லூக்கா 22:47 ..51
இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, இதோ! மக்கள் கூட்டமாய் வந்தனர். பன்னிருவருள் ஒருவனான யூதாசு என்பவன் அவர்களுக்குமுன் வந்து அவரை முத்தமிட நெருங்கினான். இயேசு அவனிடம், “யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்?” என்றார்.
அவரைச் சூழ நின்றவர்கள் நிகழப்போவதை உணர்ந்து, “ஆண்டவரே, வாளால் வெட்டலாமா?” என்று கேட்டார்கள்.
அப்பொழுது அவர்களுள் ஒருவர் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய வலக் காதைத் துண்டித்தார்.
இயேசு அவர்களைப் பார்த்து, “விடுங்கள், போதும்” என்று கூறி அவருடைய காதைத் தொட்டு நலமாக்கினார்.
விளக்கம்
இயேசுவின் புதுமைகள் ஒவ்வொன்றுமே அவரது சீடர்களுக்குப் புதிய புதிய வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுப்பனவாகவே இருந்தன. இன்றைக்கும் அவை நமக்கு பல்வேறு இறையியல் சிந்தனைகளைக் கற்றுத் தருகின்றன. அதிசயச் செயலாக வெளிப்பார்வைக்குத் தோற்றமளிக்கும் நிகழ்வுகள் தனக்குள் பல ஆன்மீக சிந்தனைகளையும் ஒளித்து வைத்திருக்கின்றன.
இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த வாழ்க்கையின் கடைசி நாட்களில் நடந்த நிகழ்வு இது. அடுத்த நாள் அவருக்கு மரணம் பரிசளிக்கப்படப் போகிறது. முந்தைய தினம் அவர் ஒலிவ மலையிலுள்ள, கெத்சமெனே தோட்டத்தில் வலிகளோடு தந்தையை நோக்கி மன்றாடுகிறார். வியர்வை இரத்தத் துளிகளாய் மண்ணில் விழுகிறது.
செபிக்கும் போது வியர்வை வருகின்ற அனுபவமே அரிது ! அந்த சூழலில் இயேசு இரத்ததுளிகளை வியர்வையாய் வடிக்குமளவுக்கு செபிக்கிறார். உள்ளம் உடைய, உள்ளுக்குள் இரத்தம் கசியக் கசிய அவர் நமக்காக வேண்டுகிறார். ஒருவரை அடிக்கும் போதோ, காயப்படுத்தும் போதோ இரத்தம் கசிவது இயல்பு. எதுவும் செய்யாமலேயே செபிக்கையில் இரத்தம் கசிவது இயலாத காரியம். இயேசுவின் வலிகளை, இயேசுவின் அன்பை விளக்கும் செயலாக இது இருக்கிறது.
அதன்பின் இயேசு காட்டிக்கொடுக்கப்படுகிறார். சீடர் வாளை எடுத்து படைவீரர் ஒருவரின் காதைத் துண்டிக்க, அதை இயேசு தொட்டு சுகமாக்குகிறார்.
இந்த நிகழ்வு நமக்கு பல்வேறு சிந்தனைகளைத் தருகிறது.
1. செபம் அவசியம். அந்த இரவில் இயேசு வலிமையான செபத்தில் நிலைத்திருந்தார். சீடர்களோ தூங்கிக் கொண்டிருந்தனர். “என்ன, உறங்கிக் கொண்டா இருக்கிறீர்கள்? சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்” என இயேசு அவர்களிடம் சொன்னார். செபமே ஒரு சூழலை எதிர்கொள்ளும் வலிமையைத் தரும். செபமே இறைவனின் சித்தம் நம்மில் செயல்பட பாதை அமைக்கும் ! இயேசு தனக்காக செபிக்கச் சொல்லவில்லை, “சோதனைக்கு உட்படாதிருக்க” செபியுங்கள் என்றார். சோதனைகளை எதிர்கொள்ளும் வலிமையை செபம் மட்டுமே தர முடியும்.
சீடர்கள் செபத்தை நிராகரித்தனர். தூக்கத்தை அரவணைத்தனர். அதுவே அவர்களுடைய சிந்தனைகளை சிதறடித்தன. அவர்களை சோதனைக்குள் தள்ளியது. பேதுரு வாளை எடுத்து படைவீரனின் காதை வெட்டுகிறார். வன்முறையின் வழியை நாடுகிறார். செபம் நம்மை இறைவனின் இதயத்தோடு இறுக்கமாக்குகிறது. அப்போது நாம் இறைவன் பார்ப்பது போல பிறரை பார்ப்போம். இறைவனின் பார்வை நம்மிடம் வர செபம் மிக மிக அவசியம். செபத்தை இறுக்கமாய் பற்றிக் கொள்வோம்.
