Posted in Christianity, Christmas Special, skit

SKIT – பிரசங்கம் (Christmas Special )

பிரசங்கம்

ஒரு ஏழை சர்ச் வாசலில் பிச்சையெடுக்கிறார்.

அவரை தொரத்தி விடுகிறார்கள்

ந 1 : யோவ்.. இங்க யாருய்யா உன்னை விட்டது ? பிரசங்கியார் பேச வர நேரம்

பிச்சை : ஐயா.. பசிக்குது… ஏதாச்சும் குடுத்தா போயிடறேன்…. 

ந 2 : அடுத்த வாரம் வா.. இப்போ போ..போ.. இது கிறிஸ்மஸ் டைம்… 

பிச்சை : ஐயா.. ஒரு சின்ன ரொட்டியாச்சும்.. பசி அடுத்த வாரம் வரை வெயிட் பண்ணுமா…. 

ந 2 : நாக்க வெட்டுபுடுவேன் படவா.. ஓடறியா, இல்லை அடிச்சு தொரத்தவா

( தள்ளி விடுகிறார் )

காட்சி 2

பிரசங்கியார் பந்தாவாக வருகிறார் 

( அதே பிச்சைக்காரர் தான் பிரசங்கியார் )

ந 1 : ஐயா.. நீங்க ?

பிரசங்கியார் : சிரிக்கிறார்

( மேடையில் )

பிரசங்கியார் : கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் இங்கே வந்தேன்… பிச்சை கேக்க வந்தேன், அடிச்சு துரத்தினீங்க‌

நீங்க துரத்தினப்பவே இயேசுவும் வெளியே போயிட்டாரு

இப்போ என்னை வரவேற்கறீங்க…

ஆனா இயேசு உள்ளே வரல.. ஏன்னா, அவர் உடலையோ, உடையையோ பாக்கறவரில்ல, உள்ளத்தைப் பாக்கறவர். 

ந 1 : அமைதியாய் நிற்கிறார்

பிரசங்கியார் : கண்ணில் காணும் ஏழைக்கு அன்பு செய்யாமல், காணாத கடவுளை யாரும் அன்பு செய்ய முடியாது

( அமைதி )

பிரசங்கியார் : கடவுள் நியாயத் தீர்ப்பு நாளில எத்தனை பிரசங்கம் பண்ணினேன்னு கேக்கல, எத்தனை பிரசங்கம் கேட்டேன்னும் கேக்கல…. எத்தனை ஏழைக்கு உதவினேன்னு தான் கேக்கறாரு. 

( அமைதி )

பிர : இந்த கிறிஸ்மஸ் அர்த்தம் பெறணும்னா நீங்க கேக்க வேண்டியது, பிரசங்கம் இல்லை ! மன்னிப்பு …

கொடுக்க வேண்டியது காணிக்கையல்ல, ஏழைக்கு உதவி.. மனம் வருந்துவோம், உடன் திருந்துவோம்… 

பிர : ஹேப்பி கிறிஸ்மஸ்

Posted in Articles, Christianity, Questions Jesus Asked

இயேசு கேட்ட கேள்விகள்

“திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?”

லூக்கா 10 : 26

*

இயேசு கேட்ட கேள்விகளில் மிக முக்கியமான கேள்வி இது. இந்தக் கேள்விக்கான சூழல் சுவாரஸ்யமானது, அதற்கான விளக்கம் ஆன்மிக வாழ்வில் மிக மிக அவசியமானது.

இயேசுவின் போதனைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் திருச்சட்ட அறிஞர் ஒருவர். பின்னர் அவர் எழுந்து இயேசுவைப் பார்த்து “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என கேட்கிறார். போதகரே என மரியாதையுடன் அழைத்துக் கேட்டாலும், அது இயேசுவைச் சோதிப்பதற்காகக் கேட்கப்பட்ட கேள்வி என்கிறது பைபிள். 

இயேசுவும் அதே போல மரியாதையோடு அவரை அணுகுகிறார். ““திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?” என கேட்கிறார். கேள்வி கேட்டவர் திருச்சட்ட அறிஞர் என்பதால் அவரது ஏரியாவிலேயே இயேசு கேள்வியை ஆரம்பிக்கிறார். 

திருச்சட்ட அறிஞர், “உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என எழுதியுள்ளது என்றார். தனது திருச்சட்ட அறிவை சுருக்கமாய் வெளிப்படுத்திய திருப்தி அவருக்கு. ஏனென்றால் இயேசுவே இன்னொரு இடத்தில், திருச்சட்டத்தின் சாராம்சமாக இதையே சொல்லியிருந்தார். 

இயேசு திருச்சட்ட அறிஞரின் பதிலை ஏற்றுக் கொண்டார். அப்படியே செய்யுங்கள், வாழ்வடைவீர்” என்றார். அந்த அறிஞருக்கு அந்தப் பதில் போதுமானதாக இருக்கவில்லை. தான் நேர்மையாளன் என்பதைக் காட்ட விரும்பிய அவர்  “எனக்கு அடுத்திருப்பவன் யார் ?” என கேட்கிறார். அப்போது தான் இயேசு மிகப் பிரபலமான அந்த உவமையைச் சொல்கிறார்.

எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும் மனிதர் ஒருவர் கள்வர் கையால் அடிபட்டுக் குற்றுயிராகிறார். அவ்வழியே வந்த குரு அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் செல்கிறார், அவ்வழியே வந்த லேவியரும் விலகிச் செல்கிறார். ஆனால் அவ்வழியே வந்த சமாரியர் ஒருவர் அவரைக் கண்டு இரங்கி அவருக்கு முதலுதவி செய்து அவரை சத்திரத்தில் சேர்த்துப் பராமரிக்கிறார். அடிபட்ட இந்த மனிதனுக்கு யார் அடுத்திருப்பவர் ? என இயேசு கேட்க, அந்த திருச்சட்ட அறிஞர் ‘அவருக்கு இரக்கம் காட்டியவரே’ என்கிறார்.

நீரும் போய் அப்படியே செய்யும் ! என்றார் இயேசு. வாழ்வடைய என்ன செய்ய வேண்டும் எனும் கேள்விக்கான பதில் அவருக்கு இங்கே தரப்படுகிறது. வாழ்வில் உதவி தேவைப்படும் மனிதனுக்கு, சாதி, இன மொழி வேறுபாடுகளைப் பார்க்காமல் உதவி செய்ய வேண்டும் என்கிறார் இயேசு. 

எருசலேமிலிருந்து எரிகோ செல்பவர் எனும் கூற்றின் வழியே, பயணித்தவர் ஒரு யூதர் என இயேசு புரிய வைக்கிறார். ஒரு யூதருக்கு உதவி செய்வது யூதர்களால் புறக்கணிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு சமாரியன். அந்த சமாரியனே அடுத்திருப்பவன். 

