Posted in Issac - Jacob

ஈசாக் – யாக்கோபு : பைபிள் கவிதை

Image result for isaac jacob

ஆபிரகாமின் மகன்
இஸ்மாயில்,
நூற்று முப்பது வருடங்கள்
வாழ்ந்தார்.

ஈசாக் கை இறைவன்
அதிகமாய்
ஆசீர்வதித்தார் !

ரபேக்கா
இரு குழந்தைகளை
ஈன்றெடுத்தாள் !!

இருவருமே,
இருபெரும் இனத்துக்கு
தலைவராவார் என்று
பிறக்கும் முன்னே
பரமனால் சொல்லப்பட்டவர்கள்.

ஒருவன்
ஏசா !!
இன்னொருவன்
யாக்கோபு.

ஏசா,
வேட்டையில் வேகமும்,
திறந்த வெளியில்
உறைபவனாகவும்
இருந்து வந்தான்.

அவனுடைய
வேட்டையின் பொருட்டு
ஈசாக் அவனை
அதிகமாய் நேசித்தான்.

யாக்கோபோ
வீட்டில் உறையும்
பண்பின் உறைவிடமாய்
இருந்து,
ரபேக்காவின் அன்புக்கு
உரியவனானான்.

ஏசாவிடம்
தலைமகன் உரிமை
பிறப்பால் வந்திருந்தது.

ஒருமுறை,
பசியால் ஏசா
கூடாரம் வந்த போது
யாக்கோபு
கூழ் குடித்துக் கொண்டிருந்தான்.

ஏசாய் பசியால்
உணவு கேட்க,
வாய்ப்பைப் பயன்படுத்திய யாக்கோபு
ஏசாவின்
தலைமகன் உரிமையை
வாங்கிக் கொண்டு உணவளித்தான்.

எசா
பசியாறிய பின்
பயணம் தொடர்ந்தான்.

மீண்டுமோர் பஞ்சம்
ஈசாக்கின் தேசத்தை மெல்ல
சேதப் படுத்தியபோது,
ஈசாக்
முன்பு ஆபிரகாமுக்கு பரிச்சயமான
அமிமெலக்கு அரசனைக் காண
பிலிஸ்தியா பயணமானான்.

ஆண்டவரோ
அவனுக்கு தோன்றி,
நீ
கெராரிலேயே தங்கியிரு
அதுவே உன்
வளர்ச்சிக்கான விளைநிலம்
என்றார்.

ஈசாக்கும்
இறைவன் கட்டளையை
மனசுக்குள்
கட்டிப் போட்டான்.

rebekah_at_the_well

ரபேக்கா,
எழிலின் சிகரமாய் இருந்தாள்.
மெல்லிய மலர்களின்
அதிகாலைப்
பனித்துளிப் புன்னகை போல
ஈரமாய் இருந்தது
அவள் அழகு !

தன்னை
கணவன் என்று காட்டிக் கொண்டால்
என்றேனும் எனை
கொன்றேனும் மனைவியை
அபகரிப்பர் அயலார்
என்றஞ்சி
சகோதரி என்றே சொல்லிவந்தான்.

குட்டு ஒரு நாள்
வெட்டவெளிச்சமானது.
ஈசாக் ரபேக்காவை
கொஞ்சிக் குலவியதை
காற்று விலக்கிய
ஜன்னல் திரை ஊருக்கு
காட்டிக் கொடுத்துவிட்டது.

அரசன் ஈசாக்கை
கோபத்தில் கண்டித்தான்.
யாரேனும்
தவறிழைத்திருந்தால்
சாபம் விழுந்த சாம்ராஜ்யமாய்
என் பூமி
ஆகியிருக்குமே என்றான்.

ஈசாக்கு,
அவ்வூரிலேயே விவசாயம் செய்தான்.
ஆண்டவரின் அருள்
அவன் நிலத்தைக் காத்தது.

அவன் முள் விதைத்தாலும்
எள் விளைந்தது !
விதைத்த மணிகள் எல்லாம்
நூறு மடங்காய் விளைந்தன.

தானியக் கிடங்குகளின்
எல்லைகள் விரிய விரிய
அவன்
எல்லாரையும் விட செல்வரானான்.

அரசன் திகிலடைந்தான்,
தன்
இருக்கை கூட
இருக்குமா என்னும் கவலை
அவனுக்கு.

தன் சாம்ராஜ்யத்தின்
வட்டத்தை விட்டு
ஈசாக்கை
விலகிப் போக வேண்டினான்.

ஈசாக்கும்,
கெரார் பள்ளத்தாக்கில் தன்
அடுத்தகட்ட வாழ்க்கையைக்
கட்டினார்.

