Posted in Articles, WhatsApp

நன்கொடை

Image result for church father preaching

ஆலயத்தில் போதகர் அறிவிப்புகளை அறிவித்துக் கொண்டிருந்தார். ஒரு இலட்சம் நன்கொடை வழங்கியவர்கள் பெயர் முதலில், ஐம்பதாயிரம் வழங்கியவர்கள் இரண்டாவது, அப்படியே குறைந்து குறைந்து பத்தாயிரம் நன்கொடை வரை வழங்கியவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

ஐம்பதாயிரத்துக்கும் மேல் நன்கொடை வழங்கியவர்களின் பெயர் கொடிமரத்தின் கீழே பொறிக்கப்படும் என்ற அறிவிப்பு பலருடைய முகத்தில் புன்னகையை உருவாக்கியது.

அடுத்ததாக உதவித்தொகை பெறுகின்றவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டன. அவர்கள் ஆலயத்தில் மக்கள் கூட்டத்திற்கு முன்பு வரிசையாய் நின்று மக்களுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினர்.

ஆலயத்திற்கு நன்கொடை தருபவர்கள் அதிகமாகிவிட்டதாகவும், நமது திருச்சபையே மற்ற திருச்சபைகளுக்கு முன்மாதிரி என்றும், நாம் செய்த பணிகளின் அறிக்கை பிற திருச்சபைகளுக்கும், தலைமைச் சபைக்கும் அனுப்பப்படும் எனவும் போதகர் சொன்னபோது கைத்தட்டல் சத்தம் சுவரில் இருந்த சிலுவையையே கொஞ்சம் அசைத்தது.

இப்போது நற்செய்தி வாசகம் என்றார் போதகர்.

நரைத்த தலையுடன் இருந்த ஒருவர் எழுந்து விவிலியத்தைத் திறந்து வாசித்தார். மத்தேயு ஆறாம் அதிகாரம் !

” நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்”

கூட்டம் ஆமென் என்றது !

ஆலயத்துக்கு வெளியே நின்று கையேந்திக் கொண்டிருந்த ஏழை முதியவரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார், ஆலயத்தை விட்டு எப்போதோ வெளியேறிய இயேசு !

*

 

Advertisements
Posted in Articles, Sunday School

வாழ்வது ஒரு முறை !

Image result for africa girl  auction

காட்சி 1

( ஆப்பிரிக்க நாட்டில் ஒரு கிராமம். ஊழியர் பெல்லார்மின் அமர்ந்திருக்கிறார். அவருடன் இன்னொரு நபர் பேசிக்கொண்டிருக்கிறார் )

நபர் 1 : ரொம்ப நாளா உங்க கிட்டே ஒன்ணு கேக்கணும்ன்னு நினைச்சுட்டே இருந்தேன் கேக்கலாமா ?

பெல்லார்மின் : கேளுங்க.. இதில என்ன தயக்கம் ?

ந 1 : இந்தியாவில நல்ல வசதியான வாழ்க்கை வாழ்ந்திட்டிருந்தீங்க ? இப்போ குடும்பத்தோட இந்த ஆப்பிரிக்க கிராமத்துல வந்திருக்கீங்க. இங்கே பிள்ளைங்க படிக்க நல்ல ஸ்கூல் கிடையாது. நல்ல வருமானம் கிடையாது. இருந்தாலும் ஏன் ?

பெல் : ஐயா… நான் இங்கே வந்திருக்கிறது பிள்ளைங்களை படிக்க வெச்சு டாக்டராக்கவோ, இல்லை பெரிய வேலைல சேர்ந்து பணம் சம்பாதிக்கவோ இல்லை.

ந1 : ஐயா… அது தெரியும். எவ்ளோ நாளா உங்க கூடவே இருக்கேன். நீங்க இயேசுவைப் பற்றி இங்குள்ள மக்களுக்கு சொல்றதுக்காகத் தான் வந்திருக்கீங்க. ஆனா கஷ்டமா இல்லையா ?

பெல் : இல்லவே இல்லை. எத்தனையோ பேருக்கு கிடைக்காத அழைப்பு எனக்கு கிடைச்சிருக்குன்னு டெய்லி நான் கடவுளுக்கு நன்றி சொல்லிட்டே இருக்கேன்.

ந1 : இருந்தாலும் பிள்ளைகளையாவது இந்தியாவில படிக்க வெச்சிருக்கலாம். அவங்களாவது நல்ல வசதியான ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்.

பெல் : ஐயா.. எல்லாருக்குமே கடவுள் கொடுக்கிறது ஒரே ஒரு வாழ்க்கை தான். அதை அப்படியே கடவுள் கிட்டே குடுக்கிறதில இருக்கிற சந்தோசமே தனி. நான் ரொம்ப லேட்டா, பெரியவன் ஆனப்புறம் தான் என் வாழ்க்கையை கடவுள் கிட்டே குடுத்தேன். என் பிள்ளைகளுக்கு சின்ன வயசிலயே அந்த பாக்கியம் கிடைச்சிருக்கு. இது எவ்ளோ பெரிய சந்தோசமான விஷயம்.

ந 1 : நீங்க சொல்றதும் சரிதான்.. இருந்தாலும் பிள்ளைங்க இந்த உலகத்துல இருக்கிற எந்த ஜாலியான விஷயங்களையும் அனுபவிக்காம இருக்காங்களேன்னு கேட்டேன்.

பெல் : ஐயா.. தற்காலிக சுகம், நிரந்தர நரகத்துக்கு தான் கொண்டு போகும். உங்க கிட்டே ஒரே ஒரு பாட்டில் தண்ணி தான் இருக்கு ! பாலைவனத்துல நாலு நாள் நடக்கணும். வேறு தண்ணியே கிடைக்காதுன்னு வெச்சுக்கோங்க. அந்த ஒரு பாட்டில் தண்ணீரை எவ்ளோ கவனமா பாதுகாப்பீங்க. ஒவ்வொரு சொட்டு செலவழிக்கும்போதும் எவ்வளவோ எச்சரிக்கையா இருப்போம் இல்லையா ?

ந 1 : ஆமாங்கய்யா… அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?

பெல் : அதே மாதிரி தான் நமக்கும் ஒரே ஒரு வாழ்க்கை. ஒரே ஒரு பாட்டில் தண்ணி மாதிரி எண்ணப்பட்ட நாட்கள். அதை எவ்வளவோ கவனமா செலவிடணும். எவ்வளவோ பயனுள்ள வகையில அதை செலவிடணும். அதுல கொஞ்சம் கூட வேஸ்ட் பண்ணக் கூடாது இல்லையா ? அதை அப்படியே கடவுளுக்காக கவனமா செலவிடணும். அது தான் உண்மையான மகிழ்ச்சி.

( அப்போது ஒரு நபர் ஓடி வருகிறார் )

ந 2 : ஐயா… நம்ம ரிவர் சைட் மார்க்கெட்ல அடிமை ஏலம் நடக்குதுங்கய்யா…

ந 1 : ம்ம்ம்… நம்ம நாடு எப்ப தான் உருப்படுமோ ! இந்த அடிமை ஏலத்தை இன்னும் நிறுத்த முடியல. வாழ்க்கையை ஓட்டறதுக்கு மனுஷன் என்னவெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கு.

பெல் : இப்படித் தான் பாவத்தைச் செய்திட்டு இருக்கிறவன் பாவத்துக்கு அடிமையா இருக்கிறான்னு இயேசு சொல்லியிருக்காரு.

ந 2 : இருந்தாலும் பாவம்யா.. இன்னிக்கு ஏதோ ஒரு இளம்பெண்ணை ஏலம் போடறாங்க.

பெல் : எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு.. வாங்க அங்கே போலாம்.

காட்சி 2

( ஒரு இளம் பெண் மேடையில் நிற்கிறாள். தலைகுனிந்து சோகமாக நிற்கிறாள். ஏலம் நடக்கிறது )

ஏலம் நடத்துபவர் : ( சிரித்துக் கொண்டே ) இந்த பெண்.. இளம் பெண்.. அழகான பெண்.. இதுக்கு முன்னாடி பெல்ஷா மாளிகைல அடிமையா இருந்தா. அங்கிருந்த முதலாளி இப்போ இவளை ஏலத்துல வித்துட்டு வேற பொண்ணை பாக்க போறாரு. அதனால தான் இந்த ஏலம். ஆரம்பிக்க போறேன்.

ஏலம் வாங்குபவர் : இந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கு. எவ்ளோ பணமானாலும் நான் வாங்கப் போறேன்.

ந4 : எவ்ளோ பணம்ன்னாலுமா ?

