Posted in Articles, Desopakari

உண்மை வழி நடப்போம் ( தேசோபகாரி )

உண்மை வழி நடப்போம்

*

உண்மையா

அதுஎன்ன

இது பிலாத்து இயேசுவை நோக்கி நீட்டிய கேள்வி.  ஆனால் ஒருவேளை பிலாத்துவின் கேள்வி, 

உண்மையா

அதுயார்

என்றிருந்திருந்தால் உண்மை வடிவான இயேசுவை அவன் அறிந்திருப்பான். நானே வழியும், சத்தியமும், ஜீவனும் என்ற இயேசுவை அகக் கண்ணால் கண்டிருப்பான். உண்மை என்பது ஒரு செய்தியாக இருக்கும்போது அது சிதிலமடைகிறது, அது உருமாற்றம் அடைகிறது, அது பல முகம் காட்டுகிறது. 

ஆனால் உண்மை என்பது ஒரு மனிதராக இருக்கும் போது அந்த வாழ்க்கை நமக்கு வழிகாட்டுகிறது. அந்த உண்மையின் வாழ்க்கை நம்மை உண்மையின் பாதையில் நடக்க வைத்து இறுதியில் உண்மையிடம் நம்மைச் சேர்க்கிறது. 

குழந்தைகள் உண்மையின் வழியில் நடப்பவர்கள். அவர்களிடம் கள்ளம் இல்லை, அவர்களிடம் பொய் இல்லை. கள்ளமும், பொய்யும் சமூகத்தினால் குழந்தைகள் மீது திணிக்கப்படுகின்றன. ‘வீட்ல இல்லேன்னு பொய் சொல்லு’, ‘உடம்பு சரியில்லேன்னு சொல்லு’ என்றெல்லாம் குழந்தைகளுக்கு நாம் தான் பொய்யை அறிமுகம் செய்து வைக்கிறோம். 

உண்மையின் வழி நடக்க விரும்புபவர்கள் குழந்தைகளிடமிருந்து பாடம் கற்க வேண்டும். குழந்தைகளுக்கு நாம் அறிவைக் கொடுக்க வேண்டும், குழந்தைகளிடமிருந்து உண்மையை கற்றுக் கொள்ள வேண்டும். எனவே தான் இயேசு, இறையரசு இத்தகையோருக்குரியதே என்றார் ! குழந்தையைப் போல மாறாவிடில் இறையரசில் நுழைய முடியாது என்றார். 

சத்தியம் வார்த்தையல்ல, 

வார்த்தையானவர் !

இறைவார்த்தைகளிலிருந்தல்ல நமக்கான மதிப்பீடுகள், 

இறை வாழ்க்கையிலிருந்து பெற வேண்டும் வாழ்வுக்கான வழிகாட்டுதல்கள். 

  1. உறுதியானமனநிலை !

சத்தியத்தின் வழியில் நடப்போருக்கு ஒரே கேள்விக்கு இரண்டு விடைகள் இருப்பதில்லை. அவர்கள் உண்மை, பொய் எனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்வதில்லை. அவர்களுடைய பேச்சு ஆம் என்றால் ஆம் என்றும், இல்லை என்றால் இல்லை என்றும் உறுதியாக இருக்கிறது

குழந்தைகள் உண்மை பேசுகின்றன. அவர்களிடம் பொய் சொல்லச் சொன்னால் தடுமாறி விடுகின்றன. நாம் அவர்களுக்கு பொய்யை அறிமுகம் செய்து வைக்கிறோம். காலப் போக்கில் பொய் அவர்களுக்குப் பழகி விடுகிறது. பொய் அவர்களின் இயல்பாகி விடுகிறது. அதன்பின் அவர்களிடம், ‘ஏண்டா பொய் சொன்னே ?’ என நாம் கோபித்துக் கொள்கிறோம். நாம் பழக்கி விட்ட வழியில் அவர்கள் நம்மையே எதிர் கொள்ளும்போது எரிச்சலடைகிறோம்.

உண்மையின் வழியில் நடக்கும் உறுதியான மனம், நம்மை இறைவனிடம் சேர்க்கும். 

  1. உண்மையின்மனநிலை !

கிறிஸ்தவர்கள் என்பவர்கள் கிறிஸ்துவின் வழி நடப்பவர்கள். ஆனால் நாம் அதை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறோமோ எனும் அச்சம் அடிக்கடி எழுகிறது. ஆன்மிகம் சார்ந்த விவாதங்களில் இன்று பெரும்பாலும் தனி நபர் தாக்குதல்களே எழுகின்றன. கிறிஸ்துவை மையமாகக் கொண்ட சித்தாந்தங்களை விட அடையாளங்களை  மையப்படுத்தும் சித்தாந்தங்களே அதிகம் இருக்கின்றன. 

உண்மையின் மனநிலை என்பது இயேசுவின் மனநிலை. இயேசு ஒவ்வொரு விஷயத்தையும் எப்படிச் செய்வார் என்பதை அறிந்து செயல்படும் மனநிலை. உதாரணமாக ‘எப்படி துதிக்க வேண்டும், எப்படி ஆட வேண்டும், எப்படி உடுக்க வேண்டும்’ என்றெல்லாம் இயேசுவிடம் கேட்டால் என்ன பதில் சொல்வார் ? என நமக்குள் கேள்வி எழுப்ப வேண்டும். 

இயேசு எப்படி இருப்பார் என்பதை அறிய குழந்தைகளைப் பாருங்கள். அவர்கள் தேவையற்ற விவாதங்களில் ஈடுபட்டு மண்டையைக் குழப்பிக் கொள்வதில்லை. 

  1. செயலாற்றும்மனநிலை

குழந்தைகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்கின்ற ஒரு விஷயம், செயல் பட்டுக் கொண்டே இருப்பது. ‘எப்ப பாரு ஓடிட்டே… ஒரு இடத்துல இருக்கானா பாரு’ என நம்மை சலிப்படையச் செய்யும் அளவுக்கு பிள்ளைகள் ஓடிக் கொண்டே இருப்பார்கள். அத்தகைய சுறுசுறுப்பும், செயலாற்றுதலும் நம்மிடம் இருக்க வேண்டும். அத்தகைய செயல்பாடுகள் இயேசு எனும் உண்மையை மையப்படுத்தியதாகவோ, முன்னிறுத்தியதாகவோ இருக்க வேண்டும். 

சத்தியத்தின் வழி நடப்போர் சலிப்படைக் கூடாது. பணி செய்ய தயங்கக் கூடாது. எப்படியெல்லாம் பணி செய்ய வேண்டும் என்பதை இயேசுவின் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். தயங்காமல் பயணிக்கும் ஆற்றலை பவுலின் வாழ்க்கையிலிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். 

குழந்தைகளிடமிருந்து அந்த உற்சாகத்தின் மனநிலையை அறிந்து கொள்வோம்.

  1. கரம்கொடுக்கும்மனநிலை

உண்மையின் வழியில் நடப்போர் பிறருக்கு கை கொடுக்கும் வாழ்க்கை வாழவேண்டும். குழந்தைகள் விளையாடும் போது கவனித்திருப்பீர்கள், அவர்களுக்கு வைரக் கல்லை விட மர பொம்மை தான் பிரியமாய் இருக்கும். அவர்கள் தங்களிடம் இருப்பதை பிறரோடு பகிர்ந்து விளையாட தயங்க மாட்டார்கள். ‘இது உன்னுது, இதை யாருக்கும் குடுக்காதே’ என நாம் அவர்களுடைய மனதைக் கெடுக்காதவரை அவர்கள் மனம் கறையற்றதாகவே இருக்கும்.

