விசுவாசத்தின் தந்தை ஆபிரகாம்,
அவரது மகன் ஈசாக்,
ஈசாக்கின் மகன் யாக்கோபு.
தன் தந்தை ஈசாக்கின்
சுவடுகள் கிடந்த இடத்திலேயே
யாக்கோபும்
தன் வாழ்க்கையை
தொடர்ந்தார்.
இளையவன் யோசேப்புவை
அவன்
அதிகமாய் நேசித்தான்.
ஓர் அழகிய அங்கி ஒன்றை
செய்து,
அதை
அன்புப் பரிசாய் அளித்தான்.
யோசேப்பின் சகோதரர்கள்
இதை
வெறுப்போடு பார்த்தனர்.
இதென்ன நியாயம்,
ஒரே மரம்,
இரு கிளைகளுக்கு
இருவிதத்தில்
நீர் அனுப்புவதா ?
ஒரே மேகம்,
தண்ணீரையும் வெந்நீரையும்
பொழிவிப்பதா ?
யோசேப்புக்கு
செல்லமும் செல்வமும்,
எங்களுக்கு
இடைவெளியிட்ட
நேசமுமா ?
இதென்ன இலக்கணம் ?
நதியின் ஒருகரை
பூக்களையும்,
மறுகரை முட்களையும்
முளைப்பிக்க வைத்தல்
என்ன நியாயம் ?
சகோதரர்கள்
கருவினர்,
உள்ளுக்குள்
பொருமினர்.
யோசேப்பு,
ஓர் கனவின் மூலம்
தன்
எதிர்காலத்தைக் கண்டான்.
ஒருமுறை
அவன் சகோதரரை அழைத்து.
நான்
கனவொன்றைக் கண்டேன்.
அதில்,
கதிர்க்கட்டுகளில்
ஒரு கட்டு எழுந்து நிற்க,
மற்றவை அதை வணங்கின.
வணங்கியவை உங்கள் கட்டுகள்
வணக்கம் பெற்றது எனது !
என்றான்.
பிறிதொருமுறை,
கதிரவனும்,
பதினொரு விண்மீன்களும்
என்னை வணங்குவதாய்
கனவு கண்டேன் என்றான்.
சகோதரர் சினந்தனர்.
இப்போது தான்
நீ முளைக்கவே முயல்கிறாய்
நாங்களோ
வளர்ந்து வருடங்களாகிறது,
உன்னைப் பணிய
எங்களைப் பணிக்கிறாயா என்றனர்.
தந்தை
யாக்கோபு,
நடப்பதை அறிந்து வருந்தினான்.
யாக்கோபின்
சகோதரர் அனைவரும்
ஆடு மேய்க்கக் கிளம்பினர்.
சில காலத்துக்குப் பின்
யாக்கோபு,
யோசேப்பை அழைத்து
சகோதரரின் ஆடுகள்
சுகமா என விசாரித்து வர
அனுப்பினான்.
யோசேப்பு,
செக்கேம் சென்று
சகோதரரைத் தேடினான்..
காணவில்லை.
அவர்கள்
தோத்தான் போனதாய்
தகவல் கிடைத்தது !
தோத்தான் போனான்
யோசேப்பு,
சகோதரர்கள்
தூரத்தில்
யோசேப்பைக் கண்டதும்
பொறுக்காமல்
வெறுப்பை நிறைத்தனர்.
இவனை
கொல்வது மட்டுமே
கொள்ளத்தக்க செயல்
என்று
உள்ளுக்குள் தீய செயலுக்கு
கொள்ளியும் வைத்தனர்.
கனவின் மன்னனை
சாவுக்குத் தின்னக் கொடுப்போம்
என்றனர்,
ஆனால் சகோதரர்களில்
‘ரூபன்’ மட்டும் அதை
எதிர்த்தான்.
வேண்டாம் அவனை
ஒரு குழியில் தள்ளுவோம்,
நாமாக
அவன் இரத்தத்தை
பூமியில் சிந்தவேண்டாம்.