வாங்குபவர் : பொதுவா ஒரு பத்தாயிரம் பணத்துக்கு வாங்கிடலாம். கொஞ்சம் கூட ஆனா கூட பரவாயில்லை. ஏலத்துல எடுத்துர வேண்டியது தான்

( அப்போது பெல்லார்மின் & ந 1 வருகின்றனர் )

பெல் : அந்த பொண்ணை நான் ஏலத்துல எடுக்க போறேன்.

ந 1 : ஐயா.. நீங்களா ?

பெல் : ஆமா.. கடவுள் அந்த பொண்ணை ஏலத்துல எடுக்க மனசுக்குள்ள சொல்றாரு

ந 1 : சரிங்கய்யா.. ஆனா இருக்கிற பணத்தை ஏலத்துல விட்டீங்கன்னா ?

பெல் : உனக்கு தெரியாதது இல்லை. என்கிட்டே மொத்த சேமிப்பா ஒரு ஐம்பதாயிரம் பணம் இருக்கு. அதுல கொஞ்சத்தை பயன்படுத்தி வாங்கிடலாம்.

ந1 : சரிங்கய்யா.. உங்க விருப்பம்.

( ஏலம் தொடங்குகிறது )

ஏலம் நடத்துபவர் : ஏலம் ஆரம்பிக்க போறேன். ஆரம்ப விலை ஆயிரம் பணம் !

ஏலம் வாங்குபவர் : இரண்டாயிரம் பணம்

பெல் : மூவாயிரம்

ஏ. வா : ஐயாயிரம்

பெல் : ஆறாயிரம்

ஏ. வா : ஏழாயிரம்

பெல் : எட்டாயிரம்

ஏ. வா : பத்தாயிரம்

ந 1 ( பெல்லார்மினிடம் ) : ஐயா.. வேண்டாம்.. இதுக்கு மேல செலவு செய்ய வேண்டாம்.

பெல் : பதினையாயிரம்

ஏ. வா : இருபதாயிரம்

பெல் : முப்பதாயிரம்

ஏ. வா : ( கொஞ்சம் யோசிக்கிறார். தலையைச் சொறிகிறார் பின் கேட்கிறார் ) நாற்பத்து ஐயாயிரம்.

( ஏ.வா வின் நண்பர்.. ந 4 : ஐயா.. என்ன உங்களுக்கு புத்தி கித்தி கெட்டு போச்சா.. இந்த பணத்துக்கு இதே மாதிரி பத்து பொண்ணு வாங்கலாம். இப்போ அவரு பேசாம போனா நமக்கு பெரிய நஷ்டம்.. தப்பு பண்ணிட்டீங்களே )

( பெல் ஏலம் கேட்க போகும் போது நண்பர் தடுக்கிறார் )

ந1 : ஐயா வேணாம். உங்க வாழ்நாள் சொத்தே ஐம்பதாயிரம் பணம் தான். உங்களுக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. மனைவி இருக்காங்க. ஏதாச்சும் மருத்துவ தேவை வந்தா கூட கைல காசு இருக்காது. இந்த பொண்ணு நமக்கு எவ்வளவு தான் சம்பாதிச்சு தர முடியும் ? வேணாம்யா விட்டுடுங்க.

பெல் : ஐம்பதாயிரம் !

( ஏலம் கேட்ட மற்ற நபரும், நண்பர்களும்.. “அப்பாடா தப்பிச்சோம்” என போய் விடுகின்றனர். )

ஏலம் இடுபவர் : ஐம்பதாயிரம் பணம் ஒரு தரம். வேற யாராவது ஏலம் கேட்கிறீங்களா ?

( மக்கள் ஒவ்வொருவராகப் போகின்றனர் )

ஏலம் இடுபவர் : ஐம்பதாயிரம் பணம் இரண்டு தரம் …. ஐம்பதாயிரம் பணம் மூணு தரம்.

( பெல்லார்மின் ஒரு செக் எழுதி அவரிடம் கொடுக்கிறார். அந்தப் பெண் குனிந்த தலையுடன் அவரது அருகே வந்து நிற்கிறாள் )

பெல் நண்பரிடம் : வாங்க போலாம்

( பெண் பின்னாடியே வருகிறார் )

பெல் : அம்மா .. நீங்க போலாம். என் கூட வரவேண்டிய அவசியம் இல்லை. இப்போ நீங்க அடிமையில்லை.

( ந 1 புரியாமல் பார்க்கிறார் )

பெண் : ஐயா.. என்ன சொல்றீங்க ? புரியல.

பெல்லார்மின்: அம்மா.. உங்களை அடிமைத்தனத்தில இருந்து மீட்கத் தான் நான் ஏலம் எடுத்தேன். உங்களுக்கு விடுதலை வாங்கி தர. உங்களை மீண்டும் அடிமையா மாற்ற இல்லை.

பெண் : ஐயா.. ஏன் ? என்னை உங்களுக்கு தெரியுமா ? இவ்ளோ பணம் குடுத்து என்னை ஏலத்துல எடுத்து சும்மா விடுறீங்களா ?

பெல் : நீ யாருன்னு எனக்கு தெரியாதும்மா. ஆனா இயேசு யாருன்னு எனக்கு தெரியும். நாம பாவ அடிமைத்தனத்துல இருந்தப்போ அவரோட உயிரையே கொடுத்து நம்மையெல்லாம் மீட்டவர். நாம சுதந்திர வாழ்க்கை வாழணும்ன்னு மண்ணுக்கு மனுஷனா வந்தவர். வந்து சிலுவையில அறையப்பட்டு உயிர்விட்டு நமக்காக இறந்தவர்.

பெண் : ஐயா என்ன சொல்றீங்க ? அப்படி ஒரு நபரைப் பற்றி எனக்கு தெரியாதே.

பெல் : உண்மைதாம்மா.. அவரைப் பற்றி சொல்ல தான் நான் இந்த நாட்டுக்கே வந்தேன். உன்னை மீட்க நான் இழந்தது என் சொத்து மட்டும் தான். அவரோ தன்னோட சொந்த ஜீவனையே இழந்தார்.

பெண் : ஏன் ஐயா அவர் அப்படி இறக்கணும் ?

பெல் : அது தான் நாம கடவுளுடைய மீட்பில் இணைய ஒரே வழி. அது தான் நாம சொர்க்கம் செல்ல ஒரே வழி. அது தான் நம்முடைய பாவங்களைக் கழுவ ஒரே வழி. அவருக்கு ஒரே ஒரு மனித வாழ்க்கை தான் தரப்பட்டது, அதை பிறருக்காக கொடுத்தார். அதே மாதிரி எனக்கு ஒரே வாழ்க்கை தான் தரப்பட்டிருக்கு. ஏழேழு ஜென்மம் பிறவி எல்லாம் நமக்கு கிடையாது. அதெல்லாம் மாயை. இந்த ஒரே ஒரு வாழ்க்கையை நான் அவருக்காக கொடுக்கிறேன்.

பெண் : ஐயா.. ( கண்ணீருடன் ) நான் மறுபடியும் அடிமையாவே போயிடறேன்.

பெல் : என்னம்மா சொல்றே..

பெண் : ஆமாங்கய்யா.. .இந்த தடவை நான் இயேசுவுக்கு அடிமையா போக போறேன். எனக்கு இந்த விடுதலை வாழ்க்கை உங்களால கிடைச்சுது. அதுவும் இயேசுவால கிடைச்சுது. இந்த சுதந்திர வாழ்க்கையை அவருக்கு அடிமையா வாழ்றதுல செலவிட போறேன். எனக்கு கிடைச்சிருக்கிற இந்த ஒரே ஒரு வாழ்க்கையை நான் அவருக்காகவே கொடுக்க போறேன்.

பெல் : ரொம்ப மகிழ்ச்சிம்மா.. ஒரு நபரை மீட்பதை விட பெரிய சொத்து எதுவுமே இல்லை. எனக்கு இப்போ ரொம்ப மன நிறைவா இருக்கு.

பெண் : ஐயா.. எனக்கு என் எஜமானர் இயேசுவைப் பற்றி இன்னும் நிறைய சொல்லுங்க. என் வாழ்க்கைல நான் அவருக்காக வாழணும். நீங்க எனக்கு சொல்லப்போற உண்மையை எல்லாம் நாம் எங்க ஊர் மக்களுக்குச் சொல்லணும்.

பெல் : ரொம்ப மகிழ்ச்சிம்மா.. வாங்க.. நாம அப்படி ஓரமா அமர்ந்து பேசுவோம். அவரைப் பற்றி பேசறதை விட பெரிய மகிழ்ச்சி ஏதும் இல்லை.

