Posted in கிறிஸ்தவ இலக்கியம், Bible People, Sunday School

நல்ல சமாரியன் ( சிறுவர் பேச்சுப் போட்டி )

( சிறுவர் கதை )

*

எல்லாருக்கும் வணக்கம். நான் இன்னிக்கு ஒரு கதை சொல்லப் போறேன். அது ஒரு ஆக்‌ஷன் கதை. 

எருசலேம்ல இருந்து எரிகோவுக்கு வியாபாரி ஒருத்தர் போயிட்டிருந்தாரு. அந்த ரூட்டு ரொம்ப டேஞ்சரான ரூட். அடிக்கடி திருடங்க வந்து டிராவலர்ஸை எல்லாம் புடிச்சு, அடிச்சு, இருக்கிறதை எல்லாம் புடுங்கிட்டு கொன்னுடுவாங்க. இந்த மனுஷனுக்கு வேற வழி இல்ல. அதனால அந்த ரூட் வழியா போயிட்டிருந்தாரு. கையில வேற பணம் இருக்கு. 

அவரோட போதாத காலம், ஒரு திருட்டு கும்பல் கிட்டே மாட்டிகிட்டாரு. அவங்க நிறைய பேரு இருந்தாங்க. இவரை அடிச்சு தொவைச்சு காய போட்டுட்டு, இருந்ததை எல்லாம் அள்ளிட்டு போயிட்டாங்க. ஐயோ யாராச்சும் வந்து காப்பாத்துவாங்களான்னு இவரு குற்றுயிரும் குலை உயிருமா அங்கே கிடந்தாரு.

அப்போ அந்தப் பக்கமா ஒரு குரு வந்தாரு. அப்பாடா நம்ம பிரச்சினை தீந்துது வரது ஒரு குருன்னு இவரு நினைச்சிருக்கலாம், தெரியல. ஆனா குரு சைடு வாங்கி ஓடியே போயிட்டாரு. ஏன்னா இரத்தத்தை தொட்டா அது தீட்டாயிடும், அப்புறம் அவங்க உடனே கோயிலுக்கு போக முடியாது. 

அடடா குரு போயிட்டாரான்னு நினைச்சுட்டே கிடந்திருப்பாரு அந்த அடிபட்ட யூத மனுஷன். அப்போ வந்தாரு லேவியர் ஒருத்தார். அப்பாடா குரு தான் குடு குடுன்னு ஓடிட்டாரு இவர் கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவாருன்னு அடிபட்டவர் நினைச்சிருக்கலாம். பட்… பேட் லக். லேவியும் தாவித் தவி ஓரமா ஓடியே போயிடாரு. 

அப்புறம் வந்தாரு ஒரு சமாரியன். நல்லா இருக்கிற காலத்திலயே நெருங்கி வரமாட்டாங்க. சாகக் கிடக்கும்போ இவனெல்லாம் எப்படி என் பக்கத்துல வருவான்னு அவரு நினைச்சிருக்கலாம். ஆனா நடந்ததே வேற. அந்த சமாரியன் ஓடிப் போய் அந்த மனுஷனை தூக்கி, அவனுக்கு ஃபஸ்ட் எய்ட் எல்லாம் குடுத்து, தன்னோட அனிமல் மேல ஏத்தி சத்திரத்துக்கு கூட்டிட்டு போனாரு. அதோட விடல, சத்திரக் காரனுக்கு பணமும் குடுத்து, இனி தேவைப்பட்டாலும் தருவேன்னு சொல்லிட்டு போனாரு. 

அந்த யூதன் ஷாக் ஆயிட்டான். என்னடா நடக்குது இங்கே ?  நமக்கு ஹெல்ப் பண்ணுவாங்கன்னு நினைச்சவங்க ஓடியே போக, ஓடிப் போவான்னு நினைச்சவன் ஹெல்ப் பண்றானே அப்படின்னு நினைச்சாரு.

நம்ம அயலான் யாருன்னா அந்த ஹெல்ப் பண்ணினவன் தான். அப்படின்னு இயேசு சொல்றாரு. 

இதுல இயேசு என்ன சொல்ல வராருன்னா, நாம சாதி மதம் தீட்டு அது இது லொட்டு லொசுக்கு எல்லாம் பாக்காம எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணணும். சர்ச்சுக்கு போறேன், கன்வென்ஷனுக்கு போறேன்னு ஓடறதை விட, தேவைப்படற ஒருத்தனுக்கு ஹெல்ப் பண்ண போறது தான் உசத்தின்னு சொல்றாரு.

