Posted in Bible Books

பைபிள் கூறும் வரலாறு : 20 நீதிமொழிகள்

20
நீதிமொழிகள்

Image result for book of proverbs

நீதிமொழிகள் எனும் வார்த்தையை அறிவார்ந்த சொற்கள், ஞானமுள்ள வாக்கியங்கள் என எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். ஒரு மனிதனுடைய வாழ்க்கையைச் செம்மைப்படுத்த துணை புரிகின்ற சிந்தனைகள் என்பது தான் எளிமையான விளக்கம்.

அது சரி, நீதிமொழிகளுக்கு பைபிளில் என்ன வேலை ? உலகெங்கும் அரிஸ்டாட்டில் போன்ற எத்தனையோ தத்துவ ஞானிகள் இருக்கும் போது சாலமோனின் சிந்தனைகள் மட்டும் ஏன் பைபிளில் இடம் பெற வேண்டும் ? அதற்கு ஒரு சின்ன பின்னணி உண்டு.

தாவீது மன்னன் இறைவனின் இதயத்துக்கு நெருக்கமானவர். அவரது மகன் தான் சாலமோன் மன்னன். ஒரு முறை கடவுள் அவருக்குத் தோன்றி, “உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்” என்றார். அரசனாய் இருப்பவரிடம் இப்படி ஒரு கேள்வி எழுப்பப்பட்டால் தோல்வியே காணாத மன்னனாக வேண்டும் என்றோ, செல்வத்தில் புரளும் சக்கரவர்த்தி ஆகவேண்டும் என்றோ தான் கேட்பார்கள். சாலமோனோ, “மக்களை வழிநடத்தும் ஞானம் வேண்டும்” என்றார்.

கடவுள் அவருக்கு அந்த வரத்தை கொடுத்தார். ‘உன்னைப் போல ஞானவான் இதுவரைப் பிறக்கவில்லை, இனியும் பிறப்பதில்லை” என வரமறித்தார். அப்படிப்பட்ட இறை ஞானம் நிரம்பிய மனிதரின் சொற்கள் தான் இவை.

நீதி மொழிகள் அவருடைய வாழ்வின் நடுப்பகுதியில் எழுதப்பட்டவை. இந்த நூலில் மொத்தம் 915 நீதி மொழிகள் உள்ளன. அவற்றில் 851 நீதிமொழிகள் சாலமோன் மன்னன் எழுதியவை. மற்றவை ஆகூர் மற்றும் இலமுவேல் ஆகியோர் எழுதியவை. 31 அதிகாரங்களில் 29 அதிகாரங்களை சாலமோனும் மற்ற இரண்டு அதிகாரங்களை இவர்கள் ஆளுக்கொன்றாகவும் எழுதியிருக்கின்றனர்.

சாலமோன் மொத்தம் எழுதிய நீதிமொழிகள் 3000 ( 1 அரசர் 4 : 32 ) என்கிறது பைபிள். அவற்றில் பெரும்பாலானவை பைபிளில் இடம்பெறவில்லை என்பது வியப்பான விஷயம். பைபிளில் எது இடம்பெற வேண்டும் என்பதை இறைவனே தீர்மானிக்கிறார் என்பதன் உறுதிப்படுத்துதலாக இதைப் புரிந்து கொள்ளலாம்.

கிமு 931 களை ஒட்டிய வருடங்களில் தான் சாலமோன் மன்னனின் நீதிமொழிகள் எழுதப்பட்டன. ஆனால் அப்போதே எல்லாம் தொகுக்கப்படவில்லை. சில இறைவாக்கினர் எசேக்கியேல் காலத்தில் கிமு 700 களில் தொகுக்கப்பட்டது.

மீட்பைப் பற்றிய செய்தி நேரடியாக இந்த நூலில் இல்லை. ஆன்மீக செழிவுக்கான இறை சிந்தனைகளும் இல்லை. ஆனால் இந்த நீதிமொழிகள் மனதைச் சலவை செய்யும் வல்லமை கொண்டவை. அன்றாட வாழ்க்கையில் நாம் நடக்க வேண்டிய வழிகளை நமக்குக் காட்டுபவை.

கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரை ஆன்மீக வாழ்வு, உலக வாழ்வு என தனித்தனி பிரிவு இல்லை. உலக வாழ்க்கையை முழுமையாய் இறைவனுக்கு ஏற்புடைய வாழ்வாக மாற்ற வேண்டும் என்பதே கிறிஸ்தவ சிந்தனை. எல்லாவற்றையும் இறைவனுக்காய் செய்வதற்கு நீதிமொழிகள் வழிகாட்டுகின்றன.