திட்டம் போட்டாயிற்று,
அருகில் வந்த யோசேப்பை
படு குழியில் தள்ளினர்.
யோசேப்பின்
வேண்டுதல் கெஞ்சல்களும்,
கண்ணீரின் கதறல்களும்
யாரையும்
இரங்க வைக்கவில்லை.
ஓர்
பாழடைந்த கிணற்றில்
அவனைத் தள்ளினர் !
தனியே வந்து
தம்பியை மீட்கும் எண்ணம்
‘ரூபனுக்குள்’
ரூபமாகியிருந்தது.
ஆனால்
யூதா எனும் சகோதரனோ,
யோசேப்பை
அவ்வழியாக வந்த
இஸ்ராயேலருக்கு
அடிமையாய் விற்றான்.
இருபது வெள்ளிக் காசு
சகோதரனின்
இரத்தத்துக்கான
விலையாயிற்று !
யோசேப்பு கலங்கினான்,
தான்
அன்பு வைத்திருந்த
அண்ணன்மார்
தன்னை
அடிமையாக்கி அனுப்பியதால்
அடிமனசில் அழுதான்.
ரூபன்,
திரும்பி வந்தபோது
யோசேப்பைக் காணாமல்
கதறினான்.
பையனை எங்கே தேடுவதென
பதறினான்.
சகோதரர்களோ,
யோசேப்பின் அங்கியை
கிழித்து,
ஆட்டுக்கடா இரத்தத்தால்
வர்ணமடித்து,
தந்தையிடம் வந்தனர்.
இதோ,
வழியில் கிடந்தது
யோசேப்பின் அங்கியா பாரும்
என்றனர் அப்பாவிடம்,
அப்பாவிகளாய்.
யாக்கோபு,
தன் மகன் இறந்தானென்றெண்ணி
அவனுக்காய்
கண்ணீர் வடித்து
கோணி உடுத்தி
தூக்கம் விலக்கி
துக்கம் போர்த்தினான்.
யோசேப்பை வாங்கியவர்கள்
அவனை
பார்வோனின் அதிகாரிகளில்
ஒருவனான
போர்த்திபாவிடம் அவனை
நல்ல விலைக்கு விற்றனர்.
யோசேப்பின் சகோதரன்
யூதா,
கனானேயப் பெண்ணை மணந்து
மூன்று பிள்ளைகளைப்
பெற்றெடுத்தான்.
ஏர்,ஒனான், சேலா
என்று பெயரும் இட்டான்.
மூத்தவன்
திருமணத்துக்குத் தயாரானதும்,
அவனுக்கு
தாமார் என்பவளை
துணைவியாக்கினார்.
மூத்தவன்,
தன் தீச்செயலால்
அழிந்தான்.
தாயின் விருப்பப்படி
இரண்டாமவன் தாமாரை
மணந்தான்.
ஆனால்
தாமாருக்குச் சந்ததி தர
சம்மதமில்லாமல்
முழு உறவு கொள்ளாமல்
மனைவியை ஏமாற்றி வந்தான்.
அவன் சிந்தனையால்
அவனையும்
ஆண்டவர் அழித்தார்.
சேலாவின் வயதோ
மிகச் சின்னதாகையால்
அவன்
வயதுக்கு வரும்வரை
தாமார் தன்
தாயார் வீட்டிலிருக்கட்டும் என
யூதா அனுப்பிவைத்தான்.
சேலாவிற்கு
திருமண வயதாகியும்
மகன் இறந்து விடுவானோ என
அஞ்சி,
தாமாரை அறிவிக்கவில்லை.
ஆனால்
தாமாரோ,
குறுக்கு வழியில்,
விலைமகள் கோலத்தில்
சேலாவை சந்தித்து
கர்ப்பமானாள்.
இரு பிள்ளைகளையும்
ஈன்றாள்.
யோசேப்புவோடு
கடவுள் இருந்தார்.
அவர்
தொட்ட எதுவுமே
தோற்கவில்லை.
தலைவனின்
தயவு,
யோசேப்புக்கு கிடைத்தது.
