Posted in Articles, Christmas Special, Sunday School

கிறிஸ்மஸ் என்பது அர்ப்பணிப்பு

கிறிஸ்மஸ் என்பது
அர்ப்பணிப்பு

*

கிறிஸ்மஸ்
அர்ப்பணிப்பின் விழா.

தர்ப்பரன் பாதத்தில்
அர்ப்பண மலராய்
நம்மை
அர்ப்பணிக்கும் விழா.

மகிமையின் கிரீடத்திலிருந்து
மனிதனின் சரீரத்துக்கு
இயேசு இறங்கியது
தந்தைக்கு தன்னை
அர்ப்பணித்ததன் அடையாளம்.

தூய்மையின் வழிநடந்த‌
அன்னை மரியாள்
கன்னியாய்,
தாயாகத் தயாரானது
பரமனுக்குத் தன்னை
அர்ப்பணித்ததன் அடையாளம்.

சந்தேகத்தின் நகக்கீறல்களால்
நங்கையை நசுக்காமல்
கனவின் குரல் கேட்டு
யோசேப்பு மரியாவை ஏற்றது
அர்ப்பணிப்பின் அடையாளம்.

வானத்தில் கேட்ட‌
கானத்தில்
இடையர்கள்
தொழுவம் தேடித் திரிந்தது
அர்ப்பணிப்பின் அடையாளம்.

ஞானியராய் இருந்தாலும்
வெளிச்சத்தின் விரல் பிடித்து
அரசரைத் தேடி
ஞானியர் அலைந்தது
அர்ப்பணிப்பின் அடையாளம்.

வாலின் நீளத்தை அதிகமாக்கி
ஒளியின் தூரத்தை
விசாலமாக்கிய விண்மீன்
அர்ப்பணிப்பின் அடையாளம்.

அழையா விருந்தாளிகளாம்
மரியாள் குடும்பத்தை
அசைபோட்டு வரவேற்ற‌
கால்நடைகள்
அர்ப்பணிப்பின் அடையாளம்.

கிறிஸ்மஸ்
அர்ப்பணிப்பின் அடையாளம்.

நாமும் அர்ப்பணிப்போம்
கரங்களை நழுவாத‌
களிமண்ணாய்,
கர்த்தரின் கரங்களில்
நம்மையே அர்ப்பணிப்போம்.

அர்ப்பணிப்பின்
கிறிஸ்மஸ் அர்த்தம் பெறும்.

*

சேவியர்

Posted in Articles, Christianity, Vettimani

கடவுள் பக்தன் உறவு

“ஏதாச்சும் தேவை இருந்தா மட்டும் தான் அவன் நம்மளத் தேடி வருவான்” என சிலரைப் பற்றிச் சொல்வதைக் கேட்டிருப்போம். அப்படிப்பட்ட நபர்களை யாரும் மதிக்க மாட்டார்கள். சுயநலவாதிகளாய் இவர்கள் சித்தரிக்கப்படுவார்கள். அப்படிப்பட்ட ஆட்களைப் பார்த்தாலே காத தூரம் ஓடிவிடுவோம். காரணம் அவர்களுடைய மனதில் உண்மையான அன்பு இருப்பதில்லை. தேவைக்காக நாடிச் செல்கின்ற ஒரு சந்தர்ப்ப உறவு மட்டுமே இருக்கும்.

“அட.. நான் அப்படியில்லப்பா.. தேவைக்காக மட்டும் ஒருத்தனை நாடிப் போறதே இல்லை” என சொல்லப் போகிறீர்களா ? ஒரு நிமிடம் பொறுங்கள். மனிதர்களிடம் அப்படி. உங்களுக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கிறது ?

அவசர கதியில் வீடு, வேலை வாழ்க்கை என ஓடிக்கொண்டே இருக்கும் போது நாம் மறந்து போகின்ற முதல் நபர் கடவுள் தான். சட்டென ஒரு நோய் வந்து படுக்கையில் விழும்போது தான் “ ஆண்டவா” என மனம் அழைக்கும். அதுவரை அந்த ஆண்டவர் ஒரு வேண்டா விருந்தாளியாய் தான் இருப்பார்.

