இவர்கள் என்ன ஆனார்கள் ?
கிளாடியா பிரோகுளா
திடுக்கிட்டு விழித்தாள் பிரோகுளா ! நெற்றியெல்லாம் முத்து முத்தாய் வியர்த்திருந்தது. இப்படி ஒரு கனவை வாழ்நாளில் அவள் கண்டதில்லை. இதன் பொருள் என்ன என்பதும் புரியவில்லை. எழுந்து அருகிலிருந்த குவளையிலிருந்து தண்ணீரை எடுத்துக் குடித்தாள். அருகில் ஐந்து வயது மகன், கள்ளம் கபடமில்லாத பூக்களின் தேசத்தில் ஏதோ கனவு கண்டு புன்னகையுடன் தூங்கிக் கொண்டிருந்தான்.
பிரோகுளா படுக்கையின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு மீண்டும் ஒரு முறை அந்தக் கனவை மனதுக்குள் ஓட்டிப் பார்த்தாள். சேராபீன்களின் இறக்கையோடு, சூரியன் ஒளிபோன்ற முகத்துடன், நெருப்பில் மேலெழும் ஒரு ராட்சசப் பறவையாய் மேலே எழுகிறார் அவர். இயேசு ! மேலே சென்ற அவர் மேகங்களின் மேல் நிற்கிறார். கணப்பொழுதில் அவர் நியாயத் தீர்ப்பை வழங்கத் துவங்குகிறார். நல்லவர்கள் அனைவரும் மீட்படைந்து, இறைவனின் நிலை வாழ்வுக்குள் நுழைகிறார்கள்.
தீயவர்களோ நெருப்புப் பள்ளத்தாக்கில் எறியப்படுகின்றனர். அத்தகைய ஒரு நெருப்பை உலகம் கற்பனை செய்யவும் முடியாது. அத்தகைய அடர்த்தியோடு கொழுந்துவிட்டு எரிகிறது அந்த நெருப்பு. உலகத்தையே உருக்கும் வெப்பத்துடனும், கொதிக்கும் ஆழியின் ஆக்ரோஷத்துடனும் எரிந்து கோரத்தாண்டவம் ஆடுகிறது அது. ஐயோ தாங்கமுடியவில்லையே மலைகளே, குன்றுகளே எங்கள் மேல் வந்து விழுங்கள் என நிராகரிக்கப்பட்டவர்கள் கதறினார்கள். இயேசுவோ சிங்கத்தின் கர்ஜனை ஒத்த மாபெரும் கர்ஜனையில் அவர்களைப் பார்த்து உரக்கச் சொன்னார்.
‘உனக்காக நான் சிந்திய இரத்தத்தை எனக்கு மீண்டும் தா !” சொன்னவர் தனது காயங்களையும் காட்டுகிறார். அந்த அதிர வைக்கும் குரலிலும், அந்த அனலிலும் திடுக்கிட்டு விழிக்கிறார் பிரோகுளா.
ஏதோ நடக்க இருக்கிறது. அது நல்லதல்ல என்பது மட்டும் அவளுக்குப் புரிகிறது. என்ன செய்வதென புரியவில்லை. எருசலேம் நகரின் இரவு நேரக் காற்று அவளை அமைதிப்படுத்தவில்லை. வெகுநேரத்துக்குப் பின் மீண்டும் தூங்குகிறாள். மீண்டும் அவளது தூக்கத்தின் வாசலை கனவின் பேரலை வந்து மூர்க்கமாய் மோதுகிறது.
“‘உனக்காக நான் சிந்திய இரத்தத்தை எனக்கு மீண்டும் தா !” ! இயேசுவின் குரல் எதிரொலிக்கிறது. அப்போது திடீரென இன்னொரு குரல் எழுகிறது. “போந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டார்..” அந்த ஒரு குரல் இரண்டாகி, இரண்டு நான்காகி, நூறாய் ஆயிரமாய் இலட்சமாய் பேரொலியாய் மாறுகிறது. உலகமே அதிருமளவுக்கு அச்சமூட்டுகிறது அந்த குரலொலிகள்.
