அன்னை தெரேசா
அன்பினால் அவனியை ஆண்டவர்
வாசல்
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் அன்னையின் வாழ்க்கையைக் கவிதை வடிவில் எழுதவேண்டும் எனும் ஆர்வம் எழுந்தது.
அன்னை பற்றிய செய்திகளைத் திரட்ட அமெரிக்காவின் நூலகங்கள் பலவற்றிலும், புத்தகக் கடைகள் பலவற்றிலும் அதற்காய் சுற்றி அலைந்தேன். இந்தியாவிலுள்ள அன்னை குறித்த செய்திகளை அமெரிக்காவில் தேடியது சற்று வியப்பாய் இருந்தாலும் மனித நேயத்துக்கு எல்லைகள் இல்லை என்பதை அங்கே காணக் கிடைத்த புத்தகங்கள் விளக்கின.
ஒன்றன் பின் ஒன்றாய் எத்தனை நூல்களை வாசித்தேன் என்ற நினைவில்லை. ஆனால் அத்தனை நூல்களும் என்னை கலங்கடிக்காமல், அல்லது ஒரு சொட்டு கண்ணீரையாவது வெளியேற்றாமல் மூடப்பட்டதே இல்லை.
அதன் பின் அன்னை குறித்து ஒரு கவிதை நூலை எழுதி முடித்தேன். கடந்த ஆண்டு அருவி பதிப்பகம் மூலமாக வெளிவந்த இந்த நூல் ஏற்படுத்திய அலை அன்னை குறித்த இந்த இரண்டாவது நூலுக்கு விதையிட்டது எனலாம்.
அருவி பதிப்பக உரிமையாளர் நண்பர் பூபதி அவர்கள் ஒருநாள் என்னைத் தொடர்பு கொண்டார். அன்னையில் கவிதை நூல் பலரை வியப்புக்குள்ளாக்கியிருப்பதாகவும், அன்னையின் வாழ்க்கையை உரைநடையில் எழுதி அன்னையின் பணிக்கு இன்னும் மரியாதை அளிக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மனக்கிடங்குகளில் கிடந்த அன்னையின் வாழ்க்கையை எழுத்தில் கொண்டுவருவதில் அவ்வளவு சிரமம் இருக்கவில்லை.
ஒரு சில சர்ச்சைகள் தவிர்த்து, இந்த நான்காண்டு கால இடைவெளி அன்னையின் மீதான பார்வையில் மாற்றம் ஏதும் கொண்டுவரவில்லை என்பதே அன்னையின் பணிகள் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை உணர்த்துகிறது.
அன்னையின் வாழ்க்கையை எழுதும் போது அன்னை சார்ந்த மத, சமூக பின்னணிகளையும் நினைவில் கொள்வது அவசியமாகிறது. அந்த வகையில் அன்னையின் மனித நேயப் பணிகள் ஒவ்வொன்றுக்கும் ஆன்மீகக் காரணம் என்ன என்பதை எனது வாழ்வியல் அனுபவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ஏற்கனவே அன்னை குறித்த ஒரு நூல் எழுதியபின் இன்னும் ஏன் ஓர் அன்னை நூல் எனும் எனக்குள்ளேயே எழுந்தது. இரண்டாவது முறையும் மரியாதை செய்வதற்கு எல்லாவகையிலும் தகுதியானவர் அருகதையுடையவர் அன்னை என்பதைத் தவிர இதற்கு வேறெந்த காரணமும் இல்லை.
இந்த நூல் உருவாக்கத்தில் எனக்கு உதவிய நண்பர்கள் பென் கிருபா, சுதாகர் சாமுவேல் இருவருக்கும் இத்தருணத்தில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது எழுத்துப் பயணத்தில் எப்போதுமே சரியான வழிகாட்டுதல்களையும், வாய்ப்புகளையும் வழங்கி வரும் நண்பர் யாணன், நண்பர் சுந்தரபுத்தன், நண்பர் சொக்கன் மூவருக்கும் எனது பணிவான நன்றிகள்.
அன்னையின் பணி மீதான தாக்கத்தினால் “அன்னை தெரசா சமூக நற்பணி மன்றம்” எனும் அமைப்பை ஆரம்பித்து குமரிமாவட்டத்தின் கிராமத்துத் தெருக்களில் மனித நேயப் பணிகள் செய்யும் தம்பி ஆண்டனியையும், அதற்குத் துணை நிற்கும் தம்பி வளனையும் இந்த நேரத்தில் பெருமையுடன் நினைத்துப் பார்க்கிறேன்.
நல்ல படைப்புகளை வெளியிடுவதில் எப்போதுமே ஆர்வம் காட்டி, சமரசம் செய்து கொள்ளாத நூல்களை மட்டுமே வெளியிட்டு பதிப்பக உலகில் தனியிடத்தில் இருக்கும் நண்பர் பூபதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
உடலை விட்டும் உலகை விட்டும் பிரிந்தாலும் என் உயிரோடு என்றும் உரையாடி வழிகாட்டும் என் தந்தையை இந்த நேரத்தில் பெருமையுடன் நினைத்துப் பார்க்கிறேன். மரணப் படுக்கையிலும் கையருகே எனது கவிதை நூலை வைத்திருந்த அவருடைய நேசத்தை நினைக்காமல் இப்போதெல்லாம் என்னால் எதையும் எழுத முடிவதில்லை.
எனது எழுத்துப் பணிக்கு எப்போதுமே துணை நிற்கும் எனது பிரியத்துக்குரிய மனைவிக்கும், அம்மாவுக்கும், சகோதர சகோதரிகளுக்கும், மாமா, மாமிக்கும் எனது நன்றிகளைச் சொல்லாமல் போனால் எனது நன்றி அறிவித்தல் நிறைவுறாது.
இனி நீங்களும்… அன்னையும்.