Posted in Articles, Lent days

தவக்காலம் – கேள்விகளின் காலம்

தவக்காலம்
கேள்விகளின் காலம்


தவக்காலம்
கேள்விகளின் காலம்.

கேள்விகளின் உள்ளே
வாழ்வின்
பதில்கள்
ஒளிந்திருக்கின்றன‌

பதில்களின் உள்ளே
வாழ்வின்
கேள்விகள்
மறைந்திருக்கின்றன.

சிலர்
பதிலை வைத்துக் கொண்டு
கேள்விகளை
எறிகிறார்கள்,
சிலர்
பதிலை புறக்கணித்துக் கொண்டு
கேள்விகளை எய்கிறார்கள்.

நாம்
வீசுகின்ற கேள்விகளின்
கூர்மையல்ல,
எதிர்பார்க்கும் பதிலுக்கான‌
நேர்மையே
நம் வாழ்க்கையைக் கட்டமைக்கிறது.

தவக்காலம்
கேள்விகளின் காலம்.

இயேசு
பதில்களின் பகிர்தலை
விட‌
கேள்விகளை அதிகமாய்க்
கேட்டுப் போனவர்.

அவரது
கேள்விகளுக்கான
பதில்கள்
நம்மைப் பாவ வாழ்வின்
மதில்களைத்
தாண்ட வைக்கும்

நீ என்னை
நேசிக்கின்றாயா ?
கேள்வியின் முடிவில்
கலங்கினார் பேதுரு.

என்னைத்
தொட்டது யார் ?
வினாவின் முடிவில்
விழுந்தாள் நோய்நீங்கிய பெண்.

திருச்சட்ட நூல்
சொல்வது என்ன ?
பதில் பொதிந்த கேள்வியில்
ஸ்தம்பித்தார் சட்ட வல்லுநர்.

நீங்களும் போய்விட‌
நினைக்கிறீர்களா ?
துயரம் நிறைந்த கேள்வியில்
துணையாய் நின்றனர் சீடர்கள்

ஏன்
ஐயம் கொண்டாய் !
பரமனின் கேள்வியில்
நீரில் நிமிர்ந்தார் பேதுரு.

ஏன்
அஞ்சுகிறீர்கள் ?
புயல் சுழன்ற கேள்விக்கு
பயந்து நடுங்கினர் சீடர்கள்.

நான் யாரென‌
மக்கள் சொல்கிறார்கள் ?
ஒளியின் கேள்விக்கு
பிதாவின் பதிலைச்
சொன்னார் பேதுரு.

இயேசுவின் வாழ்க்கை
நூற்றுக்கணக்கான‌
கேள்விகளால்
கூர்தீட்டப்பட்டது !

தவக்காலம்
கேள்விகளின் காலம்.

இயேசு
ஏன் மௌனமாய் இருந்தார்
என‌
பிலாத்துவுக்குப் புரியவில்லை.

இயேசு
ஏன் மன்னிப்பை அளித்தார்
என‌
கயவர்களுக்குப் புரியவில்லை.

இயேசு
ஏன் சிலுவையிலிருந்து
இறங்கி வரவில்லை
என‌
கூட்டத்துக்குப் புரியவில்லை

இயேசுவின்
கதறலின் பொருளென்ன‌
என‌
படித்தோருக்கும் புரியவில்லை.

அவர்களுடைய‌
கேள்விகளுக்குள்ளேயே
அவர்கள் புதைக்கப்பட்டனர்.

தவக்காலம்
கேள்விகளின் காலம்.

நமது கேள்விகள்
நம்மை
வழிநடத்துகின்றன.

நிலைவாழ்வு பெற‌
என்ன செய்ய வேண்டும் ?

என்
அயலான் யார் ?

மறுபடியும் பிறப்பது
என்றால் என்ன ?

நல்ல கேள்விகள்
நல்ல வாழ்வை நோக்கி
நம்மை
நகர்த்துகின்றன.

ஏன்
கைகழுவவில்லை ?

என்ன‌
அடையாளம் காட்டுவாய் ?

யார்
இந்த அதிகாரத்தைக் கொடுத்தது ?

தவறான கேள்விகள்
நம்மை
அழிவின் ஆழத்தில்
அமிழ்த்துகின்றன‌

தவக்காலம்
கேள்விகளின் காலம்.