“போந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டார்..”
“போந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டார்..”
மூச்சுத் திணறும் அவஸ்தையுடன் மீண்டும் திடுக்கிட்டு எழுந்தார் பிரோகுலா. தனது கணவர் பிலாத்துவின் பெயர் உச்சஸ்தாயியில் அலறப்பட்டது அவரை நிலை குலைய வைத்தது. கனவுகள் கடவுளிடமிருந்து வரும் எச்சரிக்கைக் குரல் என்று ஆழமாக நம்பப்பட்ட காலகட்டம் அது. கனவின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நடந்த கதைகளெல்லாம் புனித நூல்களில் மிகப்பிரபலம் எனும் சிந்தனை அவளை அலைக்கழித்தது.
பதினாறு வயதாக இருக்கும்போதே பிலாத்துவுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டவர் பிரோகுலா. அப்பா வயதுடைய ஒருவருக்கு மனைவியாகும் நிலை அது. ரோமப் பேரரசர் அகஸ்துஸ் தான் இவரது தாத்தா. திருமணம் முடிந்த கையோடு கணவனின் வேலை நிமித்தமாக யூதேயாவில் பயணம்.
யூதேயா தான் அந்த இளம் வயதில் அவளுக்கு ஏகப்பட்ட புரிதல்களைத் தந்தது எனலாம். அரசவையில் மிக உயரிய இடம். எங்கே சென்றாலும் மிகப்பெரிய மரியாதை. ஆனாலும் அவளுக்கு அதிலெல்லாம் நாட்டம் இருக்கவில்லை. அவளுக்கு ஒரு சில தோழிகள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் மகதலா மரியா. அவர் இயேசுவின் நெருங்கிய சீடர். அவர் மூலமாக கொஞ்சம் கொஞ்சம் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு.
யூதேயா வாழ்க்கை அவளுக்கு இஸ்ரேயலர்களின் கடவுளை அறிமுகம் செய்து வைத்தது. தனது தெய்வங்களுக்கும் இஸ்ரயேலரின் கடவுளுக்கும் இடையேயான வேறுபாடுகள் அவளை வியப்புக்குள்ளாக்கின. அதிகம் அதைப் பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்தார்.
அவளுக்கு துணை செய்த இன்னொருவர் உண்டு அவர் பெயர் சலோமி ! அவளது பன்னிரண்டு வயது மகள் செமிதா. செமிதா இனிமையாகப் பாடுவார். அவரது குரலில் மயங்கியும், மகனுக்கு பொழுது போகவும், சலோமியுடன் உரையாடவும் அவ்வப்போது பிரோகுளா அவர்களுடைய இல்லம் போவதுண்டு. அவளுடைய கணவர் தொழுகைக்கூடத் தலைவராக இருந்தார். அதனால் யூத மத சட்டங்கள் பற்றியும், இறைவார்த்தைகள் பற்றியும், நியாயப் பிரமாணம் பற்றியும் எல்லாம் அவள் நிறைய புரிந்து கொண்டாள்.
அப்போது தான், ஒரு நாள் அந்த கொடுமையான நிகழ்வு நடந்தது. செமிதா இறந்துவிட்டாள். ஒரு மலரைப் போல அந்த வீட்டில் மணம் வீசிக்கொண்டிருந்த அந்த அழகிய சிறுமி இறந்து விட்டாள். அவளது இசையால் நிரம்பியிருந்த அந்த வீடு சட்டென சோகத்தின் மௌனத்தை இழுத்துப் போர்த்திக் கொண்டு அமைதியானது. சலோமி அதிர்ந்து சிதறினாள். சிறுமியின் தந்தை இயேசுவைத் தேடி ஓடினார்.
துயரச் செய்தி கேட்டு சலோமியின் வீட்டுக்கு விரைந்தாள் பிரோகுளா. சலோமியின் அருகே வந்து தோள் தொட்ட போது தான் அவர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் இயேசு. கூடவே செமிதாவின் தந்தை. இயேசுவை அப்போது தான் அவர் பார்க்கிறார். இயேசுவின் நடையில் சாந்தம் தெரிந்தது. செமிதாவின் தந்தையிடமும் கதறல் இல்லை, ஒரு நம்பிக்கை தெரிந்தது. எதுவும் நடவாதது போல, எதுவும் தன் ஆளுகைக்கு வெளியே இல்லை என்பது போன்ற ஒரு அமைதியுடன் இயேசு வந்து கொண்டிருந்தார்.
