Posted in Adam - Noah - Abraham

ஆதாம், நோவா, ஆபிரகாம்

Image result for ADAM EVE

வெறுமையிலிருந்து
உலகைப் படைக்கிறார்
கடவுள்.

உருவமற்ற
ஏதும் பருவமற்ற
வெற்றிட இருள் கிடங்காய்
பூமி கிடந்தது.

தண்ணீ­ரின் மேல்
அசைவாடிக் கொண்டிருந்தது
ஆண்டவரின் ஆவி.

‘ஓளி தோன்றுக’ என்றார் கடவுள் !
இரவின்
கர்ப்பத்தைக் கீறி
சட்டென்று எங்கும்
வெளிச்சக் கீற்றுகள்
விளைந்தன.

ஒளி,
நல்லதென்று கண்டார்
கடவுள்.

ஒளியையும் இரவையும்
இரண்டாய் உடைத்து
அதற்கு
இரு பெயரிட்டார்.
பகல் – இரவு.
அங்கே
முதல் நாள் முடிவுற்றது.

நீர்த்திரை
நடுவே வானம் வளரட்டும்.
அது
நீரிலிருந்து நீரைப் பிரிக்கட்டும்
என்றார் கடவுள்.

அப்படி,
பூமியின் முகத்திலும்,
வானத்தின் முதுகிலுமாய்
தண்ணீ­ர்
இரண்டாய் பிளவுற்று முடிந்தபோது
இரண்டாம் நாள்
நிறைவுற்றிருந்தது.

வானுக்கு விண்ணுலகம் என்றும்
பூமிக்கு
மண்ணுலகம் என்றும்
நாமம் இட்டார் நாதன்.

மண்ணின் நீரெல்லால்
ஓரிடம் கூடி
உலர்ந்த தரை
உருவாக‌ட்டும் என்றார்.
உருவாயிற்று.

தரைக்கு நிலமென்றும்
நீருக்குக் கடலென்றும்
பெயர் சூட்டி
ம‌கிழ்ந்தார் கடவுள்.

அப்போது
மூன்றாம் நாள் முடிவுற்றது.

பகலை ஆள‌
பகலவனும்,
இரவை ஆள
நிலவுமாக,
இரு பெரும் ஒளிக் கோளங்களை
உருவாக்கினார் கடவுள்.

காலங்களை
கணக்கெடுக்கும் கருவியாய்
அது
பயன்படட்டும் என்றார்.

நல்லதென்று அவற்றைக்
கண்டபோது
நான்காம் நாள் நிறைவுற்றது.

திரளான உயிர்கள்
உருவாகட்டும் கடலில்,
சிறகுள்ள பறவைகள்
தோன்றி பறக்கட்டும் வானில்
என்று
உயிரினங்களை உருவாக்கினார்.

ஐந்தாம் நாள்
அப்பணியில் அடங்கியது.

ஆறாம் நாள்,
அத்தனை விலங்குகளும்
ஊர்வன இனங்கள் யாவும்
உருவாகட்டும் என்றார்.
உருவாயிற்று.

பின்,
மனிதனை என்
சாயலில் செதுக்குவேன்.
பூமியின் அத்தனையையும்
அவன்
ஆளுகைக்குள் அடக்குவான்.

அனைத்து உயிரினங்கள்
தாவரங்கள் எல்லாம்
அவனுக்கு
உணவாய் அளிப்பேன் என்றார்.

அவ்வாறே,
மண்ணுலகின் மண்ணெடுத்து
ஓர்
மனித உருவம் வனைந்து
தன்
மூச்சுக் காற்றை ஊதி
சுவாசம் பகர்ந்தார் பரமன்.

மண்ணின் உருவம்
மனிதனாய் ஆனது.
ஒரு
சகாப்தத்தின் ஆணிவேர்
அங்கே ஆரம்பமானது.

மனிதனை கடவுள்
அத்தனை வளங்களும்
மொத்தமாய் உள்ள
ஏதேன் தோட்டத்தில்
அவனை வைத்தார்.

படைப்பின் பணியை
முடித்த திருப்தியில்
ஏழாம் நாள்
ஓய்வு எடுத்தார்.

பூமியின் ஆடையாய்
மூடுபனி மட்டுமே
முளைத்திருந்தது அப்போது.

இன்னும்
மழை தன்
முதல் பிரசவத்தை
நடத்தவில்லை.

தன் முதல் மனிதனுக்கு
ஆண்டவர்
ஆதாம் என்று பெயரிட்டார்.

ஏதேனில் அத்தனை
ஏற்றங்களையும் அவனுக்காய்
ஏற்படுத்தி,
ஒரு மரத்தை மட்டும்
தடை விதித்தார்.