புரிஞ்சுதா ? நாமும் அப்படியே செய்வோமா ?

நன்றி

*

Posted in Bible People

பைபிள் மாந்தர்கள் 150 : திருவெளிப்பாட்டுப் பெண்

Image result for Mary in revelation

பைபிளின் கடைசியாக வருகின்ற நூல் திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாடு. இயேசுவின் திருத்தூதர்களில் படுகொலை செய்யப்படாமல் இயற்கை மரணம் எய்திய ஒரே நபர் யோவான் தான். அவருடைய கடைசி காலத்தில் இறைவன் அவருக்கு ஒரு வெளிப்படுத்துதலை வழங்கினார். அந்தக் காட்சியே திருவெளிப்பாடு எனும் நூலில் எழுதப்பட்டுள்ளது.

இறைமகன் இயேசுவின் இரண்டாம் வருகையும், உலக முடிவில் நிகழப் போகும் நிகழ்ச்சிகளையும் இந்த நூல் விளக்குகிறது. இந்த நூலில் ஒரு பெண் காட்சியளிக்கிறார். அவரைப்பற்றி நூல் கவித்துவமாய் விளக்குகிறது.

“வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்” என அவருடைய தோற்றம் விளக்கப்பட்டுள்ளது.

அந்த பெண் கர்ப்பவதியாய் இருந்தார். பேறுகால வேதனையின் கதறலை அவர் வெளிப்படுத்தினார். அந்தப் பெண் பிள்ளை பெற்றவுடன் விழுங்கி விட ஒரு அரக்கப் பாம்பு அங்கே தோன்றியது. அந்த பாம்புக்கு ஏழு தலைகளும் பத்து கொம்புகளும் இருந்தன.

எல்லா நாடுகளையும் இருப்புக் கோல் கொண்டு நடத்தவிருந்த ஒரு ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். குழந்தை கடவுளின் அரியணை இருந்த இடத்துக்கு எடுத்துச் செல்லப் பட்டது. அந்தப் பெண் பாலைவனத்தில் கடவுள் ஏற்பாடு செய்திருந்த இடத்திற்கு ஓடிப் போனார்.

அப்போது விண்ணகத்தில் ஒரு போர் வந்தது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தனர். அரக்கப் பாம்பு தோல்வியடைந்து மண்ணில் தள்ளப்பட்டது. அது அந்தப் பெண்ணைக் கொன்றுவிட‌ அவரைத் துரத்தியது.

அந்தப் பெண்ணுக்கு தப்பிச் செல்ல இரண்டு கழுகின் சிறகுகள் அளிக்கப்பட்டன. அவர் பாலை நிலத்துக்கு பறந்து சென்றார். அங்கே மூன்றரை ஆண்டு காலம் பேணப்பட்டார். அப்பெண்ணை நீரினால் மூழ்கடிக்க அரக்கப்பாம்பு வாயிலிருந்து தண்ணீரை ஆறு போல பாயச் செய்தது.

உடனே நிலம் வாயைத் திறந்து அந்த நீரை உறிஞ்சிக் கொண்டது. அதனால் அரக்கப் பாம்பு அந்த பெண்ணை விட்டு விட்டு அவருடைய எஞ்சிய பிள்ளைகளோடு போர்தொடுக்கப் புறப்பட்டுப் போனது.

கிறிஸ்தவம் அந்தப் பெண்ணை இரண்டு விதமாகப் பார்க்கிறது. ஒன்று அந்தப் பெண்ணை கிறிஸ்தவர்களின் கூட்டமாகிய திருச்சபையைக் குறிப்பதாகப் பார்க்கிறது. பெண்ணின் தலையில் இருக்கும் பன்னிரண்டு விண்மீன்களும் பன்னிரண்டு திருத்தூதர்களைக் குறிக்கலாம். அல்லது இஸ்ரவேலில் பன்னிரண்டு கோத்திரங்களைக் குறிக்கலாம்.

கதிரவன் என்பது திருச்சபையின் மாட்சியைக் குறிக்கிறது. நிலவு என்பது திருச்சபையின் உயர்நிலையைக் குறிக்கிறது. அரக்கப் பாம்பு என்பது சாத்தானையும், அது போரிடச் சென்ற பெண்ணின் மற்ற பிள்ளைகள் என்பது துவக்க கால கிறிஸ்தவர்களையும் குறிக்கிறது.