இறைவனோடுள்ள உறவு எப்படி இருக்க வேண்டும் ? பிறரோடு உள்ள உறவு எப்படி இருக்க வேண்டும் ? பெற்றோரோடு உள்ள உறவு எப்படி இருக்க வேண்டும் ? அரசோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் ? குழந்தைகளோடு எப்படிப் பழக வேண்டும் ? தன்னோடுள்ள உறவு எப்படி இருக்க வேண்டும் ? எதிரிகளோடு எப்படி பழக வேண்டும் ? போன்ற எதார்த்தமான வாழ்க்கைப் பாடங்கள் இந்த நூலில் நிரம்பியிருக்கின்றன.

இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ என்ன செய்யவேண்டும் ? என்ன செய்யக் கூடாது எனும் சிந்தனையே இந்த நூலின் அடிப்படை எனலாம். ஞானமா முட்டாள் தனமா ? தாழ்மையா பெருமையா ? நீதியா அநீதியா ? சோம்பலா சுறுசுறுப்பா ? மதுவா தெளிவா ? வாழ்வா சாவா ? கோபமா சாந்தமா ? காதலா காமமா ? ஏழ்மையா செல்வமா ? என முரண்களால் கேள்விகள் அமைத்து சரியான வழி எது என்பதை எளிமையாய்ச் சொல்கிறது நீதிமொழிகள் நூல்.

இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழவேண்டுமெனில் தாழ்மையை மனதில் கொண்டிருக்க வேண்டும், பிறருக்கு நீதியானவற்றை மட்டுமே செய்ய வேண்டும், இறையச்சம் நிரம்ப இருக்க வேண்டும் என மூன்று நிலைகளில் நீதிமொழிகள் அறிவுறுத்துகிறது.

ஒரு முட்டாள் எப்படி இருப்பான் என்பதைப் பற்றி மட்டுமே சுமார் 70 நீதிமொழிகள் பேசுகின்றன. அவற்றை விலக்கி விட வேண்டும். பேச்சு எப்படி இருக்க வேண்டும் என்பதை கணிசமான நீதி மொழிகள் பேசுகின்றன. அவற்றை கைக்கொள்ள வேன்டும். உதாரணமாக பேச்சு நேர்மையாய் இருக்க வேண்டும், குறைவாகப் பேச வேண்டும், அமைதியாகப் பேச வேண்டும், சரியாகப் பேசவேண்டும் என தெளிவான அறிவுரையை நீதிமொழிகள் தருகிறது.

தினம் ஒரு அதிகாரம் என மாதம் தோறும் நீதிமொழிகளைப் படித்தால் மனம் தெளிவாகும் என்பது திண்ணம்.

Posted in Bible Books

பைபிள் கூறும் வரலாறு : 31 ஒபதியா

Image result for book of obadiah

ஒபதியா என்பதற்கு “யாவே இறைவனை வழிபடுபவர்” என்பது பொருள். பழைய ஏற்பாட்டு நூலிலேயே மிகவும் சிறிய நூல் இது தான். இந்த நூலில் ஒரே ஒரு அதிகாரம் மட்டுமே உண்டு. இருபத்து ஒன்று வசனங்களும், 670 வார்த்தைகளும் கொண்ட மிகவும் சுருக்கமான நூல் இது.

ஒபதியா தென் நாடான யூதாவில் வாழ்ந்தவர். எருசலேம் நகர் வீழ்ச்சியடைந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட நூல் இது. எருசலேமின் வீழ்ச்சி அருகில் உள்ள நாடுகளுக்கு அக்களிப்பை அளித்தது. அதில் ஒரு நாடு ஏதோம். ஏதோம் யூதாவில் புகுந்து யூதாவின் நகர்களைச் சூறையாடியது. இந்த ஏதோமியர் வேறு யாருமல்ல ஆபிரகாமின் மகனான ஈசாக்கின் புதல்வர்களில் ஒருவரான ஏசாவின் வழிமரபினர். அவர்கள் போராடுவது ஏசாவின் இன்னொரு சகோதரனான யாக்கோபின் வழிமரபினரோடு !

கருவிலேயே சண்டையிட்ட இரட்டையர்கள் ஏசாவும், யாக்கோபும். யாக்கோபு இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்டவர். ஆனாலும் வாழ்க்கையில் பல குறுக்கு புத்திகளைக் காண்பித்து கடைசியில் இறைவனிடம் சரணடைந்தவர். ஏசா வேட்டைக்காரன். சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு தனது தலைமகன் உரிமையைக் கூட யாக்கோபுக்கு விற்றவன். இருவருக்கும் வாழும் போதே பகை. அந்தப் பகை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் பரவி தீரா நிரந்தரப் பகையாய் உருவாகி விட்டது.

யாரெல்லாம் இஸ்ரேல் மீதும், எருசலேம் மீதும் போர் தொடுக்கிறார்களோ அவர்களோடெல்லாம் இணைந்து கொண்டு இஸ்ரேலுக்கும், யூதாவுக்கும் குடைச்சல் கொடுப்பதை ஏதோம் வழக்கமாகிக் கொண்டிருந்தது.

