ஆதித் திருச்சபையின் ஆரம்பம்
இயேசுவின் சிலுவை மரணத்துக்குப் பின் சீடர்கள் ரொம்பவே சோர்ந்து போனார்கள். இயேசுவின் மரணத்துக்கும், உயிர்ப்புக்கும் இடைப்பட்ட மூன்று நாட்கள் அவர்களுக்கு மாபெரும் சோதனைக்காலமாகவே இருந்தது. என்ன செய்வது ? எப்படி வெளியே தலை காட்டுவது ? காட்டினால் தலை இருக்குமா என்று ஏராளம் கேள்விகள் அவர்களுக்குள். இயேசுவோடு கூட நடந்தபோது நெஞ்சு நிமிர்த்தி நடந்தவர்கள் எல்லாரும் இயேசுவின் சிலுவை மரணத்திற்குப் பின் தலைக்கு முக்காடிட்டுக் கொண்டு அறைகளில் பதுங்கினார்கள்.
மூன்றாவது நாள். இயேசு உயிர்த்துவிட்டார். அந்த செய்தியைக் கூட அவர்களால் நம்ப முடியவில்லை. முதலில் மதலேன் மரியாளுக்குக் காட்சியளித்த இயேசு, அதன்பின் எம்மாவூஸ் சென்ற இரண்டு சீடர்களுக்குக் காட்சியளித்தார். ஆனாலும் பேதுருவும் அவருடன் இருந்த சில சீடர்களும் தங்கள் பழைய வேலையான மீன்பிடிக்கும் தொழிலுக்கே திரும்பினார்கள். கடந்த மூன்று ஆண்டுகளை ஒரு கனவு போல எண்ணி மறந்து விட்டு மீண்டும் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பவேண்டும், இனிமேல் யாருடனும் பகைத்துக் கொள்ளாமல் ஒதுங்கி வாழவேண்டும். இயேசு போன்ற ஒரு துணிச்சல் மிக்க, திறமை மிக்க, கடவுளின் வரம் பெற்ற ஒருவருக்கே இப்படி ஒரு மரணம் நேர்கிறது என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம் என்று அவர்கள் நினைத்தார்கள்.
ஒருநாள் அதிகாலை. இயேசு தன்னுடைய சீடர்களுக்கு ஒட்டு மொத்தமாய்க் காட்சி தருவதற்கு முன் நிகழ்ந்த நிகழ்ச்சி இது. பேதுருவும், அவருடன் சிலரும் மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் கடற்கரையில் இயேசு தோன்றினார். பேதுரு இரவெல்லாம் வலைகளை இழுத்தும் மீன் ஒன்றும் கிடைக்காமல் களைத்திருந்த அதிகாலை வேளை அது. ஒரு காலத்தில் இந்தப் படகில் அமர்ந்து இயேசு போதிக்க அவருக்குப் பின்னால் அமைதியாகவும், கர்வத்துடனும் விழா மேடையில் அமர்ந்திருக்கும் விருந்தாளி போல இருந்த பேதுரு இப்போது வலைகளை இழுத்து வாழ்க்கை நடத்தும் நிலைக்குத் திரும்பியிருக்கிறார்.
‘மீன்களைப் பிடித்தது போதும்.. வாருங்கள். உங்களை மனிதர்களைப் பிடிப்போராக்குவேன்’ என்று அழைத்துச் சென்ற இயேசு மனித மனங்களை எப்படி பிடிப்பது ? மனிதர்களுடைய வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் என்னென்ன ? அவர்கள் எதற்கெல்லாம் அஞ்சவேண்டும் எதையெல்லாம் துச்சமென எண்ணி விலக்க வேண்டும் என்றெல்லாம் போதித்தார். இப்போது பேதுரு.. மனிதர்களைப் பிடித்தது போதும், வயிறுக்கு உணவிட வேண்டும். மீன்களைப் பிடிப்போமென மீண்டு வந்திருக்கிறார்.
‘பேதுரு…’ இயேசு அழைத்தார் !
பேதுரு கரையை நோக்கித் திரும்பிப் பார்த்தார். ஏதோ ஒரு மனிதர் கரையில் நின்று கொண்டிருக்கிறார். அதிகாலையில் தன்னை அழைப்பது யார் என்று அவருக்குப் புரியவில்லை. எனவே பேதுரு பேசாமல் படகில் அமர்ந்தார்.
‘பேதுரு.. உன் படகின் வலது பக்கமாக வலையை வீசு’ இயேசு சொன்னது கடலின் இரைச்சலையும் மீறி பேதுருவின் காதுகளில் வந்து விழுந்தது.
பேதுருவுக்குள் ஒரு சின்னப் பொறி பறந்தது. இதே போன்ற ஒரு நிகழ்ச்சி இயேசு உயிருடன் இருந்தபோதும் நடந்ததை அவருடைய மனம் அசை போட்டது. இருந்தாலும் இப்போது பேசுவது இயேசு தான் என்று அவர் நினைக்கவில்லை. இருந்தாலும் தன் மீது கரிசனை கொண்டு யாரோ வலை வீசச் சொல்கிறார்களே என்று பேதுரு படகின் வலது பக்கமாக வலையை வீசினார்.
ஆச்சரியம் !!! இழுக்க முடியாத அளவுக்கு மீன்கள் வலையை நிறைத்தன. எங்கிருந்து வந்தன இத்தனை மீன்கள் ? பேதுரு திகைத்தார்.
கரையில் நிற்பது இயேசு தான் என்பது பேதுருவுக்கு சட்டென்று விளங்கியது. படகைக் கரையை நோக்கி விரட்டினார். கரையை நெருங்கும் முன்பாகவே படகை விட்டு குதித்து அவரை நோக்கி ஓடினார். தண்ணீர் அவருடைய கால்களில் பட்டு முகம் வரை தெறித்தது.
கரையை அடைந்த பேதுரு ஆனந்தத்தில் அமிழ்ந்தார். கரையில் இயேசு புன்முறுவலுடன் நின்றுகொண்டிருந்தார்.
பேதுருவின் ஆனந்தத்துக்கு அளவேயில்லை. உள்ளுக்குள் அவருடைய துயரங்கள் எல்லாம் சட்டென்று உருகி மறைந்தன. எந்த இயேசு தங்களை விட்டுப் பிரிந்தார் என்று நினைத்திருந்தாரோ அவர் இதோ தனக்கு முன்னால் நிற்கிறார். இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தவர், இப்போது தானே இறந்து உயிர்த்து வந்திருக்கிறார் என்பதை அவரால் நம்பமுடியவில்லை. பரவசத்தில் நின்றிருந்த பேதுருவை இயேசு அழைத்தார்.
‘பேதுருவே.. நீ என்னை நேசிக்கிறாயா ?’
‘ஆம் ஆண்டவரே…’ பேதுருவிடமிருந்து சட்டென்று பதில் வந்தது.
‘என் ஆடுகளை நீ தான் மேய்க்கவேண்டும்’ இயேசு சொன்னார். தான் இல்லாத போது தன்னுடைய பணிகளைத் தொடராமல், மீண்டும் உலக வாழ்க்கையின் தேடுதலுக்காக வலையுடன் தன் பிரிய சீடன் வந்து விட்டானே என்னும் கவலை இயேசுவின் குரலில் எதிரொலித்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டி எழுப்பிய மனிதர்கள் இப்போது கட்டுமரத்தோடு அலைகிறார்களே என்னும் ஆதங்கமும் அவருடைய குரலில் தெரிந்தது.
‘பேதுருவே… நீ என்னை அன்பு செய்கிறாய் தானே…’ இயேசு மீண்டும் கேட்டார்.
‘ஆம் ஆண்டவரே.. நாம் உம்மை உண்மையிலேயே அன்பு செய்கிறேன்’ பேதுரு சொன்னார்.
‘அப்படியானால் என்னுடைய ஆடுகளை நீ கண்காணி’ இயேசு சொன்னார். தன்னுடைய போதனைகளையும், இறையரசைப் பற்றிய விழிப்புணர்வையும் எல்லோருக்கும் அறிவிக்க வேண்டும் என்னும் இயேசுவின் தாகம் அவருடைய வார்த்தைகளில் ஒலித்தது. மக்களைத் திசை திருப்பி அவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் மதவாதிகளிடமிருந்து மக்களை நல்ல பாதையில் நடத்திச் செல்லவும், அவர்களுடைய வாழ்க்கையைக் கவனிக்கவும் ஒரு மேய்ப்பனாக பேதுரு இருக்கவேண்டும் என்று இயேசுவின் குரல் உணர்த்தியது.
‘பேதுருவே நீ என்னை நேசிக்கிறாயா ?’ இயேசு மூன்றாவது முறையாக பேதுருவிடம் கேட்டார்.
பேதுரு கண்கலங்கினார். இயேசு கைது செய்யப்பட்டபோது மூன்று முறை அவரைத் தெரியாது என்று மறுதலித்த நிகழ்வு அவருடைய மனதுக்குள் பாரமாக அமர்ந்தது. இப்போது இயேசு மீண்டும் மீண்டும் கேட்பது தன் மீது நம்பிக்கையில்லாததால் தானோ என்று பேதுரு கலங்கினார். அவருடைய மனம் உடைந்தது. இயேசுவுக்கு முன்னால் மண்டியிட்டார்.
‘இயேசுவே உமக்கே தெரியுமே நான் உம்மை நேசிக்கிறேன் என்பது’ பேதுரு கண்ணீர் விட்டார்.
‘என் ஆடுகளை உன் பொறுப்பில் விடுகிறேன். நீ அவற்றைப் பராமரி’ என்று அவரிடம் அன்புடன் சொன்ன இயேசு அவரை விட்டு மறைந்தார். பேதுருவுடன் இருந்தவர்கள் எல்லாம் இந்தக் காட்சியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் பேதுரு தெளிவடைந்தார். தன்னுடைய பணி மீன்களைச் சேகரிப்பதல்ல, மனிதர்களைச் சேகரிப்பது என்பதை அறிந்து கொண்டார். எப்படியாவது இயேசுவின் கொள்கைகளை மக்களுக்குப் பரப்ப வேண்டும் என்று உறுதி கொண்டார். மீண்டும் சீடர்கள் இருந்த இடத்துக்குச் சென்று பதினோரு சீடர்களையும் ஒன்று திரட்டினார்.