அத்தனை சொத்தும்
யோசேப்பின் பராமரிப்பின்
வசமானது.
அடிமையாய் ஆனவன்
பராமரிக்கும் பணியாளனானான்.
பராமரிப்பின் வசமிருந்த
அத்தனையும்
யோசேப்பால் பெருகியது.
செல்வத்தின்
வரவு செலவைக் கூட
தலைவன்
விசாரிக்கவில்லை.
யோசேப்பை நம்பினான்.
யோசேப்பை
ஆண்டவர்,
அதிகமாய் நேசித்தார்.
தலைவனின் மனைவியோ
யோசேப்பின் மேல்
காமம் கொண்டு
தவறிழைக்க அழைத்தாள்.
காவல் மட்டுமே
என் விரல் அருகில்,
துரோகம் செய்வதோ மிகத்
தூரமாய் உள்ளது
என
யோசேப்பு மறுத்தான்,
தொடர்ந்து
தன் விண்ணப்பங்களும்
ஆசைகளும்
நிராகரிக்கப் படுவதைக் கண்ட
தலைவனின் மனைவி,
பொய் புகார் கூறி
யோசேப்பை
சிறைக்கு அனுப்பினான்.
யோசேப்பு
தவறு செய்யாததால்
தண்டிக்கப் பட்டான்.
சிறையிலும் ஆண்டவன்
அவனோடு இருந்தார்.
சிறைக் காவலன்
அவனை அன்பாய் நடத்தினான்.
எகிப்திய மன்னனுக்கு
மது பரிமாறும்
மனிதனும்,
அப்பம் தயாரிக்கும்
ஆடவனும்,
மன்னனுக்கு எதிராக
குற்றம் செய்து சிறை வந்தனர்.
யோசேப்பின்
காவல் வட்டத்துக்குள்
அவர்கள்
கட்டப் பட்டனர்.
நாட்கள் பல
நகர்ந்தபின்,
அவர்கள் இருவரும்
ஒரே இரவில்
புரியாக் கனவுகள் இரண்டு
விரியக் கண்டனர்.
எல்லோரும்,
கடந்தகாலத்தின் மிச்சத்தை
கனவுகளாய்
விழிபெயர்க்கும் போது,
யோசேப்பு மட்டும்
அவற்றிலிருந்து
எதிர்காலத்தை மொழிபெயர்ப்பான்.
இருவரின் முகவாட்டமும்
கண்ட யோசேப்பு,
விஷயம் அறிந்து
விளக்கம் சொல்ல
தயாரானான்.
மதுபரிமாறுவோன்
தன் கனவை சொன்னான்.
என் நித்திரையின் உச்சத்தில்
ஓர்
திராட்சைச் செடி
மூன்று கிளைகளோடு என்
முன்வந்தது,
அவை
சட்டென்று அரும்பிப், பூத்து
அவசர அவசரமாய்க் காய்த்துப் பழுத்தன !
பார்வோன் மன்னனின் கிண்ணம்
இரந்தது,
நான்
திராட்சை இரசம் பிழிந்து
கிண்ணத்தில் கொடுத்தேன்.
கனவு இதுவே,
விளக்கம் எதுவோ என்றான்.
யோசேப்பு
சிந்தித்து சொன்னான்.
இது ஓர்
நல்ல சேதிக்கான ஓர்
முன்னுரையே.
கிளைகள் மூன்றும்
மூன்று நாட்கள்,
உன் சிறைவாசம் இன்னும்
மூன்றே நாட்களே,
பின் நீ
மன்னனின் அருகே மீண்டும்
மதுக்கிண்ணம் ஏந்துவாய்.
உன் நிலை உயர்ந்தபின்
எனக்கு உதவு,
சிறைத் தண்டனைக்கு
முறையானவனல்ல நான்.
விரோதக் கண்களால்
வீழ்த்தப்பட்டு,
இறகுகள் உடைந்த
பறவை நான்,
சிறைக் கதவை நீ
திறக்க உதவு என்றான்.
அடுத்தவன் கனவை
எடுத்து வைத்தான்.