பெரியவர்களின் மனநிலை அப்படி அல்ல ! ஓய்வு நாளே பெரியது, சூம்பிப் போனவன் நலமடைவதை விட !!! என்பதே அவர்களின் பார்வை. குழியில் விழும் ஆடு கூட அவர்களின் பார்வையில் ஊனமுற்றவரை விட மேலானதே. உண்மையாம் இயேசுவின் வழியில் நடப்பவர்கள் பிறருக்காய் எப்போதும் கரம் நீட்டுபவர்களாய் இருக்க வேண்டும். ஒரே ஒரு கரம் இருந்தால் கூட அதை நீட்டுபவர்களாய் நாம் இருக்க வேண்டும். 

குழந்தைகளிடமிருந்து அந்த அன்பின் செயலைக் கற்றுக் கொள்வோம்.

  1. பேதமற்றமனநிலை 

நீ என்ன சாதி ? என இதுவரை இந்தப் பிரபஞ்சத்தில் எந்தக் குழந்தையும் வினா எழுப்பியதில்லை. நீ எந்த சாமியை கும்பிடறே ? என்பதை பெற்றோர் கற்றுக் கொடுக்கும் வரை கண்டு கொள்வதில்லை மழலை. நீ ஏன் கருப்பா இருக்கே, நீ ஏன் சிவப்பா இருக்கே, உனக்கு ஏன் கால் இல்லை, உனக்கு ஏன் தலைமுடி இல்லை என்றெல்லாம் குழந்தைகள் யோசிப்பதே இல்லை. உருவம், அடையாளம் போன்றவையெல்லாம் குழந்தைகளின் தேசத்தில் இல்லை ! 

பேதங்கள் பார்த்து மனிதரோடு பழகுபவன் நிச்சயம் இறையரசுக்கு உரியவன் அல்லன் ! நல்ல சமாரியன் சொல்லித் தருவது அதைத் தான். நாம் அயலானாய் இருக்க வேண்டும், தேவையில் இருக்கும் மக்களுக்கு ஆறுதல் தரும் அயலானாய் இருக்க வேண்டும். குழந்தைகள், அழுகின்ற குழந்தையோடு சேர்ந்து அழும். சிரிக்கின்ற குழந்தையோடு சேர்ந்து சிரிக்கும். குழந்தைகளின் பேதமற்ற மனம் நம்மை பரமனிடம் சேர்க்கும். 

சத்தியத்தில் நடக்கும் போது நாம் 

இறையரசுக்கு உரியவர்களாவோம். 

சத்தியத்தில் நடப்பது எப்படியென்பதை

மழலையிடமிருந்து கற்றுக் கொள்வோம்

*

சேவியர்

நன்றி : தேசோபகாரி

Posted in Articles, Desopakari

மண்வளம் காப்போம்

*

இன்றைய சமூகம் உள்ளங்களிலும், ஊரிலும் அழுக்குகளால் நிரம்பியதாய் மாறிக் கொண்டிருக்கிறது. நெகிழிகள் முதல், உதாசீனப்படுத்துதல் வரை நிலம் பல இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அன்பும், மனித நேயமும் நிறைந்த மனிதர்கள் அருகி வரும் உயிரினம் போல எங்கேனும் தான் தட்டுப்படுகிறார்கள். மனிதர் மீது அன்பு பாராட்டாதவர்கள் நிலத்தின் மீது எப்படி நேசம் காட்டுவார்கள் ? சுயநலத்தின் சாலைகளில் தான் பொதுநலத்தின் சிந்தனைகளும் புதைக்கப்படுகின்றன. 

பொதுவில் கிடந்த வளங்கள் வரங்களாய் இருந்தன. அவை சுரண்டப்பட்டு அதிகாரத்தின் பைகளில் பதுங்கியபோது சாபமாக மாறிவிட்டது. மண் வளமே பிற வளங்களைத் தாங்கிப் பிடிக்கிறது. உயிர்களின் இருப்பிடமாகவும், பயிர்களின் பிறப்பிடமாகும், வாழ்வின் மகிழ்விடமாகவும் இருப்பது நிலமே. 

நிலம் என்னுடையது என்கிறார் கடவுள் லேவியர் ஆகமத்தில் ! நிலத்தை மனிதன் வெட்டிக் கூறுபோட்டு, பூர்வ குடிகளை விரட்டியடிக்கும்போது கடவுளின் சினம் நிலத்தின் மீது விழுகிறது. 

இந்த மண் வளத்தை ஏன் நாம் காப்பாற்ற வேண்டும் ?

  1. நாம் மண்ணின் பாகமாய் இருக்கிறோம்.

கடவுள் நம்மைப் படைத்தபோது மண்ணிலிருந்து தான் உருவாக்கினார். நமக்குள் மண் இருக்கிறது. மண் தான் மனிதனின் முதல் மூலக்கூறு. கடவுளின் உயிர் மூச்சு நமக்குள் உலவுகிறது, மண்ணின் உடல் வடிவம் தான் நமக்குள் நிலவுகிறது. எனவே அடிப்படையிலேயே நாம் மண்ணோடு உறவாய் இருக்கிறோம். அந்த உறவைப் பேணவேண்டியது நமது கடமை !

உருவாகும்போது எப்படி மண் மனிதனாய் மாறியதோ, அதே போல விடை பெறுகையில் மனிதன் மண்ணாகிறான். மண்ணோடு உறவாடுகிறான். மண்ணோடு கலந்து விடுகிறான். மனிதன் மண்ணின் பாகமாய் மாறிவிடுகிறான். சுழற்சி நிறைவு பெறுகிறது. மண்ணினால் துவங்கி, மண்ணுடன் அடங்கிவிடும் வாழ்க்கை முறையையே இறைவன் நமக்குத் தந்திருக்கிறார். எனவே மண் வளம் காக்க வேண்டியது நம் கடமையாகும்.

  1. மண் வளம் காத்தல் நமக்கு இறைவன் அளித்த பணி

கடவுள் மனிதனுக்கு இட்ட முதல் பணியே நிலத்தைப் பண்படுத்துவதும், பாதுகாப்பதும் தான். “ ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார் “ ! அது தான் கடவுள் மனிதனுக்குக் கொடுத்த முதல் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர். 

மண்ணைப் பண்படுத்த மறுக்கும் போது நாம் கடவுளின் விருப்பத்தை நிராகரிக்கிறோம். மண்ணை புண்படுத்தும் போது நாம் கடவுளையே நிராகரிக்கிறோம்.

நிலத்தைப் பாதுகாப்பது என்பது நிலத்தின் மாண்பினைப் பாதுகாப்பதும், வளத்தினைப் பாதுகாப்பதுமாகும். எப்படி நிலம் மாசுகளால் மலட்டுத் தன்மை ஆகாமல் தடுக்க வேண்டுமோ, அதே போல நிலம் சாத்தானின் ஊடுருவல் இல்லாமலும் தடுக்க வேண்டும். ஆதாம் செய்த பிழைகளையே நாமும் செய்யாமல் கவனமாய் இருக்க வேண்டும். 

  1. மண், கடவுள் பிரித்து வைத்த இடம்.

