Posted in Articles, Bible Poems, Christianity, Poem on People, Sunday School

இறையச்சம் கொண்ட பெண்கள்

Godly Women

+

இறையச்சம் கொண்ட பெண்கள்
நிறைவாழ்வின் நதியோரம்
நடமாடுகிறார்கள்.
புதுவாழ்வின் பாதைகளில்
இடம் தேடுகிறார்கள்.

இறையச்சம் கொண்ட பெண்கள்
கனிவின் கரம் பிடித்து
துணிவின் துணையுடன்
பணி செய்வார்கள்.

ஆண்மகவை எல்லாம்
அழித்தொழியுங்கள்
என
எகிப்திய மன்னன் எகிறிக் குதித்தான்

சிப்ராவும் பூவாவும்
கர்ஜனைக்குக் கீழ்படியாமல்
கர்த்தருக்குக் கட்டுப்பட்டனர்.
இளகிய இதயத்தோடு
மழலையரைக் காத்தனர்.

இறையச்சம் கொண்ட பெண்கள்
இறைவனின் பிள்ளைகளை
இதயத்தால்
அறிவார்கள்,
ஞானத்தால் பொதிவார்கள்.

ராகாப்
உடலை விற்றவள்
இறையைக் கற்றவள்.
அவளது ஞானம்
இஸ்ரேல் உளவாளிகளைக் காத்தது
அவளது நாமம்
இறை வரலாற்றில் இடம் பெற்றது.

இறையச்சம் கொண்ட பெண்கள்
வீரத்தின் தீரத்தை
உயிரெங்கும் தரித்திருப்பார்கள்.

அரச குடும்பத்தை
அழித்துக் கொக்கரித்த
அத்தலியாவிடமிருந்து
இளவரசர் யோவாசைக் காத்தாள்
யோசேபா !
வம்சம் அழியாமல் காப்பாற்றப்பட்டது.

இறையச்சம் கொண்ட பெண்கள்
அர்ப்பணிப்பின்
நற்பண்பை
நெஞ்சத்தில் நிறைத்திருப்பார்கள்.

இதோ அடிமையென
தாழ்மை காட்டினார்
தாவீதின் அம்சமான மரியாள் !
மனித ஆதாரத்தின்
மானுட அவதாரம் மலர்ந்தது.

இறையச்சம் கொண்ட பெண்கள்
இயேசுவின்
பணி வாழ்வின்
வழியெங்கும் நிறைந்திருந்தனர்.

பாடுகளின் பாதைகளிலும்
அழுதிருந்தனர்.

சிலுவையின் சுவடுகளிலும்
காத்திருந்தனர்.

இறையச்சம் கொண்ட பெண்கள்
உயிர்ப்பின் பேரொளியை
விழி நிரம்ப
அள்ளிக் கொள்கின்றனர்

அவர்கள்
செபத்தின் ஆழியில்
நங்கூடமிட்டு நிலைத்திருப்பார்கள்
அன்னாவைப் போல

அவர்கள்
விருந்தோம்பலின் விழுதினை
விழிகளில் நட்டிருப்பார்கள்
மார்த்தாளைப் போல

அவர்கள்
இறைவார்த்தை விருதினை
உயிரினில் வைத்திருப்பார்கள்
மரியாளைப் போல

அவர்கள்
கண்ணியத்தின் கவசத்தை
கேடயமாய் வைத்திருப்பார்கள்
ரபேக்கா போல

மொத்தத்தில்,

இறையச்சம் கொண்ட பெண்கள்
இறைவனின்
புனித வாழ்வில்
புகலிடம் தேடுவார்கள்,
சாத்தானுக்குச் சன்னல்களையும்
சத்தமாய்ச் சாத்துவார்கள்

*

Posted in Articles, Beyond Bible, Christianity

இவர்கள் என்ன ஆனார்கள் ? 2. இலாசர்

இவர்கள் என்ன ஆனார்கள் ?

இலாசர்

இயேசுவின் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமான நபர் லாசர். மார்த்தா, மரியா என்பவர்களுடைய சகோதரன். இயேசுவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். பெத்தானியாவிலுள்ள இவர்களுடைய இல்லத்தில் இயேசு வருகை புரிவது வழக்கமாக இருந்தது.

அந்த இலாசர் ஒரு முறை நோய்வாய்ப்பட்டார். இயேசுவோ வேறு ஒரு இடத்தில் இருந்தார். இயேசுவிடம் தகவல் சொல்லி அவரை அழைத்து வர ஒருவர் அனுப்பப்பட்டார். ஆனால் இயேசுவோ வரவில்லை. இலாசர் இறந்து விட்டார். சகோதரிகளின் கதறலுடன், அவரை கல்லறைக் குகையில் அடக்கம் செய்தாயிற்று. 

இயேசு திரும்பி லாசரின் வீட்டுக்கு வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து நான்கு நாட்கள் ஆகியிருந்தது. “நீர் இருந்திருந்தால் எங்கள் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என சகோதரிகள் புலம்பினர். இயேசு கண்ணீர் விட்டார். இறந்து போயிருந்த நண்பனுக்கு உயிர்கொடுக்க விரும்பினார். 

கல்லறையின் கல் புரட்டப்பட்டது. இயேசு இலாசரை அழைத்தார்.அடக்கம் செய்யப்பட்டு நான்கு நாட்களாகியிருந்த இலாசர் உயிருடன் எழும்பி வந்தார். கூட்டம் திகைத்தது. இந்தச் செய்தி காட்டுத் தீ போல பரவியது. பெத்தானியாவும், எருசலேமும் பக்கம் பக்கம் இருக்கக் கூடிய நகரங்கள். சுமார் இரண்டு மைல் தொலைவில் இருந்த எருசலேமில் இந்த செய்தி பரவியதும் யூதர்கள் பலர் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தனர்.

