Posted in Bible Poems

மரங்கள்

மரங்கள் !
இறைவனின் வரங்கள்.

வாழ்வின் மரத்தை
இறைவன்
மனிதனுக்காய் படைத்தார் !

மனிதனோ
சாத்தானின் சூழ்ச்சியால்
விலக்கப் பட்ட
மரத்தின் கனியை அங்கீகரித்தான்.

முதல் பாவம்
மண்ணில் நுழைய
மரமும் ஒரு காரணியானது !

அதன் பின்
மரங்கள் விவிலியம் முழுதும்
பயணித்துக் கொண்டே
இருக்கின்றன.

நோவாவின் 
பேழையில் மரங்கள்
பிரளயத்தின்
சாட்சியாய் பார்த்திருந்தது. 

மோசேயின்
மலையில்
நெருப்பில் குளித்த மரமொன்று
விடுதலையின்
சாட்சியாய் விழித்திருந்தது. 

ஒலிவ மரங்கள்
வசனங்களின் வழியே
ஆசீர்வாதத்தை
ஓங்கி உரைத்தன. 

கனி கொடுக்காத
அத்தி மரம்
கர்த்தரின் சினத்தினை
சட்டெனக் கண்டு
பட்டுப் போனது. 

ஓசானாக் குரல்களின்
ஒய்யாரச் சத்ததை
மரங்களின் இலைகள்
தலையாட்டி ரசித்தன !

குள்ளமான சக்கேயுவை
உயரமாக்கிய
பெருமையும்
ஒரு மரத்துக்கே வந்து சேர்ந்தது !

துயரமான யூதாஸின்
கோர மரணத்தையும்
ஒரு மரமே 
வந்து நடத்தி வைத்தது. 

எத்தனை மரங்கள்
அணிவகுத்தாலும்,
வாழ்வின் மரத்தை நிராகரித்த
மனிதன்
மீண்டெழவே இல்லை !

கரம் கொடுத்து அவனை
தூக்கி விடுகிறது
இயேசுவின் குருதி தோய்ந்த
சிலுவை மரம்

*



Posted in Bible Poems

பெத்லேஹேமில் ஒரு கவியரங்கம்

பெத்லேஹேமில் ஒரு கவியரங்கம்
 

*

முன்னுரை

மண்ணகம் வந்த விண்ணகமே
முன்னுரை வாக்கின் மன்னவனே
ஆடிடைத் தொழுவின் ஆதவனே
தேடியே வந்த மாதவனே
இறவா வாக்கின்
இறைவா !
மறையா மறையின்
புதல்வா 
தாள் வணங்குகிறேன், தலைவணங்குகிறேன்

*

திருச்சபைகளை
தெருச் சபைகளாய் மாற்றி,
உலைக் களங்களைக் கூட
பணித் தளங்களாக 
மாற்றும்
இறைபணியின் ஆர்வலரே
உரை வீச்சின் வித்தகரே
எழுத்துலகின் மணிமுடியே
வெல்டன் என எப்போதும் பாராட்டும்
எனதருமை ஐயா,வெலிங்டன் அவர்களே 
அன்பின் வணக்கம்

*

நகைச்சுவையின் நங்கூரமே
அறிவுரையின் அங்குசமே
சின்னச் சின்ன மின்னல்களுக்குள்
கதிரவனைக் கட்டிவைக்கும்
வித்தை கற்ற
வித்துவானே ! 
அன்பின் தலைவர் அருள் பிரகாஷ் அவர்களே
பணிவான வணக்கம்.

*

கவிதைப் புயல்களுக்கு
மத்தியில்
இந்தப் பயலையும்
குருட்டு நம்பிக்கையில்
கவிபாட அழைத்த
வெளிச்ச இயக்குனர் சகோதரர் ரமேஷ் அவர்களே

என்னுடன் கவிபாட வந்திருக்கும்
இறையியல் ஜாம்பவான்களே,
திருச்சபை பெரியோர்களே
அன்பின் உறவுகளே
அனைவருக்கும் வணக்கம்

*

இதோ
தேவ தூதனின் பார்வையில் கிறிஸ்மஸ் !