பின் குரல்

இது மிஷனரி ஒருவருடைய வாழ்க்கையில் நடந்த உண்மை நிகழ்வின் சிந்தனையை எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்டது. நமது வாழ்க்கையை இறைவன் தனது ஒரே மகனின், ஒரே மனித பிறவியின், ஒரே ஜீவனைக் கொண்டு மீட்டார். நமக்குத் தரப்பட்டிருப்பது ஒரே ஒரு வாழ்க்கை. ஒரே ஒரு பிறவி. நாம் அதை முழுமையாய் இறைவனுக்காய் அற்பணித்திருக்கிறோமா ? இல்லையேல் இதோ இந்த கணமே.. அதைச் செய்வோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

( நன்றி )

 

Posted in Articles

மறந்து போயிடறேன்

Image result for father reading bible

காலையில் பால்கனியில் அமர்ந்து பைபிள் வாசித்துக் கொண்டிருந்த தந்தையின் அருகில் கையில் காஃபியுடன் வந்தமர்ந்தான் வாலிப மகன்.

“பரவாயில்லைப்பா.. நீங்க டெய்லி பைபிள் படிக்கிறீங்க.. நமக்கு தான் டைமே செட் ஆக மாட்டேங்குது” என்றான் வந்தமர்ந்தவன்.

” நேரத்தை உருவாக்கி படிக்கணும்பா.. அதான் நமக்கு எனர்ஜி தரும்” அப்பா சொன்னார்.

“உண்மைதான்பா.. மறந்து போயிடறேன்” சிரித்துக் கொண்டே சொன்னான் மகன்.

“சரி அதிருக்கட்டும்… உன் போன் எங்கே ?”

“சார்ஜர்ல இருக்குப்பா.. நைட் போட்டு வெச்சேன்.. இல்லேன்னா சார்ஜ் இருக்காது” மகன் சொன்னான்.

“சார்ஜ் இல்லேன்னா என்னப்பா.. போன் இருக்குல்ல… “

“ஜோக் அடிக்காதீங்கப்பா.. சார்ஜ் இல்லேன்னா அந்த போனால எந்த பயனும் இல்லை”

“அப்படித் தாம்பா நம்ம வாழ்க்கையும். எப்படி மொபைல் போன்ல சார்ஜ் தினசரி தேவைப்படுதோ அதே மாதிரி நமது வாழ்க்கைக்கும் இறை வார்த்தைங்கற சார்ஜ் தேவைப்படுது. சார்ஜ் ஏத்தாம போயிட்டா லைஃப் பயனில்லாம போயிடும்”

“உண்மை தான்பா.. பட்… மிஸ் ஆயிடுது” மகன் சொன்னான்.

“இது மிஸ் கிடையாதுப்பா… இது சின் ! பாவம். போன்ல சார்ஜ் முழுசா போறதுக்கு முன்னாடி தேடித் தேடி சார்ஜ் பண்றே. நைட் போடறே.. காலைல செக் பண்றே. அடிக்கடி மெசேஜ் ஏதாச்சும் வந்திருக்கான்னு பாத்துக்கறே… அதெல்லாம் மிஸ் ஆகலையே !”

மகன் அமைதியானான்.

எது முக்கியம்ன்னு தோணுதோ, அதைத் தான் நாம செய்வோம். எது முக்கியம்ன்னு நாம முடிவு பண்றோமோ அது தான் நம்ம வாழ்க்கையை நிர்ணயிக்கும். கடவுள் தான் முக்கியம்ன்னு நீ முடிவெடுத்தா அவரே படிக்க நேரத்தைத் தருவார். அப்பா சொல்லிக்கொண்டே மகனின் கையிலிருந்த காபியை வாங்கி கொஞ்சம் குடித்து விட்டு அவனிடமே திருப்பிக் கொடுத்தார்.

‘ம்ம்.. அம்மாவோட காபியே தனி தான்’ என சிரித்துக் கொண்டே அவனுடைய‌ தோளில் தட்டிக் கொடுத்தார்.

அந்த பைபிள் கொடுங்கப்பா..

ஏன்பா ? இப்போ டைம் இருக்கா ?

இப்போ இந்த கணம், இந்த நேரம் அது தான் என் கைல இருக்கு. இப்பவே சார்ஜ் பண்ணலேன்னா ஒருவேளை நான் சார்ஜ் பண்ண நினைக்கும்போ கரண்டு இருக்குமோ இருக்காதோ. சொல்லிவிட்டு மகன் புன்னகைத்தான்.

அப்பாவின் கண்களில் நிறைவின் சாயல் தெரிந்தது.

நமது வாழ்க்கையில் சார்ஜ் இருக்கிறதா ?
அதை அடிக்கடி பரிசோதிக்கிறோமா ?

போன் சார்ஜ் இல்லை என்பதை கண்டு கொள்ளும் நாம்.. நமது வாழ்க்கையில் உயிர்ப்பு இல்லை என்பதை உணர்கிறோமா ?

இது ஆடம்பரமல்ல.. அத்தியாவசியம் !
பைபிள் நிராகரிப்புக்கானதல்ல, நிலை வாழ்வுக்கானது.

*

 

Posted in Articles

Christianity : அப்பா அப்பா தானே !

Image result for talk to father

அப்பா, என்னோட காலேஜ் விழாவுக்கு நீங்க கண்டிப்பா வரணும். மகனுடைய அழைப்பு தந்தையின் மனதுக்குள் மகிழ்ச்சியைப் பொழிந்தது. அப்பாவும் மகனும் நண்பர்களைப் போல பேசிக் கொள்ளும் குடும்பம் அது.

‘காலேஜுக்கு வரேன்டா.. ஆனா, இவர் தான் என் அப்பான்னு சொல்ல உனக்கு கூச்சமா இருக்காதா ?’ அப்பா சிரித்துக் கொண்டே கேட்டார்.

ஏன்பா அப்படி சொல்றீங்க ?

இல்லே… தாடி எல்லாம் நரச்சு போய், கருப்பா கிராமத்தான் போல இருக்கிற என்னை அப்பான்னு அறிமுகம் செய்து வைக்க உனக்கு கூச்சமா இருக்காதான்னு கேட்டேன்.

‘தாடி நரச்சாலும், கறுத்தாலும் அப்பா அப்பா தானே ‘ மகன் சிரித்தான்.

இல்ல ஸ்கூல்ல ஒரு கதை உண்டு. பையனைப் பாக்க கிராமத்துல இருந்து பாசத்தோட அப்பா வருவாரு. பையனுக்கு புடிச்ச எல்லா பொருட்களையும் வாங்கிட்டு வருவாரு. அவன் பொருட்கள் எல்லாத்தையும் வாங்கிட்டு, அப்பாவை அவசர அவசரமா வீட்டுக்கு அனுப்பிடுவான். அப்புறம் பிரண்ட்ஸ் கிட்டே..” அவர் எங்க வீட்டு வேலைக்காரர் டா” ந்னு சொல்லுவான். அதைக் கேட்டு அப்பா கண்கலங்குவாரு. நீயும் படிச்சிருப்பியே ! அதான் கேட்டேன். அப்பா கிண்டலாய் சொன்னார்.

“நான் அப்படி சொல்ல மாட்டேன். ஆனா நீங்க தான் உங்க அப்பா உங்களுக்கு எவ்வளவோ செஞ்சிருந்தும் அவரைப் பற்றி பெருமையாவே பேச மாட்டேங்கறீங்க.’ மகன் சொல்ல அப்பா நெற்றி சுருக்கினார்.

‘என்னடா சொல்றே’

‘ஆமாப்பா.. நேற்று கூட உங்க பிரண்ட்ஸ் வந்திருந்தாங்க. யாராரைப் பற்றியெல்லாமோ பேசினாங்க. ஆனா நீங்க உங்க அப்பாவைப் பத்தி எதுவுமே பேசலையே !’

‘நீ கேக்கல.. நான் பேசினேன். அவரு என்னை விவசாயம் பண்ணி, கஷ்டப்பட்டு, படிக்க வெச்ச கதையெல்லாம் சொன்னேன். நீ தான் கேக்கல’

மகன் கொஞ்சம் நேரம் அப்பாவைப் பார்த்து விட்டு மென்மையாய் சொன்னான்.

நான் அந்த அப்பாவைப் பற்றி சொல்லல. நம்ம விண்ணக அப்பாவைப் பற்றி சொன்னேன். வந்த நண்பர்களெல்லாம் ஏதேதோ கோயில், குளம், தெய்வம், தொழுகை எல்லாம் பேசிட்டிருந்தாங்க. நீங்களும் கேட்டுட்டு இருந்தீங்க. உங்க விண்ணக அப்பா காட்டின அன்பு, தயவு, இரக்கம் பற்றியெல்லாம் நீங்க பேசவே இல்லையேப்பா. அதைத் தான் நான் சொன்னேன்.

மகன் சொல்ல, அப்பாவின் மனதில் சுருக் என ஒரு நெருஞ்சி முள் தைத்தது ! மகன் தொடர்ந்தான்.