ஆலயத்தில் பணி செய்யும் குரு அல்ல, குருவுக்கு உதவும் லேவியன் அல்ல – மாறாக தனது கடமையில் கண்ணாயிருந்தாலும் தேவையில் உழலும் மனிதனுக்காகப் பரிதவிப்பவனே உண்மையில் இறையரசுக்குத் தகுதி உடையவன். இதையே இயேசு இறுதித் தீர்வை நாளில், ‘சின்னஞ் சிறிய சகோதர் ஒருவருக்கு நீங்கள் இதைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்’ என்றார். 

திருச்சட்ட நூலில் என்ன எழுதியுள்ளது என இயேசு கேள்வியை ஆரம்பிக்கிறார். நமது வாழ்க்கையில் நாம் திருச்சட்ட நூலில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவேண்டும் என்பதை அவர் குறிப்பிடுகிறார். ஆனால் அந்த அறிவானது வெறும் ஏட்டுச் சுரைக்காயாய் இருக்கக் கூடாது, செயல்படும் அறிவாய் மாற வேண்டும் அப்போது தான் நிலைவாழ்வு சாத்தியம் என்கிறார் இயேசு. 

நேர்மையாளராய் இருப்பதற்கு இரக்கம் காட்டுபவராய் இருக்க வேண்டும். திருச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மனிதாபிமானம் வேண்டும். விண்ணரசில் நுழைவதற்கு அயலானுக்காய் உதவுகின்ற கரம் வேண்டும் .

இன்று உலகில் கிறிஸ்தவர்கள் அருகிவிட்டார்கள். பவுலியர்கள் பெருகி விட்டார்கள். தாவீதியன்கள் பெருகி விட்டார்கள். சாலமோனியர்கள் நிறைந்து விட்டார்கள். பவுலையும், தாவீதையும், சாலமோனையும் புரட்டுமளவுக்கு கிறிஸ்துவின் போதனைகளை மக்கள் புரட்டுவதில்லை. அதனால் தான் அவர்களின் வாழ்க்கை புரட்டப்படாமல் கிடக்கிறது. 

எந்த விதமாய்ப் பாட்டுப் பாடினால் இயேசு மகிமைப்படுவார் ? எப்படி ஆடுவது கடவுளுக்குப் பிரியம் ? ராப் பாடல்கள் தேவையா ? எந்த போதனை சிறந்தது – என வீடியோக்களைப் போட்டுத் தள்ளும் ஆன்மிக அறிவு ஜீவிகள் எவ்வளவு தூரம் இயேசுவின் போதனைகளைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று பார்த்தால் தோல்வியே மிஞ்சும். பரபரப்புகளை விரும்புமளவுக்கு போதர்கள் பரமனை விரும்புவதில்லையோ என தோன்றுகிறது. 

இன்றைய இயேசுவின் கேள்வி நம்மிடம் நீள்கிறது. திருச்சட்ட நூலில் என்ன வாசிக்கிறீர் ? அதை செயல்படுத்தும் ! வாசிப்பது உம்மை நிலை வாழ்வுக்குக் கொண்டு செல்லாது ! வாசிப்பதைச் செயல்படுத்தினால் மட்டுமே வாழ்வீர் என்கிறார் இயேசு !

இயேசுவின் போதனைகள் தெளிவாக இருக்கின்றன. போதகர்களின் விளக்க உரைகளைக் கேட்டுக் குழம்பாமல், வாருங்கள் திருச்சட்ட நூலை வாசியுங்கள், அன்பின் செயல்களை அவனியில் செய்யுங்கள்

*

சேவியர்

Posted in Articles, Christianity, WhatsApp

இயேசுவைப் போல…

இயேசுவளரவளரஞானத்திலும், உடல்வளர்ச்சியிலும்மிகுந்துகடவுளுக்கும்மனிதருக்கும்உகந்தவராய்வாழ்ந்துவந்தார்

( லூக்கா 2:52 )

*

நம்முடைய வாழ்க்கை கிறிஸ்துவைப் போன்ற வாழ்க்கையாய் அமைய வேண்டும் என்பது தான் கிறிஸ்தவப் போதனைகளின் அடிப்படை. அதற்காகத் தான் இயேசு பூமிக்கு வந்தார். ஒரு மனிதன் எப்படி இறைவனுக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ முடியும் என்பதை அவர் தனது வாழ்க்கை மூலமாக வாழ்ந்து காட்டினார். 

அவர் வளர வளர ஞானத்திலும், உடல் வளர்ச்சியிலும் மிகுந்தார் என்றும், கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்தார் என்றும் விவிலியம் சொல்கிறது. 

நாம் வளரும் போது எப்படி வளர வேண்டும் என்பதை இந்த வசனம் நமக்கு மிகத் தெளிவாக விளக்குகிறது. 

நான்கு நிலைகளில் நாம் வளரவேண்டும். 

  1. ஞானத்தில் வளரவேண்டும்
  2. உடல் வளர்ச்சியில் வளரவேண்டும்
  3. இறைவனுக்கு உகந்தவராய் வளரவேண்டும்
  4. மனிதருக்கு உகந்தவராய் வளரவேண்டும்.

ஞானத்தில் வளர்வது எப்படி ? இறைவனுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்கிறது பைபிள். உலகக் கல்வி நமக்குத் தருவது அறிவு ! இறைவன் நமக்குத் தருவது ஞானம். அறிவை நாம் வாசிப்பதன் மூலமாகக் கற்றுக் கொள்ளலாம், ஞானத்தை நாம் நேசிப்பதன் மூலமாகத் தான் கற்றுக் கொள்ள முடியும். அதுவும் இறைவனை நேசிப்பதன் மூலமாகத் தான் கற்றுக் கொள்ள முடியும்.

இந்த வாலிப வயதில் நாம் இறைவனுக்குப் பயந்த ஒரு வாழ்க்கை வாழவேண்டும். இறைவனுக்குப் பயப்படுவது என்பது என்ன ? இறைவன் மிகப்பெரிய கொடுங்கோலராய் இருக்கிறார், அவரைப் பார்த்து நாம் பயந்து நடுங்க வேண்டும் என்பதல்ல.! இந்தப் பயப்படுதல், அவருக்கு முழுமையாய்ப் பணிந்திருப்பதைப் பேசுகிறது. 

எதையும் இறைவனிடம் அற்பணிப்பதைப் பேசுகிறது. நமது ஒவ்வொரு செயலையும் இறைவனுக்கு சமர்ப்பிப்பதைப் பேசுகிறது. எப்படி ஒரு அடிமையானவன், அனைத்தையும் தன் தலைவனுக்குப் பயந்து செய்வானோ. எப்படி நல்ல பையன் தன் தந்தைக்குப் பயந்து அனைத்தையும் செய்வானோ, அதே போல நாம் இறைவனுக்குப் பயந்து அவரது போதனைகளின் படி நடக்க வேண்டும். இறைவனை மீறினால் நமக்குக் கிடைப்பது நிலையான நரகம் என்பதைப் புரிய வேண்டும். 