இஸ்ரயேல் மக்களினத்தில் இருந்தே இயேசு தோன்றினார் என்பதன் உருவகமே அந்தக் குழந்தை என்பது இந்த இறையியல் சிந்தனையின் விளக்கம்.

இன்னொரு விளக்கம், இந்தப் பெண்ணை இயேசுவின் தாய் மரியாவோடு இணைத்துப் பார்க்கிறது. அது ஆதிகாலம் முதல் மரபு வழியாக பேசப்படும் இறையியல். எல்லா நாடுகளையும் ஆளும் குழந்தையாகிய இயேசுவைப் பெற்றெடுத்தவர் அன்னை மரி எனும் நோக்கில் இந்த விளக்கம் அமைகிறது.

அவருக்கு சிறகுகள் அளிக்கப்பட்டதும், அவர் கடவுள் குறிப்பிட்ட இடத்திற்குப் பறந்து சென்றதும் மரியாளின் விண்ணேற்பைக் குறிப்பதாக ஆதிகால மரபுகள் சொல்கின்றன.

அவர் கதிரவனை ஆடையாய் அணிந்து கொண்டிருப்பதும், நிலவைக் காலடியில் வைத்திருப்பதும், பன்னிரு விண்மீன்களைத் தலையில் சூடியிருப்பதும் அவருடைய விண்ணக மாட்சியைக் குறிப்பதாக அவர்கள் எடுத்துக் கொள்கின்றனர். வேளாங்கண்ணி உட்பட பல்வேறு மாதா ஆலயங்களில் மாதாவை இப்படி கதிரவன், நிலா, நட்சத்திரங்களின் அலங்காரத்துடன் வடித்திருப்பது இதன் ஒரு வெளிப்பாடு தான்.

“உனக்கும் பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிக்காலை காயப்படுத்துவாய்” என பைபிளின் முதல் நூலான தொடக்க நூலில் மரியாளும், சாத்தானும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.  அதே போல பைபிளின் கடைசி நூலான திருவெளிப்பாட்டிலும் சாத்தானும், பெண்ணும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். பெண்ணும், சாத்தானும் நிரந்தரப் பகைவர்களாக காட்சியளிக்கப்பட்டுள்ளனர்.

பெண்ணில் வலி, திருச்சபை சந்திக்கப்போகும் சவால்களையும், துன்பங்களையும் குறிக்கிறது. அதன் பின் அமைதியான ஆயிரம் ஆண்டு கால இறை ஆட்சி துவங்கும் என்கிறது திருவெளிப்பாடு.

விவிலியத்தின் கடைசி நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அந்தப் பெண் ஒரு வியப்புக் குறியீடு. தூய ஆவியால் எழுதப்பட்ட, விவிலியத்தின் விளக்கங்களைப் புரிந்து கொள்ள தூய ஆவியின் வெளிப்படுத்துதல் நிச்சயம் தேவை. விவிலிய மனிதர்களைப் பற்றி ஆழமாய் அறியவும், இறை வெளிப்படுத்தலைப் பெற்றுக் கொள்ளவும் விவிலியத்தை திறந்த மனதோடு படிப்பது மட்டுமே ஒரே வழி.

Posted in Bible People

பைபிள் மாந்தர்கள் 149 பவுல் ஆன சவுல்

Image result for Saul to Paul

சவுல். கிறிஸ்தவத்துக்கு எதிராக மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்தவர். சிசிலியா நாட்டின் தர்சு பட்டணத்தில் பிறந்த பரிசேயர். மிகவும் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த இவர் யூத மத சட்டங்களை நன்கு கற்றறிந்தவர். கிறிஸ்தவத்துக்கு சிம்ம சொப்பனமாய் இருந்தார்.

இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் அனைவரையும் வீடுகளில் புகுந்து கொடுமைப்படுத்தினார். தன்னுடைய வலிமையினால் அவர்களை இழுத்துக் கொண்டு போய் சிறையிலும் அடைத்தார். வளர்ந்து கொண்டிருந்த சபை சிதறடிக்கப்பட்டது.

தமஸ்கு நகரத்தில் கிறிஸ்தவம் வளர்ந்து கொண்டிருப்பதை சவுல் அறிந்தார். அவர்களை அழிப்பதற்கான அனுமதியை எருசலேம் தலைமைக் குருக்களிடம் சென்று கேட்டார். அவர்கள் உடனடியாக அனைத்தையும் கொடுத்து அவரை அனுப்பி வைத்தனர்.

