கிறிஸ்மஸ் என்றால் மீட்பு
மீட்பு
எனும் எட்டாக்கனி
நமக்கு
பந்தி வைக்கப்பட்ட தினம்.
அடிமைகளின்
சிரங்களிலும்
கிரீடம் சூட்டப்படுமென
அறிவிக்கப்பட்ட தினம்.
பிற இனங்களின்
தாழ்வாரங்களிலும்
தேவன்
உலவுவார் என
நிரூபிக்கப்பட்ட தினம்
கிறிஸ்மஸ்
மீட்பின் தினம்.
மீட்பர் பிறந்துள்ளார்
எனும்
தூதரின் ஒலியால்
பூமி மகிழ்ந்த தினம்.
உருவமற்ற மீட்பரின்
உருவத்தை
கண்கள் கண்ட தினம்.
கிறிஸ்மஸ்
மீட்பின் தினம்
இயேசு எனும்
ஆழிப் பேரலை
பாவத்தின் நுரைகளை
முழுமையாய் அழிக்கும்.
இயேசு எனும்
ஒற்றைப் புயல்
சர்வ சக்தியையும்
புரட்டிக் கவிழ்க்கும்.
காலங்களைக் கடந்தவர்
பாலனாய்ப் பிறந்தார்.
மீட்பராய் மலர்ந்தார்
கிறிஸ்மஸ்
மீட்பின் தினம்.
மீட்பின் பந்தியில்
சேர
ஆன்மீக முடவர்களுக்கும்
அழைப்பு விடுக்கும் தினம்
விண்ணும் மண்ணும்
கை குலுக்கிக் கொண்ட
விஸ்வரூப தினம்
மாளிகைகளை
மறுதலித்து விட்டு
முன்னணையை
முன்னிறுத்திய வியப்பின் தினம்.
கிறிஸ்மஸ்
முடிந்து போன நிகழ்வின்
கொண்டாட்டம் அல்ல,
முடிவற்ற மீட்பை
சொந்தமாக்கும் தினம்.
இம்முறை
தொழுவத்தை அடைத்துவிட்டு
இதயத்தைத் திறப்போம்.
இயேசு
உள்ளத்தில் பிறக்கட்டும்
விண்ணகத்தை நோக்கி
நம் ஆன்மா
பறக்கட்டும்
*
சேவியர்