கடவுள் மனிதனுக்குக் கொடுத்த பணியை மனிதன் செய்யத் தவறியிருக்கலாம். ஆனால் இயற்கைக்குக் கொடுத்த பணியை அவை செவ்வனே செயல்படுத்துகின்றன. கரையைத் தாண்டி வராதே எனும் கட்டளையை ஏற்று கடல் அங்கேயே நிற்கிறது. நிலத்தைத் தனியே பிரித்த இறைவன் அதற்குத் தேவையான வளம் தரும் நதிகளையும் தருகிறார். 

நிலத்தைப் பண்படுத்துவதும், பாதுகாப்பதுமே நம்மால் செய்ய இயன்ற பணிகள். ஒரு விதையை முளைக்க வைப்பது இறைவனே. விதைப்பதால் ஒரு விதை முளைப்பதில்லை, அதற்குத் தேவையான வளங்களைக் கொடுப்பதால் முளை வருவதில்லை.  எல்லாவற்றுக்கும் மேல் இறைவனின் அருள் தேவைப்படுகிறது. நமது பணி ஐந்து அப்பம் கொடுத்த சிறுவனைப் போன்றது. அதை ஐயாயிரம் பேருக்கு அளிப்பது இறைவனின் பணி.

கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது அதைத் தான். நிலத்துக்காக நாம் வானத்தை இழுத்து வந்து வாய்க்காலில் போடவேண்டுமென அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் தந்ததை காயப்படாமல் காப்பாற்ற வேண்டுமென விரும்புகிறார். மண் கடவுளின் கட்டளையைக் கேட்கிறது, நாம் கடவுளின் கட்டளைக்குச் செவி சாய்க்கிறோமா ?

  1. மண் கடவுளை மகிமைப்படுத்துகிறது !

படைப்புகள் இறைவனைப் புகழ்கின்றன. நிலத்தில் முளைக்கும் செடிகளும் கொடிகளும் பூக்களும் கனிகளும் இறைவனின் மாட்சியைப் பறைசாற்றுகின்றன. இறைவனைப் புகழும் நாவினை நாம் நறுக்கிவிடக் கூடாது. இறைவனை நேசிக்கும் இயற்கையை நாம் சிதைத்து விடக் கூடாது. ஒருவரை நாம் நேசிக்கிறோம் என்பதன் அடையாளம் இரண்டு. ஒன்று அவர் சொல்வதைச் செய்கிறோம், இரண்டு அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாய் செயல்படுகிறோம்.  

இறைவன் சொல்வதை நாம் செய்கிறோமா ? இறைவனுக்குப் புகழ் சேரும் வகையில் செயல்படுகிறோமா ? இயேசு வாழ்ந்த காலத்தில் நிலத்தைத் தன் போதனைகளில் பயன்படுத்தினார். கடவுளின் ஆசீர்வாதத்தின் அடையாளமாக பழைய ஏற்பாடு விளைச்சலைப் பேசியது !  

இயேசு நல்ல நிலமாய் வாழ நமக்கு அழைப்பு விடுத்தார். நாம் நல்ல நிலமாய் இருக்கிறோமா ? நம்மிடம் இருக்கும் நல்ல நிலத்தைக் கெட்ட நிலமாய் மாற்றுகிறோமா ? இயற்கையை அழகுபடுத்தி, அதன் மூலம் இறைவனை மகிமைப்படுத்துவோம். எல்லாவற்றுக்கும் மேலாய், இயேசு மீண்டும் மண்ணில் வரப் போகிறார். அவரை வரவேற்க மண் புனிதமாய் இருப்பதல்லவா சிறப்பானது !

5 மண்வளம் காத்தல், நம் கடமை !

கிறிஸ்தவர்களின் கடமை என்பது கனிகொடுக்கும் வாழ்க்கை தான். வெறுமனே வாயால் பாடுதலோ, புகழ்தலோ, பேசுதலோ அல்ல ! நமது அன்பின் செயல்கள் எப்படி வெளிப்படுகின்றன என்பதை வைத்துத் தான் நமது வாழ்க்கை அளவிடப்படுகிறது. 

சக மனித கரிசனையையும், மனித நேயத்தையும் இயேசு தனது அத்தனை போதனைகளிலும் முன்னிறுத்தினார். நாம் வாழும் சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய தார்மீகக் கடமையை அவரது போதனைகள் அடிநாதமாய்க் கொண்டிருக்கின்றன. சக மனிதன் வாழ்வதற்கான ஒரு நல்ல சூழலை உருவாக்கிக் கொடுப்பது நம் கடமை. 

சக மனிதனின் மேம்பாட்டுக்கானவற்றைச் செய்வது நம் கடமை. சக மனிதனை நம்மைப் போல நேசிப்பது நம் கடமை ! அதற்கு நிலத்தை நேசிப்பது மிக முக்கியம் ! வளத்தை மேம்படுத்துவது மிக மிக அவசியம். 

*

சேவியர்

Posted in Articles, Desopakari

மருத்துவமும், கிறிஸ்தவமும்

*

கிறிஸ்தவர்கள் மருத்துவமனை பக்கமே செல்லக் கூடாது ! அது பாவம் ! என்ன நோயாய் இருந்தாலும் ஆண்டவரே சரி பண்ணுவார் ! என்று ஆணித்தரமாய் நம்பக்கூடிய ஒரு கூட்டத்தினர் கிறிஸ்தவத்தில் உண்டு. அவர்களின் பேச்சை நம்பி அவசர அவசரமாய் ஆயுளை முடித்துக் கொண்டவர்களும் ஏராளம் உண்டு. 

கிறிஸ்தவர்கள் மருத்துவம் பாக்கக் கூடாது என்று சொல்பவர்கள் இரண்டு பேரை அவமானப்படுத்துகிறார்கள். 

ஒன்று, உலகெங்கும் சென்று மருத்துவப் பணி செய்து, நற்செய்தியை அறிவித்த ஆயிரக்கணக்கான இறை ஊழியர்கள். இவர்கள் காடுகள், மலைகள் என சுற்றித் திரிந்து, கொள்ளை நோய்களை நீக்கவும், தொழுநோயாளிகளை பராமரிக்கவும், அடிப்படை சுகாதார வசதிகளை உருவாக்கவும் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் அர்ப்பணித்தவர்கள். அதற்காகவே தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தவர்கள்.

இரண்டாவது, இறைமகன் இயேசு. அவர் தான், ‘மருத்துவர் நோயுற்றவருக்குத் தேவை’ என வெளிப்படையாய் அறிவித்தவர். கிறிஸ்துவைப் பின்பற்றும் மக்கள் கிறிஸ்துவின் போதனைகளையும் பின்பற்ற வேண்டும் என்பது அடிப்படை சித்தாந்தம். மருத்துவத்தை விலக்குபவர்கள் கிறிஸ்துவை விலக்கிய மறையைப் பின்பற்றுபவர்கள். 

மருத்துவத் துறையில் இருப்பவர்கள் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். ஆனால் கிறிஸ்தவர்கள் மருத்துவத் துறையில் இருக்கும் போது கிறிஸ்துவின் மதிப்பீடுகளைத் தூக்கிச் சுமப்பவர்களாக இருக்க வேண்டும். எந்தப் பணி செய்தாலும் அதை இறை பணியாகவே செய்ய வேண்டும் என அறைகூவல் விடுத்த பவுலின் வார்த்தைகளை மனதில் கொள்ள வேண்டும்.