*

நான் தான்
தேவதூதன் பேசுகிறேன் !

எங்களைப் பற்றிய
உங்கள்
கற்பனைக் கதைகள்
எங்களுக்குக் கவிதைச் சாமரம்
வீசுகின்றன. 

வெள்ளைக் கதிரவனை இறுக்கிக் கட்டிய
இறக்கைகளும்,  
மேகமாய் மிதக்கும் பாதங்களும்
என
உங்களுடைய கற்பனைகள்
எங்களைக் கவனிக்க வைக்கின்றன. 

ஆனாலும்
எங்கள் இறக்கைகளைக் கொண்டு
யாரோ
தலையணை செய்ததாய்
சொன்னபோது
தலை சுற்றிப் போனது !

இலையுதிர்க் காலம் போல
எங்கள்
இறகதிர்க் காலத்தை
புனைக் கதை புனைந்து
காணிக்கை சேகரிப்பவர்களிடம்
மட்டும்
கவனமாய் இருங்கள்.

நாங்கள்
தூதர்கள்,
வாட்சப் இல்லாத 
வரலாற்றுக் கால மாந்தர்கள்.

குறுஞ்செய்திகள்
குறுக்கிடாத காலத்தில்
நாங்கள் தான்
இறைச் 
செய்திகளைச் சுமந்து திரிந்தோம்.

*

ஒரு நாள்
விண்ணகத்தில், 
தங்கப் படிக்கட்டு ஒன்றில் அமர்ந்து
வைரத்தை எறிந்து
விளையாடிக்கொண்டிருந்த
பொழுதில் 
பிதா என்னை அழைத்தார் ! 

கபிரியேல்,
நீ
அழகு வடியும் சொர்க்கத்தின்
எல்லை தாண்டி
புழுதி படியும்
பூமிக்குச் செல்ல வேண்டும் !

ஆணை வந்ததும்
சாணை பிடிக்க, என்
உடைவாளை எடுத்தேன்.
 
ஒற்றைத் தூதனே
ஒரு இலட்சத்து எண்பத்தைந்தாயிரம் பேரை
வெட்டி வீழ்த்திய
வலிமையின் வரலாறு
எங்களுக்குண்டு எனும்
இறுமாப்பு எனக்கு !

பிதா சொன்னார்,
உடைவாளை உறையிலே போடு
நீ
படைகளின் ஆண்டவரின்
படைவீரனாய்ப் போகவில்லை !

மாதுவின் முன்னால்
ஒரு
தூதுவனாய்ப் போகிறாய். 

நீ
வாளை சுமந்து செல்லவில்லை
ஒரு
ஓலை சுமந்து செல்கிறாய்.

நீ
கொல்லப் போகவில்லை
சொல்லப் போகிறாய் !
 
நான் யோசித்தேன் !

கடிதத்தைக் கொடுக்க
கபிரியேல் தூதனா ?

எறும்புக்கு முதுகு சொறிய
ஆப்பிரிக்க
யானையா ?

முண்டியடித்த கேள்விகளை
தொண்டைக்குள் தூக்கிலிட்டுவிட்டு
கேட்டேன்

பிதாவே
அப்படி என்ன செய்தி ?


பிதாமகன்
இயேசு
பூமிக்குச் செல்ல இருக்கிறார்
தந்தை சொல்ல
நான் தாவிக் குதித்தேன்.
 
வாவ் !
இயேசு பூமிக்குச் செல்கிறாரா ?
எனக்குள்
ஆச்சரியக் செங்கடல்
இரண்டாய்ப் பிளந்தது !
கேள்விகளின் கற்கள்
எரிகோவாய்ச் சரிந்தன !

இதோ தந்தையே !

வல்லவராம் இயேசு
செல்வதெப்படி ? 