இயேசுவை கொன்றே தீரவேண்டுமென மதவாதிகள் முடிவுகட்ட, இந்த நிகழ்வு ஒரு காரணமாய் அமைந்தது. பின் இயேசு சிலுவையில் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின் அந்த குடும்பம் என்ன ஆனது ? இலாசர் என்ன ஆனார் என்பதைப் பற்றிய குறிப்புகள் விவிலியத்தில் இல்லை. 

ஆனால், ஆதித் திருச்சபைக் குறிப்பேடுகளில் அவர்களைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. அதில் இரண்டு விதமான நிகழ்வுகளைக் காணலாம்.

ஒன்றில், இலாசரும் அவரது சகோதரிகளும் யூதேயாவை விட்டு சைப்ரஸ் பகுதிகளுக்குச் செல்கின்றனர். கிடியோன் என்கின்ற நகரில் நற்செய்தியை அவர்கள் அறிவித்தார்கள். இது கிமு 13ம் நூற்றாண்டு முதல், கிபி 3ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை உயிர்ப்புடன் இருந்த ஒரு பகுதி.  இலாசரையும் கொல்ல வேண்டுமென மதவாதிகள் தீவிரமாய் களமிறங்கியது தான் இவர்களுடைய இந்த இடம் பெயர்தலுக்குக் காரணம்.

“இயேசு அங்கு இருப்பதை அறிந்த யூதர்கள் பெருந்திரளாய் வந்தார்கள். அவர்கள் இயேசுவை முன்னிட்டு மட்டும் அல்ல, அவர் உயிர்த்தெழச் செய்திருந்த இலாசரைக் காண்பதற்காகவும் வந்தார்கள். ஆதலால், தலைமைக் குருக்கள் இலாசரையும் கொன்றுவிடத் திட்டமிட்டார்கள். ஏனெனில், இலாசரின் காரணமாக யூதர்களிடமிருந்து பலர் விலகி இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்” என்கிறது யோவான் 12 : 9-11 வரையுள்ள வசனங்கள் 

சைப்ரஸ் பகுதிக்கு வந்த இலாசர், அங்கே கிடியோன் நகரின் முதல் ஆயராக இவர் திருநிலைப்படுத்தப்பட்டு முப்பது ஆண்டுகள் நற்செய்தி அறிவித்தலில் ஈடுபட்டார். இயேசுவின் தாய் மரியாவும், இயேசுவின் சீடர்களும் அவரை ஊக்கப்படுத்தினர். பின்னர் கிபி 63ல் இயற்கை மரணத்தை எய்தினார். இவரது கல்லறையின் மேல் புனித இலாசர் பெயரில் ஒரு ஆலயம் எழுப்பப்பட்டது. “சர்ச் ஆஃப் செயிண்ட் லாசரஸ்” இன்றும் சைப்ரஸ் நாட்டில் லார்னாகா பகுதியில் இருக்கிறது.

இன்னொரு கதையில், இலாசரஸும் அவரது சகோதரிகளும், புனித மேக்சிமினும் மார்ஷெலி பகுதிக்குச் செல்கின்றனர். அங்கே நற்செய்தி அறிவிக்கிறார்கள். அங்கே இலாசர் திருச்சபைத் தலைவராகிறார். நீரோவின் காலத்தில் நிகழ்ந்த படுகொலைக்குத் தப்புகிறார், ஆனால் தொடர்ந்து வந்த தொமிதியன் மன்னனின் ஆட்சியில் படுகொலை செய்யப்படுகிறார். கிபி 890ல் லார்னாகாவில், “கிறிஸ்துவின் தோழரான இலாசர்” எனும் பெயருடன் அவரது கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. 

இலாசர், பாரம்பரியக் கிறிஸ்தவ அமைப்புகளால், “புனித இலாசர்” என்றும், “நான்கு நாட்களின் இலாசர்” எனவும் அழைக்கப்படுகிறார். நான்கு நாட்கள் இவர் மரணத்துக்குள் இருந்ததால் நான்கு நாட்களின் இலாசர் என்று அழைக்கப்படுகிறார். இஸ்லாமிய புனித நூலிலும் இலாசரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுவது வியப்பு. அங்கு இலாசர் அல் அஸீர் என குறிப்பிடப்படுகிறார். 

நான்கு நாட்கள் இலாசர் இருளுலகில் ஆத்துமாக்கள் படுகின்ற அவஸ்தையைக் கண்டதாகவும், அதனால் தனது வாழ்நாள் முழுவதும் சிரிக்காமல் அவர்களுக்காக செபித்து வந்ததாகவும் ஒரு குறிப்பு தெரிவிக்கிறது. வாழ்வு என்பது நிலையற்றது என்பதை முழுதும் புரிந்தவராக அவரது வாழ்க்கை இருந்தது. ஒரு முறை ஒருவர் ஒரு மண் பானையைத் திருடிக் கொண்டு போன போது, “மண்ணே மண்ணைத் திருடுகிறது” என அவர் சொன்னதாக ஒரு பிரபல சொல்லாடல் உண்டு. 

இலாசரின் வாழ்க்கைக் கதையில் புனைவும் உண்மையும் கலந்தே பேசப்பட்டு வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. எனினும், இலாசரும் அவரது சகோதரிகளும் இயேசுவின் மரணத்துக்குப் பின்பும் அவரைப் பின்பற்றி நடந்த செய்திகள் நமக்கும் வலிமை ஊட்டுகின்றன. 

*

சேவியர்

Posted in Articles, Christianity, Sunday School

SKIT : No Turning Back ( Tamil )

No Turning Back

காட்சி 1

( கிராமத் தலைவரின் முன்னால் மக்கள் கூடியிருக்கிறார்கள், அவர்கள் முன்னால் ஒரு நபர் நிற்கிறார் )

தலைவர் : உன்னைப்பற்றி நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா ?