மருத்துவம் இன்றைக்கு வியாபாரமாகிவிட்டது. சவப்பெட்டி செய்பவர் எப்போது பிணம் விழும் என பார்த்துக் கொண்டிருப்பது போல பல மருத்துவர்கள் எப்போது ஒரு நோயாளி வருவார், அவரை அச்சுறுத்தியே லாபம் சம்பாதிக்கலாம் என நினைப்பது உண்டு. ‘எவ்ளோ செலவு செஞ்சு இந்த இடத்துக்கு வந்திருக்கேன், கடனை அடைக்க வேண்டாமா ? நான் சம்பாதிக்க வேண்டாமா ?’ என்றெல்லாம் வெளிப்படையாகவே பேசுகின்ற மருத்துவர்களையும் நாம் தவறாமல் சந்திக்கிறோம். 

உலகம் எப்படிச் சென்றாலும் சரி, மருத்துவம் என்பது குருத்துவம் போல மிக முக்கியமான பணி என்பதை நாம் மனதில் நிறுத்த வேண்டும். 

ஒன்று ஒருவரை நிலைவாழ்வுக்குள் அழைத்துச் செல்கிறது என்றால், இன்னொன்று ஒருவரை சுக வாழ்வுக்குள் அழைத்து வருகிறது. இரண்டுமே மரணக் கட்டுகளிலிருந்து நம்மை விடுவிக்கும் பணிகளே. இரண்டையும் புனிதமாய் நினைத்துச் செய்ய வேண்டும். 

‘அவரு கிறிஸ்டியன் டாக்டர், நியாயமா இருப்பாரு’ என்று சொல்வதே இறைவனை மகிமைப்படுத்தும் நற்செய்திப் பணியாகும். இதைத் தான் இயேசு, ‘உங்கள் செயல்களின் மூலமாக பிதா மகிமைப்படவேண்டும் ‘ என்றார். கிறிஸ்தவப் பெயர்களிலோ, கிறிஸ்தவ அடையாள அட்டையிலோ, கிறிஸ்தவப் படங்களை தாங்குவதிலோ அல்ல இயேசு மகிமைப்படுவது ! இயேசுவை வெளிப்படுத்தும் செயல்களில் தான் இயேசு மகிமைப்படுகிறார். 

மருத்துவப் பணி இன்றைக்கு தன் மகத்துவம் இழந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் நாம் என்ன செய்யவேண்டும் ? எதை நினைவில் கொள்ள வேண்டும்.

  1. போதனைகளின் பாதையில் பயணித்தல்

மருத்துவர்களுக்கு எதிராக நிற்கக் கூடிய மிகப்பெரிய சவால், இறைவனின் போதனைகளா ? இல்லை நோயாளிகளின் விருப்பமா எனும் கேள்வி தான். உதாரணமாக உயிர்கள் இறைவனிடமிருந்து வருகின்றன என்பது நமது கிறிஸ்தவப் போதனை. உயிர்களைக் கொல்வது பாவம் என்பது நமது நம்பிக்கை.  ஆனாலும் உலகமெங்கும் கருக்கலைப்புகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அவற்றைச் செய்யும் கிறிஸ்தவ மருத்துவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள் ! கடவுளின் கட்டளையா ? மனிதனின் விருப்பமா ? எது நம் தேர்வு ?

ஒருவர் முழுக்க முழுக்க படுக்கையில் கிடக்கிறார். வலியோடு இருக்கிறார். அவருக்கு ஒரு நிம்மதியான மரணம் மட்டுமே தேவையாய் இருக்கிறது ! ஒரு கருணைக் கொலையே அவருக்குத் தேவையாகிறது. அவரைச் சார்ந்தவர்களும் அவருக்கு ஒரு நிம்மதியான மரணம் வேண்டுமென நினைக்கிறார்கள். எனில் எது நியாயம் ? கடவுளின் கட்டளையா ? மனிதனின் விருப்பமா ?

  1. மூடநம்பிக்கைகளை புறந்தள்ளுதல்

மருத்துவம் தேவையில்லை என்பவர்கள் இறைவனைப் பற்றிய அறிவும், விவிலியத்தைப் பற்றிய அறிவும் இல்லாதவர்கள். மோசே கொடுத்த கட்டளைகளில் எத்தனை கட்டளைகள் மருத்துவம் சார்ந்து இருக்கின்றன என்பதைப் பற்றி ஒரு நூலே எழுதலாம். உண்ணக்கூடாது என கடவுளால் விலக்கப்பட்ட விலங்குகள், மருத்துவ ரீதியாக உடலுக்கு ஆபத்தானவை என்பதை சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு தான் மருத்துவமே புரிந்து கொண்டது. 

மருந்து எடுத்துக் கொள்வது மூடத்தனமல்ல, மருத்து எடுத்துக் கொள்ளாமல் இருப்பதே மூடத்தனம். எந்த மருந்தை நாம் எடுத்துக் கொண்டாலும், சுகமளிப்பவர் இயேசுவே என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் நாம் எடுக்கின்ற மருந்துகளின் வழியாகவே நமக்கு நலமளிக்கிறார். மண்ணையே மருந்தாய்ப் பயன்படுத்தியவர் இயேசு. மருத்துவர் லூக்காவைக் கொண்டு நற்செய்தியையும், வரலாற்றையும் எழுத வைத்தவர் இறைவன். எனவே ஆன்மிகத்தில் மூடநம்பிக்கைகளைப் புறந்தள்ளுவோம்.

  1. புதிய மருத்துவக் கட்டமைப்புகள் உருவாக்குதல்.

வரலாறுகளைப் புரட்டிப் புரட்டியே நிறைவடையும் மனநிலை நமக்கு உண்டு. அதனால் தான் மெடிக்கல் மிஷனரிகளின் வரலாறுகளைப் பேசிப் பேசி நாம் புளகாங்கிதம் அடைந்து விடுகிறோம். அந்த ஹாஸ்பிடலோட வரலாறு தெரியுமா ? இந்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கியது யார் தெரியுமா ? இந்தியால எத்தனை கிறிஸ்தவ மிஷனரி ஹாஸ்பிடல்ஸ் இருக்கிறது தெரியுமா ? என்றெல்லாம் பட்டியலிட்டு நாம் ஆனந்தமடைகிறோம். 

இரண்டு கேள்விகளை நாம் நமக்குள் எழுப்ப வேண்டும். ஒன்று, கிறிஸ்தவ மருத்துவமனைகள், நிறுவனங்கள் கிறிஸ்துவைப் பிரதிபலிக்கிறதா ? அல்லது உலக மருத்துவமனைகளைப் போல இயங்குகின்றதா ?

இரண்டு, கடந்த பத்து ஆண்டுகளில் நாம் உருவாக்கிய மருத்துவக் கட்டமைப்புகள் எத்தனை. ஒன்றுமில்லாத காலத்தில் தன் சொத்துகளை விற்று மருத்துவமனைகளை உருவாக்கினார்கள் மிஷனரிகள். இன்று எல்லாம் பெற்ற நாம் உருவாக்கியது என்ன ?

4 நமது செயல்களை சரிபார்த்தல்.