சாலமோனுக்கு. ஞானம் இருந்தது, அது தான் மக்களுக்கு நீதி வழங்கும் பணியில் அவரை சிறக்க வைத்தது. இயேசுவுக்கு  ஞானம் இருந்தது, அது தான் அவரை எல்லா சூழல்களையும் சிறப்பாய் எதிர்கொள்ள வைத்தது. நாம் முதலில் தேடவேண்டியது ஞானமே, அதற்காய் இறைவனில் சரணடைவோம்.

இரண்டாவது, உடல் வளர்ச்சியில் வளரவேண்டும். ஏன் உடல் வளர்ச்சியைப் பற்றி பைபிள் பேசுகிறது ? அது ஆன்ம வளர்ச்சியைத் தானே பேசவேண்டும் என பலர் நினைக்கலாம். நமது உடல் இறைவனின் ஆலயம் என்கிறது பைபிள். உடலை வலிமையாக, நேர்த்தியாக, தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை அது பேசுவதில் வியப்பில்லை. அதே போல, பைபிள் நமக்கான வாழ்வியல் நெறி, ஆன்மிக வழிகாட்டி. அது யதார்த்தங்களின் மீதே போதனைகளை அமைக்கிறது. 

நாம் நம்முடைய இளம் வயதில் எப்படி உடலைப் பாதுகாப்பது ? உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்கட்டும். உடலைக் கெடுக்கும் துரித உணவுகளுக்கு விடைகொடுப்போம். வீட்டில் அன்பாகச் சமைத்துத் தரும் உணவுகளை மட்டுமே உண்போம். தேவையான உடற்பயிற்சி நமது உடலையும் மனதையும் வலுவாக்கும். எனவே சரியான உடற்பயிற்சியைச் செய்வோம். 

நமது உடலை எந்த விதமான சிற்றின்பத் தேவைகளுக்காகவும் பாவத்தில் புரட்டாமல் இருப்போம். டிஜிடல் மோகத்தில் விழும்போதோ, போதை போன்றவற்றை அணுகும் போதோ நாம் உடலை அவமானப்படுத்துகிறோம். நம் உடலை நாம் களங்கப்படுத்தும் போது, கடவுளையே அவமானப்படுத்துகிறோம்.

மூன்றாவது, கடவுளுக்கு உகந்தவராய் வாழ்தல். நமது வாழ்க்கை கடவுளுக்குப் பிரியமானதாய் இருப்பதே கிறிஸ்தவ போதனைகளின் அடிநாதம். கடவுளுக்கு உகந்தவராய் வாழ்வது எப்படி ? மிக எளிது. ஒவ்வொரு செயலை நாம் செய்யும் போதும் “இயேசு இந்த செயலை செய்வாரா ?” “இயேசு இந்தச் செயலை இப்படித் தான் செய்வாரா ? என யோசித்து செய்ய வேண்டும். எந்த ஒரு சொல்லை பேசும் போதும், இயேசு இந்த வார்த்தையைப் பேசுவாரா என யோசிக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தைச் சிந்திக்கும் போதும், இயேசு இந்த விஷயத்தை இப்படித் தான் சிந்திப்பாரா என யோசிக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழும்போது நாம் கடவுளுக்கு உகந்தவராய் வாழ்கிறோம் என்று அர்த்தம். எப்போதும் கடவுளின் புகழைப் பாடுவதோ, அவரது பெயரை உச்சரிப்பதோ, வார்த்தைகளால் இயேசுவை அறிவிப்பதோ அவருக்குப் பிரியமான வாழ்க்கையல்ல. நமது சமூக வீதியில் ஏழை எளியவர்களுக்கு உதவும் போது, தேவையில் இருப்பவர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் போது, நோயாளிகளின அருகில் அமர்ந்து அவர்களின் துயரக் கதைகளை அன்புடன் கேட்கும் போது – நாம் இறைவனுக்குப் பிரியமானவராய் வாழ்கிறோம் என்று பொருள். அப்படித் தான் இயேசு வாழ்ந்தார். 

நான்காவது, மனிதருக்கு உகந்தவராய் வாழ்தல். நாம் இறைவனுக்குப் பிரியமானவராய் வாழவேண்டுமெனில் மனிதருக்கு உகந்தவராய் வாழவேண்டியது அவசியம். இயேசுவே சொல்கிறார், கண்ணில் காணும் சகோதரனை நேசிக்காமல் கண்ணில் காணாத கடவுளை நேசிக்க முடியாது என்று. இளம் வயதினராகிய நாம் முதலில் பெற்றோருக்கு முழுமையாய் கீழ்ப்படிபவர்களாய் இருக்க வேண்டும். நம்மைச் சார்ந்திருப்போருக்கு நன்மை செய்பவர்களாக இருக்க வேண்டும். சமூகத்தின் கட்டமைப்பைச் சிதைக்காதவர்களாக இருக்க வேண்டும். எங்கும் எல்லா இடங்களிலும் மனிதர்கள் நம்மை நேசிக்கும்படி வாழவேண்டும். 

இந்த நான்கு விஷயங்களும் இருந்தால், நமது வாழ்க்கை இறைவன் விரும்பிய வாழ்க்கையாய் அமையும். இயேசுவைப் போல வாழ வேண்டுமெனில், இயேசுவைப் போல வளரவேண்டியது அவசியம். 

இயேசுவைப் போல் வளர்வோம்

இயேசுவைப் போல் வாழ்வோம்

இயேசுவோடு வாழ்வோம் 

நன்றி. 

*

Posted in Articles, Christianity

கீழ்ப்படிதல்

*

காட்சி 1

( அம்மா & மகன் )

அம்மா : தம்பி.. என்னப்பா… படிச்சிட்டு புக்ஸை எல்லாம் அங்கேயும் இங்கேயும் போட்டு வெச்சிருக்கே… எல்லாத்தையும் எடுத்து அடுக்கி வை

மகன் : வெக்கிறேன்ம்மா.. ஃபைவ் மினிட்ஸ்..

அம்மா : என்ன சொன்னாலும் டூ மினிட்ஸ், ஃபைவ் மினிட்ஸ் ந்னே சொல்லிட்டிரு.. கடைசில எதையுமே பண்றதில்லை

மகன் : அம்மா, இதெல்லாம் ஒரு விஷயமா… வைக்கலாம் விடுங்க

அம்மா : கீழ்ப்படிதல் ரொம்ப முக்கியம்ப்பா…. எது சொன்னாலும் உடனே கீழ்ப்படியணும்.. அதான் நல்ல பிள்ளைக்கு அடையாளம்

மகன் : சரி.. சரி.. விடுங்க. டெய்லி இதே பாட்டு தானா ?