நிஜத்தின் புஜத்தோடு
குதித்துக் களிக்கும்
குதிரையைத் தயாராக்கவா ?

ரதங்களின் சக்கரமாய்
பகலவனைப் பொறித்து,
இருக்கைகளில்
நிலவினை கைப்பிடியாய் அமைத்து,
அண்டமே
அதிசயிக்கும் சிம்மாசனம் செய்யவா ?

மொத்த தூதரையும்
பக்கமாய் வரச் சொல்லி
ஒற்றைப் பாடலை
ஓங்கிப் பாடச் சொல்லவா ?

ஏழு கோடி
எக்காளங்களை
ஒரே நொடியில் வாசிக்கவா ?

கட்டையிடுங்கள் கர்த்தாவே
காத்திருக்கிறான் இந்த
கபிரியேல்
என்றேன் !

வேண்டாம், எதுவும் வேண்டாம்
பிதா சாந்தப்படுத்தினார்.

அவர்
ரதத்தில் போகவில்லை
வேறு
ரகத்தில் போகிறார் ! 

இவ் 
உருவில் போகவில்லை
ஒரு கருவில் போகிறார்

என் 
மூளையை மீண்டும்
யோனாவின் மீன்வந்து
விழுங்கியது. 

எனில்
விண்மீன்களைக் கோத்து
இடைக்கச்சை
நெய்யவா,
பேரொளியை இழுத்து
புது ஆடை செய்யவா என்றேன் !

இல்லை
கிழிந்த கந்தை ஒன்று
அவருக்காய் காத்திருக்கிறது.

தனக்கு மிஞ்சித்தான் தானம்
என்பது
உலக வழக்கு. 
தானே உலகுக்குத் தானம்
என்பது தான்
பரமனின் கணக்கு. 

என்றார் !

சரி,
கிரீடத்துக்காய்
வைரத்தில் கோத்த பவளத்தை
எடுக்கவா
இல்லை, பவளத்தில் பூத்த வைரத்தை
எடுக்கவா. 

மண்ணக மாளிகைகள் 
மன்னனுக்குப் போதாதே
இரண்டாம் சுவர்க்கம் ஒன்றை
இறக்கி வைக்கவா
என்றேன்.

தந்தையோ,

சத்திரம் நிராகரிக்கும்
சரித்திரம் அவர் ! 

தொழுவம் ஒன்று
அழுகைக்காய் காத்திருக்கிறது

பிரசவம் பார்க்கத்
தாதிகள் இல்லை
துணையாய் நிற்கத்
தோழிகள் இல்லை !

சந்தனமும் சாம்பிராணியும்
அறையை நிறைக்காது
கால்நடையின் 
கழிவுகளே தெறிக்கும். 

என்றார்.

என் ஆனந்தம்
தரை தட்டிய கப்பலானது
புயலில் கிழிந்த
பாய்மரமானது. 

அவர் மழலையாய்
பிறக்கப் போகிறாரா ?
அதுவும் 
தொழுவில் ! 
ஒரு கந்தையில் !?

முன்னணியில் இருக்க வேண்டியவர்
முன்னணையிலா ?

என்னையே நான் 
கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.

சாலமோனின் மெல்லிய
ஆடையை விட
மகத்தானதல்லவா ?
புல்லணையின் புண்ணிய ஆடை

சரி….

எந்தப் பெண்ணிடம்
பிறக்கப் போகிறார்
எஸ்தரைப் போன்ற
ஒரு மஹாராணியா ?
என் கேள்வியே நா தடுக்கி உருண்டது.. 
தட்டுத் தடுமாறியது !

இல்லை
பதின் வயது கன்னிப் பெண்
ஒருத்தி இருக்கிறார்

வறுமையின் வாசல்படியில்
அவள்
தூய்மையின் தோரணத்தைத்
தொங்க விட்டிருக்கிறார்.