மருத்துவர்கள் அன்பு நிறைந்தவர்களுக்காகவும், சமாதானமும் பொறுமையும் நிறைந்தவர்களாகவும், கனிவு உடையவர்களாகவும், உண்மையுள்ளவர்களாகவும், ஒழுக்கம் உடையவர்களாகவும் ஒவ்வொரு மனிதரிலும் இறைவனைக் காண்பவராகவும் இருக்க வேண்டும். நோயாளிகள் நலமடைய மருந்தைப் போலவே அவர்களுடைய தன்னம்பிக்கையும், பாசிடிவ் சிந்தனையும் முக்கியம் என்கிறது உளவியல். அப்படிப்பட்ட மனநிலையை உருவாக்க மருத்துவர்கள் பரிவு உடையவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.

இயேசு தான் சந்தித்த நோயாளிகளிடம் முதலில் வெளிப்படுத்தியது கனிவைத் தான். மனதுருக்கம் இல்லாமல் எந்த புதுமையையும் இயேசு செய்யவில்லை. மருத்துவர்கள் தங்களுடைய அத்தனை முதன்மைகளையும் விட, நோயாளிகளின் நலனை முன்னிறுத்தி செயலாற்ற வேண்டும். இயேசு பிறருக்காக வாழ்ந்தது போல, மருத்துவப் பணியாளர்களும் அப்படியே செய்ய வேண்டியது அவசியம். 

  1. சரியான வழிகாட்டுதல்.

மருத்துவர்கள் சமூகத்திற்கு ஏராளம் பணியாற்ற முடியும். குறிப்பாக குழப்பத்தில் தவிக்கும் மக்களுக்கு சிறப்பான வழிகாட்டுதல் நல்க முடியும். யார் சொல்றது உண்மை என்பதே தெரியாமல் குழம்புகின்ற சூழலே இன்றைக்கு எல்லா இடங்களிலும் இருக்கிறது. சுயநலமா பேசறாங்களா ? உண்மையான அக்கறையோட பேசறாங்களா என்பதே தெரியாததால் தான் செகண்ட் ஒப்பீனியன், தேர்ட் ஒப்பீனியன் என உலகம் ஓடிக் கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு இணைய உலகம் மக்களை குழப்போ குழப்பென குழப்பிக் கொண்டிருக்கிறது.

நல்ல மருத்துவ வழிகாட்டல், நல்ல மருத்துவ ஆலோசனைகள், குறைந்த செலவிலான மருத்துவம் போன்றவற்றின் மூலமாக உண்மையிலேயே மிகப்பெரிய இறைப் பணியை கிறிஸ்தவ மருத்துவர்கள் ஆற்ற முடியும். மருத்துவம் என்பது ஒரு மகத்தான பணி, அதை நற்செய்திப் பணியாய் மாற்றுவதும் – வாய்ப்பை நழுவ விடுவதும் நம்கையில் தான் இருக்கிறது

*

சேவியர்

Posted in Desopakari

அன்றையமிஷனரிகளும்

இன்றைய தேவையும் 

உலகெங்கும் சென்று எல்லா இனத்தாருக்கும் நற்செய்தியை அறிவியுங்கள். எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள். 

என இறைமகன் இயேசு சீடர்களுக்கு இட்ட கட்டளையே  கிறிஸ்தவ மறை பரப்புப் பணியாளர்கள் உலகெங்கும் பயணித்து இறைமகன் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க மூல காரணம். ஒருவேளை இயேசு அந்த ஒரு கட்டளையை மட்டும் கொடுக்காமல் இருந்திருந்தால் கிறிஸ்தவம் எருசலேம் எல்லைகளுக்குள் அடங்கிப் போயிருக்க வாய்ப்பு உண்டு.

இயேசுவின் கட்டளையை ஏற்று மறை பரப்பு செய்ய வந்தவர்களின் பட்டியலில்,  இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த இயேசுவின் நேரடிச் சீடரான தோமா முதல், சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட ஸ்டெயின்ஸ் குடும்பம் வரை நூற்றுக்கணக்கில் உண்டு. 

கத்தோலிக்கம், இயேசு சபை, புராட்டஸ்டண்ட் என எல்லா பிரிவினரும் நற்செய்தியைச் சுமந்து வந்திருக்கிறார்கள். இதில் ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் குழுவைச் சார்ந்தவர்களை மட்டுமே தூக்கிப் பிடித்து விளம்பரம் செய்துகொண்டிருக்கும் துரதிர்ஷ்டமும் நமக்கு நேர்ந்திருக்கிறது. சீகன் பால்கைப் பேசுபவர்கள் பிரான்சிஸ் சேவியரையும், ராபர்ட் நொபிலியையும் பேசுவதில்லை என்பது தானே கள நிலவரம் !.   

இயேசுவின் போதனையின் மையம் மனித நேயமே ! இறைமகன் இயேசுவின் வாழ்க்கையும், போதனைகளும் எல்லா இடங்களிலும் அதைத் தான் வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றன. இயேசுவின் சீடர்கள் என்பதைக் கனிகளால் காட்ட வேண்டும் என்பதே இறைமகன் இயேசுவின் விருப்பம். அதனால் தான் ஆதிகால கிறிஸ்தவர்கள் மறைபரப்புப் பணிக்காகச் செல்லும்போது தங்களையே முழுமையாய் அர்ப்பணித்தார்கள். மக்களின் வாழ்க்கையோடு தங்களை இணைத்துக் கொண்டார்கள். 

வெறும் வாய் செய்திகளோடோ, துண்டுப் பிரசுரங்களோடோ இறைமகன் இயேசுவை அறிவிப்பது அறிவீனம் என்பதைப் புரிந்தவர்கள் மக்களின் தேவைகளைச் சந்தித்தார்கள். யார் அயலான் கதையில் வரும் சமாரியனாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.  

அவர்கள் பல்வேறு நிலங்களில் நடப்பட்டார்கள், நிலத்தின் உரத்துக்கேற்ப வளர்ந்தார்கள். நிலம் நிராகரித்தபோது மகிழ்ச்சியுடன் வீழ்ந்தார்கள். ஒருவருடைய வாழ்க்கையின் தூய்மை பலரை மனம் திரும்ப வைத்தது. 

அதே போல சமூக வெளிகளில் அடக்குமுறைகளைச் சந்தித்தவர்களும், புறக்கணிப்பின் இருளில் இருந்தவர்களும் அன்பையும் அரவணைப்பையும் கண்டபோது நிமிர்ந்தார்கள். வாழ்வில் தங்களுக்கும் வெளிச்சம் கிடைக்கும் என்பது அவர்களுக்கு மிகப்பெரிய ஆனந்தமாய் இருந்தது. மிஷனரிகள் சமூக அவலங்களைத் துடைத்தெறிய முழு மனதுடன் செயல்பட்டார்கள். அதுவே அவர்களின் உயிருக்கு மாபெரும் அச்சுறுத்தல் என்பதை அறிந்தும் அவர்கள் பின்வாங்கவில்லை. 
 
நாம் அடிக்கடி மிஷனரிகளின் கதைகளைப் படிப்பதும், அவர்களுடைய வாழ்க்கையைச் சிலாகிப்பதுமாய் நமது பயணத்தைத் தொடர்கிறோம். ஆனால் அவர்கள் அன்று இட்ட விதை இன்று கனிகொடுக்கிறதா என்பதைக் கவனிக்கிறோமா ? அவர்களுடைய நிலத்தை நாம் பராமரிக்கிறோமா ? அவர்கள் கட்டிய அஸ்திவாரத்தில் நாம் மதிப்பீட்டு மாளிகைகளைக் கட்டுகிறோமா ?

