெடுக்க சொல்றியா
அம்மா : வெளியூர்ல எத்தனையோ இலட்சம் பிள்ளைங்க படிக்கிறாங்க
அப்பா : அதெல்லாம் என் பிள்ளைங்க இல்லை. என் பிள்ளை எப்படி படிக்கணும், எங்க படிக்கணும்ன்னு நான் தான் முடிவு பண்ணுவேன்.
அம்மா : பிடிவாதம் பிடிக்காதீங்க. சென்னைல என் தங்கச்சி வீட்ல நின்னு அவ படிப்பா… நல்ல ஸ்கோர் பண்ணியிருக்கா. கவுன்சிலிங்ல நல்ல காலேஜ் கிடைக்கும்
அப்பா : அதெல்லாம் எனக்கு தெரியாது, இந்த வீட்டோட தலைவன் நீ கிடையாது. நான் தான். பைபிள் என்ன சொல்லுது தெரியுமா ? புருஷர்களுக்கு கீழ்ப்படியணும்ன்னு.. பேசாம கீழ்ப்படி அது போதும்.
அம்மா : மனைவியருக்கு அன்பு செலுத்தவும் தான் பைபிள் சொல்லுது. அன்பு செலுத்துறதுங்கறது அவங்களை மதிக்கிறது, அவங்களோட ஆசையை நிறைவேத்தறது இதெல்லாம் தான்.
அப்பா : கடவுள் வீட்டோட தலைவரா இருக்க சொன்னது ஆண்களை.. தெரியும்ல
அம்மா : ஆனா, அவரு அம்மாவோட பேச்சைக் கேட்டு கோயில்ல இருந்து கூடவே வந்தாரு தெரியும்ல. அம்மா கூடவே வளர்ந்தாரு அவரு. அம்மா பிள்ளையா
அப்பா : இப்படி எதிர்த்து பேச ஆள் இருக்கக் கூடாதுன்னு தான் அவரு கல்யாணமே பண்ணிக்கல. முதல்ல நீ பேச்சை நிறுத்து
அம்மா : பன்னிரண்டு வருஷம் பிள்ளை படிச்சதெல்லாம் வேஸ்டா போவும்.. பிடிவாதம் பிடிக்காதீங்க…
அப்பா : இனிமே ஒரு வார்த்த பேச கூடாது. கொஞ்சம் விட்டா பேசிட்டே போறீங்க. நான் சொன்னது சொன்னது தான்.
காட்சி 4
( அப்பா & நண்பர் )
அப்பா : என்னப்பா.. எப்படி இருக்க.. பாத்து எவ்ளோ வருஷம் ஆச்சு, என்ன இந்தப் பக்கம்
நண்பர் : ஆமாடா… நான் வேலை விஷயமா தூத்துக்குடி போய் செட்டில் ஆயிட்டேன். இப்போ தான் ஊர் பக்கம் டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்தேன்
அப்பா : வெரிகுட் வெரிகுட்.. ஃபேமிலி எல்லாம்
நண்பர் : எல்லாரும் இங்கே வந்துட்டாங்க
அப்பா : அதில்லடா.. என்ன பண்றாங்க பிள்ளைங்க ? எத்தனை பிள்ளைங்க ?
நண்பர் : ரெண்டு பிள்ளைங்க, பொண்ணு மெடிசின் முடிச்சிருக்கா, பையன் என்சினியரிங் போயிட்டிருக்கான்.
அப்பா : மெடிசினா ? எம்பிபிஎஸ் சா
நண்பர் : ஆமா… ரஷ்யால படிச்சா
அப்பா : ர..ரஷ்யாவா.. என்னடா சொல்றே
நண்பர் : ஏண்டா.. படிப்பை முடிச்சிட்டு வந்துட்டா.. இனிமே ஹயர் ஸ்டடீஸுக்கு ஜெர்மனி போறா.. எம்.டி பண்ணணும்ல
அப்பா : வெ..வெளிநாடெல்லாம் அனுப்பியிருக்கே பொம்பள புள்ளைங்கள
நண்பர் : என்னடா.. எந்த காலத்துல இருக்கே.. இப்போ எல்லா பிள்ளைங்களும் சிட்டிலயோ, ஃபாரின்லயோ தான் படிக்கிறாங்க
அப்பா : பொம்பள புள்ளைங்க அடக்க ஒடுக்கமா..
நண்பர் : ஹா..ஹா… காமெடி பண்ணாதே… உலகம் டெக்னாலஜில எவ்வளவோ வளந்திடுச்சு, நீ இன்னும் எருமை மாட்டுக் கதையெல்லாம் பேசறே….
அப்பா : ஓ..