பட்டினியின் பாயில்
புனிதத்தைப் பூட்டி வைத்திருக்கிறாள்
புண்ணியத்தைக் 
கூட்டி வைத்திருக்கிறாள்

ஆனால் இன்னும் அவள்
தாயாராகத் தயாராகவில்லை
மணம் வீசும் 
அந்த மலருக்கு
மணமாகவில்லை ! !

அவரிடம் தான்
ஆதித் திட்டத்தின்
சேதி சொல்ல வேண்டும் !
அந்த மெல்லினம் தான்
மீட்பின்
வல்லினத்தைச் சுமக்கப் போகிறது !

தேவைப்படுவோர்
தேடிச் செல்வதே உலக வழக்கம்,
தேவைப்படுவோரை
தேடிச் செல்வதல்லவா
இறைவன் விருப்பம். 

தந்தை சொன்னார்

நான் வாடினேன்,
தந்தை தேற்றினார் ! 
மீட்பின் திட்டத்தை என்
காதுகளில் ஊற்றினார்.
 
முள்ளை முள்ளால் 
எடுப்பது
உலக வழக்கம் 
முள்ளை பூவால் எடுப்பதே
என் விருப்பம்

பாவம் எனும் 
முள்ளை,
புனிதம் எனும் பூவால்
வெல்லப் போகிறேன். 

சாத்தானின் தோல்வி
சிலுவையின்
மேடையில் அறிவிக்கப்படும்

அதன் முன்னுரை
குடிசையில்
ஓரத்தில் குறிக்கப்படும் என்றார்.


நான்
விழிகள் கசிய வணங்கினேன்.

*

நாங்கள் தூதர்கள் !

விண்ணகத்தின் சாளரங்கள்
திறந்து
மண்ணகத்தின்
மாற்றங்களைக் கண்டவர்கள். 

வாழ்வின் கனியை
அகற்றி விட்டு
அழிவின் கனியை அரவணைத்த
ஏவாளின் தடுமாற்றத்தை
நடுக்கத்துடன்
பார்த்தவர்கள். 

சமகாலப் பைத்தியமும்,
மீட்பின் வைத்தியமுமான
நோவா எனும்
ஒற்றைக் குடும்பத்தால்
மீட்பின் படகு
மிதந்ததைக் கண்டவர்கள். 

ஆடு மேய்க்கும் சிறுவனை
நாடு மேய்க்க
அனுப்பிய
தாவீதுக் கதைகளைப்
கவனித்தவர்கள். 

இப்போது 
பூமிக்குப் போகிறேன். 
நீதி தந்த சேதியோடு
 
  
*

இதோ
மரியா அமர்ந்திருக்கிறார் !
அவர் அருகே
பாய் போட்டுப் படுத்திருக்கிறது
ஏழ்மை !

அன்றலர்ந்த மலராய்
அன்றில் பறவையாய்
குன்றின் மீதிட்ட விளக்காய் என
எந்தக்
கவிதையும் பூட்ட முடியாத
ஆன்மிக அழகு மரியாவுக்கு !

திருமணக் கனவில்
வெட்கத்தின் குமிழ்களை
விழிகளில் ஊற்றி
நாணத்தால் உடைக்கும் 
இந்தப் பொழுதில் தான்
நான் அவர் முன்னால் தோன்றினேன்.

திடீரென
என்னைக் கண்ட மரியா
பயத்தின் பக்கமாய்
புரள்வாரா எனப் பார்த்தேன். 

கனவுகளின் கால்வாய்கள்
வற்றிப் போக
அச்சத்தின்
ஆறுகள் ஊறத் துவங்குமோ
என யோசித்தேன் !

மரியா
அமைதியாய் என்னைப் பார்த்தார் !

அருள் மிகப் பெற்றவரே
வாழ்க ! 
ஆண்டவர் உம்முடனே என்றேன் !