ஒபதியா ஏதோம் நாட்டுக்கு எதிராக இறைவாக்கு உரைத்தார். ஏதோம் நாடு தண்டிக்கப்படும் என்பதை அவர் தீர்க்கத்தரிசனமாய் கூறினார். அவருடைய தீர்க்கத்தரிசனம் ஒரு காட்சிப்படுத்தல் போல அமைந்திருக்கிறது. ஏதோம் நாடு சாக்கடலுக்கு தென் கிழக்காய் அமைந்துள்ள நகரம். இது வாக்களிக்கப்பட்ட தேசத்தின் பகுதி தான். ஆனால் இந்த நிலத்தை இஸ்ரயேலர்கள் கையகப்படுத்தவில்லை.

ஏதோமில் இரண்டு நகர்கள் உண்டு. அதில் ஒன்று சேலா. அதை சிவப்பு பாறைகளால் நிரம்பியிருக்கும் இடம். அதில் அழகிய வேலைப்பாடுகளுடன் பல ஆலயங்கள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன. சுமார் இரண்டாயிரம் அடி உயரமாய் அமைந்துள்ள இந்த நகரத்தைத் தான் ஒபதியா தனது இறைவாக்கில் குறிப்பிடுகிறார்.

மலைக்குகைகளில் வாழ்ந்த ஏதோமியர்களுக்கு இந்த கலைவேலைப்பாடுகள் அடங்கிய மலை ஒரு அந்தஸ்தின் அடையாளம். அதன் உச்சியிலிருந்து பார்த்தால் செங்கடலும், சாக்கடலும் அழகாய்த் தெரியும். எத்தனை அழகு இருந்தால் என்ன ? ஏதோமியர்கள் உண்மை தெய்வத்தை வழிபடும் வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கவில்லை.

இந்த நூலின் முதல் பதினான்கு அதிகாரங்களும் ஏதோமுக்கு எதிராக இறைவன் உரைக்கின்ற வார்த்தைகள். இரண்டாவது பகுதியான பதினைந்தாம் அதிகாரம் முதல் இருபத்து ஒன்றாம் அதிகாரம் வரை பிற தேசங்களுக்கு வர இருக்கின்ற தண்டனைத் தீர்ப்பைக் குறிக்கும் வார்த்தைகள்.

ஏதோமைக் குறித்து பேசும்போது அவர்களுடைய கர்வம் தேசத்தை அழிக்கும் என்கிறார். இறைவனுக்குப் பிடிக்காத ஒரு விஷயம் கர்வம். கர்வம் கொண்டவர்களை இறைவன் அடித்து வீழ்த்துவார் எனும் உண்மையை ஒபதியா எடுத்துரைக்கிறார். சகோதரன் யாக்கோபின் வழிமரபினர் மீது நீ வன்மம் காட்டாமல் இருந்திருக்க வேண்டும் என இறைவன் கடுமையாய் ஏதோமை எச்சரிக்கிறார்.

ஏதோமுக்கு எதிராக இறைவாக்கு உரைத்தவர் ஒபதியா மட்டுமல்ல. ஏசாயா, எசேக்கியேல், எரேமியா ஆகிய பிரபல இறைவாக்கினர்கள் மூலமாகவும் இறைவன் ஏதோமியரை எச்சரித்திருக்கிறார். எல்லா எச்சரிக்கைகளையும் ஏதோமியர் புறக்கணித்ததால் தான் இறைவனின் தீர்ப்பு அந்த நாட்டின் மீது விழுந்தது.

ஏதோமியருக்கும், யூதர்களுக்கும் இருந்த பகை தொடர்ந்து கொண்டே இருந்தது. இயேசுவின் மழலைக்காலத்தில் ஏரோது மன்னன் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையெல்லாம் கொன்றதும் ஏதோமிய வன்முறையே ! அவனுடைய மகன் திருமுழுக்கு யோவானை படுகொலை செய்தான். அவனுடைய மகன் தான் யாக்கோபுவைப் படுகொலை செய்தவன் (தி.ப12) . அவனுடைய மகன் அகரிப்பா கிபி 100களில் வாரிசு இன்றி இறந்தான். அப்படி படிப்படியாக ஏதோமியர்கள் அழிந்தனர்.

இன்று உலகில் ஏதோமியரின் வழிமரபு இல்லை. ஒபதியாவின் இறைவாக்கு அட்சர சுத்தமாய் நிறைவேறிவிட்டது. இதை இறைவன் சுமார் 600 ஆண்டு கால இடைவெளியில் செயல்படுத்தினார். இறைவன் தனது வார்த்தையை நிறைவேற்றுவார் என்பதையும், அதற்கான கால அளவை அவரே நிர்ணயிப்பார் என்பதையும் இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

இறைவன் பிற தேசங்களுக்கும் ஒபதியா மூலம் எச்சரிக்கையை அளித்தார். தனது மக்களை இன்னலுக்குள்ளாக்கும் மக்களை இறைவன் தொடர்ந்து தண்டித்து வருகிறார்.