அதை உண்டால்
நீ
சாகவே சாவாய் என்று
முதல் எச்சரிக்கையை
விடுத்தார்.

அதுவே
மனுக்குலத்தின் மீது
விடுக்கப் பட்ட
முதல் எச்சரிக்கை.

அதுவே
மனிதனுக்கு கொடுக்கப்பட்ட
முதல் பணி.

அதுவே
நகர்த்தி வைக்கப்பட்ட
முதல் நம்பிக்கை.

விலங்குகள்
பறவைகள் அனைத்துக்கும்
ஆதாம்
இட்ட பெயரே
சொந்தப் பெயராயிற்று.

அப்படி,
அத்தனை உயிர்களுக்கும்
ஆதாம்
முதல் தந்தையானான்.

ஆனால்,
தனக்குச் சரியான
துணை ஒன்றும் அவனுக்கு
தட்டுப் படவில்லை.

தன் சாயலை
எந்த பறவையும்,
எந்த விலங்கும்
சார்ந்திருக்கவில்லை.

கடவுள்,
அவனுக்கோர்
துணை செய்யத் திட்டமிட்டார்.

அவன் கண்களின் கீழ்
ஆழ் உறக்கம்
ஒன்று
தோன்றச் செய்து,

பின்
அவன் விலா எலும்பொன்றை
உருவி அதை
பெண்ணாய் படைத்து
துணையாய் தந்தார்.

ஆணிலிருந்து
பிறந்ததால் அவள்,
பெண் எனப் பட்டாள்.

ஆண்டவர் அவளை
ஆதாமுக்கு
துணையாய் அளித்தார்.

காலெலும்பை எடுத்தோ,
தோளெலும்போ எடுத்து
பெண்ணைப் படைக்காமல்,
இருவரும்
சமமாய் இருக்கக் கருதி
விலா எலும்பை தேர்ந்தெடுத்தார்
கடவுள்.

இருவருமே
நிர்வாணத்தை அணிந்திருந்தனர்
ஆனால்
அவர்கள்
வெட்கத்தை அறிந்திருக்கவில்லை.

சூழ்ச்சிக்கார பாம்பெனும்
சாத்தான்
ஓர் நாள் பெண்ணைச் சந்தித்தது.

விலக்கப்பட்ட மரத்தின்
கனியைத் தின் என்று
விஷ ஆலோசனை அளித்தது.

பெண்ணோ,
அது விலக்கப்பட்ட கனி
தொடுதல் தகாது என்றாள்.

பாம்போ,
நீ ஏதும் அறியாதவள்,
அது
சுவைகளின் சிகரம்,
அழகின் ஆதாரம்.

அக்கனி தீக்கனி அல்ல
அதை உண்டால்
நீ
கடவுளைப் போல் ஆவாய்.

ஏமாந்த பெண்,
அதைத் தின்று,
கணவனுக்கும் கொடுத்து
தின்னச் சொன்னாள்.

பாம்பின் திட்டம்
பலித்து விட்டது.

முதல் நம்பிக்கைத் துரோகம்,
முதல் வாக்கு மீறல்,
முதல்
மனித சிந்தனை அங்கே
நடந்து முடிந்தது.

அப்போது
வெட்கம் அவர்களை
வட்டமிட்டது.
முதன் முதலாய்
நிர்வாணம் என்ன என்பது
நிர்ணயமானது.

இலைகளை அடுக்கி
ஆடை உடுத்தினர்.

ஆண்டவர் வரும்
ஓசை கேட்டதும்
மரங்களின் முதுகில்
மறைந்தனர்.

ஆண்டவர்,
மனிதனை கூப்பிட்டு
‘நீ எங்கே இருக்கிறாய் ?’
என்று கேட்க,

எனக்கு
கூச்சமாய் இருக்கிறது.
நான்
வெட்கத்தின் வெளிச்சத்தில்
மறைவாய் இருக்கிறேன்
என்றான்.

தன்
கட்டளையின் கதவுகள்
உடைக்கப் பட்டதை
கடவுள் அறிந்து சினந்தார்.

நான் விலக்கியதை
நீ புசித்தாயா ?
யார் உனக்கு
அந்த சிந்தனை தந்தது ?
கடவுள் கர்ஜித்தார்.

நீர் தந்த பெண்
என்னை
உண்ணச் செய்தாள்.

பெண்ணோ,
ஆண்டவரே
பாம்பு என்னை
பாடாய்ப் படுத்திற்று என்றாள்.

குற்றத்தை
ஏற்றுக் கொள்ளாமல்
பிறர் தோளில் திணிக்கும்
ஓர்
மன நிலை
ஆதாம் காலத்திலேயே
அரங்கேறிவிட்டது.

பரமனின் பார்வை
பாம்பை எரித்தது.

