
*
இயேசு ! சிலருக்கு அவர் கடவுள். சிலருக்கு தத்துவ ஞானி. சிலருக்கு அவர் சிறந்த போதகர். சிலருக்கு அவர் ஒரு சிவப்பு சித்தாந்த வாதி. சிலருக்கு அவர் ஒரு ஆசிரியர். இப்படி ஏதோ ஒரு வகையில் இயேசு ஒவ்வொருவரையும் ஆக்கிரமித்திருக்கிறார். அவரை அங்கீகரிக்கலாம், அல்லது நிராகரிக்கலாம். ஆனால் அவரைச் சந்திக்காமல் கடந்து செல்வது இயலாத காரியமாகிவிடுகிறது.
இந்த நூல் இயேசு எனும் மனிதரை, அவரது இயல்புகளோடும் வரலாற்றுப் பின்னணியோடும் எளிமையாய் அறிமுகம் செய்து வைக்கிறது. அவரது பலங்களையும் பலவீனங்களையும், இறைத் தன்மையையும் மனிதத் தன்மையையும், போதனைகளையும் வேதனைகளையும் அப்படியே படம் பிடிக்கிறது இந்த நூல். மதக் கொம்புகளையும், மகிமைக் கிரீடங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு வரலாற்று நூலாக இந்த நூல் உருவாகியிருக்கிறது.
இயேசுவின் வரலாற்றை பல நூறு ஆண்டுகளாக எல்லோரும் எழுதிக் குவித்துவிட்டார்கள். உலகின் அத்தனை மொழிகளிலும் இயேசுவின் வரலாறு பல்வேறு கோணங்களில் வெளியாகிவிட்டன. உலகில் அதிக மொழிகளில் அச்சிடப்பட்ட நூல் பைபிள் என்பதைப் போல, உலகில் எக்கச்சக்கமாய் எழுதப்பட்ட நூல் இயேசுவைப் பற்றியதாக இருக்கிறது.
தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் கல்லறை ஒன்று அமைதியாய்க் கிடக்கிறது. அதில் துயின்று கொண்டிருப்பவர் ஹென்ரிக்கே ஹென்ரிகஸ் ( Henrique Henriques ) என்பவர். இவர் ஒரு இயேசுசபைக் குருவானவர். தமிழின் முதல் நூலை அச்சிட்ட பெருமைக்குரியவர் இவர் தான். அதனால் அச்சுக்கலையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
தமிழில் என்றல்ல, இந்தியாவிலேயே அச்சான முதல் நூல் அது தான். பதினாறு பக்கங்கள் கொண்ட அந்த நூல் வெளியாது அக்டோபர் 20, 1578 ! நூலின் பெயர் தம்பிரான் வணக்கம். போர்ச்சுகீசிய மொழியில் வெளியான டாக்டரினா கிறிஸ்தம் எனும் நூலின் தமிழாக்கமே இது !
அதற்கு அடுத்த ஆண்டே அவர் கிறிஸ்தியானி வணக்கம் எனும் ஒரு நூலை வெளியிட்டார். அதன்பின் அடுத்த மூன்று ஆண்டுகளில் கிறிஸ்தவ சமய போதனை (மறைக்கல்வி), பாவ அறிக்கை நூல் மற்றும் அடியார் வரலாறு போன்ற நூல்கள் வெளியாகின.
புனித தோமா இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தின் விதைகளை ஆங்காங்கே விதைத்தபின் பதினைந்தாம் நூற்றாண்டுகளில் தான் அடுத்தகட்ட கிறிஸ்தவ மறைபரப்பும், கிறிஸ்தவ இலக்கியங்களில் வரவும் ஆரம்பித்தன. துவக்க காலத்தில் இதன் பெருமை கத்தோலிக்க, இயேசு சபைக் குருக்களையே சார்ந்திருந்தது. குறிப்பாக பிரான்சிஸ் சவேரியார், ஹென்ரிக், ராபர்ட் நோபிலி, அருளானந்தர், வீரமாமுனிவர் போன்றோர் இந்த வரிசையில் தவிர்க்க முடியாப் பிரபலங்கள். தமிழ் இலக்கியத்தில் அழியாத் தடம் பதித்தவர்கள்.
