தவக்காலம்
விதைகளின் காலம்
தவக்காலம்
விதைகளின் காலம்
விண்ணரசுக்கான
விதையாக
பூமியில் எழுந்தவர் இயேசு.
விண்ணரசுக்கான
விதைகளை
பூமியில் விதைத்தவர் இயேசு
விண்ணரசுக்கான
விதையாக
பூமியில் விழுந்தவர் இயேசு.
தவக்காலம்
விதைகளின் காலம்.
இயேசு
விதைகளை உருவாக்கச்
சொல்லவில்லை,
விதைகளாய் உருவாகச்
சொன்னார்.
நல்ல மரமே
நல்ல கனிகளின் ஆதாரம்
விதைகளைக்
கவனியுங்கள் என்றார்.
கனிகொடாத மரம்
அழிவுக்குள் நுழையும் !
வேர்களை
விசாரியுங்கள் என்றார்.
விளைச்சல் தராத
விதையெல்லாம்
வீணாகி அழிந்து விடும்
நிலங்களை
தயார் படுத்துங்கள் என்றார்.
களைகளோடு
கலந்து விட்டால்
இயல்புகளை இழந்துவிடும்
கவனமாய்
பிரித்தெடுங்கள் என்றார்.
தவக்காலம்
விதைகளின் காலம்.
யூதாஸ்
துரோகத்தை விதைத்தான்
தற்கொலையில்
தலை சாய்த்தான்.
பிலாத்து
சுயநலத்தை விதைத்தான்
அவனும்
தற்கொலை செய்ததாய்
கதைகள் உண்டு
கூட்டம்
வன்மத்தை விதைத்தது
தலைமுறை கடந்தும்
சாபத்தைக்
கேட்டு வாங்கியது !
இயேசுவோ
அன்பை விதைத்தார்
கடுகு விதையளவு
விசுவாசம்
மலையளவுச் செயல்களை
நிறைவேற்றும் என்றார்.
எனது வார்த்தைகள்
உயிருள்ள விதைகள்
அவை
கனிகொடுக்காமல்
அழியாது என்றார்.
மண்ணில் விழுந்து
மடியாமல்
கோதுமை மணிக்கு
விளைச்சல் கிடையாது என்றார்.
அறுவடையின்
பயன்
விதைப்பின் தீவிரத்தில்
அடங்கியிருக்கிறது
என்றார்
சிலுவையின்
உச்சியிலும் அவரிடம்
மன்னிப்பின் விதைகள்
மிச்சமிருந்தன.
வானுக்கும் பூமிக்கும்
இடையே
அவர் விதையாக
நடப்பட்டார்.
தவக்காலம்
விதைகளின் காலம்.
காய்கள்
நிச்சயம் கனியாகும்
விதைகள்
இங்கே வினியோகம்
என்பதை
உணரும் காலம்.
*