ஃ
இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின்பு சுமார் நாற்பது நாட்கள் பல்வேறு இடங்களில் பல்வேறு மக்களுக்கு இயேசு காட்சியளித்தார். ஒருமுறை சுமார் ஐநூறு பேர் இருந்த ஒரு பெரும் கூட்டத்தில் மக்களிடையே தோன்றி பேசினார். இந்த நிகழ்வுகளெல்லாம் சீடர்களை பலப்படுத்தின. எங்கும் மீண்டும் இயேசுவைப் பற்றிய பேச்சும் அலையும் ஆரம்பமானது.
சீடர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்கள்.
‘நாம் பன்னிரண்டு பேராக இயேசுவுடன் திரிந்தோம். இப்போது யூதாஸை இழந்துவிட்டோம். அதற்குப் பதிலாக இன்னொரு நபரைச் சேர்த்துக் கொண்டு மீண்டும் பன்னிரண்டு பேராக வேண்டும்’
‘சரி யாரைச் சேர்ப்பது ?’
‘பர்ணபா, மத்தியாஸ் இருவரும் நம்முடைய குழுவில் சேர மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள்… அவர்களில் ஒருவரைச் சேர்க்கலாமே’ பரிந்துரை வந்தது.
‘சரி… இருவர் பெயரையும் எழுதிச் சீட்டுப் போடுவோம். இயேசுவின் பெயரைச் சொல்லி ஒரு சீட்டு எடுப்போம். யாருடைய சீட்டு வருகிறதோ அவரை குழுவில் சேர்ப்போம்…’ முடிவு எட்டப்பட்டது.
சீட்டில் பர்ணபா, மத்தியாஸ் இருவரின் பெயர்களும் எழுதப்பட்டன. சீட்டு குலுக்கிப் போட்டு எடுக்கப்பட்டது.
மத்தியாஸ் பெயருக்குச் சீட்டு வந்தது. மத்தியாஸ் யூதாஸினால் காலியான இடத்தை நிரப்பினார்.
அதன்பின் ஒருமுறை எல்லா சீடர்களும் ஒரு இடத்தில் குழுமியிருந்தார்கள். திடீரென நெருப்புத் தழல்கள் வானிலிருந்து இறங்கி வந்து அவர்களுடைய தலையில் அமர்ந்தது.
சீடர்கள் அதிர்ந்தார்கள். ஆனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. அந்த நெருப்பு அவர்களுக்குள் இறங்கிப் பரவியது. அவர்களுடைய உடலும், உள்ளமும் உற்சாகத்தினால் நிறைந்தது. இயேசு கூடவே இருந்தபோது எத்தனை மகிழ்ச்சி அவர்களுக்குள் இருந்ததோ அதே மகிழ்ச்சி இப்போது அவர்களுக்குள்.
அவர்களுக்குள்ளே இருந்த பயம் விலகிவிட்டது. உள்ளுக்குள் ஏதோ ஒரு அசாத்தியத் துணிச்சல் வந்து நிறைந்தது.
அவர்கள் ஆனந்தமாய் வெளியே வந்தார்கள்.
எதிரே வந்த மக்கள் இவர்களை வினோதமாய்ப் பார்த்தார்கள்.
‘இவர்கள் அந்த இயேசுவின் சீடர்கள் அல்லவா ? இத்தனை நாட்களாய் எங்கே இருந்தார்கள் ? திடீரென கிளம்பியிருக்கிறார்களே’ மக்கள் கூட்டம் கூட்டமாய் பேசினார்கள்.
‘நீங்கள் கொலை செய்த இயேசுவின் சீடர்கள் தான் நாங்கள். அவர் இறந்தோரிடமிருந்து உயிர்த்துவிட்டதை நீங்கள் அறிவீர்கள் தானே. நாங்கள் அவரைப் பற்றி உலகெல்லாம் பறைசாற்றப் போகிறோம்’ அவர்கள் சொன்னார்கள்.
வணிகர்களும், யாத்திரீகர்களும் குழுமியிருந்த நகர சந்திப்புகளில் அவர்கள் தைரியமாய்ப் பேசத் துவங்கினார்கள் வியந்தார்கள். இதுவரை இயேசு மட்டுமே பேசிக்கொண்டிருந்த இடங்களில் சீடர்கள் தங்கள் பேச்சை, உரையாடலை, போதனைகளை ஆரம்பித்தார்கள். அவர்களுக்கே ஆச்சரியம். எல்லா மொழிகளும் அவர்களுக்குச் சரளமாக வந்தன.
இதென்ன விந்தை, ஒருவேளை இதுவும் இறைவனின் திருவுளமா ? நமக்குள் இறங்கிய நெருப்புத் தழல் நமக்கு மொழிகளையும் கற்றுத் தந்ததா என சீடர்கள் தங்களுக்குள் வியந்தார்கள்.
‘உனக்கு இந்த மொழி தெரியுமா ?’
‘இவர்கள் பேசும் எல்லா மொழியும் நமக்குப் புரிகிறதே’
‘புரிவது மட்டுமல்ல, நம்மால் பேசவும் முடிகிறதே…’
சீடர்கள் மேலும் மேலும் ஆச்சரியமடைந்தார்கள். அவர்கள் இயேசுவின் புகழையும், கொள்கைகளையும் எங்கும் பரப்புவதென்ற முடிவை உறுதிப் படுத்திக் கொண்டார்கள்.
பொதுவிடங்களில் பயமில்லாமல் பேசத் துவங்கினார்கள். ஆலய வளாகங்களில் தைரியமாக தங்கள் கருத்துக்களைச் சொன்னார்கள். இயேசு என்பவர் தான் உண்மையான கிறிஸ்து என்பதை வீதிகளில் பறைசாற்றத் துவங்கினார்கள்.
கிறிஸ்தவ மதத்துக்கான விதைகள் சீடர்களால் தூவப்படத் துவங்கின. மக்கள் அவர்களிடம் வந்து திருமுழுக்குப் பெற்று திருச்சபையில் இணையத் துவங்கினார்கள்.
மறை நூல் அறிஞர்களும், குருக்களும் திகைத்தார்கள். ஒரு தலைவலி போனால் பன்னிரண்டு தலைவலிகள் முளைத்திருக்கின்றனவே என்ன செய்வது என்று உள்ளுக்குள் குழம்பிப் போனார்கள். இருந்தாலும் இவர்களையும் வளரவிடக் கூடாது என்று வழக்கம்போலவே அவர்கள் பகை வளர்த்தார்கள்.
சீடர்களின் பணி பரவியது.
ஃ
கிறிஸ்தவத்தின் ஆரம்பப் பணியாளர்கள் யோவானும், பேதுருவும்
ஒருநாள் மூன்று மணியளவில் செபம் செய்வதற்காக பேதுருவும், யோவானும் ஆலயத்துக்குச் சென்றார்கள். மூன்று மணிக்கு செபம் செய்வது என்பது அவர்களுடைய வழக்கமாய் இருந்தது. இயேசு சிலுவையில் உயிர்விட்ட நேரமும் பிற்பகம் மூன்று மணி என்பதால் மாலை மூன்றுமணி என்பது அவர்களுடைய வாழ்க்கையில் மிகவும் நினைவு கூரத் தக்க ஒன்றாக மாறிவிட்டிருந்தது.
ஆலயத்தில் அழகுவாயில் என்னுமிடத்தில் ஒருவன் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். அழகுவாயில் என்பது எருசலேம் தேவாலயத்தின் முதல் வாயில். அவன் கால்கள் வலுவில்லாத ஒரு முடவன். அவன் பிறவியிலேயே கால் ஊனமுற்றவன். பிழைப்புக்கு வேறு வழி ஏதும் இல்லாததால் ஆலய வாசலில் அமர்ந்து பிச்சை கேட்டு தன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தான் அவன்.
தினமும் காலையில் சிலர் அவனைத் தூக்கி வந்து ஆலய வாசலில் இருத்துவார்கள். மாலையில் அவனைத் தூக்கிக் கொண்டு செல்வார்கள். அவனால் சுயமாக ஒரு அடி கூட நடக்க முடியாது என்னும் நிலமை.
பேதுருவும், யோவானும் ஆலயத்தில் செபிப்பதற்காக உள்ளே வந்தபோது வாசலில் அமர்ந்திருந்தான் அவன்.
‘ஐயா… காலில்லாத ஏழைக்கு உதவுங்களேன்…’ அவன் பேதுருவைப் பார்த்து தர்மம் கேட்டான்.
பேதுருவும், யோவானும் நின்றார்கள்.
பேதுரு அவனை உற்றுப் பார்த்துக் கொண்டே பேதுரு அவனிடம் சொன்னார் ‘என்னைப் பார்’.
அவன் ஆவலுடன் அவர்களைப் பார்த்தான்.
‘உனக்குத் தர எங்களிடம் ஒன்றும் இல்லை’ பேதுரு சொல்ல, அவனுடைய முகம் வாடிப்போயிற்று. பேதுரு ஒரு வினாடி யோசித்தார். இயேசு முடவர்களுக்கோ, பிணியாளிகளுக்கோ பிச்சையிட்ட நினைவு அவருக்கு இல்லை. அவர் நலமளித்தார். ஆறுதல் அளித்தார். அன்பை அளித்தார். ஆனால் பணம் அளித்ததாய் அவருக்கு நினைவில்லை.
பேதுரு அவனை மீண்டும் உற்றுப் பார்த்தார்.
‘உனக்குத் தர பொன்னோ, வெள்ளியோ என்னிடம் இல்லை. ஆனால் என்னிடம் இருப்பதை உனக்குத் தருகிறேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட’ என்று கூறி அவனுடைய கையைப் பிடித்துத் தூக்கி விட்டார்.
சுமார் நாற்பது ஆண்டுகளாக வலுவில்லாமல் கிடந்த அவனுடைய கால்கள் சட்டென்று வலுவடைந்தன. அவனுடைய கணுக்கால்கள் நேராகின. அவன் நின்றான். வாழ்க்கையில் முதன் முறையாக அவன் இரண்டு கால்களினால் நிற்கிறான். அவனால் சரியாக நிற்க முடியவில்லை. தடுமாறினான். ஆனந்தத்தில் கதறினான். அதற்குள் அங்கே பெரும் கூட்டம் கூடிவிட்டது.