“சிறுமி சாகவில்லை, தூங்குகிறாள். விலகிப் போங்கள்” இயேசுவின் குரல் பிரோகுளா வுக்குப் புரியவில்லை. சன்னல் வழியே பார்க்கிறாள். சிறுமி செமிதா பறிக்கப்பட்ட ஒரு மலர் போல சலனமற்றுக் கிடக்கிறாள். இறந்து வெகு நேரமாகியிருந்ததன் அடையாளமாக உதடுகள் வறண்டு போக் கிடந்தன. பிரோகுலா எதுவும் புரியாமல் இயேசுவைப் பார்த்தார். அவர் ஒரு சிலருடன் சிறுமி இருந்த அறைக்குள் நுழைந்தார். கதவு சாத்தப்பட்டது.
சற்றே திறந்திருந்த சன்னல் வழியாக பிரோகுளா அந்த காட்சியைக் கண்டாள் ! உறைந்து போனாள். இயேசு சிறுமியின் கையைப் பிடித்தார், “தலித்தாகூம்” என்றார். அவ்வளவு தான், சிறுமி எழுந்தாள். அம்மா என்றாள். சலோமியின் ஆனந்தக் கதறல் அந்தக் கதவையே உடைத்திருக்கக் கூடும். தந்தையோ வெட்டப்பட்ட மரம் போல இயேசுவின் காலடியில் விழுந்தார். கட்டிக் கொண்டார்.
பிரோகுலா தன்னை அறியாமலேயே நிலை குலைந்து சரிந்தாள். அந்த அனுபவம் அவளை புரட்டிப் போட்டது. இயேசுவின் மீதான நம்பிக்கையும் அதிகரித்தது. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாய் இயேசுவின் போதனைகளையும், செயல்களையும் பார்த்துப் பார்த்து அவரது மறைமுக சீடராகவே மாறிப் போனார்.
இப்படிப்பட்ட சூழலில் தான் இப்படி ஒரு கனவு வந்து அவரைப் புரட்டிப் போட்டது. தூக்கம் வராமல் புரண்டு படுத்தவருக்கு அதிகாலை வேளையில் அந்த சத்தம் கேட்டது.
மிகப்பெரிய கூட்டம் சலசலப்புடன் தூரத்தில் நடந்து வரும் சத்தம். கொஞ்சம் கொஞ்சமாய் அது அவர்களது இருப்பிடத்தை நெருங்குகிறது. வழக்கத்துக்கு மாறான நேரம். என்னவாயிருக்கும் ? தனது உதவியாளரை அழைத்த பிராகுளா விஷயத்தைத் தெரிந்து வர அனுப்பினார். அவன் கொண்டு வந்த செய்தி அவரது மனக் கலவரத்தை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது.
இயேசுவைக் கைது செய்திருக்கிறார்கள். அவரைக் கொலை செய்யும் நோக்கத்துடன் அன்னா, கயபா உட்பட எல்லோரும் பிலாத்துவை நோக்கி வந்திருக்கிறார்கள். அதிகாலையிலேயே கைது. மக்கள் விழித்தெழும் முன் தண்டனை, இது தான் திட்டம். அவளுக்கு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் புரிய ஆரம்பித்தன.
பிலாத்து ஒருவேளை இயேசுவுக்கு எதிராய் தீர்ப்பிடக் கூடும். காரணம் அவனுக்கு அன்னா, கயபா போன்றவர்களை எதிர்த்து நிற்கும் துணிச்சல் இல்லை. அப்படி இயேசு கொல்லப்பட்டால் அந்த இரத்தப் பழி பிலாத்து மீது விழும். அப்படியானால் அவன் நரகத்தில் எறியப்படுவது உறுதி. “உனக்காக நான் சிந்திய இரத்தத்தை தா” எனும் இயேசுவின் குரல் அவளுக்குள் மீண்டும் எதிரொலித்தது.