நபர் : என்ன கேள்விப்பட்டீர்கள் தலைவரே ?

தலைவர் : ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நாம் வழிபடும் தெய்வங்களை விட உனக்கு இப்போ வேறு ஒரு தெய்வம் முக்கியமானதாய் பட்டிருக்கிறதாமே.. உன் மீது குற்றச்சாட்டு இருக்கிறது

நபர் : ஐயா… உண்மைதான்.. நான் உண்மை தெய்வத்தைக் கண்டு கொண்டேன்.

தலைவர் : நீ என்ன தெய்வத்தை வேணும்ன்னாலும் வெச்சுக்கோ, ஆனா நம்ம தெய்வத்தை மறுக்கக் கூடாது. நம்ம தெய்வத்துக்கு எதிரா பேசக் கூடாது. நம்ம தெய்வத்தை வணங்கறதையும் நிப்பாட்டக் கூடாது. அப்படியே கூட்டத்தோட உன்னோட கடவுளையும் வெச்சுக்கோ பரவாயில்லை.

நபர் : இல்லை தலைவரே.. கடவுள் ஒருவரே. அவரை நான் கண்டு கொண்டேன். இனிமே எனக்கு வேற தெய்வங்கள் தேவையில்லை. அவர் மட்டுமே போதும்.

கிராமத்தான் 1 : தலைவரே.. இதைத் தான் நான் சொன்னேன் உங்க கிட்டே. இவன் அந்த ஏசுங்கற கடவுளை வழிபடத் தொடங்கியிருக்கிறான்.

கிராமத்தான் 2 : இதுல என்ன சிக்கல்ன்னா தலைவரே.. அந்த ஏசுவை வணங்கறவங்க, வேற யாரையும் வணங்க கூடாதாம். நமக்கு ஆயிரக்கணக்குல கடவுள் இருக்கு. இன்னும் ஆயிரம் கடவுள் வந்தாலும் நமக்கு பிரச்சினை இல்லை. ஆனா இவங்களுக்கு ஒரே ஒரு கடவுள் தானாம், வேற யாரையும் வணங்க மாட்டாங்களாம்.

கிராமத்தான் 1 : அதான் எனக்கும் எரிச்சல் தலைவரே… அவன் கடவுள் மேல எனக்கு கோபமில்லை, நம்ம கடவுளை விட்டுட்டு போனா அது தான் எனக்குக் கோபம்.

கிராமத்தான் 2 : இரண்டுல ஒண்ணு முடிவு பண்ணணும் தலைவரே.. இதை வெச்சு நீட்டிட்டு இருக்கக் கூடாது. இவன் மாறுனது மட்டுமில்லாம, இவன் குடும்பமும் மாறியிருக்கு. நாளைக்கு அது நாலு குடும்பமாகும், நாலு எட்டாகும், எட்டு பதினாறாகும்.. அப்புறம் நம்ம கடவுளை விட்டுட்டு எல்லாரும் அந்த பாரின் கடவுள் பின்னாடி போயிடுவாங்க.

தலைவர் : ம்ம் உண்மை தான். என்னோட கிராமத்துல அப்படி ஒரு விஷயம் நடக்க நான் விடமாட்டேன். இந்த பிரச்சினை எப்படி வந்துச்சு ? இந்த அஸ்ஸாம் மாநிலத்துல, நம்ம garo கிராமத்துல இப்படி ஒரு பிரச்சினை இது வரை வந்ததில்லையே.

கிராமத்தான் 1 : welsh ந்னு ஒரு ஊழியக் குழு வந்து மக்களை கெடுத்துருக்கு தலைவரே.. இதெல்லாம் காட்டுத் தீ போல, சட்டுன்னு முடிச்சுடணும், இல்லேன்னா அணைக்கவே முடியாது.

தலைவர் : ( கிறிஸ்தவரைப் பார்த்து ) ஏய்.. என்ன சொல்றே நீ .. அந்த ஏசுவை விட்டுடறியா ? மறுபடியும் நம்ம கூட்டத்துல சேரலாம்.

நபர் : இல்லை தலைவரே.. நான் இயேசுவை பின்பற்ற முடிவு பண்ணிட்டேன். இனி திரும்பிப் பாக்கற எண்ணமே இல்லை. கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்க்கக் கூடாதுன்னு ஏசு சொல்லியிருக்காரு.

தலைவர் : என்ன திமிரு இருந்தா என் முன்னாடியே இப்படிப் பேசுவே.. உனக்கு ஒரு வாய்ப்பு தரேன். நீ ஒழுங்கா ஏசுவை விட்டுட்டு நம்ம கூட வந்தா, மறுபடியும் நாம பழைய வாழ்க்கையை தொடரலாம். எத்தனையோ பேரோட தலையை வெட்டற ஹெட் ஹண்டர்ஸ் நாம.. இவ்ளோ வீரமான நீ போய் ஒரு ஏசுங்கற கடவுளை புடிச்சுக்கிறியே.. வெக்கமாயில்லை ?

நபர் : இல்லை தலைவரே.. வெக்கமா இல்லை. ஏசு தான் என் கடவுள். (பாடுகிறார் ) I have decided to follow Jesus, and there is no turning back

தலைவர் : யாருப்பா.. போய் இவனோட மனைவியையும், இரண்டு பிள்ளைகளையும் தூக்கிட்டு வாங்க.. கடவுளா குடும்பமான்னு பாத்துடுவோம்.