2. அன்றைய தினம் காலையில் தான் இயேசுவின் சீடர்கள் இயேசு சீடர்களிடம் வாள் வைத்துக் கொள்ளச் சொன்னார். அப்போது சீடர்கள், “ஆண்டவரே, இதோ! இங்கே இரு வாள்கள் உள்ளன” என்றார்கள். இயேசு அவர்களிடம், “போதும்” என்றார். இயேசு வாளை வைத்துக் கொள்ளச் சொன்னது தன்னைப் பிடிக்க வருபவர்களை வெட்டி வீழ்த்த அல்ல, தான் இல்லாத சூழலில் சீடர்களின் பாதுகாப்புக்காக. சீடர்களோ அதைப் புரிந்து கொள்ளவில்லை. “இயேசு தானே சொன்னார்” என அதை தங்கள் அறிவுக்கு ஏற்ப பயன்படுத்த முயல்கின்றனர்.
நாமும் பல வேளைகளில், விவிலியம் சொல்கின்ற வார்த்தைகளை நமக்கு வசதியான வகையில் பொருள் கொள்கிறோம். இயேசு சொன்னதன் பொருளை அதே போல புரிந்து கொள்ளாமல் நமது சூழலுக்கு ஏற்ப புரிந்து கொள்கிறோம். இதனால் பல சிக்கல்கள் எழுகின்றன. இறைவார்த்தைகள் என்ன சொல்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள செபமும், தூய ஆவியின் தயவும் நமக்கு தேவை. மனதளவில் மிகவும் அன்னியோன்யமான தம்பதியர் மௌனத்தைக் கூட புரிந்து கொள்வார்கள். அதே போல, இறைவனோடு இணைந்து இருக்கும் போது அவர் சொல்லும் வார்த்தைகள் நமக்குப் புரியும்.
3. “ஆண்டவரே, வாளால் வெட்டலாமா?” என இயேசுவிடம் கேள்வியைக் கேட்கின்றனர் சீடர்கள். ஆனால் பதில் வரும்வரை காத்திருக்கும் பொறுமை அவர்களிடம் இல்லை. இனியும் காத்திருந்தால் நமக்கு ஆபத்து என அவர்களாகவே முடிவெடுத்து விடுகின்றனர். வாளை எடுத்து வீச ஆரம்பிக்கின்றனர்.
நாமும் பல வேளைகளில் இறைவனிடம் வேண்டுதல் எழுப்புகிறோம். ஆனால் நமது பார்வைக்கு சிக்கலான சூழல், அல்லது இது தான் கடைசி வாய்ப்பு என்பது போன்ற நிலை வரும்போது இறைவனின் பதிலுக்காகக் காத்திருக்காமல் நாமே முடிவுகளை எடுத்து விடுகிறோம். அத்தகைய முடிவுகள் இறைவனுக்கு விருப்பம் இல்லாததாகவே அமைந்து விடுகிறது !
4. சீடர் எதிரியை வாளாள் வெட்டுகிறார். எதிராளி காயமடைகிறார். இப்போது சீடர்களின் சார்பாக நின்ற இயேசு சீடர்களைக் கடிந்து கொள்கிறார். எதிரியின் சார்பாளராக மாறி காயம் பட்ட காதைத் தொட்டு சுகமாக்குகிறார். வலி கொடுப்பவர்களின் பக்கமல்ல, வலி கொள்பவர்களின் பக்கமாகவே இயேசு நிற்கிறார். எதிரிக்கும் அன்பு செய்வது எப்படி என்பதை செயலில் காட்டுகிறார்.
நாம் பிறருக்கு காயம் கொடுப்பவர்களாக மாறும்போது இயேசு நமக்கு எதிரானவராக மாறிவிடுகிறார். எதிரியே ஆனால் கூட அவர்களை அன்பு செய்யும் போது தான் இயேசு நமது பக்கமாய் இருக்கிறார். நமது வாழ்க்கையில் நமது கையிலிருக்கும் வார்த்தை வாள்களையோ, செயல் வாள்களையோ பிறருக்குக் காயம் தரும் வகையில் சுழற்றக் கூடாது என்பதே இயேசு சொல்லும் பாடம்.