உக்காந்து கடவுளை நினைக்கவே நேரமில்லைன்னு சொல்லிட்டு இருப்பார்கள். அலுவலக வேலையாக ஊர் ஊராக அலைந்து திரிவார்கள். கடவுள் விஷயங்களையோ பிரார்த்தனைகளையோ கண்டுக்கவே மாட்டார்கள். கேட்டால், அதுக்கெல்லாம் எங்கே டைமிருக்கு என சொல்வார்கள். ஒரு நாள் திடீரென மகனோ மகளோ ஒரு பெரிய நோயில் சிக்கிக் கொண்டால், அனைத்தையும் விட்டு விட்டு குழந்தையே கதியென கிடப்பார்கள். கோயில் கோயிலாக வழிபட தொடங்குவார்கள்.

நேற்று வரை இல்லாத டைம் இன்றைக்கு எப்படிக் கிடைத்தது ? நேற்று வரை இல்லாத கடவுள் சிந்தனை இன்று எப்படி வந்தது. ஒரு நாள் 24 நான்கு மணி நேரம் என்பது மாறி 48 மணி நேரமாச்சா என்ன ? இல்லை. பின் எப்படி ? அங்கே தான் வாழ்வின் முதன்மைகள் வந்து முகம் காட்டுகின்றன.

உண்மையில் நமக்கு நேரமில்லை தான். ஆனால் எவையெல்லாம் முக்கியம் என கருதுகிறோமோ அவற்றுக்கு ஒதுக்க நமக்கு நேரம் நிச்சயம் இருக்கிறது. குழந்தையின் உடல்நிலை முக்கியம் எனத் தோன்றும் போது மற்ற அனைத்தையும் ஒதுக்கி வைக்கிறோம். அதே போல, கடவுள் முக்கியம் என தோன்றினால் நமக்கு கடவுளோடு உறவாடவும், உரையாடவும் நேரம் கிடைக்கும்.

கடவுள் நம்முடைய தந்தையைப் போல இருக்கிறார். நம் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார். ஒரு தந்தை எப்போது மகிழ்ச்சியடைவார் ? நமது பணம் அவர் கைக்குப் போகும் போதா ? நமது தேவைக்கு அவரை பார்த்துப் பேசும் போதா ? நம்முடைய இயலாமையின் நேரத்தில் அவரைத் திட்டும் போதா ? இல்லை. எந்த தேவைகளும் இல்லாமல் அவரை சந்திக்கும் போது தான்.

“என்னப்பா.. இந்த நேரத்துல கால் பண்ணியிருக்கே.. என்னாச்சு ? “ என அப்பா பதட்டமாய்க் கேட்கும் போது, “இல்லப்பா.. உங்க ஞாபகம் வந்துச்சு.. பேசணும்போல தோணுச்சு.. அதான் பேசினேன்” என சொல்லிப் பாருங்கள். அது தான் ஒரு தந்தையின் மனதை நிச்சயம் நெகிழச் செய்யும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பெற்றோருடன் தொடர்பில் இருப்பது தான் அவர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம்.

“என் பையன் டெய்லி ஒருதடவையாச்சும் என்கிட்டே பேசிடுவான்” என பெருமிதத்தோடு பேசும் பாட்டிகளைப் பார்த்திருக்கிறேன். இந்த வயதிலும் தன்னிடம் தினமும் மகன் பேசுகிறானே என்பது தான் அவர்களுக்கு அதிகபட்ச ஆனந்தமாய் இருக்கிறது.

கடவுளும் அப்படிப்பட்ட ஒரு நட்புறவைத் தான் நம்மிடம் எதிர்பார்க்கிறார். நமது தேவைக்காய் நச்சரிக்கும் போதல்ல, தேவைப்படாத போதும் அவர் பெயரை உச்சரிக்கும் போது தான் அவர் மகிழ்கிறார். “சும்மா உன்னைப் பாக்க வந்தேன்” எனும் ஸ்நேகத்தை அவர் ரசிக்கிறார்.

சில வீடுகளில் ரொம்ப முதிய வயதினர் இருப்பார்கள். அவர்களால் எதுவும் செய்ய முடியாது. ஆனாலும் பிள்ளைகள் அவரிடம் வந்து அனுமதி கேட்பார்கள். “அப்பா நான் இதைச் செய்யவா ? அதைச் செய்யவா ? ” என்று. தந்தைக்கு எதுவும் புரியாவிட்டால் கூட, “அப்படியே செய்ப்பா..” என்பார்கள். தன்னிடம் வந்து மகன் அனுமதி கேட்கிறானே எனும் நிறைவு அவர்களிடம் இருக்கும். சுயமாய் முடிவெடுக்கும் நிலைக்கு வந்தபின்பும் கூட தந்தையைச் சார்ந்து இருப்பதில் இருக்கின்ற புனிதமான உறவு தான், இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பதும். எதைச் செய்யும் முன்னும், “இப்படிச் செய்யவா ? “என கடவுளிடம் கேட்பது எவ்வளவு இனிமையானது ?