காட்சி 2

( நபரின் மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் கொண்டு வருகின்றனர் )

தலைவர் : அடடா.. சின்னப் பிள்ளைங்க.. எவ்ளோ அழகா இருக்காங்க. பள்ளிக்கூடம் போறாங்களா ? இந்த வயசுல அவங்களை எதுக்கு இப்படிக் கஷ்டப்படுத்தறே… பாவம் அவங்களோட வாழ்க்கையைக் கெடுக்காதே.

நபர் : நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்

தலைவர் : உன்னோட கதையைக் கேக்க எங்களுக்கு நேரமில்லை. ஏசு வேணுமா, இந்த பிள்ளைங்க வேணுமான்னு நீ முடிவு பண்ணு.

நபர் : ( அமைதியாக இருக்கிறார் )

தலைவர் : நீ ஏசுவை விடலேன்னா, இந்த பிள்ளைங்க உயிரை விடுவாங்க

நபர் : (பாடுகிறார் ) I have decided to follow Jesus, and there is no turning back

தலைவர் : இவனோட இரண்டு பிள்ளைகளையும் கொன்னுடுங்க..

கிராமத்தார் 1 & 2 : பிள்ளைகளை அம்பு எய்து கொல்கிறார்கள்

( நபரின் மனைவி & நபர் – கவலையில் அழுகின்றனர் )

தலைவர் : உன் பிள்ளைங்களோட இறப்புக்கு காரணம் நீ தான்.. எனக்கும் , என் கடவுளுக்கும் இதுல எந்த சம்பந்தமும் இல்லை. இப்போ, உன் மனைவியோட உயிர் உன் கையில இருக்கு. நீ ஏசுவை மறுதலிச்சா, மனைவியாவது உனக்கு மிஞ்சுவா.. இல்லேன்னா, என்ன நடக்கும்ன்னு உனக்கே தெரியும்.

நபர் : ஓ.. ஏசுவே… உம்மை நம்பி வந்து விட்டேன்.. இனி திரும்பிச் செல்ல மாட்டேன் ( பாடுகிறார் ) Though no one joins me, still I will follow.

தலைவர் : உனக்கு உண்மையிலேயே புத்தி கெட்டுப் போச்சு. போ, உன் மனைவி உயிரும் உனக்கு வேண்டாமா…

நபர் : Though no one joins me, still I will follow.

தலைவர் : இந்த மனுஷனோட மனைவியையும் கொன்னுடுங்க

கிராமத்தான் : ( அம்பு எய்து கொல்கிறான் )

நபர் : ( கதறுகிறார் )… ஏசுவே… நீரே தெய்வம்… உம்மையே நம்புவேன்

தலைவர் : தேவையில்லாம உன்னோட பிள்ளைகளையும், மனைவியையும் கொன்னுட்டே… இனி மிச்சம் இருக்கிறது உன்னோட உயிர் தான். உன் உயிர்மேல உனக்கு ஆசையிருந்தா, இப்போ நீ ஏசுவை விட்டுட்டு வந்துடு.. உனக்கு கடைசி வாய்ப்பு.

நபர் : என்னுடைய முதலும், கடைசியும் ஏசுவே… அவரை விடமாட்டேன் .. ( பாடுகிறார் ) : The cross before me, the world behind me.

தலைவர் : என்ன நெஞ்சழுத்தம்.. இந்த மனுஷனையும் கொன்னுடுங்க. இந்தக் குடும்பத்தோட சாவு இந்த கிராமத்துக்கு ஒரு பாடம்.

( கிராமத்தினர் அவரையும் கொல்கின்றனர் )

காட்சி 3

( சில நாட்களுக்குப் பின், கிராமத் தலைவரைப் பார்க்க சிலர் வருகின்றனர் )

கிராமத்தான் 1 : ஐயா… ஐயா..

தலைவர் : சொல்லுப்பா.. என்ன இந்தப் பக்கம்

கிராமத்தான் 1 : இல்லை, கொஞ்ச நாளா உங்களை அந்தப் பக்கம் காணோம். அதான் என்னாச்சோ ஏதாச்சோன்னு பாக்க வந்தோம்

தலைவர் : ஒண்ணுமில்லை.

கிராமத்தான் 2 : இல்லைங்கய்யா.. உங்களைப் பார்த்தாலே கொஞ்சம் டல்லா தெரியறீங்க. என்னாச்சு, வீட்ல எல்லாரும் சவுக்கியமா ?

தலைவர் : ஒண்ணுமில்லேப்பா.. எல்லாரும் நல்லா இருக்காங்க.

கிராமத்தான் 1 : அப்புறம் ஏன் தலைவரே..

தலைவர் : அது.. வந்து..

கிராமத்தான் 2 : சொல்லுங்க தலைவரே.. நமக்குள்ள என்ன தயக்கம்..

தலைவர் : அன்னிக்கு ஒரு குடும்பத்தை காலி பண்ணினோம்லயா ? அதுக்கு அப்புறம் மனசே சரியில்லை.

கிராமத்தான் 1 : என்ன தலைவரே… நூற்றுக்கணக்கான தலைகளை வெட்டி, வீட்டுல தோரணமா கட்டித் தொங்க விடற பரம்பரை நாம.. இதுல போய் கஷ்டப்படலாமா..நாங்க அதை எப்பவோ மறந்துட்டோம்.

தலைவர் : கொன்னது பெரிய விஷயம் இல்லை, ஆனா சாகப் போறோம்ன்னு தெரிஞ்சும் ஒருத்தன் கடவுளுக்காக நிப்பானா. அதுவும் கண்ணு முன்னாடி பிள்ளைங்க, மனைவி எல்லாம் சாகறதைப் பாத்தும் கடவுளைப் பாடுவானா ?

கிரா 2 : என்ன சொல்ல வரீங்க

தலைவர் : நான் யோசிச்சுப் பாத்தேன். நான் அப்படி நிக்கமாட்டேன். அந்த அளவுக்கு உறுதி மனசுல இருக்காது.