பெரும்பாலான கிறிஸ்தவர்கள் சீகன்பால்க் தான் தமிழில் முதன் முதலில் நூலை அச்சிட்டவர் என்று நினைப்பதுண்டு. உண்மையில் சீகன்பால்க் அவர்கள் காலத்தால் ஒரு நூற்றாண்டு பிந்தியவர். லூத்தரன் பிரிவைச் சேர்ந்த இவர் முதலில் பைபிளைத் தமிழ் மொழியில் அச்சிட்டார். கிபி 1714ல் இதைச் செய்து வரலாற்றில் இடம் பிடித்தார். இதற்குப் பின்பு வந்த ராபர்ட் கார்ட்வெல், ஜியூபோப் போன்றோர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் யாவரும் அறிந்ததே.
அதன்பின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு கிறிஸ்தவ நூல்கள் தமிழில் உருவாகின. இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசேப்புவைப் பற்றிப் பாடிய தேம்பாவணி தமிழின் தலைசிறந்த கிறிஸ்தவ இலக்கிய நூல்களின் ஒன்று. கிபி 1726ம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது இந்த நூல். கான்ஸ்டான்ஸோ பெஸ்கி எனும் இயற்பெயர் கொண்ட எழுத்தாளரை வீரமாமுனிவர் என்றால் தான் நாம் எளிதில் புரிந்து கொள்வோம். மதுரைச் சங்கம் அவரது தமிழ்ப் புலமையைப் பாராட்டி ராஜரிஷி பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியது !
துன் உயிரை ஓம்பும் அருள் தோன்றி எனை ஆளும்,
என் உயிரில் இன் உயிர் எனும் தயையின் நல்லோய்,
உன் உயிர் அளித்து எமை அளிப்ப, உயர் வீட்டை
மன் உயிர் எலாம் உற, வருத்தம் உறீஇ மாய்ந்தாய்!
என இலக்கிய நயம் மிகும் பாடல்களால் தேம்பாவணி நம்மை ஈர்க்கிறது !
திருச்செல்வர் காவியம் எனும் நூல் ஈழத்தில் வெளியான முதல் கிறிஸ்தவ நூல் என நம்பப்படுகிறது. 1896ம் ஆண்டு யாழ்ப்பாணக் கவிஞரான பூலோக சிங்க அருளப்ப நாவலர், இந்த நூலை எழுதி வெளியிட்டார். புனைவுகளோடு கிறிஸ்தவ போதனைகளை சொல்லும் நூலாக இந்த நூல் அமைந்தது.
ஜான் புன்யன் அவர்களால் எழுதப்பட்ட, உலகப் புகழ்பெற்ற பில்கிரிம்ஸ் ப்ராக்ரஸ் எனும் நூலின் தமிழாக்கமான இரட்சண்ய யாத்திரீகம் (மீட்புப் பயணம்) பிரபலமான தமிழ் நூல்களில் ஒன்று. இதை ஹென்ரி ஆல்பர்ட் கிருஷ்ணபிள்ளை எழுதியிருந்தார். 1894ல் வெளியான இந்த நூல், இன்றும் பலராலும் விரும்பப்படுகின்ற கிறிஸ்தவ இலக்கிய நூல்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
இயேசுவின் வாழ்க்கை வரலாறைப் பற்றிய அலசலில் முதலில் நமக்குச் சிக்கும் நூல் திருவாக்குப் புராணம் எனலாம். கனகசபை என்பவர் எழுதிய இந்த நூல் 1853ம் ஆண்டு சென்னையில் வெளியிடப்பட்டது. இயேசுவை ‘வாக்கு’ என்கிறது விவிலியம். அந்த வாக்கின் வரலாறைப் பேசுவதால், திரு வாக்குப் புராணம் என நூலுக்கு அவர் பெயரிட்டார். இந்த நூல் கவிதை வரலாறாய் இயேசுவின் வாழ்க்கையைப் பேசியது.