அத்தனை கேள்விகளுக்கும்
பதிலாய் வாழ்ந்த‌
இயேசுவை நோக்கி,
மீட்புக்கான கேள்விகளைக்
கேட்கும் காலம்.

*

சேவியர்

Posted in Articles, Lent days

தவக்காலம் – நிழல் நிஜமாகும் காலம்

தவக்காலம்
நிழல் நிஜமாகும் காலம்

தவக்காலம்
நிழல் நிஜமாகும் காலம்.

பழைய ஏற்பாட்டின்
நிழல்கள் நிமிர்ந்து
நிஜமாய்
இரத்த ஓட்டம் பெறும் காலம்.

முகவுரைகளின்
முகத்திரைகளினூடே
நிஜத்தின்
முகம்
வெளிப்படுகின்ற காலம்.

மங்கலான காட்சிகளின்
மாயத் தோற்றங்கள்
நிஜத்தின் வீதிகளில்
தெளிவாய் உலவும் காலம்.

கற்றவையும்
கற்பிக்கப்பட்டவையும்
கல்வாரிச் சாலையில்
உயிர்ப்புடன் உலவும் காலம்

தவக்காலம்
நிழல் நிஜமாகும் காலம்.

பாவம்,
ஏதேன் தோட்டத்து
ஆதாமையும் ஏவாளையும்
மரத்தின் பின்னால்
ஒளியச் சொன்னது.

மீட்பு
பூமியில் வாழும்
மக்களினங்களை எல்லாம்
சிலுவை
மரத்தின் பின்னால்
ஒளியச் சொல்கிறது.

விலங்கின் தோலினால்
மூடப்பட்ட‌
அவர்களுடைய பாவம்
இன்று
ஆட்டுக்குட்டியின் உயிரினால்
கழுவப்படுகிறது.

தவக்காலம்
நிழல் நிஜமாகும் காலம்.

மோரியா மலையில்
ஈசாக்கின்
நிஜமாய்
கல்வாரி மலையில் ஈசன்.

மரம் சுமந்து நடந்த‌
ஈசாக்கின்
நிஜமாய்
சிலுவை மரம் சுமந்த பரமன்.

முள்ளிடையே சிக்கிய‌
ஆட்டின்
நிஜமாய்
முள் முடி சூடிய மன்னர்.

தவக்காலம்
நிழல் நிஜமாகும் காலம்.

விடுதலைப் பயணம்
இயேசுவின்
மீட்பின் பயணத்தின்
நிழல்.

நோவாவின் பேழையின்
பாதுகாப்பு
இயேசுவின்
சிலுவை மர மீட்பின்
நிழல்.

இறைவன் வந்து தங்கிய‌
கூடாரம்
இயேசுவின்
வாழ்க்கைப் பயணத்தின்
நிழல்.

தந்தையால் அனுப்பப்பட்டு
சகோதரர்களால்
நிராகரிக்கப்பட்டு
அடிமை கோலம் கொண்டு
ராஜாவாய் நிமிர்ந்த‌
யோசேப்பு,
இயேசுவின் வாழ்வின் நிழல்.

மீனின் வயிற்றில்
மூன்று நாள் முடங்கிய‌
யோனாவின் வாழ்வு
இயேசுவின்
மரணத்தின் நிழல்.

பாலை நிலத்தில்
பொழியப்பட்ட மன்னா,
விண்ணின்
நிலை உணவான
இயேசுவின் நிழல்.

தவக்காலம்
நிழல் நிஜமாகும் காலம்.

நிஜமாம் இயேசுவை
நாம்
நிழலாய்த் தொடரவேண்டிய‌
காலம்.

*

சேவியர்.

Posted in Articles, Lent days

தவக்காலம் – அறிவித்தலின் காலம்

தவக்காலம்
அறிவித்தலின் காலம்

+

தவக்காலம்
அறிவித்தலின் காலம்.

நட்பின் முத்தத்தில்
வஞ்சத்தின்
வாசனை ஒளிந்திருக்கும்
என
யூதாஸ் அறிவித்தான் !

ஆளுநர்களின்
மஞ்சத்தில்
பதவிகளின் ஆசை ஒளிந்திருக்கும்
என
பிலாத்து செயலால் அறிவித்தான் !

பாருங்கள்
இதோ மனிதனென
மனுமகனைக் கடைசியாய்
மனிதனாய் அறிவித்தான்.