நீ,
அற்பப் பிராணியாய்
அறியப்படுவாய்,
தவழ்ந்து தவழ்ந்தே வாழ்வாய்.
புழுதிக் கிடையில்
ஊர்ந்து வருந்துவாய் என்றார்.

பெண்ணைப் பார்த்து,
உன்
பிரசவ வலியை பெரிதாக்குவேன்.
ஆண் உன்னை ஆள
ஆணையிடுகிறேன் என்றார்.

மனிதனைப் பார்த்து,
என்
கட்டளையை நீ
விட்டு விட்டாய்.

நிலம் உன்னால் பாழடையும்.
உன்
வியர்வை விழ உழை !
அப்போது தான்
உனக்கு உணவு வழங்கப் படும்.

நீ
மண்ணாய் இருக்கிறாய்
மண்ணுக்கே திரும்புவாய்.

போ,
ஏதேனுக்கு வெளியே
பாழ் வெளியை நீ
ஆழ உழுது ஆகாரம் தேடு.
என்று அனுப்பினார்.

ஆதாம், பெண்ணை
ஏவாள் என்றழைத்து
ஏதேனை விட்டு வெளியேறினான்.

0cain-slaying-abel-jacopo-palma-1590

ஆதாமும் ஏவாளும்
கூடி வாழ்ந்தனர்.
காயீன் என்னும் குமாரனை
ஏவாள்
ஈன்றெடுத்தாள்.

பின்
ஆபேல் என்னும் மகனை
பெற்றாள்.

காயீன்,
நிலத்தில் உழைக்கும்
பணிசெய்தான்.

ஆபேல்
ஆடுகளை மேய்க்கும்
ஆயனானான்.

இருவரும் ஒருநாள்
ஆண்டவரிடம்
காணிக்கை படைக்க
காத்து நின்றனர்.

ஆபேலின் கரத்தில்
கொழுத்த ஓர் ஆடு
மனதில் ஆனந்தத்தோடு !

காயீன் பக்கமோ
சில காய்கறிகள்
சம்பிரதாய சங்கதியாக.

ஆபேலின் காணிக்கை
ஆண்டவரால்
ஆனந்திக்கப் பட்டு,
காயீன்
நிராகரிக்கப் பட்டான்.

காயீனை நோக்கிய கடவுள்
உன் காணிக்கை
உன்னதமானதாய் இருக்கட்டும்.
என்றார்.

கோபத்தின் கடலில்
காயீன்
எரிந்தான்.

ஒரு நாள்
ஆபேலை அழைத்துக் கொண்டு
நிலத்துக்குச் சென்றான்.

பழி வேகம்
அவன் மனம் முழுதும்
படர்ந்து வளர்ந்தது.

அவன்
ஆபேலின் மேல் பாய்ந்து
ஆபேலைக் கொன்றான்.

முதல் கொலை
அங்கே
அரங்கேறியது.

நல்ல இதயம் கொண்ட
மனிதனுக்கு
சோதனைகள்
ஆதாம் காலத்திலேயே
ஆரம்பமாகி விட்டது !

ஆண்டவர்
காயீனை அழைத்து,
‘ஆபேல் எங்கே ?’ என்றார்.

காயீனோ,
நான் என்ன அவனுக்கு
காவலாளியா ?
அறியேன் ஆபேல் இருக்குமிடம்
என்றான்.

கடவுளோ,
யாரிடம் மறைக்கிறாய்
நீ.
ஆபேலின் இரத்தம்
இதோ
என்னை நோக்கி கதறுகிறது.

மொத்த உலகமும்
என் கண்களுக்கு கீழ்
விரிந்து கிடக்க
நீ
மறைக்க முயல்வது
மதியீனம் அல்லவா ?

போ,
நாடோடியாய் அலை.
இன் இங்கே
உனக்கு அனுமதி இல்லை
என்றார்.

ஆதாம் பரம்பரை
தழைக்கலாயிற்று.

ஆதாம்
தொள்ளாயிரத்து
முப்பது ஆண்டுகள் வாழ்ந்தான்.

5

அறியப்படும் ஆதாமின்
தலைமுறை அட்டவணை
இதுவே.

ஆதாமுக்கு
நூற்று முப்பதாவது வயதில்
சேத்து பிறந்தான்,
சேத்துவுக்கு ஏனோசு பிறந்தான்.
ஏனோசுக்கு கேனாக் பிறந்தான்,
கேனாக்குக்கு மகலலேல் பிறந்தான்,
மகலனேனுக்கு எரேது பிறந்தான்,
எரேதுக்கு ஏனோக்கு பிறந்தான்,
ஏனோக்குக்கு மெத்துசேலே பிறந்தான்,
மெத்துசேலாவுக்கு இலாமேக்கு பிறந்தான்,
இலாமேக்கு நோவா பிறந்தார்.