ஏசா தன்
நாற்பதாவது வயதில்
இத்தியர் குல பெண்கள்
இருவரை மணந்தார்.

வேற்றுக் குல மங்கையரை
ஏற்றுக் கொள்ளும் மனமின்றி
ஈசாக், ரபேக்கா வருந்தினர்.

காலம் மட்டும்
கடமை தவறாமல்
உருண்டு கொண்டிருந்தது.
ஈசாக்கின் இளமையோ
இருண்டு கொண்டிருந்தது.

முதுமை
ஈசாக்கின்
உடலெங்கும் கூடாரமடித்தது.
பார்வையை அவை
பிடுங்கி எறிந்தன,
வலிமையை விலக்கிப் போட்டன.

அவர்,
ஏசாயை அழைத்து.
நீதான் மூத்த மகன்…
உன்னை ஆசீர்வதிப்பேன்.
போய்
வேட்டையாடி எனக்கு உணவளி.
உன்னை அனைத்துக்கும்
முதல்வனாக்குவேன் என்றான்.

எசாயா
தந்தையின் சொல்லோடும்,
தன்னிடமிருந்த வில்லோடும்
மானோடும் திசைநோக்கி
விரைந்தான்.

isaac-blesses-jacob2

ரபேக்காவின்
பாசத் தராசு
யாக்கோபின் பக்கமே
சாய்ந்து கிடந்தது.

அவள்
யாக்கோபை அழைத்து
விபரம் சொல்லி,
போ..
நம் ஆட்டுக் கிடாய்கள்
இரண்டை அடித்து வை…
சமைத்துப் போட்டு
ஆசீர்வாதத்தை உரிமையாக்கு என்றாள்.

குறுக்கு வழியில்
தன்னைச் செலுத்தும்
தாயைப் பார்த்து
தனையன் வினவினான்,

என்குரல் தந்தை அறியாததா ?
என்
மேனியெங்கும் ரோமம் இல்லை,
ஏசாய்க்கு
ரோமம் பொதிந்த தேகமாயிற்றே
தடவிப் பார்த்தால்
உண்மை சிரிக்காதா என்றான்.

ரபேக்கா அவனை
ஊக்கப்படுத்தி,
ஆட்டு ரோமத்தை உடலில் கட்டி,
வெட்டிய ஆட்டை
சமைத்து,
ஈசாக்கிடம் அவனை அனுப்பினான்.

யாக்கோபு,
தந்தையின் தாழ்பணிந்து,
நான் தான் ஏசா !
உம் விருந்து இதோ,
என் வேட்டையின் பயன்
இதோ என்றான்.

பொய்யின் வார்த்தைகள்
ஓர்
உண்மையின் காலடியில்
கொட்டப்பட்டன.

ஈசாக் ஆச்சரியமானான்.
இத்தனை விரைவாய்
எப்படி சாத்தியமாயிற்று
வேட்டை ?
நீ எசா தானே ?
ஏமாற்று இல்லையே என்றான்.

தன் விரல் நீட்டி.
யாக்கோபின் கரம் தொட்டான்.
மேனியில்
ரோமம் கண்டு
சாந்தமானான்.

பொய்,
தன் மெய்யெங்கும்
முகமூடி கட்டித் தானே
முன் வந்திருந்தது !

அவனை ஆசீர்வதித்து
அனைத்துக்கும் அவனை
அதிபதியாக்கினான்.

வேட்டைக்குச் சென்ற
ஏசா,
வீடு திரும்பி
ஈசாக்கை சந்தித்தபோது
விஷயம் வெளிப்பட்டது.

பாசத்தைக் கூட
கால்வாய் வெட்டிக்
கடத்தியதை அறிந்து
கண் கலங்கினார்.

ஈசாக்கும் அதிர்ந்தார்,
தான்
ஏமாற்றப் பட்டதை
உணர்ந்தார்.

கபட நாடகத்தின் முடிவில்
ஓர்
பதவியேற்பு பறிக்கப்பட்டதை
அறிந்தார்.

ஏசாவின் விழிகள்
ஏமாற்றத்தால் அழுதன.
ஏதேனும் ஆசி எனக்களியும்
என்றான்.

ஈசாக்கோ,
இல்லை..
அத்தனை சொத்துமே
அவனுக்காயிற்று !
அவனுக்கு அடிபணிந்திரு என்றான்.

மண்ணில் விழுந்த
விண்மீன்,
மீண்டும் விண்ணில்
விடப்படுவதில்லையே !
ஓர் முறை சொன்ன சொல்லும்
ஈசாக்கால்
மாற்ற இயலவில்லை.