ஒபதியா நூல் அளவில் சிறியதாக இருந்தாலும் இறைவன் தனது மக்கள் மேல் வைத்திருக்கும் அன்பையும், அவரது மக்களை எதிர்ப்போர் மீது கொள்ளும் சினத்தையும் தெளிவாய் பதிவு செய்கிறது. இன்றைய ஆன்மீக புரிதலில் செய்கிறது”அயலான் மீது அன்பு செலுத்தாத கிறிஸ்தவன் இறைவன் பார்வையில் ஏதோமியனாய் அழிவான்” என்பதைக் கற்றுக் கொள்வோம்.

Posted in Bible Books

பைபிள் கூறும் வரலாறு : 30 ஆமோஸ்

Image result for book of amos

 

இஸ்ரேல் நாட்டுக்கு இறைவாக்கு உரைக்க கடவுள் அனுப்பிய கடைசி இறைவாக்கினர்கள் தான் ஆமோஸ் இறைவாக்கினரும், ஓசேயா இறைவாக்கினரும். ஆமோஸ் இறைவாக்கினரின் வார்த்தைகள் கடவுளின் எண்ணங்களைப் பேசுகிறது. ஓசேயா நூல் இறைவனின் உணர்வுகளைப் பேசுகிறது.

முதலில் எழுத்து வடிவம் பெற்ற இறைவாக்கினர் நூல் ஆமோஸ் தான். நூலில் மொத்தம் ஒன்பது அதிகாரங்களும், 146 வசனங்களும், 4217 வார்த்தைகளும் இந்த நூலில் உள்ளன.

தன்னைத் தொழுது, தன்னை மட்டுமே அன்பு செய்து வாழ்கின்ற ஒரு மக்கள் இனம் இருக்க வேண்டும் என்பது இறைவனின் விருப்பமாக இருந்தது. அதற்காக பன்னிரண்டு கோத்திரங்கள் கொண்ட இஸ்ரேல் இனத்தை அவர் தேர்ந்தெடுத்தார். ஆனால் மக்களோ இறைவனை விட்டு விலகிச் செல்வதையே தொடர்ந்து விரும்பிக் கொண்டிருந்தனர். சவுல், தாவீது, சாலமோன் எனும் மூன்று மன்னர்களுக்குப் பின் ஒன்றாய் இருந்த இனம், இரண்டானது.

வட நாடான இஸ்ரேல் பெரிய குழுவானது, பன்னிரண்டில் பத்து கோத்திரங்கள் வடக்கே இணைந்தன. அவர்கள் தாவீதின் வழிமரமற்ற அரச பரம்பரையை உருவாக்கினார்கள். அவர்களுக்கு எருசலேம் தேவாலயமும் இல்லாமல் போக பெத்தேல் சமாரியா போன்ற இடங்களில் வழிபடத் துவங்கினர்.

தென் நாடான யூதா தாவீதின் பரம்பரை அரசாட்சியுடனும், எருசலேம் தேவாலயத்துடனும் தனது பயணத்தைத் தொடர்ந்தது.

இஸ்ரேல் நாடு செழுமையாய் இருந்த காலகட்டத்தில் இறைவாக்கு உரைக்க வந்தவர் தான் ஆமோஸ். நாட்டில் வளங்களுக்குக் குறைவில்லை. பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர் ஆகிக் கொண்டே இருந்தார்கள். ஆனால் அப்போது கவனிக்கபடாமல் உதாசீனம் செய்யப்பட்ட ஏழைகள் எனும் ஒரு கூட்டமும் பெருகிக் கொண்டே இருந்தது.

வீடுகளை ஒருசாரார் வாங்கிக் குவிக்க, வீடின்றி ஒரு சாரார் வாடத் துவங்கினர். வளங்களோடு ஒரு சாரார் வாழ்க்கை நடத்த, வழியின்றி ஒரு சாரார் வாடி வதங்கினர்.

செல்வம் அங்கே பிரதானமானது. மனித நேயம் மறைந்து போனது. கையூட்டு எங்கும் தலைவிரித்தாடியது. எங்கும் அநியாயமாய் பணம் சேர்க்கும் நிலை உருவானது. நீதிபதிகளும் நீதிகளை விற்கத் துவங்கினர். பாலியல் குற்றங்கள் பரவத் துவங்கின. மதுவின் கோரத் தாண்டவம் எங்கும் வியாபித்தது.

ஓய்வு நாள் இறைவனுக்கானது எனும் சிந்தனை மெல்ல மெல்ல மறைய, ஓய்வு நாளிலும் உழைப்போம்மும், பணம் ஈட்டுவோம் எனும் சிந்தனை எங்கும் பரவத் துவங்கியது. அது ஆன்மீகத் தளத்திலும் எதிரொலித்தது. மக்கள் விளைச்சலுக்காகவும், வளத்துக்காகவும் வேறு தெய்வங்களை நாடத் துவங்கினார்கள். தூய்மை என்பது தூரமாய்ப் போனது.

