Posted in Ecclesiastes

பிரசங்கி/சபை உரையாளர்

Image result for Ecclesiastes
தாவீதின் மகனும்
எருசலேமின் அரசனுமாகிய
சாலமோன்
சொல்கிறேன்,

மாயை,
எல்லாம் மாயை.
வீண் எல்லாமே வீண்.

தன் வாழ்நாளின்
இறுதி எல்லைவரை
மனிதன்
கடினமாய் உழைக்கிறான்,
அது
எதைத் தான் தருகிறது ?

ஒரு தலைமுறை
மண்ணுக்குள் அழியும் போது
இன்னொரு தலைமுறை
தழைக்கிறது.
உலகமோ மாறுவதில்லை.

கிழக்கில் உதிக்கும் கதிரவன்
மேற்கே மறைகிறான்,
பின் மீண்டும் ஓடி
கிழக்கில் மறு நாள்
தவறாமல் முளைக்கிறான்.

தெற்கு நோக்கி
வீசும் காற்று,
தன் இடத்துக்குத் திரும்ப
மீண்டும்
வடக்கு நோக்கி
வருகிறது.

எல்லா ஆறுகளும்
கால்வலிக்க ஓடி
கடலில் கலக்கின்றன.
ஆனால்,
கடலோ நிரம்புவதில்லை.

எவ்வளவு தான்
அழகுகளை
அள்ளி அள்ளிப் பார்த்தாலும்
விழிகள் சலிப்பதில்லை,

எத்தனை இசைகளைத் தான்
வருடி வருடி
கிடந்தாலும்
செவியின் வேட்கை தீர்வதில்லை.

இவை என்னை
சலிப்பின் சகதிக்குள்
தள்ளுகின்றன.

முன்பு இருந்ததே
பின்பும் இருக்கும்.
புதிய கிளைகளானாலும்
அவை
பழைய விதை வெடித்தே
படரும்.

புதியது என்று
எதுவுமே இல்லை.

நம்மைக் கடந்து போன
தலைமுறை பற்றிய
கவலைகள்
இப்போதைய சந்ததியினரிடம்
இருப்பதில்லை,

நாளைய தலைமுறை
நம்மைக்
கவனிக்கப் போவதுமில்லை.

நான்
அரசனாய் இருந்தேன்.
ஞானத்தின் வெளிச்சத்தில்
உலகின்
நிகழ்வுகளை நிறுத்துப் பார்த்தேன்.

எல்லாம்
வீணான முயற்சிகளே.
காற்றைப் பிடிக்க
முயல்வது போன்றவையே.

கோணலானதை
நேராக்குதல் இயலாது,
இல்லாததை என்ணி
கையில் வைக்க இயலாது.

என் வாழ் நாளின்
நான்
இதயங்களை குடைந்து
ஞானம் தேடினேன்,
வருடங்களை உடைத்து
விவேகம் தேடினேன்.

ஞானம் பெருகப் பெருக
கவலை வளர்ந்தது,
அறிவு பெருக பெருக,
துயரம் பெருகியது.

எல்லாம் மாயையே.

Ecclesiastes-311x236

சிரித்து களிப்பது
சிந்தை கெட்டவனின்
நிலை என்றேன்,

ஞானத்தை
பற்றிக் கொண்டே
மதுவின் சுவையை
அறிய ஆயத்தமானேன்,

ஆண்டுகள் செலவிட்டு
வீடுகளை கட்டினேன்,
தொய்வில்லா வளத்தில்
தோட்டங்கள் கட்டினேன்,
அடிமைகளையும், ஆடுகளையும்
ஏராளம் வாங்கினேன்.

விலைஉயர்ந்த அத்தனையும்
என்
மாளிகைக்குள் வரவைத்தேன்.

இசையில்
இளைப்பாறி,
மங்கையரின் மடியில் என்
மாதங்களை செலவிட்டேன்.

என் கண்கள்
கனவு கண்டவற்றை எல்லாம்
அவற்றிற்குக் காண்பித்தேன்.