ஏசாயின் உள்ளம்
எரிமலையாயிற்று.
உள்ளுக்குள்
பழிவாங்கும் ஒத்திகை
பொழுதெல்லாம் நடந்தது.
இமைகளுக்குள் இரவெல்லாம்
இமைக்காமல்
விழித்திருந்தது.

தந்தையின் சாவுக்குப் பின்
யாக்கோபை
கல்லறைக்குள் அனுப்புவதே
என் கடமை என்று
கர்ஜித்தான்.

ரபேக்கா,
பயந்து போய்,
யாக்கோபை தன்
உறவினர் வீட்டுக்கு
விரட்டினாள்.

சினம் தணியும் காலம்வரை
சிலநாட்கள் தனித்திரு.
பின்
ஆளனுப்புகிறேன்
என்றனுப்பினாள்.

யாக்கோபை
ஈசாக்கும் வாழ்த்தி,
ரபேக்காவின் சகோதரன்
லபானிடம் அனுப்பினான்.

கனானேயப் பெண்களை
கல்யாணம் செய்யாதே
என
கண்டிப்பும் செய்தார்.

ஏசா இதை
கேள்விப்பட்டதும்,
தந்தையின் கோபம்
தணிக்க எண்ணி,
ஓர்
தன்னினப் பெண்ணை
கூடுதலாய் மணந்தான்.

jacobs-dream

யாக்கோபு,
காரானை நோக்கி
சென்றபோது,
ஓர் சமவெளியில் தங்கினார்.

அன்று இரவு,
கனவில் கடவுள் தோன்றி,
இதோ’
திசைகளெல்லாம் உனக்குச்
சொந்தமாகும்.
இதுவே உன் பூமி.

நானே
ஆபிரகாமின் தேவன்
நம்பிக்கை கொள் என்றார்.

யாக்கோபு
அச்சத்தில் ஆண்டவரை
உச்சத்தில் வாழ்த்தினான்.

ஓர் கல்லை நாட்டி
அங்கே
ஆண்டவரோடு உடன்படிக்கையிட்டான்.
பத்தில் ஒருபங்கை
ஆண்டவனுக்களிப்பேன்
என்றான்.

ஆண்டவர் மனிதனை
வளமானவனாக்குகிறார்,
மனிதனோ
ஆண்டவனை
கொடுக்கல் வாங்கலில்
கூட்டு சேர்க்கிறான் !

பின் அவர்
கீழ்த்திசை நோக்கி
காலெடுத்துவைத்தார்.

பயணம் தொடந்து நடந்தது.

ஓர் நாள்,
வயல்வெளியையும்
ஆட்டுமந்தைகளையும் கண்டார்.
அவர்களிடம்
நாகோரின் பேரன் ‘லாபானை’ தெரியுமா ?
என வினவ..

இதோ,
அவர் மகள்தான்
ஆடு ஓட்டி வருகிறாள் என்றனர்.

யாக்கோபு
பெண்ணின் கண்ணை
பரவசமாய் பார்த்தார்.

அவள்
எழில்களின் எல்லையாய்
அழகின் பேழையாய்
ஆட்டுமந்தையிடையே உலவும்
அழகு தேவதையாய்
ஜொலித்தாள்.

யாக்கோபை
லாபான் – நன்றாக உபசரித்தான்.
யாக்கோபு
தன் வாழ்க்கைக் கதையை
அவர்களுக்கு கூறினான்.

ஓர்
நாள் லாபான்
யாக்கோபை அழைத்து..
நீ
‘கூலி வாங்காமல் உழைப்பது
நல்லதல்ல !
என்ன வேண்டும் கேள் என்றான்.

யாக்கோபோ,
ஏழு ஆண்டுகள்
உமக்காக உழைக்கிறேன்
எனக்கு
உம் இரண்டாவது மகளை
அளியும் என்றான்.

தந்தை ஒப்புக் கொண்டார்
யாக்கோபு
உள்ளுக்குள் வெப்பம் கொண்டார்.

ஏழு ஆண்டுகள்
காதலின் வேகத்தில்
ஏழு நாட்களாய் கடந்தன.

ஏழு ஆண்டுகளுக்குப் பின்
இதுவரைக் கண்ட
கனவுகளையும்
எடுத்துக் கொண்டு
யாக்கோபு காத்திருந்தார்.

‘லாபானோ’
இரவில்
இரண்டாவது மகளை அனுப்பாமல்,
மூத்தமகள் ‘லேயா’வை
யாக்கோபின் படுக்கைக்கு
அனுப்பிவைத்தான்.