நண்பர் : யா.. அவ அவளோட அம்மா மாதிரி. என் வைஃபும் சிட்டில படிச்ச பொண்ணு… இப்ப கூட ஒரு ஐடி கம்பெனில வேல பாக்கறா… அடிக்கடி பாரின், வெளியூர்ன்னு போயிட்டு வருவா…
அப்பா : மனைவி கூடவா… ஆம்பளைங்க சொல்றதை கேட்டு வீட்டோட இருக்கிற பொம்பளைங்க தாண்டா உசத்தி
நண்பர் : ஹா…ஹா.. உன்னை நினைச்சா எனக்கு சிரிப்பு தாண்டா வருது. இப்படி பழைய பஞ்சாங்கமா இருந்து உன் பிள்ளைங்க லைஃபை கெடுத்துடாதே. எல்லாரும் எதிர்காலத்துல ஆபீசரா இருக்கும்போ, உன் பிள்ளைங்களை செக்யூரிட்டியா மாத்திடாதே.
அப்பா : அது .. வந்து
நண்பர் : ஸீ.. என் பொண்ணு கார் ஓட்டறா, என் வைஃப் கார் ஓட்டறாங்க.. நான் சமையலும் பண்ணுவேன். இந்த காலம் எல்லாருமே ஒருத்தருக்கொருத்தர் அன்பாவும், உதவியாவும் இருக்கிற காலம் டா…
அப்பா : கணவன் தான் வீட்டு தலைவனா இருக்கணும்ன்னு..
நண்பன் : தலைவன்னா எல்லாருக்கும் தொண்டனா இருக்கணும்ன்னு இயேசுவே சொல்லியிருக்காரு. வீட்டுத் தலைவன்னா அவன் பணிவானவனா, அன்பானவனா, எல்லாருடைய விருப்பத்துக்கும் ஏற்ப நடக்கிறவனா இருக்கணும்.
அப்பா : சரிடா… ஐ நீட் டு திங்க்.
நண்பர் : சரிடா.. ஒரு நாள் வீட்டுக்கு வா… நானே பிரியாணி சமைச்சு போடறேன்.. ஓக்கேவா
அப்பா : ஓக்கேடா.
காட்சி 5
( அப்பா & மகள் )
அப்பா : எம்மா.. உனக்கு என்ன படிக்கணும்ன்னு சொன்னே
மகள் : அதை சொல்லி இப்ப என்ன ஆக போவுது. நீங்க தான்… மார்த்தாண்டம் காலேஜ்ல அட்மிஷன் போட்டுட்டீங்களே…
அப்பா : பரவாயில்ல சொல்லு
மகள் : கம்ப்யூட்டர் சயின்ஸ் ஏ.ஐ.எம்.எல்
அப்பா : எங்கே படிக்கணும்னு சொன்னே
மகள் : சென்னை எஸ்.எஸ்.என் மாதிரி ஒரு நல்ல காலேஜ்ல
அப்பா : அங்கே சித்தி வீட்ல தங்கி படிப்பியா ?
மகள் : அம்மா அபப்டி தான் சொன்னாங்க, நீங்க தான் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டீங்க
அப்பா : பரவாயில்ல.. நீ அப்ளை பண்ணு. உனக்கு கவுன்சிலிங்ல இடம் கிடைக்கும். சென்னைலயே போய் படி.
மகள் : அப்பா.. என்ன சொல்றீங்க
அப்பா : ஆமாம்மா.. இது உன் லைஃப் .. நான் என்னோட வீண் பிடிவாதத்தால உன் எதிர்காலத்தை கெடுக்கக் கூடாதுல்லயா
மகள் : அப்பா.. நெஜமாவா சொல்றீங்க.. அப்போ மார்த்தாண்டத்துல கட்டின பணம்
அப்பா : அது கெடைக்கலேன்னா போகட்டும் பரவாயில்லை. உன் விருப்பம் தான் முக்கியம். நீ படி.
மகள் : ஐயோ அப்பா.. ஐம் வெரி ஹேப்பி. தேங்க்யூ சோ மச். அம்மா, இதை கேட்டா ரொம்ப சந்தோசப்படுவாங்க.
அப்பா : ம்ம்.. சாரிம்மா.. வெட்டியா ஆண், ஆண் ந்னு சொல்லிட்டிருந்தேன். உண்மையிலேயே ஒரு ஆண் மகன்னா, குடும்பத்தோட மகிழ்ச்சிக்காக வாழணும்ன்னு புரிஞ்சுகிட்டேன்.
மகள் : ரொம்ப சந்தோசம்பா.. நான் இன்னிக்கு பாயசம் பண்ணி தரேன் உங்களுக்கு.
அப்பா : வேண்டாம்… இன்னிக்கு நாம சாயங்காலம் வெளியே போய் சாப்பிடுவோம். ஃபேமிலியா ஜாலியா வெளியே போய் ரொம்ப நாளாச்சு.
மகள் : கண்டிப்பாப்பா.. தேங்க்யூ சோ மச்.
*
முற்றும்