கிரா 1 : அப்படின்னா… புரியும்படியா சொல்லுங்க.

தலைவர் : அவன் அவ்ளோ உறுதியா இருக்கான்னா, கண்டிப்பா அவன் வணங்கற கடவுள் மேல அவனுக்கு அவ்ளோ நம்பிக்கை இருக்குன்னு அர்த்தம். அப்படின்னா அவன் அந்த கடவுளைப் பற்றி நல்லா அறிஞ்சிருக்கான்னு அர்த்தம்.

கிரா 2 : கேக்கறேனேன்னு தப்பா நினைக்காதீங்க.. நீங்களும் ஏசுவை நம்பறீங்களா ?

தலைவர் : அந்த மனிதனோட சாவுக்கு அப்புறம் எனக்கு ஏசு மேல நம்பிக்கை வந்திருக்கு.. ஏசு உண்மையானவரா இருப்பார்ன்னு எனக்கு தோணுது.

கிரா 1 : ம்ம்… அதனால என்ன பண்றதா உத்தேசம் தலைவரே..

தலைவர் : நான் இயேசுவைப் பற்றி தெரிஞ்சுக்கப் போறேன். ஏசுவை ஏற்றுக் கொள்ளப் போறேன். நம்ம கிராமத்துல எல்லாரும் இனிமே ஏசுவே உண்மை தெய்வம்ன்னு ஏற்றுக் கொள்ளணும்ன்னு சொல்லப் போறேன்.

கிரா 2 : தலைவரே.. உங்க விருப்பம். நீங்க என்ன சொல்றீங்களோ அப்படி செய்றோம்.

பின்குரல் :

இயேசுவை ஏற்றுக் கொண்டதற்காக கொல்லப்பட்ட அந்த நபர், ஒரு விதையாக அந்தக் கிராமத்தில் விழுந்தார். கிராமத் தலைவரின் இதயத்தில் கனிகொடுக்கும் மரமாக எழுந்தார். அவர் விதையாக விழுந்ததால் அந்த கிராமமே பிறக இறைமகனை ஏற்றுக் கொண்டது. நாம் விதைகளாக மாற வேண்டும். கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால் தான் பயனளிக்கும் என்ற இயேசுவின் வார்த்தை இங்கே நிறைவேறுகிறது. இறை வார்த்தையைப் பரப்ப உயிரைக் கூட கொடுக்கவேண்டும் எனும் உத்வேகத்தை இந்தக் கதை நமக்குத் தருகிறது.

Posted in Articles, Christianity, Desopakari

உள்நாட்டு இறைபணியாளர்கள்

உள்நாட்டு இறைபணியாளர்கள்

இங்கிலாந்து இறை பணியாளர்கள் இந்தியாவுக்கு வந்து நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த கால கட்டம். அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள காரோ எனும் பகுதி. அன்றைய காலத்தில் அங்குள்ள மக்களில் ஒரு பிரிவினர், “ஹெட் ஹண்டர்ஸ்” என அழைக்கப்படும் தலை வெட்டும் குணம் படைத்தவர்கள். மக்களுடைய தலையை வெட்டுவது அவர்களுக்கு உறுத்தலாய் இருந்ததில்லை. உற்சாகமாக இருந்தது. அன்றைய வாழ்க்கைச் சூழலில், அவர்களுடைய கலாச்சாரப் பின்னணியில் அது அந்தஸ்தின் அடையாளமாகப் பார்க்கப் பட்டது.

உதாரணமாக, திருமணத்துக்கு பெண் கொடுக்க வேண்டுமென்றால் அந்த ஆண்மகன் வீரமுடையவனாக இருக்க வேண்டும். வீரத்தை எப்படி நிரூபிப்பது ? அவன் வெட்டிய தலைகளின் எண்ணிக்கையைக் கொண்டு தான் அது நிர்ணயிக்கப்பட்டது. முப்பது தலையை வெட்டினவன் வீரனாகக் கொண்டாடப்பட்டான். கேட்கவே திடுக்கிட வைக்கும் இத்தகைய மனிதர்கள் உலகின் பல பாகங்களிலும் இருந்தார்கள். அவர்களுடைய வீடுகளின் நிலைக்கால்களில் மண்டை ஓடுகள் தோரணங்களாகத் தொங்குவதும், அவர்களுடைய கழுத்தில் மண்டையோடுகள் மாலைகளாகத் தொங்குவதும் சர்வ சாதாரணம்.

அப்படிப்பட்ட ஒரு பகுதியில் வேல்ஸ் இறை பணியாளர்கள் நற்செய்தி அறிவித்தார்கள். கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒரு குடும்பம் இறைவனின் அன்பினால் தொடப்படுகிறது. தொடப்பட்டவர் ஊர் மக்களால் வெறுக்கப்படுகிறார். கிராமத்தின் நடுவே, கிராமத் தலைவரின் முன்னால் அந்த கிறிஸ்தவக் குடும்பம் நிறுத்தப்படுகிறது. இயேசுவை ஏற்றுக் கொண்டவரோ, விசுவாசத்தில் ஆழமாய் நிற்கிறார். இயேசுவை ஏற்காதவர்கள், கலாச்சாரத்தில் காலூன்றி நிற்கிறார்கள்.

கிராமத் தலைவர் அந்த நபரைப் பார்த்துக் கேட்கிறார். “இயேசுவை விட்டு விடு… மீண்டும் பழைய வாழ்வுக்குத் திரும்பு. இல்லையேல் நீயும் குடும்பமும் கொல்லப்படுவீர்கள்.”