அனைவருக்கும்
இது தவிர ஏராளம்
புதல்வர்களும்,
புதல்வியரும் பிறந்தனர்.

நோவாவின்
ஐநூறாவது வயதில்,
அவருக்கு
சேம், காம் , எபேத்து
என்று மூன்று புதல்வர்கள்
பிறந்தனர்.

அந்த காலகட்ட
மனிதர்கள்
ஆயிரம் ஆண்டுகள்
ஆயுள் கொண்டிருந்தனர்.

பின்
மனிதர் பெருகுதல்
அதிகரித்தபின்,
அவர்கள்
தீய வழிகளை அதிகமாய்
தீண்டினர்.

பார்த்த பெண்களை எல்லாம்
மனைவியராய்
ஆக்கினர்.

கடவுளின் கோபம்,
அவர்களின் ஆயுளை
நூற்று இருபதாய் சுருக்கியது.

தன் திட்டங்களை எல்லாம்
மனிதன்
காலில் மிதித்து
புதைத்ததை எண்ணி
கடவுள் கலங்கினார்.

எங்கும்
தீமையின் ஆறுகள்
திமிறி ஓடுவதைக் கண்டு
துயரம் அடைந்தார்.

இனிமேல்
இந்த மனித குலமே
மரணிக்க வேண்டும் என்று
தீர்மானித்தார்.

அத்தனை உயிர்களையும்
அழிக்கும் கோபம்
ஆண்டவருக்குள்
மையம் கொண்டது.

 

Image result for NOAH BIBLE

பூமியின் மீது
நல்லவராய் இருந்த
நோவாவை ஆண்டவர்
கருணைக் கண் நோக்கினார்.

நோவாவை நோக்கி,
போ,
முந்நூறு முழம் நீளம்
ஐம்மது முழம் அகலம்
முப்பது முழம் உயரமாய்
கோபர் மரக்
கொம்புகளைக் கொண்டு
ஓர் பேழைசெய்.

004-noah-ark

பேழையின்
உள்ளும் புறமும்
தார் பூசி சீராக்கு.

உள்ளுக்குள் மூன்றடுக்கு
உண்டாக்கு,
ஒரு பக்கம் மட்டுமே
கதவை வை.

நீ, உன் மனைவி,
உன் புதல்வர் அவர்கள் மனைவியர்,
ஆண் பெண்ணாய்
எடுக்கப் பட்ட எல்லா
உயிரினப் பிணைகள்,
உணவுகள் இவற்றோடு
உள்ளுக்குள் செல்.

என்
கோபத்தின் கொந்தளிப்பை
வானம் சொரியும்
நீர் சொல்லும்,
பெருமழை இப் பூமியை
விழுங்கும்.

தீமை செய்த
இத் தலைமுறை
அழியட்டும் என்றார்.

ஆண்டவர் அப்படியே
ஓர்
பெருமழையை
வருவித்தார்.

பூமியின் தலையை
அது
தனக்குள் அமிழ்த்தியது.

மலைகளும்
கானகமும்
தண்­ரில் மூழ்கின.

மூச்சு விடும்
ஜீவராசிகள் எல்லாம்
நாசிகளில் நீர் நிறைய
அத்தனையும் மாண்டன.

சதையுள்ள அத்தனையும்
செத்து மடிந்தன.

நோவாவின் பேழை மட்டும்
தண்ணீ­ரில்
மெல்ல மெல்ல மிதந்து
அலைந்தது.

நோவாவுக்கு
அப்போது அறுநூறு வயது.

நாற்பது நாளைய
பெருமழை,
நூற்றைம்பது நாளைய
வெள்ளப் பெருக்கை
உருவாக்கியது.

பின் மழை மெல்ல ஓய்ந்தது.
மழையின் மதகுகள்
அடைக்கப் பட்டன.

ஏழு மாதங்கள்
கழிந்தபின்,
பேழை அராரத்து மலைத்தொடரில்
மெல்ல மெல்ல
தங்கியது.

பத்தாம் மாதத்தில்
மலைகளின் தலைகள்
மெல்ல
வெள்ளத்தை விட்டு
வெளியே வந்தன.

நாற்பது நாளுக்குப் பின்
நோவா,
சாரளத்தை சமீபித்து
ஓர்
காகத்தை வெளியே அனுப்பினார்.

அது
போவதும் வருவதுமாய்
இருந்ததைக் கண்டு
தண்ணீ­ர்
காயவில்லை என்று
தீர்மானித்தார்.

நிலப்பரப்பு வெள்ளம்
வடிந்து விட்டதா என்றறிய
ஓர்
புறாவை நோவா
தூதனுப்பினார்.