கடவுளோடு நமக்குள்ள உறவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கு தொடர்ந்த உரையாடல்கள் கடவுளோடு செய்ய வேண்டியது அவசியம். இறைவனோடான உறவின் வெளிப்பாடு, சக மனிதனோடான மனிதாபிமான செயல்களில் வெளிப்பட வேண்டும்.

இறைவனுக்கும் நமக்குமிடையேயான தொடர்பு வலுவாக இருக்கும் போது, நாம் சோதனைகளை கடக்கின்ற வலிமை கிடைக்கின்றது. சிங்கத்தின் மேல் இருக்கின்ற சிற்றெறும்பு வழியில் எதிர்படுகின்ற சுண்டெலிகளைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை. சுண்டெலி வரும்போதல்ல, எப்போதுமே சிங்கத்தின் முதுகில் இருப்பதே உண்மையான அன்பு.

கடவுளோடு எப்போதும் தொடர்பில் இருந்தால் தான் கடவுள் விரும்புவது என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். தந்தையோடு இணைந்தே இருக்கின்ற மகனிடம் தான் தந்தையின் இயல்புகள் இழையோடும். அவனிடம் தான் தந்தையின் சிந்தனைகள் பதியமிடப்படும். இறைவனின் இயல்புகளும், இறைவனின் விருப்பங்களும் நமது வாழ்விலும் வெளிப்பட நாம் கடவுளோடு தொடர்பில் இருக்க வேண்டும்.

அதற்கு முதலில் கடவுளுக்கும் நமக்கும் இடையே மதில் சுவர் போல இருக்கின்ற விஷயங்களை விலக்க வேண்டும். அப்போது தான் கடவுளோடான தொடர்பு நமக்கு எப்போதும் இருக்கும். அந்த தடைகள் உலக கேளிக்கைகளாகவோ, தொழில்நுட்பங்களாகவோ, தீய சக்திகளாகவோ, தீய சிந்தனைகளாகவோ, சுயநலமாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

கடவுளுக்கும் நமக்குமிடையே உள்ள உறவை வலுவாக்குகின்ற நண்பர்களை நம்முடன் வைத்திருக்க வேண்டும். அவர்கள் நமது ஆன்மீக பாலத்தை வலிமையாகக் கட்டியெழுப்புவார்கள். நமது நண்பர்கள் நம்மை நன்மையின் வழியில் நடத்துபவர்களாக இருக்க வேண்டும்.

எதிர்பாராத நேரத்தில் மனைவிக்கு அளிக்கின்ற பரிசு குடும்ப உறவைக் கட்டியெழுப்பும். எதிர்பாராத நேரத்தில் தந்தையோடு செலவிடுகின்ற சில மணித் துளிகள் புனித உறவைக் கட்டியெழுப்பும். தேவைகளற்ற போதும் தாயின் கரம் பிடித்து அமர்ந்திருக்கும் பொழுதுகள் இறை பிரசன்னத்தை உருவாக்கம் செய்யும்.

அதே போல தான், நம்மைப் படைத்துக் காக்கின்ற இறைவனின் அருகாமையில் அன்புடன் அமரும் தருணங்கள் ஆன்மிக உறவைக் கட்டியெழுப்பும். இறைவனின் அருகில் அமர்வது என்பது, இறைவனுக்குப் பிரியமானவற்றைச் செய்வதே. இறைவனுக்குப் பிரியமானது என்பது மனிதநேயத்தின் உயர்நிலையே. எப்போதும் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பவர்கள், கண நேரமும் பிரியாமல் இறைவனோடு இருக்கிறார்கள்.

நமது தேவைகளை இறைவன் நிறைவேற்றுகிறார். நாம் இறைவனின் பிள்ளைகளாய் இருந்தால் மட்டும் போதுமானது.
*

சேவியர்
Thank you : Siva Thamizh

Posted in Articles

கிறிஸ்மஸ் என்பது நம்பிக்கை

5

கிறிஸ்மஸ் என்பது
நம்பிக்கை

கிறிஸ்மஸ்
நம்பிக்கையின் விழா.