அந்த நபர் சொன்னார், “இயேசுவை பின் பற்ற நான் முடிவு செய்து விட்டேன். இனிமேல் திரும்பிப் பார்க்கும் எண்ணமில்லை”. இது அவர் எழுதி வைத்த பாடலின் ஒரு வரி. இந்த வரியைக் கேட்டதும் கிராமம் கொந்தளித்தது. கிராமத் தலைவர் கட்டளையிட்டார். அந்த மனிதருடைய இரண்டு பிள்ளைகளும் அவருடைய கண் முன்னால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அப்பா என தோளில் தொங்கிய பிள்ளைகள் கண் முன்னால் துடித்துச் சாவதைக் கண்ட தந்தையின் மனம் துடிதுடித்தது.

தலை வெட்டுவதில் மனம் சஞ்சலப்படாத தலைவன் சொன்னான். “இயேசுவை விட்டு விடு.. இல்லையேல் அடுத்ததாக உன் மனைவி கொல்லப்படுவாள்”

அவர் கண்ணீர் குரலோடு பாடினார், “என்னோடு யாருமே இணையாமல் போனாலும், நான் இயேசுவைப் பின் செல்வேன்”

அவருடைய மனைவியை அம்பு துளைத்தது. கண் முன்னாலேயே அவர் கதறியபடி விழுந்து இறந்தார். இயேசுவுக்காய் தன் மனைவியும், இரண்டு பிள்ளைகளும் இறந்து போனதைக் கண்ட அந்த மனிதர் உயிர் துடித்தார்.

கிராமத் தலைவர் அவரைப் பார்த்துக் கடைசியாய்க் கேட்டார். “மிஞ்சியிருப்பது உனது உயிர். நீ என்ன முடிவு செய்கிறாய் ? இயேசுவை விடப் போகிறாயா ? உயிரை விடப் போகிறாயா ?”

அவர் உறுதியான குரலோடு பாடினார், “சிலுவை என் முன்னால் இருக்கிறது, உலகம் என் பின்னால் இருக்கிறது”. அது தான் அவர் சொன்ன கடைசி வாக்கியம். அவரது உயிர் அந்த இடத்திலேயே பிடுங்கப்பட்டது. தன் குடும்பத்தினரோடு அவரும் அதே இடத்தில் இயேசுவுக்காக இரத்த சாட்சியாய் இறந்தார்.

சில நாட்கள் கடந்தன. அந்தக் கிராமத் தலைவரின் மனதை விட்டு அந்தக் காட்சி அகலவேயில்லை. எத்தனையோ தலைகளை வெட்டி, கிராமத்துக்கே தலைவராய் இருந்த அவரால் அந்த நிகழ்வை ஜீரணிக்க முடியவில்லை. போரிட்டு மடிந்த மக்களை அவர் பார்த்திருக்கிறார். கெஞ்சிக் கெஞ்சி உயிரை விட்ட மனிதர்களைப் பார்த்திருக்கிறார். அச்சத்தில் வெலவெலத்து உயிரை விட்டுப் பார்த்திருக்கிறார். ஆனால் உறுதியோடு, கடவுளுக்காக உயிரை விட்ட நபர்களை அவர் பார்த்ததேயில்லை. அதுவும் கண் முன்னால் பிள்ளைகள், மனைவி கொல்லப்பட்ட போதும் இறை விசுவாசத்தில் சலனமில்லாமல் நிலைத்திருந்த அவரது உறுதி அவரை அலைக்கழித்தது. அப்படி ஏசுவிடம் என்ன தான் இருக்கிறது என அவர் மனம் கேள்விகளை எழுப்பியது.

அவர் கிறிஸ்தவராய் மாறினார்.

அவர் கிறிஸ்தவராக மாறியதுடன் நிற்கவில்லை, அந்த கிராமத்திலுள்ள அத்தனை நபர்களும் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். ஒரு குடும்பம் பலியானது, ஒரு கிராமம் மீட்கப்பட்டது. ஒரு விதை அந்தப் பகுதியில் விழுந்தது, அந்த கிராமம் முழுவதும் கனி கொடுக்கும் விளை நிலமாய் மாறியது.

புனித தோமா கிபி 52ல் இந்தியாவுக்கு நுழைந்த போது கிறிஸ்தவம் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது. தமிழகம், கேரளா என்றெல்லாம் பிரிக்கப்படாத அந்தக் காலகட்டத்தில் இன்றைய கேரளாவின் கரையோரப் பகுதிகளில் அவரது பணி நடந்தது. அவர் ஆரம்பித்த ஆலயம் ஒன்று கிபி 60 களிலிருந்தே செயல்பாட்டில் இருக்கிறது. அது குமரிமாவட்டத்தில் இருக்கிறது. அது தான் உலகிலேயே மிகப் பழமையான ஆலயம்.

அவர்களுடைய வரவு நமது நாட்டில் மனிதத்தை விதைத்தது, பல்வேறு கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தது, மக்களுடைய அடிப்படைத் தேவைகளான உடை, உணவு, ஆரோக்கியம், உறைவிடம், கல்வி என்பவற்றில் கவனம் செலுத்தியது. மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, கூடவே இறைமகன் இயேசுவைப் பற்றிய செய்தியையும் அவர்கள் அறிவித்தார்கள். நற்செய்தி அவர்களுடைய ஆன்மாவுக்கு மட்டுமல்லாமல் உலக வாழ்வுக்குமே நற்செய்தியாய் அமைந்தது. அவர்களுடைய பணிகளில் ஈர்க்கப்பட்டு தான் பலர் கிறிஸ்தவ பணியாளர்களாக மாறினார்கள்.