என்னைக் கண்டு
கலங்காத மரியா
வாழ்த்தைக் கேட்டதும்
கலங்கினார்

காரணமில்லாமல்
யாராவது
பாராட்டினால் 
கண்டிப்பாய்க் கலங்கவேண்டும்
என
மரியா கற்றுத் தருகிறார்.

சும்மா இருப்பவரிடம் வந்து
சுகிக்கும் வார்த்தைகள்
பேசினால்
தகிக்கும் விஷயம் தொடரும் 
என
அறிந்திருந்தார் போலும்.

நான்
வானக விதையை
நல்ல நிலத்தில்
விதைத்தேன் !

மரியே
அச்சத்தின் மிச்சமும்
உங்களிடம்
இருக்க வேண்டாம் !

பொருள் வந்தடையா
உங்களிடம்
அருள் வந்தடைகிறது.

நீர் கருவுற்று
ஒரு மகனைப் பெறுவீர் !

தாவீதின் அரியணை
அவருக்குக் கிடைக்கும்
முடிவுறா பேரரசு
அவரால் நிலைக்கும் !

அவருக்கு
இயேசு என பெயரிடுங்கள்

நீர்
உலகில் 
ஒருவருடைய தாயல்ல
உலகையே
உருவாக்கியவரின் தாய்.  

அந்த 
யூதரின் முன்னால்
தூதன் பேசினேன்.

இப்போது
மரியா பெண்மையின் கேள்வியை
எடுத்து வைத்தாள். 

நான்
கன்னியானவள் எப்படி
கனியாவேன் ?
ஓளிச்சேர்க்கைக்கு 
முன்
பச்சையம் தயாரிப்பதெப்படி ?

நான் சொன்னேன்

உன்னதரின்
வல்லமை நிழலிடும்.
நிழல்
நிஜத்தை உருவாக்கும், 
அகத்தில் கருவாக்கும்.

இது
கறைபடிந்த குறையல்ல
நீர்
இறை படிந்த நிறை !
பிறக்கப் போகும் குழந்தை
தீயதல்ல, தூயது !

மரியாவின் விழிகளில்
மோசேயின் பச்சை மரம்
பற்றி எரிந்திருக்கலாம்.

அல்லது
எலியா ஏறிச்சென்ற
நெருப்பின் ரதம்
வெப்பத்தை விதறியிருக்கலாம்.

உலகுக்கெல்லாம்
மகிழ்ச்சியூட்டும் செய்தி
மரியாவுக்கு மட்டும்
அதிர்ச்சியூட்டியிருக்கலாம். 

நான் சொன்னேன்
சந்தேகம் வேண்டாம்
தேறாது என தள்ளப்பட்ட
எலிசபத்துக்கு இது
ஆறாவது மாதம் !

கதிர்கள் முதிர்வது 
இயற்கையின் கணக்கு,
முதிர்ந்தபின் கதிர்விடுவது
இறைவனின் கணக்கு !

கடவுளுக்கு
தமிழில் பிடிக்காத வார்த்தை
முடியாது என்பது

என
முடித்து வைத்தேன்.  

இதோ
ஆண்டவரின் அடிமை
மரியாளின் வாக்கில் 
இப்போது தயக்கம் இருக்கவில்லை.

கீழ்ப்படிதல் என்பதுவேறு வழியின்றி சரணடைதல்ல.வேறு வழிவேண்டாமென சரணடைதல்.

இது
இழிநிலையல்ல
எழில்நிலையென மரியா உணர்ந்தார்.

நான்
வியந்தேன்.

இதோ
அடிமை ஒருவர் அரசனைச் சுமக்கிறார்

ஏழையான மரியா
கோழையாகாததால் 
இதோ
பேழையாகிறார்.

சரித்திரத்தின் மாபெரும் 
ஒப்பந்தம்
சத்தமில்லாமல்
கையொப்பமிடப்பட்டது

நான்
மரியாவை விட்டு விலகினேன்
மரியா
ஆண்டவரை நெருங்கினார். 