‘ஏய்… இவன் அங்கே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த முடவன் அல்லவா ? இப்போது எப்படி நிற்கிறான் ?’
‘அவன் தானா இது ? அல்லது வேறு யாராவதா ?’
‘அவனுடைய கையைப் பிடித்து அந்த மனிதர் எழுப்பி விடுவதை நான் பார்த்தேன்’ மக்களிடையே செய்தி காட்டுத் தீ போல பரவியது.
பேதுருவையும், யோவானையும் கூட்டத்தினர் மொய்த்துக் கொண்டார்கள். இயேசுவைப் பிரிந்தபிறகும் சீடர்களால் அதிசயச் செயல்கள் செய்ய முடிகிறதே என்று மக்கள் ஆச்சரியமடைந்தார்கள். ஒரு மருத்துவர் போனால் இன்னொருவர் வந்திருக்கிறாரே என்று நோயாளிகள் ஆனந்தமடைந்தார்கள்.
‘ஏன் ஆச்சரியப் படுகிறீர்கள். அவனைக் குணமாக்கியது நாங்களல்ல, இயேசு கிறிஸ்துவின் பெயர் தான் அவரைக் குணமாக்கியது. அவர் தான் உண்மையான கடவுளின் மகன். அவரை நீங்கள் பிலாத்துவிடம் ஒப்படைத்தீர்கள். பிலாத்து விடுவிக்க விரும்பிய போது கூட நீங்கள் இயேசுவுக்கு எதிரானீர்கள். அவர் உங்களுக்காக மரணத்தை ஏற்றுக் கொண்டார்.’
பேதுரு பேசப் பேச கூட்டத்தினர் மெளனமானார்கள். அவர்களுடைய முகத்தில் திகில் படர்ந்தது.
‘நீங்கள் அதை அறியாமையினால் தான் செய்தீர்கள். வேண்டுமென்றே செய்யவில்லை. இது நடக்கவேண்டும் என்பது கடவுளின் விருப்பம் தான். நீங்கள் கொலை செய்த இயேசு உயிர்த்துவிட்டார். அதற்கு நாங்கள் சாட்சிகள். அவரைக் கண்டவர்கள் அனைவரும் சாட்சிகள். நீங்கள் இனிமேலாவது மனம் மாறி இயேசுவின் வழியில் நடவுங்கள்’ பேதுரு உரத்த குரலில் மக்களை அழைத்தார்.
மக்கள் கூட்டத்தினரிடையே மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ந்தது. சுமார் ஐயாயிரம் பேர் அப்போதே இயேசுவின் வழியில் செல்லப்போவதாக வாக்களித்தனர். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மறைநூல் அறிஞர்களும், குருக்களும் எரிச்சலடைந்தார்கள். கிறிஸ்தவத்தின் ஆரம்பம் அங்கே ஆழமாக நடப்பட்டது.
‘ஒருவனை அடித்துக் கொன்று சிலுவையில் தொங்கவிட்டும் இவர்களுக்குப் புத்தி வரவில்லையே. இவர்களையும் பிடித்துச் சிறையில் அடைத்து பயமுறுத்தவேண்டும்’ கயபா கர்ஜித்தான். தான் எப்போதுமே தோற்றுப் போய்விடக் கூடாது என்பதில் அவன் உறுதியாய் இருந்தான். தன் ஆதரவாளர்களைத் திரட்டி அன்றே பேதுருவையும், யோவானையும் சிறையில் அடைத்ன்.
இயேசு நிறுத்தப்பட்ட அதே கயபா வின் முன்னிலையில் இப்போது பேதுருவும், யோவானும்.
‘நீங்கள் மக்களிடையே கலகம் உண்டாக்குகிறீர்களா ?’ கயபா கேட்டான்.
‘கலகமா ? நாங்களா ? நாங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் மக்களுக்கு அறிவிக்கிறோம். அவ்வளவு தான்’
‘மரியாதையாக இந்த வேலையை விட்டு விட்டு உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு நாங்கள் தரும் எச்சரிக்கை. ‘
பேதுரு சிரித்தார். ‘ எச்சரிக்கையா ? நீங்கள் எங்களுக்கு விடுக்கிறீர்களா ? மடையர்களே நாங்கள் கடவுளுக்குக் கட்டுப் பட்டவர்கள். உங்கள் எச்சரிக்கைகளுக்குப் பயந்து பாயைச் சுருட்டிக் கொண்டு ஓடுபவர்கள் அல்ல.’ பேதுருவின் குரலில் உறுதி தெறித்தது.
‘உங்கள் இயேசுவையே கொன்று விட்டோம். உங்களை விட ஆயிரம் மடங்கு துணிச்சலாய் பேசியவன் அவன். உங்களை விட பல மடங்கு அறிவு உள்ளவன் அவன். அவனையே கொன்று விட்டோம். நீங்கள் பின்வாங்காவிடில் உங்களுக்கும் அதே நிலமை தான்’ அவர்கள் எச்சரித்தார்கள்.
‘நீங்கள் கொன்ற இயேசுவுக்கு என்னவாயிற்று என்பதை நீங்களே அறிவீர்கள். அவர் உயிர்த்துவிட்டார். அவர் வல்லமையானவர் என்பதற்கு இதோ இந்த நலமடைந்த மனிதரே சாட்சி ! நாற்பது ஆண்டுகளாக உங்கள் உரையைக் கேட்டுக் கேட்டு மரத்துப் போயிருந்த இந்த கால்கள் இயேசுவின் பெயரைக் கேட்டதும் உயிர்த்துவிட்டதே ! தெரியாதா ? வேறென்ன சாட்சி உங்களுக்கு வேண்டும்’ பேதுரு கேட்டார்.
கயபா வியந்தான். இவன் ஒரு மீன்பிடிக்கும் தொழிலாளி தானே. கல்வியறிவு என்பது கடுகளவும் இல்லாத இவனால் எப்படி இவ்வளவு தெளிவாக, சரளமாக, உறுதியாகப் பேச முடிகிறது. இயேசுவைப் பிடித்தபோது ஓடி ஒளிந்த கூட்டமல்லவா இது ? எப்படி திடீரென இவர்களுக்குத் தைரியம் வந்தது ? ஆள்பவர்களுக்கு முன்னால் இவர்கள் இவ்வளவு தைரியமாய் பேசுகிறார்கள் என்றால் ஒருவேளை இயேசு உயிர்த்து விட்டாரோ ? கயபா சிந்தித்தான். ஆனாலும் அந்த சிந்தனையை முளையிலேயே கிள்ளி எறிந்தான்.
இயேசுவின் ஆதரவாளர்கள், இயேசுவைப் பின்பற்றிய மக்கள், இயேசுவின் மறைவால் தலைமறைவாகியிருந்தவர்கள் எல்லோரும் பேதுரு, யோவானுக்கு ஆதரவாக அவருடன் இணைந்தார்கள். பொதுவிடத்தில் இவர்களை விசாரித்தால் அது இவர்களுக்கு தான் தரும் ஒரு அங்கீகாரமாக ஆகிவிடக்கூடும், அல்லது ஒரு விளம்பரமாகிவிடக் கூடும் என்பதை உணர்ந்த கயபா பேதுருவையும், யோவானையும் எச்சரித்து விடுதலை செய்தான்
பேதுருவும் யோவானும் எதற்கும் அஞ்சவில்லை. இயேசுவின் பெயரை ஊரெங்கும் பரப்பினார்கள். திருச்சபை கிளைகள் விட ஆரம்பித்தது.
பொய் கொல்லும், உண்மை விடுவிக்கும்
பேதுருவும், யோவானும் மற்ற அப்போஸ்தலர்களும் இயேசுவே கிறிஸ்து என்று மக்களிடையே உரையாடி ஏராளமான மக்களை தங்களுடைய ஆதரவாளர்கள் ஆக்கினார்கள். ஏராளமான மக்கள் இயேசுவை கிறிஸ்துவாக, மீட்பராக ஏற்றுக் கொண்டு ஒன்று திரண்டார்கள். அவர்களுடைய சபை வளர்ந்தது.
ஆதித் திருச்சபை அதுதான். அவர்கள் பகிர்தலிலும், ஒற்றுமையிலும் சிறந்து விளங்கினார்கள். அந்தத் திருச்சபையில் இணைந்தவர்கள் தங்களுடைய சொத்துக்களையெல்லாம் விற்று பொதுவில் வைத்தார்கள். பின் தேவைக்கேற்ப அவற்றை மக்கள் பகிர்ந்து கொண்டார்கள். யாரும் அளவுக்கு அதிகமாய் ஆசைப்படவில்லை.
இந்தத் திருச்சபையின் நடைமுறைகள் மறைநூல் அறிஞர்கள், குருக்கள், அரச அதிகாரிகள் அனைவருக்கும் மிகவும் ஆச்சரியத்தை அளித்தது. பெரும் பணக்காரர்கள் கூட தங்கள் சொத்துக்களையெல்லாம் விற்று பொதுவில் வைப்பதை அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு விரும்பியது அது தானே ‘ உனக்குள்ளதெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு’ என்பது தானே அவருடைய போதனை. ஆதிக் கிறிஸ்தவர்கள் இயேசுவின் போதனைகளை வாழ்ந்து காட்ட பிரியப்பட்டார்கள். எனவே அவருடைய போதனைகளின் படி தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொண்டார்கள்.
அந்தக் கூட்டத்தில் அனனியா என்றொரு செல்வந்தர் இருந்தார். அவருடைய மனைவி பெயர் சப்பிரா. அவர்களும் திருச்சபையின் மீது அதிக ஆர்வம் கொண்டு பேதுருவின் சபையில் இணைந்தார்கள். அவர்களுக்கும் தங்களிடம் இருக்கும் செல்வத்தைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்னும் ஆர்வம் வந்தது.
அனனியா சென்று தன்னுடைய சொத்தையெல்லாம் விற்றான். அவனால் நம்பமுடியவில்லை. ஏராளமான செல்வம் அவனுடைய கைகளில் இருந்தது. அவற்றைக் கொண்டு பேதுருவிடம் ஒப்படைக்க நினைத்துக் கொண்டிருந்தபோது அவர்களுடைய மனதில் சஞ்சலப் பேய் புகுந்து கொண்டது.