மாலையில் வந்த புறா
தன்
அலகுக்குள்
ஓர்
ஒலிவ கிளையை
எடுத்து வந்தது.

பூமி உலர்ந்ததை
நோவா
புரிந்து கொண்டார்.

இன்னும் ஓர்
ஏழு நாளுக்குப் பின்
அவர்
மீண்டுமொரு புறாவை
பூமிக்கு அனுப்பினார்.

அது,
திரும்பவும் பேழைக்கு
திரும்பவேயில்லை.

மீண்டும் இரண்டு மாதங்கள்
பேழைக்குள் வாழ்ந்தபின்
நோவா
கூரை விலக்கி
தரை பார்த்தார்.

பூமி,
உலர்ந்து போய் இருந்தது.

ஆண்டவர் அப்போது
அவர்களை
வெளியே வரச் செய்தார்.

பின் ஆண்டவர்
நோவாவிடம்,
உன் சந்ததியை நான்
கடல் மணலைப் போல
பெருகப் பண்ணுவேன்.

பூமியின் அத்தனை
பிரதேசங்களும் வளங்களும்
உங்கள்
கட்டளைகளுக்குள் கிடக்கும்.

தாவரங்களும்
விலங்குகளும் இனிமேல்
உங்கள்
உரிமையாகும்.

யாருடைய
இரத்தம் சிந்தலுக்கும்
நீங்கள் காரணமாக வேண்டாம்,
சிந்த வைப்பவன் தானும்
இரத்தம் சிந்துவான்.

வெள்ளப் பெருக்கு
இனிமேல்
பூமையைப் புதைக்காது.

மனித சிந்தனைகள்
சிறு வயதிலிருந்தே
அவனுள்
தீயவற்றை திணிக்கிறது.

இனிமேல்,
என் கோபம் பூமியை அழிக்காது.

மண்ணுலகு
இருக்கும் வரைக்கும்,
விதைக்கும் நாளும்
அறுவடைக் காலமும்,
பகலும், இரவும்
வருவது தவறாது.

இனி பூமி
பூக்களின் தேசமாகும்,
அங்கே
என் அக்கினிப் பார்வை
அழிவை தராது என்றார்.

நோவாவின் தலைமுறை
உலகமெங்கும்
தன் கிளைகளை
வளர விட்டுப்படர்ந்தது.

நோவா
தொள்ளாயிரத்து ஐம்பதில்
ஆண்டவர் அடி சேர்ந்தார்.

உலகம் முழுதும்
அப்போது
ஒரே மொழி இருந்தது.

மக்கள் எல்லோரும்
ஒருமுறை
சியனான் நாட்டுச் சமவெளியில்
வந்தனர்.

வானத்தை முட்டும்
கோபுரம் கட்டும்
பணிசெய்வதாய் திட்டம்.

அப்படிக் கோபுரம் கட்டி
தங்கள்
பெருமையின் கரைகளை
விரிவு படுத்த
விரும்பினர்.

கற்களும்
கீலும் கொண்டு
கோபுரம் கட்ட
வரைபடமிட்டனர்.

கடவுள்,
அவர்களின் கர்வத்தை
கலைக்க விரும்பினார்.

ஒன்றாய் இருந்த
பாஷையை உடைத்து,
ஒவ்வோர் குழுவும்
புது மொழி ஒன்றை
பொதுவாய் கொள்ளச் செய்தார்.

அப்படி,
அந்த நகர் கட்டும் வேலை
பிரிவினையாய்
சிதறுண்டது.

ஆண்டவர்
அதை அழித்தார்.

மனிதனை ஆண்டவர்
தன்
நேசத்தின் கரங்களுக்குள்
அணைக்கிறார்.
ஆனால் மனிதன்
கர்வத்தின் கரம்பிடித்து
கடவுளுக்கே காயம் தருகிறான்

கர்வத்தின் கோபுரம்
எப்போதுமே
வாழ்வதில்லை என்பதை
கடவுள் இங்கே
நிறுவுகிறார்.

நோவாவின் மகன்
சேமின் தலைமுறை
அங்கே
புகழ் பெறலாயிற்று.

அவர் தலை முறை வரிசை
அர்பகசாது, செலாகு,
ஏபேர், பெலேகு, இரயு,
செரூகு, நாகோர், தெராகு
என்று வளர்ந்தது

Image result for ABRAHAM BIBLE.

தெராகுக்கு
ஆபிராம் பிறந்தார்.
ஆபிரகாமின் சகோதரர்
நாகோர் மற்றும் ஆரோன்.

ஆரானுக்கு
ஆயுள் அதிகமிருக்கவில்லை.
லோத்து என்ற
புத்திரன் வந்தபின்
ஆரான் இறந்தான்.