Copy_of_Dyce_Jacob_and_Rachel

யாக்கோபுக்கு
பேசப்பட்டவளோ இளையவள்,
இரவில் அரவமில்லாமல்
அனுப்பப் பட்டவளோ
மூத்தவள்.

இருட்டின் ஆழமும்
காதலின் ஆழமும்,
அடையாளம் காட்டாமல்
தவறிழைத்து விட்டன.

விடிந்ததும்,
விபரம் தெரிய வர யாக்கோபு
வருந்தினான்.

லாபான் – அவனிடம்,
மூத்தவள் இருக்க
இளையவளை அளிப்பது
வழக்கமல்ல…
இன்னும் ஓர் ஏழாண்டு உழை
ராகேலும் உனக்கே
என்றான்.

தான் விரும்பியவளுக்காக
இன்னும் ஓர்
ஏழு ஆண்டுகள்
காதலன் உழைக்கமாட்டானா ?

அப்படியே ஆயிற்று !
ஏழு ஆண்டுகள்
கழிந்து
ராகேலையும் மணந்தான்.

யாக்கோபு,
ராகேலை தன்
உயிருக்குள் வைத்து
உபசரித்தான்.
மூத்த மனைவியை அவன்
ஒதுக்கியே வைத்தான்.

தாழ்நிலை மாந்தரை
உயர்த்துபவராயிற்றே கடவுள் !
‘லேயா’வுக்கு நான்கு
பிள்ளைகளை அளித்து,
ராகேலை மலடியாக்கினார்

ரூபன், சிமியோன்,
லேவி,யூதா…
என்று நால்வரையும்
லேயா அழைத்தாள் !.

ராகேல் பார்த்தாள்,
தனக்குக் குழந்தைகள் இல்லையேல்
தன்
தலைமுறை என்னாவது என்றெண்ணி,

தன் பணியாள் ஒருத்தியை
யாக்கோபுக்கு அளித்து
அதன் மூலம்
இரண்டு குழந்தைகளைப் பெற்றாள்.

இறுதியில் இறைவன்
ராகேலை ஆசீர்வதித்து
அவளுக்கும்
பிள்ளைப் பேறு வழங்கினார்.
ராகேல் குழந்தைக்கு
யோசேப்பு – என்று
பெயரிட்டாள்

‘லாபான்’ –
செல்வத்தின் மீதான ஆசையினால்
யாக்கோபு
தன் நாட்டுக்குச் செல்வதைத்
தடுத்தான்.

கூலிகளை எல்லாம்
அடிக்கடி மாற்றினான்..

ஆண்டவரோ,
அவனுடைய
தீய திட்டங்களை எல்லாம்
நன்மைக்காய் மாற்றினார்.

‘ கலப்புநிறக் குட்டிகள்”
யாக்கோபுக்கு என்று
கூலி பேசிய பின்,
குட்டிகள் எல்லாம்
கலப்பு நிறமாய்ப் பிறந்தன.

கருப்பு நிறம் என்று
கூலிபேசினால்,
எல்லாம் கருப்பாய்ப் பிறந்தன.

வரி உள்ளவை என்று
முடிவெடுத்தால்
எல்லாம்
வரி உடையவையாய்
ஈன்றன.

அப்படி
ஆண்டவர் யாக்கோபுவை
செல்வராக்கினார்.

பின்
யாக்கோபு,
ஓர் நாள்
தன்
அத்தனை செல்வம்
மனைவி மக்களோடு
நாடு விட்டார்.

ஆண்டவர்
அவரோடு இருந்தார்.

jacob-bows-before-esau

வரும் வழியில்
யாக்கோபு
தன் அண்ணன் ஏசாயை
நினைத்தான்.

இன்னும் சினத்தின்
மைந்தனாய் இருக்கிறானோ ?
அவனுள் இருந்த
தீ நதி வற்றியதா ?

இல்லை அது
உடல் பெருத்து
கடலாகிக் கிடக்கிறதா ?

ஏசாயின் கருணைக் கண்
திறக்கவில்லையேல்
இறக்கவேண்டியது தான்
என்றறிந்து,

தன்
வேலையாள் சிலரை
அனுப்பி பேச வைத்தான்.

எரிமலையோடு பேச
சில
பனித்துளி மலைகள் !

ஏசா,
நானூறு பேரோடு
யாக்கோபை நேரிட
விரைந்தான்.

யாக்கோபு
விஷயம் அறிந்து
இதயம் கலங்கினான்.

சாவு தன்னை
பரிவாரங்களோடு
சந்திக்க வருவதைப்
புரிந்து கொண்டு…

தன்
சொத்துக்களை எல்லாம்
தனித் தனி மந்தையாய்
இரண்டிரண்டாய் பிரித்து,

ஒவ்வோர்
மந்தையை
முன்பாக அனுப்பினான்
ஏசா க்கு
அன்பளிப்பாய் !!