சவுல் தன்னுடைய குதிரையில் ஏறி தமஸ்கு நகரை நோக்கி விரைந்தார். கிறிஸ்தவர்களைக் கொல்ல வேண்டும் என வெறியுடன், படையுடன் அவர் புறப்பட்டார்.

போகும் வழியில் திடீரென்று வானத்திலிருந்து தோன்றிய ஒரு ஒளி சவுலைச் சுற்றி வீசியது ! சவுல் குதிரையிலிருந்து கீழே விழுந்தார். உடன் வந்து கொண்டிருந்தவர்கள் எல்லோரும் இந்தக் காட்சியைக் கண்டு உறைந்து போய் நின்றார்கள்.

‘சவுலே… சவுலே… ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய் ?’ குரல் ஒன்று ஒலித்தது. எல்லோரும் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். யாரும் இல்லை. சத்தம் மட்டும் கேட்கிறது. அவர்கள் பயத்துடன் செய்வதறியாமல் திகைத்து நிற்க, சவுல் குரலை நோக்கிக் கேள்வி எழுப்பினார்.

‘ஆண்டவரே நீர் யார் ?… நான் உம்மை எப்போது துன்புறுத்தினேன்..’

‘நீ துன்புறுத்தும் இயேசு தான் நான்’ சவுல் இந்தக் குரலைக் கேட்டதும் நடுங்கினார். இயேசு தான் உண்மையான கடவுள் என்பதை அவருடைய மனம் எப்போதும் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.

‘நீ எழுந்து நகருக்குப் போ… நீ என்ன செய்யவேண்டும் என்பதை அங்கே நான் உனக்குச் சொல்வேன்’ குரல் ஒலிக்க சவுல் எழுந்தார். சுற்றுமுற்றும் பார்த்தார் எங்கும் ஒரே இருள் ! அவருடைய பார்வை பறிபோய் இருந்தது !

மூன்று நாட்கள் சவுல் பார்வையில்லாமல் இருந்தார். அவர் அந்த மூன்று நாட்களும் உண்ணவும் இல்லை குடிக்கவும் இல்லை. நான் துன்புறுத்தும் இயேசு தான் உண்மையிலேயே கடவுளா ? நான் இப்போது என்ன செய்வது ? சவுல் கேள்விகளுக்குள் புதைந்து கிடந்தார்.

பார்வை இருந்தபோது குருடனாய் இருந்த சவுல், பார்வை போனபின் புதுப் பார்வை பெற்றார். இயேசுவை நோக்கி மன்றாடத் துவங்கினார்.

‘ஆண்டவரே… நீர் உண்மையான கடவுளாய் இருந்தால் என்னுடைய பார்வை எனக்குத் திரும்ப வரட்டும்’ சவுல் மனதால் வேண்டினான்.

‘அனனியா என்றொரு மனிதனை நான் அனுப்புகிறேன். அவன் உன்னுடைய பார்வையைத் திரும்பத் தருவார்’ சவுலின் மனதுக்குள் கடவுள் பேசினார். அனனியாவிடமும் கடவுள் பேச அவர் சவுலைத் தேடி ஓடினார்.

சவுலைக் கண்டு பிடித்து அவருடைய கண்களின் மேல் கைகளை வைத்து செபித்தார் அனனியா. அப்போது அவருடைய கண்களிலிருந்து செதிள் போன்ற ஒரு பொருள் கழன்று விழ அவர் பார்வையடைந்தார்.

அதன் பின் சவுல் தாமதிக்கவில்லை. தன்னுடைய பழைய எண்ணங்களையெல்லாம் மாற்றிக் கொண்டார். விரைந்து சென்று திருமுழுக்குப் பெற்றார். கொண்டு வந்திருந்த ஆணைகளைக் கிழித்து எறிந்தார்.

எந்த அளவுக்கு இயேசுவுக்கு எதிராய் செயல்பட்டாரோ, அந்த அளவுக்கு ஆதரவாய் செயல்பட ஆரம்பித்தார் !

தன்னுடைய பெயரையும் பவுல் என்று மாற்றிக் கொண்டார்.

நகரெங்கும் சென்று கிறிஸ்துவை அறிக்கையிடத் துவங்கினார்.