ஆபிராம் சாராயை
மணந்தார்,
நாகோர் மில்காவை
மணமுடித்தார்.

சாராய்
குழந்தைப் பேறின்றி
கவலைப்பட்டிருந்தாள்.

தெராகு
ஆபிராம், சாராய்
ஆரானின் புதல்வன் இவர்களோடு
கானான்
நோக்கிய பயணத்தில்
காரானில் குடியேறினர்.

தெராகு,
இருநூற்றைம்பதாவது
வயதில் இறந்தார்.

0

8

0

ஆண்டவர்
ஆபிரகாமை அழைத்து,

நான்
உனக்குக் காட்டும்
நாட்டுக்குச் செல்,

உன்னை நான் ஆசீர்வதிப்பேன்.
உன்னை
சபிப்பவர்கள்
என்னால் சபிக்கப் படுவார்கள்.

உன்னை வாழ்த்துபவர்களை
நான்
வாழ வைப்பேன்.
என்றார்.

ஆபிராம் ஆண்டவரின்
விசுவாசச் செம்மல்,
மறுமொழி ஏது
கடவுளின் ஒளிக்கு முன் ?

ஆபிராம்,
தன் சொத்துக்களோடு
கானான் நாட்டில்
குடிபுகுந்தார்.

ஆபிராம்
செக்கேயி எனுமிடத்தை
சேர்ந்தபோது,
கடவுள் ஆபிராம் கண்ணுக்கு
காட்சி அளித்து,
இந் நாடு
உன் சந்ததியினருக்கே என்றார்.

ஆபிராம்
ஆண்டவருக்கு அங்கே
பலி பீடம் ஒன்றை
உருவாக்கினார்.

பின் பஞ்சத்தின் கை
அந்நாட்டில் நீள,
ஆபிராம் சாராயோடு
எகிப்து தேசம் நோக்கி
பயணம் போனார்

பஞ்சம் அவரை பரமனை நோக்கிச்
போகச் சொல்லாமல்
எகிப்தை நோக்கி
அழைத்துப் போனது
ஆச்சரியமே.

சாராய்,
மெல்லிய பூவின் அழகாய்
மெல்லென தீண்டும்
மெல்லினம்.

ஆபிராம் அவளிடம்,
நீ
என் மனைவி என்று
யாருக்கும் சொல்லாதே.
சொன்னால்
என்னைக் கொன்று உன்னை
மனைவியாக்குவர்.

உன்னை என்
சகோதரி என்றே சொல்
என்றார்.

எகிப்தின் எல்லையில்
எல்லோரும்,
சாராயின் அழகில்
தேனில் விழுந்த பூவாய்
நசுங்கினர்.

பார்வோன் மன்னனோ,
தன் அந்தப்புரத்தின்
அறைகளில்
சாராயை இருத்தினான்.

ஆண்டவரின் கோபம்
பார்வோனின் மேல் பாய
அவன் தேகம்
கொடிய நோயின் விளைநிலமாய்
உருமாறிற்று.

உண்மை அறிந்தபின்
அவன்,
சாராயை ஆபிரகாமிடம் அனுப்பி
செல்வங்களையும் கொடுத்து
நாட்டை விட்டுச் செல்ல
கட்டளையிட்டான்.

ஆபிரகாமின் பயணம்
நெகேபை நோக்கி
ஆரம்பமானது.

ஆபிரகாமும், லோத்தும்
பெத்தேலை அடைந்தபோது,
பிரச்சனைகள் முளைத்தன.

ஆடுகள் முட்டிக்கொள்ளவில்லை
ஆட்கள் முட்டிக் கொண்டனர்.
இருவரின் மேய்ப்பரும்
மோதிக் கொண்டனர்.

ஒற்றைக் குழுவில்
இரட்டைக் கருத்துக்கள்
தலைவிரித்தாடினால்,
ஓர்
உடன்படிக்கையில்
முடிவது தானே வழக்கம்..

லோத்து,
கிழக்குப் பக்கமாய் பிரிந்து
யோர்தான் சுற்றுப் பகுதியில்
குடியேறினார்.

ஆண்டவர் ஆபிரகாமிடம்,
இதோ
உன் சந்ததி
கடல் மணல் போல்
கணக்கின்றி பெருகும்.

அத்தனை திசைகளிலும்
உன் மரபினர்
உலவுவர்,
எல்லாம் உனக்களிக்கப்படும்
என்றார்.

ஆபிராம்
எபிரோனிலிருந்த
மம்ரே எனும் கருவாலி மரக்
காட்டின் அருகே
கூராரமமைத்துக்
குடியேறினார்.

Image result for loath salt pillar

இப்போது
உப்புக் கடல் என்று
அழைக்கப்படும்
சித்திம் பள்ளத்தாக்கில்
அரசர்களுக்கு இடையே
போர் ஒன்று உருவானது.