ஏதோ ஒரு பையன் , “இவரு வேலைக்காரர்” ந்னு அவனோட அப்பாவைக் காட்டினது போல தானே நீங்களும் செய்தீங்க. “இவர் என் அப்பா” ந்னு பெருமையா சொல்ல உங்க மனசு இடம் கொடுக்கலையே. நண்பர்கள் என்ன நினைப்பாங்க. பிரண்ட்ஷிப் போயிடுமோன்னு பயந்து தானேப்பா சொல்லல ?

மகனின் பேச்சுக்கு மறு பேச்சு பேச முடியாமல் திகைத்து நின்றார் அப்பா ! மகன் நிறுத்தவில்லை.

‘உலக அப்பாவைப் பற்றி பேசும்போ அந்த தந்தையோட‌ மனசு எப்படி வேதனைப்பட்டிருக்கும்ன்னு கவலைப்படறோம். விண்ணகத் தந்தை யாருன்னே தெரியாத மாதிரி நீங்க அவரைப் பற்றி எதுவுமே சொல்லாம இருக்கும்போ அவர் மனசு வேதனைப்படாதாப்பா ?”

மகன் சொல்லி நிறுத்தினான்.

இத்தனை ஆண்டு காலம் உருவாகாத புயல் ஒன்று தந்தையின் மனதில் மையம் கொண்டது. தனது தவறை உணர்ந்தார். தந்தையின் அன்பை பிறருக்குச் சொல்வது மகனின் சிலிர்ப்பாய் இருக்க வேண்டும். அதுவே தந்தையை மகிழ்ச்சிப்படுத்தும் என்பதை உணர்ந்தார்.

‘தேங்க்ஸ்பா… நீ என் மகனா இருந்தாலும், இன்னிக்கு ஒரு ஆன்மீக தந்தையா மாறி எனக்கு பாடம் கத்து குடுத்தே’ என சொல்லி மகனை இறுக்கமாய்க் கட்டிக் கொண்டார் தந்தை !

அப்பாவைப் பற்றி இனிமே எல்லா இடத்துலயும் தயக்கம் இல்லாம மகிழ்ச்சியா சொல்லணும் எனும் சிந்தனை அவருக்குள் வேர்விட்டிருந்தது.

*

 

Posted in Articles, Desopakari

இயந்திர வாழ்க்கை

Image result for Helping poor

இன்றைய வாழ்க்கை இயந்திரத்தனமாகவும், இயந்திரங்களோடும் என்றாகிவிட்டது. தொழில்நுட்ப உலகம் நம்மை மனிதர்களை விட்டு அந்நியப்படுத்தி, மனிதர்களோடு இருப்பது போன்ற மாயையை நமக்குள் உருவாக்கிவிட்டது. நிழல் நட்புகளை நிஜம் என நம்பச் செய்து விட்டது.

இல்லாத ஒன்றை இருப்பது போல நம்புவதில் தொடங்குகிறது நமது ஏமாற்றத்தின் முதல் படி. இருக்கும் ஒன்றை அதற்காக இழக்கத் தொடங்குவதில் அந்த ஏமாற்றம் வளர்ச்சியடைகிறது. அந்த மாயைக்குள் கூடுகட்டிக் குடியிருக்கும் போது வாழ்க்கை அர்த்தமிழக்கிறது.

‘நான் ஸ்டெடி’ என குடிகாரன் சொல்வதைப் போல, நான் டிஜிடல் மாயையில் இல்லை என சொல்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஐந்தரை இஞ்ச் வெளிச்சத் திரைகளில் டிஜிடல் கயிறுகளால் கட்டப்பட்டிருப்பவர்கள் தான். இது தான் வாழ்க்கையின் இன்றைய நிலை.

எல்லாமே பாஸ்ட் புட் போல சட்டென கிடைக்கவேண்டும் என எதிர்பார்க்கிறது இளைய சமுதாயம். ஏடிஎம் மெஷினுக்கு முன்னால் நிற்கும் பதினைந்து வினாடிகள் கூட அவர்களுக்கு அதீத காத்திருப்பாய்த் தோன்றுகிறது. அதி வேகம் தான் அவர்களை பல இடங்களில் வீழ்ச்சியடைய வைத்துக் கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை.

முகநூலில் முகம் பார்த்து, வாட்சப்பில் குரல் கேட்டு சந்திப்பதற்கு நாள் குறிக்கும் இள வயதுகள் அவசரத்தின் குடுவைகளில் சோதனைச்சால அமிலங்களைப் போல உருமாறி அழிகின்றனர். சட்டென காய்கள் வேண்டுமென போன்சாய் மரங்கள் நடுவது தொடங்கி, சட்டென முடிவு வேண்டுமென டைவர்ஸ் கேட்பது வரை எங்கும் எதிலும் பரபர காட்சிகள் தான்.

ரெண்டு குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லும் வீடுகளில் காட்சிகள் ஒரு ராணுவ பரபரப்புடன் தான் இருக்கும். குழந்தைகளை எழுப்புவது முதல், அவர்களை பள்ளிக்கூடம் அனுப்புவது வரை ஒரு மின்னல் பரபரப்பு. பின் அலுவலகம் நோக்கி ஓடும் பெற்றோரின் பரபரப்பு. அலுவலகத்தில் அழுத்தம் கலந்த பரபரப்பு. மாலையில் வீடு நோக்கி ஓடி, குழந்தைகளின் படிப்பு, ஹோம் வர்க், எக்ஸ்ட்ரா கிளாஸ்.. என நள்ளிரவில் படுக்கையில் விழுந்தால் காலையில் அலாரம் அடித்து தொலைக்கும் !

வாழ்க்கை இதயங்களால் நிர்ணயிக்கப்பட்ட காலம் போய்விட்டது. இப்போது அவை இயந்திரமயமான கட்டமைப்புக்குள் கட்டுப்பட்டுக் கிடக்கிறது. காத்திருப்பதின் சுகமும், அமைதியாய் அமர்ந்திருப்பதன் நிம்மதியும் இளைய தலைமுறைக்குப் புரிவதே இல்லை. அவர்கள் டிஜிடல் கைகளோடு, துடித்துக் கிடக்கின்றனர்.

உண்மையில் ‘நேரமில்லை’ என நினைக்கும் நாம் செலவிடும் நேரங்களில் பெரும்பாலானவை வீணானவையே ! சந்தேகமெனில் ஒரே ஒரு வேலை செய்யுங்கள். உங்களுடைய போனில் வாட்ஸப், டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற அனைத்து உரையாடல், சமூக வலைத்தளங்களை அன் இன்ஸ்டால் செய்து விடுங்கள். ஒரு வாரம் கழிந்து திரும்பிப் பாருங்கள் உங்களுக்கு எக்கச்சக்க டைம் கிடைத்திருக்கும். நீங்கள் இழந்தது என எதுவுமே இருக்காது ! அது தான் யதார்த்தம்.

கிறிஸ்தவ வாழ்க்கையானது இயந்திரத்தனமான வாழ்க்கையல்ல. நின்று நிதானித்து இறைவனின் வார்த்தைகளின் படி வாழும் வாழ்க்கை. நல்ல சமாரியன் கதையில் இயந்திரத்தனமாய் ஓடியவர்களை இயேசுவும் கைவிட்டார். நின்று நிதானித்து மனிதநேயப் பணி செய்தவனே பாராட்டப்பட்டார்.

அன்னை தெரேசா ஒருமுறை ஆலயம் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒரு முதியவர் சாலையோரம் கிடப்பதைக் கண்டு அவருக்கு உதவி செய்ய ஓடினார். கூட இருந்தவர்கள், ‘திருப்பலிக்கு நேரமாகிறது, திரும்ப‌ வரும் போது பார்த்துக் கொள்ளலாம்’ என்றார்கள். அன்னையோ, ‘நீங்கள் செல்லுங்கள் நான் இயேசுவை இங்கேயே கண்டு கொண்டேன்’ என்றார். நின்று நிதானிப்பவர்களே மனிதர்களில் இயேசுவைக் காண்கின்றனர். இயந்திர ஓட்டங்கள் ஆலயத்திலும் ஆண்டவரைக் காட்டுவதில்லை.

இயந்திர வாழ்க்கை என்பது பொருளாதாரத் தேடல்களுக்காகவும், சுயநலத் தேவைகளுக்காகவும் ஓடுகின்ற வாழ்க்கை. செபத்துக்கான நேரங்களை தொலைக்காட்சிகள்  திருடிக்கொண்ட வாழ்க்கை. ஆலய நேரத்தை தூக்கம் இழுத்துக் கொண்ட வாழ்க்கை. மனிதநேய பணிகளை மொபைல் அழித்து விட்ட வாழ்க்கை. அன்புக்கான நேரங்களை டிஜிடல் சாகடித்த வாழ்க்கை.  இந்த இயந்திர மயமான காலகட்டத்தில் கிறிஸ்தவர்களாகிய நமது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் ?