ஒரு நிமிடம் நிதானித்து, நமது மிஷனரிகள் நமது நிலத்தில் விட்டுச் சென்ற சுவடுகள் என்ன, அடையாளங்கள் என்ன ? அதை நாம் இன்று வளர்த்தெடுக்கிறோமா இல்லை பறிகொடுக்கிறோமா என்பதைச் சிந்திப்பது பயனளிக்கும்.

1. கல்விப்பணி !

இந்தியாவில் படிக்கின்ற பள்ளி மாணவர்களில் 15 விழுக்காடு பேர் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் தான் படிக்கிறார்கள். கல்லூரிகளை எடுத்துக் கொண்டால் 10 விழுக்காடு மாணவர்கள் கிறிஸ்தவக் கல்லூரிகளில் தான் படிக்கிறார்கள். இந்தியாவின் தலை சிறந்த கல்வி நிலையங்களின் பட்டியலை எடுத்தால் கிறிஸ்தவ நிறுவனங்கள் டாப் 10 பட்டியலில் பல  இடங்களைத் தவறாமல் பிடிக்கும் !

ஒரு காலத்தில் கல்வி என்பதே இல்லாத பிரதேசங்களில் கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் தான் கல்வியை அறிமுகம் செய்தன. கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கு கிறிஸ்தவ மிஷனரிகள் தான் அறிவொளியைச் சுமந்து சென்றன. அதன் பயன் தான் இந்தியாவில் இன்று ஏற்பட்டிருக்கின்ற சமூக மாற்றம். !

இன்றைக்கு கிறிஸ்தவ கல்வி நிலையங்களில் நிலை என்ன ? புதிதாக கல்வி நிலையங்கள் எழுகின்றனவா ? அவை மிஷனரி மனப்பான்மையோடு நிமிர்கின்றனவா ? அங்கே கிறிஸ்தவ மதிப்பீடுகள் போதிக்கப்படுகின்றனவா ? மிகப்பெரிய கேள்விக்குறி அல்லவா ?

2. சாதீய பாகுபாடுகள் !

கிறிஸ்தவம் நுழைந்து வந்த இன்னொரு முக்கியமான அம்சம் சமத்துவம். குறிப்பாக சாதீய அடிப்படையில் பிரிந்து கிடக்கும் மக்களிடையே பணியாற்றியது கிறிஸ்தவம். யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை, இறைவனால் படைக்கப்பட்ட அனைவருமே சமமானவர்கள். என்பதே அந்த சமத்துவப் பணியின் சாராம்சம். 

சாதீயத்தினால் வெகு ஆழமாகப் பாதிக்கப்பட்டிருந்த, உரிமை மறுக்கப்பட்டிருந்த மக்களை கிறிஸ்தவம் அரவணைத்தது. சக மனிதன் மீதான தீண்டாமை கோலோச்சிய காலகட்டத்தில் சமாரியனை அரவணைத்த இயேசுவின் அன்பும், யூதரென்றும் கிரேக்கரென்றும் இல்லை என்ற போதனையும் சமூக மாற்றத்துக்கு வித்திட்டன. 

இன்றைய திருச்சபைகளின் நிலை என்ன ? ஒவ்வொரு தேர்தலுக்கும் சாதீய அடிப்படையிலான கமிட்டிகள் ! ஒவ்வொரு திருச்சபையிலும் சாதீய அடிப்படையிலான பாஸ்டர்கள். சில இடங்களில் தனித்தனி ஆராதனை, தனித்தனி கல்லறை ! என்ன நடக்கிறது கிறிஸ்தவத்தில் ? இத்தகைய பாகுபாடுகளைச் சுமந்து திரிகின்ற கிறிஸ்தவம் தான் இயேசு போதித்ததா ? 

3. ஆண் பெண் சமநிலை கிறிஸ்தவம் நமது. மண்ணில் ஆற்றிய மிகப்பெரிய பணிகளில் ஒன்று ஒடுக்கப்பட்டும், அடுப்படியிலேயே முடக்கப்பட்டும் கிடந்த பெண்களை சமூக வீதியில் கொண்டு வந்தது தான். பெண்களுக்கான கல்வி, பெண்களுக்கான சமூக மரியாதை, பெண்களுக்கான அங்கீகாரம் போன்றவற்றை கொண்டு வந்ததில் கிறிஸ்தவ மிஷனரிகளின் பணிகள் அளவிட முடியாதது. நமது ஊரிலேயே தோள்சீலை போராட்டம் ஆதிக்க மனநிலைக்கு எதிரான மாபெரும் போராட்டம். நமக்கு அடுத்திருக்கும் கேரளாவில் இருந்த சங்கர ஸ்மிருதி போன்ற சட்டங்கள் புலையர், நாயர் போன்ற இனப் பெண்களின் மீது திணிக்கப்பட்ட வன்முறைகள். அவற்றுக்கு எதிரான சமரசமற்ற போரில் கிறிஸ்தவத்தின் பங்கு  கணிசமானது. பெரும்பாலும் பணியாற்ற வருகின்ற மறை பணியாளரின் மனைவியே பெண்களுக்கான வழிகாட்டியாய் இருப்பார்.  இன்றைய திருச்சபைகளின் நிலை என்ன ?  பெண்கள் தங்களுக்கான இருப்பை திருச்சபை அளவில் உறுதி செய்து விட்டார்களா ? இயேசு பெண்களை நேசித்தார், அவர்களை பாகுபாடின்றி முதன்மைப் படுத்தினார். ஆனால் நமது திருச்சபைகளிலும், குடும்பங்களிலும் பெண்களின் மரியாதை எப்படி இருக்கிறது. அன்றைய மிஷனரிகள் நட்டுச் சென்ற நல்ல விதைகள் இன்றைய திருச்சபைக் களத்தில் விளைகிறதா ? சமூகத்தில் பெண்குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் திருச்சபை வீரமாய் போரிடுகிறதா ?
4.  மருத்துவப் பணிஅன்றைய மிஷனரிகளின் மிகப்பெரிய பங்களிப்பும், மிகப்பெரிய சவாலும் மருத்துவப் பணியாகவே இருந்தது. அந்தக் காலகட்டத்தில் சரியான மருத்துவக் கட்டமைப்பு இல்லாத நமது நாட்டில் கொள்ளை நோய்கள் வந்தால் மக்கள் கொத்துக் கொத்தாய் செத்துப் போவது வாடிக்கை. தெய்வ குற்றம் என்றோ இயற்கையின் குற்றம் என்றோ பெயரிட்டு அழைத்து வந்தார்கள்.. அதிலும் மலைவாழ்ப் பகுதிகளில் சாதாரண நோய் வந்தாலே உயிர் பிழைக்க முடியாது எனும் சூழலில், கொடிய நோய்கள் வந்தால் என்ன செய்ய முடியும். காலரா போன்ற நோய்கள் அந்த கால கட்டத்தில் வாரிச் சுருட்டிக் கொண்டு போன உயிர்களின் கணக்கு எக்கச்சக்கம். அத்தகைய சூழலில் பணியாற்ற வந்த மிஷனரிகள் தங்களுடைய வாழ்க்கைத் துணையை, குழந்தைகளை, உடன் பணியாளரை தியாகம் செய்தார்கள். பல நேரங்களில் அவர்களும் பலியானார்கள். ஒதுங்கியிருந்து பேசிக்கொண்டிருக்கவில்லை. அன்னை தெரசாவின் பணியைப் போல பணி செய்த ஆயிரக்கணக்கான மிஷனரிகள் வரலாற்றில் உண்டு. இன்று மருத்துவத் தேவைகள் எப்படி சந்திக்கப்படுகின்றன. கிறிஸ்தவ மருத்துவ நிறுவனங்கள் எப்படிப் பணியாற்றுகின்றன. கிறிஸ்துவை வெளிப்படுத்தும் நிறுவனங்களாக இருக்கின்றனவா ? ஐடா ஸ்கட்டரின் மனதுருக்கம் மருத்துவத் துறையில் இருக்கிறதா ? இல்லை இதுக்கு மத்தவங்க ஹாஸ்பிடலே பெட்டர் என்று சொல்லும் நிலையில் இருக்கின்றனவா ? மறுஆய்வு அவசியமல்லவா ?5 இலக்கியப் பணிகிறிஸ்தவம் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய பணிகளைப் பற்றி நாம் நன்கறிவோம். தமிழின் பெருமையை உலகறியச் செய்ததில் கிறிஸ்தவ மிஷனரிகளின் பங்கு அளப்பரியது. தமிழுக்கான ஒப்பிலக்கணத்தை உருவாக்கியதானாலும் சரி, அச்சுக் கூடம் உருவாக்கியதானாலும் சரி, இலக்கியத்தை பல இடங்களுக்குக் கொண்டு சென்றதானாலும் சரி கிறிஸ்தவ மிஷனரிகள் ஆற்றிய பணி வரலாற்றிலிருந்து அழிந்து விடாது !அன்றைய மக்கள் அறியாத மொழியைக் கற்றுக் கொண்டு அதில் வல்லமை பெற்று இலக்கியப் பணி செய்தார்கள்.இன்றைக்கு நம்முடைய இலக்கியப் பங்களீப்பு எப்படி இருக்கிறது. இயேசுவை எத்தகைய இலக்கியப் படைப்புகள் மூலம் சுமந்து செல்கிறோம் நமது மிஷனரிகள் வரலாற்றில் மட்டும் இடம்பெறாமல் வாழ்விலும் இடம் பெற வேண்டும் அவர்கள் விட்டுச் சென்ற பணியானது, அவர்கள் இட்டுச் சென்ற அடித்தளத்தின் மேல் கட்டியெழுப்பப்பட வேண்டும். அத்தகைய உறுதியை மனதில் எடுப்போம், அன்றைய மிஷனரிகளின் நீட்சியாய் நாம் நிலைப்போம்.*சேவியர்
Posted in Desopakari