என் தலையில்
அப்பம் நிறைந்த
மூன்று கூடைகள்,
ஆகாயத்துப் பறவைகள்
அதை
ஆகாரமாய் கொத்திச் சென்றன.
இதுவே என் கனவு,
விளக்கம் என்று
வினாபோல் குனிந்தான்.
யோசேப்பு வருந்தினார்,
இன்னும்
மூன்று தினங்கள் முடிந்ததும்
உன்
சிரம் பறவைகளின்
உணவாகுமே நண்பா ?
என்று கலங்கினான்.
யோசேப்பு சொன்னவை
சற்றும் மாறவில்லை,
அப்படியே நடந்தன.
ஆனால்
அந்த மது பரிமாறுவோன் தான்
யோசேப்பை மறந்தான்.
தன் கூரை மேல்
தீவிழும் வரை
அடுத்தவன் வேதனை எல்லாம்
வேடிக்கை தானே
வாடிக்கை மனிதருக்கு.
ஆண்டுகள் இரண்டு
உருண்டு மறைந்த பின்,
பாரவோன் மன்னன்
கனவொன்று கண்டான்.
நங்கையின் முந்தானையாய்
நகர்ந்து கொண்டிருந்த
நைல் நதியோரம்
நின்றிருந்தான் மன்னன்.
மீன்களை விளையாடும்
நதியின் மடியிலிருந்து
ஏழு
கொழுத்த பசுக்கள்
கரைக்கு வந்து
கோரை மேய்ந்தன !
திடீரென,
நலிந்து மெலிந்த,
அவலட்சனத்தின் அடையாளமான
ஏழு பசுக்கள்
நதியிலிருந்து எழுந்து
அந்த
கொழுத்த பசுக்களை
விழுங்கியே விட்டன !
திடுக்கிட்டு விழித்த மன்னன்
மீண்டும்
அசந்தபோது
இன்னொரு கனவு அவனை
இமைக்குள் இழுத்துப்
பூட்டிட்டுக் கொண்டது.
ஏழு செழுமையான கதிர்கள்
ஒரே தாளில்
தழைத்து வளர்ந்தன.
திடீரென
ஏழு பதர் கதிர்கள் வந்து
அவற்றை புசித்து விட்டன.
மன்னனின் உறக்கம்
கண்களை விட்டு
கரையேறி,
மஞ்சம் கடந்து வெளியேறியது.
மந்திரவாதிகள்,
அறிஞர்கள், ஞானியர் என்று
அத்தனை பேருக்கும்
அழைப்பு !
கனவுக்குப் பதிலை
சொல்லப் போவது யாரோ ?
ஆளாளுக்கு
யூகங்களின் பிடியில்
காகங்களாய் மாறி
மிச்சங்களை கொத்தினார்கள்.
மன்னன் வருந்தினார்
கொஞ்சமாய்
மது அருந்தினான்.
அப்போது தான்
அந்த
மது ஊற்றும் மனிதனுக்கு
யோசேப்பின் ஞாபகமே
உள்ளுக்குள் துள்ளியது.
அவன் மன்னனிடம்
மன்னா…
எங்கள் கனவுகளை
சரியாய் கணித்த ஓருவன்
சிறைகளுக்குள் சிக்கிக் கிடக்கிறான்.
அவன்
கணித்தவை எதுவும்
கனியாமல் போனதில்லை.
அவனை கேட்டல் நலம்
மற்றவை உங்களிடம்.
மன்னன் கட்டளையிட்டான்,
யோசேப்பு
அவைக்கு முன்
அழைக்கப் பட்டான்.
நீ
கனவுகளின் மொழிபெயர்ப்பாளனா ?
மன்னன் கேட்டான்.
இல்லை,
நான் கடவுளின் மொழி உரைப்பாளன்.
கனவுக்கு விளக்கம்
கடவுளே சொல்வார்.
அடக்கமாய் சொன்னான்
யோசேப்பு.
மன்னன் கனவின்
ஆணிவேர் துவங்கி
கிளை வரை
கிளிப்பிள்ளையாய் சொன்னான்.