அப்போரில்
வெற்றி வாகை சூடியவர்களால்
லோத்தின்
சொத்துக்கள்
இழுத்துச் செல்லப்பட்டன.

செய்தி அறிந்த
ஆபிராம் அதிர்ந்தார்,
தன் ஆட்களைத் திரட்டி
மிரட்டும் இரவில்
எதிரிகளை விரட்டி
சொத்துக்களையும் சொந்தங்களையும்
மீட்டார்.

சோதொம் அரசன்
ஆபிரகாமுன் அதிரடி வெற்றி
அறிந்து ஆனந்தமானான்.
ஆபிராம்
பத்தில் ஒன்றை அவருக்கு
பகிர்ந்தளித்தார்.

0

ஆண்டவர் ஆபிரகாமுக்கு
மீண்டுக் காட்சி அளித்து
உனக்கு நான்
கேடயமாவேன் கலங்காதே
என்றார்.

ஆபிரகாமோ
எனக்குக் குழந்தைகள்
இல்லையே,
ஓர்
அடிமை மகன் எனக்குப் பின்
வாரிசாக வருவானோ
என்றார்.

ஆண்டவர் அவரிடம்,
நட்சத்திரங்களைப் பார்
அவற்றைப் போல்
உன் சந்ததி வளரும்.
என்றார்.

பின்
ஆபிரகாமின்
பலிகளை ஏற்றுக் கொண்ட
கடவுள்,
மீண்டும் ஓர்
செய்தியைச் சொன்னார்.

அது
அக்கினியை விட
அதிகமாய் வெப்பம் தந்தது.

உன் மரபினர்
நானூறு ஆண்டுகள்
வேறொரு நாட்டில்
அடிமையாய் ஆவார்கள்,

நான்கு தலைமுறை
கடந்தபின்,
நான் அந்நாட்டைத் தண்டிப்பேன்.

அப்போது
அடிமைகள் எல்லோரும்
செல்வந்தர் ஆவர் என்றார்.

ஓலியின் தேவனின்
வார்த்தைகளை
ஆபிராம் கண்கள் கசிய
ஏற்றுக் கொண்டார்.

0

குழந்தை இல்லா சாராய்
கவலையில்
ஆபிரகாமிடம்
வேண்டக் கூடாத
வேண்டுகோள் ஒன்றை
வேண்டி நின்றாள்.

நம்,
அடிமைப் பெண்ணை
மனைவியாக்கி,
குழந்தைப் பாக்கியம்
பெற்றுக் கொள்தல் தான் அது.

ஆபிராம்,
மனைவி காட்டிய
ஆகாரைக் கட்டிக் கொண்டார்.

ஆச்சரியங்கள்
மலர் சொரிய,
ஆகார் கர்ப்பமானாள்.

கர்ப்பத்தின் கர்வம்
ஆகாரை மொய்த்தது.

தாய்மைப் பேறற்ற
சாராயை
கேலிக் கண்களால்
கொத்தினாள்,
வலி தரும் வார்த்தைகளால்
குத்தினாள்.

சாராயின் கண்ணீ­ர்
ஆபிரகாமின் கரங்களை நனைக்க,
ஆபிராம்
சாராயை அரவணைத்து,
நீயே
அவளுக்கு எஜமானி என்றார்.

இப்போது,
காற்றின் திசை நேர்மாறானது.
சாராயின் கொடுமை
ஆகாரை விரட்டியது.

பயந்து ஓடிய ஆகாரை
வழியில்
ஆண்டவர் தடுத்து,
ஆபிரகாமின் அருகாமைக்கு
திரும்பக் கட்டளையிட்டார்.

நீ
பெற்றடுப்பது ஆண்மகனே,
அவனுக்கு
இஸ்மாயீல் என பெயரிடு,
ஆனால் அவன் காண்போரை எதிர்க்கும்
காட்டுக் கழுதையாய் வாழ்வான்
என்றார்.

திரும்பிய ஆகார்
ஈன்ற குழந்தைக்கு
கடவுள் விரும்பிய
இஸ்மாயில் என்ற பெயரை
ஆபிராம் அளித்தார்.

கைக்குழந்தையை ஏந்திய
ஆபிரகாமின்
அன்றைய வயது
எண்பத்து ஆறு.

Image result for ABRAHAM BIBLE

ஆபிரகாமின்
தொன்னூற்றொன்பதாவது வயதில்
ஆண்டவர் அவருக்கு
தோன்றினார்.

நீ
மாசற்றவனாய் இரு
உன்னை பலுகப் பண்ணுவேன்,
நாடுகளுக்கு
உன் சந்ததியை உடமையாக்குவேன்.