மனம் விரும்பிய
அத்தனை மகிழ்ச்சியையும்,
பணம் கொடுத்து
பந்தியில் இருத்தினேன்.

ஓய்வாய் ஓர் நாள்
யோசித்தபோது,
எல்லாம் வீண் என்று கண்டேன்.

ஒரு அரசன்,
முந்தைய அரசனை விட
மேலானதாய் என்ன
செய்ய இயலும் ?

அந்த சிம்மாசன
இருக்கைகளில்,
காலம் காலமாய் இருந்தவர்கள்
விட்டுச் சென்ற
போராட்டங்களின் வாள் பிடித்து
வாழ்வதைத் தவிர,
ஒரு அரசன் புதிதாய் என்ன
படைக்க முடியும் ?

ஞானம்,
இருளிலிருந்து இருளை விலக்கும்,
மனிதனின்
மறைந்த பகுதிகளின்
களைகளை விரட்டும்.

மடமையின் முடிச்சுகள்
ஞானத்தின் விரல்களால்
அவிழ்க்கப் படும்
என்பதறிந்தேன்,

ஆனாலும்,
மூடனும் ஞானியும்
முடிவில் கண்ணயர்வது
கல்லறையில் தானே !!

அறிவிலிக்கும்,
ஞானிக்கும்
மண் தான் முடிவென்றால்,
அந்த
ஞானத்தின் படிக்கட்டுகள்
அறிவிலியின் கடைசிப் படியில்
முடிகிறதென்றால்,
தேடிய ஞானம் என்ன தரும் ?

என் கனவுகள் மீதே
நான் வெறிப்புக் கொண்டேன்,
என்
சந்ததிகளின் கண்களுக்காய்
அந்தக் கனவுகளை
என் படுக்கை அறையில்
துயில விட்டிருக்கிறேன்.

அவற்றை எடுத்து
என் கண்களில்
உடுத்திக் கொள்ளப் போவதில்லை.

ஞானத்தின் படகில் ஏறி
ஒருவன் திரட்டிய செல்வம்,
ஓய்வாய் இருக்கும்
ஒருவனுக்கு வழங்கப் படுகிறது.

அப்படியென்றால்,
அந்த உழைப்பாளிக்குக் கிடைத்த
பயன் தான் என்ன ?

எல்லாம் வீணே,
இருக்கும் காலத்தில்
உண்டு குடித்து
இதயங்களை மகிழ்வில்
இளைப்பாற விடுவதே சிறந்தது.

மற்றவை எல்லாம்
காற்றைத் துரத்தும்
தேவையற்ற தேடல்களே.

Ecclesiastes-311x236

எல்லாவற்றிற்கும்
ஒவ்வோர் காலம் உண்டு.

பிறப்புக்கு, இறப்புக்கு
நடவுக்கு, அறுவடைக்கு
கொலைக்கு, குணமாக்குதலுக்கு
இடித்தலுக்கு, கட்டுதலுக்கு
அழுகைக்கு, சிரிப்புக்கு,
துயரத்துக்கு, துள்ளலுக்கு
அரவணைக்க, விலக்க
தேட, இழக்க
கிழிக்க, தைக்க …..

இப்படி
ஒவ்வோர் நிகழ்வுக்கும்
காலம்
ஒவ்வோர் பக்கங்களை
ஒதுக்கியே வைத்திருக்கிறது.

கடவுளின் அங்குசம்
உலகை
நடத்துகிறது,
மனிதன் கவலைப்பட்டு
தனியாய் சாதிப்பதென்ன ?

உண்டு, குடித்து
இன்பம் துய்த்தலே
கடவுள் தந்த
நன்கொடை.

இப்போது நடப்பது
ஏற்கனவே எங்கோ நடந்ததே,

இன் நடக்கப் போவதும்
எங்கோ எப்போதோ நடந்ததே.

நடந்ததையே
மீண்டும் மீண்டும்
நடக்கச் செய்கிறார் கடவுள்.