அம்மா : டெய்லி இதே பாட்டுன்னா, இன்னும் நீ திருந்தலேன்னு அர்த்தம்

மகன் : ஷப்பா… ஆளை விடுங்க.. அப்புறம் பாத்துக்கலாம்.

காட்சி 2

( அம்மா & மகள் )

அம்மா : ஏம்மா ஸ்னோலின்… என்ன மறுபடியும் செடிக்கு தண்ணி ஊத்தினியா ?

மகள் : ஆமாம்மா…. ஏம்மா ?

அம்மா : காலைல மட்டும் தானே ஊத்த சொன்னேன் ?

மகள் : ஆமா, ஆனா ஈவ்னிங் கூட ஊத்தினா இன்னும் நல்லா இருக்கும்ன்னு நினைச்சேன்.

அம்மா : சொல்றதை மட்டும் செய்யணும்ன்னு தெரியாதா ? நான் நட்டு வெச்ச வெத எல்லாம் வெளியே வந்துச்சு. போட்ட உரம் எல்லாம் தண்ணில கரைஞ்சு எங்கயோ போயிடுச்சு… செடி மூட்ல குளம் மாதிரி தண்ணி கிடக்கு… அது அழுகிப் போகுமான்னும் தெரியல.

மகள் : ஓ… சாரிம்மா.. இவ்ளோ பிரச்சினை இருக்கா ?

அம்மா : என்ன சாரி.. சொல்றதை மட்டும் செய்யணும்ன்னு சொன்னா கேக்கறியா ? அதிகப்பிரசங்கித் தனம் உனக்கு ஜாஸ்தி. சொன்னதை செய்றதுக்காக பாராட்டறதா ? சொல்லாததையும் சேத்து செஞ்சதுக்காக திட்றதான்னே தெரியல…

மகள் : ஏம்மா.. நல்ல இண்டன்ஷன்ல தானே பண்ணினேன்…

அம்மா : உன் பார்வைக்கு நல்லதா இருக்கலாம், ஆனா கீழ்ப்படிதல்ங்கறது சொல்றதை அப்படியே செய்றது தான்.. சரியா ?

மகள் : ஓக்கேம்மா

<< சிறிது நாட்களுக்குப் பின் >>

காட்சி 3

( பள்ளிக்கூடத்தில் )

( ஆசிரியர் & மகன் )

ஆசிரியர் : என்னப்பா…அசைன்மெண்ட் பண்ண சொன்னா, அதை சரியான நேரத்துக்கு பண்ண மாட்டியா ? இத பாரு.. நீ மட்டும் தான் பாக்கி

பையன் : சாரி சார்.. நான் பண்ணிட்டேன்.. பட்.. எடுத்துட்டு வர மறந்துட்டேன்.

ஆசிரியர் : எல்லாத்துக்கும் ஒரு சாக்குப் போக்கு வெச்சிருப்பியே… நாளைக்கு காலைல 9.30 க்கு முன்னாடி ஆபீஸ் ரூம்ல கொண்டு வைக்கணும்…. அதான் லாஸ்ட் சேன்ஸ்.. இல்லேன்னா உனக்கு அசைன்மெண்ட்ல கோழி முட்டை தான்.

பையன் ; கண்டிப்பா வைக்கிறேன் சார்.

ஆசிரியர் : கீழ்ப்படிதல் ரொம்ப முக்கியம்பா.. லைஃப்ல… இல்லேன்னா கீழ தான் கிடக்கணும்….

காட்சி 4

( ஆசிரியர் & மகள் )

ஆசிரியர் : ஸ்னோலின்.. இந்த எக்ஸாம் பேப்பரை எல்லாம் கொண்டு போய் என் டேபிள்ல வை.

மகள் : கண்டிப்பா சார்…

( மகள் பேப்பரை ரூமில் வைக்கிறாள் )

மகள் ( மனசுக்குள் ) – பேப்பரை அப்படியே வைக்காம ரோல் நம்பர் படி அடுக்கி வைப்போம். அப்போ டீச்சருக்கு ஹெல்ப்பா இருக்கும்.

( சிறிது நேரம் கழித்து அடுக்கி முடிக்கிறாள் )

(வெளியே வரும்போது ஆசிரியர் வருகிறார் )

ஆசிரியர் : நீ என்ன பண்றே…. ஆபீஸ் ரூம்ல ? இவ்ளோ நேரம் ?

மகள் : சார் நீங்க பேப்பரை கொண்டு வைக்க சொன்னீங்க..

ஆசிரியர் : ஆமா… அது சொல்லி ரொம்ப நேரம் ஆச்சே ! பேப்பர்ல ஏதாச்சும் கரெக்‌ஷன் பண்ணினியா ?

மகள் : சார்.. நோ..நோ.. நான்… ரோல் நம்பர் படி அடுக்கி வெச்சேன்

ஆசிரியர் : நெஜமாவா ? நான் அப்படி அடுக்கி வைக்க சொல்லவே இல்லையே ! லெட் மி செக்…. ஏதாச்சும் திருத்தியிருந்துச்சுன்னா முட்டை. மார்க் தான்

மகள் : சார்… உங்களுக்கு ஹெல்ப் பண்றதுக்கு தான் சார்..

ஆசிரியர் : சொன்னதை செஞ்சா போதும்… பூனையை புடிக்க சொன்னா, யானையை புடிக்க தேவையில்லை.

<<< சில வருடங்களுக்குப் பின் >>

அலுவலகம்

காட்சி 5

( அதிகாரி & பையன் )

அதிகாரி : என்னப்பா… சிங்கப்பூர் கஸ்டமர் புராஜக்ட் என்னாச்சு ? டெட் லைன் எதுவுமே மீட் பண்ணல… கீப் சேஞ்சிங் த டெலிவரி டேட்.. என்னாச்சு ?

பையன் : சார்.. அது வந்து…. அதர் பிரையாரிட்டி வர்க் வந்துச்சு.. சோ.. இது கொஞ்சம் ஹோல்ட் ல போயிடுச்சு

அதிகாரி : வாட்… ? அதர் வர்க்கா ? நாம கமிட் பண்ணியிருக்கோம்.. வீ நீட் டு டெலிவர்… சொன்ன டைம்ல டெலிவர் பண்ணணும்

பையன் : ஓக்கே சார்… வில் டூ

அதிகார் : என்ன வில் டூ.. அம்பு டூ.. ந்னு… ஐ வாண்ட் டு ரிவ்யூ த ப்ராஜக்ட்… கமிட்மெண்ட் மிஸ்ஸிங், டைம்லைன் மிஸ்ஸிங், இட்ஸ் இன் ரெட் ஸோன்

பையன் : எப்படியாச்சும் டெலிவரி டேட் மீட் பண்ண டிரை பண்றேன் சார்..