  1. சந்தித்தல் !

மது அன்பின் வெளிப்பாடுகள் தொய்வின்றித் தொடரவேண்டும். அதுவும் தனிப்பட்ட சந்திப்புகளாக, உரையாடல்களாக, அரவணைத்தல்களாக, அன்புப் பகிர்தல்களாக இருக்க வேண்டும். அதுவே உறவைக் கட்டியெழுப்பும். உதாரணமாக, பல ஆண்டுகளாக நாம் சந்திக்காத எத்தனையோ நண்பர்கள், உறவினர்கள் இருப்பார்கள். அவர்களை திடீரென ஒரு நாள் சென்று பார்த்து அவர்களோடு சில மணி நேரங்கள் செலவிட்டுப் பாருங்கள். வாழ்வின் உன்னதம் புரியும். அன்பு எத்தனை வசீகரமானது என்பதை அறிய முடியும்.

  1. பேசுதல் !

ஒரு காலத்தில் உதாரணமாய்ப் பேசப்பட்ட கிறிஸ்தவக் குடும்ப உறவுகள் இன்றைக்கு மிகப்பெரிய அவமானப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றன‌. மனம் விட்டுப் பேசுவதற்கு மனமில்லாமலோ, நேரமில்லாமலோ பயணிக்கின்றனர் இளம் தம்பதியர். இயந்திரத்தனமான வாழ்க்கை அவர்களுடைய இதயங்களுக்கு இடையே தொழில்நுட்பத்தை இட்டு நிரப்புகிறது. காலம் செல்லச் செல்ல அந்த இடைவெளி பெரிதாக, மணமுறிவுகளின் முற்றத்தில் தம்பதியர் முகம் திருப்பிச் செல்கின்றனர். இந்த சிக்கல்களிலிருந்து விடுபட, மனம் விட்டுப் பேசும் பழக்கத்துக்கு நாம் திரும்ப வேண்டும். டைப் அடிக்கும் வார்த்தைகளில் அல்ல, கரம் பிடிக்கும் வார்த்தைகளில் தான் அன்பின் ஸ்பரிசம் செழிக்கும்.

  1. பகிர்தல்

மனிதநேயத்தின் வேர்களே பகிர்ந்தலின் கிளைகளில் கனிகளை விளைவிக்கும். பகிர்தலின் கனிகளே அன்பின் செயல்களாக மனம் நிறைக்கும். இன்றைய அவசர வாழ்க்கை பகிர்தலைத் தூக்கி பரணில் வைத்து விட்டது. கடைசியாக எப்போது உங்களிடம் இருந்த உணவையோ, உடையையோ, நேரத்தையோ, பொருட்களையோ பகிர்ந்தளித்தீர்கள் என சிந்தியுங்கள். பழைய ஆடைகளை ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் கொடுக்கக் கூட மாதக் கணக்கில் தாமதம் செய்கிறோமா இல்லையா ? நிதானிப்போம், பகிர்தலோடு வாழ்ந்தலே பரமனோடு வாழ்தல் என்பதை உணர்வோம்.

  1. மன்னித்தல்

இயந்திர வாழ்க்கையில் நாம் இழந்த ஒரு முக்கியமான விஷயம் மன்னித்தல். நமது கடந்த தலைமுறையினரிடம் இருந்த பொறுமையோ, சகிப்புத்தன்மையோ, விட்டுக் கொடுத்தலோ இந்த தலைமுறையினரிடம் இல்லை. இந்த தலைமுறையினரிடம் கொஞ்சூண்டு மிச்சமிருக்கும் இந்த குணாதிசயங்கள் அடுத்த தலைமுறையினரிடம் அறவே இல்லாமல் போகுமோ எனும் அச்சம் உண்டு. மன்னிப்பை மறுதலித்து வெறுப்பை வளர்க்கவே சமூகமும், ஊடகங்களும் கற்றுத் தருகின்றன. மன்னித்தல் வேண்டுமெனில், நாம் உலகின் போதனைகளை விடுத்து, இறைவனின் போதனைகளை உடுத்த வேண்டும்.

  1. நிதானித்தல்

எதையெடுத்தாலும் சமூக வலைத்தளங்களில் அவற்றைப் பதிவு செய்வதும், அதற்கு எத்தனை லைக்ஸ் ஷேர் வந்தது என கணக்குப் பார்ப்பதும் இன்றைய இளசுகளிடம் இருக்கும் ஒரு போதை. புகழ் போதையின் ஆரம்பகட்டம் இது. சமூக வலைத்தளங்களில் வெறுப்புக் கருத்துகளை தொடர்ந்து படிப்பதும், படைப்பதும் அவர்களுடைய மனங்களில் எதிர்மறை சிந்தனைகளுக்கு எண்ணை வார்த்துக் கொண்டே இருக்கும். அத்தகைய பழக்கங்களை விட்டு ஒழிப்பது இயந்திர வாழ்க்கையிலும் நிம்மதியைக் கொண்டு வரும். நமது சமூக பங்களிப்புகளை நேரடியான சமூகச் செயல்களில் செய்வதே சிறந்தது. சமூக வலைத்தளங்களில் சண்டை போடுவது ஏட்டுச் சுரைக்காயை வைத்து சமையல் செய்வதைப் போன்றதே.

  1. நிஜமணிதல்

இயந்திர வாழ்க்கை கொண்டு வரும் முக்கியமான குணாதிசயம் இரட்டைவேடம் போடுதல். அவசரத்தின் கைக்குள் அலைகின்ற வாழ்க்கையில் பொய்யும், கபடமும் இணைந்தே பயணிக்கின்றன. நிஜம் அமைதியாய் வரும், பொய் புயலாய் வரும். நிஜம் தென்றலாய் வருடும், பொய் கனலாய் சுடும். உள்ளுக்குள் ஒன்றை புதைத்து, முகத்தில் ஒன்றைத் தரித்து வருகின்ற போலித்தனங்களை உதறுவோம். அது தான் நமது வாழ்க்கையை இறைவனை விட்டு தூரமாய் துரத்துகிறது. நிஜத்தை அணிவோம் !

  1. புனிதமாதல் !

இன்றைய வாழ்க்கையில் தேவைப்படுகிற முக்கியமான விஷயம் புனிதத்துவம். அதற்குத் தேவை இறை வார்த்தைகளோடு பயணித்தல். நமது வாழ்க்கையை செபத்தை விட்டும், இறை வார்த்தைகளை விட்டும், இயேசுவை விட்டும் துரத்துகின்ற செயலைத்தான் இன்றைய பரபரப்புகள் செய்கின்றன. அவற்றை மீண்டெடுப்போம். நாளும் நமக்கு முன்னால் விரிக்கப்படுகின்ற வலைகளில் பெரும்பாலானவை சாத்தானுடையவை. அவற்றைக் கண்டுபிடித்து விலக்கும் போது புனிதத்தின் பாதையில் நடைபோட முடியும்.

 

Posted in Articles, Desopakari

ஒருமைப்பாடு

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு – நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு என்பது புகழ்பெற்ற பாரதியார் பாடல்களில் ஒன்று !

Image result for united in christ

ஒற்றுமையாக இருக்க வேண்டும், இணைந்து செயலாற்ற வேண்டும், ஒற்றுமையே பலம் என சின்ன வயது முதலே நாம் கேட்டும், கற்பித்தும் வருகிறோம். ஒற்றுமையாக இருப்பதே சமூகத்துக்கும், நாட்டுக்கும், நமது வளமான எதிர்காலத்துக்கும் நல்லது எனும் அசைக்க முடியாத நம்பிக்கை நமக்கு எப்போதுமே உண்டு.

ஒருமைப்பாடு எப்போதும் நல்லதா ? சர்வதேச நாடுகளை வன்முறையால் அழிக்க நினைக்கும் தீவிரவாத இயக்கங்களிடமும் ஒருமைப்பாடு இருக்கிறதே ! விலங்குகளின் பெயரால் ஏழைகளை அழிக்கும் மக்களிடமும் ஒற்றுமை இருக்கிறதே ! நாட்டை கொள்ளையடிக்க நினைக்கும் ஆள்பவர்களிடையேயும் புரிந்துணர்வு இருக்கிறதே ! ஏன், இயேசுவைக் கொல்ல வேண்டும் என முடிவெடுத்த மதத்தலைவர்களிடமும் ஒற்றுமை இருந்ததே ! எனில், ஒருமைப்பாடு என்பது எப்போதும் நல்லது என்று சொல்லி விடமுடியாது !