இன்னொரு குறிப்பிடத்தக்க நூல், ஜான் பால்மர் எழுதிய கிறிஸ்தாயனம். இந்த நூல் 1865ம் ஆண்டு நாகர்கோவிலில் வெளியிடப்பட்டது என்கிறது கிறிஸ்தவ வரலாறு. விருத்தங்களால் அமைந்துள்ள இந்த நூல் தமிழ் இலக்கியத்தின் அழகை இயேசுவின் வாழ்க்கையோடு இணைத்துக் கட்டுகிறது. ஒரு தமிழரால் எழுதப்பட்ட முதல் கிறிஸ்தவக் காப்பியம் இது எனலாம். குமரிமாவட்ட மயிலாடியைச் சேர்ந்தவர் ஜான் பால்மர் என்பது குறிப்பிடத்தக்கது.
1891ம் ஆண்டு வெளியான கிறிஸ்து மான்மியம் எனும் நூல், இயேசுவின் பிறப்பு முதல் உயிர்ப்பு வரையிலான நிகழ்வுகளை அழகாய் வெளிப்படுத்தியது . ஸ்தோஷ் ஐயர் அவர்களால் எழுதப்பட்டு, சீகன்பால்க் அவர்களின் அச்சகத்தில், தரங்கம்பாடியில் வெளியான நூல் இது.
டி.எம். ஸ்காட் அவர்கள் எழுதிய சுவிசேஷ புராணம் நூல், இயேசுவின் வாழ்க்கையைப் பேசிய இன்னொரு நூல். 1896ம் ஆண்டு வெளியான இந்த நூல் கிறிஸ்தவ இலக்கியத்தின் சிறப்பான நூல்களில் ஒன்று. ஸ்காட் அவர்கள் தனது பெயரை சுகாத்தியர் என மாற்றியிருந்தர். அந்த காலத்திலேயே திருக்குறளின் பால் ஈர்க்கப்பட்டு திருக்குறளுக்கு உரையெழுதியவர். ஔவையாரின் மூதுரையின் மீது காதல் கொண்டு அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தவர். தமிழ் இலக்கியப் பக்கங்களில் இவருக்கு எப்போதும் தனியிடம் உண்டு.
இயேசு நாதர் சரிதை, எனும் நூல் இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் 1926ல் சுவாமி சுத்தானந்த பாரதியார் என்பவரால் எழுதப்பட்டது. இலங்கையிலுள்ள ஆழ்வார் பிள்ளை அவர்கள் எழுதிய நசரேய புராணம், விழுப்புரம் ஆரோக்கிய சாமி அவர்களின் சுடர்மணி, பேராசிரியர் மரிய அந்தோணிசாமி அவர்களின் அருளவதாரம், பவுல் இராமகிருஷ்ணனின் மீட்பதிகாரம், ஈழத்தைச் சேர்ந்த பூராடனார் அவர்களின் இயேசு புராணம் போன்றவையெல்லாம் கவனிப்பைப் பெற்ற இயேசுவின் வாழ்க்கை வரலாறுகள் எனலாம்.
அதன் பின் தற்காலம் வரை பல்வேறு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன மாணிக்க வாசகம் ஆசீர்வாதம் அவர்களின் திரு அவதாரம், நிர்மலா சுரேஷின் இயேசு மா காவியம், கண்ணதாசனின் இயேசு காவியம், சேவியர் எழுதிய இயேசுவின் கதை ஒரு புதுக்கவிதைக் காவியம், அருட்தந்தை வின்செண்ட் சின்னதுரை எழுதிய புதிய சாசனம், சத்திய சாட்சியின் இயேசு எனும் இனியர் – என நீள்கிறது இந்தப் பட்டியல்.
காப்பியங்கள், கீர்த்தனைகள், பாடல்கள், சிற்றிலக்கியங்கள், தழுவல்கள், மொழிபெயர்ப்புகள், உரைநடை, நாடகம், புதுக்கவிதை என பல்வேறு வடிவங்களில் இயேசுவின் வாழ்க்கை வரலாறு தமிழில் வெளியாகியிருக்கிறது. ‘இயேசு என்றொரு மனிதர் இருந்தார் ‘ எனும் இந்த நூல் எளிமையான உரைநடையிலும், கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் மிக எளிதில் புரிந்து கொள்ளும் ,மொழி நடையிலும், எந்த சித்தாந்தத்தையும் திணிக்காத நேர்மையிலும் சிறப்பிடம் பெறும் எனும் நம்பிக்கை எனக்குண்டு.
இனி, நீங்களும் இயேசுவும் !
அன்புடன்
சேவியர்