சிலநாட்களுக்குப் பின்
ஏசாயின் படை
யாக்கோபை நெருங்கியது.

இன்னும் சிறிது நேரம் தான்,
குருதி வீழப்போவதைக் கருதி
நிலமும்
அழுதது !

யாக்கோபு இறைவனை
மன்றாடி
நிராயுதபாயாய் ன்றான்.

ஏசா வந்தான் !
யாக்கோபை நெருங்கி
கட்டி அணைத்துக்
கண்ணீர் விட்டான்.

இன்னல் வரப் போவதாய்
கலங்கியவர்கள்,
தென்றல் வந்ததாய்
துலங்கினார்கள்.

அவனுக்குள் இருந்த
எரிமலை
நேசமலையாய்
நிறம் மாறி இருந்தது !

எரிக்கும் என்றஞ்சியவன்
பாசத்தை விரித்தான்.

அன்பளிப்புகளை
நிராகரித்தான்,
அன்பை மட்டுமே
அனுமதித்தான் !

அப்படி,
ஓர் சினம் விலகிய
சூழல்
யாக்கோபின் மனசுக்குள்
குழல் இசைத்தது !

Dinah1
ஒரு நாள்
யாக்கோபு வுக்கு
லேயா வால் பிறந்த மகள்
தீனா,
ஊர் சுற்ற புறப்பட்டாள்.

அப்போது,
அந்நாட்டுத் தலைவன்
செக்கேம்,
அவளை பலாத்காரம் செய்தான்.

ஆனால்
அதன்பின் அவளை
நேசிக்கவும் ஆரம்பித்தான்.

காமத்தால் பறித்த பூவை
பின்
காதலால் பூஜித்தான்.

அவளை,
மணக்கும் ஆசையுடன்,
தந்தையைக் கூட்டிக் கொண்டு
யாக்கோபிடம்
பெண் கேட்டான்.

விஷயம் அறிந்த
யாக்கோபின் புதல்வர்களின்
இதயம் வலித்தது.

தன் சகோதரியை
பலவந்தப் படுத்தியவர்களை
பழிவாங்குவோம் என
சபதமிட்டனர்.

வஞ்சகமாய்,
திருமணத்துக்கு
ஒத்துக் கொண்டனர்.
ஒரு
நிபந்தனையோடு !

அனைவரும்,
விருத்தசேதனம் செய்தல் வேண்டும்.

இதுவரை இல்லாத
புது முறை இது அங்கே.

தீனா மேலிருந்த
தீராத காதலால்
தலைவன் ஒத்துக் கொண்டான்.

நகரில் அனைவரும்
விருத்தசேதனம் செய்ய
ஒத்துக் கொண்டு,
நிறைவேற்றினர் !

மூன்றாம் நாள்,
விருத்தசேதன வலியில்
நகரே நகராமல்
படுத்திருந்தபோது !

தீனாவின் புதல்வர்,
அந்த நாளுக்காய் தானே
ஆவலோடு காத்திருந்தனர்.

நகர்மக்கள் அனைவரையும்
கொன்று,
நகரையும் கொள்ளையிட்டனர்.

யாக்கோபு
தடுக்க இயலாமல்
தடுமாறினான் .

கிளைகளில் வல்லூறுகள்
வந்தமர்கின்றன,
வேர் உச்சரிக்கும்
எச்சரிக்கைகளோ
மண்ணை விட்டு வெளிவர
மறுக்கின்றன.

வேதனையைப் போக்க
பெத்தேலுக்குச் சென்று
ஆண்டவருக்கு
பலிபீடம் செய்தான்.

ராகேல்,
இன்னொரு மகனை
ஈன்றபின்
இறந்தாள்.
அவனை பென்யமின் என்றழைத்தனர்.

ஆண்டவர்
யாக்கோபை அழைத்து,
இனி
நீ ‘இஸ்ரயேல்’ என்றழைக்கப் படுவாய்
என்றார்.

அதன்பின் யாக்கோபு
தன்
தந்தையை வந்தடைந்தான்.

தன்
நூற்று எண்பதாவது வயதில்
ஈசாக்கு
இறந்தார்,

ஏசா, யாக்கோபு
இருவருமே,
இணைந்து அவரை
அடக்கம் செய்தனர் !

தன் தந்தையின்
சுவடுகள் கிடந்த இடத்திலேயே
யாக்கோபும்
தன் வாழ்க்கையை
தொடர்ந்தார்

0