இன்மேல்,
நீ
ஆபிராம் அன்று
ஆபிரகாம்.

உன் மனைவியை
சாராய் என்று அழைக்காதே
சாரா என்றழை.

உனக்கு
ஓர் மகன் பிறப்பான்
அவனை
ஈசாக் – என்றழை என்றார்.

ஆபிரகாமோ,
நூறு வயதில் எனக்கு
ஒரு மகனா ?
ஆச்சரியமாய் பார்த்த
ஆபிரகாமை ஆண்டவர்
மீண்டும் தன்
நம்பிக்கை வார்த்தையால் தொட்டார்.

நான்
உடன்படிக்கை ஒன்றை தருகிறேன்.
உங்கள்
அத்தனை குழந்தைகளும்
விருத்த சேதனத்தை
செய்ய வேண்டும்.

குழந்தை பிறந்த
எட்டாம் நாளிம் அது
கட்டாயம் தேவை.

ஆபிரகாம்
ஆண்டவரைப் பணிந்தார்.
தொன்னூற்றொன்பதாவது வயதில்
விருத்த சேதனத்தை
நிறைவேற்றினார்,
அப்போது இஸ்மாயிலுக்கு
பதிமூன்று வயது.

ஆபிரகாமின் வேண்டுகோளை
ஏற்ற ஆண்டவர்,
இஸ்மாயிலை
பெரிய ஆள் ஆக்குவேன் என்று
ஒப்புதல் அளித்தார்.

abraham_angels

பின்பு ஆண்டவர்,
மம்ரே என்ற இடத்தின்
தேவதாரு கிளைகள்
காற்றில் அசையும் இடத்தில்
மூன்று மனிதர் வாயிலாக
ஆபிரகாமை சந்தித்தார்.

ஆபிரகாம்
ஓடிச் சென்று அவர் தாழ் பணிந்து
உணவருந்திச் செல்ல
பணிந்தார்.

ஆண்டவர் அவரிடம்
உனக்கும் சாராவுக்கும்
ஓர்
குழந்தை பிறப்பான்,
அடுத்த இளவேனிற்காலம்
நான் அவனை காண்பேன் என்றார்.

அதை
கூடாரத்திலிருந்து
கேட்ட சாரா,
கிழவியும், கிழவனுமாய்
ஓர்
கைக்குழந்தை பெறுவதா ?
என்றெண்ணி சிரித்தாள்.

ஆண்டவர் கோபம் கொண்டு,
என்
வார்த்தைகளில் ஏன்
நம்பிக்கை கொள்ளவில்லை ?

என்னால் ஆகாதது
ஏதுமுண்டோ ?
உன் சந்ததியை பெருகப் பண்ணுவேன்
என்பது
என் வாக்குறுதியல்லவா என்றார்.

சாரா பயந்துபோய்
சிரிக்கவில்லை என்று மறுத்தாள்.

பரமனின் முன்
பாமரன் எப்படி பதுங்க
முடியும் ?
நீ சிரித்ததை நான்
அறியாமல் இருப்பேனோ என்றார்.

பின் ஆண்டவர் ஆபிரகாமிடம்,
நான்
சோதோம் கொமோராவை
அழிப்பேன்
அங்கே அனீதியின் அக்கினி
படர்ந்து பரவியுள்ளது என்றார்.

ஆபிரகாமோ,
ஆண்டவரே மன்னியும்,
உம்மோடு பேச தகுதியில்லை
எனக்கு,

பாவிகளை எரிக்கும் வேகத்தில்
நீதிமான்களை
ஏன் அழிக்கிறீர் ?
அங்கே ஐம்பது நீதிமான்கள்
இருந்தால்.. ? என,

ஐம்பது நீதிமான்கள் இருந்தால்
அவர்களின் புண்ணியம்
அந் நகரைத் தாங்கும்.
நான்
அந்நகரை அவர்களின் பொருட்டு
அழிப்பதில்லை என்றார்.

ஆண்டவரே,
நான் தூசியும் சாம்பலுமானவன்
இருந்தாலும்
இன்னொரு முறை கேட்கிறேன்,
ஒரு வேளை
ஐந்து பேர் குறைவாய் இருந்தால் ?

ஆண்டவரோ,
நாற்பத்தைந்து பேருக்காக
நான்
நகரை அழிக்காமல்
விட்டு விடுவேன் என்றார்.

ஆபிரகாமின் வேண்டுதல்
இப்படி நீண்டு
பத்து நீதிமான்கள் வரை வந்தது.

ஆண்டவர் ஆபிரகாமிடம்,
பத்து பேர் இருந்தால்
அந் நகர் தப்பும் என்றார்.

அதைச் சொன்னபின்
ஆண்டவர் ஆபிரகாமை விட்டு
மறைந்தார்.

0