அவசர அவசரமாக ஒரு கடிதம் எழுதினாள். “அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில், அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன். அவரது இரத்தப்பழி நமக்கு வேண்டாம்” !. அதை பிலாத்துவிடம் சேர்த்துவிட உதவியாளரிடம் கொடுத்தனுப்பினாள்.
பிலாத்து கடிதத்தை வாசித்தான். ஆனால் அவனால் யூத மதத் தலைவர்களின் அதிகாரக் குரலுக்கும், அழுத்தத்துக்கும் எதிர்த்து நிற்க முடியவில்லை. ஆனால் மனைவியின் எழுத்துகள் அவனை அலைக்கழித்தன. உடனே எழுந்து “இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” என சொல்லி கைகழுவினான்.
இயேசுவின் சிலுவை மரணம் பிரோகுளாவை உலுக்கியது. அவள் சிலுவையின் அடியில் சென்று இயேசுவின் மரணத்தை வலியுடன் பார்த்தார். இயேவின் மரண நேரம் கொண்டு வந்த இருளையும், ஆலய திரையின் கிழிசலும், அதிர்ந்த கல்லறைகளின் திறப்பும் அவளை பதறடித்தன.
இயேசுவின் சிலுவை மரணத்தைக் கண்ட அவரால் அதன் பின் உணவே உட்கொள்ள முடியாமல் போயிற்று. மூன்றாவது நாள் இயேசுவின் உயிர்ப்புச் செய்தியைக் கேட்டபின் அவரது கவலைகளெல்லாம் பறந்து போய்விட்டன. சில காலத்துக்குப் பின் பிலாத்துவின் இரத்தப் பாவமோ என்னவோ, மகன் இறந்து போனான். பிரோகுளா அழவில்லை. மாபெரும் பாவ வழிகளில் நடக்காமல் அவன் மாண்டுபோனானே என நினைத்தாள். மாளிகையை விட்டு விட்டு இயேசுவின் சீடர்களில் ஒருவராக மாறிப் போனார்.
பிலாத்துவும் கூட இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபின் மனமுடைந்து தனது தவறுக்கு வருந்தியதாகவும். மனம் மாறியதாகவும், அதனால் படுகொலை செய்யப்பட்டதாகவும் கதைகள் உலவுகின்றன.
கிளாடியா பிரோகுளா திருத்தூதர் பவுலிடம் திருமுழுக்குப் பெற்றதாகவும், அதன் பின் இறை பணி செய்ததாகவும் பாரம்பரியக் கதைகள் கூறுகின்றன. “ஆபூல், பூதன்சு, லீனு, கிளாதியா மற்ற எல்லாச் சகோதரர்களும் சகோதரிகளும் உனக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்” ( 2 திமோ 4 :21 ) எனும் வசனத்தில் வருகின்ற கிளாதியா, பிலாத்துவின் மனைவி கிளாடியா பிரோகுளா தான் என்பது பல ஆய்வாளர்களின் நம்பிக்கையாகும்.
இவர் இயேசுவுக்காகவே வாழ்ந்து, கொலை செய்யப்பட்டதாகவும் இரத்தசாட்சிகளின் பட்டியலில் இணைந்ததாகவும் ஆதிகாலப் பதிவுகளில் சில கூறுகின்றன. இவர் சில பாரம்பரியத் திருச்சபைகளால் “புனிதராகவும்” போற்றப்படுகிறார். அக்டோபர் 27ம் நாள் அவரது நினைவு நாள் கொண்டாடப்படுகிறது.
இயேசுவைக் காப்பாற்ற வேண்டும் எனும் நோக்கத்தோடு கடைசி நிமிடத்தில் கூட முயன்ற கிளாடியா பிரோகுளாவின் துணிச்சலும், இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் நற்செய்தியை அறிவிக்க அவர் கொண்ட தாகமும் நமக்கு வியப்பைத் தருகின்றன
*
சேவியர்