கிறிஸ்துவை அடியோடு வெறுத்த ஒருவர் அவரைப் பற்றி சாட்சி சொல்லித் திரிவதைக் கேட்ட பலர் இயேசுவில் விசுவாசம் கொண்டார்கள்

பவுல் தமஸ்கு நகரில் தன்னுடைய போதனையை தீவிரப்படுத்தினார். யூதர்கள் பவுலின் மனமாற்றத்தைக் கண்டு எரிச்சலடைந்தார்கள். எப்படியாவது பவுலைக் கொல்லவேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டார்கள். பவுல் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சவில்லை. இயேசுவின் ஆற்றலுடன் பல்வேறு நகர்களுக்கும், துறைமுகப் பட்டணங்களுக்கும் சென்று போதிக்கத் துவங்கினார்.

இவ்வாறு மிகவும் எழுச்சியுடன் பணியாற்றிய பவுல் பல்வேறு வகையில் துன்புறுத்தப்பட்டார். கடைசியில் கி.பி 64ம் ஆண்டு நீரோ மன்னனால் சிரச்சேதம் செய்யப்பட்டு மரணமடைந்தார் !

கிறிஸ்தவத்தின் வேர்களில் கோடரி வைக்க நினைத்த பவுலை இயேசு கிறிஸ்தவத்தின் ஆணிவேராக மாற்றினார். இன்றைய பைபிளில் இருக்கும் புதிய ஏற்பாடு நூல்களில் பதிமூன்று நூல்களை தூய ஆவியின் ஏவுதலால் பவுல் எழுதியிருக்கிறார். திருச்சபைகளுக்கு அவர் எழுதிய கடிதங்களே அவை. அவை தான் கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தளமாக இன்றைக்கு அமைந்திருக்கின்றன.

அழைத்தலுக்கு செவிமடுப்பவர்களை இறைவன் அற்புதமாகப் பயன்படுத்துவார் என்பதன் விளக்கமாக இருக்கிறது தூய பவுலின் வாழ்க்கை.

Posted in Bible People

148 அனனியா, சப்பிரா

Image result for ananias safira

இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் பேதுருவும், யோவானும் மற்ற அப்போஸ்தலர்களும் இயேசுவே மீட்பர் என்று மக்களிடையே உரையாற்றி ஏராளமான மக்களை திருச்சபையில் சேர்த்தனர். அது தான் ஆதித் திருச்சபை என்று அழைக்கப்படுகிறது.

அவர்கள் பகிர்தலிலும், ஒற்றுமையிலும் சிறந்து விளங்கினார்கள். அந்தத் திருச்சபையில் இணைந்தவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய உடமைகளையெல்லாம் விற்று பொதுவில் வைத்தார்கள். பின் தேவைக்கேற்ப அவற்றை மக்கள் பகிர்ந்து கொண்டார்கள். யாரும் அளவுக்கு அதிகமாய் ஆசைப்படவில்லை. எல்லோருடைய தேவைகளும் நிறைவேற்றப்பட்டன.

இந்தத் திருச்சபையின் நடைமுறைகள் மறைநூல் அறிஞர்கள், குருக்கள், அரச அதிகாரிகள் அனைவருக்கும் மிகவும் ஆச்சரியத்தை அளித்தது. பெரும் பணக்காரர்கள் கூட தங்கள் சொத்துக்களையெல்லாம் விற்று பொதுவில் வைப்பதை அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இயேசு விரும்பியது அது தானே ‘ உனக்குள்ளதெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு’ என்பது தானே அவருடைய போதனை.

அந்தக் கூட்டத்தில் அனனியா என்றொரு செல்வந்தர் இருந்தார். அவருடைய மனைவி பெயர் சப்பிரா. அவர்களும் திருச்சபையின் மீது அதிக ஆர்வம் கொண்டு பேதுருவின் சபையில் இணைந்தவர்கள். அவர்களுக்கும் தங்களிடம் இருக்கும் செல்வத்தைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்னும் ஆர்வம் வந்தது.

அனனியா சென்று தன்னுடைய சொத்தையெல்லாம் விற்றான். அவனால் நம்பமுடியவில்லை. ஏராளமான செல்வம் அவனுடைய கைகளில் இருந்தது. அவற்றைக் கொண்டு பேதுருவிடம் ஒப்படைக்க நினைத்துக் கொண்டிருந்தபோது அவர்களுடைய மனதில் சஞ்சலப் பேய் புகுந்து கொண்டது.