காரிருளின் காலடிகளில்
துழாவித் திரிந்தவர்கள்
பரமனின்
பேரொளி கண்ட‌
தினம்.

கடவுளிடம்
வெளிச்சம் கேட்டவர்களிடம்,
கடவுளே வெளிச்சமாய்
வந்த தினம்.

மௌனத்தின் பள்ளங்களில்
புதைந்து கிடந்தவர்கள்
கீதத்தின்
பேரொலி கேட்ட‌
தினம்

சகதியே
கதியென்றிருந்தவர்களை
கரமொன்று
தூக்கி நிறுத்திய தினம்.

பதட்டத்தின்
பாய்மரப் பயணத்தில்,
நம்பிக்கையின் நங்கூரம்
தரையிறங்கிய தினம்.

கன்னியிடமும்
கனிவரும்,
விண்ணரசு
இனிவரும்
எனும் நம்பிக்கையின் தினம்.

கிறிஸ்மஸ்
நம்பிக்கை நிஜமான தினம்.

புறக்கணிக்கப்பட்ட‌
புற இனத்தாரிடம்
பரமன்
பரிவு காட்டுவாரெனும் நம்பிக்கை.

அகராதியிலிருந்தே
அகற்றப்பட்ட அடிமைகளை
ஆண்டவர்
அரவணைப்பார் எனும்
நம்பிக்கை !

வீதிகளிலிருந்து
விரட்டப்பட்ட ஒதுக்கப்பட்டோரை
விரல்களால் தீண்டி
விடுதலை தருவாரெனும்
நம்பிக்கை.

வீண் என வெறுக்கப்பட்ட‌
பாவிகளை
பந்தியில் அமர்த்தி
பசியாற்றுவாரெனும்
நம்பிக்கை.

பாவத்தின் பதுங்கு குழிகளில்
பயந்து கிடப்பவர்களை
மீட்பின்
எக்காளம் முழங்கி
எழுப்புவாரெனும் நம்பிக்கை.

நிராயுதபாணியாய்
நிர்மூலமாக்கப்பட்ட‌
பாலை இதயங்களிலும்
நீரூற்றை
புறப்படச் செய்வாரெனும்
நம்பிக்கை.

கடவுள்
விண்ணகத்தின் மேனியிலல்ல‌
மண்ணகத்தின்
வீதியிலும் வலம் வருவாரெனும்
நம்பிக்கை.

தீர்ப்பின் தொனியாயல்ல‌
மீட்பின் ஒளியாகவும்
இறைவன்
இறங்கி வருவாரெனும்
நம்பிக்கை.

மதத்தின் மதில் சுவர்களால்
பிரிக்கப்பட்ட‌
மனிதர்களை
ஆன்மிகத்தின் அழைகுரலால்
அரவணைப்பாரெனும்
நம்பிக்கை

அழுகுரலில்
நுரைகளிலிருந்தும்
மகிழ்வின்
முத்துகளை
மீண்டெடுப்பார் எனும் நம்பிக்கை.

அழையா விருந்தாளிக்கும்
நிலையாம் வாழ்வை
நல்குவாரெனும்
வலுவான நம்பிக்கை.

கிறிஸ்மஸ்
நம்பிக்கையை விதைக்கிறது.

நம்பிக்கை
விசுவாசத்தின் முதல் நிலை.
விசுவாசம்
செயல்களின் முதல் நிலை.
செயல்கள்
புனிதத்தின் முதல் நிலை.
புனிதம்
இறைவனின் சாயல் நிலை.

கிறிஸ்மஸ் நாளில்
நம்பிக்கை கொள்வோம்.

*

சேவியர்

Posted in Articles, Christmas Special, Sunday School

3 கிறிஸ்மஸ் என்பது நிறைவேறுதல்

கிறிஸ்மஸ்
முன்னுரைத்த வார்த்தைகளின்
பின்னுதித்த‌
தினம்

இறைவாக்கினரின்
வார்த்தைகள்
குறைவின்றி
நிறைவேறிய தினம்

இறவாத வார்த்தையாய்
இறைவன் வந்தார்
இயேசு என‌
விண்ணகம் அவருக்கு
பெயர் சூட்டியது.

விண்ணோடு இருந்தவர்
நம்மோடு இருக்க வந்தார்
இம்மானுவேல் என‌
இறைவாக்கு அழைத்தது.

புனிதத்தின் தேரில்
பயணித்தவர்
பாவத்தின் வீதியில்
பாதம் பதித்தார்
மீட்பர் என்றது இறைவாக்கு.