பரபாஸ்களின்
கர்ஜனைகளை விட
பரமனின்
அமைதி வலிமையானது என
வழக்கு மேடை அறிவித்தது.

பின்னங்கால் பிடரியில் பட
ஓடுவதில்லை !
மறுதலித்து மறுதலித்து
ஒதுங்குவதில்லை !
களங்கமற்ற இதயத்தைக்
காட்டிக் கொடுப்பதில்லை,
என
எருசலேம் மகளிரின் கண்ணீர் அறிவித்தது.

தவக்காலம்
அறிவித்தலின் காலம்.

சர்ப்பத்தின் தலை நசுக்க
கர்ப்பத்தில்
தலை நிமிர்ந்தவன் நானென
தலைமகன்
சிலுவையில் அறிவித்தார்.

மரணத்தின் குரலொலியில்
‘இவர் இறைவாக்கினர்’
என
சிலுவை அருகில்
படைவீரர்கள் அறிவித்தனர்.

யூதரின் ராஜா
என
பகைவர்களே எழுதிய
சிலுவை எழுத்துகள்
உலகிற்கு அறிவித்தன.

இட்ட பணிதனை
முடித்து விட்டேனென
இயேசுவின்
கதறல் ஒலி அறிவித்தது.

தவக்காலம்
அறிவித்தலின் காலம்.

இருண்ட வானம்
மறைந்தது ஒளியென
மண்ணுலகிற்கு அறிவித்தது.

கிழிந்த திரை
மனித இறை உறவை
ஆலயத்தில் அறிவித்தது.

அதிர்ந்த தரை
மறைந்த இறையின்
மகிமையை அறிவித்தது

திறந்த கல்லறை
சாவின் கட்டுடைந்ததை
சத்தமாய் அறிவித்தது.

பரவிய நிசப்தம்
விண்ணின் துயரத்தை
மலையில் அறிவித்தது.

தவக்காலம்
அறிவித்தலின் காலம்.

மறைந்த இயேசுவின்
மகத்துவத்தை !
உயிர்த்த இயேசுவின்
உன்னதத்தை !
அறிவிக்கும் காலம்.

*

Posted in Articles, Lent days

தவக்காலம் – வாய்ப்புகளின் காலம்

தவக்காலம்
வாய்ப்புகளின் காலம்

தவக்காலம்
வாய்ப்புகளின் காலம்.

வாழ்க்கை
நமக்கு முன்னால்
இரண்டு திசைகளை நீட்டுகிறது,
நாம்
தேர்ந்தெடுக்கும் திசை
நம்
இலக்குகளை நிர்ணயிக்கிறது.

பரபாஸா
பரமனா
எனும் வாய்ப்புக்கு
பரபாஸ் என கூக்குரலிட்டது
கூட்டம் !

பதவியா
நீதியா
எனும் வாய்ப்புக்கு
கைகளைக் கழுவி அழுக்கானான்
பிலாத்து !

என் விருப்பமா
தந்தையின் விருப்பமா
எனும் கேள்விக்கு
தந்தையின் சிந்தமென்றார்
இயேசு !

தவக்காலம்
வாய்ப்புகளின் காலம்.

ஆசீர்வதிப்பதா
சபிப்பதா
எனும்
பாலாமின் சிந்தனைக்கு
வாய்பேசிய கழுதை விடை தந்தது.

அழைப்பினை ஏற்பதா
தூரமாய் செல்வதா
எனும்
யோனாவின் முடிவுக்கு
விழுங்கித் துப்பிய மீன் விடை சொன்னது.

பசியினில் மடிவதா
பரமனில் இணைவதா
எனும்
எலியாவின் சூழலுக்கு
உணவு சுமந்த காகம் விடை சொன்னது.

விசுவாசத்தில் நிலைப்பதா
சுவாசத்தை முடிப்பதா
எனும்
தானியேலின் தருணத்துக்கு
வாயடைத்த சிங்கங்கள் விடை தந்தன.

மறுதலித்து நகர்வதா
பிந்தொடர்ந்து மரிப்பதா
எனும்
கேள்விக்கு
கொக்கரித்த சேவல் விடைதந்தது.

மனிதர்களின்
குழப்ப முடிச்சுகளை
விலங்குகள் வந்து
விலக்கி விடுகின்றன.

தவக்காலம்
வாய்ப்புகளின் காலம்.

அகலமான வாசலா ?
இடுக்கமான வாசலா,

இருளின் சூட்சியா
ஒளியின் ஆட்சியா ?