எங்கும்,
நீதியின் ஆசனங்களின்
அநீதி
அத்துமீறி நுழைகிறது,

கடவுளின் தீர்ப்புக்கு
அநீதியின் ஆடுகள்
பலியாகாமல் தப்பாது.

மனிதன் விலங்கை விட
மகத்துவமானவன் அல்ல,
சாவு
எல்லோரையும் மண்ணுக்கு தான்
அனுப்புகிறது.

மனித உயிர் மூச்சு
விண்ணகமும்,
விலங்கின் உயிர் மூச்சு
பாதாளமும் செல்வதாய்
நிரூபிப்பவர் யாருமில்லையே.

நீ
செய்யும் வேலை,
உனக்காய் கர்த்தரால் தரப்பட்டது.
அதை
இன்பத்தோடு செய்து முடி.
Ecclesiastes-311x236

இதோ,
ஒடுக்கப்பட்ட மக்கள்
புரவிகளில் அரைபடும்
அல்லிப் பூக்களாய்
அழுகிறார்கள்.

அவர்களின் கண்ணீருக்காய்
ஆறுதல் கரங்கள்
எங்கும்
முளைக்கவில்லை.

செத்துப் போன சந்ததி
பாக்கியம் செய்திருக்கிறது,
இக்
கொடுமைகளின் கூர் வாள்
அவர்களை கிழிக்கவில்லையே.

பிறக்காத பரம்பரை
அதைவிட புண்ணியமானது,
அது
எந்தத் தீமையையும்
தின்று ஜீரணிக்கவில்லை.

தன்
போட்டி பொறாமையால்,
தன் தற்பெருமைக் கோபுரங்களை
தலைக்கு மேல் கட்ட
ஓயாமல் உழைக்கிறார்கள்
மக்கள்.

இது வீணர்களின்
வீணான செயலே.

பயனற்ற உழைப்பு
இருகை நிறைய
இருப்பதை விட,
உள்ளங்கை அளவு நிம்மதியே
உயர்ந்தது.

சிலர்,
தனியாய் வாழ்கிறார்கள்.

தனித் தீவுகளாய்
தனித்திருப்போர் வீழும் போது
எந்த
தோள்களும் அவர்களை
தாங்குவதில்லை.

தங்கள் செல்வம் எல்லாம்
அனுபவிக்கும் முன்
அழியும்.

இருவராய் இருப்பதே
சிறப்பானது,
தேவைகளின் தேர்கள்
இரு சக்கரம் இருந்தால்
இனிதே ஓடும்.

அறிவுரை கேளாத
முட்டாள் அரசனை விட
விவேகமுள்ள
இளைஞனே மேலானவன்.

வாழ்க்கை,
ஓர் வித்தியாசக் கலவை,
கைதிகள்
அரசனாவதும்,
அரசர்கள் வறியவராவதும்
வரலாறுகள் கண்டதுண்டு.

இங்கே யாரும்
எந்த ஆட்சியிலும்
நிறைவடையாமல்
வறுமை மனதுடனேயே
வாழ்கின்றனர்.

Ecclesiastes-311x236

ஆலயம் சென்றால்
விழிப்புடன் இரு,
மதி கேடனின் பலிகள்
மதிக்கப்படுவதில்லை,
தீவினையை உணராதவன்
தீண்டப்படுவதில்லை.

கடவுளிடம் பேசும்போது
கொஞ்சமாய் பேசு,
நிறைவேற்ற இயலா
நேர்ச்சைகளை விட,
நேர்ச்சை யிடாத
வேண்டுதல்களே சிறந்தவை.

பணத்தின் மீது
பிரியம் வைப்பவன்,
எப்போதேனும்
ஆவல் தீர்ந்து
அமைதியானதை
அறிந்திருக்கிறாயா நீ ?

அவர்களின் சொத்துக்களை
சுரண்டும் கூட்டம்
அதிகரிக்கும்,
நிம்மதியை செல்வர்கள்
எப்போதும் சேர்க்க இயல்வதில்லை.