5. சீடர்கள் இயேசுவின் மீது கொண்ட அதீத அன்பினால் தான் வாளை எடுத்து போரிடுகின்றனர். ஆனால் அது இறை சித்தத்துக்கு எதிரானதாக மாறிவிட்டது. இயேசு, “வாருங்கள் போரிடுவோம் எதிரி வருகிறான்” என்று சொல்லவில்லை. “எழுந்திருங்கள், போவோம். இதோ, என்னைக் காட்டிக் கொடுப்பவன் நெருங்கி வந்துவிட்டான்” (மார்க் 14:42) என்று சொல்லி தன்னை பலிகொடுக்கத் தயார்படுத்திக் கொண்டார்.
இயேசுவின் மீது அன்பு இருப்பதாய் நினைத்துக் கொண்டு நாம் செய்கின்ற செயல்கள் பல வேளைகளில் அவருக்கு எதிரான செயல்களாகவே மாறிவிடுகின்றன. இன்றைய சூழலில் எழுகின்ற மத விவாதங்கள், கருத்து மோதல்கள், சண்டைகள், வன்முறைகள், வன்மங்கள் எல்லாமே இயேசுவுக்கு எதிரானவை. அத்தகைய செயல்களை நாம் இயேசுவின் மீது கொண்ட அன்பினால் செய்கிறோம், அது தவறு ! அப்படி செய்யக் கூடாது என்பதையே இயேசு தெளிவாய் விளக்குகிறார்.
6. சீடர்களின் மனதில் ஒரு எண்ணம் இருந்தது. இயேசுவைப் பிடிக்க வருகிறார்கள். நம்மிடம் வாள் இருக்கிறது. அவருடைய படைவீரர்களாய் இப்போது நாம் தான் இருக்கிறோம். எனவே இயேசுவைக் காப்பாற்றும் பொறுப்பும் நமக்கு உரியது எனும் சிந்தனை தான் அது. அதனால் தான் அவர்கள் தங்களுடைய வலிமையை முன்னிறுத்தி வாளை வீசுகின்றனர். ஆனால் உண்மையில் நாம் சார்ந்திருக்க வேண்டியது நமது வலிமையை அல்ல இயேசுவின் வலிமையையே !
நாமும் பல வேளைகளில் இயேசுவைக் காப்பாற்ற வேண்டியது நமது பணி போலவும், நமது பலத்தினால் அறிவினால் ஆற்றலினால் தான் இயேசுவை நாம் காப்பாற்ற முடியும் என்பது போலவும் கருதிக் கொள்கிறோம். நாமே கிறிஸ்துவின் பாதுகாவலர்கள் என நினைத்துக் கொள்கிறோம். அது தவறு. இறைவன் நம்மைக் காப்பாற்றுபவர். நாம் அவரது நிழலில், அவரது வழியில், அவரது வார்த்தையில் பயணிக்க வேண்டியர்கள் மட்டுமே.
7. இயேசுவின் மீட்பின் திட்டம் சிலுவையில் உயிர்விடுவதாய் இருந்தது. அதற்காகத் தான் அவர் இந்த பூமிக்கு வருகை தந்தார். அதற்காகவே மூன்று ஆண்டுகாலம் தனது பணியை தீவிரமாய் செய்தார். தான் கையளிக்கப்படப் போவதையும், இறக்கப் போவதையும் சீடர்களிடம் தெளிவாக பல முறை சொல்லவும் செய்தார். அதுவே மீட்பின் பயணம். ஆனால் சீடர்களோ அதைப் புரிந்து கொள்ளாமல் செயல்பட்டனர்.
இயேசுவின் சிந்தனைகளை, இயேசுவின் போதனையை, இயேசுவின் மீட்பின் திட்டத்தை நாம் செயல்படுத்துபவர்களாக இருக்கவேண்டும். அது எப்படி என்பதை இயேசுவின் வார்த்தைகளே நமக்கு விளக்க முடியும். நமது பார்வையில் சரி எனப் படுவது மீட்பின் திட்டத்திற்கு தடையாய் இருக்கக் கூடும் எனும் எச்சரிக்கையே இந்த நிகழ்வு. ‘இது எப்படி சாத்தியம்’ எனும் கேள்விகளை விடுத்து, ‘இயேசு சொன்னால் எதுவும் சாத்தியமே’ என முழுமையாய் நம்புவதே ஆன்மீக வாழ்க்கையை செழுமைப்படுத்தும்.