அருட்பணியில் கிறிஸ்துவின் மாதிரி

அருட்பணியில் கிறிஸ்துவின் மாதிரி

*

ஆதித் திருச்சபைக் காலம் தொடங்கி, இன்று வரை அருட்பணியாளர்களின் பங்களிப்பே கிறிஸ்தவத்தின் முதுகெலும்பாக இருக்கிறது. காலங்கள் தோறும் அருட்பணியாளர்களின் செயல்கள் விமர்சனத்துக்கு உள்ளானாலும், அனைத்தையும் தாண்டி இன்று கிறிஸ்தவம் ஆல் போல் தழைத்து நிற்பதற்கு பெரும்பங்காற்றிய அருட்பணியாளர்களை எப்போதும் நன்றியுடன் நினைவு கூரவேண்டியது நம் கடமையாகும் !

பணியாளர் என்பவர் தலைவருக்கு மேலானவர் அல்ல, என்றார் இறைமகன் இயேசு. அவரே தன்னை ஒரு பணியாளராய் மாற்றிக் கொண்டு செயல்பட்டார். விண்ணரசை மண்ணில் கட்டியெழுப்பும் பணியில் அவர் தன்னை அனைவரிலும் கடையனாக்கிக் கொண்டு செயல்பட்டார். தலைவனாய் இருக்க விரும்புகின்றவர் எல்லோருக்கும் பணியாளராய் இருக்க வேண்டும் எனும் மாபெரும் முரணை, வாழ்வியல் தத்துவமாய்த் தந்து சென்றவர் இயேசு மட்டுமே ! 

அருட்பணி என்று சொல்லும் போது இறைவனின் பணியைச் செய்யும் அனைவருமே ஒருவகையில் அருட் பணியாளர்கள் தான். இதில் முழுநேரப் பணியாளர், பகுதி நேரப் பணியாளர் என்று சொல்வது கூட ஒரு வகையில் தவறு தான். ஒரு பணியாளர் தன்னகத்தே பணிவையும், தான் பணியாளர் எனும் சிந்தனையையும் முழு நேரமும் கொண்டிருக்கிறார். எந்தப் பணியைச் செய்தாலும் அதை அருட்பணியாய் நினைத்தே செய்கிறார். எனவே வாழ்க்கையே ஒரு அருட்பணி என்பது தான் சிறப்பானதாகும். 

பவுல் சொல்வது போல, எதைச் செய்தாலும் இறைவனுடைய பெயரின் புகழ்ச்சிக்காகச் செய்வது அருட்பணியாய் மாறிப் போகிறது ! அப்போது தான் நமது வாழ்க்கை பிறருக்குப் பாடமாகிறது. நமது பாடம் பிறருக்கு வாழ்க்கையாகிறது. 

அருட் பணி சிறப்பாய் நடக்க தேவையானது ஒன்றே ஒன்று தான் ! அருட்பணியில் நாம் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்ற வேண்டும் !

நம்மிடையே பல விதமான அருட்பணிச் சிந்தனையாளர்கள் உண்டு. சிலரை  பவுலியன்ஸ் என அழைக்கலாம். அவர்கள் எப்போதுமே பவுல் பேசுகிறார் என்றே முன்னிலைப்படுத்திப் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களுடைய பேச்சில் எப்போதும் திருமுகங்களே முகம் காட்டும். இயேசுவின் போதனைகள் இரண்டாம் இடத்துக்கு இடம் பெயரும். 

சிலரை தாவீதியன்ஸ் என அழைக்கலாம். அவர்களுடைய பேச்சுகளில் பெரும்பாலும் சங்கீதங்களே சாரலடிக்கும். அது வாழ்த்தானாலும், சாபமானாலும், எச்சரிக்கையானாலும் தாவீதின் மொழிகளே தலைகாட்டும். தாவீதின் மகன் இயேசுவின் போதனைகள் பின் இருக்கைக்குத் தள்ளப்படும்.

இப்படி சாலமனியன்ஸ், மோசேயியன்ஸ், எசாயாயியன்ஸ் என பல பிரிவுகளை நாம் கிறிஸ்தவத்தில் பார்க்கலாம். உண்மையில் நாம் கிறிஸ்டியன்ஸ் - என அழைக்கப்பட வேண்டுமெனில் நமது வாழ்விலும், செயலிலும், பேச்சிலும் கிறிஸ்துவே வெளிப்பட வேண்டும். பவுலை விட, தாவீதை விட, மற்ற யாரையும் விட கிறிஸ்துவே நம்மை ஆக்கிரமித்து முன்னே நிற்கும் போது தான் நாம் உண்மையான கிறிஸ்தவர்கள் எனும் பெயருக்கு உரியவர்களாகிறோம். 