இந்த காலகட்டத்தில் தான் இத்தகைய சமூக ஏற்றத்தாழ்வுக்கு எதிரான இறைவனின் குரலாய் வந்தார் ஆமோஸ் இறைவாக்கினர். ஆமோஸ் என்பதற்கு துயரத்தைத் தாங்குபவர் என்பது பொருள். தென் நாடான யூதாவில், எருசலேமுக்கு பன்னிரண்டு மைல் தொலைவில் வாழ்ந்து வந்தவர் . சமத்துவ சமுதாயமே இறைவனின் பார்வை என விளம்பினார். மிகவும் கடுமையான போதனையாய் இவரது போதனைகள் அமைந்திருந்தன. பழைய ஏற்பாட்டில் ஆமோஸ் இறைவாக்கினரைப் பற்றிய குறிப்பு ஆமோஸ் இறைவாக்கினர் நூலில் மட்டுமே வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

இஸ்ரேல் மக்களை இறைவன் மீண்டும் தன் வழிக்குக் கொண்டு வர தண்டனைகளைக் கொடுத்தார் என்கிறது பைபிள். செல்வத்தை கொண்டாடிய அவர்களின் விளைச்சலை நிறுத்தினார். வளங்களோடு வாழ்க்கை நடத்திய அவர்களின் நீர் ஆதாரத்தை குறைத்தார். பயிர்களை அழிக்க வெட்டுக்கிளிகளை அனுப்பினார். விலங்குகளை வலுவிழக்கச் செய்தார். மனிதர்களுக்கு நோய்களை அனுப்பினார்.

ஆமோஸ் இறைவாக்கினர் தொழுகைக் கூடங்களில் ஆன்மீகம் கற்றவரல்ல. வளமான வாழ்க்கை வாழ்ந்தவரல்ல. ஏழ்மை நிலையில் பிறந்து வளர்ந்தவர். அடக்குமுறையின் வலியையும், ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும் புரிந்து கொண்டவர். ஏழைகளின் உணவான அத்தி மரங்களைப் பராமரித்து வந்தவர். இறைவாக்கினராய் வருவதற்குரிய ஆன்மீக கல்வி அவருக்கு இல்லை. ஆனாலும் இறைவனின் கரம் அவரை வலிமையாய்ப் பற்றிக் கொண்டது. நற்செய்தி அறிவித்தலுக்குத் தேவை கல்வியறிவல்ல, இறையருள் என்பதை இவரது வாழ்க்கை நமக்கு புரிய வைக்கிறது.

மக்களை அழிப்பேன் என காட்சியின் மூலம் இறைவன் ஆமோஸுக்கு எடுத்துரைக்கிறார். ஆமோஸ் இறைவாக்கினரோ இறைவனிடம் மன்றாடிப் புலம்புகிறார். இறைவன் மனம் மாறி தனது திட்டத்தை மாற்றிக் கொள்கிறார். நமது செபங்கள் இறைவனின் திட்டங்களை மாற்றும் எனும் உண்மையை இந்த நிகழ்வு நமக்குப் புரிய வைக்கிறது.

ஆமோஸின் இறைவாக்குகள் மக்களை கோபமடையச் செய்கின்றன. காரணம் அவருடைய எச்சரிக்கைகள் மக்களுடைய இதயங்களில் மிகப்பெரிய இடியாக இறங்கின. எட்டு நாடுகளின் மீது அவர் எச்சரிக்கை விடுத்தார். மூன்று நீண்ட உரைகளை ஆற்றினார். ஐந்து குறியீடுகளைப் பேசினார். மூன்று மாற்றங்களைக் குறித்துப் பேசினார்.

கவித்துவமும், இறை சிந்தனையும் அடங்கிய ஒரு முக்கியமான நூலாய் திகழ்கிறது ஆமோஸ் இறைவாக்கினரின் நூல் !

Posted in Bible Books

பைபிள் கூறும் வரலாறு : 29 யோவேல்

29

யோவேல்

Image result for book of Joel

யோவேல் இறைவாக்கினரைக் குறித்து விவிலியம் அதிகமாகப் பேசவில்லை. அவர் பெத்துவேல் என்பவரின் மகன் என்பதைத் தவிர. இருவருடைய பெயரிலும் ‘கடவுள்’எனும் பொருள் இருக்கிறது, எனவே அவர்கள் ஒரு ஆன்மீகக் குடும்பத்தில் பிறந்திருக்க வாய்ப்பு உண்டு.

யோவேல் நூல் கிமு 9ம் தூநூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என இறையியலார்கள் நம்புகின்றனர். யோவேல் என்பதற்கு ‘யாவே தான் கடவுள்” என்பது பொருள். இந்த நூலில் மூன்று அதிகாரங்களும், எழுபத்து மூன்று வசனங்களும், இரண்டாயிரத்து முப்பத்து நான்கு வார்த்தைகளும் உள்ளன. யூதாவில் ஆரம்பகாலத்தில் இறைவாக்குரைத்தவர் யோவேல் இறைவாக்கினர்.