யோசேப்புக்கு
கனவின் அர்த்தம்
மனசில் தெரிந்தது.
சொன்னான்.
மன்னா,
நாடு ஏழு ஆண்டுகள்
செழுமையின் சிறகில்
வானம் சுற்றும்,
பின் ஏழு ஆண்டுகள்
பட்டினிப் புழுவாய்
மண்ணுக்குள் இழையும்.
வருமுன் காத்தால்
வந்தபின் இனிக்கும்,
தானியங்களை சேகரித்து
பஞ்சத்தில் பரிமாறலாம்.
யோசனை சொன்னான்
யோசேப்பு.
மன்னன் மகிழ்ந்தான்,
அன்றே அவனை
தனக்கு அடுத்த இடத்தில்
தலைவனாய் நியமித்தான்.
கனவைப் போலவே
நாடு,
செழிப்பின் இழைகளில்
சிரித்துக் கிடந்தது.
எகிப்து நாடு முழுவதும்
தானியக் கிடங்குகளில்,
ஐந்தில் ஒரு பாகம்
போட்டு நிரப்பப் பட்டது !
எகிப்து முழுவதும்
யோசேப்பின் குரலுக்கு
அத்தனை மக்களும்
மண்டியிட்டனர்.
அரசனே ஒரு பெண்ணை
யோசேப்புக்கு
மணமுடித்து வைத்தான்.
அவளுக்கு,
செழுமையின் காலத்திலேயே
இரண்டு
செல்வங்கள் கிடைத்தன.
மனாசே, எப்ராயீம் என்று
அவர்களுக்கு பெயரிட்டனர்.
ஏழு ஆண்டுகளுக்குப் பின்
பஞ்சம் தன்
நகங்களை நீட்டி
வயிறுகளை கிழிக்கத் துவங்கியது.
யோசேப்பின் திட்டப்படி
எகிப்து மட்டுமே,
தானியத் தட்டுப்பாடின்றி
தப்பியது.
அத்தனை நாடுகளும்
எகிப்தின் கால்களில்
கஞ்சிப் பானைகளோடு
காத்திருந்தன.
பஞ்சம் தன் கால்களை
எட்டி வைத்து
அண்டை நாடுகளை எல்லாம்
மிதித்தது
யோசேப்பின் சகோதரர்களும்
பட்டினி நதியில்
மூழ்க ஆரம்பித்தனர்.
யோசேப்பின் அறிவுரைப்படி
அவர்கள்
எகிப்து தேசம் நோக்கி
பயணம் செய்தனர்.
யோசேப்பின் தம்பி
பென்யமின் தவிர,
பத்து சகோதரர்களும்
தானியத் தேவைக்காக
யோசேப்பின் பாதத்தில்
வணங்கினர்.
யோசேப்பு அதிர்ந்தார்.
தன் சகோதரர்கள் !
தன்னை
பாழும் குழியில் பிடித்துத் தள்ளி,
அடிமை நிலைக்கு
அள்ளிக் கொடுத்து,
சோகத் தூணில்
சுற்றிக் கட்டியவர்கள் !
ஆனாலும் அவர்
வெளிக்காட்டவில்லை !
சகோதரர்களோ,
தலைவனை உற்றுப் பார்க்கும்
நிலையில்லாததால்,
உண்மை அறியவும் இல்லை !
யோசேப்பு பார்த்தார்,
பென்யமினைக் காணவில்லை.
அவருக்கு
தன் தம்பியைக் காணும்
ஆசை தலைதூக்க,
அவர்களை அழைத்து,
நீங்கள் யார் ? ஒற்றர்களா ?
என கடிந்து கேட்க,
அவர்களோ
உண்மையை உரைத்தார்கள்.
தன்னுடைய குடும்பக் கதையை
மீண்டும் ஒருமுறை
யோசேப்பு கேட்டார்.
ஒரு கிளை
மற்றோர் கிளையிடம்,
தன் வேர்களைப் பற்றி
விளம்பரம் செய்கிறது.