அதிகாரி : ஐம்.. நான் கான்பிடண்ட்…. உங்க கிட்டே குடுக்கிற வர்க் எதுவுமே சரியான டைம்ல முடியறதில்லை… ஐம் டிசப்பாயிண்ட்டட்.

காட்சி 6

( மகள் & கஸ்டமர் சைட் )

மகள் : சார்…. திஸ் ஈஸ் த டெலிவரி மாடல் சார்… ஹோப் யூ ஆர் ஃபைன். வித் இட்…

கஸ்டமர் : எஸ்.. வெரி குட்.. வெரிகுட்..

மகள் : எங்க கம்பெனி டெலிவரில எக்ஸ்பர்ட்… இதே மாடல்ல நாங்க ஏ ஐ/ எம் எல் கூட இம்பிளிமெண்ட் பண்ணியிருக்கோம்…

கஸ்டமர் : வாவ்.. தட்ஸ் கிரேட். அப்போ இந்த ஆர்கிடெக்சர்ல அதை இன்க்ளூட் பண்ணுங்க… ஆட்டோமேஷன் வித் ஏஐ.. அதான் பெட்டர்..

மகள் : சார்.. அது வந்து கொஞ்சம் காம்ப்ளிகேட்டட்

கஸ்டமர் : நோ..நோ.. ஐ வாண்ட் தேட். அதான் ஒரு டிபரன்ஷியேட்டர்… உங்க பாஸ் கிட்டே நான் சொல்றேன்… ஐ வில் மெயில் ஹிம்.. சொன்ன டைம்லைன், காஸ்ட்ல அதையும் இன்க்ளூட் பண்ணணும்.

காட்சி 7

( மாலையின் மேலதிகாரி போன் பண்ணுகிறார் )

மேலதிகாரி : என்ன பண்ணிட்டு வந்திருக்கீங்க ஸ்நோலின்… நான் பிரசண்ட் பண்ண சொன்னதை. மட்டும் பிரசண்ட் பண்ணாம எக்ஸ்றா பிட் எல்லாம் போட்டிருக்கீங்க.

மகள் : சார், ஒரு வேல்யூ ஆடட் ஆ இருக்கட்டும்ன்னு தான்

மேலதிகாரி : வாட்.. வேல்யூ.. இப்போ நமக்கு எவ்ளோ பெரிய நஷ்டம் தெரியுமா ? மார்ஜின் ஹெவியா அடி வாங்கும். லாபம் போச்சு…. ஆள் புடிக்கணும்… காஸ்ட் எகிறும்.

மகள் : ஓ.. ஐம் சாரி சார்..

மேலதிகாரி : என்ன சாரி… இந்த வருஷம் உங்களுக்கு நோ போனஸ், நோ இன்கிரிமெண்ட்…

மகள் : சார்…

மேலதிகாரி : சொன்னதை மட்டும் செய்ய கத்துக்கோங்க… இது உங்க நாவல் இல்ல, உங்க விருப்பத்துக்கு எதை வேணும்ன்னாலும் எழுத.

மகள் : சார்… ஐம்… சாரி…

மேலதிகாரி : நாளைக்கு காலைல என்னை ஆபீஸ்ல வந்து மீட் பண்ணுங்க… வில் கிவ் யூ எ மெமோ.

காட்சி 8

( மகள் சோகமாய் & அம்மா + மகன் )

அம்மா : என்னம்மா, ரொம்ப டல்லா இருக்கே ?

மகள் : நல்லதுக்கு செய்ற எல்லாமே தப்பா போவுது.. இப்பல்லாம், நல்லதுக்கே காலமில்லை

அம்மா : புரியும்படியா சொல்லு…

மகள் : கம்பெனியைப் பற்றி நாலு வார்த்தை நல்லதா பேசினதுல மேனேஜர் கடுப்பாயிட்டாரு..

அம்மா : நல்லதா பேசினா ஏன் கடுப்பாகணும் ?

மகள் : அவரு சொன்னதை விட கொஞ்சம் எக்ஸ்றா பேசிட்டேன்.. அது தப்பாயிடுச்சு

அம்மா : சொன்னதை விட அதிகமா ஏன் பேசினே ? அப்படி என்ன தப்பாச்சு ?

மகள் : புதிய டெக்னாலஜி விஷயம் எல்லாம் இருக்கு ந்னு கிளையண்ட் கிட்டே சொன்னேன். அப்போ அதெல்லாம் எங்களுக்கு குடுங்கன்னு அவங்க சொன்னாங்க. அது நமக்கு நஷ்டம்ன்னு மேனேஜர் கடுப்பாயிட்டாரு. போனஸ், ஹைக் ஏதும் தரமாட்டேன்னு சொல்லிட்டாரு…

அம்மா : உன் கிட்டே சின்ன வயசுல இருந்தே சொல்றேன்… அளவுக்கு அதிகமா பேசக் கூடாதுன்னு…. ஒபீடியன்ஸ் ங்கறது ஓவரா பேசறதில்லை … பேச வேண்டியதை மட்டும் பேசறதுன்னு…

மகள் : கம்பெனிக்கு நல்ல பெயர் கிடைக்கட்டும்ன்னு தாம்மா நான் பண்ணினேன்

அம்மா : கீழ்ப்படிதல்ங்கறது சொன்னதை அப்படியே செய்றது தான். நமக்கு அதை விட அதிகம் தெரியும்ன்னு அதிகப்பிரசிங்கித்தனம் பண்றதில்லை. உதாரணமா நோவா கிட்டே கடவுள் பேழை செய்யச் சொன்னப்போ கடவுள் சொன்னதை அப்படியே செஞ்சாரு. தனக்கு எல்லாம் தெரியும்ன்னு நாலு ஃப்ரஞ்ச் விண்டோவும், எட்டு பால்கனியும் எக்ஸ்றா வெச்சு கட்டல.

மகன் : நல்லா சொல்லுங்கம்மா… இவ குடுத்த காசுக்கு மேலயே நடிப்பா

அம்மா : அவளை மட்டும் ஏன் சொல்றே…. நீ குடுக்கிற காசுக்கே நடிக்கிறதில்லையே. எப்பவும் கீழ்ப்படியறதே இல்லை. அது ரொம்ப ரொம்ப தப்பு. கீழ்ப்படியாம இருக்கிறதும், சொல்றதுக்கு அதிகமா பண்றதும் – இரண்டுமே தப்பு தான்.

மகன் : என்ன திட்டு ரூட் மாறி இந்தப் பக்கம் வருது ?