இருளில் இருந்தவரின்
இதயங்களில்
வெளிச்சத்தை ஊற்றி நிரப்ப‌
இறங்கி வந்தார் இயேசு.
மனுமகன் என்றது இறைவாக்கு.

கன்னியின் வயிற்றில்
கனியாவார்
ஆவியின் அருளால்
உருவாவார் !
ஆனந்தம் என்றது இறைவாக்கு.

பாலகன் பிறப்பான்
பாரினில் சிறப்பான்
ஆட்சியைத் தருகிற‌
அதிசயம் அவரே !
அன்று உரைத்தது இன்று உறைத்தது.

எப்பிராத்தா எனும்
பெத்லேகேம்
சிறுமையில் பெருமையை
சூடிக்கொள்ளும் !
வாக்கு தொழுவைத் திறந்தது.

யாக்கோப் வழியில்
விண்மீன் விழித்தெழும்,
யூதா வம்சம்
செங்கோலில் நிலைத்திடும்,
ஈசாப் அடிமரம்
துளிரை அழைத்திடும்
சொன்னது எதுவும் சிதையவில்லை.

பிரமிடு தேசத்தில்
இளைப்பாற,
புரியா வாக்கும்
நிறைவேற‌
எகிப்தில் இருந்து மகனை
அழைத்தேன் !
என்றொரு வார்த்தையும் நிஜமாக.
கிறிஸ்மஸ் வந்தது நிலையாக !

கிறிஸ்மஸ்
இறை அன்பின் பரிமாற்றம்
இறைவாக்கின் நிறைவேற்றம்.

கிறிஸ்மஸ் நாள்
சொல்வது இதைத் தான்
இறைவார்த்தை
நிறைவேறும்,
நிராகரித்தால் நரகம் வரும்

*

சேவியர்

Posted in Articles, Christmas Special, Sunday School

2.கிறிஸ்மஸ் என்பது தாழ்மை

2

கிறிஸ்மஸ் என்பது
தாழ்மை

ஒரு குழந்தை
பிறந்தது !
ஏழ்மைப் பெற்றோரின்
எளிய மகனாய்.

தொப்புழ் கொடியறுத்து
துடைத்துச் சுற்ற‌
ஒரு
புதிய துணி இருக்கவில்லை.
கிழிந்த கந்தலே கிடைத்தது.

சத்திரங்களில் இடம் வாங்க
சிபாரிசுக் கடிதங்கள்
இருக்கவில்லை.
அறைகளைத் திறந்து கொடுக்க‌
தூரத்து சொந்தங்களும்
வாய்க்கவில்லை.
தொழுவமே அழைத்தது.

பிரசவம் பார்க்க‌
தாதிகள் வரவில்லை !
துணையாய் நிற்க‌
தோழிகள் வரவில்லை.

நீதிமானாய் ஒருவர்
உடனிருந்தார்,
அவர்
குழந்தையின் தந்தையைப் போல !
ஆனால் தந்தையல்ல !

குளிர் உறைந்த‌ காற்று
குத்தீட்டி வீசியது
சுவர்களால் மூடிய‌
அறைகள் கிடைக்கவில்லை.

இரவின் கருமை
இறுக்கிப் போர்த்தியது
அழகாய் ஏற்றும்
விளக்குகள் இருக்கவில்லை.

மொழியறியா மாடுகள்
அசை போட்டன,
பொருளறியா ஆடுகள்
தலையாட்டின.

சந்தனமும், சாம்பிராணியும்
அறையை நிறைக்கவில்லை
கால்நடையின்
கழிவுகளே தெறித்தன.

தொழுவில் தான் எழுந்தது
வருகையின்
முதல் அழுகை.

மேய்ப்பனாய் வந்தவர்
மாடுகளிடையே துயின்றார்
ஆயனாய் வந்தவர்
ஆடுகளிடையே சிரித்தார்.

பெத்லகேம்
பரமனைப் பெற்றது !
எந்தச் செவியும்
இந்த ரகசியம் அறியவில்லை.

மரியின் தாலாட்டில்
மனுமகன் தூங்கினார்
புரியாத பிரமிப்பில்
அன்னையும் தாங்கினார்.

கன்னியிடம் இருந்தார்
மக்களை
மீட்டெடுக்க வந்தவர் !
மக்களோ
கணக்கெடுப்பில்
கவனம் செலுத்தினர்.