ஒருமைப்பாடு நன்மையாகவோ, தீமையாகவோ முடியலாம் ! நாம் எதன் அடிப்படையில் ஒன்றுபட்டிருக்கிறோம் என்பதை வைத்தே அது தீர்மானிக்கப்படும். நன்மையின் பக்கம் இணைந்து நிற்பது நன்மையில் முடியும். தீமையின் பக்கம் தலைசாய்த்தால் அது தீமையாகவே முடியும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், இயேசுவின் போதனைகளோடு இசைந்து, இணைந்து நிற்பதே நல்ல ஒற்றுமை, மற்ற அனைத்துமே அழிவுக்கானவையே.

கிறிஸ்தவர்கள் இணைந்து நிற்பது வேறு, கிறிஸ்துவோடு இணைந்து நிற்பது என்பது வேறு. கிறிஸ்தவர்கள் இணைந்து நிற்பது எப்போதும் நல்லது என்று சொல்ல முடியாது. கருப்பர்களுக்கு எதிராக இணைந்து போராடிய அமெரிக்க திருச்சபைகள் ஏராளம். விவிலியம் எதிர்க்கின்ற பாலியல் உரிமைகளுக்காக இணைந்து போராடிய இறைமக்கள் ஏராளம். இவையெல்லாம் வாழ்வுக்கான ஒன்றுமையல்ல ! எனில், எதன் அடிப்படையில் ஒருமைப்பாடு கொள்வது நல்லது ?

1. தூய ஆவியின் ஒருமைப்பாடு

“முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்” என்கிறது எபேசியர் 4:2,3 வசனங்கள்.

நாம் ஒரே ஆவியால் ஒரே உடலாய் இருக்கும் படி திருமுழுக்குப் பெற்றவர்கள். தூய ஆவியானவரின் வழிகாட்டுதலில் இணைந்து வாழ்வது அற்புதமான வாழ்க்கை. தூய ஆவி அருளும் ஒருமைப்பாடு என்பது, அவரது கனிகளின் படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே ! இயேசுவின் மரணத்துக்குப் பின், அச்சத்தால் பயந்து கிடந்த அப்போஸ்தலர்களை இணைத்து, வலுவூட்டியவர் தூய‌ ஆவியானவர் ! அந்த தூய அவையானவரின் ஒருமைப்பாடு நமக்கு வலிமையையும், சரியான வழியையும் காட்டும்.

2. கொடியில் கிளைகளாகும் ஒருமைப்பாடு.

நானே திராட்சைக்கொடி, நீங்கள் அதன் கிளைகள் என்றார் இயேசு. திருச்சபையின் மக்கள் அனைவருமே இயேசு எனும் கொடியின் கிளைகளே ! அந்த கிளைகள் பார்வைக்கு வேறுபடுகின்றன. அவற்றின் செயல்பாடுகள் வேறுபடுகின்றன. ஆனால் இலக்கு ஒன்றே ! செடியோடு இணைந்தே இருப்பது. செடியோடு இணைந்தே வளர்வது. கொடியை விட்டு தனியே செல்கின்ற கிளை விறகாகும். அதில் ஆன்மீக பச்சையம் இருப்பதில்லை.

இயேசு எனும் உடலில் உறுப்புகள் நாம். உடலின் உறுப்புகள் பலவானாலும் அவை எப்போதுமே இணைந்து உடலின் நலனுக்காகவே செயல்படும். ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு பணி செய்யும், சில உறுப்புகள் உடலுக்கு உள்ளே ஒளிந்திருக்கும், சில வெளிப்படையாய் இருக்கும். எப்படி இருந்தாலும் எல்லாமே ஒரே நோக்கத்துக்காகச் செயல்படும் ஒருமைப்பாட்டுடன் இருக்கும். அத்தகைய ஒருமைப்பாடு வேண்டும்.

3. விவிலிய நூல் காட்டும் ஒருமைப்பாடு !

ஒருமைப்பாடு என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு விவிலிய நூலே நமக்கு ஒரு சான்றாக இருக்கிறது. விவிலிய நூல் சுமார் 40 ஆசிரியர்களால், சுமார் 2000 ஆண்டு இடைவெளிகளில், மூன்று கண்டங்களிலிருந்து, மூன்று மொழிகளில் எழுதப்பட்ட எழுத்துகளின் தொகுப்பு. ஆனாலும் விவிலியத்தின் உள்ளார்ந்த சாராம்சமோ, அது சொல்லும் மீட்பின் சேதியோ சற்றும் விலகவில்லை என்பது வியப்பானது.

விவிலியம் இறைவனின் நூல் என்பதற்கும், விவிலியம் ஒரு அற்புதமான இசைவில் உதாரணம் என்பதற்கும் இதைவிடப் பெரிய சான்று தேவையில்லை. நமது ஒருமைப்பாடு காலத்தால், நிலத்தால், மொழியால் வேறுபட்டாலும் இத்தகைய ஒரே சிந்தனையுடையதாய் அமைய வேண்டும்.

4. தன்னலமற்ற ஒருமைப்பாடு.

உலக ஒருமைப்பாடுகள் பெரும்பாலும் லாப நோக்கத்துக்கானவையே. ஒரு பிஸினஸ் ஆனாலும் சரி, ஒரு அலுவலக வேலையானாலும் சரி, அல்லது வேறெந்த பணியாய் இருந்தாலும் சரி. லாப நோக்கங்களும், சுயநல கணக்குகளுமே பார்ட்னர்ஷிப் களை உருவாக்கும். ! ஆனால் இறைவன் விரும்பும் ஒருமைப்பாடு சுயநலமற்ற சிந்தனைகளின் விளைவாக இருக்க வேண்டும்.

“கட்சிமனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தர வேண்டாம். மனத் தாழ்மையோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவராகக் கருதுங்கள்.” என்கிறது பிலிப்பியர் 2:3. அடுத்தவரை உயர்வாய்க் கருதும் இடத்தில் சுயநல சிந்தனைகள் செயலிழக்கும்.

5. விசுவாசத்தில் ஒருமைப்பாடு

“அதனால் நாம் எல்லாரும் இறை மகனைப் பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம்.( எபேசியர் 4:13 )” என்கிறது விவிலியம். கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படை இறைமகன் மீதான விசுவாசமே ! அந்த விசுவாசத்தின் மீது கட்டியெழுப்பப்படாத எந்த கட்டிடமும் நிலைப்பதில்லை.

விசுவாசத்தின் மீதான ஒற்றுமையின்மை இன்று புதிது புதிதாக பல்வேறு திருச்சபைகளும், குழுக்களும், இயக்கங்களும் உருவாகக் காரணமாக இருக்கிறது. இயேசுவை நம்பாத கிறிஸ்தவர்கள் பெருகி வரும் காலம் இது என்பது கவலைக்குரியது. விசுவாசத்தில் ஒருமைப்பாடை நாம் கட்டியெழுக்க முன்வரவேண்டும்.

6. அன்பில் ஒருமைப்பாடு.

இயேசு நமக்கு கிறிஸ்தவத்தின் சாராம்சத்தை இரண்டே இரண்டு கட்டளைகளாகக் கொடுத்தார். கடவுளை முதன்மையாய் நேசி, மனிதனை முழுமையாய் நேசி என அதைச் சுருக்கமாய்ப் புரிந்து கொள்ளலாம். “உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்” என்கிறது உரோமையர் 12:10. “தூய உள்ளத்தோடு ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள்” என்கிறது 1 பேதுரு 1:22

ஆழமான அன்பு கிறிஸ்தவ ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும். குடும்பங்களில் தொடங்கி, திருச்சபைகளில் வளர்ந்து, சமூகத்தில் பரவும் இந்த அன்பு தான் கிறிஸ்தவர்களை அடையாளப்படுத்த வேண்டும். அத்தகைய அன்பு கொள்வதில் ஒருமைப்பாட்டோடு இருக்க வேண்டும்.

7. சாட்சியில் ஒருமைப்பாடு

கிறிஸ்தவர்களுடைய சாட்சி வாழ்க்கை இரண்டு பிரிவுகள் கொண்டது. ஒன்று, தூய்மையான வாழ்க்கை வாழ்ந்து அதன் மூலம் இயேசுவுக்கு வாழும் சாட்சியாவது. இரண்டு, இயேசுவை உலகெங்கும் பறைசாற்றி அவரது அன்பை வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்துவது.

“நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்” என்றார் இயேசு. இது வாழ்க்கையின் மூலம் இயேசுவை பறை சாற்றுவது. “உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்” என்பது வார்த்தையின் மூலம் நற்செய்தியை பறைசாற்றுவது. இந்த இரண்டு பணிகளுக்காகவும் நாம் ஒன்றிணைய வேண்டும்.