‘ஆண்டவரின் நாள்’ எனும் பதத்தை பயன்படுத்திய யோவேல் அதை மிகப்பெரிய எச்சரிக்கையாய் மக்களுக்குக் கொடுத்தார். தீர்ப்பு என்பதும் கடவுளின் நியாயமும் வேற்றின மக்கள் மீதல்ல, இஸ்ரேல் நாட்டின் மீதே விழும் எனும் எச்சரிக்கையை முதன் முதலில் விடுத்தவர் அவர் தான். ‘ஆண்டவரின் நாள்’ என்பது வெளிச்சத்தின் வரவல்ல, இருளின் வரவு. என அவரது இறைவாக்கு அதிர்ச்சியளிக்கிறது.

பல கிறிஸ்தவர்கள் தாங்கள் விண்ணகம் செல்வது சர்வ நிச்சயம் என்றும், எப்படிப்பட்ட பாவ வாழ்க்கை வாழ்ந்தாலும் கடவுள் கை விடமாட்டார் என்றும் நினைக்கின்றனர். அவர்களுக்கு யோவேலின் எச்சரிக்கை என்னவென்றால், ‘ஆண்டவரின் நாள்’ உங்களுக்கு இருளாய் வரும் என்பதே !

வெட்டுக்கிளிகளால் நாடு அடையப்போகும் அழிவை யோவேல் இறைவாக்கினர் முன்னுரைத்தார். நாட்டில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இருக்கும். உண்பதற்கும் எதுவுமின்றி எல்லாம் அழிக்கப்படும். என்பதே அவரது வார்த்தை. சுமார் 60 கோடி வெட்டுக்கிளிகள், அறுநூற்று நாற்பது கிலோ மீட்டர் சதுர பரப்பளவில் விஸ்வரூப வடிவமாய் நாட்டில் நுழைந்தால் ஒரு நாளைக்கு அவை தின்று குவிக்ககூடிய தானியங்கள் எண்பதாயிரம் டன் ! என்கிறது ஒரு கணக்கு.

வெட்டுக்கிளிகள் இறைவனின் தீர்ப்பாய் வருவதை விடுதலைப்பயணம் நூலில் மோசேயின் வாழ்க்கையில் வாசிக்கலாம். இறைவன் அனுப்பிய பத்து வாதைகளில் எட்டாவது வாதை வெட்டுக்கிளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கையாகவே நடக்க சாத்தியமுள்ள விஷயங்கள் இயற்கைக்கு மாறான அளவுக்கு விஸ்வரூபமாக நடக்கும் போது இறைவனின் கரம் அதில் இருப்பதை நாம் உணர முடியும். இந்த வெட்டுக்கிளிகளின் வருகையும் அப்படிப்பட்டதே.

இயற்கை பேரழிவுகள், இடர்கள் எல்லாமே இறைவன் நமக்கு அனுப்புகின்ற ஒரு செய்தி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

யோவேல் இறைவாக்கினரின் வெட்டுக்கிளிகள் உவமை இன்னொரு விஷயத்தையும் எடுத்துரைக்கிறது. அது பாபிலோனியர்களின் படையெடுப்பு. வெட்டுக்கிளிகளைப் போல படையெடுத்து வருகின்ற வீரர்களை யோவேல் பதிவு செய்கிறார். பாபிலோனியர்களின் படையெடுப்பு தான் வெட்டுக்கிளிகளைப் போல அனைத்தையும் அழித்து நகர்கிறது. ஒரு குழந்தையோ, ஒரு உயிருள்ள கால்நடையோ கூட தப்பவில்லை என்பது துயரமான வரலாறு.

யோவேல் நூலின் இரண்டாம் பாகம் மக்கள் மனம் திரும்ப வேண்டும் எனும் சிந்தனையின் அடிபடையில் அமைந்துள்ளது. மக்கள் மனம் திரும்பாவிடில் இறைவனின் தண்டனை மிக அதிகமாய் இருக்கும் என்பதை அவரது வார்த்தைகள் எடுத்தியம்புகின்றன.

மக்கள் யோவேலின் இறைவார்த்தைக்குச் செவிமடுத்து மனம் திரும்பவில்லை. அதை விட நல்லது மது அருந்தி மயங்கிக் கிடப்பது என சென்று விட்டனர். இப்போது இரண்டாம் முறையாக யோவேல் அழைப்பு விடுக்கிறார்.

“உங்கள் உடைகளையல்ல, இதயங்களைக் கிழித்துக் கொள்ளுங்கள்” என்பது புதிய அறைகூவலாக வருகிறது. வெளிப்படையான அடையாளமல்ல, உள்ளார்ந்த மாற்றமே தேவையானது. என்பதே அதன் பொருள்.