அம்மா : கடவுளோட கட்டளைக்கு கீழ்ப்படியாத இஸ்ரேல் மக்களுக்கு என்ன நடந்துதுன்னு நீ படிச்சதில்லையா ? கீழ்ப்படியாதவன் சொர்க்கத்துக்குள்ள போகவே முடியாது. கீழ்ப்படியாதவன் அழிவான் ந்னு பைபிள் சொல்லுது.

மகள் : கீழ்ப்படியாமை தப்பு தான்மா…. ஐம் டிரையிங் பட்….

அம்மா : கீழ்ப்படியாமையைப் போல, சொல்லாததை செய்றதும் தப்பு தான். ஆதாம் கிட்டே கடவுள் பழத்தை உண்ணக் கூடாதுன்னு சொன்னாரு. தொடவும் கூடாதுன்னு மனுஷன் அதுல கூட்டிச் சேர்த்தான்… அது தப்பு… மோசே கிட்டே மலையில பேசுன்னு சொல்வாரு கடவுள்.. ஆனா அவரு அடிச்சாரு…. அதுவும் தப்பு. கடவுள் சொல்றதுக்கு மேல செய்யவே கூடாது. அதே நேரம் கடவுள் சொல்றதை செய்யாம இருக்கவும் கூடாது.

மகள் : ம்ம்.. புரியுதும்மா…..

அம்மா : கீழ்ப்படியாத பிள்ளைகள் மேல் கடவுளோட சினம் வரும் தம்பி.. ரொம்ப கவனமா இருக்கணும்…. சின்னச் சின்ன விஷயத்துல கீழ்ப்படியாதவங்களால பெரிய பெரிய விஷயங்கள்ல கீழ்ப்படியவே முடியாது.

மகன் : ம்ம்ம் உண்மை தான்ம்மா.. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் ந்னு சொல்றது உண்மை தான்.

அம்மா : ஆமா.. யோசிச்சு பாருங்க.. சின்ன வயசுல செய்த விஷயங்கள் தான் அப்படியே தொடருது…. மேஷ்மில்லோ எஃபக்ட் மாதிரி… ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. ஆனா, கடவுள் நினைச்சா எல்லாத்தையும் மாற்ற முடியும். தப்பை உணர்ந்து கடவுள் கிட்டே மன்னிப்பு கேளுங்க. கடவுளோட வார்த்தையை அப்படியே கீழ்ப்படியுங்க. அப்படியே கீழ்ப்படியறதுன்னா எப்படின்னு தெரியுமா ?

மகன் : ம்ம்.. வரைஞ்ச கோட்டை தாண்டாத கடல் மாதிரி..

மகள் : எல்லைக் கோட்டை மீறாத கோள்கள் மாதிரி, அப்படித் தானே

அம்மா : எஸ்.. வெரிகுட்…

மகள் : சரிம்மா, இனிமே அப்படியே பண்றேன்…

மகன் : நானும் கண்டிப்பா இனிமே அப்படியே பண்றேன்ம்மா

காட்சி 9

( மகன் மகள் செபிக்கிறார்கள், கீழ்ப்படிய முடிவெடுக்கிறார்கள் )

இயேசுவே.. இனிமே உங்க வார்த்தைகளை நீட்டாமலும், குறுக்காமலும் அப்படியே கீழ்ப்படிவேன்…

*

கீழ்ப்படிதல் ஆன்மிக வாழ்க்கையின் அடிப்படைத் தேவை. சிலர் கீழ்ப்படிவதே இல்லை, சிலரோ அதிகப்பிரசங்கித் தனமாய் தேவைக்கு அதிகமாகவே செய்து சிக்கலில் சிக்கிக் கொள்வார்கள். அப்படிப்பட்ட இரண்டு பேரோட வாழ்க்கை தான் இது….

Posted in Christianity, Desopakari

குழந்தைகளும், இறைமாட்சியும் !

குழந்தைகளும், இறைமாட்சியும் !

*

குழந்தைகள் !

இந்த வார்த்தையே நமது மன வெளிகளில் புன்னகை விதைகளைத் தூவும் வல்லமை படைத்தது. எத்தனை பெரிய சோகத்தின் அலைகள் நமது பாலை வெளிகளில் புரண்டு படுத்தாலும், ஒரு சின்னக் குழந்தையின் புன்னகைக் கைக்குட்டை கிடைத்தால் அந்த சோகம் புதையுண்டு போய்விடும். மழலைகளோடு விளையாடுகையில் மலைபோன்ற மன பாரங்கள் கூட பழுத்த இலை போல உதிர்த்து பறந்து மறையும். 

குழந்தைகள் வாழ்வில் இருளான தாழ்வாரங்களை புன்னகைத் தூரிகை கொண்டு வெள்ளையடிக்கப் பிறந்தவர்கள். வாழ்வின் அழுக்கான சுவர்களைத் தங்கள் ஆனந்தக் கிறுக்கல்களால் புதுப்பிப்பவர்கள்.  அவர்கள் விண்ணகத்தின் விழுதுகள், மண்ணகத்தின் விருதுகள். குழந்தைகள் வாழ்வில் இருளான தாழ்வாரங்களை புன்னகைத் தூரிகை கொண்டு வெள்ளையடிக்கப் பிறந்தவர்கள். வாழ்வின் அழுக்கான சுவர்களைத் தங்கள் ஆனந்தக் கிறுக்கல்களால் புதுப்பிப்பவர்கள்.  அவர்கள் விண்ணகத்தின் விழுதுகள், மண்ணகத்தின் விருதுகள். 

குழந்தைகள் உறவுப் பாலங்கள். பல குடும்பங்களிடையே இருக்கின்ற உறவு விரிசல்கள் ‘குழந்தைகளின்’ வருகையோடு விடைபெறுவதை நாம் காண்கிறோம். பகையின் வாள்வீச்சுகளால் பிரிந்து கிடக்கும் உறவின் உதிரத் துளிகள் குழந்தைகளின் வருகையோடு நட்பு பாராட்டுவதையும் புதுப்பிப்பவர்கள காண்கிறோம். உறவின் பிணைப்புகளான , குழந்தைகள் இதயங்களின் இணைப்பான்கள் !  

இப்படிப்பட்ட வாழ்வின் உன்னதமான குழந்தைகள் சமூகத்தின் உன்னதமான நிலையில் இருக்கிறார்களா என்றால் இல்லை என்று துயரத்துடன் முனக வேண்டியிருக்கிறது. சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் உயிரிழக்கும் குழந்தைகள் ஆண்டுக்கு சராசரி  31 இலட்சம். அதாவது வளரும் நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள், பிந்தங்கிய நாடுகள் இவற்றில் வாழும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 45 விழுக்காடு குழந்தைகள் வாழ்வை இழக்கின்றனர் ! இது யூனிசெஃப் பின் அதிகாரபூர்வ புள்ளி விவரம்.  