சாது சுந்தர் சிங் இன்று கொண்டாடப்படுகிறார் எனில் கிறிஸ்தவராய் மாறிய பின் அவர் விதைத்த விதைகளே காரணம். அவர் தன்னிடம் விதைக்கப்பட்ட நற்செய்தியை அறுவடை செய்து தனக்காய் சேமித்து வைக்கவில்லை. அவற்றை விதைகளாய் பிறருக்கு வினியோகம் செய்தார். அதனால் தான், தான் பெற்றுக் கொண்ட மீட்பின் செய்தியை உலகுக்கே அளித்தார்.

சீர்திருத்தத் திருச்சபையின் இசை உலகை ஆக்கிரமித்திருக்கும் சாஸ்திரியார், இசை நற்செய்தி அறிவித்தலில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் ஆழமாய் தனது சிறுவயதைச் செலவிட்டவர். சிறு வயதிலேயே இயேசுவின் சிலுவையைக் காட்சியாய்க் கண்டவர். பிற்காலத்தில் சீர்திருத்தத் திருச்சபையின் மூலமாக நற்செய்தி அறிவித்தலை தீவிரமாகச் செய்தார். வாழையடி வாழையாக அவரது குடும்பமே கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர்வதற்கு அவர் இட்ட விதையே காரணம்.

நட்டாலத்தில் பிறந்த நீலகண்டனான தேவசகாயம், அரசவையில் ஏற்படுத்திய ஆன்மிகப் புரட்சி மகத்தானது. அன்றைய சமூக ஆன்மிக களத்தில் அவரது பங்களிப்பு கணிசமானதாய் இருந்தது. கிறிஸ்தவத்தைப் பின்பற்றியதற்காகவும், அதை செயல்படுத்தியதர்களாகவும் அவருக்கு மிகக் கடுமையான சித்திரவதைகள் செய்யப்பட்டதாய் பதிவுகள் சொல்கின்றன. அதன் பின்னர் நிலமை மாறியது. அவர் மக்களாலும், அதிகாரிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டார். ஒரு விதையாக விழுந்த அவரை அறியாதவர்கள் இன்று குமரிமாவட்டத்தில் இல்லை எனலாம்.

ஐடா ஸ்கட்டர் எனும் ஒரு இறை பணியாளர் நமது மாநிலத்தில் உருவாக்கிய பணியாளர்கள் ஏராளம் ஏராளம். மருத்துவத் துறையில் அவரது பங்களிப்பு உள்ளூர் மக்களை இறைபணிக்கு தயாராக்கியது. அவர்கள் இயேசுவின் பணியை ஏழைகளுக்கு மருத்துவப் பணி செய்யும் பாதையில் சுமந்து சென்றனர்.

உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். நாம் புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான கருத்து ஒன்றுண்டு. இறைவன் தனித்தனி நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை விண்ணக விதைகளாக ஆங்காங்கே நடுகிறார். அவர்கள் அங்குள்ள நிலங்களை பதப்படுத்தி வாழையடி வாழையாக, மூங்கிலின் புது முளைகளாக நற்செய்தியை தலைமுறை தோறும் சுமந்து கொண்டே திரிகிறார்கள்.

துவக்க காலக் கிறிஸ்தவ சமூகத்தோடு ஒப்பிடுகையில் நாம் இன்று சந்திக்கின்ற பிரச்சினைகள் கடுகளவு எனலாம். பொதுவெளியில் கிறிஸ்துவுக்காக உயிரை விட்டவர்களும், அதை ஆனந்தமாய் ஏற்றுக் கொண்டவர்களும் எண்ணிலடங்கா என வரலாறு குருதிப் பிசுபுசுப்புடன் இருக்கிறது.

இந்த சூழலில் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் இரண்டு உண்டு.

1. நமக்காக, நமது சமூக, ஆன்மிக வாழ்வின் மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்ட, பாடுபடுகின்ற இறை பணியாளர்களை நன்றியுடன் நினைவு கூர்வது. அவர்கள் எந்த பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த கோட்பாடுகளைக் கொண்டிருந்தாலும் அவர்கள் இயேசுவுக்காக வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் என்பதை உணர்ந்து அவர்களை நேசிப்பது.
2. அவர்கள் காட்டும் இயேசுவின் வழியில் நமது வாழ்க்கையை அமைப்பது. பெற்றுக் கொள்பவர்களாக மட்டும் இருக்காமல், இறைவனுக்காக பணி செய்பவர்களாகவும் மாறுவது. அது தான் அவர்களுடைய பணியின் இழையை அறுபடாமல் காப்பாற்றும். விண்ணக வாழ்க்கையை நழுவ விடாமல் நம்மைப் பாதுகாக்கும்.

அன்று முதல், இன்று வரை பணி செய்கின்ற உள்நாட்டுப் பணியாளர்களை நேசிப்போம். அவர்களுக்குத் தோள்கொடுப்போம். அவர்களுடைய பணியில் நம்மை முழுமையாய் ஈடுபடுத்துவோம்.

*

சேவியர்

தேசோபகாரி, மார்ச் 2020

Posted in Articles, Beyond Bible, Christianity

இவர்கள் என்ன ஆனார்கள் ? – 1. லாங்கினஸ்

இவர்கள் என்ன ஆனார்கள் ?

லாங்கினஸ்

இயேசு சிலுவையில் அறையப்படுகிறார். கல்வாரி மலையில் சிலுவை மரத்தின் உச்சியில் அவர் தொங்குகிறார். சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவின் விலாவை ஒருவர் ஈட்டியால் குத்துகிறார். ஈட்டி இயேசுவின் விலாவைத் துளைத்து உள்ளே நுழைகிறது.

“படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.” என இந்த நிகழ்ச்சியை யோவான் நற்செய்தி விளக்குகிறது.