யோவேல் இறைவாக்கினர் மனம் திரும்புதலை மகிழ்ச்சியின் அடையாளமாய் கூறுகிறார். இழந்து போனவை திரும்பக் கிடைக்கும் எனும் நம்பிக்கையின் வார்த்தையையும், ஆறுதலின் வார்த்தையையும் தருகிறார்.

எனது வார்த்தைகளைக் கேட்டு நடந்தால் எல்லாரையும் ஆசீர்வதிப்பேன் என இறைவன் வாக்களித்தார். “நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்; உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்; உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்.
அந்நாள்களில், உங்கள் பணியாளர், பணிப்பெண்கள் மேலும்
என் ஆவியைப் பொழிந்தருள்வேன்” என்றுரைத்தார் அவர்.

ஆண்டவரின் நாள் எப்படி இருக்கும், அதற்கு என்ன அறிகுறி தெரியும் என்பதைப் பற்றி யோவேல் உரைத்தது மிக முக்கியமானது. “எங்குமே, இரத்த ஆறாகவும் நெருப்பு மண்டலமாகவும், புகைப்படலமாகவும் இருக்கும். அச்சம் தரும் பெருநாளாகிய ஆண்டவரின் நாள் வருமுன்னே, கதிரவன் இருண்டு போகும்; நிலவோ இரத்தமாக மாறும்” என்றார் அவர்.

மீட்பின் நம்பிக்கையாக அவரது வார்த்தை “ஆண்டவரின் திருப்பெயரைச்சொல்லி வேண்டுவோர் யாவரும் தப்பிப்பிழைப்பர்” என ஒலிக்கிறது.

யோவேல் நூலிலுள்ள தீர்க்கதரிசனங்களில் சில நிறைவேறிவிட்டன. இயேசுவின் இரண்டாம் வருகை மற்றும் இறுதி நியாயத் தீர்ப்புடன் மற்றவையும் முடிவு பெறும்.

மிகவும் சுருக்கமான இந்த நூல் மிகவும் பரந்துபட்ட இறை சிந்தனைகளை நமக்குத் தருகிறது.

Posted in Bible Books

பைபிள் கூறும் வரலாறு : 28 ஓசேயா

28
ஓசேயா

Image result for book of hosea

வடநாடான இஸ்ரேலில் இறைவாக்கு உரைத்தவர் ஓசேயா இறைவாக்கினர். ஆமோஸ் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்த பத்து ஆண்டுகளுக்குப் பின் இவர் இறைவாக்கு உரைத்து வந்தார். வடநாடு வீழ்ச்சியுறுவதற்கு முன் கடைசியாக இறைவாக்கு உரைத்த இறைவாக்கினர் ஓசேயா தான்.

ஓசேயாவின் இறைவாக்கு, அன்பும் கருணையும் கலந்த அறைகூவலாய் மக்களை நோக்கி நீண்டது. கண்டித்தும், தண்டித்தும் மக்களை அழைத்த இறைவன் கடைசியாய் ஒருமுறை மக்களை இதயம் கசியக் கசிய அழைக்கின்ற நூல் இது எனலாம். ஓசேயா என்பதற்கு மீட்பு என்று பொருள். இதில் பதினான்கு அதிகாரங்களும், 197 வசனங்களும், 5175 வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. அவரது நாற்பது ஆண்டு கால இறைவாக்கு உரைத்தலை இந்த நூல் பதிவு செய்திருக்கிறது.

அன்பும் நம்பிக்கையும் கலந்த உறவை இறைவன் எதிர்பார்க்கிறார். மணப்பெண்ணான இஸ்ரேலோடு இறைவனுக்கு இருக்கின்ற உடன்படிக்கையாக இந்த நூல் அமைகிறது.

இறைவனுக்கும், மணப்பெண்ணான இஸ்ரேலுக்கும் இருக்க வேண்டிய அன்பும், நம்பிக்கையும் வலுவிழந்தபோது ஓசேயா இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்தார். “இணைபிரியாமல் இருந்த நமது அன்புறவு என்னவாயிற்று ? ” என்பது அவரது கேள்வியாய் இருந்தது.

இறைவனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே இருக்கும் திருமண உறவின் வலிமையையும், வலியையும் புரிந்து கொள்ள இறைவன் இறைவாக்கினர்களை பல்வேறு கடின சூழ்நிலைகளுக்குள் வழி நடத்துவது வழக்கம். எரேமியாவை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றார் இறைவன். இஸ்ரேல் இல்லாத வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை மனைவி இல்லாத எரேமியா புரிந்து கொண்டார்.

எசேக்கியேலின் மனைவி இறந்து விடுகிறார். ஆனால் எசேக்கியேல் அழக்கூடாது என இறைவன் கூறுகிறார். காதல் மனைவி இழந்து போகும் துக்கம் எவ்வளவு கடினமானது என்பதை எசேக்கியேல் உணர்ந்தார். அதன் மூலம் வழிவிலகும் யூதாவின் செயல் இறைவனை எவ்வளவு கலங்கடித்தது என்பதைப் புரிந்து கொள்கிறார்.