கிறிஸ்துவை மாதிரியாய்க் கொண்டு அருட்பணியாற்றுவது தான் மிகச் சிறந்த அருட்பணி என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.  

முன்மாதிரிகையான வாழ்க்கை !

இயேசுவின் வாழ்க்கைக்கும், வார்த்தைக்கும் இடையே இடைவெளி இருந்ததில்லை. மன்னிப்பைப் போதித்து விட்டு, தனியே போய் அவர் வெறுப்பை விதைத்ததில்லை. பொது வெளியில் அன்பைப் பரப்பி விட்டு, வீட்டுக்குள் விரோதத்தை வெளிக்காட்டியதில்லை. தொழுகைக் கூடங்களில் தாழ்மையைப் போதித்து விட்டு, வீட்டுக்குள் கர்வத்தைக் கொட்டியதில்லை !

அருட்பணியாளர்கள் தங்கள் வாழ்க்கையினால் போதிக்க வேண்டும். ‘போதகத்தைப் பார், போதகரைப் பார்க்காதே’ என்பது போலிகளின் வாதம் என்பதை இயேசுவே சொல்கிறார். நமது வாழ்க்கையும், நமது வார்த்தையும் எப்போதும் இறைவனை பிரதிபலிப்பதே மிகச் சரியான அருட்பணி வாழ்க்கை.

கற்றுக் கொள்ளும் வாழ்க்கை !

இயேசு கற்றுக் கொண்டார். சிறு வயதிலேயே அறிவிலும் ஞானத்திலும் படிப்படியாய் வளர்ந்தார். மறை நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். அதனால் தான் மறை நூல் அறிஞர்களுடன் அவரால் விவாதம் செய்ய முடிந்தது. அதனால் தான் அலகையுடன் பேசும்போது இறைவாக்கைக் காட்டி மடக்க முடிந்தது. 

அருட்பணியாளர்கள் இறைவார்த்தைகளை சிறப்பாகத் தெரிந்து கொள்வதும், அதை வாழ்வியலோடு சேர்த்து புரிந்து கொள்வதும் அவசியம். வெறுமனே வார்த்தைகளை வீசி விளையாடுவதற்கானதல்ல இறை வார்த்தைகள். தேவைக்குத் தக்கபடி கத்தரித்துப் பயன்படுத்துவதற்கானவையல்ல கர்த்தரின் வார்த்தைகள். அதை முழுமையான அர்த்தத்துடன், கால சூழலுக்கு ஏற்பவும் செயல்படுத்த அறிந்திருக்க வேண்டும். வெறும் வசனங்களை வீசி கைத்தட்டல் பெறுவது பரிசேயத்தனம் என்பதைப் புரிதல் வேண்டும். 

பாலியல் தூய்மை !

மிகப்பெரிய ஆற்றல் மிக்க அருட்பணியாளர்களும் வீழ்ந்து விடுகின்ற தளம் பாலியல் தூய்மையின்மையே ! அல்லது, சாத்தானின் சோதனைகள் மிக தீவிரமாய்த் தாக்கும் தளம் பாலியல் பலவீனமே ! நமக்கு முன்னால் ஏராளமான சாட்சிகள் இருக்கின்றன. இயேசு தனது வாழ்நாளில் பெண்மையை நேசித்தார், பெண்களோடு பழகினார், பெண்ணுக்கே உயிர்ப்பின் முதல் காட்சியைத் தந்தார். ஆனால் விவிலியத்தில் எந்த இடத்திலும் அவர் மீது சந்தேகத்தின் சிறு துரும்பு கூட விழுந்ததில்லை ! வெறுப்பாளர்கள் உமிழும் கதைகளெல்லாம் காலங்கள் தாண்டிய பின்பே கற்பனையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 

அருட்பணியாளர்கள் அத்தகைய ஒரு மாதிரியை தங்களுடைய வாழ்க்கையில் கொண்டிருந்தால் ஆன்மிக வெற்றி என்பது சாத்தியப்படும். தனது உடலையும், உள்ளத்தையும் தூய்மையாய்க் காத்துக் கொள்பவரை சமூகம் வியப்புடனும், மரியாதையுடனும் பார்க்கும். பாலியலில் தூய்மை காப்பவர் காலங்கள் கடந்தும் மக்களால் பின்பற்றப்படுவார். 

அன்பால் அருட்பணி !

இயேசுவின் வாழ்க்கையை ஒற்றை வார்த்தையில் அடக்க வேண்டுமெனில், “அன்பு” என்று சொல்லிவிடலாம். அன்பையே போதித்து, அன்பையே செயல்படுத்தி, அன்பாகவே வாழ்ந்தவர் இறைமகன் இயேசு. அவரது. மாதிரியைப் பின்பற்றுவோர் கொண்டிருக்க வேண்டிய அடிப்படை குணாதிசயம் அன்பு தான். மனித நேயமும், ஏழைகளின் மீதான இரக்கமும், புறக்கணிக்கப்பட்டவர் மீதான பரிவும், சாதிமதம் கடந்த மனதுருக்கமும் இயேசுவிடம் நிரம்பியிருந்தன. அத்தகைய ஒரு மனநிலையே அருட்பணியாளரின் முக்கியமான தேவை !

திருச்சபைக்குத் தக்கபடி தங்களை மாற்றிக் கொள்வதையோ, சூழலுக்குத் தக்கபடி போதனைகளை சுருக்கிக் கொள்வதையோ இறைவன் விரும்புவதில்லை. அன்பின் செயல்களைச் செய்து, கனிகளினால் இயேசுவை அறிவிக்க வேண்டும்.

 ஆர்வத்தால் அருட்பணி !

இயேசுவின் பணியானது முழுக்க முழுக்க அவரது ஆத்மார்த்தமான ஆர்வத்தின் வெளிப்பாடாகவே இருந்தது. எந்த விதத்திலும் கட்டாயத்துக்குக் கட்டுப்பட்டதாகவோ, விருப்பமற்ற ஒன்றைச் செய்து முடிப்பதாகவோ இருக்கவே இல்லை. அவர் ஒரு நபரிடம் பேசினாலும், ஆயிரம் பேரிடம் பேசினாலும் ஒரே ஆர்வத்துடனே பேசினார். நள்ளிரவில் பேசினாலும், அதிகாலையில் பேசினாலும் ஒரே தன்மையுடனே பேசினார். காரணம் அவரது சிந்தனை முழுவதும் அருட்பணியின் ஆர்வம் நிரம்பியிருந்தது.

உமது ஆலயத்தின் மீதான ஆர்வம் என்னை எரித்து விடும் - எனும் இறைவார்த்தை அவரது ஆலய ஆர்வத்தையும், ஆண்டவர் ஆர்வத்தையும் விளக்குகிறது. எப்போதும் அவர் செபித்தலிலும், தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுவதிலும் அதிக ஆர்வமாய் இருந்தார். ஊனுடலின் அழைப்பைப் புறந்தள்ளி, மேலுலகின் அழைப்புக்கு ஏற்ப பணி செய்தார். அத்தகைய மனநிலை அருட்பணியாளர்களிடம் இருக்க வேண்டும். 


மொத்தத்தில் இறைமகன் இயேசுவின் குணாதிசயங்கள் நமது ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படும் போது அருட்பணியானது, அருமையான பணியாய் மாறிவிடுகிறது. 


*

சேவியர்