மத்தேயு, மார்க், லூக்கா நற்செய்திகளில் இந்த ஈட்டியால் குத்தும் நிகழ்வு குறிப்பிடப்படவில்லை. ஆனால் கடைசியாக எழுதப்பட்ட யோவான் நற்செய்தியில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. யோவான் நற்செய்தி முதலாவது நூற்றாண்டின் கடைசி கட்டத்தில் எழுதப்பட்டது. அந்த காலகட்டத்தில் இந்த வீரரைப் பற்றிய தகவல்கள் அதிகமாய் பேசப்பட்டிருக்கலாம், எனவே தான் யோவான் அதையும் பதிவு செய்கிறார் என கருத இடமிருக்கிறது.

அந்தப் படைவீரர் யார் ?
அதன் பின் அவருக்கு என்ன நிகழ்ந்தது ?

இவற்றையெல்லாம் விவிலியம் குறித்து வைக்கவில்லை. ஆனால் ஆதிகாலத் திருச்சபைக் குறிப்புகளும், வரலாற்று நூல்களும் இவர்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான குறிப்புகளைத் தருகின்றன.

திருச்சபையால் ஏற்றுக் கொள்ளப்படாத நூல்களில் சில முக்கியமானவை. அவற்றில் ஒன்று ‘நிக்கோதேமுவின் திருமுகம்’. அந்த நூலில் இயேசுவின் விலாவில் ஈட்டியால் குத்தியவரின் பெயரும் அவரைப் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. இயேசுவைக் குத்தப் பயன்படுத்தப்பட்ட ஈட்டியானது புனித ஈட்டி என அழைக்கப்படுகிறது.

அந்த பதிவுகளின் அடிப்படையில் அந்த வீரனின் பெயர் ‘லாங்கினஸ்’. பார்வைக் குறைபாடு உடையவர். இயேசுவின் விலாவில் ஈட்டியால் குத்துகிறார். சிலுவைக் குற்றவாளிகளின் விலாவில் ஈட்டியால் குத்தும் வழக்கம் அன்றைய காலத்தில் இருந்தது. ஒருவகையில் விரைவில் குற்றவாளிகள் இறக்கவும், அவர்கள் இறந்து விட்டார்களா என்பதை ஊர்ஜிதப்படுத்தவும் இதைச் செய்வார்கள்.

இயேசுவின் விலாவில் இவர் குத்துகிறார். அப்போது இரத்தமும், நீரும் வடிகின்றன. தெறிக்கின்ற குருதியில் சில துளிகள் பார்வைக் குறைபாடுடைய அவனது கண்களில் விழுகின்றன. அவனது கண்கள் முழுமையாய் குணமடைகின்றன. ஈட்டியால் தன்னைக் குத்தியவருக்கும், நன்மையைச் செய்கிறது குணமளிக்கும் குருதி.

அவன் அதிர்ச்சியடைகிறான். வெலவெலக்கிறான். ‘இவர் உண்மையாகவே இறைமகன்’ என அறிக்கையிடுகிறார். இவர் நூற்றுவர் தலைவரின் கீழ் பணியாற்ற ஒருவர் என்று சிலரும், நூற்றுவர் தலைவரே இந்த லாங்கினஸ் தான் என்று வேறு சிலரும் குறிப்பிடுகின்றனர்.

இயேசுவின் விலாவில் ஈட்டியால் குத்தியபின் அதன் தாக்கம் அவருக்கு நீண்டகாலம் இருந்தது. இரவில் அவரை சிங்கம் ஒன்று வந்து பீறிக் கிழிப்பதும், காலையில் எதுவுமே நடவாதது போல அவரது உடல் இருப்பதும் வாடிக்கையாய் இருந்தது என இன்னொரு சுவாரஸ்யக் குறிப்பு கூறுகிறது. ஒரு வகையான உளவியல் பாதிப்பாக இது இருக்கலாம்.

இயேசு உயிர்த்தெழுந்ததைக் கேள்விப்பட்டபின் அவர் இயேசுவின் சீடர்களைச் சந்திக்கிறார். அதன் பின் அவர் கிறிஸ்தவராக மாறுகிறார்.

தனது வேலையை உதறிவிட்டு நற்செய்தி அறிவித்தலில் ஈடுபட்டார். சொந்த ஊரான கப்பதோஷியா ( இப்போதைய இத்தாலி) க்குத் திரும்பி இயேசுவின் நற்செய்தியைப் பேசி பலரை கிறிஸ்தவர்களாக மாற்றியிருக்கிறார்.
அன்றைய கிறிஸ்தவ விரோத சூழலில் நீண்டகாலம் பணி செய்ய முடியாமல் கிபி நாற்பத்தைந்துகளில், பிலாத்துவின் காலத்திலேயே, சித்திரவதை செய்யப்பட்டு, சிரச்சேதம் செய்யப்பட்டு இரத்தசாட்சியாய் மரித்தார் என்கின்றன சில குறிப்புகள்.

ஆங்கிலிக்கன், கத்தோலிக்கர், ஈஸ்டன் ஆர்த்தடாக்ஸ், ஓரியண்டல் ஆர்தடாக்ஸ் போன்ற சில பாரம்பரியக் கிறிஸ்தவ அமைப்புகளில் இவர் புனிதராகப் போற்றப்படுகிறார். அக்டோபர் பதினாறாம் தியதி அவரது நாளாகக் கொண்டாடப்படுகிறது. வத்திக்கான் (வேடிகன்) ஆலயம் உட்பட சில ஆலயங்களில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.

லாங்கினஸ் பற்றிய குறிப்புகளில் புனைவும், நிஜமும் கலந்தே இருக்கின்றன என்பது கண்கூடு. ஆனால், இயேசுவின் இரத்தம் தெறித்த படை வீரன் நலம்பெற்று, இயேசுவுக்காக வாழ்ந்தார் எனும் செய்தி உண்மையிலேயே சிலிர்ப்பூட்டுகிறது.

*

சேவியர்