அதே போல ஓசேயாவுக்கும் ஒரு புதிய படிப்பினையைக் கொடுக்கிறார். அதன்படி ஒரு விலைமாதுவை திருமணம் செய்து கொள்ள இறைவன் அவரிடம் சொல்கிறார். அவரும் அப்படியே செய்கிறார். அவளுடன் அன்பாய் குடும்பம் நடத்துகிறார். அவளுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர். அதில் ஒன்றேனும் வழிதவறிப் பிறந்த குழந்தையாய் அமைந்து விடுகிறது.

பின் ஓசேயாவின் மனைவி அவரை விட்டு விட்டு மீண்டும் பழைய விலைமகள் தொழிலுக்கே செல்கிறாள். ஓசேயாவோ அவளை தேடிக் கண்டுபிடித்து மீட்டுக் கொண்டு வருகிறார். சில காலத்துக்குப் பின் இருவரும் மீண்டும் வாழ்க்கையைத் தொடர்கின்றனர்.

ஓசேயாவின் மனைவி பாவ வாழ்க்கையில் புரண்டு கிடக்கிறார். ஓசேயா அவளை மணம் முடித்த பின்னும் அவருக்கு உண்மையாய் இருக்கவில்லை. அவளுடைய அன்பு போலித்தனம் மிகுந்ததாய் இருந்தது. மீண்டும் பாவ வழிக்கே திரும்பிய அவளை ஓசேயா மீட்கிறார். இஸ்ரேல் நாட்டை ஓசேயாவின் மனைவியோடு இறைவன் ஒப்பிடுகிறார்.

ஓசேயாவோ தொடர்ந்து அன்பு செலுத்துகிறார். கண்டிப்பை வெளிப்படுத்தினாலும் மனைவியோடு அன்பாக வாழ்கிறார். இறைவனின் அன்பை இத்துடன் ஒப்பிடுகிறார் இறைவாக்கினர்.

ஓசேயாவின் நூல் , ஏழு வகையான பாவங்களை பட்டியலிடுகிறது.

1. தங்கள் திருமண வாழ்க்கையில் மக்கள் உண்மையற்றவர்களாக இருந்தார்கள். இறைவனோடும் அவ்ர்கள் உண்மையான அன்பு வைக்கவில்லை.

2. இறைவனை மறந்து, அவரிடம் ஆலோசனை கேட்காமல் தாங்களாகவே முடிவெடுத்து வந்தனர். தங்கள் அரசனையும், ஆள்வோர்களையும் தேர்ந்தெடுக்கையில் இறைவனை அவர்கள் நினைக்கவில்லை.

3. மக்கள் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருக்கவில்லை. ஒருவரை மற்றவர் குறைகூறியும், புறங் கூறியும் வாழ்ந்து வந்தார்கள்.

4. பிற இன மக்களின் கடவுள்களை வழிபட்டு வந்தனர்.

5. தகாத உறவுகளின் பாதையில் நடந்து தங்களுடைய ஆன்மீக வாழ்க்கையைக் கறைபடுத்திக் கொண்டனர்.

6. இறைவனின் அறிவுரைகளை நிராகரித்து வாழ்ந்தனர்.

7. நன்றியில்லாத மக்களாய் அவர்கள் வாழ்ந்து வந்தனர்.

மக்களுடைய அரைவேக்காட்டுத் தனத்தை ஓசேயா தனது உவமைகளின் மூலமும், உரைகள் மூலமும் தொடர்ந்து விளக்குகிறார். ஒருமுறை கேக் செய்வதைப் பற்றி சொல்லி அதை விளக்குகிறார். ஒரு புறம் மட்டும் வெந்து போகின்ற கேக்கானது மறு மக்கத்தில் பச்சையாக இருக்கும். அதை யாரும் சாப்பிட முடியாது. அதுபோல இஸ்ரேல் மக்களின் வாழ்க்கை பயனற்றதாக இருக்கிறது என்று ஒரு முறை விளக்கினார்.

வேடனின் வலையில் சிக்கிக் கொண்ட புறாவைப் போல இஸ்ரேல் இருக்கிறது என்று இன்னொரு முறை குறிப்பிட்டார்.

இஸ்ரேலின் இந்த நிலமைக்குக் காரணமாக ஓசேயா நான்கு வித மக்களைக் குறிப்பிடுகிறார். அதில் கடவுளை அறியாத குருக்கள், போலித் தீர்க்கத் தரிசிகள், இறைவனின் வழியில் நடக்காத மன்னர்கள், ஏழைகளை ஒடுக்கும் முதலாளிகள். இந்த நாலு வகையினரும் தான் இஸ்ரயேலின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணம்.

ஓசேயா நூல் வியப்பான ஒரு ஆன்மீக அனுபவம்.