நமக்குத் தான் இத்தனை செல்வம் இருக்கிறதே. ஏன் எல்லாவற்றையும் கொடுக்கவேண்டும் ? கொஞ்சத்தை நமக்காய் வைத்துக் கொள்ளலாமே ? என்று அவர்கள் சிந்தித்தார்கள்.
ஒருவேளை நாளை இந்தச் சபை இல்லாமல் போனால் நாம் வாழ்வதற்கு செல்வம் மிகவும் முக்கியம் எனவே சொத்தில் ஒருபாகத்தை யாருக்கும் தெரியாமல் தனக்கென வைத்துக் கொண்டு மிச்சத்தை பேதுருவிடம் ஒப்படைப்பதென்று அவர்கள் முடிவெடுத்தார்கள்.
மறுநாள் காலையில் அவன் தன்னுடைய திட்டத்தின் படி சொத்தில் ஒருபகுதியைத் தனக்கென்று வைத்துக்கொண்டு மிச்சத்தைக் பேதுருவின் முன்னிலையில் சமர்ப்பித்தான்.
‘ஐயா… இதோ என்னுடைய அனைத்து சொத்துக்களையும் விற்று அதை உம்மிடம் ஒப்படைக்கிறேன்’
பேதுரு அவனைப் பார்த்தார்.
‘அனனியா ! ஏன் பொய் சொல்கிறாய் ? சொத்துக்களை நீ விற்கவேண்டுமென்றோ, அதை இங்கே வைக்கவேண்டுமென்றோ நான் சொன்னேனா ? நீ ஏன் கடவுளின் முன்னால் பொய் சொல்கிறாய் ? சாத்தான் உன் உள்ளத்தில் புகுந்து கொள்வதற்கு நீ ஏன் அனுமதி அளித்தாய் ?’ பேதுரு கேட்டார்.
பேதுரு சொன்னதைக் கேட்டதும் அனனியா அதிர்ச்சியடைந்தார். அங்கேயே சுருண்டு விழுந்து இறந்து போனார் !
குழுவில் இருந்த இளைஞர்கள் நிகழ்ந்தவற்றைத் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின் அனனியாவை துணியால் சுற்றி எடுத்துக் கொண்டு போய் அடக்கம் செய்தார்கள். மக்கள் அனைவரையும் பேரச்சம் ஆட்கொண்டது. கடவுளின் முன்னிலையில் நேர்மையாய் இருக்கவேண்டும். இல்லையேல் மரணம் நிச்சயம் என்று மக்கள் தங்கள் உள்ளத்தில் பயத்துடன் எழுதிக் கொண்டார்கள்.
மூன்று மணி நேரம் கழிந்தபின் அனனியாவின் மனைவி வந்தாள். அவளுக்கு அங்கே நடந்த விஷயங்கள் எதுவும் தெரியாது. தன்னுடைய கணவன் ஒரு பெரும் தொகையைக் கொடுத்திருக்கிறார். அவருக்கு இப்போது பெரும் மதிப்பு இருக்கும். தன்னையும் அவர்கள் பெரும் மரியாதையுடன் வரவேற்பார்கள் என்று அவளுடைய மனம் எண்ணிக் கொண்டது.
அவள் உள்ளே வந்ததும் பேதுரு அவளிடம்,
‘உங்கள் சொத்துக்களையெல்லாம் விற்று விட்டீர்களா ?’ என்று கேட்டார்.
‘ஆம் விற்று விட்டோம். அந்தப் பணத்தை முழுவதும் என் கணவர் இங்கே கொண்டு கொடுத்திருப்பாரே’ அவள் சொன்னாள்.
‘இவ்வளவு பணத்துக்குத் தான் சொத்தை விற்றீர்களா ?’ பேதுரு கேட்டார்.
‘ஆம்… இவ்வளவுக்குத் தான் விற்றோம்’ அவளும் பொய் சொன்னாள்.
பேதுரு அவளைப் பார்த்து,’ நீங்கள் இரண்டு பேருமே ஏன் கடவுளின் முன்னிலையில் பொய் சொன்னீர்கள் ? சாத்தான் உங்களை ஆட்கொண்டு விட்டானே ! உங்களுடைய நல்ல எண்ணத்தை அவன் குழி தோண்டிப் புதைத்துவிட்டானே !’ என்றார்.
அவள் கலக்கத்துடன் பேதுருவைப் பார்த்தாள்.
‘இதோ… உன் கணவனை அடக்கம் செய்தவர்கள். இவர்கள் இப்போது உன்னையும் அடக்கம் செய்வதற்காகக் கொண்டு செல்வார்கள்’ என்றார்.
அவ்வளவு தான். அவள் அந்தக் கணமே அந்த இடத்திலேயே இறந்து விழுந்தாள். கடவுளின் முன்னிலையில் சொல்லும் ஒரு சிறு பொய்கூட தங்கள் உயிரை அழித்துவிடும் என்று சபையில் புதிதாய் சேர்ந்தவர்கள் மனதுக்குள் குறித்துக் கொண்டார்கள். அவர்கள் அவளையும் எடுத்துக் கொண்டு கணவனின் அருகிலே அடக்கம் செய்தார்கள்.
ஃ
நாட்கள் செல்லச் செல்ல பேதுருவின் புகழ் எங்கும் பரவியது. அவரால் ஏராளமான அரும் செயல்கள் நடந்தன. ஏராளமான மக்களின் நோய்கள் நீங்கின. ‘இயேசு கிறிஸ்துவின் பெயரால்’ என்று கூறி பேதுரு அனைவரையும் குணமாக்கினார். இயேசுவைக் கடவுளாக ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே வந்தது.
பேதுரு நடந்து செல்லும்போது அவருடைய நிழல் படும் இடத்தில் நோயாளிகள் படுக்க வைக்கப்பட்டார்கள். அப்படி நம்பிக்கையுடன் வந்தவர்கள் எல்லோரும் சுகமடைந்தனர்.
பேதுருவின் நடவடிக்கைகளும், இயேசுவைக் குறித்த அவருடைய அறிக்கைகளும் குருக்களையும், மறைநூல் அறிஞர்களையும் மேலும் மேலும் எரிச்சல் படுத்தின. பலமுறை எச்சரித்தும் தங்களுடைய அச்சுறுத்தல்களுக்கு அவர்கள் பணியவில்லையே என்னும் கோபமும் அவர்களிடம் நிரம்பி வழிந்தது.
பேதுருவும், யோவானும் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார்கள்.
‘நாங்கள் எத்தனை முறை எச்சரித்தாலும் நீங்கள் இப்படித்தான் உளறிக் கொண்டு திரிவீர்கள் என்றால் இனிமேல் சிறையிலேயே கிடங்கள். எத்தனை பேரைக் கொன்றாலும் நீங்கள் திருந்தப்போவதில்லையா ? ஏன் இந்த பிடிவாதம் ? திருமுழுக்கு யோவான் தலையை இழந்தார், இயேசு சிலுவையில் உயிரையே விட்டார். நீங்களும் ஏன் சாவே தேவை என்று பிடிவாதம் பிடிக்கிறீர்கள்’ சிறையில் அடைத்தவர்கள் கோபத்தில் கத்தினார்கள்.
‘உண்மை பேசியதற்காக இயேசுவை சிலுவையில் அறைந்தீர்கள். அவர் உயிர்த்தார். அதை நாங்கள் அறிக்கையிடுகிறோம் எங்களை சிறையில் அடைக்கிறீர்கள். பாவத்துக்கு மேல் பாவம் செய்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்’ பேதுரு சொன்னார்.
‘இயேசு உயிர்த்தார்…உயிர்த்தார்…உயிர்த்தார்…. இதைத் தவிர வேறு ஏதும் உங்களுக்குச் சொல்வதற்கு இல்லையா ?’ அவர்கள் எரிச்சலின் உச்சத்தில் கொதித்தார்கள்
‘உண்மை சுடும் என்பது உண்மை’ பேதுரு சொன்னார்.
‘நீ எங்கள் மீது இரத்தப் பழியைப் போடுகிறாய்’
‘பிலாத்துவின் முன்னிலையில் நீங்கள் சொன்னதை அத்தனை விரைவாய் மறந்து விட்டீர்களோ ? இயேசுவின் இரத்தப் பழி உங்கள் மீதும் உங்கள் பிள்ளைகள் மீதும் விழட்டும் என்று சொன்னீர்களே !’ பேதுரு அவர்களிடம் திருப்பிக் கேட்க அவர்கள் ஆத்திரத்துடன் அகன்றார்கள்.
இரவு.
சிறைக்கதவுகளுக்கு உள்ளே பேதுருவும், யோவானும் அடைபட்டுக் கிடக்க அவர்கள் முன்னிலையில் தேவதூதர் ஒருவர் தோன்றினார்.
சிறைக்கதவுகள் தானே திறந்தன. பேதுருவும், யோவானும் வெளியே வந்தார்கள். தூதர் அவர்களிடம்
‘நீங்கள் போய் கோயிலில் நின்று வாழ்வு தரும் வார்த்தைகளை அறிவியுங்கள்’ என்று வாழ்த்தி அனுப்பி வைத்தார்.
கதவுகள் மீண்டும் மூடின. பூட்டுகள் பூட்டிக் கொண்டன. சிறையைக் காவல் காத்துக் கொண்டிருந்த காவலர்களுக்கு இது எதுவும் தெரியவில்லை. பேதுருவும், யோவானும் ஆலயத்திற்கு வந்தார்கள்.
மறு நாள் காலையில் அனைவரின் முன்னிலையிலும் பேதுருவும் யோவானும் பேசத்துவங்கினார்கள். அதைக் கண்ட குருக்கள் ஏகமாய் அதிர்ந்தார்கள். சிறையில் தானே இவர்களை அடைத்தோம், இவர்கள் எப்படி இங்கே வந்தார்கள் ? என்று குழம்பினார்கள்.
சிறைக்கு ஓடினார்கள்.
சிறை பூட்டப்பட்டிருந்தது. காவலர்கள் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். உள்ளே யாரும் இல்லை. குருக்கள் திகைத்தனர். காவலர்கள் நம்பமுடியாமல் பார்த்தனர். என்ன செய்வதென்று புரியாமல் விழித்தார்கள்.
பேதுருவின் உரைகள் வலுவடைந்தன. திருச்சபை மிக வேகமாய் வளர்ந்தது.