மண்ணகம் மௌனித்ததால்
விண்ணகம்
களமிறங்கியது.
தூதர்கள் சேதியோடு வந்தனர்
வானத்தில் கானத்தோடு வந்தனர்.

நட்சத்திரம்
ஒளி படைத்தவர் மேல்
ஒளியைப் பரப்பியது.

மண்ணகம்
விரிந்த கண்களோடு
மயங்கியது
மாளிகை
உண்மையை ஏற்கத் தயங்கியது.

தாழ்மையின்
தாழ்வாரங்களில்
மேன்மையின் மகத்துவம்
முளைக்காதென்றது.

தாழ்மையின்
துவக்கப் புள்ளியாய்
மலர்ந்தது கிறிஸ்மஸ்

இயேசு சொன்னார்,
தன்னைத் தாழ்த்துவோன்
உயர்த்தப்படுவான்.
தன்னை உயர்த்துவோன்
தாழ்த்தப்படுவான்.

லூசிபர் தன்னை உயர்த்தினான்
பாதாளம் அவனுக்கு
நுழைவுச் சீட்டு கொடுத்தது.

இயேசு தன்னைத் தாழ்த்தினார்
கழுமரம் அவருக்கு
விண்ணக சாவியை நீட்டியது.

கிறிஸ்மஸ் நாளில்
பகட்டில் பொதிந்த‌
ஆடம்பரம் அகற்றுவோம்
இயேசுவில் பதிந்த‌
தாழ்மையை அணிவோம்.

*

சேவியர்

Posted in Christmas Special, Sunday School

1. கிறிஸ்மஸ் என்றால் அன்பு

1

கிறிஸ்மஸ் என்றால்
அன்பு

கிறிஸ்மஸ் !
அன்பின் முழுமை
அவனிக்கு வந்த தினம்

தந்தையின் அன்பு
தரணிக்கு வந்த தினம்.

தூதனின் கர்வம்
விண்ணக பாவத்தின்
துவக்கம்,
ஏவாளின் ஆர்வம்
மண்ணக பாவத்தின்
துவக்கம்,
இயேசுவின் வருகை
அன்பின் பாலத்தின்
தொடக்கம்.

நண்பனுக்காய்
உயிர்தருதல்
அன்பின் உயர் நிலை.
எதிரிக்காய்
உயிர் தருதல்
அன்பின் தேவ நிலை.

இயேசுவின் வருகை
காணா அன்பின்
உருவ நிலை.

மீட்பரின் தொடக்கம்
மீட்பதன் தொடக்கம்.
இறையினை அடைதலே
நிறைவினை அடைதல்.

கிறிஸ்மஸ்
அன்பினைப் போதிக்கிறது.

தன்னலமற்றுத்
தன்னையே தரும்
தாய்ன்பு.

கழுமரம் நோக்கி
தொழுவினில் உழலும்
பேரன்பு

கற்றுக் கொள்வோம்.

பாலனாய் பிறந்த‌
பரமனுக்கு
அன்பினை அளிப்போம்.

குடிலினில் பிறந்த‌
குழந்தைக்கு
பிரியத்தை அளிப்போம்.

மரியிடம் பிறந்த‌
மழலைக்கு
மனதினை அளிப்போம்.

நினைவில் கொள்வோம்,
அன்பு என்பது
வார்த்தைகளைக்
கொட்டுவதல்ல‌
செயல்களால்
காட்டுவது !

இயேசுவின் வருகை
அன்பின் செயல்வடிவம் !
அதையே மனதில் கொண்டு
என்றும் செயல்படுவோம்

*

சேவியர்

Posted in Christianity, SAINTS

புனித சவேரியார் : கவிதை

 

புனித சவேரியார்

 

*

 

விதைக்கப்படும்

இறைவார்த்தை

கனி கொடுக்காமல்

திரும்புவதில்லை.

 

சவேரியாரின் வாழ்க்கையையும்

ஒரு

வசனம் தான்

புடம் போட்டது,

பணிவாழ்வுக்கான தடம் போட்டது.

 

உலகெல்லாம்

உன் சொந்தமாயினும்

ஆன்மா

அழிந்துவிட்டால்

என்ன பயன் ?

 

இந்த

சத்திய வசனம்

சவேரியாரின் இலட்சியங்களை

இடம் மாற்றி வைத்தது.

 

1506, ஏப்ரல் 7 ல் பிறந்த

சவேரியாரின்

கனவுகளெல்லாம்

கல்வியின் தோளிலேறி

கல்லாமையை

கழுவிலேற்றுவது தான்.