நமக்குத் தான் இத்தனை செல்வம் இருக்கிறதே. ஏன் எல்லாவற்றையும் கொடுக்கவேண்டும் ? கொஞ்சத்தை நமக்காய் வைத்துக் கொள்ளலாமே ? என்று அவர்கள் சிந்தித்தார்கள்.

ஒருவேளை நாளை இந்தச் சபை இல்லாமல் போனால் நாம் வாழ்வதற்கு செல்வம் மிகவும் முக்கியம் எனவே சொத்தில் ஒருபாகத்தை யாருக்கும் தெரியாமல் தனக்கென வைத்துக் கொண்டு மிச்சத்தை பேதுருவிடம் ஒப்படைப்பதென்று அவர்கள் முடிவெடுத்தார்கள்.

மறுநாள் காலையில் சொத்தில் ஒருபகுதியைத் தனக்கென்று வைத்துக்கொண்டு மிச்சத்தைக் பேதுருவின் முன்னிலையில் சமர்ப்பித்தான்.

‘ஐயா… இதோ என்னுடைய அனைத்து சொத்துக்களையும் விற்று அதை உம்மிடம் ஒப்படைக்கிறேன்’. பேதுரு அவனைப் பார்த்தார்.

‘அனனியா ! ஏன் பொய் சொல்கிறாய் ? சொத்துக்களை நீ விற்கவேண்டுமென்றோ, அதை இங்கே வைக்கவேண்டுமென்றோ நான் சொன்னேனா ? யாராவது உன்னைக் கட்டாயப்படுத்தினார்களா ? விற்பதும் அதை அளிப்பதும் உன் விருப்பம். ஆனால் நீ ஏன் கடவுளின் முன்னால் பொய் சொல்கிறாய் ? சாத்தான் உன் உள்ளத்தில் புகுந்து கொள்வதற்கு நீ ஏன் அனுமதி அளித்தாய் ?’ பேதுரு கேட்டார்.

பேதுரு சொன்னதைக் கேட்டதும் அனனியா அதிர்ச்சியடைந்தார். அங்கேயே சுருண்டு விழுந்து இறந்து போனார் !

குழுவில் இருந்த இளைஞர்கள் நிகழ்ந்தவற்றைத் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின் அனனியாவை துணியால் சுற்றி எடுத்துக் கொண்டு போய் அடக்கம் செய்தார்கள். மக்கள் அனைவரையும் பேரச்சம் ஆட்கொண்டது.

மூன்று மணி நேரம் கழிந்தபின் அனனியாவின் மனைவி வந்தாள். அவளுக்கு அங்கே நடந்த விஷயங்கள் எதுவும் தெரியாது. தன்னுடைய கணவன் ஒரு பெரும் தொகையைக் கொடுத்திருக்கிறார். அவருக்கு இப்போது பெரும் மதிப்பு இருக்கும். தன்னையும் அவர்கள் பெரும் மரியாதையுடன் வரவேற்பார்கள் என்று அவளுடைய மனம் எண்ணிக் கொண்டது.

அவள் உள்ளே வந்ததும் பேதுரு அவளிடம்,

‘உங்கள் சொத்துக்களையெல்லாம் விற்று விட்டீர்களா ?’ என்று கேட்டார்.

‘ஆம் விற்று விட்டோம். அந்தப் பணத்தை முழுவதும் என் கணவர் இங்கே கொண்டு கொடுத்திருப்பாரே’ அவள் சொன்னாள்.

‘இவ்வளவு பணத்துக்குத் தான் சொத்தை விற்றீர்களா ?’ பேதுரு கேட்டார்.

‘ஆம்… இவ்வளவுக்குத் தான் விற்றோம்’

பேதுரு அவளைப் பார்த்து,’ நீங்கள் இரண்டு பேருமே ஏன் கடவுளின் முன்னிலையில் பொய் சொன்னீர்கள் ? சாத்தான் உங்களை ஆட்கொண்டு விட்டானே ! ’ என்றார்.

அவள் கலக்கத்துடன் பேதுருவைப் பார்த்தாள்.

‘இதோ… உன் கணவனை அடக்கம் செய்தவர்கள். இவர்கள் இப்போது உன்னையும் அடக்கம் செய்வதற்காகக் கொண்டு செல்வார்கள்’ என்றார்.