8. யூதாஸ் இயேசுவை முத்தம் எனும் அன்பின் அடையாளத்தால் காட்டிக் கொடுக்கிறான். அன்பின் அடையாளம், இங்கே மரணத்துக்கான முன்னுரையாய் மாறிவிடுகிறது. அன்பைக் காட்டி, வெறுப்பை வெளிப்படுத்துகிறார் யூதாஸ். வெளிப்படையான செயலோ அன்பின் வடிவம், உள்ளார்ந்த பொருளோ அழிவின் அடையாளம் ! இயேசு அந்த வெளிவேடத்தனத்தை அங்கேயே உடைக்கிறார். “யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்?” எனும் கேள்வியின் வழியாக யூதாசின் உள்ளத்தை வெளிப்படுத்துகிறார்.
நாமும் பல வேளைகளில் இயேசுவின் முன்னால் அன்பின் செயல்களோடும், அன்பின் அடையாளங்களோடும் வருகிறோம். அவை புகழ் பாக்களாகவோ, விவிலிய வார்த்தைகளாகவோ, ஆன்மீக ஆறுதல்களாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உண்மையில் நமது செயல்கள் எல்லாம் பாவத்தின் செயல்களாக இருக்கின்றன. அதாவது இயேசுவை காயப்படுத்தும் செயல்களாக, இயேசுவை நிராகரிக்கும் செயல்களாக, அவரைச் சிலுவையில் அறையும் செயல்களாகவே இருக்கின்றன. அந்தப் பார்வையில் நாம் ஒவ்வொருவரும் யூதாஸைப் போன்ற வாழ்க்கையைத் தான் வாழ்ந்து வருகிறோமா என்பதை சிந்திப்போம்.
9. கடமை செய்ய வருபவர்களை பேதுரு வாளால் தடுத்தார். இயேசுவைக் கைது செய்ய வந்தவர்கள் படை வீரர்கள். அவர்கள் தங்களுக்கு இடப்பட்ட கடமையைச் செய்ய வந்தார்கள். ஒருவரைக் கைது செய்யும் உரிமை உடையவர்கள் அவர்கள். பணியைச் செய்ய வருகின்ற மக்களைத் தடைசெய்வது தவறு எனும் பாடத்தையும் இயேசு இதன் மூலம் வெளிப்படுத்துகிறார்.
நமது வாழ்வில் நமக்குப் பிடிக்காத பல விஷயங்கள் நடக்கலாம். ஆனால் சட்டப்படி நிகழ்கின்ற செயல்களை, நமது நியாயங்களின் படி எதிர்ப்பது என்பது கடமையை ஆற்றுவதற்கு தடை செய்வது போன்றதே. நிகழ்வுகள் மாற இறைவனிடம் வேண்டுவதே சரியான வழி. எதிர்த்து நின்று பிறருடைய பணியை தடுப்பதல்ல.
10. தன்னைப் பிடிக்க வந்தவருடைய காதை இயேசு தொட்டு சுகமாக்கினார். வாழ்வின் கடைசி கணம் வரை அன்பையும், மன்னிப்பையும், மீட்பின் பயணத்தையும் தளராமல் செய்ய வேண்டும் என்பதையே இயேசு தனது இலட்சியமாகக் கொண்டிருந்தார். சிலுவையில் மரணத்துக்கு முந்திய வினாடியில் கூட எதிரிகளுக்கு எரிச்சலையல்ல, மன்னிப்பையே வழங்கினார். காது துண்டிக்கப்பட்ட மனிதன் இயேசுவின் தொடுதலைப் பெற்றுக் கொண்டான். அவனுடைய வாழ்வில் அவன் இயேசுவின் அன்பை நேரடியாகப் பார்த்து பிரமிக்கும் வாய்ப்பையும் பெற்றான்.
நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது ? பிறருக்கு அன்பையும், மன்னிப்பையும், நன்மையையும் வழங்கக்கூடிய வகையில் இருக்கிறதா ? அல்லது வெறுப்பையும் விரோதத்தையும் பந்திவைக்கும் வகையில் இருக்கிறதா ? என்பதைச் சிந்திக்க வேண்டும். வாழ்க்கை நிகழ்வுகள் எப்படி நம்மைப் புரட்டிப் போட்டாலும் சரி, மன்னிப்பின் நங்கூரத்தை இதயத்தில் ஆழமாய் இறக்குவோம். சோதனை அலைகளில் வாழ்க்கைப் படகு அழிந்து விடாமல் காப்போம்.
*