8. இறைமகிமைக்காய் ஒன்றுபடுதல்

எதைச் செய்தாலும் இறைவனின் புகழுக்காகவே, மகிமைக்காகவே செய்ய வேண்டும் என்பது ஆன்மீகப் பாடம். ” நீங்கள் அனைவரும் ஒருமனப்பட்டு, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவரை ஒருவாய்ப்படப் போற்றிப் புகழ்வீர்கள்” எனும் உரோமர் 15:6 அதை தெளிவாக்குகிறது.

நமது வாழ்க்கை இறைவனுக்கு புகழ்பாடுவதாக இருக்க வேண்டும். நாம் செய்கின்ற மனிதநேயப் பணிகள், அன்பின் பணிகள், சமூகப் பணிகள், ஆன்மீகப் பணிகள் அனைத்தையுமே இறைவன் பெயரால் செய்யப் பழகுவோம். அதில் வருகின்ற புகழையும், பெருமையையும், மாட்சியையும் அப்படியே இறைவனின் பாதத்தில் சமர்ப்பிப்போம். இந்த சிந்தனைகளோடு நாம் ஒன்று பட வேண்டும்.

9. பணியில் ஒன்றிணைவோம்.

இறைபணியில் ஒன்றிணைய வேண்டும் என்பது இறைமகனின் விருப்பமாகும். இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் திருச்சபை எனும் அமைப்பை இறைமகன் உருவாக்கினார். அதன்மூலம் நாம் அன்புப் பணிகளைச் செய்ய வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பு.

ஐந்து அப்பத்தை ஆசீர்வதித்துத் தருகிறார் இயேசு. அதை பிறருக்கு பகிர்ந்தளிப்பதில் பணியாற்றுகின்றனர் சீடர்கள். இன்றும் இறைமகனின் ஆசீர் நமக்கு தரப்பட்டிருக்கிறது, அதை பிறருக்கு ஆசீர்வாதமாய் அளிக்கும் கடமை நமக்கு உண்டு. அந்த பணியில் நாம் ஒன்றுபட வேண்டியது அவசியம்.

10. செபத்தில் ஒன்றிணைவோம்.

“உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்.ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார் இயேசு !

மனமொத்த செபத்தை இயேசு முன்மொழிகிறார். கூடி செபிக்கும்போது செபம் தன்னலத் தேவைகளைத் தாண்டியதாக மாறி விடுகிறது. செபத்தில் ஒன்றிணைவது நமது ஆன்மீக வாழ்க்கையைச் செழுமையாக்கும்.

 

Thanks : Desopakari

 

Posted in Articles, Sunday School

Sundays Class : வில்லியம் கேரி

Image result for William Carey

ஒரே ஒரு வாழ்க்கை !

காட்சி 1

( வில்லியம் கேரியும் அவனது நண்பன் ஜோன் வார் ம். செருப்பு தைக்கும் கடை.

ஜோன் வார் கையில் ஒரு ஷூவை வைத்து தைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது உள்ளே நுழைகிறார் சிறுவன் வில்லியம் கேரி. )

வார் : வாடா வில்லி.. ஏண்டா லேட்டு ? இப்போ தான் முதலாளி உன்னைப் பற்றி கேட்டுட்டு போனாரு..

வில்லி : போச்சுடா ! அவரு வந்துட்டாரா ? என்ன கேட்டாரு ?

வார் : வேறென்ன கேப்பாரு ? வில்லி இன்னும் வரலையா ? எங்கே போனான் ந்னு கேட்டாரு

வில்லி : உடம்பு சரியில்ல கொஞ்சம் லேட்டா வருவான்னு சொல்ல வேண்டியது தானே.

வார் : பொய் சொல்ல சொல்றியா ? நான் அதெல்லாம் பண்ண மாட்டேன்னு உனக்கு தெரியும்ல‌

வில்லி : ஆமா.. பெரிய உத்தம புத்திரன்..

வார் : உத்தம புத்திரன் எல்லாம் இல்லடா.. ஒரு கிறிஸ்டியன் அவ்வளவு தான்.

வில்லி : ஆமா.. நீ மட்டும் தான் கிறிஸ்டியனா ? அப்போ நான் யாரு ? எந்த சண்டேயாச்சும் சர்வீஸ் மிஸ் பண்ணியிருக்கேனா ? பைபிள் கூட அப்பப்போ வாசிப்பேன்டா..

வார் : டேய் வில்லி… சர்ச்க்கு போறவங்க‌ எல்லாம் கிறிஸ்டியனாடா ? அப்படி பாத்தா கடல்ல போறதெல்லாம் கப்பல் ந்னு சொல்லுவே போல. ( சிரிக்கிறான் )

வில்லி : போதும்டா.. பிரசங்கம் பண்ணாதே.. காலைல தோட்டத்துக்கு போனேன். என்ன ஒரு அட்டகாசமான பட்டர்ஃப்ளை தெரியுமா ? இதோட சேத்து முப்பத்து மூணு டைப் பட்டர்ஃபிளை கலெக்ட் பண்ணி வெச்சிருக்கேன்.

வார் : ம்ம்ம்… நீ தான் பூச்சி புடிக்கிற பயலாச்சே…

வில்லி : பூச்சி ந்னு சொல்லாதே… இயற்கைல எவ்ளோ அழகான தாவரங்கள், சின்னச் சின்ன பறவை இனங்கள், பட்டர்பிளைஸ் எல்லாம் இருக்கு தெரியுமா ?

வார் : இயற்கை அழகா தான்டா இருக்கும். ஏன்னா அதைப் படைச்ச ஆண்டவர் அப்படி. எல்லாத்தையும் சிறப்பா படைக்கிறது தான் அவரோட வேலையே

வில்லி : இதபாரு வார்… என்ன பேசினாலும் சுத்தி சுத்தி அங்கயே வராதே. ஏதோ நீ மட்டும் தான் பெரிய பக்தி மான் மாதிரி பேசறதை நிப்பாட்டு. ரொம்ப நாளா இப்படி தான் நீ சொல்லிட்டு இருக்கே. போதும் ! இல்லேன்னா உன்னோட பிரன்ட்ஷிப்பையே கட் பண்ணிடுவேன்

வார் : வில்லி.. உனக்கு புடிச்ச வேலைல நீ ரொம்ப ரொம்ப ஆர்வமா இருக்கே. நீ கடவுளுக்காக முழுசா உன்னை அர்ப்பணிச்சா, கடவுள் உன்னை வெச்சு ரொம்ப பெரிய காரியங்கள் எல்லாம் செய்வாரு.

வில்லி : எனக்கு புடிச்ச வேலைன்னா கரெக்ட் தான்.. ரொம்ப ஆர்வம் வருது.

வார் : அதான் சொன்னேன். நாம ஒழுங்கா ஸ்கூல் போகல. ஆனா நீ பாரு சட்டு சட்டுன்னு வேற மொழிகள் எல்லாம் கத்துக்கறே. லத்தீன் கஷ்டமான மொழி ! யாரும் சொல்லித் தராமலேயே கத்துகிட்டே. பட்டர்பிளை உனக்கு புடிச்சமான விஷயம். அதுக்காக பல பணி நேரம் கூட மண்ணுல புரண்டுட்டு இருப்பே. இதையெல்லாம் நீ கடவுளுக்காக பயன்படுத்தினா எவ்வளவு நல்லது தெரியுமா ?

வில்லி : நீ கொஞ்சம் கொஞ்சமா என் மனச்சை மாத்திடுவே போல ! ( சிரிக்கிறான் )

வார் : நான் உண்மையை தான் சொல்றேன். எனக்கு உன்னை மாதிரி திறமை கிடையாது. கடவுள் என்னை எப்படி பயன்படுத்தப் போறாருன்னு தெரியாது. யோசேப்பு கதை தெரியும் இல்லையா ? யோசேப்பை எகிப்துக்கு கொண்டு போன வியாபாரிகள் மாதிரி, உன்னை இயேசு கிட்டே நெருக்கமா கொண்டு வரணும்ன்னு நான் நினைக்கிறேன். அப்புறம் அந்த வியாபாரிகளை யாரும் கண்டுக்கல, ஆனா யோசேப்பை கடவுள் எப்படி பயன்படுத்தினாரு தெரியும் தானே ?

வில்லி : ம்ம்.. அப்போ நான் இப்போ வாழற கிறிஸ்தவ வாழ்க்கை போதாதுன்னு நினைக்கிறியா ?

வார் : நீ வாழ்றது கிறிஸ்தவ வாழ்க்கையே இல்லேன்னு சொல்றேன். உன் வாழ்க்கைல இயேசு மையமா இருந்து மத்த விஷயங்களெல்லாம் வெளியே இருந்தா தான் நீ கிறிஸ்தவன். உன் வாழ்க்கைல மற்ற விஷயங்களெல்லாம் மையமா இருந்து கிறிஸ்து வெளியே இருந்தா நீ கிறிஸ்தவனா ? நீயே சொல்லு.