*

இதோ…

பூமியில் புதுப் பிரசவம்
நிகழப் போகிறது !

ஆதித் தாயின் தடுமாற்றத்தை
யூதத் தாயின்
வாரிசு
தடுக்கப் போகிறது !

பாவக் கடலைக்
குடித்து முடிக்க,
மீன் குஞ்சொன்று
முன் வருகிறது !

சூரியனையே செரித்து முடிக்க
மெழுகுவர்த்தி
ஒன்று
விழி திறக்கிறது !

நான்
விண்ணக வராண்டாவில்
அங்கும் இங்கும் நடந்தேன். 

அதோ
இயேசு பிறந்து விட்டார் !

பிறந்து விட்டார் 
இரண்டாம் ஆதாம்.

மண்ணிலிருந்து
மனிதனைப் பிரித்தெடுக்க
முதல் ஆதாம்
உருவானான்

மனிதனிலிருந்து
மண்ணைப் பிரித்தெடுக்க
இரண்டாம் ஆதாம்
உருவாகிறார்.
 
முதல் ஆதாம்
மண்ணின் அம்சமாய் இருந்தார்
இரண்டாம் ஆதாம்
விண்ணின் வம்சமாய்
இருக்கிறார். 

பெத்லேகேம்
என்றால் உணவின் வீடு 
என்று பொருள்.

அங்கே
உணவாய் வருகிறார் இயேசு. 
தீவனத் தொட்டியில்
தீவனமாய் வருகிறார் !
 
தீவனத் தொட்டி
தெய்வீக அடையாளம்,
இடையர்களுக்குத் 
தெரிந்த மொழி !

பெத்லேகேம்
யூதாவிலேயே சிறிய நகரம்,
தீவனத் தொட்டி
உலகிலேயே
இடுக்கமான படுக்கை !

பெத்லேஹேம்
ராகேல் தன்
கடைசி மூச்சைக்
கரைத்த இடம்.

காலேபின்
குடும்பத்தினர் 
களித்த இடம். 

ரூத்தும் போவாசும்
தெய்வீகக் காதலில்
திளைத்த இடம்.

தாவீது மன்னனின்
தந்தை
பிறந்த இடம் !

யோசேப்பின்
பூர்வீக பூமி !

பெத்லெகேம்
இனி
சிறிய இடம் அல்ல !
சீரிய இடம் !

அந்தப் பக்கம் 
எட்டிப் பார்த்தேன். 
 
ஏரோதின் அரண்மனை
ஏகாந்த
அமைதியில் விழுந்து கிடந்தது !

சிம்மாசனம் ஏரோதின் போதை
சிரச்சேதமே
அவனது பாதை !

அவனது
அமைதியின் அஸ்திவாரத்திற்கான,
கண்ணி வெடி ஒன்று
கன்னி மரி
மூலமாக வருவதை அவன் அறியவில்லை.

இயேசுவுக்கான
முதல் இரத்தசாட்சிகளாய்
மாறப்போகும்
பெத்லேகேம் மழலைகள்
விரல்கடித்து புரண்டு படுத்தார்கள்.

இயேசுவுக்காய் உயிர்விட்ட
முதல் இரத்தசாட்சி 
ஸ்தேவான் அல்ல
பெத்லேஹேம் பாலகர்களே. 

நீதிமான் யோசேப்பு
சாந்தமாய் இருந்தார்.

கைபிடிக்கும் முன் எப்படி
கருபிடிக்கும்
எனும் அவரது கவலையை
தூதர் ஒருவர் கனவில் வந்து
அழுத்தமாய்
அழித்திருந்தார். 

நான்
புதிய ஆனந்தத்தைப்
போர்த்துக் கொண்டேன்.

கடவுளிடம்
வெளிச்சம் கேட்டவர்களிடம்
கடவுளே
வெளிச்சமாய் வந்து விட்டார்.