உழைப்பவனின்
களஞ்சியங்களில் காற்று
உற்ற தோழனாய் உலா வரலாம்
ஆனால்
படுக்கையை விட்டு தூக்கம்
எழுந்து செல்வதில்லை !

பூமிக்கு
நிர்வாணியாய் வரும்
மனிதர்,
தன் ஆடம்பரத் திரைச் சீலைகளை
அலங்காரப் படுத்துவதில்
ஆயுளைக் கழித்து
பின்
வெறுங்கையோடு திரும்புவர்.

கவலையின்
விளையாட்டுத் தளத்தில்
அலைக்கழிக்கப்பட்டு,
எரிச்சல்களில் எறியப்பட்டு
துன்பத்தின் பந்தாடப்பட்டு
பிணியில் பணிந்து…

ஏன் இத்தனை கவலை,
இருப்பதை
உண்டு குடித்து
உல்லாசத்தின் ஊஞ்சலில்
உட்காரலாமே !!

மகிழும் மனிதர்
சாவைப் பற்றி சங்கடப்படுவதில்லை,
துயரத்தை வருத்தும்
அறிவீனர்களே,
வாழ்வை ஆரம்பிக்கும்
காலம் தெரியாமல் கலங்குவர்.

Ecclesiastes-311x236

ஒருவர்,
தன் மாளிகைகளின்
அத்தனை கோணிகளிலும்
செல்வத்தை திணிக்கின்றனர்,
அதை
அனுபவிக்கும் வரம் அவருக்கு
தரப்படுவதில்லை.

நூறு பிள்ளைகளும்,
ஆறு போல செல்வமும்
அமையப்பெற்று,
அனுபவிக்கும் வரம்
அனுமதிக்கப் படாதவனை விட,
கருவில் சிதைதல்
பெருமைக்குரியது.

இரண்டும்
இருளோடு வாழ்ந்து
ஒளியைத் தீண்டும் முன்
ஒழிவது தானே.

சிலரோ,
வயிறின் நீளத்துக்காகவே
உழைத்து,
அதுவும் கிடைக்காமல்
உடைந்து போகின்றனர்.

இல்லாத ஒன்றுக்கான
நில்லாத ஓடல்,
கடைசியில்
காற்றைப் பிடித்து கயிறாக்கும்
செல்லா முயற்சியாய்
வெல்லாமல் போகும்.

பேச்சு நீள நீள
பயன் குறையும்,
ஊசி நுனி தட்டையானால்
பயனென்ன,
பேச்சுக்களின் நீளம் குறைந்து
வார்த்தைகளின் ஆழம்
அதிகரித்தலே சிறந்தது.

மனிதனின் வாழ்வு,
நிழலைப் போன்றதே,
அது
இல்லாமையிலிருந்து தோன்றாது.
நிலைத்தும் நிற்காது,
சாவுக்குப் பின்
உலகம் சந்திப்பதென்ன ?
செத்தவனுக்கு தகவல் சொல்ல
புத்தியுள்ளவன் யாரோ ?

Ecclesiastes-311x236

நறுமணம் சிறிது நேரம்
நற்பெயரோ
சில காலமேனும் !

விருந்து வீட்டுக்கு
செல்வதை விட,
மரண வீட்டுக்குச் செல்,
அங்கே தான்
அகக் கண்கள் இமை விரிக்கும்.
சாவு நம்
முதுகைப் பற்றிக் கிடக்கும்
உண்மை புரியும்.

விருந்து வீடெல்லாம்,
நம்
சாவை மறைக்க விரிக்கும்
திரைச்சீலை போன்றதே,
ஆட்டம் துவங்கும் போது
அவிழ்க்கப் படும்.

ஞானி,
துக்க வீட்டைப் பற்றி
சிந்திக்கும் போது,
மூடனோ
சிற்றின்பக் கிளைகளில்
கூடுகட்டிக் குடியிருப்பான்.

மூடனின் புகழை விட
ஞானியின் கண்டிப்பே
உள்ளத்தை
உற்சாகப் படுத்த வேண்டும்.