உலக அளவில் கடந்த பல ஆண்டுகளாக சேர்க்கப்பட்ட புள்ளி விவரங்களைக் கொண்டு ஒரு சராசரியை உருவாக்கினால் நமக்கு அதிச்சியூட்டும் ஒரு தகவல் கிடைக்கிறது. ஒவ்வொரு பத்து வினாடிக்கும் ஒரு குழந்தை எங்கோ ஒரு மூலையில் பசியால் இறந்து கொண்டிருக்கிறது என்பது தான் அது ! 

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள், குழந்தைகள் மீதான கல்வித் தாக்குதல், குழந்தைகள் மீதான சுகாதாரத் தாக்குதல் என அவர்களின் உலகம் போர்க்களத்தில் எரிந்து கொண்டிருப்பதைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். எந்த குழந்தை இறைவனின் வரமாக, பூமியின் புன்னகைக் கரமாக இருக்கிறதோ, அந்த பட்டாம்பூச்சிக் குழந்தைகளின் சிறகுகளைப் பாதுகாக்கும் வலிமை நமது சுயநலச் சமூகத்துக்கு இல்லாமல் போய்விட்டது என்பது தான் துயரம். 

குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டியதும், அவர்களை அடுத்த நிலைக்காகத் தயாராக்க வேண்டியதும் நமது கடமைகளில் ஒன்று என்பதை உணரவேண்டும். நமது குடும்பங்களில், நமது உறவினர்களிடையே, நமது நண்பர்களிடையே, நமது அயலாரிடையே உதவி தேவைப்படும் குழந்தைகளை நெஞ்சோடு அரவணைத்தாலே சமூகப் பரவலாய் அந்த அன்பின் செயல் பற்றிப் படரும். 

குழந்தைகள் !

இயேசு குழந்தைகளை இறைமாட்சியின் அடையாளங்களாகப் பார்த்தார். குழந்தைகளை விண்வாழ்வுக்கான போதனையின் மையமாகப் பார்த்தார். 

  1. குழந்தைகளை ஏற்பது, இறைமாட்சியின் அடையாளம்.

சிறுபிள்ளைகளுள்ஒன்றைஎன்பெயரால்ஏற்றுக்கொள்பவர்எவரும்என்னையேஏற்றுக்கொள்கிறார் ( மார்க் 9 : 37 )

இயேசுவின் இந்தப் போதனையானது முதல் மூன்று நூற்றாண்டுகளில் கிறிஸ்தவர்களிடையே மிகப்பெரிய உந்துதலை உருவாக்கியதாய் வரலாறு சொல்கிறது. ஆதரவற்ற குழந்தைகள், தேவையில் உழலும் குழந்தைகள், புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள் போன்றவர்களை ‘கிறிஸ்துவின் பெயரால் ஏற்றுக் கொள்கிறேன்” என ஏற்றுக் கொண்டு அவர்களை தங்கள் குழந்தைகளைப் போல வளர்க்கும் சூழல் ஆரம்ப கால கிறிஸ்தவர்களிடையே மிக அதிகமாய் இருந்தது. அந்தப் பழக்கம் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் விடைபெற்று விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இன்றைக்குக் குழந்தைகளைப் பாதுகாப்பதோ, அவர்களுக்கு உதவுவதோ அனாதை இல்லங்களில் பணியாகவோ, தொண்டு நிறுவனங்களின் பணியாகவோ ஒதுக்கப்பட்டு விட்டது. நமது சிந்தனைகளை இறைவனின் போதனையோடு ஒருமுறை ஒப்பிட்டுப் பார்ப்போம். இயேசுவின் பெயரால் சிறு பிள்ளை ஒன்றின் தேவையை முழுமையாய் சந்திக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தால் ஏற்றுக் கொள்வோமா ? அதுவே இயேசுவையும், தந்தையும் ஒரு சேர ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பு என்பதை உணர்வோமா ?

  1. குழந்தையாய் மாறுவது, இறை மாட்சியின் அடையாளம்

நீங்கள்மனந்திரும்பிச்சிறுபிள்ளைகளைப்போல்ஆகாவிட்டால்விண்ணரசில்புகமாட்டீர்கள்எனஉறுதியாகஉங்களுக்குச்சொல்கிறேன் “ ( மத்தேயு 18 : 3 ) என்றார்இயேசு

குழந்தைகளைப் பற்றி அறிய வேண்டுமெனில் குழந்தைகளைப் போல மாறவேண்டும் என்கிறது உளவியல். குழந்தைகளோடு விளையாடும்போது அவர்களோடு தரையில் தவழ்ந்து விளையாடவேண்டும் என்கிறது மருத்துவம். குழந்தைகளோடு பழகும் போது அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம் எனும் சிந்தனையோடு பழக வேண்டும் என்கிறது தத்துவயியல். குழந்தைகளைப் போல மாறினால் மட்டுமே விண்ணகம் என்கிறது ஆன்மிகம். 

சிறு பிள்ளைகள் எதற்கும் தந்தையின் அனுமதியை எதிர்பார்க்கும். தன் தேவைகளைத் தந்தையிடம் கேட்கும். தனது விருப்பங்களை அன்னையிடம் முன்வைக்கும். தனக்கு எது தேவையென்றாலும் அதை பெற்றோர் நிறைவேற்ற வேண்டும் என வந்து நிற்கும். தனது இயலாமையை முழுமையாய் ஏற்றுக் கொண்டு தனது பெற்றோரைச் சார்ந்து வாழ்வதே குழந்தைகளின் இயல்பு. 

நாம் நமது சுயத்தைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு, மனம் மாறி குழந்தைகளைப் போல, இறைவனையே சரணடையும் நிலை வேண்டும் என்கிறார் இயேசு. அடித்தாலும் தாயின் முந்தானையைக் கட்டிக் கொண்டே அழும் குழந்தையைப் போல, தண்டித்தாலும் இறைவனின் பாதத்தையே பற்றிக் கொள்ளும் நிலை வேண்டும் என்கிறார்.  குழந்தைகளின் இயல்புகளான கள்ளம் கபடமின்மை, பழி பகை உணர்ச்சியின்மை, கசப்பை மறக்கும் தன்மை என பட்டியலிடும் அனைத்துமே இறை மாட்சியை நாம் வெளிப்படுத்தத் தேவையானவை என்பதைப் புரிய வைக்கிறார்.

  1. நடுநாயகமாய்குழந்தைகள், இறைமாட்சியின்அடையாளம்.

ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி,… இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர் ( மத்தேயு 18 : 1-4 ) என்றார் இயேசு.