அவ்வளவு தான். அவள் அந்தக் கணமே அந்த இடத்திலேயே இறந்து விழுந்தாள். கடவுளின் முன்னிலையில் சொல்லும் ஒரு சிறு பொய்கூட தங்கள் உயிரை அழித்துவிடும் என்று சபையில் புதிதாய் சேர்ந்தவர்கள் மனதுக்குள் குறித்துக் கொண்டார்கள்.

போலித்தனமாய் பெருமை கொள்பவர்களை கடவுள் விரும்புவதில்லை. செருக்கு கொண்ட மனிதர்களை அவர் எதிர்க்கிறார். பணிவு கொண்ட மனிதர்களை அரவணைக்கிறார். தாங்கள் ஆன்மீகவாதிகள் என காட்டிக் கொள்பவர்களை அவர் எப்போதுமே வெறுப்பவர். எனவே உண்மையாய் அவர் பாதம் பணிந்து, தாழ்மையை வாழ்க்கை முறை ஆக்கிக் கொள்ள வேண்டும். இதுவே இந்த நிகழ்ச்சி கற்றுத் தரும் பாடமாகும்.

Posted in Bible People

பைபிள் மாந்தர்கள் 147 : அழகுவாசல் முடவன்

Image result for beautiful gate bible

இயேசுவின் சிலுவை மரணத்துக்குப் பின் சீடர்கள் ரொம்பவே சோர்ந்து போனார்கள். இயேசுவோடு கூட நடந்தபோது நெஞ்சு நிமிர்த்தி நடந்தவர்கள் எல்லாரும் இயேசுவின் சிலுவை மரணத்திற்குப் பின் தலைக்கு முக்காடிட்டுக் கொண்டு அறைகளில் பதுங்கினார்கள்.

மூன்றாவது நாள். இயேசு உயிர்த்துவிட்டார். முதலில் மதலேன் மரியாளுக்குக் காட்சியளித்த இயேசு, அதன்பின் எம்மாவூஸ் சென்ற இரண்டு சீடர்களுக்குக் காட்சியளித்தார்.

ஆனாலும் பேதுருவும் அவருடன் இருந்த சில சீடர்களும் தங்கள் பழைய வேலையான மீன்பிடிக்கும் தொழிலுக்கே திரும்பினார்கள். ஆனால் இயேசு மீண்டும் அவர்களுக்கு நேரடியாகக் காட்சியளித்து நம்பிக்கையூட்டினார். பின்னர் தூய ஆவியானவரை உலகிற்கு அனுப்பி சீடர்களை நிரப்பினார். அதன்பின்பு தான் சீடர்கள் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கத் துவங்கினார்கள்.

ஒருநாள் மூன்று மணியளவில் செபம் செய்வதற்காக பேதுருவும், யோவானும் ஆலயத்துக்குச் சென்றார்கள். மூன்று மணிக்கு செபம் செய்வது என்பது அவர்களுடைய வழக்கமாய் இருந்தது. இயேசு சிலுவையில் உயிர்விட்ட நேரமும் பிற்பகம் மூன்று மணி என்பதால் மாலை மூன்றுமணி என்பது அவர்களுடைய வாழ்க்கையில் மிகவும் நினைவு கூரத் தக்க ஒன்றாக மாறிவிட்டிருந்தது.

ஆலயத்தில் அழகுவாயில் என்னுமிடத்தில் ஒருவன் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். அழகுவாயில் என்பது எருசலேம் தேவாலயத்தின் முதல் வாயில். அவன் பிறவியிலேயே கால்கள் வலுவில்லாத ஒரு முடவன். பிழைப்புக்கு வேறு வழி ஏதும் இல்லாததால் ஆலய வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான்.

தினமும் காலையில் சிலர் அவனைத் தூக்கி வந்து ஆலய வாசலில் இருத்துவார்கள். மாலையில் அவனைத் தூக்கிக் கொண்டு செல்வார்கள்.

பேதுருவும், யோவானும் ஆலயத்தில் செபிப்பதற்காக உள்ளே வந்தபோது வாசலில் அமர்ந்திருந்தான் அவன்.

‘ஐயா… காலில்லாத ஏழைக்கு உதவுங்களேன்…’ அவன் பேதுருவைப் பார்த்து தர்மம் கேட்டான். பேதுருவும், யோவானும் நின்றார்கள்.

பேதுரு அவனை உற்றுப் பார்த்துக் கொண்டே சொன்னார் ‘என்னைப் பார்’. அவன் ஆவலுடன் அவர்களைப் பார்த்தான்.