வன்மத்தை விலக்கு,
கடந்த காலத்தின் சுவடுகள்
அழகானவை
என்று,
இறந்தகாலத்தின்
இரும்புப் பூட்டுகளில்
நிகழ்கால சிந்தனைகளை
சிறைப்படுத்தாதே.

எதிலும் வெறியின் வேகம் வேண்டாம்,
அது
ஞானம் தேடுதலானாலும்,
தீமை சேகரிப்பதானாலும்
வேண்டாம்.

குற்றத்தின் முற்றத்தைக்
கடக்காத
ஞானத்தின் ஜன்னல்கள் இல்லை.

வீரத்தின் போர்க்களத்தை
விட,
ஞானத்தின் பட்டறையில்
அதிக ஆயுதங்கள்.

அடுத்தவர் பற்றிய
மூன்றாமவர் விமர்சனங்களை
மூலையில் போடுங்கள்,
உங்களைப் பற்றி
யாரோ பேசக் கூடும்.

இதுவரை
யாரையும் இகழாமல்
நீ
இருந்திருக்க இயலாது.

நான்
அத்தனை ஆராய்ச்சிகளையும்
வேறு வேறாய் சீர்தூக்கினால்
ஞானம் என்னும் பானம்
ஊற்றெடுக்கும் என நினைத்தேன்.

இல்லை,
ஞானம்,
கடல் தீண்டும் வானம்.

அதை
அடைபவர் யாருமில்லை,
யார் அதிக தூரம்
நடந்திருக்கிறார் என்பதே
இங்கே
ஞானத்தின் அளவுகோல்.

சாவை விடக் கசப்பானது
பெண்,
அவள் கண்ணில் கண்ணியும்
வார்த்தைகளில் வலையும்
அரவணைப்பில்
பெருந்தீயும்
ஒளித்து வைத்திருப்பாள்.

ஒன்று மட்டும் சொல்வேன்,
மனிதனை கடவுள்
நேர்மையாளனாய் தான்
வருவித்தார்,
வாழ்க்கைச் சிக்கல்கள் எல்லாம்
மனிதனால் உருவாக்கப் பட்டவையே.

Ecclesiastes-311x236

உலகில் காண்பவற்றின் உட்பொருள்
ஞானமுள்ளவனின்
கண்களுக்கு மட்டுமே
காட்சியளிக்கும்.

ஒவ்வோர் செயலுக்கும்
காலம் உண்டு,
பணியும் காலத்தில்
பணிந்திருந்துப் பணிசெய்தலையே
பண்பட்ட மனம் செய்யும்.

வாழ்க்கையில் நடப்பதை
யாராலும்
அறுதியிட்டு
அறிவிக்க இயலாது.

சாவு,
லஞ்சம் கொடுத்தால்
தள்ளிப் போகாது.
சாவெனும் போர்
நாளை வா என்றால் கேளாது.

ஒருவன் மேல்
இன்னொருவன்
செய்யும் அதிகாரம்,
துன்பங்களை தந்து செல்லும்.

மாண்டபின் பொல்லாரையும்
உலகம்
போற்றிப் பேசும் !
பொல்லார் நிறைவதற்கு
தாமதமாகும் தண்டனைகளே
காரணம்.

கடவுளுக்கு அஞ்சுபவன்
தீமையின் கூடாரத்தில்
தீ காய்வதில்லை.

சிலவேளைகளில்
தீயோருக்கான தண்டனை
நல்லோர் தலையில்
சம்மணமிட்டு அமர்கிறது.
நல்லோரின் பயன்
தீயோரின் பைகளில்
குடியேறிக் கிடக்கிறது.

எல்லாம் வீணே,
நான்
ஞானத்தைத் தேடிய காலத்தில்
இதை அறியவில்லை.

அல்லும் பகலும் கண்விழித்தும்
கடவுளைக் கண்டவன்
யார் ?

தங்கள் கண்களுக்கு
ஆண்டவன் செயல் தெரியும் என
ஞானிகள் அறிவிக்கக் கூடும்
ஆனால்
அது அறிவிக்கப் படுவதில்லை.