கடவுளின் கனவுத் திட்டத்தில்
நானும்
கைகொடுத்திருக்கிறேன் !
அவரது 
ஆற்றலின் ஊற்றிலே
நானும் நனைந்திருக்கிறேன். 

நாங்கள்
தேவ தூதர்கள் !

சூதுகளைச் சுமக்காமல்
தூதுகளை மட்டும் சுமந்து செல்லும்
பேராற்றலின் வாரிசுகள்

ஒன்றை மட்டும்
உங்களிடம் சொல்லிவிட்டு
நான்
விடை பெறப் போகிறேன். 

கிறிஸ்மஸ் என்பது
கடவுள்
வார்த்தையானவரைக் கொண்டு
எழுதிய
மாபெரும் காதல் கடிதம் !

இயேசு பிறந்தது ஆவியால்
காரணம் இந்தப் பாவியால்
என சொல்லிக் கொள்ளுங்கள்.
 
கிறிஸ்மஸை அறிந்து கொள்ளுங்கள்
கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்

நன்றி
வணக்கம்

*

  
   
 




Posted in Bible Poems

நலமே தருக புத்தாண்டே !

நலமே தருக புத்தாண்டே !

*

இதோ
திறக்கப்பட்டிருக்கிறது  
புதிய பூபாளத்தின் கதவு !

இதோ
விரிக்கப்பட்டிருக்கிறது  
புதிய நம்பிக்கையின் கனவு !

மனிதம் தொட்டு
கவிதை எழுத
கொடுக்கப்பட்டிருக்கிறது 
ஒரு கிருபையின் ஆண்டு !

இந்த ஆண்டில்
ஒற்றுமையின் இழை பின்னி
புதிய
சகோதர உறவு நெய்வோம்.

வன்மத்தின் களை பிடுங்கி
புதிய
வாழ்வியல் உழவு செய்வோம்.

சுயநலத்தின்
குறுக்கு வழிகளில் 
தவழ்ந்து திரியாமல்
பிறர் நலத்தின்
பெருவெளிகளில் பறந்து திரிவோம்.

சந்தேகத்தின்
சாரலுக்குள் சங்கமிக்காமல்
நம்பிக்கையின்
நங்கூரங்களில் கட்டப்படுவோம். 

டிஜிடலின்
வெளிச்சத் திரைகளில்
இருண்டு கிடக்காமல்,
சமூகத்தின்
இருண்ட வீதிகளில்
வெளிச்சம் விளம்புவோம் !

சாக்குப் போக்குகளின்
சந்துகளில்
கூடாரமடித்துக் குடியிருக்காமல்
செபத்தின்
மௌனங்களில் 
நிலைத்து நிற்போம் !

ஆறுதல் வசனங்களால்
சோம்பலடையாமல்
பிறருக்கு
ஆறுதலளிக்கும் வசனமாய்
நாம் மாறுவோம் !

புத்தாண்டு என்பது
நாம் மகிழ்வை
அடைவதற்கானதல்ல,
பிறருக்கு மகிழ்வை அளிப்பதற்கானது !

நமது
விருப்பங்களின் திரியை
ஏற்றுவதை விட
பிறரின்
ஏக்கங்களின் நிலையை
மாற்றுவதற்கானது !

சிந்திப்போம்,
இறைவன் தந்த இந்த ஆண்டை
அன்பின் செயல்களால்
நிறைத்து
இறைவனுக்கே அளிப்போம்

அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

*



Posted in Bible Poems

நீரின்றி அமையாது பைபிள் ( கவிதை )

நீரின்றி அமையாது
பைபிள் !
 
 
நான் தான்
தண்ணீர் பேசுகிறேன்.
 
ஆண்டவரின் ஆவி
முதலில்
அசைவாடிய களம்
நான்.
 
இஸ்ரேலர்
தாள் பதிக்க
விலகி நின்றதும்,
இயேசு
தாள் பதிக்க தோள் கொடுத்ததும்
நான் தான் !
 