விண்ணகத்தில் பெரியவன் யார் எனும் கேள்வி எழுந்தபோது இயேசு சிறுபிள்ளையை அழைத்து அவர்களின் நடுவே நிறுத்துகிறார். குழந்தைகளை பெரியவர்களின் மையமாக்கி புதுமை செய்கிறார் இயேசு.  குழந்தைகள் இறைவனால் தரப்படுபவர்கள், குழந்தைகள் இறைவனால் பாதுகாக்கப்படுபவர்கள், குழந்தைகள் பெற்றோரால் வளர்க்கப்பட வேண்டியவர்கள், அவர்கள் மனுக்குலத்தின் மையம் ! 

குழந்தைகள் வாழ்வின் மையம். அந்த அச்சாணியை நிலைகுலைய வைப்பவர்கள் மீது இயேசுவின் கோபம் எழுகிறது. அத்தகைய இடறல் உண்டாக்குபவர்கள் கழுத்தில் எந்திரக் கல்லோடு கடலுக்குள் மூழ்கடிக்கப்பட வேண்டும் எனும் மிகக் கடுமையான வார்த்தைப் பிரயோகத்தை இயேசு பயன்படுத்துகிறார். சிறுவர்களைப் பாவத்துக்கு அழைத்துச் செல்வது மன்னிக்க முடியாத பாவம் என்பதை இயேசு அழுத்தம் திருத்தமாய்ச் சொல்கிறார்.

நமது வாழ்வின் மையமாக குழந்தைகள் இருப்பது இறைமாட்சியின் அடையாளம். குழந்தையின் இயல்புகளும், குழந்தைகளின் வாழ்வும், குழந்தைகள் மீதான கரிசனையும், குழந்தைகள் மீதான தார்மீகப் பொறுப்பும் நமக்கு இருப்பது அவசியம்.

  1. சிறுவரைப்பெருமையாய்க்கருதுங்கள், அதுஇறைமாட்சியின்அடையாளம்

இச்சிறியோருள்ஒருவரையும்நீங்கள்இழிவாகக்கருதவேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடையவானதூதர்கள்என்விண்ணகத்தந்தையின்திருமுன்எப்பொழுதும்இருக்கின்றார்கள் ( மத்தேயு 18 :10 ) என்கிறார்இயேசு.

சிறுவர்களுக்கான வானதூதர்கள் விண்ணகத்தில் இருக்கிறார்கள் ! அவர்கள் தங்கள் தூபங்களிலிருந்து வேண்டுதல் எனும் புகையை எழுப்புகிறார்கள் ! விவிலியத்துக்கு வெளியே உள்ள பல நூல்கள் வானதூதர்களைப் பற்றி மிக அழகாக வியப்பாகப் பேசுகின்றன. ஏனோக்கின் நூல் எனும் புத்தகம் வானதூதர், இயேசு, இரண்டாம் வருகை, விண்ணகத்தில் நடப்பது என்ன போன்ற பல விஷயங்களை நுணுக்கமாகப் பேசுகிறது. இந்த நூல் புதிய ஏற்பாட்டிலும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது என்பது நாம் அறிந்ததே. 

சிறுவரை இழிவாகக் கருதுவது என்பது இயேசுவையே இழிவாகக் கருதுவதைப் போல. சிறுவர்களை மரியாதையுடன் அழைக்க வேண்டுமா, மரியாதையுடன் நடத்த வேண்டுமா, வார்த்தைகளின் கனிவுடன் பேச வேண்டுமா, அவர்களை நம்மை விட குறைந்தவர்களாகப் பார்க்க வேண்டுமா, குழந்தைத் தொழிலார்களாய் நடத்த முடியுமா ? , அவர்கள் கருத்துகளை மதிக்க வேண்டுமா ? எனும் அத்தனை கேள்விகளுக்குமான விடையாக இந்த வசனம் அமைகிறது. 

சிறுவரை பெருமைக்குரியவராகக் கருதுங்கள், காரணம் அவர்களே விண்ணகம் நுழைவது எப்படி என்பதைத் தங்கள் வாழ்வின் மூலம் நமக்கு விளக்கிச் சொல்கின்றனர். 

  1. சிறுபிள்ளைபோல்ஏற்பது, இறைமாட்சியின்அடையாளம்

இறையாட்சியைச்சிறுபிள்ளையைப்போல்ஏற்றுக்கொள்ளாதோர்அதற்குஉட்படமாட்டார்எனநான்உறுதியாகஉங்களுக்குச்சொல்கிறேன் ( லூக்கா 18 : 17 ) என்றார்இயேசு.

இயேசுவின் வாழ்க்கையில் சிறுவர்களை நலமாக்கி, சிறுவர்களின் பேய் விரட்டி, சிறுவர்களை ஆசீர்வதித்து, உயிர்ப்பித்து, போதித்து இரண்டறக் கலந்து வாழ்ந்ததை நாம் பார்க்கலாம். ஒருவகையில் இயேசுவே ஒரு குழந்தையாய்த் தான் இந்த பூமியில் வாழ்ந்தார். அதனால் தான், ‘நமக்கு ஒரு பாலகன் பிறந்தான்’ என விவிலியம் இயேசுவை ஒரு பாலகனாக நமக்கு அறிமுகம் செய்கிறது. 

சிறுவர்களின் வாயால் ஓசானா என புகழப்படுவதை இறைமகன் இயேசுவின் எருசலேம் பயணம் நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது. 

சிறுவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் பொருட்களை உலக அளவீடுகளின் படி அளவிட்டு ஏற்பதில்லை, முழுமையாய் ஏற்றுக் கொள்கிறார்கள். இறையாட்சி என்பது கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டு விடைபெறும் விஷயமல்ல, அப்படியே ஏற்றுக் கொண்டு செயல்படும் விசுவாசம் என்பதையே இயேசு நமக்குப் புரிய வைக்கிறார். 

சிறுவர்களுக்கு மறைக் கல்வியை சிறுவயதிலிருந்தே போதிக்க வேண்டும் எனும் கருத்தை நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித ஜெரோம் அழுத்தமாகவே பதிவு செய்திருந்தார். இன்றைக்கு நமது திருச்சபைகள் சிறுவர்களை முக்கியத்துவப்படுத்துகின்றன. சிறுவர் ஞாயிறுபள்ளிகள், மறைக்கல்விகள் போன்றவை அவர்களை களப்பணியாற்றவும் கற்றுக் கொடுக்கின்றன. சிறுவர்களின் பயணமும், பங்களிப்பும் இறைவனுக்கு மாட்சியை அளித்துக் கொண்டே இருக்கின்றன. 

சிறுவர்களை ஏற்றுக் கொள்வோம், அதன் மூலம் இறைமகன் விரும்பிய மாட்சியை அவருக்கு அளிப்போம்

*

சேவியர்