Ecclesiastes-311x236

எல்லாம் விதிப்படியே
நடக்கும்.
பலி செலுத்துபவனும்,
பலிபீடம் மதிக்காதவனும்
ஆண்டவனின் திட்டத்துக்கு
தப்பித்தல் இயலாது.

தீமை தின்று தீமை தின்று
மனித மனங்கள்
தீமையை ஜீரணித்துக் கிடக்கின்றன
பின்
அவை தீமையில் மரணிக்கின்றன.

உயிரோடிருக்கும் வரையே
மனிதனுக்கு மதிப்பு,
செத்துப் போன சிங்கத்தை விட
உயிருள்ள
நாயே சிறந்தது.

இறந்தவன் மறக்கப் படுவான்.
அவர்கள்
இங்கே நடக்கும் எதிலும்
பங்கெடுப்பதில்லை.

நீ
இருக்கும் போது
இருப்பதை செலவழிக்க
வருந்தாதே.

நல்லாடை உடுத்து,
நறுமணத் தைலத்தில் நட.
மனைவியோடு இணைந்திரு,
உன்
உழைப்புக்கான பயனை
நீயே உனக்கு வழங்கு.

எப்போதும்,
திறமையானவன் கையில்
வெற்றிக் கோப்பைகள்
வீற்றிருப்பதில்லை.

வாய்ப்பு, வசதி இரண்டும்
வாய்க்கப் பெற்றால் மட்டுமே
கோப்பைகள்
கொடுக்கப்படும்.

ஒரு தவறு,
பல நன்மைகளை
தகர்க்கலாம்.
துன்பம் எப்போது
எந்த வாசலில் வருமென்று
யாருக்கும் தெரியாது.

பறையொலித்து வருவதில்லை
படுகுழிகள்,
கண்ணிகள் எப்போதும்
இருட்டான இடத்தில்
விழித்துக் கிடக்கும்,
பறக்கும் சிறகுகளை
பற்றிக் கொள்ளும் வலைகளாய்
அவை
எங்கேனும் ஒளிந்து கிடக்கும்.

மூடர்களின் முழக்கங்களை விட
ஞானியின்
சத்தமில்லா அர்த்தங்கள்
மிகுந்த பயன் தரும்.

போர்க்கருவிகளை விட
அறிவே
போருக்கும் ஊருக்கும் தேவை.

Ecclesiastes-311x236

செத்துப் போன ஈக்களின்
வாசம்,
கலத்தின் நறுமணத்தை
நொடியில் கெடுக்கும்.

சிறு
மதிகேடும் அப்படியே
ஞானத்தை சிதைக்கும்.

தக்கதை செய்தல்
ஞானியரின் பாணி,
தகாததில் தவழ்கல்
மூடரின் பாணி.

மூடன்,
தெருவில் சென்றாலே
மூடத்தனம் கூடச் செல்லும்,
பார்ப்போரெல்லாம் அதை
புரிதலும் அரிதல்ல.

மூடனிடம் கொடுக்கும்
தலைமைப் பதவி,
சுயகல்லறை கட்டுதல்
போன்றது.

குழி வெட்டுவோன்
அதில் தானே வீழ்வான்,
கன்னமிடுவோனுக்காய்
கட்டு விரியன் காத்திருக்கும்,
மரத்தை வெட்டுபவன்
கரத்திலேனும் காயம் கொள்வான்.

மழுங்கிய கோடரி
உழைப்பை இரட்டிப்பாக்கும்.
ஞானத்தின் கூர்மையே
வெற்றிக்கு வழியாகும்.

பாம்பை மயக்கும் முன்
அதன்
பல் பதிந்து விட்டால்
கற்ற வித்தை கைகொடுக்குமா ?

நாவடக்காத மூடனுக்கு
எதிராய்
அந்த நாவே சாட்சிசொல்லி
அவனை
தண்டனைத் தீர்ப்பில்
தள்ளிவிடும்.