பேதுவின் துணிச்சல்
பேதுரு திருச்சபை வளர்ச்சிக்கு மிகவும் வலுவான அடித்தளம் அமைத்தார். இயேசு செய்தவற்றைப் போன்ற பல அற்புதங்களையும், அதிசயங்களையும் ‘இயேசுவின் பெயரால்’ பேதுருவும் செய்தார். ஏராளமான நோயாளிகளைக் குணமாக்கினார். பேய்களை ஓட்டினார். எல்லாவற்றுக்கும் மேலாக இறந்து போன தொற்கா என்னும் பெண்ணையும் உயிருடன் எழுப்பினார். இந்த செயல்களையெல்லாம் கண்ட பலர் இயேசுவில் விசுவாசம் கொண்டு கிறிஸ்தவத்தில் இணைந்தார்கள்.
யாக்கோபுவும் நல்ல இறை வல்லமை பெற்ற மனிதர். அவரும் நோயாளிகளைக் குணமாக்குதல், தெளிவாக மறை உண்மைகளை எடுத்துரைத்தல் போன்ற பல செயல்களில் ஈடுபட்டு வந்தார். அவருடைய ஆற்றல் மிக்க பேச்சு பலரை சபையில் இணைத்துக் கொண்டிருந்தது. இதைக்கண்ட ஏரோது மன்னன் கடும் கோபமடைந்தான். தன்னுடைய அதிகாரத்தைக் காட்ட விரும்பி யாக்கோபுவை சபைக்கு இழுத்து வந்தான்.
‘நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் ? நாட்டில் கலகம் விளைவிக்கிறாயா ?’ மன்னன் கேட்டான்
‘கலகம் அல்ல, கலங்கிக் கிடக்கும் மனங்களைத் தெளிவு படுத்திக் கொண்டிருக்கிறேன்.’ யாக்கோபு பயப்படாமல் சொன்னார்.
‘யார் முன்னிலையில் நீ பேசுகிறாய் என்பது தெரியுமா ?’
‘யார் முன்னிலையில் வேண்டுமானாலும் பேசுவேன். ஏனென்றால் நான் கடவுளின் பின்னால் செல்பவன். எனக்குள் இயேசு இருக்கிறார்’
‘உன்னை இப்போது கொல்லப் போகிறேன். இயேசு உன்னைக் காப்பாற்றுவாரா பார்க்கலாம்’ ஏரோது சிரித்தான்.
‘மன்னிக்கவேண்டும். நீர் என்னைக் கொல்ல முடியாது. என் உடலைத் தான் கொல்ல முடியும். ஆன்மாவைக் கொல்ல முடியாமல் உடலைக் கொல்வோருக்கு அஞ்சவேண்டாம் என்பது என் இயேசு எனக்குச் சொன்ன வார்த்தை !’ யாக்கோபு சொல்ல ஏரோது எரிச்சலைடைந்தான்.
‘என்னிடம் உயிர்ப்பிச்சை கேட்காமல் வாதாடுகிறாயா ?’ என்று கேட்டுக் கொண்டே உறையிலிருந்த வாளை உருவி யாக்கோபின் கழுத்தை நோக்கி வீசினான்.
யாக்கோபின் தலை தெறித்தது.
யாக்கோபு இறைவனுக்காய் இறந்தார். ஏரோது எகத்தாளமாய் சிரித்தான். அரசவையில் இருந்த யூதர்கள் எல்லாம் ஆனந்தமாய் கைகொட்டிச் சிரித்தனர். யாக்கோபின் தலை ஓரமாய் தீர்க்கப் பார்வையோடு அவையை வெறித்தது.
ஃ
‘பேதுரு என்றொரு மனிதன் இருக்கிறான். அவனையும் பிடித்துக் கொண்டு வந்து சிறையில் அடையுங்கள்’ ஏரோது ஆணையிட்டான்.
பேதுரு சிறையில் அடைக்கப்பட்டார்.
‘அரசே.. சென்ற முறை தலைமைக்குரு பேதுருவைச் சிறையில் அடைத்தபோது யாருக்கும் தெரியாமல் தப்பிப் போய்விட்டான். எனவே இந்தமுறை நீங்கள் அதிக கவனமாய் இருக்க வேண்டும்’ ஒருவர் ஏரோதின் காதில் கிசுகிசுத்தார்.
‘தப்பிப்பதா ? பாஸ்கா விழாவிற்குப் பின் அவனைக் கொலை செய்யப் போகிறேன். அவன் இனிமேல் வாழக்கூடாது’ ஏரோது சிரித்தான்.
‘இருந்தாலும், கவனம்…. அவனுடைய சீடர்கள் யாராவது அவனைத் தப்ப வைத்துவிட்டு கடவுள் விடுவித்தார் என்று கதைவிடக் கூடும். அதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.’
‘ம்ம்.. சரி…நம்முடைய படை வீரர்களில் பலவான்களான பதினாறுபேரை தேர்ந்தெடுத்து நான்கு குழுக்களாக அவர்களை அமைத்து பேதுருவுக்குக் காவல் இருக்க ஏற்பாடு செய்யுங்கள். பேதுருவை பாஸ்கா விழாவில் மக்கள் முன்னிலையில் விசாரிக்க வேண்டும்’ ஏரோது ஆணைகளைப் பிறப்பித்தான்.
காவல் துவங்கியது. நாட்கள் நகர்ந்தன.
நாளை வழக்கு நாள். பேதுருவை மக்கள் மத்தியிலே வைத்து விசாரித்து அவரைக் கொன்றுவிடவேண்டும் என்பது ஏரோது மன்னனின் திட்டம்.
இரவு.
பேதுரு இரண்டு காவலர்களுக்கு இடையே சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட நிலையில் கிடந்தார். வெளியே காவலர்கள் பல நிலைகளில் நின்று காவல் செய்துகொண்டிருந்தார்கள்.
திடீரென்று அறை பிரகாசமானது. வானதூதர் ஒருவர் பேதுருவின் முன்னால் வந்து நின்றார்.
தூங்கிக் கொண்டிருந்த பேதுருவை அவர் தட்டி எழுப்பினார்.
‘பேதுரு… எழுந்திரும். உடனே எழுந்திரும்’
பேதுரு திடுக்கிட்டு விழித்துப் பார்த்தார். அவருக்கு முன்னால் வானதூதர். ஆச்சரியத்தில் அவர் பார்த்துக் கொண்டிருந்தபோதே பேதுருவின் கைகளில் கட்டப்பட்டிருந்த சங்கிலிகள் தானே அவிழ்ந்து விழுந்தன.
‘உமது இடையை வரிந்து கட்டிக்கொள்ளும் மிதியடியையும் போட்டுக் கொள்ளும்’ தூதர் சொல்ல பேதுரு அவ்வாறே செய்தார்.
‘இப்போது உமது மேலாடையையும் போட்டுக்கொண்டு என்னைப் பின் தொடரும்’ தூதர் சொல்லிவிட்டு முன்னால் நகர பேதுரு அவரைப் பின் தொடர்ந்தார்.
சிறையின் கதவுகள் தானே திறக்க, தூதர் நடந்தார். பேதுரு அவரைப் பின் தொடர்ந்தார். முதல் நிலை, இரண்டாம் நிலை என ஒவ்வொரு காவல் நிலையாகக் கடந்து தூதர் பேதுருவை அழைத்துச் சென்றார். நகர்¢ன் இரும்புக் கதவுகள் கூட தூதர் நெருங்கியதும் தானே திறந்தது.
பாதுகாப்பான ஒரு இடம் வந்ததும் தூதர் சட்டென்று மறைந்தார். அதுவரை இது ஒரு கனவு என்றே நினைத்திருந்த பேதுரு, சுற்றுப்புறத்தைப் பார்த்தபின்பு தான் நடந்தவையெல்லாம் கனவு அல்ல, நிஜம் என்பதை உறுதி செய்து கொண்டார். அவருடைய ஆச்சரியத்துக்கு அளவேயில்லை. அவர் கொண்டிருந்த இறைவிசுவாசம் மேலும் மேலும் ஆழப்பட்டது.
அவர் நேராக யோவானின் தாயாருடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே பலர் அமர்ந்து செபித்துக் கொண்டிருந்தார்கள். பேதுரு சிறையில் இருக்கிறார் என்னும் செய்தியும், நாளை அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப் போகிறார்கள் என்னும் செய்தியும் அவர்களை மிகவும் சங்கடத்தில் ஆழ்த்தியிருந்தது. எப்படியாவது கடவுள் தான் அவரைக் காப்பாற்றவேண்டும், என்று செபித்துக் கொண்டிருந்த வேளையில் பேதுரு அங்கே வந்து கதவைத் தட்டினார்.
பணிப்பெண் ரோதி கதவின் அருகே வந்தாள்.
‘யாரது ?’
‘நான் தான்…’ பேதுரு சொன்னார். பேதுருவின் குரலைக் கேட்டதும் அவள் கதவைத் திறக்காமலேயே ஆனந்தத்தில் உள்ளே ஓடினாள்.
‘பே…பேதுரு வந்திருக்கிறார்’ அவள் தடுமாறினாள்.
‘பேதுருவா ? என்ன உளறுகிறாய் ? அவர் சிறையில் அல்லவா கிடக்கிறார்… நீ நன்றாகப் பார்த்தாயா ?’
‘நான் குரலைத் தான் கேட்டேன். கதவைத் திறக்கவேயில்லை. ஆனால் அது பேதுருவின் குரல் தான்’
‘ஒருவேளை ஏதேனும் வானதூதராய் இருக்குமோ ?’ அவர்கள் கேள்விகளுடனும், ஆவலுடனும், பயத்துடனும் கதவை நெருங்கினார்கள்.
‘யாரது…’
‘நான் தான் கவலைப்படாமல் கதவைத் திறவுங்கள்’ பேதுரு சொல்ல அவர்கள் கதவைத் திறந்தார்கள்.
அதிர்ந்தார்கள். உண்மை தான். பேதுரு தான் கண் முன்னால் நிற்கிறார். அவர்கள் ஆனந்தமடைந்தார்கள். பேதுரு நடந்த செய்திகளையெல்லாம் சொல்ல அவர்களின் விசுவாசமும் ஆழமானது.