சாவின் சன்னலா
வாழ்வின் வாசலா ?

பாவத்தின் வசீகரமா
புனிதத்தின் நிரந்தரமா ?

நில வாழ்வா ?
நிலை வாழ்வா ?

காலம் நம் முன்னால்
பூவா தலையா
போட்டு விளையாடுகின்றது.

தவக்காலம்
வாய்ப்புகளின் காலம்.

சிலுவைப் பாதையில்
சீமோனுக்கு
சிலுவை
சுமக்கும் வாய்ப்பொன்று
வலுக்கட்டாய விருதாய் வழங்கப்பட்டது.

அவன்
வழியோரத்தில் நின்று
வரலாற்றின் விழுதொன்றை
வழுவ விடாமல்
பிடித்துக் கொண்டான்.

சிலுவை உச்சியில்
கள்வனுக்கு
முதல் வாய்ப்பொன்று
கடைசி வாய்ப்பாய்
வழங்கப்பட்டது.

அவன்
மரணத்தின் கோரைப்பற்களிடையே
வாழ்வின் வசந்தத்தை
பறித்தெடுத்தான்.

தவக்காலம்
வாய்ப்புகளின் காலம்.

நழுவ விட்ட வாய்ப்புகளை
எண்ணி
உடைந்து போகாமல்,
கிடைத்த வாய்ப்பை
நழுவ விடாமல் அடையும் காலம்.

*

சேவியர்

Posted in Articles, Lent days

தவக்காலம் – இருளின் காலம்

தவக்காலம்
இருளின் காலம்

தவக்காலம்
இருளின் காலம்.

இருள்,
கயவர்களின்
பட்டாக்கத்திப் பரிவர்த்தனைக்கு
பழக்கமான களம்.

இருள்,
நீதியின் குரல்வளை நெரிக்க
வன்மத்தின் விரல்களுக்கு
வசதியான இடம்.

இருள்,
கறைகளின் ஆழம் புதைக்கக்
குறைகளின் பிதாக்கள்
கூடாரமிடும் இடம்.

தவக்காலம்
இருளின் காலம்.

இயேசுவோ
ஒளியாய் இருந்தார்.
ஒளியாதிருந்தார்.

வெளிச்சத்தை இழுத்து
வந்து
இருளுக்குள் புதைத்ததாய்
இறுமாந்தது கூட்டம்.

கடலை இழுத்து வந்து
கரையில் புதைத்து
கடமை முடித்ததாய்
கர்வப்பட்டது கூட்டம்.

ஒற்றை மிடறில்
ஆழியை அழித்ததாய்
சிரித்தது சிப்பி.

தவக்காலம்
வெளிச்சத்தை வெறுத்த
இருளின் காலம்.

ஒளிதோன்றுக
எனும்
ஒற்றைச் சொல்
பூமியின் மேனியில்
வெளிச்சப் புள்ளிகளை விரித்தது.

நானே ஒளி.
இயேசுவின் வெளிப்பாடு
பாவியின் மேல்
புனிதத்தின் ஒளியைப் பாய்ச்சியது.

ஒளியின்
வம்சமாய் வந்தவரிடம்
இருளின்
அம்சமே இருக்கவில்லை.

அதிகார வர்க்கமோ
குருட்டுக் கண்களுக்குள்
வெளிச்சம் வாழ்வதாய்
மாயத் தோற்றத்தில்
மயங்கிக் கிடந்தது.

ஒளியை
இருளென நினைத்து
ஒழிக்க நினைத்தது.

தவக்காலம்
ஒளியை தடுக்க வந்த
இருளின் காலம்.

பாவியை மீட்க
பரமனே பாவியாகிய காலம்.
இருளை மீட்க
ஒளியே இருளான காலம்.

ஒளி
விழி மூடியதும்
உலகமே
இருள் சூடிக் கொண்டது.

முள்ளை முள்ளால்
எடுக்கலாம்,
இருளை இருளால்
விரட்ட முடியாது.

இருளை அள்ளி அள்ளி
வெளியே கொட்டுவதால்
வெளிச்சத்தை
உள்ளுக்குள்
உருவாக்க முடியாது.

இரவைக் கடக்கவும்,
இருளைக் கடக்கவும்
நாம்
நடக்க வேண்டியது
ஒளியுடன்.
ஒளியாம் இறைவனுடன்.

*

சேவியர்