சோம்பேறிகளின் கூரை
ஒழுகும்,
பழுது பார்க்கா உள்ளம்
இடிந்து வீழும்.

யாரையும் எப்போதும்
இகழாதே,
பறக்கும் பறவைகள் அதை
இறகுகளில் ஏந்தி
எங்கேனும்
இறக்கி வைக்கக் கூடும்.

Ecclesiastes-311x236

வாணிபம் செய்ய
துணிவு கொள்.

உன் பணத்தை
பல இடங்களில் பிரித்து வை
ஏதேனும் ஒன்றாகிலும்
எப்போதும் கைகொடுக்கும்.

வரும் இடரை
வகைப் படுத்தல் இயலாது.

கார்முகிலின் வருகை
மழைக்கான முன்னறிவிப்பு.
அழிவுக்கு
ஏது அறிவிப்பு.

மரம்,
வடக்கு நோக்கி விழுந்தாலும்
தெற்கு நோக்கி விழிந்தாலும்
விழுந்த
இடத்திலேயே தான்
முடங்கிக் கிடக்கும்.

வானிலையின் காதுகளை
சார்ந்திருப்போர்,
அறுவடை நடத்துவதில்லை.

காற்றின் போக்கும்
வயிற்றின் கருவும்,
தீர்மானமான முடிவுகளில்
இருப்பதில்லை.

வேறுபட்டக் காலங்களில்
விவசாயம் செய்,
ஏதேனும் ஒன்று
இல்லையேல் இரண்டும்.
எப்படியே
அறுவடை நிச்சயம்.

இளையோரா,
மகிழுங்கள்,
இருக்கும் காலத்தில்
சிறப்பாய் இருங்கள்,
உடலுக்கு வரும் ஊறு
உயிருக்கும் கேடு.

மனக் கவலையை
ஏன்
தினக் கவலையாய்
தின்னுகிறீர்கள்.

மகிழுங்கள்
அதுவே வாழ்வின் வழி.

Ecclesiastes-311x236

ஆண்டவனை நினைக்க
காலம் தாழ்த்தாதே,
துயர நாட்களின்
தூண்கள் உன்மேல்
சாயும் முன் அவனை நினை.

கதிரவன்,
நிலா, விண்மீன்கள்
இவை உன் கண்களுக்கு
மங்கலாய் தோன்றும் முன்
படைத்தவனை நினை,

தெருச் சந்தடிகளை
கதவுத் தாழ்ப்பாள்களால்
தடுத்து நிறுத்து,
சிட்டுக் குருவியின் கீச்சொலி
பட்டென்றுன்னை எழுப்ப,
இன்னிசைக் கருவிகள்
மகளிர்க்குள்
உறக்கத்தை இறக்கும் முன்
ஆண்டவனை நினை.

நடை தள்ளாடி,
இறுதிப் பாதையில்
தனியாய் போகும்
நிலை வரும் காலத்துக்கு முன்
அவனை நினை.

வெள்ளிக் கயிறறுந்து
பொன்விளக்கு விழும் முன்,
குளத்தருகில் உன் குடம்
உடைந்து விழும் முன்,
மண்ணில் உன் உடல்
உறங்கச் செல்லும் முன்
விழிப்பாய் அவனை நினை.

உன் உயிர்
கடவுளின் காலடிக்கு
தன் பயணம் துவங்கும் முன்
இவ்வுலகின்
இருள் கதவுகளை அடைத்து
இறைவனை நினை.

நூல்களின் எண்ணிக்கை
அறிவின் அளவுகோல்
அல்ல,
மிகுதியான படிப்பு
உடலுக்கு இளைப்பு.

கடவுளுக்கு அஞ்சி நட,
உலகியல் செயல்கள்
அனைத்துக்கும் அப்பாற்பட்டு
உன்னை
நல்வழியில் நிறுத்துவது
ஆண்டவனின் அருளே.

அவனை நினை.
அதுவே நிலை.
மற்றதெல்லாம் மாயையே.

0