ஏரோது மன்னனோ கடும் கோபத்தில் இருந்தான். பேதுருவை அழைத்து வரச் அதிகாலையில் சிறைக்குச் சென்றபோது சிறைச்சாலைக் கதவுகள் மூடிக் கிடந்தன. ஆனால் பேதுரு உள்ளே இல்லை ! ஏரோது மன்னனின் கோபம் காவலர்களின் மேல் திரும்பியது.
‘உங்களுக்குத் தெரியாமல் அவன் தப்பியிருக்க முடியாது’ என்று சொல்லி அவர்களுக்கு மரண தண்டனை விதித்தான்.
பேதுரு பயப்படாமல் தன்னுடைய போதனைகளைத் தொடர்ந்தார்.
பேதுருவின் மரணம்
பேதுரு தன்னுடைய பணியை இஸ்ரேல் நாட்டின் மேற்கு எல்லையிலுள்ள மத்திய தரைக் கடற்கரையோரமாக விரிவுபடுத்தினார். அந்தக் கடல் சுமார் மூவாயிரம் கிலோ மீட்டர் நீளமும், நூறு கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. அந்தியோக்கியாவில் தங்கி தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களையும், மக்கள் வாழ வேண்டிய வழிகளையும் போதித்து கிறிஸ்தவத்தைப் பரப்பினார். பின் பவுல் காலத்தில் பேதுரு கொரிந்து நகரில் தன்னுடைய இறைப்பணியை விரிவு படுத்தினார். கி.பி 33ம் ஆண்டு முதல், கி.பி 40 ம் ஆண்டுவரை ஏழு ஆண்டுகள் அந்தியோகியா நகரிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் கிறிஸ்தவத்தைப் பரப்பினார். ஆசியா மைனர் பகுதியிலும் அவர் தன்னுடைய போதனைகளை நிகழ்த்தினார். அங்கிருந்து எகிப்துக்குப் பயணமாகி எகிப்து நாட்டிலும் துணிச்சலாக இயேசுவைப் பற்றிப் போதித்தார்.
எகிப்து நாட்டில் சில காலம் பணி செய்தபின் அங்கிருந்து கிரீஸ் நாட்டுக்குப் பயணமாகி அங்குள்ள கொரிந்து நகரில் இறைபணியாற்றினார். அதன் பின் தன்னுடைய பணியை ரோம், ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ் போன்ற பல நாடுகளுக்கும் விரிவு படுத்தினார். பிரான்ஸ் நாட்டிலுள்ள கால் என்னுமிடத்தின் சார்ட்ரஸ் சபையின் புனித தந்தை என்று பேதுரு அழைக்கப்படுகிறார். பல நாடுகளுக்கும் சென்று இயேசுவைப் பற்றியும் அவருடைய போதனைகளைப் பற்றியும், இயேசுவின் பார்வையில் வாழ்க்கை முறை பற்றியும் போதித்தபின் மீண்டும் அவர் ரோமுக்கே திரும்பினார்.
அங்கே இறைபணி ஆற்றிக் கொண்டிருந்த பேதுரு மீண்டும் பல சோதனைகளைச் சந்தித்தார். ஆளும் அரசும், மதகுருக்களும் அவருக்கு எதிராக மீண்டும் எதிர்ப்பு அலைகளை எழுப்பினார்கள்.
கி.பி 67ல் பேதுரு கைது செய்யப்பட்டார்.
அவரை மேமர்டைன் என்னும் சிறையில் அடைத்தார்கள்.
மேமர்டைன் சிறை மிகக் கொடுமையானது. சிறையிலேயே கைதிகளைக் கொல்லவேண்டுமென்றால் அங்கே அடைப்பது அவர்களின் வழக்கம். அந்தச் சிறையில் கைகளும் கால்களும் ஒரு தூணில் சேர்த்துக் கட்டப்பட்ட நிலையில் பேதுரு தவித்தார். அவரைச் சுற்றிலும் ஏராளமான கைதிகள். அவர்களில் பலர் இருந்த நிலையிலேயே இறந்து போயிருந்தார்கள். பலர் வாழ்வுக்கும் சாவுக்கும் இடைப்பட்ட மெல்லிய நூலில் தொங்கிக் கொண்டிருந்தார்கள். வெளிச்சமும் காற்றும் வராத அந்த அறையில் பேதுருவும் அடைக்கப்பட்டார்.
உணவோ, நீரோ எதுவும் அவருக்கு வழங்கப்படவில்லை. சிறைக்காவலாளிகள் அவ்வப்போது சிறையைத் திறந்து பிணங்களை அப்புறப்படுத்துவார்கள். அவர்கள் வரும்போதெல்லாம் பேதுரு இன்னும் இறக்கவில்லையே என்று ஆச்சரியப்படுவார்கள். அந்த வேளைகளில் பேதுரு இயேசுவைப் பற்றி அவர்களுடன் பேசுவார். அவர்களில் பலர் பேதுருவின் உறுதியைக் கண்டும், போதனைகளைக் கேட்டும் கிறிஸ்தவர்களானார்கள். இப்படி பேதுரு சிறையில் சாவுடன் போராடியும், அந்த நிலையிலும் கிறிஸ்தவத்தை வளர்க்கப் போராடிய மாதங்கள் 9 !!
ரோமப் பேரரசராக அப்போது இருந்தார் மன்னன் நீரோ !!
நீரோ மன்னனுக்கு கிறிஸ்தவர்களைக் கொன்று குவிப்பது ஒரு பொழுதுபோக்காக இருந்தது. மறைமுகமாக இயேசுவை ஆதரித்தவர்களையும் அவர் கொன்று குவித்தார். பேதுரு வெளிப்படையாக இயேசுவைப் பற்றி போதித்தவர், தப்ப முடியுமா ? அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பேதுரு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படவேண்டும்., ஆணை பிறப்பிக்கப்பட்டது.
‘ஒரே ஒரு விண்ணப்பம்’, பேதுரு கேட்டார்.
‘என்ன விண்ணப்பம் ?’ அவர்கள் கேட்டார்கள். தன்னை விடுவியுங்கள் என்றோ, சிலுவை மரணத்துக்குப் பதிலாய் விரைவாய் சாகக் கூடிய, வலியில்லாத மரணத்தையோ ஏதோ ஒன்றை பேதுரு கேட்கப் போவதாய் அவர்கள் நினைத்தார்கள். ஆனால் பேதுரு அவர்கள் வியந்து போகும் விதமாய் ஒரு விண்ணப்பத்தை வைத்தார்.
‘இயேசுவும் சிலுவையில் அறையப்பட்டு தான் இறந்தார். நானும் அப்படியே இறக்க தகுதியற்றவன். எனவே என்னை தலைகீழாகச் சிலுவையில் அறையுங்கள்’ பேதுரு விண்ணப்பம் வைத்தார். கூடியிருந்தவர்கள் அதிர்ந்தார்கள். பேதுருவின் அர்ப்பணிப்பை எண்ணி மலைத்துப் போனார்கள்.
பேதுருவின் விண்ணப்பம் அங்கீகரிக்கப் பட்டது.
டைபர் நதியின் கரையில் இருந்த வாடிகன் மலையின் உச்சியில் பேதுரு தலை கீழாக சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். அவருடைய உடலை பதப்படுத்தி வாடிகன் நகரில் அடக்கம் செய்தார்கள்.
தற்போது வாடிகனில் அமைந்திருக்கும், போப்பாண்டவரின் இடமான பேதுரு தேவாலயம் பேதுருவின் கல்லறை மீது தான் அமைந்திருக்கிறது.
கிறிஸ்தவத்தை வளர்த்த சவுல்
சவுல். கிறிஸ்தவத்துக்கு எதிராக மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்தவர். இயேசுவின் சீடர்களால் திருச்சபை வெகு வேகமாகக் கட்டி எழுப்பப் பட்டுக் கொண்டிருந்தபோது ஒரு பெரும் வேகத்தடையாக வந்தார் சவுல். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் அனைவரையும் வீடுகளில் புகுந்து கொடுமைப்படுத்தினார். தன்னுடைய வலிமையினால் அவர்களை இழுத்துக் கொண்டு போய் சிறையிலும் அடைத்தார். மறை நூல் அறிஞர்கள், குருக்கள் பலர் அவரோடு இருந்தார்கள். சவுல் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாய் இருந்தார். வளர்ந்து கொண்டிருந்த சபை சிதறடிக்கப்பட்டது.
தமஸ்கு நகரத்தில் கிறிஸ்தவம் வளர்ந்து கொண்டிருப்பதை சவுல் அறிந்தார். அவர் தலைமைக் குருக்களிடம் சென்று
‘எந்த நகரிலானாலும் சரி, இந்தப் புதிய மறையைத் தழுவுபவர்கள் யாராய் இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட அவர்கள் எருசலேமுக்கு இழுத்து வரப்படவும் வேண்டும். இதற்காக ஆணை ஒன்றைத் தயாராக்கி தமஸ்கு நகர தொழுகைக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்’ என்றான்.
‘ஏன் தமஸ்கு நகர தொழுகைக் கூடங்களுக்கு ?’
‘அங்கே இந்த மறையைச் சார்ந்தவர்கள் பெருகி வருகிறார்கள். இங்கே இருந்த மக்களை நான் துரத்தி விட்டேன். அவர்கள் எங்கெங்கு செல்கிறார்களோ அங்கெல்லாம் இந்த மறையைப் பரப்புகிறார்களாம். இதை நாம் தடுத்தாக வேண்டும்’ சவுல் சொன்னார்.
‘சவுல்… உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். நம்முடைய சட்டதிட்டங்களின் மேலும், மதத்தின் மேலும் நீ வைத்திருக்கும் மரியாதையை நினைத்து நான் ஆனந்தமடைகிறேன். இதோ, நீ கேட்கும் அத்தனை ஆணைகளையும் தயாராக்கி உன்னிடமே தந்து விடுகிறேன். நீ தான் இந்தப் பணியைச் செய்யவேண்டும். இங்கே அந்த மக்களைத் துரத்தியது போல, அங்கும் சென்று உன் தலைமையில் அந்த புதிய மறையினரை துரத்த வேண்டும். கிறிஸ்தவமாம் கிறிஸ்தவம்… இனிமேல் அந்த பெயரில் ஒருவனும் நடமாடக் கூடாது’ தலைமைக் குரு சொல்ல, சவுல் ஆனந்தமடைந்தார்.