‘உனக்குத் தர எங்களிடம் ஒன்றும் இல்லை’ பேதுரு சொல்ல, அவனுடைய முகம் வாடிப்போயிற்று. பேதுரு ஒரு வினாடி யோசித்தார். இயேசு முடவர்களுக்கோ, பிணியாளிகளுக்கோ பிச்சையிட்ட நினைவு அவருக்கு இல்லை. அவர் நலமளித்தார். ஆறுதல் அளித்தார். அன்பை அளித்தார். ஆனால் பணம் அளித்ததாய் அவருக்கு நினைவில்லை.

பேதுரு அவனை மீண்டும் உற்றுப் பார்த்தார்.

‘உனக்குத் தர பொன்னோ, வெள்ளியோ என்னிடம் இல்லை. ஆனால் என்னிடம் இருப்பதை உனக்குத் தருகிறேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட’ என்று கூறி அவனுடைய கையைப் பிடித்துத் தூக்கி விட்டார்.

சுமார் நாற்பது ஆண்டுகளாக வலுவில்லாமல் கிடந்த அவனுடைய கால்கள் சட்டென்று வலுவடைந்தன. அவனுடைய கணுக்கால்கள் நேராகின. அவன் நின்றான். வாழ்க்கையில் முதன் முறையாக அவன் இரண்டு கால்களினால் நிற்கிறான். அவன் ஆனந்தக் கூச்சலிட்டான். அங்கே பெரும் கூட்டம் கூடிவிட்டது.

‘ஏய்… இவன் அங்கே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த முடவன் அல்லவா ? இப்போது எப்படி நிற்கிறான் ?’

‘அவன் தானா இது ? அல்லது வேறு யாராவதா ?’

‘அவனுடைய கையைப் பிடித்து அந்த மனிதர் எழுப்பி விடுவதை நான் பார்த்தேன்’ மக்களிடையே செய்தி காட்டுத் தீ போல பரவியது.

பேதுருவையும், யோவானையும் கூட்டத்தினர் மொய்த்துக் கொண்டார்கள். இயேசுவைப் பிரிந்தபிறகும் சீடர்களால் அதிசயச் செயல்கள் செய்ய முடிகிறதே என்று மக்கள்

ஆச்சரியமடைந்தார்கள்.

‘ஏன் ஆச்சரியப் படுகிறீர்கள். அவனைக் குணமாக்கியது நாங்களல்ல, இயேசு கிறிஸ்துவின் பெயர் தான் அவரைக் குணமாக்கியது. அவர் தான் உண்மையான கடவுளின் மகன். அவரை நீங்கள் பிலாத்துவிடம் ஒப்படைத்தீர்கள். பிலாத்து விடுவிக்க விரும்பிய போது கூட நீங்கள் இயேசுவுக்கு எதிரானீர்கள். அவர் உங்களுக்காக மரணத்தை ஏற்றுக் கொண்டார்.’

பேதுரு பேசப் பேச கூட்டத்தினர் மெளனமானார்கள்.

‘நீங்கள் அதை அறியாமையினால் தான் செய்தீர்கள். இது நடக்கவேண்டும் என்பது கடவுளின் விருப்பம் தான். நீங்கள் கொலை செய்த இயேசு உயிர்த்துவிட்டார். அதற்கு நாங்கள் சாட்சிகள். அவரைக் கண்டவர்கள் அனைவரும் சாட்சிகள். இனிமேலாவது மனம் மாறி இயேசுவின் வழியில் நடவுங்கள்’ பேதுரு உரத்த குரலில் மக்களை அழைத்தார்.

மக்கள் கூட்டத்தினரிடையே மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ந்தது. சுமார் ஐயாயிரம் பேர் அப்போதே இயேசுவின் வழியில் செல்லப்போவதாக வாக்களித்தனர். கிறிஸ்தவத்தின் ஆரம்பம் அங்கே ஆழமாக நடப்பட்டது.

இயேசு வாழ்ந்த போதும் அந்த முடவன் அங்கே தான் இருந்திருப்பான். அப்போது அவனை ஏன் இயேசு குணமாக்கவில்லை என எழுகின்ற கேள்விகளுக்கு விடை இப்படி வெளிப்பட்டது.  தூய ஆவியால் நிரப்பப்படும்போது நற்செய்தி அறிவிக்கும் துணிச்சலும், அதிசயங்களும் பிறக்கும் என்பதை இந்த நிகழ்வு விளக்குகிறது.