நான்
கட்டளைக்குக் கட்டுப்பட்ட‌
விஸ்வரூபம்,
கடவுளின்
கோட்டைத் தாண்டி
கரையேறியதில்லை.
 
பாறையில்
பிறப்பெடுத்து
தாகம் தீர்த்ததுமுண்டு,
பூமியை
வறள வைத்து
மாயம் காட்டியதுமுண்டு.
 
ஒற்றை வார்த்தையில்
அடங்கியதும் உண்டு,
மொத்த பூமியை
விழுங்கியதும் உண்டு.
 
இரத்தமாய் மாறி
வதைத்ததும் உண்டு,
இரசமாய் மாறி
சுவைத்ததும் உண்டு.
 
மேகத்தின் உள்ளே
மறைந்ததும் உண்டு,
தாகத்தின்
முடிவாய்
நிறைந்ததும் உண்டு
 
இயேசு
வாழ்வளிக்கும் நீரானார் !
வாழ்வை
முடித்த பின்னும்
விலா வழியே நீர் கசிந்தார்.
 
இயேசு
என்னில் மூழ்கினார்,
நான்
திருமுழுக்கு பெற்றுக் கொண்டேன்.
 
நீரின்றி அமையாது
உலகென்பார்,
நான்
அன்று
இயேசுவின் காதில் சொன்னேன்,
இயேசுவே, நீர் இன்றி
அமையாது உலகு !
 
*
 
சேவியர்
Posted in Articles, Bible Poems, Poem on People

வழிப்போக்கன் !

வழிப்போக்கன் !



ஆசை
ஒரு வழிப்போக்கன் !

அது
சாத்தப்பட்ட சாளரங்களைக்
கவனித்தபடி
சாலையில் நடந்து போகிறது !
கண் திறக்காத
கதவுகளின் முன்னால்
அது
அப்பாவியாய் கடந்து செல்கிறது.

அங்கும் இங்கும்
அலையும்
அதன் கண்களின்
வசீகரத்தின் அனல் 
அடித்துக் கொண்டே இருக்கிறது.

தாவீது அதைத் தான்
உள்ளே அழைத்து
விருந்து வைத்தான் ! 

அதை
கண்டுகொள்ளாமல் விடும்வரை
அது
கதவடைத்துக்
கடந்து வருவதும் இல்லை

சன்னல் உடைத்து
இன்னல் தருவதும் இல்லை !

சுற்றிக் கொண்டிருப்பதே
தன் இயல்பென
அது
தெருக்களுங்கும் 
ஊமைச் சாதுவாய் உலவித் திரியும்.

அதை
சற்றே திறந்த சன்னல் வழியே
கவனித்தால்
உடனே நின்று புன்னகைக்கும்.

அதன்
அழகில் மயங்கி கதவு திறந்தால்
ஆவேசமாய் வந்து
நடுவீட்டில்
நாற்காலி போட்டமரும். 

அதன்
அகோரப் பசியை
அட்சய பாத்திரங்களும்
அகற்றி விட முடியாது !

நமது
நிம்மதியையும்
பொருளாதாரத்தையும்
நேரத்தையும்
நறுக்கி விழுங்கும் !

காலப்போக்கில்
வயிறு புடைத்து 
வெளியேறிச் செல்ல வாசல்கள் போதாமல்
உள்ளுக்குள்ளே
நிரந்தரமாய் நங்கூரமிடும்.

வீட்டின்
ஆட்சிப் பொறுப்பைக் கையிலெடுத்து
வலிய அழைத்த
வீட்டினரையே
வீதிக்கு அனுப்பும். 

தாவீது அதைத் தான்
உள்ளே அழைத்து
விருந்து வைத்தார் ! 

ஆசை
ஒரு வழிப்போக்கன் !

தன்னை
உள்ளே அழைத்து உட்கார
வைப்பவர்களை,
வழிப்போக்கர்களாய் மாற்றும்
ஒரு 
விசித்திர வழிப்போக்கன்.

*

சேவியர்