ஆணை தயாரானது. அதைத் தமஸ்கு நகருக்கு எடுத்துச் செல்லும் பணியும் சவுலிடமே கொடுக்கப்பட்டது. சவுல் தன்னுடன் ஒரு குழுவினரையும் அழைத்துக் கொண்டு ஆனந்தமாக அந்தப் பணிக்கு ஆயத்தமானார்.
தமஸ்கு நோக்கிய பயணம் துவங்கியது. சவுல் தன்னுடைய குதிரையில் ஏறி தமஸ்கு நகரை நோக்கி விரைந்தார். அவருக்குப் பின்னால் அவருடைய குழுவினர் அவரைத் தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர். அதோ கண்ணுக்கெட்டும் தூரத்தில் தமஸ்கு நகர். அங்கே சென்று ஆணையை வினியோகித்து கிறிஸ்தவர்களாய் உலவுகின்றவர்களை எல்லாம் இழுத்துச் செல்லவேண்டியது தான். சவுல் உள்ளத்தில் எண்ணிக் கொண்டே உற்சாகமாய் சென்று கொண்டிருந்தார்.
திடீரென்று வானத்திலிருந்து தோன்றிய ஒரு ஒளி சவுலைச் சுற்றி வீசியது ! சவுல் குதிரையிலிருந்து கீழே விழுந்தார். உடன் வந்து கொண்டிருந்தவர்கள் எல்லோரும் இந்தக் காட்சியைக் கண்டு உறைந்து போய் நின்றார்கள்.
‘சவுலே… சவுலே… ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய் ?’ குரல் ஒன்று ஒலித்தது. எல்லோரும் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். யாரும் இல்லை. சத்தம் மட்டும் கேட்கிறது. அவர்கள் பயத்துடன் செய்வதறியாமல் திகைத்து நிற்க, சவுல் குரலை நோக்கிக் கேள்வி எழுப்பினார்.
‘ஆண்டவரே நீர் யார் ?… நான் உம்மை எப்போது துன்புறுத்தினேன்..’
‘நீ துன்புறுத்தும் இயேசு தான் நான்’ சவுல் இந்தக் குரலைக் கேட்டதும் நடுங்கினார். இயேசு தான் உண்மையான கடவுள் என்பதை அவருடைய மனம் எப்போதும் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. எனவே அவரிடமிருந்து பதில் குரல் எழவில்லை.
‘நீ எழுந்து நகருக்குப் போ… நீ என்ன செய்யவேண்டும் என்பதை அங்கே நான் உனக்குச் சொல்வேன்’ குரல் ஒலிக்க சவுல் எழுந்தார். சுற்றுமுற்றும் பார்த்தார் எங்கும் ஒரே இருள் ! அவருடைய பார்வை பறிபோய் இருந்தது !
மூன்று நாட்கள் சவுல் பார்வையில்லாமல் இருந்தார். அவர் அந்த மூன்று நாட்களும் உண்ணவும் இல்லை குடிக்கவும் இல்லை. அவருடைய மனதுக்குள் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது இயேசுவின் குரல். நான் துன்புறுத்தும் இயேசு தான் உண்மையிலேயே கடவுளா ? எனக்கு ஏன் இப்படி ஒரு காட்சி நடக்கவேண்டும் ? நான் இப்போது என்ன செய்வது ? சவுல் கேள்விகளுக்குள் புதைந்து கிடந்தார்.
பார்வை இருந்தபோது குருடனாய் இருந்த சவுல், பார்வை போனபின் புதுப் பார்வை பெற்றார். இயேசுவை நோக்கி மன்றாடத் துவங்கினார்.
‘ஆண்டவரே… நீர் உண்மையான கடவுளாய் இருந்தால் என்னுடைய பார்வை எனக்குத் திரும்ப வரட்டும்’ சவுல் மனதால் வேண்டினான்.
‘சவுல்… அனனியா என்றொரு மனிதனை நான் அனுப்புகிறேன். அவன் உன்னுடைய பார்வையைத் திரும்பத் தருவார்’ சவுலின் மனதுக்குள் கடவுள் பேசினார்.
அதே நேரத்தில் அனனியா என்னும் மனிதரிடமும் இயேசு பேசினார்.
‘அனனியா…’ கடவுள் அழைக்க அனனியா ஆனந்தமாய்
‘ஆண்டவரே.. இதோ அடியேன். சொல்லும்’ என்று பணிந்தார். அனனியா தமஸ்கு நகரில் இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளைப் போதித்து வந்த ஒரு சீடர்.
‘நீ நேர்த்தெருவுக்குச் சென்று அங்கே யூதாவின் வீட்டில் தங்கியிருக்கும் சவுலைச் சென்று பார்’
‘சவுலா ? இயேசுவே …சவுல் எருசலேமில் செய்த கொடுமைகள் உமக்குத் தெரியாததா ? கிறிஸ்தவத்தை அழிக்கத் தான் அவர் இங்கே வந்திருக்கிறார். அவரை நான் போய்ப் பார்க்க வேண்டுமா ?’ அனனியா பயந்தார்.
‘கவலைப்படாதே. சவுல் இப்போது என்னுடைய சீடன். காட்டாற்று வெள்ளமாய் இருந்த அவனை நான் ஒழுங்கு படுத்தியிருக்கிறேன். நீ போய் அவருக்குப் பார்வையையும், தூய ஆவியையும் அளிக்க வேண்டும்’ இயேசு சொல்ல சீடன் அமைதியாய் ஒத்துக் கொண்டான்.
அதன்பின் அனனியா தாமதிக்கவில்லை. நேர்த்தெருவுக்கு ஓடி யூதாவின் வீட்டுக்குள் நுழைந்தார்.
‘சவுல்… சவுல்… சவுல் இங்கே இருக்கிறாரா ?’ அனனியா கேட்டார்.
சவுல் குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினார்
‘நீங்கள் ?…………..’
‘என் பெயர் அனனியா…’
அனனியாவின் பதிலைக் கேட்ட சவுல் ஆனந்தமடைந்தார். கடவுளின் வல்லமையை நினைத்து வியந்தார்.
‘நான் தான் சவுல். உங்கள் வருகைக்காகத் தான் காத்திருந்தேன்’ சவுல் சொல்ல, அனனியா சென்று சவுலின் கண்களின் மேல் கைகளை வைத்து செபித்தார். அப்போது அவருடைய கண்களிலிருந்து செதிள் போன்ற ஒரு பொருள் கழன்று விழ அவர் பார்வையடைந்தார்.
அதன் பின் சவுல் தாமதிக்கவில்லை. தன்னுடைய பழைய எண்ணங்களையெல்லாம் மாற்றிக் கொண்டார். விரைந்து சென்று திருமுழுக்கும் பெற்றார். கொண்டு வந்திருந்த ஆணைகளைக் கிழித்து எறிந்தார்.
எந்த அளவுக்கு இயேசுவுக்கு எதிராய் செயல்பட்டாரோ, அந்த அளவுக்கு ஆதரவாய் செயல்பட ஆரம்பித்தார் !
தன்னுடைய பெயரையும் பவுல் என்று மாற்றிக் கொண்டார். தலைமைக் குருக்கள் தலையைப் பிய்த்துக் கொண்டார்கள், மறைநூல் அறிஞர்கள் செய்வதறியாமல் திகைத்தார்கள் பவுல் நகரெங்கும் சென்று கிறிஸ்துவை அறிக்கையிடத் துவங்கினார்.
கிறிஸ்துவை அடியோடு வெறுத்த ஒருவர் அவரைப் பற்றி சாட்சி சொல்லித் திரிவதைக் கேட்ட பலர் இயேசுவில் விசுவாசம் கொண்டார்கள்
பவுல் தமஸ்கு நகரில் தன்னுடைய போதனையை தீவிரப்படுத்தினார். யூதர்கள் பவுலின் மனமாற்றத்தைக் கண்டு எரிச்சலடைந்தார்கள். எப்படியாவது பவுலைக் கொல்லவேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டார்கள். தமஸ்கு நகரிலிருந்து பவுல் வெளியேறிவிடாமலிருக்க நகர வாசலில் காவலாளிகள் நியமிக்கப்பட்டார்கள். பவுலுக்கு, அவருடைய கிறிஸ்தவ நண்பர்களுக்கும் செய்தி வந்தது. அவருடைய ஆதரவாளர்கள் எப்படியாவது பவுலைத் தப்ப வைக்கவேண்டுமென்று முடிவெடுத்தார்கள். அவர்கள் பவுலை ஒரு கூடையில் வைத்து நகரின் கோட்டைச்சுவருக்கு மறுபக்கத்தில் இறக்கிவிட்டார்கள். பவுல் அங்கிருந்து தப்பி எருசலேம் வந்தார் !
எருசலேமில் வாழ்ந்த கிரேக்க மக்களிடையே பவுல் இயேசுவைப் பற்றிப் போதிக்கத் துவங்கினார். எருசலேமில் யார்தான் போதிக்க முடியும் எதிர்ப்புகள் புற்றீசல் போல கிளம்பின. பவுல் அங்கிருந்து தர்சுக்குத் திரும்பி அங்கே தர்சு நகர மக்களிடம் தன்னுடைய போதனையை புதுப்பித்தார். அங்கே சில ஆண்டுகள் தங்கி இயேசுவின் வாழ்க்கையையும், போதனைகளையும் மக்களிடையே விளம்பினார்.
அதன்பின் பிரச்சனைகளும் எதிர்ப்புகளும் பவுலைத் துரத்தின. இயேசுவுக்கு ஆதரவாக பவுல் செயல்பட்டபோது அவரோடு இருந்த தலைமைக் குருக்கள் எல்லாம் இப்போது பரம எதிரிகளாகிவிட்டிருந்தார்கள். எனவே அவர் நாடுகள் மாறி மாறி தன்னுடைய பணியைத் தொடர்ந்தார். பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோக்கியா கிறிஸ்தவர்களை பரம விரோதிகளாய்ப் பார்த்தார்கள். பவுல் அங்கே சென்று துணிச்சலாய் போதித்தார். அங்கே அவர் சில புதுமைகளும் செய்தார். ஒரு சப்பாணியை நடக்க வைத்தார்.