 

பேராசிரியர் கனவொன்றே

இலக்கானது,

மற்ற சிந்தனைகளெல்லாம்

விலக்கானது. 

 

அதற்கென

அறிவின் ஆழிக்குள்

அகம் புதைத்துத்

தவம் இருந்தார்.

 

அவரது

கனவுகளுக்குள் புகுந்து

கண்ணி வெடி வைத்தவர்

இக்னேஷியஸ்

எனும் இஞ்ஞாசியார்

 

அவர் தான்

செல்வத்தில் பிறந்த சவேரியாருக்கு

எளிமையின் தேவையை

எடுத்துரைத்தவர்.

 

உலகை வெல்லும்

சிந்தை சுமந்தவருக்கு

உலகைக் காக்கும்

தேவையை உரைத்தவர்.  

 

மதத்துக்குள் இருந்த

ஆன்மீகத்தை,

ஆன்மீகத்துக்குள் இருந்த

மனிதத்தை

சவேரியாரின் இதயத்தில்

பந்தி வைத்தவர் அவர் தான்.

 

சவேரியாரை

ஒற்றை வசனத்தால்

வெற்றி கொண்டார்.

 

சவேரியார்

கப்பலின் சுக்கானை

கடவுளை நோக்கித் திருப்பினார்.

 

தனது

ஒன்பதாம் வயதில்

தந்தையை இழந்தவர்,

பத்தொன்பதாம் வயதில்

அன்னையைப் பிரிந்து,

விண்ணகத் தந்தைக்காய்

வாழ முடிவெடுத்தார்.

 

ஸ்பெயினில் பிறந்த

அவரை

பாரீஸில் வாழ்ந்த

பதினோரு ஆண்டுகள் பரிசுத்தமாக்கின.

 

கலையிலும் தத்துவத்திலும்

முதுகலைப் பட்டங்கள்

அவரை உயர்த்தின.

விரிவுரையாளர் பதவி

நான்கு ஆண்டுகள்

அவரைப் போர்த்தியது. 

 

ஆன்மீக தாகம்

அவருக்குள் நதியானது

ஏழையர் மீதான நேசம்

அவருக்குள் அருவியானது. 

 

இவரும் சில குருக்களுமாய்

இறைபணிக்கென

இயேசுவின் சமூகம்

எனும் சபைக்கு விதைபோட்டனர்.

அதுவே பின்னர்

இயேசு சபையென

புகழ் பெற்றது.  

 

1537ல் சவேரியார்

குருவானார் !

பணிவாழ்வுக்கென

உருவானார்.

 

நாற்பது நாள்கள்

செபத்தில் நிலைத்திருந்து

முதல்

திருப்பலியை நிறைவேற்றினார்.

 

எதிர்பாரா சூழல் தான்

அவரை

இந்தியாவுக்கு அனுப்பியது.

 

இறைவனின் திட்டம்

வியப்பானது,

வேடிக்கை விழிகளுக்கு

விளங்காதது. 

 

இந்தியா

செல்ல வேண்டிய

குரு நிக்கோலஸ்

நோயில் விழுந்தார்,

சவேரியார் அனுப்பப்பட்டார்.

 

இந்தியா

அவரை ஆக்கிரமித்தது.

அவர் செய்த

பணிகளின் பட்டியலில்

கிறிஸ்தவமே பிரமித்தது.

 

மருத்துவ மனைகளில்

தொழிலாளர் மத்தியில்

வீதிகளில்

நிராகரிக்கப் பட்டோரிடையே

அதிகாரிகளிடையே

பொதுமக்களிடையே

என அவர் பணி

எல்லைகளை விரிவாக்கியபடி

சீறிப் பாய்ந்தது.

 

கிராமங்களில்

குழந்தைகளை அழைத்து வந்து

மறைக்கல்வியாய்

இறைக் கல்வி போதித்தார்.

 

சிறுவர்களை

நற்செய்தியாளர்களாக்கிய

முதல் பெருமை

சவேரியாரின் சிறப்பம்சம்.

 

சவேரியாரின் வல்லமையால்

நோய்கள்

நோயாளிகளை

தனியே விட்டு விட்டு

தலை தெறிக்க ஓடின.

 

அவரிடம் இருந்த

தூய ஆவியால்

தீய ஆவிகளெல்லாம்

திடுக்கிட்டுத் தலைமறைவாயின.