வில்லி : ( கொஞ்சம் யோசிக்கிறான் ) சரி, நான் இப்போ என்ன பண்ணணும் ?

வார் : நீ இப்படி கேட்டதே எனக்கு ரொம்ப சந்தோசம் டா. நீ ஒண்ணும் செய்ய வேண்டாம். நைட் முழங்கால்படியிட்டு ஒரே ஒரு செபம் செய். மனசைத் திறந்து இயேசுகிட்டே நீ சொல்ல வேண்டியது இது மட்டும் தான் ” இயேசுவே என்னுடைய பாவங்களையெல்லாம் கழுவியருளும். இதோ நான் உம்மை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருக்கிறேன்” ந்னு மட்டும் சொல்லு. ஆத்மார்த்தமா சொல்லு. மிச்சத்தையெல்லாம் கடவுள் பாத்துப்பாரு

வில்லி : சரிடா..

*

பின் குரல் : நண்பனின் வார்த்தைகளின் படியே செபம் செய்தார் வில்லியம் கேரி. அந்த செபத்துக்காகவே காத்திருந்த இறைவன் அவருக்குள் பிரவேசித்தார். அவருடைய வாழ்க்கை தலைகீழானது. கடவுளுக்காக தன்னை முழுவதும் ஒப்புக்கொடுத்து தனது பணியை ஆரம்பித்தார்…. ஆண்டுகள் பல கடந்தன ! வில்லியம் கேரி தூங்கி கொண்டிருக்கையில் சாத்தான் அவருடைய கனவில் வந்தான்.

காட்சி 2

( சாத்தான் வில்லியம் கேரியின் முன்னால் நிற்கிறான் )

சாத்தான் : ( எகத்தாளமாய்.. உரத்த குரலில்… கம்பீரமாய் ) கேரி… வில்லியம் கேரி… என்ன… ஆச்சு பாத்தாயா ? இயேசு இயேசுன்னு சொல்லி ஓடிட்டிருந்தியே !

வில்லி : என்ன ஆச்சு ? நல்லா தானே இருக்கேன் !

சாத்தான் : நல்லா இருக்கியா ? இங்கிலாந்தில சுகமா வாழ்ந்திட்டிருந்தே ! இப்போ இங்கே கல்கத்தா வெயில்ல கர்ர்ருகிறே ! உன் சொந்த ஊர்ல சுதந்திரமா வாழ்ந்திட்டிருந்தே.. இங்கே வேற தேசத்துல அடிமை மாதிரி கஷ்டப்படறே.

வில்லி : இதுல என்ன கஷ்டம்… இயேசு படாத கஷ்டமா ?

சாத்தான் : வில்லி…வில்லி… உன் மனசை உன் பிரண்ட் ரொம்பவே கெடுத்துட்டான். ஒரு தீக்குச்சியை உரசி அப்படியே காட்டுல போட்டுட்டான். நீ பற்றி எரியறே ! எதுக்கு ?

வில்லி : கடவுளுக்காக எரியறது தான் சுகம். சும்மா எரியாத விறகா இருந்தா யாருக்கு லாபம்.

சாத்தான் : உனக்கென்ன லாபம் கிடைச்சுது வில்லி… மூணு பிள்ளைங்க.. மூணு பிள்ளைங்க செத்துப் போயிட்டாங்க.. ஏன் ? இங்கிலாந்தில இருந்திருந்தா இப்படி ஆயிருக்குமா ? இந்தியா வந்ததால தானே !!

வில்லி : கடவுள் கொடுத்தார், கடவுள் எடுத்தார் ந்னு யோபு சொன்னது உனக்குத் தெரியாதா ? குழந்தைகள் கடவுளோடது. நாம வளர்த்தறது மட்டும் தான்.

சாத்தான் ( கோபத்தில் ) : சும்மா விதண்டாவாதம் பண்ணாதே. உன் மனைவிக்கும் மூளை கலங்கிடுச்சு. நாளைக்கு நீ செத்துப் போனா, இங்கே உன் கூட சேத்து உன் பொண்டாட்டியையும் எரிச்சுடுவாங்க. அதான் இந்தியாவோட வழக்கம். சதி..சதி.. கேள்விப்பட்டிருப்பியே.. நீ தான் அதுக்கு எதிரா பேசிட்டு இருக்கிறவனாச்சே. வில்லி…

வில்லி : கடவுளோட அனுமதியில்லாம யாரும் யாரோட உயிரையும் எடுக்க முடியாது. எத்தனையோ இரத்த சாட்சிகள் எத்தனையோ விதமா செத்திருக்காங்க… எனக்கு எப்படி சாவுன்னு கடவுள் முடிவு செய்வார்.

சாத்தான் : கடவுள் கடவுள்… அப்படி சொல்லி சொல்லி தான் எல்லாருமே அழிஞ்சு போறீங்க. சுத்திப் பாரு.. உலகம் எவ்வளவு அழகா இருக்கு. எவ்வளவு ஜாலியா சந்தோசமா இருக்கலாம்… அதை விட்டுட்டு இங்கே கடவுள் கடவுள்ன்னு நீ கத்திட்டு இருக்கே..

வில்லி : படைப்பை வணங்கி, படைத்தவரை நிராகரிக்கச் சொல்றியா ?

சாத்தான் : படைத்தவர் அவர் தான்னு உனக்கு தெரியுமா ?

வில்லி : நான் பைபிளை நம்பறேன். அதான் அதை நிறைய மொழிகள்ல மொழிபெயர்த்திட்டு இருக்கேன். அப்போ கடவுளைப் பற்றி எல்லாருக்கும் தெரிய வரும். கடவுளை எல்லாரும் ஏற்றுக்கொள்ளும்போ உன்னை எல்லாரும் நிராகரிப்பாங்க.

சாத்தான் : என்னையா ? ஹா..ஹா.. .வில்லி.. நீ பணி செய்ய வந்து எத்தனை வருஷம் ஆச்சு

வில்லி : ஏழு வருஷம்..

சாத்தான் : இந்த ஏழு வருஷத்துல…எத்தனை பேருக்கு ஞான்ஸ்நானம் கொடுத்திருக்கே… சொல்லு வில்லி சொல்லு …

வில்லி : ( அமைதி )

சாத்தான் : சீரோ…. ஒருத்தரை கூட உன்னால மாற்ற முடியல. நீ என்னடான்னா உலகத்தை மாத்துவேன்னு கதை உடறே. போதும் விக்கி. போனதெல்லாம் போகட்டும். இந்த பைபிள், டிரான்ஸ்லேஷன், இந்தியா, எல்லாத்தையும் விட்டுட்டு குழந்தை குட்டியோட எங்கயாவது போய் சந்தோசமா இரு. உனக்கு இருக்கிறது ஒரே ஒரு வாழ்க்கை தான் !

வில்லி : அதான் நானும் சொல்றேன். எனக்கு இருக்கிறது ஒரே ஒரு வாழ்க்கை தான். அதை கடவுளுக்காக குடுத்துட்டேன். அதுவே எனக்கு வெற்றி தான். மத்ததெல்லாம் கடவுள் பாத்துப்பாரு.

சாத்தான் : எது வெற்றி ? இதுவா வெற்றி !!

வில்லி : என்னைப் பாத்து பயந்து நீ என்கிட்டே விவாதம் பண்றியே.. அதுவே எனக்கு வெற்றி தான்.. நீ போ.. என்ன நடந்தாலும் நான் நடக்கப் போறது அவரோட வழியில தான். “தேவனிடத்திலிருந்து பெரிய காரியங்களை எதிர்பார்; தேவனுக்காகப் பெரிய காரியங்களைச் செய்” அது தான் என்னோட வாழ்க்கையோட அடிப்படை. அதை நான் இனிமே யாருக்காகவும் மாற்றப் போறதில்லை.

( கனவு கலைகிறது )

பின் குரல் :

தனது ஒரே ஒரு வாழ்க்கையை கடவுளுக்காய் முழுமையாய் கொடுத்த வில்லியம் கேரி கிறிஸ்துவின் பணியில் மிகப்பெரிய சாதனைகளைச் செய்தார். நாற்பத்து ஒன்று ஆண்டுகள் இந்தியாவில் பணியாற்றிய அவர் வங்காளம், இந்தி, ஒரியா, மராத்தி, அசாமி, சமஸ்கிருதம் உட்பட ஏராளமான இந்திய மொழிகளில் விவிலியத்தை மொழிபெயர்த்து வெளியிட்டார். இந்திய மக்கள் இயேசுவின் வழியில் வர அவருடைய மொழிபெயர்ப்புகள் பெரிதும் துணை புரிந்தன.

நமக்கு தரப்பட்டுள்ளது ஒரே ஒரு வாழ்க்கை !
அதை இயேசுவுக்காய் கொடுப்போம்.

*