யூதர்கள் அவரைத் துரத்தியடித்தார்கள். அவர்கள் கூட்டமாக சேர்ந்து பவுலை சுற்றி வளைத்து கல்லால் எறிந்தார்கள். அவரைக் குற்றுயிராக்கி ஒரு பள்ளத்தாக்கில் வீசினார்கள். அவர் இறந்து விட்டதாக நினைத்து நிம்மதியுடன் திரும்பிச் சென்றார்கள். ஆனால் பவுல் பிழைத்துக் கொண்டார். மீண்டும் திரும்பி வந்து தான் செய்து கொண்டிருந்த இறைப்பணியை தொடர்ந்து நடத்தினார்.
அங்கிருந்து ஐரோப்பாவின் மக்கதோனியாவில் தன்னுடைய அடுத்த கட்டப் பணியைத் துவங்கினார் பவுல். அத்தேனே, கொரிந்து ஆகிய நகரங்களிலும் அவருடைய கிறிஸ்தவ மத போதனைப் பணி நடந்தது. சில ஆண்டுகள் அங்கெல்லாம் பணிபுரிந்தபின் மீண்டும் பவுல் அந்தியோக்கியாவுக்கே திரும்பினார். அந்தியோக்கியாவில் ஏராளம் மக்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவ ஆரம்பித்தார்கள்.
அதன்பின் கலாத்தியா, பிரிகியா ஆகிய நாடுகளில் பணி செய்ய ஆரம்பித்தார் பவுல். எபேசு நகரில் அவருடைய பணி மிகவும் வேகமாக நடந்தது. ரோமர்களின் நகரமான எபேசுவில் துணிச்சலாய் போதித்த பவுல் எபேசு நகரில் பலர் கிறிஸ்தவத்தைத் தழுவ காரணமானார்.
அதன் பின் மீண்டும் எருசலேமிற்குச் சென்றார் பவுல். எருசலேமில் சென்று எருசலேம் தேவாலயத்துக்குள் யூதர்கள் அல்லாத பிற இனத்து மக்களையும் அழைத்துச் சென்றார். குருக்கள் கொதிப்படைந்தனர். அவர்கள் பவுலைக் கைது செய்தனர்.
தலைமைச் சங்கத்தில் பவுல் நிறுத்தப்பட்டார்.
பவுல் பரிசேயராக இருந்ததால் அங்கே அவருக்கு எதிரான வழக்குகள் எதுவும் நிரூபிக்கப் படாமல் இருந்தது. அவர் ரோமராகவும் இருந்தார் எனவே தலைமைச் சங்கத்தினர் அப்போது அவருக்கு எதிராக ஏதும் செய்யவில்லை. பவுலை ரகசியமாய்க் கொல்வதே ஒரே வழி என்று யூதர்கள் முடிவெடுத்தார்கள். பவுலோ அவர்களிடமிருந்து தப்பி செசரியாவிற்குச் சென்றார்.
இவ்வாறு மிகவும் எழுச்சியுடன் பணியாற்றிய பவுல் கி.பி 64ம் ஆண்டு நீரோ மன்னனால் சிரச்சேதம் செய்யப்பட்டு மரணமடைந்தார் !
முதல் இரத்த சாட்சி ஸ்தேயான்
இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் திருச்சபை மிகவும் வேகமாக வளர்ந்து வந்தது. எதிர்ப்பாளர்களின் எச்சரிக்கைகளும், மிரட்டல்களும் வலுவிழந்து விட்டன. திருச்சபையில் ஏராளமான ஏழைகள், நோயாளிகள், கைவிடப்பட்டோர், அனாதைகள் இருந்தார்கள். அவர்களுக்குச் சபையினரே உணவு உறைவிடங்கள் வழங்கினார்கள். மக்கள் பகிர்தலில் சிறந்து விளங்கியதால் அவர்களுக்கு அது பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை.
மக்களுக்கு உணவு வழக்கும் வேலைகளையும் அப்போஸ்தலர்களே கவனித்துவந்ததால் அவர்களால் அதிக இடங்களில் உரையாற்றவும், போதனைகள் நிகழ்த்தவும் முடியவில்லை. எனவே அவர்கள் கணக்கு வழக்குகளைக் கவனிக்கவும், மக்களுக்கு உணவு வழங்கவும் ஒரு குழுவினரை அமைப்பது என்று முடிவு செய்தார்கள். அதன்படி ஏழு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருவர் ஸ்தேயான்.
ஸ்தேயான் இயேசுவின் கொள்கைகளின் மீது மிகவும் பற்றுக் கொண்டிருந்தவர். இயேசு தான் கடவுளின் மகன் என்பதை உறுதியாக நம்பி, அதைப் பொதுவிடங்களில் தைரியமாக உரைத்து வந்தார். அவருக்கு நோய்தீர்க்கும் வல்லமையும் இருந்ததால் மக்கள் அவரிடமும் அதிகமாக வர ஆரம்பித்தார்கள். அவரும் பேதுருவுக்கு அடுத்தபடியாக அதிக நோயாளிகளைக் குணமாக்கி அதிசயங்களைச் செய்து வந்தார்.
ஸ்தேயானின் புகழ் பரவியது.
இயேசுவின் பெயரால் கூட்டம் நாளுக்கு நாள் வளர்வதைக் கண்ட மறைநூல் அறிஞர்கள் கலக்கமடைந்தார்கள். ஏதேனும் செய்து இவர்களை ஒடுக்கியாக வேண்டும் என்று திட்டமிட்டார்கள். அவர்களுடைய பார்வை ஸ்தேயானின் மீது விழுந்தது.
ஸ்தேயான் ஒரு கிரேக்கர். அதை வைத்து அவரை மாட்டிவிடுவது என்று அவர்கள் திட்டமிட்டார்கள்.
ஊரிலுள்ள யூத வெறியர்கள் பலரிடம் சென்று
‘ஒரு கிரேக்கன் வந்து யூதர்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறான். சட்டங்கள் தவறென்கிறான். மோசேயைப் பழித்துரைக்கிறான். இதையெல்லாம் கேட்டுக்கொண்டு வெட்கமில்லாமல் யூதன் என்று சொல்லித் திரிகிறீர்களே’ என்று திரியைப் பற்ற வைத்தார்கள்.
சிறு பொறியாக போடப்பட்ட வெறியெனும் நெருப்பு வெறித்தனமாய் படர்ந்து பரவியது. யூதர்களில் கல்வியறிவில்லாத பலர், மத சம்பிரதாயங்களில் ஊறிப்போய்விட்ட மக்களோடு சேர்ந்து கொண்டு ஸ்தேயானுக்கு எதிராக ஒன்று திரண்டனர்.
அவர்கள் ஸ்தேயானை இழுத்துக் கொண்டு தலைமைச் சங்கத்தின் முன்னால் விசாரணைக்காக நிறுத்தினார்கள். ஸ்தேயானைக் கேள்விகளினால் மாட்டவைக்கவேண்டும் என்னும் திட்டம் பலிக்கவேயில்லை, தொடுக்கப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும் மறுக்க முடியா பதில்களை அவர் அளித்தார்.
‘இவன் மோசேயைப் பழித்தான்’
‘நம் சட்டத்தை இடித்துரைத்தான்’
‘யூதர்களிடையே பிரிவினை உருவாக்குகிறான்’ பல்வேறு குற்றச்சாட்டுகள் ஸ்தேயானை நோக்கி எறியப்பட்டன. ஸ்தேயான் அமைதியாய் இருந்தார்.
அவருடைய முகம் மிகவும் சாந்தமாக இருந்தது. அவரைக் கண்டவர்கள் ஏதோ வானதூதர் மக்களிடையே நிற்பதுபோல உணர்ந்தார்கள். ஸ்தேயான் மறைநூலை அவர்களுக்கு விளக்கினார்.
‘உங்கள் மறைநூல் விளக்கங்களைப் பார்த்தீர்களே. எல்லா இறைவாக்கினர்களையும் கொல்கிறீர்கள். பின் அவர்களைக் கொண்டாடுகிறீர்கள். இது தானே வழக்கமாய் இருந்து வருகிறது’ என்று கேட்க கூட்டத்தினர் கொதித்தனர்.
‘உங்கள் முட்டாள்தனமான வழியை விட்டுவிட்டு விலகாவிட்டால் நீங்கள் அழிவது உறுதி’ ஸ்தேயான் கூடியிருந்த எதிரிகள் மத்தியில் இறைவனின் அருளால் தைரியமாய்ச் சொன்னார்.
கூட்டத்தினரின் கோபம் கரை கடந்தது. அவர்கள் அவரை இழுத்துக் கொண்டு சங்கத்திற்கு வெளியே போட்டார்கள்.
ஸ்தேயான் அப்போதும் கலங்கவில்லை. வானத்தை ஏறிட்டுப் பார்த்த அவர்.’ வானம் திறந்திருக்கிறது. இயேசு அங்கே நிற்கிறார். அதை என் கண்கள் காண்கின்றன’ என்றார்.
அவர்கள் அதற்கு மேல் தாமதிக்கவில்லை. ஸ்தேயானின் மீது கற்களை எறியத் துவங்கினார்கள். ஸ்தேயான் கலங்கவில்லை, அழவில்லை, அவருடைய முகம் சாந்தத் தன்மையையோ ஒளியையோ இழக்கவில்லை.
மண்டியிட்டார். கற்கள் அவர் மேல் மூர்க்கமாய் விழுந்து கொண்டே இருந்தன.
‘ஆண்டவராகிய இயேசுவே என் ஆவியை ஏற்றுக் கொள்ளும்… இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்’.
இயேசுவின் வழியில் எதிரிகளுக்காக மன்னிப்பை விண்ணப்பித்துக் கொண்டே உடலெங்கும் இரத்தம் வழிய மண்ணில் சாய்ந்து உயிர்விட்டார் ஸ்தேயான்.
இயேசு பணி செய்ய ஆரம்பித்தபின் மூன்று ஆண்டுகளுக்குப் பின் அவர் கொலை செய்யப்பட்டார். இப்போது இயேசுவின் மரணம் நிகழ்ந்த சுமார் மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் ஸ்தேயான் கொல்லப்படுகிறார்.
இயேசுவின் முதல் இரத்த சாட்சியானார்.
Like this:
Like Loading...