 

சவேரியாரின்

பணி தொடர்ந்தது.

கோவாவில் துவங்கிய பயணம்

தென்

தமிழகக், கேரளக் கரையோரங்களில்

விரைந்து திரிந்தது.

 

இயேசுவின் பெயர்

வல்லமையாய் விளம்பப்பட்டது

புன்னகை மாறா

சவேரியாரின் குணம்

மக்களால் விரும்பப்பட்டது.

 

பல்லாயிரக்கணக்கான

மக்கள்

பரமனிடம் வந்தனர். 

 

ஒரே ஆண்டில்

மக்களின் துணையுடன்

நாற்பது ஆலயங்கள் கட்டி

விண்ணகத்தை

மகிமைப்படுத்தினார். 

 

அவர் பயணித்த

திசைகளெங்கும்

தூதர்கள்

புதுமைகளோடு காத்திருந்தனர். 

 

அவர்

பேசிய இடங்களெங்கும்

ஆவியானவர்

நெருப்பு நாவுடன் பூத்திருந்தார்.

 

ஒரு முறை

திருவிதாங்கூர் மன்னனை

எதிர்த்து வந்த படையை

சிலுவை, செபமாலை

கரங்களில் ஏந்தி

எதிர்கொண்டார் சவேரியார்.

 

படையோ

தனக்கு முன்னால்

ஆஜானுபாகுவான உருவம்

வருவதாய்

காட்சி கண்டு கதறியது.

 

தோற்ற மயக்கத்தால்

தோற்று ஓடியது

வடுகப் படை. 

 

சவேரியார்

மன்னனின் பரிவைப் பெற்றார்

இறைவனைப் பகிர

அனுமதி பெற்றார். 

 

ஒரு கடல் பயணத்தில்

சவேரியாரின் சிலுவை

தண்ணீரில் தவறி விழுந்தது

சவேரியார் கலங்கினார்.

பயணம் முடித்து

தரையில் காலடி எடித்து வைத்தவர்

வியந்தார் !

 

கரையில் ஒரு நண்டு

வாயில் சிலுவையுடன்

அவருக்காய்க் காத்திருந்தது.

அறிந்தவர் அதிசயித்தனர்.

 

புதுமைகள்

சவேரியாருக்கு வாடிக்கையானது.

 

ஒரு முறை

கைகால்கள் கட்டப்பட்டுக் கிடந்த

சவேரியார்

கட்டுகள் சட்டென உடைய

எழுந்து நடந்தார். 

 

இறந்து போன

சிறுவனுக்கு உயிர் கொடுத்த

நவீன எலியாவானார்.

 

நோயாளிகளை

இயேசுவின் பெயரால்

நலமாக்கினார். 

 

பயணம்

சவேரியாரின் பானமானது.

இவர் பயணித்த தூரம்

சுமார் 38 ஆயிரம் கிலோ மீட்டர்

என்கிறது வரலாறு.

 

1952 ம் ஆண்டு டிசம்பர் 3,

சவேரியார் எனும்

மாபெரும் பணியாளர்

மரணத்தை தழுவினார்.

 

கடவுளுக்காய்

பாய்ச்சலாய் திரிந்தவர்

காய்ச்சலால் மாண்டார்.

 

ஆன்மா அழிந்தால் என்னாகும் ?

எனும் கேள்வியாய்

அழியா வாழ்வைத் தேடியவரின்

உடலும்

அழியாமல் இருப்பது வியப்பு.

 

உலகிலேயே

முதல் சவேரியார் ஆலயம்

தமிழ் மண்ணில்

குமரிமாவட்டம் கோட்டாறில்

முளைத்தது. 

 

1622 இல்

சவேரியார் புனிதரென

அடையாளப் படுத்தப்பட்டார்.

 

நூற்றாண்டுகள் கடந்தும்

அவரது பெயர்

இந்தியாவில் மங்கவில்லை

அவரது பணி

இதயங்களை நீங்கவில்லை.

 

கேட்ட வரம்

வாங்கித் தரும் சவேரியார்,

கீழ்த்திசை நாடுகளின் திருத்தூதர்,

பவுலுக்குப் பின் வந்த

இரண்டாம் பவுல்

என்றெல்லாம் அவர் புகழப்படுகிறார்.

 

சவேரியாரின் வாழ்க்கை

ஆன்மாவை

அழியாமல் காக்க

அழைப்பு விடுக்கிறது.

செவிமடுப்போம்

 

*

 

சேவியர்