அந்தக் கிளையும்
தன் வேரில்தான் நீர் உறிஞ்சுகிறது
எனும்
உண்மை உணராமல்.
யோசேப்பு,
அவர்களை சிறையில் அடைத்து
பெஞ்சமினை அழைத்து வாருங்கள்
இல்லையேல்
நீங்கள் ஒற்றர் என்றே
எண்ணிக் கொள்வேன் என்றார்.
அவர்கள் சென்று
தந்தையிடம் கெஞ்சி
பென்யமினை அழைத்து வந்தனர்.
யோசேப்பு அவர்களுக்கு
விருந்தளித்தார்.
ஒரு கட்டத்துக்கு மேல் அவரால்
தாக்குப் பிடிக்க
இயலவில்லை.
எத்தனை நேரம் தான்
பம்பரம்
ஒற்றைப் புள்ளியில்
சுற்ற இயலும் ?
எத்தனை நேரம் தான்
கனத்த மடியை
மேகம்
அவிழ்க்காமல் அலையும் ?
பாசத்தின் துளிகள்
பெருகிப் பெருகி
யோசேப்பு எனும் பாத்திரத்தை
உடைத்து விட்டன.
நேசத்தின் நதிகள்
பாயப் பாய,
யோசேப்பின்
கண் மதகுகள் கழன்றன.
சகோதரர்களை
வாரி அணைத்தார்.
உண்மை உடைத்தார்.
உயிர்வரை சிவந்தார்,
புயல்
மெளனவிரதம் இருப்பதில்லையே,
பாசப் புயல்
கரைக் கடந்தபோதும்
கண்ணீரால் சத்தமிட்டார்.
நடந்ததை அறித்த யோசேப்பு
மகிழ்ந்தார்.
செத்துப் போன மகன்
சொத்துக்களோடு வாழ்வதை
அறிந்ததும்,
அகம் முழுதும் ஆண்டவனை
தொழுதார்.
சந்தோஷ விழுதுகளில்
சங்கீதப் பறவையாய்
சாய்ந்தாடினார்.
பின்,
தன் சொத்துக்கள்
சொந்தங்கள்
கால்நடைகள் எல்லாமாய்
எகிப்து தேசம் வந்தார்.
தந்தையைக் கண்ட
தமையன் யோசேப்பு
ஆனந்தக் கடலின் அலையானான்
கட்டி அணைத்து
கண்ணீர் விட்டான்.
வழிதவறிப் போயிருந்த
காட்டாறு ஒன்று
கடலில் கலந்த சந்தோஷம்
கண்களில் மிதந்தது.
நாட்டின் பஞ்சம்
கடுமையாக,
யோசேப்பின் கிடங்குகள் மட்டும்
தீராமல் நிறைந்திருந்தன.
யோசேப்பு அவற்றைக் கொண்டு
எகிப்தியரின்
பணம், கால்நடை, நிலம்
அனைத்தும் வாங்கி
எகிப்தை
பாரவோனுக்கு சொந்தமாக்கித்
தந்தான்.
வருடங்கள் வளர,
யாக்கோபின் முகத்திலும்
அகத்திலும்,
முதுமை வந்து
முகம் காட்டியது.
தான் சாகப் போவதை
அறிந்து,
தம் புதல்வர் அனைவரையும்
அழைத்து,
ஆசி வழங்க்கினார்.
யோசேப்பின் புதல்வர்களை
அணைத்து,
ஆனந்தக் கண்ணீர் வடித்து
அவர்களையும் ஆசீர் வதித்தார்.
சாவு தன்
படுக்கைக்கு அருகில்
காத்திருப்பதை
கண்டு கொண்டு,
இறுதியாய் ஓர் வேண்டுதல் வைத்தார்.
தன்னை எகிப்தில் அடக்காமல்
தன் பாட்டனார்
ஆபிரகாமை அடக்கம் செய்த
அந்த நிலத்தில்
அடக்கம் செய்ய வேண்டும்
என்பதே அது !
பின்,
மரணத்தைப் போர்த்தி
மண்ணிலிருந்து விடைபெற்றார்.
0